December 30, 2010

பரிசு பெற்ற கதையும் பரிசும்

விளையாட்டாய் எழுத வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஒன்றும் பெரிசாக எழுதிக் கிழிக்கவில்லையென்றாலும் என் மனதிற்குப் பிடித்தவற்றை கிறுக்கி வைக்கிறேன். ஒரு சேமிப்புக் கிடங்காய். விளையாட்டாகவே தான் ஆதியும் பரிசலும் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பியது. அறிவிப்பு வந்தவுடன் வெளியான (நான் படித்த) நிறைய கதைகள் ஏதோவொரு வகையில் சஸ்பென்ஸ்/சயின்ஸ் ஃபிக்‌ஷனோடு சம்பந்தப்பட்டிருந்தது. சரி நாமலும் முயல்வோம் என ஆரம்பித்து, வேண்டாம் நமக்கு மொக்கை தான் சரிப்பட்டு வருமென பாதியில் டைவர்ட் பண்ணிய கதை இது. பதிவுலகம் சாராத நண்பர்களுக்கு படிக்க அனுப்பியபோது ஃப்ளோ நல்லாருக்கு என்று எல்லோரும் சொல்லவும் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். கதையை பதிவில் வெளியிட்ட போது எல்லோரும் ஓரளவுக்கு நல்லாருக்கு என்றே கமெண்டினார்கள். அதோடு அதை மறந்தும் விட்டேன். முடிவுகள் அறிவிக்கும் தேதி நெருங்கிய வேளையில் கூகிள் பஸ்ஸில் கூட கிண்டலாகத்தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

ஆறுதல் பரிசு என்று தெரிந்ததும் நிஜமாகவே சந்தோஷமாய் இருந்தது. போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும், இதுவரை தொடர்ந்து என்னை வாசித்து ஊக்கமளித்து விமர்சித்து வரும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள். ஆறுதல் பரிசான புத்தகங்கள் வந்துச் சேர்ந்துள்ளன. கிராவின் கோபல்ல கிராம மக்கள், கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு, பரிசலின் டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும். கிராவை இதுவரை நான் வாசித்ததேயில்லை. எனக்கு பரவலான/ஆழ்ந்த வாசிப்பறிவு கிடையாது. என்னைக் கவரும் தலைப்புகளைக் கொண்ட புத்தகங்களையே வாசிக்கிறேன். சில சமயங்களில் இவ்வகைத் தேர்வுகள் காலை வாரியதும் உண்டு. எளிமையான மொழி நடையில், கதைக்களத்தில் நம்மையும் உலவச் செய்யும், கதை மாந்தர்களோடு நம்மையும் உறவாடவைக்கும் படைப்புகளே என்னை பெரிதும் ஈர்க்கின்றன. இதுபோன்ற கதைகள் என் பால்யப் பருவத்தை ஏதோவொரு வகையில் கண்முன் கொண்டு வரவோ, நினைவொடைகளில் நீந்தவோச் செய்கின்றன. தன்னுடைய புத்திசாலித்தனத்தை, அதிமேதாவித்தனத்தை வலிந்து திணிக்கும் கதைசொல்லிகளின் கதைகள் என்னை கவர மறுக்கின்றன.

பரிசாய் பெற்ற கிராவின் புத்தகம், நண்பர்கள் பரிசளித்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பு என படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதோ இன்னும் கொஞ்சம் நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. இதெல்லாம் வாங்கனும்ன்னு எதுவும் பட்டியல் போட்டுவைக்கவில்லை. சென்ற முறை வாங்கிய புத்தகங்களில் இன்னும் பாதிக்கு மேல் படிக்காமல் வைத்திருக்கிறேன். இந்த முறை எப்படியெனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ஏனோதானோ என்றில்லாமல் பொறுமையாக வாங்கவேண்டும்.

34வது புத்தகக் கண்காட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல் வாரநாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரையும், விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணி முதல் இரவு 8.30 வரையும் நடைபெறுகிறது. மேலதிக விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

அனைவருக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டு எல்லாவிதத்திலும் உங்களுக்கு இன்பத்தைத் தர (நோ நோ. நான் எழுதறத நிறுத்த மாட்டேன்)வேண்டுகிறேன்.

December 27, 2010

Tees Maar Khan

தாயின் கருவிலிருக்கும்போதே திருட்டைப் பற்றிய சகலமும் கற்றுக்கொள்ளும் மகாத் திருடன் Tarbez Mirza Khan (a) Tees Maar Khan. போலீசார் கைப்பற்றிய ஜோஹரி பிரதர்ஸின் கலைப் பொக்கிஷங்களை திருடி, அவர்களிடமே ஓப்படைக்கும் பணியை மேற்கொள்கிறான். டெல்லிக்கு சரக்கு ரயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் கலைப் பொருட்களை, ஆஸ்கர் அவார்ட் வாங்கும் வெறியில் இருக்கும் ஹீரோ (அக்‌ஷய் கண்ணா), ஹீரோயின் கனவிலிருக்கும் தன் காதலி (காத்ரீனா கைஃப்) மற்றும் துலியா என்ற கிராமத்தின் ஒட்டுமொத்த ஜனங்களை வைத்து எப்படித் திருடுகிறான்? போலீசாரிடம் மாட்டினானா என்பது கதை.

வித்யாசமாய் ஆரம்பிக்கிறது டைட்டில் சாங். சரி படமும் சூப்பரா இருக்கும்ன்னு எதிர்பார்த்தால் எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சன் டிவியில் பெஸ்ட் சீன்ஸ் என்றொரு நிகழ்ச்சி வரும். ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாமல் ஒரு படத்தில் வரும் சிறந்த சீன்கள் ஒளிப்பரப்பாகும். தீஸ் மார் கானும் அப்படித்தானிருக்கிறது. பாரீஸில் கைதாகும் கான் மும்பையில் தப்பிக்கிறார். அவரை ரெண்டே ரெண்டு டம்மி சிபிஐ ஆபிசர்கள் மட்டுமே தேடுகிறார்கள். அதுவும் மொத்தம் ரெண்டே சீனில். படம் தொடங்கும்போது வரும் கமிஷனர் அண்ட் கோ படத்தை முடித்து வைக்கவும் வருகிறது. அது சரி. ஃப்ரா கான் படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது 2ஜியில் ஊழலே நடக்கவில்லை என நம்புவதற்கு ஒப்பானது. முதல் இரண்டு படங்களான Main hoon na மற்றும் om shanthi om ஆகியவற்றில் நோ லாஜிக். அட்லீஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே ஒரளவிற்கு சுமாராக இருக்கும். இங்கு அதுவும் கிடையாது. பெரிய நடிகராம் ஆனா ஒத்தை கேமரா வச்சிகிட்டு ஷூட்டிங் நடக்குதுங்கறதைக் கண்டுக்கவே மாட்டாராம். காதுல பூ வைக்கலாம். பரவாயில்லை. ஒரு பூந்தோட்டத்தையே வைக்கிறாங்க. வெகு சில சீன்களே சிரிப்பை வரவழைக்கின்றன. உதாரணத்திற்கு மனோஜ் டே ராமலன்க்கான பெயர் விளக்கம். மற்ற சோ கால்ட் ஜோக்கெல்லாமே மொக்கையாய் இருக்கிறது.

அக்‌ஷய் குமார் அண்ட் கோ. எப்போப் பாரு அவரு உதிர்க்கும் பஞ்சும், அவர் அடிப்பொடிகளின் எசப்பாட்டும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக ஓவர் டோஸாகிவிடுகிறது. காத்ரீனா கைஃப். நம்ம தமிழ்ப்பட ஹீரோயின்கள் செய்த/செய்கின்ற வேலை. லூசுக் கேரக்டர். அதுவும் லூசு ஹீரோயின் கேர்க்டர்னா கேக்கவே வேணாம். செம்ம காட்டு காட்டிருக்காங்க;) ஏற்கனவே இருக்கிற கிறுக்குப் பட்டாளத்துக்கு மத்தில சல்மானும், அனில் கபூரும் கெஸ்ட் அப்பியரன்ஸ்.

படத்துல இப்பப் பாட்டு வரப்போகுதுன்னு சொல்லி ஒரு பாட்டு போடலாம். எல்லாப் பாட்டும் அப்படிப் போட்டா? கடுப்பாயிருக்கு. ஆனா ம்யூசிக் சூப்பர். ஹிந்தி மசாலா படத்துக்கு தேவையான இசை. விஷால் ஷேகர் அட்டகாசமா பண்ணிருக்காங்க. ஷீலா கி ஜவானியும், வல்லாரே வல்லா வல்லாவும் செம்மையா தாளம் போட வைக்குது. டைட்டில் சாங்கான தீஸ் மார் கான் பாட்டு ஷிரிஷ் குந்தர் (ஃபரா கானின் வூட்டுக்காரர்) இசையமைத்ததாம். குட். தமிழ்நாட்டுக்கு ஒரு டி.ஆர் மாதிரி வடக்குக்கு ஒரு ஷிரிஷ் குந்தர் போல. எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசைன்னு எல்லாத்திலயும் இவர் பேர்தான். ஆனா ஒன்னும் உருப்படியா இல்லைங்கறதுதான் மேட்டரே. சொதப்பலான திரைக்கதை. திருட்டை வைத்து ஒரு ஜாலியான காமெடி குடுக்கலாம் என ஆரம்பித்து, படத்திற்குள் படம் என ஸ்பூஃபிற்குத் தாவி, தீடிரென கிராமத்திற்கு நல்லது செய்யலாமென முடிவெடுத்து, எமோஷன் வேண்டாமென பழையபடி ஸ்பூஃபிற்குத் தாவி, மீண்டும் எமோஷன் ட்ராமாவைக் கையிலெடுத்து, எந்த எழவும் வேண்டாமென ஹாப்பி எண்டிங் என முடிக்கிறார்கள். இதே கதையை ப்ரியதர்ஷன் ரசிக்கும்படிக் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். நல்லவேளையாக இதில் காதல் கருமாந்திரத்தை உள்ளே கொண்டுவரவில்லை. இன்னொரு நல்ல விஷயமாக படத்தை ரெண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டார்கள்.

தீஸ் மார் கான் - மரண அடி:(

December 24, 2010

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்

நவம்பர் தொடங்கி ஜனவரி வரை ஏதோவொரு வகையில் ஃபெஸ்டிவ் சீசன் என்ற மூட் இருந்துக்கொண்டே இருக்கும். டமால் டூமில் என வெடிக்கும் வெடிகள் தீபாவளியின் வரவைச் சொல்வது போல் வீட்டின் வாயிலில் கலர்கலராய் ஒளிவீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் க்றிஸ்துமசின் வரவைச் சொல்லும்.

பள்ளிக் காலம் தொட்டு க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அளவில்லா குதூகலத்தைத் தருகின்றது. காஞ்சிபுரத்தில் நான் படித்த பள்ளி க்றித்துவ அமைப்பால் நடத்தப்பட்டது. வெள்ளுடை சிஸ்டர்ஸ் தான் சகலமும் அங்கே. அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் தான் ஆரம்பிக்கும். டிசம்பர் முதல் வாரத்திலேயே பள்ளியின் நுழைவாயிலிலும், ஜீசஸ் சிலை இருக்கும் இடத்திலும், சிஸ்டர்களின் கான்வெண்டிலுமாக மூன்று ஸ்டார்கள் ஒளிர ஆரம்பித்துவிடும். க்றிஸ்துமஸிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மரம் டெகரேட் செய்து, பெரிய குடில் அமைத்து, பொம்மைகள் வைப்பார்கள். கிட்டத்தட்ட கொலு போல. ப்ரெக்னெண்டாக இருக்கும் மேரி மாதா சிலை க்றிஸ்துமஸன்று குழந்தை யேசுவோடிருக்கும்;) ஒவ்வொரு க்றிஸ்துமஸின் போதும் யேசுவின் பிறப்பைப் பற்றிய நாடகமிருக்கும். ஒரிரு வருடங்கள் narrator ஆக இருந்த ஞாபகமிருக்கிறது. அப்புறம் பாட்டு டான்ஸென ஒரு மணிநேரம் வண்ணமயமாக கடந்துச் செல்லும். எல்லோருக்கும் கேக் விநியோகிக்கப்பட்ட பின் ப்ரார்த்தனைகள், ஸ்தோத்திரங்கள் என கொண்டாட்டங்கள் தற்காலிக முடிவிற்கு வரும்.

அங்கிருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கு க்றிஸ்துமஸ் என்றில்லை எந்தவொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இரண்டே வருடங்களில் மீண்டும் வேறு பள்ளி மாறினேன். அங்கு எல்லா நாட்களும் கொண்டாட்டம் தான். சீனியர் வகுப்பிலிருந்ததால் ஆர்கனைசிங் கமிட்டியில் மெம்பராகும் வாய்ப்பும் கிடைத்தது. தீபாவளி பெரிதாக ஒன்றுமிருக்காது. க்றிஸ்துமசும் பொங்கலும் க்ராண்டாக செலிப்ரேட் செய்யப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்னரே Choir டீமிற்கு (ஹி ஹி. நானும் பார்ட் ஆஃப் தி டீம்) ஜாக்குலின் மற்றும் செலினா மிஸ்ஸிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். வருடா வருடம் ஆரம்ப பாடல் மட்டும் மாறும். முதலில் ஒரு பாடல். பின்னர் நடனம். அடுத்து ஜிங்கிள் பெல்ஸ் பாடல். மீண்டுமொரு நடனம். ஆசிரியர்களும், கெஸ்ட்டுகளும் கலந்து கொள்ளும் சில விளையாட்டுக்கள். கடைசியாக We wish you a merry christmas பாடல். ஒரிரு நிமிடப் ப்ரேயர். க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும். ரிகர்சலின் போது ஆசிரியர்களை அழவிடுவது அலாதியானது. வேணுமென்றே நோட்ஸ் மாற்றிப் பாடுதல், சின்க் தவறவிடுதல், ஹைப் பிட்சில் சொதப்புதல் என நிறைய கலாட்டா செய்வோம். எப்பேற்ப்பட்ட மூடில் இருந்தாலும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் பீட்ஸ் கொண்டது ஜிங்கிள் பெல்ஸ் பாடல். பாடுவதோடில்லாமல் ஃபுட் டேப்பிங், ஆர்ம் ஸ்விங்கிங் போன்ற எளிமையான நளினமான மூவ்களையும் தரவேண்டும். இம்மாதிரியான charolsக்கு உச்சரிப்பு தெளிவாகவும் அதே சமயம் ஸ்டைலிஷாகவும் இருக்க வேண்டும் என்பது செலினா மிஸ்ஸின் நம்பிக்கை. அவர் எதிர்பார்க்கிற ரிசல்ட் வரும் வரை விடமாட்டார். என்னதான் டார்ச்சர் செய்தாலும் விழாவின் போது கரெக்டாகப் பாடி அப்ளாஸ் வாங்கும் எங்கள் டீம்.


அதே போல் இந்தப் பாட்டையும் கேளுங்கள்.


பின்னர் காலேஜில் Christ Mom Christ Child விளையாடுவதோடு சரி (Day Scholar கேங் எல்லாம் பொங்கலுக்கு இதை விளையாடியது தனிக் கதை). மணமணக்கும் ரம் ப்ளம் கேக், பால் பாயாசம், வெனிலா/மேங்கோ ஃப்ளேவர்டு கஸ்டர்ட் என ஷீலா ஆண்டியின் கை வண்ணத்தில் ஒரிரு வருடங்கள் க்றிஸ்துமஸ் கொண்டாடியதுண்டு. இம்முறை அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் க்றிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு முறை படியேற அவர்கள் வீட்டு வாயிலைக் கடக்கும்போது காணக் கிடைக்கும் டெக்கரேட் செய்யப்பட்ட க்றிஸ்துமஸ் மரமும், ஸ்டாரும் என் பழைய நினைவுகளை கிளறிக் கொண்டே இருக்கின்றன. குட் ஓல்ட் டேஸ்..

பதிவர்கள் அனைவருக்கும் க்றிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...

December 22, 2010

ஐய்யோ...அம்மா...கொல்றாளே..

கோபம் அழுகை
துக்கம் சந்தோஷம்
அனைத்தையும் நொடியில் வெளிபடுத்துகிறாய்
என் மீதான காதலைத் தவிர.
*************

காலை எழுந்தவுடன் படிப்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என
பாரதி சொல் பின்பற்றிக்கொண்டிருந்தேன்.

இப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் காப்பி
பின் காதல் கொடுக்கும் உன் பேச்சு என்றாகிவிட்டேன்.
*************

சத்தமே எழுப்பாமல் பின்னிருந்து அணைக்கிறாய்
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் அலறித் துடிக்கிறது இதயம்
****************

செல்போன்
ரூம் சாவி
பைக் கீ
பர்ஸ்
எல்லாம் இருக்கா என்கிறாய்.
ம் என்றவள் என்னை மறந்து
அங்கேயே விட்டுவிட்டு வருகிறேன்.
*****************

உன்னிடத்தில் சுலபமாய்
மனதை தொலைத்துவிட்டேன்
வெட்கம் தொலைக்க வெட்கமாயிருக்கிறது.
******************

மனம் கொள்ளா கோபம்
விழி கொள்ளா கண்ணீர்
அனைத்தும் சட்டென அடங்கிவிடுகிறது
உன்னிரு விழி பார்க்கையில்.
******************

உன் குற்றத்தையும்
என் கோபத்தையும்
மரித்துப் போகச் செய்கின்றன
நம் பிரிவு
******************

December 20, 2010

ஈசன்

நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து என்றிருக்கும் அரசியல்வாதி. அவர் கட்டி வைத்திருக்கும் சாம்ராஜ்யத்திற்கு ஒரே வாரிசு. நேர்மையாக இருக்க விரும்பும் அசிஸ்டெண்ட் கமிஷனர். குடி கும்மாளம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் வாரிசிற்கு தொழிலதிபர் மகளோடு காதல் ஏற்படுகிறது. சின்ன மோதலுக்குப் பின் அரசியல்வாதியின் சாணக்கிய மூவ்களால் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்படுகிறது. இதைக் கொண்டாட செல்லும் அரசியல்வாதியின் மகனை யாரோக் கடத்துகிறார்கள். வாரிசை மீட்கக் களமிறங்குகிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர். கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? அசிஸ்டெண்ட் கமிஷனர் வாரிசைக் கண்டுபிடித்தாரா? விடைத் தருகிறான் ஈசன்.

எந்த விமர்சனமும் படிக்காமல் ரிலீஸான மறுநாளே படத்திற்கு புக் செய்திருந்தோம். சசிக்குமாரை மட்டும் நம்பி. சசிக்குமார் ஏமாற்றவில்லை. அதே சமயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவுமில்லை. மிகச் சாதாரணமான பழிவாங்கும் கதைதான். அதைக் கொடுத்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. நகரத்து இளசுகளின் பார்ட்டி கலாச்சாரம். பப், டிஸ்கோத்தே, கேட்டமின், ப்ரைவேட் பார்ட்டி என கெட்டு சீரழிகிறார்கள் படத்தில் (நிஜத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது). ஈசிஆரில் இரவில் நடக்கும் drunk and drive விபத்துகளும், காலை வேளைகளில் கஃபேக்களிலும், இரவில் பப்பிலும் கூடும் இளைஞர்களிம் ஈசி கோ வாழ்க்கைமுறையுமாக ஒரு ட்ராக் ஓடுகிறது. அடாவடி அரசியல்வாதியும், அவர் அல்லக்கையும், இவர்களின் கட்டப்பஞ்சாயத்து வேலைகளுமாக இன்னொரு ட்ராக். முதல் பாதி இவை இரண்டு மட்டும்தான். சரி காதலை மையமாக வைத்து அரசியல்வாதியும், தொழிலதிபரும் விளையாடப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் இடைவேளையில் சடாரென ஈசனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

இன்னார் தான் ஹீரோ/ஹீரோயின் என அடையாளம் காட்ட முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. அதிலும் தனித்து முத்திரைப் பதிக்கிறார் சமுத்திரக்கனி. அசிஸ்டெண்ட் கமிஷனர் சங்கைய்யா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். போலீஸ் வேடம் ஏற்றவுடனே ஹீரோயிஸம் காட்டாமல் தன் கையாலாகாததனத்தை நொந்துக் கொள்ளும்போது நடிப்பில் மிளிர்கிறார். இவர் உயரமும் குரலும் மிகப் பெரிய பலம். அரசியல்வாதியாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். பேச்சிலேயே நரித்தனத்தைக் காண்பிக்கிறார். பிள்ளை என்று வரும்போது ஒரு விதமான குரலிலும், மற்றவர்களிடம் அதிகாரத் தொனியிலும் பேசி கவர்கிறார். இவரின் அல்லக்கையாக வரும் நமோ நாராயணன் சூப்பர் (நாடோடிகள் படத்தின் போஸ்டர் பார்ட்டி்). ”தெய்வமே” என்ற ரிங்டோனும், போலீஸ் வண்டியில் ஏறியதும் சமுத்திரக்கனியின் காரெக்டரை நக்கலடிப்பதும், மனுஷனுக்கு அடிப்படைத் தேவையான ஏசி இல்லையான்னு கேட்டதுக்கு அடிச்சிட்டாருங்கைய்யா எனும்போதும் க்ளாப்ஸ் அள்ளுகிறார். வைபவ் ரோமியோ கேரக்டருக்கு ஓக்கே. அபிநயா தான் ஹீரோயின் என பில்டப் செய்திருந்தார்கள். மொத்தமே முக்கால்மணிநேரம் கூட வரவில்லை. ஆனாலும் கண்களாலேயே சிரித்து மனசை கொள்ளையடிக்கிறார். கடைசி காட்சியில் அவர் அப்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மடமடவென காஃபியை குடிக்கும்போது குடுக்கும் எக்ஸ்பிரஷன் மனதை தொடுகிறது ஈசனாக வரும் அந்தப் பையனும் ரொம்ப எதார்த்தமாக செய்திருக்கிறான்.

நாம் அன்றாடம் கடந்து போகும் சில செய்திகளின் பிண்ணனி தெரியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. படம் தொடங்கி சில காட்சிகளிலேயே ஈவ் டீசிங்கினால் இறக்கும் அந்தப் பெண், நிலத் தகராறால் கொல்லப்பட்டு கள்ளக்காதலால் கொலை என செய்தி வரும்போதும், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை என்பதன் உண்மையான பிண்ணனியும் அதிர வைக்கின்றன. அசிஸ்டெண்ட் கமிஷனரின் வசனங்களுக்கு இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து போலீஸ்காரர்கள் மேஜர் இஞ்சூரியா ஸ்பாட் அவுட்டா என்றெல்லாம் பேச மாட்டார்கள். சில இடங்களில் வசனங்களுக்கு தியேட்டரில் ரொம்ப நேரம் க்ளாப்ஸ். உதாரணத்திற்கு “அரசியல்வாதி பிஸினெஸ்மேன் ஆகலாம். பிண்னெஸ்மேன் என்னிக்குமே அரசியல்வாதியாக ஆக முடியாது”. “நான் உங்க புள்ளை இல்லையான்னு கேட்ட. நாந்தான் உங்கப்பன்னு சொல்லத் தாண்டா அடிச்சேன்”.

இசை ஏற்கனவே பார்த்துவிட்டோம். “இந்த இரவுதான் பாடலை” வேஸ்ட் பண்ணிவிட்டார்கள். மொக்கையான கொரியோகிராஃபி:( அதே சமயம் ஜில்லா விட்டு சாங் நன்றாக வந்திருக்கிறது. நல்லவேளையாக நாங்கள் படம் பார்த்த போது சுகவாசு பாட்டுக்கு கத்திரி போடப்பட்டிருந்தது. பிண்ணனி இசை சில இடங்களுக்கு சரியாக பொருந்தினாலும் பல இடங்களில் தேவையில்லாமல் டெம்ப்போவை ஏற்றிவிடுகிறது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் ஸ்பீட் தான். படம் செம்ம ஸ்லோ. சில இடங்களில் அந்தக் குறை தெரியாமல் காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலும் அந்தக் கிராமத்து திருவிழா காட்சிகள், அபிநயா கலந்துக்கொள்ளும் பார்ட்டி காட்சிகள், க்ளைமேக்ஸ் காட்சிகள் இழுஇழு என இழுக்கிறார்கள். க்ளைமேக்சும் ரொம்ப சினிமாட்டிக். இன்னும் கொஞ்சம் வேகமாக திரைக்கதை நகர்ந்திருந்தால் பெரிய ஹிட்டடித்திருக்கும் படம். இப்போவும் மோசமில்லை. பொறுமையிருப்பவர்கள் பார்க்கலாம்.

ஈசன் - தவறு செய்தவர்களை நின்று நிதானமாக கொல்கிறான்..

December 14, 2010

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: கர்நாடக சங்கீதத்தில் எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் மன்னிக்கவும்.


விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க


எச்ச

ரி

ர்ரீ



க்கா



ம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.


அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே


யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா


அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே


இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நாட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நாட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி


சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.


பி.கு : மீள்பதிவு. இன்னும் சில நாட்களில் டிசம்பர் சீசன் ஆரம்பிக்கப்போவதையொட்டி என் பங்கிற்கு:)

December 9, 2010

ஈசன் - பாடல்கள்

ஈசன்...

டைரக்டர்/நடிகர்/தயாரிப்பாளர் சசிக்குமாரின் அடுத்தப் படம். சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க என இயக்குனராய், நடிகராய், தயாரிப்பாளராய் நல்லப் படங்களைக் குடுத்த சசிகுமார் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஈசன். விக்ரம் தயாரிப்பதாய் சொன்னப் படம் பின்னர் சசிக்குமாரே டேக் ஓவர் செய்துக்கொண்டார். சமுத்திரக்கனி, அபிநயா, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கதிர். இசை ஜேம்ஸ் வசந்தன்.


மெய்யான இன்பம் இந்த போதையாலே..

பரபரப்பான சென்னை மெல்ல மெல்ல அடங்க ஆரம்பிக்கும் வேளையில் வெளியே சுற்றியிருக்கிறீர்களா? ஒரு பக்கம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் கையேந்தி பவன்கள். இன்னொரு பக்கம் ஆயிராமாயிரம் மனிதர்களை விழுங்கியிருந்தாலும் சலனமே இல்லாமல் நின்றுக்கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள். பாதி ஷட்டரை கீழிறக்கிவிட்டு வரவை எண்ணிகொண்டிருக்கும் கடைக்காரர்கள், அங்குமிங்குமாய் ஒரு சில மனிதர்களே தென்படும் கடற்கரைகள் என சென்னை இரவு நேரத்தில் அழகாய் தெரியும். சில சமயம் ஆபத்தாகவும். சென்னையின் இரவு வாழ்க்கையை அனுபவிக்கும் நண்பர்கள் பாடும் பாடல். சுக்வீந்தர் சிங், பென்னி தயாள் மற்றும் சுனந்தன் (இவர் வேறெதாவது பாடல் பாடியிருக்கிறாரா? குரல் பிரேம்ஜியைப் போலவே இருக்கிறது) பாடியிருக்கும் பாடல். நல்ல பீட்களோடு முதல் முறை கேட்கும்போதே நல்லாருக்குல்ல என எண்ண வைக்கிறது.

என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்றுப் போடு இரவிலே


அழகான வரிகள். பகல் முழுவதும் இயல்பு தொலைத்து இயங்கிக்கொண்டிருக்கும் நாம் நம்மை மீட்டெடுப்பது இரவில்தானே.

சுகவாசி சுகவாசி...

சித்ராவும் மால்குடி சுபாவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் அநேகமாக க்ளப் பாடலாக வருமென நினைக்கிறேன். சுமார் ரகமாகத் தான் தெரிகிறது. வழக்கமான க்ளப்/ஐட்டம் நம்பர். வரிகளும் ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாகத் தெரியவில்லை. இந்த மாதிரிப் பாடல்களில் நேற்று என்பது இல்லை, நாளை இனிமே தான் வரும், வாழ்வை அனுபவி போன்ற ஒரே மாதிரியான வரிகள் கடுப்பைக் கிளப்புகிறது.

ஜில்லா விட்டு ஜில்லா வந்த

ஒரு பாலியல் தொழிலாளி தன் கதையை சொல்லும் பாடல். சோகத்தைச் சுமக்கும் நாட்டுபுறப்பாடல். தஞ்சை செல்வி என்பவர் பாடியிருக்கிறார். அருமையான குரல். சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க பாடலின் மூலம் வேல்முருகன் என்ற பாடகரை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்தில் தஞ்சை செல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

உசுரல்ல நானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சி
வயிறு எங்கே கேட்டிச்சி


என்ற வரிகள் மனதை தைய்க்கின்றன.

கண்ணில் அன்பைச் சொல்வாளே..

அழகான மெலடியாக வந்திருக்க வேண்டிய பாட்டு. காதலியைத் தாயாய் நினைத்து உருகும் பாட்டு. என்னவோ மிஸ்ஸிங் என்ற நினைப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பாட்டில். என்ன எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிலருக்குப் பிடிக்கலாம்;)

Get Ready to rock

சுப்ரமணியபுரத்தில் படத்தில் வராமல் ஒரு பாடலிருக்கும் “தேநீரில் சிநேகிதம்” என. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பென்னி தயாள் பாடியிருக்கும் பாடல். பெரிதாய் ஈர்க்கவில்லை. மோசமுமில்லை. ஒரு வேளை படத்துடன் பார்க்கும்போது பிடிக்குமோ என்னவோ.

ட்ரைலர்..

December 7, 2010

துணுக்ஸ் 07-12-2010

சமீபகாலமாக பதிவுகலில் என் நடமாட்டம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. காரணம். பஸ். பஸ் ஓட்றதுல அதில நேரம் செலவிடறதனால பதிவுகள் எழுத முடியறதில்ல (அப்படியே எழுதிட்டாலும்). நிறைய கதைகள்???!!!! அரையும்குறையுமா எழுதி வச்சிருக்கேன் (நீ முழுசா எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்ங்கறீங்களா?). சீக்கிரமே பட்டி டிங்கரிங் வேலைப் பார்த்து பதிவேத்தனும். இன்னும் கொஞ்ச நாட்களில் முன்போல் பதிவுலகில் இயங்க முயற்சிக்கிறேன்.
*************

இரண்டுப் பிரபல பதிவர்கள் என்னை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்கூல்/காலேஜ் காலத்திலேயே படிச்சதில்ல. ஒரு பிரபல வளரும் இலக்கியவாதி புக் பேரெல்லாம் சொல்லி, படிங்க நல்லாருக்கும். படைப்புகளை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்பங்கன்னு சொல்றாங்க (அங்க அனுப்பிச்சு அவங்க காறித்துப்பி என்னை அசிங்கப்படுத்தறதப் பார்க்கிறதுல அம்மிணிக்கு அம்புட்டு சந்தோசம்). இன்னொரு பிரபலம் இப்போல்லாம் பதிவே எழுதறதில்ல. பஸ்லயே சுத்திக்கிட்டிருக்காங்க. அவங்க என்னாடான்னா ஒரு படுபயங்கரமான எழுத்தாளர் பேர சொல்லி அவர் எழுதின புத்தகத்தை வீட்டுக்கே வந்து கொடுக்கிறேன்னு கொலை மிரட்டல் விடறாங்க. என்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பது தெரிந்தும் இப்படி ஒரு பாதகச் செயலை செய்யத் துணிந்த அந்தப் பதிவர் மீது மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய நிபுணர்களிடம் ஆலோசனை செய்துக்கொண்டிருக்கிறேன். ராஜி பீ கேர்ஃபுல்.
************

தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான கோதாவுல நானும் குதிச்சிருக்கேன். கீழ்கண்ட இடுகைகளை விருதுக்கு என் சார்பா பரிந்துரைத்திருக்கிறேன். அப்படியே நீங்களும் உங்க பொன்னான வாக்குகளை அள்ளித் தெளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வலியின் மொழி
செக்கர் வானம்
மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்
*****************

சென்ற சனிக்கிழமையிலிருந்து மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. நசநசன்னு மழை. ரோடுகள் கேக்கவே வேணாம். பெசண்ட் நகர் வண்ணாந்துறை ரோடு நல்ல காலத்திலேயே குண்டும் குழியுமாய் பல்லிளிக்கும். இப்போ கேக்கவே வேணாம். மழைநீர் தேங்கி எங்கு பள்ளமிருக்குன்னு தெரியவே மாட்டேங்குது. டெட் ஸ்லோ/இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு போவது உத்தமம். பாண்டிச்சேரியிலும் சரியான மழையாம். ரெயின்போ நகர் என்ற ஏரியா மிதக்கிறது என்கிறார்கள். சென்ற மழைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் தந்தார்களாம். அதெப்படி மத்தவங்களுக்கு தராம விடலாம்ன்னு மத்தவங்க மறியெலெல்லாம் பண்ணிருக்காங்க. அதனால இந்த தடவை ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தருகிறார்களாம். இதற்குப் பதிலாக வெயில் காலத்திலேயே நீர் நிலைகளை சரியாக தூர் வாரி, கால்வாய்களின் அடைப்பு நீக்கி, சரியான வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தால் இந்தளவு பொருட்செலவு ஏற்பட்டிருக்காது. அது சரி கொள்ளை அடிக்கறதுல கொஞ்சம் பொதுமக்களுக்கும் கொடுத்து ஓரளவு புண்ணியம் தேடிக்கிறாங்க போல. இது சம்பந்தமா நான் முன்னமே எழுதியிருந்த (உருப்படியான ஒரே) பதிவு.
*****************

ரங்ஸுடன் வண்டியில் சென்றுக்கொண்டிருக்கும்போது நடந்த உரையாடல்

“வித்யா, ரோடெல்லாம் பள்ளமும் மேடுமா இருக்குன்னு சொல்றாங்க சரி. அதென்ன குண்டும் குழியுமா?”

“மொதல்ல ஒழுங்கா வண்டிய ஓட்டு. சில்லறை பொறுக்க வைக்காத. கேள்வியெல்லாம் அப்புறம் கேக்கலாம்”

“தெரியாதுன்னா சொல்லிடு. சும்மா இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம்.”

”எனக்கா தெரியாதா. குழின்னா பள்ளம். குண்டுன்னா வீங்கினாப்புல இருக்கிறது. அதாவது மேடா இருக்கிறது. அதான் அப்படி சொல்றாங்க”

“அப்படியிருக்காது. குன்றும் குழியுமா இருக்குங்கறதுதான் இப்படி சேஞ்ச் ஆயிருச்சின்னு நினைக்கிறேன்.”

“ஹைய்யோ. எப்படிப்பா இப்படியெல்லாம்? தமிழ் எழுத்துக்கூட்டி படிக்கவே கஷ்டப்படுவியே. சூப்பரான எக்ஸ்ப்ளனேஷன். பேசாம நீ கூட ப்லாக் எழுதலாம்”

“ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது”

மீ தி ஙே!!!

December 3, 2010

பெசண்ட் நகரில் கடற்கொள்ளையன்

நீண்ட தொப்பி, அழுக்கான உடை, கருப்பு கோட், மண்டை ஓடு பொறித்த கிழிந்த/நைந்த கொடி, வாள் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும் கடற்கொள்ளையர்களை விவரிக்க சொன்னால். கடறகொள்ளையனில்லாத கடலா? பெசண்ட் நகரிலும் ஒரு கடற்கொள்ளையன் இருக்கிறான். கடலில்லை. கடற்கரையில்:)

Once Upon a Pirate. பெசண்ட் நகரிலிருக்கும் இந்தியன், சைனீஸ், தந்தூர் (நல்ல வேளை காண்டினெண்டல்ன்னு போர்ட் போட்டு ப்ரெட் பட்டர் ஜாம் பரிமாறல)உணவுகளைப் பரிமாறும் உணவகம். பிஸ்டல்ஸ், ரம் பாட்டில், ட்ரெஷர் பாக்ஸ், கை விலங்குகள், நங்கூரம், சிம்னி விளக்குகள், கிளி் பொம்மைகள் என தீம் அட்டகாசமாய் இருக்கிறது. Above all வெயிட்டர்களின் ட்ரெஸ் கோட் பைரட்களைப் போலவே.



இரண்டு முறை சென்றதின் ரெவ்யூ. அட்டகாசமான மெனு. வெஜிடேரியனிலும் நிறைய ஆப்ஷன்ஸ் இருப்பது ப்ளஸ். வெஜ் வாங்டன் (Wontons) க்ளியர் சூப்பும், ஸ்ப்ரிங் ரோலும் ஆர்டர் செய்தோம். ரெண்டுமே அட்டகாசம். அதுவும் சூப்பில் நிறைய காய்கறிகள் (Crunchy and yummy). ஸ்ப்ரிங் ரோல்ஸும் எண்ணைய் அதிகமில்லாமல் போர்ஷனும் பெரிதாக இருந்தது. இரண்டாம் முறை சென்றபோது Hot & Sour soup, crispy fried vegetables, fried wontons, paneer tikka சாப்பிட்டோம். சூப்பும், க்ரிச்பி ஃப்ரைட் வெஜிடபிள்ஸும் ஆவரேஜ். மற்றவை எல்லாம் குட்.


மெயின் கோர்ஸிற்கு கார்லிக் நான், பட்டர் நான், Thai Fried rice, Punjabi Subji Makhanwale ஆர்டர் செய்தோம். ரைஸ் ஆவரேஜ் தான். மற்ற அனைத்துமே நன்றாக இருந்தது. இரண்டாம் முறை ரைஸைத் தவிர்த்துவிட்டு கார்லிக் நான், தந்தூரி ரொட்டி, கட்டக் ரொட்டி (நல்ல க்ரிஸ்பியாக, அப்பளத்துக்கும் ரொட்டிக்கும் இடையேயான கன்சிஸ்டென்சியில் நன்றாக இருந்தது), chow mein நூடுல்ஸ், வெஜிடபிள் சாஃப்ட் நூடுல்ஸ், thai fried நூடுல்ஸ், ஸ்டஃப்டு கேப்சிகம் க்ரேவி, புத்தாஸ் வெஜிடபிள்ஸ் ஆகியவை ஆர்டர் செய்தோம். Quantity & டேஸ்ட் நன்றாக இருந்தது.


Neat dessert menu. ஒவ்வொரு டெசர்ட்டுக்கும் பைரட் லேங்குவேஜில்??!! ஒரு பெயர். நாங்கள் Date pancake, Fried icecream மற்றும் chocolate souffle சாப்பிட்டோம். Fried icecream சுமார் ரகம் தான். Outer layer ரொம்ப திக்காக இருந்தது (இதுவரையில் நான் சாப்பிட்ட நான்கைந்து இடங்களில் Cascade மட்டுமே நல்ல fried icecream சர்வ் செய்கிறார்கள்). மற்றவை சூப்பர்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Once Upon a Pirate
உணவு/Cuisine - Veg/Non-veg Indian and chinese. பஃபே உண்டு.
இடம் - எல்லியட்ஸ் பீச் ரோட், பெசண்ட் நகர். முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில்.
டப்பு - 700 + taxes (Complete வெஜ் மீல் 2.5 பேருக்கு. ஹி ஹி ஜூனியரையும் சேர்த்து)

பரிந்துரை : கண்டிப்பாக செல்லலாம். வித்யாசமான தீம். சுவையான உணவு. After all this pirate does not loot ur purse;)

November 26, 2010

டாக்டர் கேப்டன் வால்க வால்க

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நடந்தேறிவிட்டது. குருவியே டாக்டர் பட்டம் வாங்கும்போது அது பறக்கும் (அல்லது பறப்பதாக நம்பப்படும்) விண்ணையே ஆளும் எங்கள் விண்ணரசுக்கு டாக்டர் பட்டம் தாமதமாய்த் தான் தரப்பட்டிருக்குறது. Better late than never என்று மனசை தேற்றிக்கொண்டு விலா எடுக்க ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்துக்கொண்டிருக்கின்றது. ஜிப் வெச்ச ஷூ போடும் ஜூப்பர்மேன், டார்ச் வெச்ச தொப்பி போடும் தமில்தலைவன், விருத்தகிரி தரப்போகும் வித்தகன், கரண்டுக்கே ஷாக் கொடுக்கும் ட்ரான்ஸ்பார்மர், புல்லட்டையே புஸ்வாணமாக்கும் பூகம்பம் டாக்டர் கேப்டன் வால்க வால்க..

************

கேப்டனா நடிச்சேன் கேப்டன் பட்டம் கொடுத்தீங்க. டாக்டரா நடிச்சேன். டாக்டர் பட்டம் கொடுத்தீங்க. அடுத்தது முதலமைச்சரா நடிக்கப் போறேன். பார்த்து பண்ணுங்க சாமீங்களா

ஃபோர் பீசஸ். நாட் இனஃப்..Sing in the rain..

கேப்டன் : நீ வேணா பாரேன். எதிர்காலத்துல இந்தக் குழந்தைங்க எதுக்குமே பயப்படாத மாவீரர்களாக வருவாங்க.

அண்ணி : எதை வெச்சு சொல்றீங்க?

கேப்டன் : என்னை இவ்ளோ கிட்டத்துலப் பார்த்தும் அழுகாம தைரியமா இருக்குதுங்களே. அதான்.

ஏய் இந்தாப்பா போட்டோகிராஃபர். என்னை மட்டும் எடு. கீழே உடைஞ்சிகிடக்கும் மெஷினையெல்லாம் எடுக்காதே.

அடுத்த படத்துல நான் BMஆ (PM) நடிக்கிறேன். கதை என்னான்னா, இந்தியாவின் தலைசிறந்த MNC கம்பெனில ஸ்டாஃபுகளா ஊடுருவி இந்தியாவை அழிக்கிற சாஃப்ட்வேர் ஒன்ன இன்ஸ்டால் பண்ற பாகிஸ்தான் தீவிரவாதிய ஒழிக்கிறேன். இந்தியால மொத்தம் முந்நூத்தி சொச்சம் சாஃப்ட்வேர் கம்பெனி இருக்கு....

ஏன்ப்பா இன்னும் கொஞ்சம் பெரிய விசிறி வாங்கிட்டு வந்திருக்கக்கூடாதா? பாரு எங்க ரெண்டு பேருக்கும் காத்தே போத மாட்டேங்குது.

யார்றா அது என்ன கிண்டல் பண்றது? என்கவுண்டர் பண்ணிடுவேன் ஜாக்கிரத.


டிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.

November 23, 2010

Harry Potter and the Deathly Hallows - Part I

டம்பிள்டோரின்(Dumbledore) மறைவைத் தொடர்ந்து ஹாரி பாட்டரும் அவன் நண்பர்களும் வால்டிமோர்ட்டை(Voldemort) அழிக்க புறப்பட்டிருக்கும் கதையின் முதல் பாகம். டெத் ஈட்டர்ஸின் (Death Eaters) ஆதிக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து ஹாரியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிவு செய்கிறார்கள். மேட் ஐ (Mad Eye) தலைமையில் சிலரை ஹாரி போலவே மாற்றி அனைவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். உண்மையான ஹாரி யார் எனத் தெரியாமல் டெத் ஈட்டர்ஸ் குழம்புவதைக் கொண்டு ஹாரி தப்பிக்கிறான். இந்தப் போராட்டத்தில் மேட் ஐ இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் மேஜிக் மினிஸ்ட்ரியிலிருந்து வருபவர் டம்பிள்டோர் ஹாரி, ரான் மற்றும் ஹெர்மாயினிக்காக சில பொருட்களை விட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிட்டு அவற்றை அவர்களிடம் ஒப்படைக்கிறார். வால்டிமார்ட்டை அழிக்க மீதமிருக்கும் Horcruxes (ஏற்கனவே இரண்டு அழிக்கப்பட்டுவிட்டன. ஒன்று டாம் ரிட்டிலின் டைரி. மற்றொன்று வால்டிமார்ட்டின் முன்னோரின் மோதிரம்) அழிக்கப்படவேண்டுமென்பதால் மூவரும் அவற்றைத் தேடி பயணிக்க முடிவு செய்கின்றனர். மீண்டும் டெத் ஈட்டர்ஸின் தாக்குதலில் இருந்து தப்பி மூவரும் நகரத்திற்கு வருகின்றனர். வந்த இடத்தில் உண்மையான ஸ்லிதரின் லாக்கெட் யார் வசமிருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றனர். இதில் டாபி (Dobby - the elf) ஹாரிக்கு உதவுகின்றது. இதற்கிடையில் மினிஸ்ட்ரியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. வால்டிமார்ட்டின் கை ஓங்குகிறது.

பாலி ஜூஸின் உதவியால் மூவரும் மினிஸ்ட்ரி ஸ்டாஃப்களை போல் உருமாறி ஸ்லிதரின் லாக்கெட்டை கவர்ந்துகொண்டு தப்பிக்கின்றனர். அந்த லாக்கெட்டினால் ரானுக்கும் ஹாரி பாட்டருக்கும் சண்டை வருகிறது. ரான் கோபித்துக்கொண்டு சென்றுவிட லாக்கெட்டை அழிப்பதற்கு தேவையான க்ரிஃப்பிண்டோர் வாளைத் தேடி ஹெர்மாயினியும் ஹாரியும் பயணிக்கிறார்கள். ஹாரி வாளைக் கண்டெடுக்கும் வேளையில் ரானும் வந்து சேர்ந்துக்கொள்ள ஸ்லிதரின் லாக்கெட்டை அழிக்கிறார்கள். மீதமிருக்கும் horcruxesன் இருப்பிடம் தெரியாத வேளையில் டம்பிள்டோரின் நண்பன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் லவ்குட்டின் (Lovegood)மூலம் டெத்லி ஹாலோஸ் (Deathly Hallows) என்ற புனிதப் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். அங்கேயும் டெத் ஈட்டர்ஸ் இவர்களை துரத்துவதால் அங்கிருந்து தப்பிக்கும்போது ஸ்னாட்ட்சர்ஸிடம் (Snatchers)மாட்டிக்கொள்கிறார்கள். வால்டிமார்ட்டின் சப்போர்டர்களான மெக்ஃபாய் அண்ட் கோவிடம் இருந்து தப்பிக்க டாபி உதவுகிறது. அந்தப் போராட்டத்தில் டாபி இறந்துவிடுகிறது. டெத்லி ஹாலோஸில் ஒன்றான elder wand டம்பிள்டோர் வசமிருப்பதை அறிந்துக்கொள்ளும் வால்டிமார்ட் டம்பிள்டோரின் கல்லறையை உடைத்து அதைக் கவர்கிறான்.

ஹாரி மற்ற horcruxesகுளை கண்டுபிடித்தானா? வால்டிமோர்ட்டை அழித்தானா என்பது இரண்டாம் பாகத்தில் வருமென நினைக்கிறேன். நான் ஹாரி பாட்டர் நாவல்களைப் படித்ததில்லை. ஆனால் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்தப் படத்தில் நகாசு வேலை கம்மிதானென்றாலும் விறுவிறுப்பும் நகைச்சுவையுமாக செல்கிறது படம். ரான் வீஸ்லி பேசும் டயலாக்குள் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக மினிஸ்ட்ரியில் உருமாறி நுழையும்போதும், அங்கிருந்து கிளம்பும்போதும், ஹெர்மாயினியின் கோபத்தை போக்க முயலும்போதும் நல்ல நகைச்சுவை. ஹாரி - மந்திரவாதிகளுக்கு ஏன் வயசாகிறது? சிறு வயது ஹாரியே பார்க்க நன்றாக இருக்கிறான் (கழுதக் கூட குட்டில நல்லாயிருக்கும்??!!!). தனக்காக பிறர் உயிர்விடுவதை நினைத்து வருந்தும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. எம்மா வாட்சனின் அழகு படத்திற்குப் படம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஹாரியை விட்டுப் போக முடியாமல், ரானையும் தடுக்க முடியாமல் அவஸ்தை படும் காட்சிகள் அருமை.

சத்யம் தியேட்டரில் சென்ற சனிக்கிழமை சென்றிருந்தோம். வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் முக்கால்வாசி பீட்டர் பாண்டி கூட்டமாகத்தான் இருந்தது. அதுவும் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரு பெண்கள் டூ மச். என்னவோ ஹாரியைப் பார்த்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்ததைப் போன்ற பில்டப். குலவை போட்டு தீ மிதிக்காதது ஒன்றுதான் குறை. வில்லன் வர்றான் ஓடு ஒடு என்ற அம்மாக்கள் எம்ஜிஆர் படம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதுபோல் கத்திக்கொண்டிருந்தார்கள்.

“Oh my god those f***ing snatchers r going to get them"

"Oh Dobby is going to die. Faster. faster" என படம் முழுவதும் அரற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் கொஞ்சம் கதை சொல்லாம சும்மாருக்கீங்களா என்றேன். அதற்கு “Sorry. we got excited u know" என்றதுகள். ஹுக்க்கும்.

வீட்டுக்கு வந்ததும் அப்பா கால் செய்தார்.

“என்ன படம்?”

“ஹாரி பாட்டர்ப்பா”

“ஹூம். வெள்ளைக்காரன் நல்லா காதுக் குத்தி வுட்ருப்பான். வாயப் பொளந்து பார்த்திருப்பீங்களே. என்ன கதை?”

சொன்னேன். உடனே “அட நம்ம அம்புலி மாமா ஸ்டைல் கதை. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி, ஏழு பொருட்கள் இருக்கிற மந்திரவாதியோட உயிரை அழிக்கறது. இதுவே நம்மாளுங்க எடுத்தா கிண்டல் பண்ணுவீங்க. வெள்ளைக்காரன் சொன்னா என்னா க்ராபிக்ஸ்ப் பாருன்னு பாராட்டுவீங்க.”

“அப்படி இல்லப்பா. நம்மூர்ல க்ராபிக்ஸ்ங்கற பேர்ல கொல்லுவாங்கப்பா. இங்க வில்லன் தேளா/பாம்பா மாறவோ, ஆயிரக்கணக்குல சூலம் வரவோ, வில்லனோட மூக்கோ நாக்கோ பெருசாவறதுக்கோதான்பா க்ராபிக்ஸ் யூஸ் பண்றாங்க.”

“அங்க மூக்கே இல்லாத வில்லன க்ராபிக்ஸ்ல காட்றாங்க. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்கதான். சரி குழந்தை என்ன பண்றான்? பத்திரமா பார்த்துக்கோ.”

டொக்.

ஙே!!!

November 19, 2010

பயணத் தேவைகளுக்கு...

தரை மற்றும் ஆகாய வழிப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு. நீங்கள் விரும்பும் மாடல் கார்/ஜீப்/பைக்குகள் குறைந்த விலைக்கு வாடகைக்குத் தரப்படும். பெட்ரோல் செலவில்லை. ட்ரைவருக்கு சம்பளம் தரத்தேவையில்லை. அதிவேகமான அதே சமயம் மிகப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

கார்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய பொருட்களை மிகக் குறைந்த செலவில் எங்கிருந்து எங்கு வேணுமானாலும் அனுப்பலாம். கண்டெய்னர் லாரிகள், ட்ரக்குகள், ஜேசிபி இயந்திரங்களும் கிடைக்கும்.

ஆடம்பரத்தை விரும்புவர்களுக்கு ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களும் கிடைக்கும். மேலே சொன்னது போல பைலட்டுக்கு சம்பளம் தேவையில்லை.


























வாகனங்களின் அணிவகுப்பு உங்கள் பார்வைக்கு....




ஒன்னு ரெண்டு வாங்கலாம். வாரத்திற்கு மூனு நாலு வாங்கறான். ஐ மீன் அப்பாவோ/மாமாவோ வாங்கிக் கொடுத்திடறாங்க. வீடு முழுக்க இறைஞ்சி கிடக்கு. இவன தூங்க வச்சிட்டு இதெல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தி வைக்கவே ஒரு மணிநேரம் பிடிக்குது:(

எந்திரிக்கும்போதே பஸ்ஸு, ஆட்டோ, லாரி, ரெட் கலர் காரு எல்லாம் வாங்கித் தர்றீயா என்ற கண்டிஷனோடு தான் பல் தேய்க்கும் வைபவம் ஆரம்பிக்கும்.

காலையில வேன் ஏறினவுடனே டாட்டா காமிச்சிட்டு, ஃப்ளையிங் கிஸ் கொடுத்திட்டு சார் சொல்றது “அம்மா ரெட் கலர் ஸ்கூட்டர்ல வந்திடு”. ஸ்கூட்டர்ல வந்திடு மட்டும் அப்படியே இருக்கும். டெய்லி ஒரு கலர். அதே மாதிரி கருப்பு கலர் பல்ஸர எங்கப் பார்த்தாலும் “அம்மா அவா தினேஷ் மாமா வண்டிய எடுத்துட்டு போறாங்க. தர சொல்லு” என அழுகை ஆரம்பித்துவிடும். பஸ்ஸையோ காரையோ எடுத்து வைத்துக்கொண்டு ”அம்மா நீ என் பக்கத்துல உக்காச்சிக்கோ. அப்பா டிக்கெட் வாங்கு” என விளையாட ஆரம்பித்துவிடுவான்.

மாமன மாதிரியே மெக்கானிக்கல் எஞ்சினியரா வருவானோ?

இன்னும் நிறைய தூரமிருக்கு. இப்பதான வண்டில ஏறியிருக்கான்:)

November 15, 2010

மைனா

படிப்பு வராததால் இளம்வயதிலே வேலைக்குப் போகும் நாயகன், ஆதரவு இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நாயகியின் தாய்க்கும், நாயகிக்கும் ஆதரவளிக்கிறார். சிறு வயது முதலே ஒருவர் மீது ஒருவர் மிக அன்பாக இருக்கின்றனர். நாயகியின் அம்மா நாயகிக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்ப்பதால் ஆத்திரமாகும் நாயகன், அவளை அடித்துவிடுகிறார். அதனால 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாயகிக்கு வேறிடத்தில் மணமுடித்து வைக்க முயல, சேதி அறிந்த நாயகன் தப்புகிறார். மறுபடியும் போலீஸ் இவரை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்ல முயலும்போது நடக்கும் சம்பவங்களே கதை.

படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா. மலையும் காடும் சூழ்ந்த கிராமத்தில் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். ஒவ்வொரு முறை அடர்ப்பச்சை/நீல நிறத்தில் மலை தெரியும்போதெல்லாம் நமக்கு குளிரெடுக்கிறது. க்ளீன் & நீட். இன்னொரு ஹீரோ தம்பி ராமையா. இறுக்கமான திரைக்கதையை இயல்பான இவரின் நகைச்சுவை அழகாய்த் தாங்கிப்பிடிக்கின்றது. “ங்கொப்பத்தா” என அனைவரையும் வார்த்தையால் கடிக்கும்போதாகட்டும், விதார்த்தின் கையோடு சேர்த்து விலங்கிட்டு இழுத்துக்கொண்டு அலைவதாகட்டும் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். “மாமோய் நீ எங்க இருக்கீங்க” என செல்போன் கேரக்டராக வரும் மனைவியோடு பேசும்போது அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அருமை.

காதலைக் காப்பாற்ற போராடும் கிராமத்து இளைஞனாக விதார்த். ஒக்கே ரகம். அமலா பால் - மிரட்டும் கண்கள். வாய் பேசவேண்டியதைக் கண்களே பேசிவிடுகின்றன. லவ்லி. ஜெயிலராக வரும் சேது. பண்டிகை அதுவுமாய் அக்யூஸ்ட்டைத் தேடி அலையும் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார். இவர் மனைவி கேரக்டர் மிரட்டல். “தலை தீபாவளிக்குப் போறோமா இல்லையா?” எனும்போது அவர் வாய்ஸ் செம்மையாக இருக்கிறது. விதார்த்தின் அப்பா காரெக்டர், வாத்தியார், ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், என அனைவரும் கவனிக்கும்படி செய்திருக்கிறார்கள். இசை இமானாம். நம்பமுடியவில்லை. அனைத்துப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் “கையப் பிடி கண்ணப் பாரு பாடல்” இப்போ என் ஃபேவரைட். பிண்ணனி இசை சுமார் ரகம் தான்.

பாடல்களில் பருத்தி வீரன் இமிட்டேஷனும், “சுருளிக்கும் மைனாக்கும் இடையில என்ன இருக்கு” என்பது போன்ற மொக்கை சீன்களிலும் கடுப்பாகிறது. அதை விட சைக்கிளோட்டி படிக்க வைப்பது, மின்மினிப் பூச்சிக் கொண்டுவருவது போன்ற சீன்கள் மகா திராபை. நேட்டிவிட்டி படமென்றாலே அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்ட வேண்டும் என விதி உருவாகிவிட்டது போல. அதே போல் அமலா பாலின் அம்மாவாக நடித்திருப்பவர் நன்றாக செய்திருந்தாலும், உச்சஸ்தாயில் கீச் கீச்சென கத்தும்போது காது கிழிகிறது:(

பழைய கதைதான் என்றாலும், திரைக்கதையில் பயணத்தைக் கொண்டு வந்து, சில திருப்புமுனைகளோடு, துருத்திக்கொண்டு தெரியாத நகைச்சுவையோடு படத்தைக் கொடுத்ததற்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.

November 12, 2010

ஸ்வீட் எடு கொண்டாடு

அடிப்படை சுவைகளில் ஒன்றான இனிப்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஸ்வீட் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. பாயாசம் ஆரம்பித்து பை (pie) வரை எத்தனை வகை. எண்ணிலடங்கா சுவை. எனக்கும் ஒரு காலத்தில் ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். இப்போது ஸ்வீட் உண்பதைக் குறைத்துக்கொண்டேன். நான் உண்டவரை வித்யாசமான சுவைக் கொண்ட, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிற, ஸ்பெஷாலிட்டி வகை ஸ்வீட்களைப் பற்றிய குறிப்புகளே இந்தப் பதிவு.

மக்கன் பேடா

குலோப் ஜாமூனின் ரிச் வெர்ஷன். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் பிரியாணிக்கப்புறம் ஃபேமஸான ஐட்டம். கொஞ்சமே கொஞ்சம் புளிப்போடு (மாவில் தயிர் சேர்க்கிறார்களாம்) ஜீராவில் ஊறியிருக்கும் பேடாவைக் கடித்துக்கொண்டே வரும்போது நடுவில் மாட்டும் முந்திரி மற்றும் பூசணி, வெள்ளரி விதைகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அம்மா பிரியாணிக் கடையில் குஷ்கா சாப்பிட்டுவிட்டு நேராக சேர்மன் ஸ்வீட்ஸ் போய் மக்கன் பேடா சாப்பிடுவது சொர்க்கம்:) நிறைய கடைகளில் விற்கப்பட்டாலும் சேர்மன் ஸ்வீட்ஸில் நன்றாக இருக்கும். ஷெல்ஃப் லைஃப் ரொம்பக் கம்மி. ஃப்ரிட்ஜில் வைத்தால் ரெண்டு நாட்கள் தாங்கும்.
புகைப்படம் நன்றி http://tastyappetite.blogspot.com/2010/08/makkan-peda-arcot-sweet.html

ட்ரை ஃப்ரூட் அல்வா

இதுவும் வேலூர் ஸ்பெஷல் தான். கோட்டைக்கு எதிரே இருந்த (இப்போதில்லையென நினைக்கிறேன்) ஆக்ரா ஸ்வீட்ஸில் கிடைக்கும் ஐட்டம் இது. ட்ரை ஃப்ரூட் அல்வா. மற்ற இடங்களில் கிடைக்கும் ட்ரை ஃப்ரூட் அல்வாக்கள் போல் இறுகியில்லாமல், வாயில் போட்டால் வழுக்கிக் கொண்டு போகும் சுவை. முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ், டூட்டி ஃப்ரூட்டி போன்றவையோடு கொஞ்சம் கேரட், கோவா சேர்த்து செய்யப்படும் அல்வா இது. என் அக்காவின் ஃபேவரைட்.

காஜூ டாஃபி

பாண்டிச்சேரியில் நேரு வீதியில் உள்ள லல்லு குல்ஃபி கடையில் கிடைக்கும் முந்திரி கேக். சாக்லேட் போன்று சிறு சிறு துண்டுகளாக பட்டர் பேப்பரில் சுற்றி வைத்திருப்பார்கள். கொஞ்சம் நொரநொரவென சர்க்கரையும் முந்திரியும் தனித்து தெரியும் வித்யாசமான இனிப்பு.

ஆக்ரா பேடா

காலேஜ் டூரிற்காக ஆக்ரா சென்றபோதுதான் முதன்முதலில் சுவைத்தேன். Fell in love with its taste:) பூசணியையும் சர்க்கரையும் கொண்டு செய்யப்படும் இனிப்பு. சென்னையில் கங்கோத்ரியிலும், பாண்டியில் மித்தாய் மந்திரிலும் மட்டுமே கிடைக்கிறது (எனக்குத் தெரிந்து).

மால்புவா

ராஜஸ்தான் ஸ்பெஷல் இனிப்பு இது. கிட்டத்தட்ட குலோப் ஜாமூன் டேஸ்ட் தானென்றாலும் தட்டையாக, அதிகம் ஜீராயில்லாமல் இருக்கும். சூடாக சாப்பிடும்போது தேவாம்ரிதமாக இருக்கும். சென்னையில் அண்ணா நகர் ஸ்ரீ ராஜஸ்தானி தாபாவில் கிடைக்கும்.

ரப்டி

பாஸந்தி, கீர், பால் பாயாசம் எல்லாவற்றையும் சேர்த்து உருவாக்கினது போலொரு சுவை. கெட்டியாக பிஸ்தா சீவி போட்ட ரப்டி டக்கராக இருக்கும். சென்னையில் வேளச்சேரி கெபாப் கோர்ட்டில் கிடைக்கிறது

காஜா

பட்டனுக்குத் தைக்கறதில்லீங்க. ஆந்திரா ஸ்பெஷல் ஸ்வீட். பாதுஷா மாதிரியே இருக்கும். ஆனால் உள்ளே ஸ்டஃப் செய்யப்பட்டிருக்கும் ஜீராதான் அல்டிமேட். அதோடு பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்கப்பட்டிருக்கும். என் அண்ணாவின் மாமனார் ஊரிலிருந்து (காக்கிநாடா) வரும்போதெல்லாம் வாங்கிவருவார். கண்டிப்பாக ஒன்றிரண்டாவது ரிசர்வ் பண்ணி வைப்பார் அண்ணா:)

புத்ரேக்கலு

முதன்முதலில் இந்த ஸ்வீட்டை நீட்டிக்கொண்டே பேர் சொன்னபோது ஏங்க ஸ்வீட் கொடுக்கும்போது திட்றீங்க என ஆஃபிஸ் கொலீக்கை கலாய்த்திருக்கிறோம். ஆனால் சுவை அற்புதமாக இருக்கும். இதை எப்படி இவ்வளவு பொறுமையாக செய்கிறார்கள் என்ற ஆச்சர்யம் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஏற்படும். அவ்வளவு மெல்லிய பேப்பர் போலிருக்கும் லேயர்கள் வாயில் போட்டவுடனே கரையும்.


யாழ்ப்பாணம் கொழுக்கட்டை

தமிழினி இனிப்பகம் என்ற கடைகளிக் கிடைக்கும். கேழ்வரகில் செய்யப்பட்ட மேல்மாவும், அதிகம் இனிப்பில்லாத தேங்காய் மற்றும் பயத்தம்பருப்பு பூரணமும் நல்ல காம்பினேஷன். அதுவும் இளஞ்சூட்டில் சாப்பிடும்போது அட்டகாசமாக இருக்கிறது. ஒரு பீஸ் எட்டு ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆப்பிள் ரசகுல்லா

அடையார் ஆனந்த பவனில் கிடைக்கும் பெங்காலி வகை இனிப்பு. சொட்டச் சொட்ட ஜீராவுடன் அவ்வளவு சாஃப்டாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடும்போது சுவை இன்னும் இருமடங்காக இருக்கும்.

டிஸ்கி : இனிப்புகளை அளவாக உண்பது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்;))

November 1, 2010

தித்தி(க்கும்)த்த தீபாவளி

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.

வயது ஏற ஏற பண்டிகைகளின் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)

Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.

என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.

தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(

தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)



டிஸ்கி : மீள்பதிவு. வெளியூர் பயணங்கள், பண்டிகைகள், முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் சில வாரங்களுக்கு தொடர்ந்து பதிவுலகத்தில் இயங்க முடியாத நிலை (தீபாவளி போனஸ்??!?!). சில நாட்கள் கழித்து நிறைய பதிவுகளுடன் சந்திக்கிறேன். மீண்டுமொருமுறை அனைவருக்கும் மனமுவந்த தீபாவளி வாழ்த்துகள்.

October 28, 2010

மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்

நல்ல வேளை தப்பிச்சேன். முச்சந்தில நிக்க வச்சு எந்திரன் பாருங்கன்னு பிட் நோட்டீஸ் விநியோகம் பண்ண சொல்லல.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.

October 27, 2010

வலியின் மொழி

இரண்டு முறை கட் செய்தும் விடாமல் மூன்றாவது தடவையும் அம்மா போன் செய்யவும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பரத்தை தொடர சொல்லிவிட்டு கான்பரன்ஸ் ரூமிலிருந்து வெளியே வந்தேன். லைன் கிடைக்கவில்லை. கொஞ்சம் படபடப்பாகவும் அதிக எரிச்சலாகவும் இருந்தது. போன் கட் செய்தால் மீண்டும் தொடர்ந்து அழைத்தால் எமர்ஜென்சி என்பது எனக்கும் அம்மாவிற்கும் போடப்பட்ட ஒப்பந்தம். ஒரு தடவை ப்ரொடெக்ஷ்ன் டேட்டாவை சரிப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை தொடர்ந்து அடித்தாள். என்ன என அழைத்துக் கேட்டபோது 'சாயந்திரம் வர்றச்சே மறக்காம காபி பொடி வாங்கிண்டு வந்துடு. இன்னைக்கு செகண்ட் டோசுக்கு தான் இருக்கு' என்றவளை என்ன செய்வதென தெரியாமல் எனது நிலை விளக்கிப் போடப்பட்ட ஒப்பந்தம். எமர்ஜென்சி என்றால் மட்டும் திரும்ப கூப்பிடு என்று. உப்பு சப்பில்லாத விஷயங்கள் கூட எமர்ஜென்சி என்பாள். கொஞ்சம் கடிந்து கொண்டால் போதும். ஒப்பாரி ஆரம்பித்துவிடும். 'உங்களுக்கெல்லாம் நான் வேண்டாதவளாப் போய்ட்டேன். என்னை யாரும் மதிக்கமாட்டேங்கறேள்'. உங்கள் என்பது நான் அல்லது அப்பா. அல்லது இருவருமே. இந்தப் பாட்டுக்கு பயந்தே அவள் எது கேட்டாலும் மறுபேச்சின்றி செய்தோம். மார்கழி மகா உற்சவத்திற்கு அழைத்துச் செல்வதை விட மீட்டிங் முக்கியமா என கேட்பவளை என்ன சொல்வது? நாலைந்து முயற்சிக்குப் பிறகு லைனுக்கு வந்தாள்.

'என்னம்மா?'

'நீ சீக்கிரம் லீவு சொல்லிட்டி கிளம்பி வா.'

'கவர்மெண்ட் ஆபிசில்லமா இது. நினைக்கறச்சே கிளம்ப. முதல்ல என்னன்னு சொல்லு. உடம்புக்கு படுத்தறதா ஏதாவது?'

'நான் நன்னாதான் இருக்கேன். ரமணிம்மாஞ்சி தான் போய் சேர்ந்துட்டாராம். நீ கிளம்பி வா. எனக்கு அவாத்துக்கு தனியாப் போத்தெரியாது. சாயந்திரம் பாடி எடுக்கறதுக்குள்ள போகனும்.'

'விளையாடறியாம்மா. இங்க தலைக்கு மேல வேலை இருக்கு. என்னால வர முடியாது. அப்பாவ அழைச்சிண்டு போய்ட்டு வா.'

'அவர் டிசி மீட்டிங் முடியாதுன்னுட்டார். உன்ன கூட்டிண்டு போக சொன்னார்.'

'எனக்கும் இன்னிக்கு க்ளையண்ட் கால் இருக்குமா. இன்னைக்கு போகலன்னா என்ன? பத்துக்கு முன்னால ஒரு நாள் போய் விசாரிச்சிட்டு வரலாம்.'

'நீயும் முடியாதுங்கறே. நானென்ன பீச், பார்க்குன்னா கூட்டிண்டு போக சொல்றேன். என் அம்மாஞ்சி மூஞ்ச கடைசி தடவை பார்க்கனும்ங்கற ஆசை இருக்காதா எனக்கு?'

பாட்டு ஆரம்பித்துவிட்டது. அப்பா தப்பித்துவிட்டார். ’ஹாஃப்’ என்றவளை முறைத்த பரத்திடம் அடுத்த மாதம் நான் பார்த்துக்கொள்கிறேன் என பொய் சத்தியம் செய்து கிளம்பி வீட்டை அடைவதற்கு மணி இரண்டானது. அம்மா தயாராய் வாசலில் இருந்தாள்.

'மயிலாப்பூருக்கு ஆட்டோலயே போய்டலாமா?'

'மயிலாப்பூர் என்னத்துக்கு?'

'ரமணி மாமா ஆம் அங்கதானே இருக்கு. அவாத்துக்கு தானே பாடி கொண்டு வருவா? இல்லை மாமியாத்துக்கு போறதா?'

'அடியே. இறந்தது குண்டு ரமணி.'

'நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ்சம் வந்தாப்ல அத்தனை ரமணி. குண்டு ரமணி, சேப்பு ரமணி, கல்யாண ரமணின்னு ஒரே ரமணி மயமா இருக்கு. நல்ல வேளை நான் மயிலாப்பூருக்கு போன் பண்ணி ஆத்துக்கு வழி கேட்கலை. அசடு வழிஞ்சிருக்கனும்.'

'அருணுக்கு போன் பண்ணி அவா ஆம் எங்க இருக்குன்னு கேளு. அவன் தான் எனக்கு தகவல் சொன்னான்.'

அருண் என் பெரியம்மா பையன். மெடிக்கல் ஃபீல்டில் இருப்பதால் யாருக்காவது உடம்பு என்றால் கட்டாயம் உதவி வரும். அண்ணாவை அழைத்து வழி கேட்டதுக்கு 'மாம்பலத்துல தான் வீடு. அயோத்தியா மண்டபத்திற்கு எதுதாப்புலயே இருக்கு' என்றார். மாம்பலத்திலிருக்கும் முக்கால்வாசி பேர் சொல்வது தான். அயோத்தியா மண்டபத்திற்கு எதிர்ல தான் வீடு. எத்தனை வீடு தான் இருக்க முடியும் அயோத்தியா மண்டபத்திற்கெதிரவே? அயோத்தியா மண்டபம் போய் சேர்ந்து மறுபடியும் போன் செய்தோம். லைன்லயே இருன்னு சொல்லி 2 கி.மீ தொலைவிற்கு வழி சொன்னார். அந்தத் தெருவில் நுழைந்தபோதே ஷாமியானாவும், நீல்கமல் சேர்களும் ரமணி மாமா வீட்டை அடையாளம் சொன்னன. வாசலிலேயே அருணண்ணாவும் பாடை கட்டுபவனுக்கு இண்ஸ்டரக்ஷன் கொடுத்துக்கொண்டு இருந்தார். நீங்க வந்தத நான் கவனிச்சேன் என்பது போல் பார்த்தவர்களெல்லாம் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள். அம்மா உள்ளே செல்ல நான் அண்ணாவின் அருகிலேயே நின்றுவிட்டேன். அம்மா உள்ளே நுழைந்ததும் பெரிதாக அழுகை சத்தம் எழும்பி அடங்கியது. வாசலில் கொஞ்சம் மாமாக்கள் அங்கங்கே உட்கார்ந்து கொண்டு பேப்பரை நாலாய் எட்டாய் மடித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். "உள்ளே போலியா" என்றார் அண்ணா.

”ப்ச். போய் என்ன பண்றது. யாரு என்னன்னே தெரியாது. கடைசியா உங்க கல்யாணத்துச்சே பார்த்தது. என்ன ப்ராப்ளம்?”

“ஹார்ட் அட்டாக். மாஸிவ். ஏற்கனவே கொஞ்சம் ட்ரபிள் இருந்தது போல.”

“நீங்க எப்படி?”

“கான்ஃபரன்ஸ் விஷயமா டாக்டரப் பார்க்க போயிருந்தேன். சின்னவ என்ன பார்த்திருக்கா.”

“பெரியம்மா வரலையா?”

“பெங்களூர்ளன்னா இருக்கா. ப்ராப்ளமா இருக்கு. நாளன்னிக்கு கிளம்பி வர்றா. நீ எப்படி?”

“உங்க அருமை சித்தியால வந்தது. ஒரே ஒப்பாரி. சொல்லி சொல்லி காமிப்பா. அதான் நானே அழைச்சுண்டு வந்துட்டேன்.”

“ஜாப் எப்படி போயிண்ட்ருக்கு?”

“என்னத்த சொல்ல. பேர்தான் ப்ராஜெக்ட் லீடர். டெவலபர், டெஸ்டர்ன்னு நாலு பேருக்கான பில்லிங் குடுத்துக்கிட்டிருக்கேன். இப்போக் கூட க்ளையெண்ட் கால விட்டுட்டு தான் வந்திருக்கேன். ஆப்ரைசல்ல ரிஃப்ளெக்ட்டாகுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு எப்படி போறது?”

“அதே நாய் பொழப்பு தான். ஏய் சுதா அத்தை வர்றாடி”

“அய்யோ நான் உள்ளே போறேன் சாமி. அத்தை வாயாலேயே வறுத்தெடுத்துடுவா.”

ஹாலின் நடுவில் நெடுஞ்சான்கிடையாக ஐஸ் பாக்ஸில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் மாமா. போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை என்பது மார்பு வரை போர்த்தியிருந்த துணியின் மூலம் தெரிந்தது. நாலு நாள் முள்ளு தாடியுடன் கையை மார்பில் வைத்தாவறு கிடந்தார் மாமா. தலைமாட்டில் பீதாம்பரி பவுடரால் அங்கங்கே நான் பித்தளை வம்சம் தான் என காட்ட முயன்றுக்கொண்டிருந்த காமாட்சி விளக்கு நிதானமாய் எரிந்துக் கொண்டிருந்தது எந்த சலனமுமில்லாமல் ரமணி மாமாவைப் போல். ஐஸ் பாக்ஸின் மேல் ஒரு பெரிய ரோஜாப் பூ மாலை போடப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் பாக்ஸின் அருகே தலை குனிந்து நின்றேன். அதற்குள் அத்தை வந்து மாமியைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துருந்தாள். நான் எதிர்பக்கம் ஹாலின் மூலையில் அமர்ந்தேன். அம்மா மாமிக்கு ஆறுதலளிக்க வேண்டி அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் என்ன பண்ண என்ற கண்ணாலேயே கேட்டாள். நான் முறைத்துவிட்டு பார்வையை மாமி மேல் நகர்த்தினேன். இதற்குமேல் அழ திராணியில்லையென்பதுபோல் அரை மயக்கத்தில் இருந்தாள் சாரதா மாமி. ரமணி மாமாக்கு இரு பெண்கள். பெரியவளின் ஜாதகத்தை தையில் எடுத்துவிட்டதாய் அம்மா பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மாவின் தூரத்து உறவென்பதால் ரமணி மாமா குடும்பத்துடன் அந்தளவு பழக்கமில்லை. எப்போதாவது பெரியம்மா வீட்டு விசேஷங்களில் பார்த்துக்கொண்டு நன்னாருக்கியா? யாருன்னு தெரியறதா என்ற சம்பிரதாயக் கேள்விகளோடும் பரஸ்பரப் புன்னகை பரிமாற்றங்களோடும் நகர்ந்துவிடுவதோடு சரி. பெரியவளின் முகத்தை நினைவிலிருந்து தூசு தட்டி எடுத்துக்கொண்டிருந்தேன். பாக்ஸை சுத்தி பார்வையைச் சுழட்டியதில் மாமிக்கு எதிர்த்தாற்போல் இரு பெண்களும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சின்னவளுக்கு 13 வயதிருக்கும். பெரியவளுக்கு கிட்டத்தட்ட என் வயதுதான். பெயர் நினைவிலில்லை. பெரியவள் கன்னத்தில் கண்ணீர் கோடுகளாய் காய்ந்திருந்தது. மாமாவை வெறித்துப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள். அருணன்னாவின் கல்யாணத்தில் கடைசியாய் பார்த்தேன். கொஞ்சும் குரலில் நலங்கின் போது அவள் பாட்டு பாடியது ஞாபகத்துக்கு வந்தது. எழுந்துபோய் அவளருகில் அமர்ந்தேன். என் இருப்பை உணர்ந்தவளாய்

'நன்னாத்தான் இருந்தார். மைல்டா ஹார்ட்ல பிராப்ளம் இருந்தது. நத்திங் சீரியஸ்ன்னு தான் டாக்டர் சொல்லிருந்தார். நேற்றைக்கு தீடிர்ன்னு அட்டாக். மாஸிவ். போய்ட்டார்'.

எந்த உணர்ச்சியுமில்லாமல் அவள் சொல்லிமுடிக்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். அவளே தொடர்ந்தாள்.

'பயமாயிருக்கு. என்னப் பண்ணப்போறேன்னு தெரியல.'

'நீ இப்பதான் தைரியமா இருக்கனும். அம்மாக்கும் தங்கைக்கும் தெம்பு கொடுக்கனுமில்லையா' என்றேன். இதற்குமேல் என்ன பேச வேண்டுமெனத் தெரியவில்லை. அழலாமா என யோசித்தேன். இண்ஸ்டண்ட் அழுகை பழக்கமில்லாததால் முயற்சியைக் கைவிட்டேன். கடைசியாக அழுதது எப்போது என்ற கேள்வி எழுந்தது. சிறுமியாக இருந்தபோது பெரியப்பா, தாத்தா, சித்தப்பா என அடுத்தடுத்து பறிகொடுத்த குடும்பம். புதிதாக எழும்பிக் கொண்டிருந்த வீட்டில் அண்ணன்களோடு விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருந்தது. சென்ற வருடம் பாட்டி இறந்தபோது அழவில்லை. காட்டுக்குப் போய்விட்டு வீடு வந்து குளித்தவுடனே சாப்பிடாமல் கிளம்பி ஓடியதும் நினைவில் இருந்தது. துக்கமோ, வருத்தமோ இல்லாத மனநிலையில் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான உணர்ச்சியும் என்னில் இல்லை.

இதற்கிடையில் அவள் சித்தப்பா வந்து சேர, பாடியை எடுக்கும் வேலைகள் ஆரம்பமானது. மாமியால் முடியாததால் சாஸ்திரத்துக்கு பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்து தண்ணி கொண்டு வந்து கொட்டப்பட்டது. அண்ணாவும், சித்தப்பாவும் சேர்ந்து மாமாக்கு வேஷ்டி போர்த்தினார்கள். பாடையில் கிடத்த பாடியை தூக்கியபோது எழுந்த அழுகை அடர்த்தியான ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகையை மீறி அனைவரையும் தாக்கிற்று. பாடியை தூக்கும் நேரம் பெரியவள் அலற ஆரம்பித்தாள்.

'மெதுவா தூக்குங்கோ. கைய அழுந்தப் புடிக்காதீங்கோ. அவருக்கு கை வலி இருக்கு'

சட்டென திரும்பி என் பக்கம் பார்த்து

'என் கூட வர்றியா. நானும் காட்டுக்குப் போகனும். அப்பா ரொம்ப சூடு தாங்க மாட்டார். நான் வர்றதுக்குள்ள அம்மாக்கு என்ன பண்ணனுமோ பண்ணிடுங்க. அதெயெல்லாம் என்னை பார்க்க வச்சிடாதீங்கோ. அம்மாவ ரொம்ப படுத்தாதீங்க.'

டக்கென்று அவள் சித்தப்பா “என்ன புது பழக்கம். பொம்ணாட்டிகள் காட்டுக்கு வர்றது? எல்லாம் இங்கேயே இருங்கோ. நான் அண்ணாவை அனுப்சிட்டு வர்றேன்” என்றார்.

”என்னக் காலத்திலடா இருக்க சங்கரா? இப்பல்லாம் எல்லாருமேதான காட்டுக்குப் போறா. விடுடா. அவாளும் வரட்டும். அப்பாக்கு பெண்குழந்தேள் கொள்ளிப் போடறதொன்னும் மாபாதம் கிடையாது” என்றாள் கூட்டத்திலிருந்து ஒரு வயதான மாமி. பேச்சுகள், எதிர்பேச்சுகள் என ஹாலில் சிறு குழப்பம் ஆரம்பமாயிற்று. வாத்தியார் நாழியாயிடுத்து என்றார். கடைசியில் வழக்கம்போலவே ஆண்கள் மட்டும் காட்டுக்குப் போகலாம் என முடிவெடுக்கப்பட்டது. மாமியாத்திலும் பயங்கரமான மடி ஆச்சாரம் என கேள்விப்பட்டேன்.

ஐந்து நிமிடங்களில் மாமாவைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். பெரியவள் விடாமல் பேசினாள். அவள் நிலையிலில்லை என உணர்ந்து அவளை நானும் அண்ணாவும் வெளியே அழைத்துக்கொண்டு போனோம்.

'எல்லாம் முடிஞ்சிடுத்துல்ல. இனிமே என்ன பண்றது. எல்லாத்தையும் நாந்தான் பார்க்கனும். எவ்வளவு சேர்த்திருக்காருன்னு கூட தெரியாது. அந்தளவுக்கு பார்த்துண்டார். ஈபி கார்ட் முதற்கொண்டு எங்கிருக்குன்னு அவருக்குத் தான் தெரியும். கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்ல இருக்கு. இனிமே புதுசா முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். இனி நான் ராஜகுமாரி இல்ல. வெறும் சேவகி. தங்கையப் படிக்க வைக்கனும். அம்மாவ கடைசி வரைக்கும் குறையில்லாம வச்சிக்கனும். எப்படி? தெரியல. ஏன் இப்படி திடீர்ன்னு போய்ட்டார்' என தேம்பினாள்.

'அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நாங்க எல்லாம் இருக்கோம். தைரியமா இருடி' என்றார் அண்ணா.

'எத்தனை நாளைக்குண்ணா இருப்பேள். உங்களுக்குன்னு வாழ்க்கையிருக்குல்ல?'

என் கைய அழுந்தப் பற்றிக்கொண்டவள் 'எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடு ஸ்வேதா. வேற எதுவும் வேணாம். யாரும் வேணாம். நான் கடைசி வரை இப்படியே இருந்திடறேன் அம்மாக்குத் துணையா.'

ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது. நீச்சல் தெரியாமல் கடலைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது கொடுமைதானே. ஒரே நிமிடம் இவள் நிலையில் என்னை வைத்துப் பார்த்தேன். உடம்பு அதிர்ச்சியில் உதறியது. எல்லாம் முடித்து அம்மா வந்து காதைக் கடித்தாள். 'போய்ட்டு வர்றேன்னு அச்சு பிச்சுன்னு உளறாதே. அப்படியே வா'

செருப்பை மாட்டியவள், ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன். அவள் கையைப் பற்றி அழுத்தினேன். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. கிளம்பிவிட்டேன். ஆட்டோ ஏறியவுடன் அழ ஆரம்பித்த என்னை அம்மா விநோதமாக பார்த்தாள்.

October 25, 2010

முழிப்பெயர்ப்புக் கவுஜைகள் - I

பிறமொழிக் கவுஞ்சர்களில் குறிப்பிடத்தக்கவர் கவுஞ்சர் அந்நோவ்ன். அவரின் எண்ணிலடங்கா படைப்புகள் வாசிக்க வாசிக்க மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவன. குழந்தைகளுக்கு குதூகல பாடலாகவும். பெரியவர்களுக்கு முற்போக்கு அர்த்தம் பொதிந்த தத்துவங்களாகவும் தெரிவது இவர் கவுஜைகளின் சிற்ப்பம்சம். இவரின் கவுஜைகள் படிப்பவரின் மனநிலைக்கு ஏற்ப தன் அர்த்தத்தை மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை.

Baa, baa, black sheep
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for my master,
One for my dame,
And one for the little boy
Who lives down the lane.

- Unknown

சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டியே
பயமின்றி திரிகிறாயே

அச்சுறுத்தலுக்கு அஞ்சேனய்யா
பயம் போக்கும் பானம் உள்ளதய்யா

எசமானருக்கு கொடுப்பேன்
பெண்ணெனப் பிரித்துப் பார்க்க மாட்டேன்
உலகமறியாச் சிறுவனென உதாசீனப்படுத்தமாட்டேன்
சமமாய் கொடுத்து மகிழ்வேன்
சரக்கையும் சந்தோஷத்தையும்

- தமிழில் வித்யா..

ஆசிரியர் சுட்டிக் காட்டும் ஆடு வயதில் சிறியது (baa baa - பாப்பா). நரிகள் திரியுமிடத்தில் இருக்கிறாயே. உனக்கு உள்ளூர பயமில்லையா எனக் கேட்கிறார். அதற்கு அந்த ஆட்டுக்குட்டியானது பயமிருந்தாலும் மூன்று பை முழுவதும் இருக்கும் திரவத்தைக் குடிப்பதால் பயம் போய் தைரியம் வந்துவிடும் எனக் கூறுகிறது. மேலும் பெண்கள் குடிக்கக்கூடாது எனத் தடைகள் போடும் கலாச்சார/பிற்போக்குத்தனமான சமுதாயத்திலிருந்து வந்தாலும் ஆணிற்கும் பெண்ணிற்கும் சரிசமமாக பகிர்ந்துக்கொடுக்கும் எண்ணம் கொண்ட கவுஞ்சர் அந்நோவ்ன் அந்தக் காலத்திலேயே பெண்ணீயம் பேசியிருக்கிறார். அதே போல் சின்னப்பையன் உனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்லாமல் அவனையும் சக மனிதனாக மதித்து அவனுக்கு தனியே எடுத்துவைத்திருபதன் மூலம் குழந்தைகளின் மனதைப் புரிந்த வல்லுநராகயிருக்கிறார்.

கவுஞ்சர் அந்நோவ்னின் வேறொரு கவுஜையின் முழியைப்பேர்த்து அடுத்த பதிவில் தருகிறேன்.