September 17, 2009

ஓரம் போ..

நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள், உயரம் கம்மியான இரண்டு சக்கர சைக்கிள், லெக் ஸ்கூட்டர் என ஜூனியரின் வாகனங்கள் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கின்றன அவன் வளர்ச்சியை போல். எனக்கு நடைவண்டி ஓட்டிய ஞாபகம் இல்லை. தம்பியைப் பின்னாடி உட்காரவைத்துக்கொண்டு மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது நினைவிருக்கிறது. அப்புறம் கொஞ்சம் உயரம் கம்மியான, இரண்டு பக்கமும் பேலன்ஸுக்கு வீல் இருக்கும் வாடகை சைக்கிள் ஓட்டியதும் நினைவிருக்கிறது. நான் முதன் முதல் சைக்கிள் கற்றுக்கொண்டது காஞ்சிபுரத்தில் இருந்தபோது. "எப்பதான் பெரிய சைக்கிள் கத்துக்க போற?" என மாமா பெண், மாடி வீட்டு ஷீலாவின் சைக்கிளை கடன் வாங்கி ஒட்டக் கற்றுத்தருகிறேன் என முதுகில் மாத்திக்கொண்டிருந்தாள். ஹூம் அவளுக்கு என்ன கோவமோ? அது வரை குரங்குப் பெடல் அடித்துக்கொண்டிருந்த நான் ஓரளவுக்கு ஓட்டக் கற்றுகொண்டேன். ஒட்டமட்டும்தான் கத்துக்கொடுத்தாளே தவிர ஏறவோ இறங்கவோ கற்றுக்கொடுக்கவில்லை. பிளாட்பார்மில் சைக்கிளை சாய்த்து நானே ஏறக்கற்றுக்கொண்டேன். இறங்குவது பெரும்பாடாக இருந்தது. நல்ல மொட்டை வெயிலில், புதிதாகப் போட்ட தார் ரோட்டில், வண்டியோடு விழுந்து, கை முட்டி கால் முட்டி எல்லாம் பேந்து, ஆயுதப் படை காவலர் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கப்புறம் பிராக்டீஸ்??!! பண்ணி பிரேக் போட்டவுடன் தொபுக் என கீழே குதிக்கும் அளவிற்கு வந்தேன்.

வாலாஜாவிற்கு குடிவந்தபிறகு சைக்கிள் உபயோகிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. எட்டாவது லீவில் அப்பா ஒரு லேடி பேர்ட் வாங்கித் தந்தார். அதுகூட ஹவுசிங் போர்டில் ஓட்ட மட்டுமே வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து NHஇல் ஓட்ட வேண்டியதிருந்தது. அதுவும் ரொம்ப விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் அம்மாக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை. மேத்ஸ் ட்யூஷன் முடித்து வர 8 மணி ஆகிவிடும். நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டே மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவோம். ஒரு நாள் முதல் முறையாக லாரியை ஒவர்டேக் பண்ணேன் (ஹி ஹி நின்றுக்கொண்டிருந்த லாரி என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்). அதைக்கூட லெப்ட் சைடில் பண்ணியதை KB கிளாஸ்மேட்ஸிடம் சொல்லி அவர்கள் கிண்டல் பண்ண ஒரே ரகளை. கொஞ்ச நாளிலேயே பெரிய ப்ரொபெஷனலாகி விட்டேன்.

பத்தாவது படிக்கும்போது ஸ்கூட்டர் பழக வேண்டுமென்ற ஆசை வந்தது. அப்பாவிடம் இருந்தது ராயல் என்பீஃல்ட். அதை தாங்கிப் பிடிப்பதை யோசிக்கும் தெம்புக்கூட இல்லை. அந்த வருடம் ஊருக்கு போனபோது பெரியம்மாவிடம் கெஞ்சி அண்ணாவை வண்டி ஓட்டக் கத்துகொடுக்க சம்மதம் வாங்கினேன். பெரியம்மாவோட கண்டிஷன் "குழந்தையை அடிக்காம, திட்டாம ஓட்ட சொல்லிக்கொடு. துளி கீறல் விழுந்தாலும் தொலைச்சுடுவேன்" என அண்ணாவை மிரட்டி அனுப்பிவைத்தார். தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று. அடுத்த லீவு எப்படா வரும் என காத்துக்கிடப்பேன். கள்ளக்குறிச்சி - சேலம் மெயின் ரோடில் பயிற்சி. ஒரு தடவை அண்ணாவிடம் கெஞ்சியே ஆத்தூர் வரை போனேன். சரியான கைவலி. ரிடர்ன் அண்ணா ஓட்டிக்கொண்டு வந்தார்.

எவ்வளவு நாள் தான் அண்ணாவை வைத்துக்கொண்டே ஓட்டிப் பழகுவது? தனியே ஓட்டத்தீர்மானித்து வண்டியை எடுத்தேன். எல்லாருக்கும் சிங்கிள்ஸ் ஈசியா பழகிரும். லோடு வச்சு ஓட்றது கஷ்டமா இருக்கும். என் நிலைமை டாப்ஸி டர்வி. தனியே ஓட்டுவது பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இங்கேயும் சட்டென்று பிரேக் அடித்து பேலன்ஸ் செய்வது பெரும்பாடாய் இருந்தது. எலக்ட்ரிக் கம்பம், குப்பைத் தொட்டி இவையெல்லாம் தான் என் பார்க்கிங் ஸ்பாட். வண்டியைப் போட்டுவிட்டு சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். திட்டிக்கொண்டே அண்ணா போய் வண்டியை எடுத்துவருவார். ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
"அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"
அவ என்னடா பண்ணுவா பாவம். நீ ஒழுங்கா இறங்க சொல்லிக்கொடுக்கலை என்ற பாட்டோடு என்னை அழவைத்ததற்காக எக்ஸ்ட்ராவாக திட்டுக் கிடைத்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் ஸ்கூட்டி வாங்கித் தருகிறேன் என்றார் அப்பா. நண்பனின் டிவிஎஸ் 50 ஓட்டி மணலில் ஸ்கிட்டாகி கீழே விழுந்து முதுகில் அடி. லிகமண்ட் டேர் என ஒரு மாசம் வீட்டில் படுக்க வைத்து விட்டார்கள். அதுக்கப்புறம் வண்டி என்றாலே துரத்தி துரத்தி அடிதான்.

பல வருடங்கள் கழித்து டூ வீலர் நமக்கு ராசியில்லை என என் பார்வையை கார் பக்கம் திருப்பினேன். அப்பாவிடம் கேட்டதுக்கு எரித்து விடுவது போல் பார்த்தார். ஒருவழியாய் அப்பாவை சம்மதிக்க வைத்து நான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டபோது ஜூனியர் பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. இஸ்மாயில் அங்கிள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி வண்டியைக் கரெக்ட் பண்ணி கற்றுக்கொண்டேன். "60க்கு மேல போகாத பாப்பா. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு." என அங்கிள் அடிக்கடி கூறுவார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் "பிரேக் போடு பாப்பா" என அவர் கத்திக்கொண்டிருந்த போது "இருங்க அங்கிள் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்" என அங்கிளை டெரராக்கியிருக்கேன். இது வேலைக்காவது என நினைத்தவர், ட்ரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அங்கே என்னை விட டெரராய் நிறைய பேர். "ஹால்ஃப் கிளட்ச் கொடுப்பா" என இண்ஸ்டரக்டர் சொன்னால் "அது எங்க சார் இருக்கு" என்றான் இன்னொருவன். ஒரு வழியாய் நானும் லைசென்ஸ் எடுத்துட்டேன்.

வண்டி இல்லை. ஆனால் LMV லைசென்ஸ் வைத்துக்கொண்டு நான் விடும் அலப்பறை தாங்காமல் ரகு வண்டி வாங்கித் தர சம்மதித்துள்ளார். ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என் சாய்ஸ். அவர் கைனடிக் ஹோண்டாவில் நிற்கிறார். இன்னும் பைனலைஸ் பண்ணவில்லை. எதுவானாலும் டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்:)

15 comments:

Anonymous said...

இந்த வண்டி ஓட்ட பழகறது மட்டும் நமக்கெல்லாம் ஒரு பெருங்கதையா ஆகிடுது பாருங்க :)

pudugaithendral said...

டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்//

:)))))) அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சென்னை வரும்போது ட்ரீட் வாங்கிக்கறேன்

Thamira said...

கிடத்தட்ட எல்லோரது அனுபவமும் இதுதான் எனினும் அழகான நினைவுகூறல். அதுவும் அன்பான தங்கையாக இருப்பதின் சுகமே தனிதான் இல்ல?

நானும் 15 வருஷத்துக்குப்பின்னர் லைசன்ஸை தொலைத்துவிட்டு சமீபத்தில் மீண்டும் போராடிய (8 போட்ட) அனுபவத்தை எழுதலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

கார்க்கிபவா said...

//அளப்பறை தாங்காமல் //

உங்க அலப்பறை பெருசுதான்.. அதுக்குன்னு அளப்பறைன்னு போடக்கூடாது மேடம் :)))

நர்சிம் said...

வண்டியைப் பற்றிய பதிவென்பதாலோ என்னவோ..சல்ல்ல் என்ற நடையில் போனது பதிவு.

வாழ்த்துக்கள்.

//தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று//

நல்லா எழுதி இருக்கீங்க.

Gokul R said...

///"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"///

இத வச்சு சினிமா காமெடி சீனே எடுக்கலாம்

Why lots of inactivity ??

டெய்லி ஒன்னு எழுதுங்க !!!

Truth said...

'கீழே இழுந்தாத் தான் கத்துக்க முடியும்' அப்படிங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்ட என்னோட கசின் என்ன வேணும்னே கீழே தள்ளி விடுவான். ஏண்டா தள்ளறேன்னு கேட்டா, அப்போ தான் டா சீக்கிரம் கத்துக்க முடியும்னு வேற சொல்லுவான். கடைசியில கீழ விழாமலே கத்துகிட்டு சரித்திரத்துல இடம் புடிச்சிட்டேன். நமக்கு சரித்திரம் முக்கியம் பாருங்க...

மணிகண்டன் said...

இப்போ நீங்க ராயல் என்பீஃல்ட் ட்ரை பண்ணலாமே ! பத்தாவது படிக்கும் போதே முயற்சி பண்ணி இருக்கலாம் :)-

"உழவன்" "Uzhavan" said...

சென்னை வந்த புதுல தி.நகர், மெளண்ட் ரோடு டிராபிக்க பார்த்திட்டு, எப்படிடா இங்கெல்லாம் வண்டி ஓட்டுறாங்க; நம்மளாலலாம் இந்தக் கூட்டத்துக்குள்ள வண்டி ஓட்டமுடியுமானு நினச்சதெல்லாம் உண்டு.
நல்ல பகிர்வு

Arun Kumar said...

நல்லா எழுதி இருக்கீங்க..
லைசன்ஸ் வாங்கியதுக்கு congrats.

சென்னையில் எனக்கு தெரிந்தவர்களை எல்லாரையும் சாலையில் ரொம்ப ரொம்ப கவனமாக போக சொல்றேன். அவங்களுக்கு ஏதும் ஆக கூடாதில்ல

R.Gopi said...

புது வண்டிக்கு வாழ்த்துக்கள்.. வண்டி வாங்கியவுடன் ட்ரீட் எங்கன்னு சொல்லிடுங்க...

அங்க கரெக்டா ஆஜர் ஆயிடறேன்.....

Vidhya Chandrasekaran said...

நன்றி சின்ன அம்மிணி.
நன்றி கலா அக்கா.
நன்றி ஆதி.
நன்றி கார்க்கி (மாத்திட்டேன்)
நன்றி நர்சிம்.
நன்றி கோகுல் (இதுக்கே நேரமில்லையாமா)

Vidhya Chandrasekaran said...

நன்றி ட்ரூத்.
நன்றி மணிகண்டன்.
நன்றி உழவன்.
நன்றி அருண்குமார்.
நன்றி கோபி.

பா.ராஜாராம் said...

அருமை வித்யா!

ராமலக்ஷ்மி said...

மிகவும் ரசித்து வாசித்தேன்:)!