June 30, 2010

தென் மேற்குப் பருவக் காற்று..

இதோ அதோ என தமிழகத்திற்குப் போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது தென் மேற்கு பருவ மழை. அப்பப்ப மேகங்கள் மீட்டிங் போடுவதைப் பார்த்து பிச்சிகிட்டு கொட்டப்போகுதுன்னு அவசர அவசரமா கொடியில கிடக்கிற துணியெல்லாம் எடுத்துட்டு வந்தா அடுத்த நிமிஷமே வெயில் சுள்ளுன்னு அடிக்குது. ஆனாலும் எப்பவாச்சும் போடற தூறலுக்கே தண்ணி தேங்கிடுது. இந்த லட்சணத்துல சீசன் களை கட்டிச்சுன்னா. வெளங்கிரும். மறுபடியும் தெர்மாகோல் படகு, சப்வேயில் சிக்கி மூழ்கும் டைட்டானிக் சாரி MTC என நிதம் நியூஸ் தான்.

தென் மேற்கு சீசன் பொதுவாக கேரளாவில் மே மாதத்தின் கடைசி வாரத்திலோ, ஜூன் முதலோ தொடங்கும். ஜூலை மாதம் 15 தேதிவாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விசிட் அடித்திருக்கும். நமக்கு ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரம் பிக் அப் ஆகும் சீசன் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த வருடம் நார்மலான அளவு தான் மழையிருக்கும் என வானிலைத் துறை கணித்திருக்கிறார்கள். வருண பகவான் இப்ப கொஞ்சம் ஹைபர்நேட்டிங் ப்ரீயட்ல இருக்காராம். ரெஸ்ட் முடிச்சு இன்னும் பத்து நாள்ல வந்துடுவார்ன்னு தூதர்களான மெட்ராலாஜிகல் டிபார்ட்மெண்ட் ஆளுங்க சொல்றாங்க. போன வாரம் வறட்சில தவித்த வட இந்தியாவுக்கு இந்த தடவை ஆறுதலளிக்கும் வகையில் மழை இருக்கும்கறாங்க. பார்ப்போம்.

சூடான டீயுடன் மழைக்காலத்தை வரவேற்க தயாராகும் அதே நேரம் நம்மால் முடிந்த சில காரியங்களை செய்வதன் மூலம் மழைக்காலத்தை சபிக்காமல் ரசிக்க முயற்சிக்கலாம். அதுக்கு இந்த பதிவ ஒரு தடவ படிச்சிடுங்க. நான் எழுதனதிலேயே உருப்படியான பதிவு இதுதான்னு நிறைய பேர் சொல்வாங்க.

ஈரமான பாட்டு ரெண்டு.


June 28, 2010

கள்ளத்தனமாய் கண்கள் பேச..

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் என் வலைத்தளத்தை(யும்) பற்றி குறிப்பிட்ட கட்டுரையை பார்த்ததும் மகிழ்வாய் இருந்தது. வலைத்தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டும் போட்டிருந்தனர். கமெண்ட், ஹிட், பரிந்துரை போன்ற எதிர்பார்க்காத விஷயங்களைத் தாண்டி இம்மாதிரியான Recognition கிடைக்கும்போது உற்சாகமாய் இருக்கிறது. வீட்டில் காமித்து பீற்றிக்கொண்டது வேறு. மாமனார் வேறு வலைத்தள முகவரியை டைரியில் குறித்துவைத்திருக்கிறார். ஜாக்கிரதையாய் எழுதவேண்டும். தொடர்ந்து உற்சாகப்படுத்தும் சகபதிவர்களுக்கு நன்றி (விக்கிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்). ஆக ஒருவழியா பத்திரிக்கைல வர ஆரம்பிச்சாச்சு. அப்படியே ஆ.வி, உயிர்மையோ கிழக்கோ ஒரு பத்து பதினஞ்சு புக்கு, அப்படியே அரசியல், ஸ்ட்ரெய்ட்டா 2016ல் முதல்வர்ன்னு பயணத்த கண்டினுயூ பண்ணனும் (2011 ஏன் இல்லன்னு கேக்குறவங்களுக்கு டஃப் காம்படீஷன்ங்க). கட்சி பதவிகளுக்கும், அமைச்சரைவை இலாக்காக்களுக்கும் விண்ணப்பங்களோடு அதிமுக்கியமாய் வி.ஐ.பி/சாம்சனைட் சூட்கேஸ்களும் வரவேற்கப்படுகின்றன.
**************

லிம்கா வி்ளம்பரங்களில் எப்போதுமே ஒரு ப்ரெஷ்னஸ் இருக்கும். தண்ணீரை ஸ்ப்லாஷ் செய்யும் உத்தி ரொம்பவே நன்றாக இருக்கும். இப்போது காட்டப்படும் விளம்பரத்தில் இசையும் சிறப்பாக இருக்கிறது. அந்த குரல் அவ்வளவு மெஸ்மரைசி்ங்காக இருக்கிறது. அதுவும் அந்தப் பெண் கேட்டிலிருந்து கொண்டு பாட்டிலை உயர்த்திக் காட்டும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன் சிம்ப்ளி சூப்பர்ப்.

*************

ஏர்டெல் சூப்பர் சிங்கர் பைனல் போட்டி பார்க்க நேர்ந்தது. இதற்கு முன் ஒன்றிரண்டு ஷோக்கள் பார்த்ததுண்டு. பைனலில் அல்காவின் பெர்பாமன்ஸ் டக்கராக இருந்தது. அதோடு கார்த்திக் மற்றும் ஆண்ட்ரியாவின் குரல்களில் கேட்ட “உறவுகள் தொடர்கதை” பாடல் இன்னமும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. கார்த்திக் ராக்ஸ்:)
*************

நான் பாண்டிச்சேரி போனாலோ இல்லை மாமியார் இங்கு வந்தாலோ வேறு வழியில்லாமல் சில சீரியல்களை பார்த்தோ/கேட்டோ தொலைக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சீரியல் 8 மணிக்கு வரும் திருமதி செல்வம். என்ன ஒரு சிறப்புன்னா ஒரு மாசம் கழிச்சி பார்த்தாலும் என்ன நடந்திருக்கும்ன்னு யூகிக்க முடியும். அந்தளவுக்கு வேகமா நகர்ற கதை??!! அதோடில்லாம நான் என்னிக்கெல்லாம் பார்க்கறேனோ அன்னிக்கு கரெக்டா வடிவுக்கரசிக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்ப்பாங்க. உயிருக்கு போராடிக்கிட்டு இருப்பாங்க. எத்தனை தடவை ஹார்ட் அட்டாக் வந்தாலும் தாங்கும் நெஞ்சம் போல. அன்லிமிடட் அட்டாக்ஸ் வரம் வாங்கிருக்காங்களோ என்னவோ. நல்லவேளை அம்மாவிற்கு சீரியல் பார்க்கும் பழக்கமில்லாததால் நானும் கூடவே அப்பாவும் தப்பித்தோம்:)
**************

ஆம்பா ஸ்கை வாக் மால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அண்ணா நகர், அந்தப்பக்கம் அமிஞ்சிக்கரை, கீழ்ப்பாக்கம், அம்பத்தூரிலிருந்து ஸ்பென்சர் போகும் மொத்த கூட்டமும் ஸ்கைவாக்கிற்கு டைவர்ட் ஆகிறது. சனி ஞாயிறுகளில் நிஜமாகவே மூச்சு திணறுகிறது. வீக்கெண்டுகளில் வரவே கூடாது என சபதமே மேற்கொண்டோம். நம்ம விஷயத்துக்கு வருவோம். பெரிய ஃபுட் கோர்ட். டைனிங் ஸ்பேசும் நிறைய இருக்கிறது. பாப்கார்ன் வயிற்றை நிரப்பியதால் ஃபுட்கோர்ட்டை பார்த்துவிட்டு மட்டும் வந்தேன். ஒரு பரிந்துரை. பூஸ்டர் ஜூசில் க்ரான்பெர்ரி ஜூஸ்கள் நன்றாக இருக்கின்றன. விலை யம்மாடியோவ் ரகம். எக்ஸ்பிரஸ் அவின்யூ மாலிலும் ஃபுட்கோர்ட் ஓரளவுக்கு பங்கஷனாக ஆரம்பித்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இன்னும் பெரிசாக வரவிருக்கிறதாம். எப்படியோ ஃபுட்டிகளுக்கு கொண்டாட்டம் தான்.
*****************

பிவிஆரில் சிங்கம் பார்த்தோம். லவ்லி தியேட்டர். கொடுத்த காசிற்கு வஞ்சனையில்லாமல் இருந்தது இருக்கையும் சவுண்ட் சிஸ்டமும். “ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடா” என சூர்யா எகிறி அடிக்கும்போதெல்லாம் என் மண்டையில் இறங்கின மாதிரியே ஒரு ஃபீலிங். டிபிக்கல் ஹரி மூவி. ஒன்னே ஒன்னு மட்டும் மிஸ்ஸிங். அனுஷ்கா தாவணியில் மலை/வயல்வெளியில் டூயட் பாடவில்லை. மற்றபடிக்கு பனைமரம்/தென்னைமரம், பொட்டல்காட்டில் ஒரு ஃபைட், டாடா சுமோ வெடித்து பறத்தல், மனோராமாவின் எமோஷன் என ஹரியின் அத்தனை டச்சும்.

June 24, 2010

என்னை காதலித்தவன்..

நீ காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
கோபப்படுவது எவ்வளவோ மேல்
எரிமலையின் வெப்பத்தை வி்ட
பனிமலையின் குளிர்ச்சி
குத்திக் கொல்கிறது..
**************

அடித்தொண்டையில் கத்தியதும்
செல்போன் சிதறியதும்
பொங்கிப் பொங்கி அழுததும்
கனவே.
நினைத்ததை மறுத்தது
ஈரத் தலையணை..
*************

சாட் பாக்ஸை மூடும்போதும்
செல்பேசி அழைப்பை துண்டிக்கும்போதும்
சபித்திருப்பான் என்னை காதலித்தவன்.
அவனைப் பிரிந்த பின்னான வாழ்க்கையுடன் ஏற்பட்ட பிணக்கு
இன்னும் கூடாதிருக்கவே இத்தனையும்
என அவனுக்குத் தெரியாதிருக்கட்டும்.
***************

கரடி பொம்மை
சில்க் உறையிட்ட தலையணை
அம்மாவின் உள்ளங்கை
எதுவுமே தேவைப்படுவதில்லை.
உன் நினைவுகள் மட்டும் அதிகமாய் இருக்கிறது.
தூக்கத்தை காணவில்லை.
****************

மழை தொடரலாமா நின்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறது.
வேடிக்கை பார்க்க வந்தவள்
எல்லாவற்றிலும் உன்னைப் பார்க்கிறேன்.
என்னைச் சுற்றிலும் நீ.
என்னிலும் நீ.
‘டீல சர்க்கரை ஜாஸ்தியாயிடுச்சு. திகட்டுது இல்ல’ என்ற அம்மாவிற்கு
இல்லை என்ற என் பதில்
ஆச்சர்யமேற்படுத்தியதில் ஆச்சர்யமேது??!!
******************

June 22, 2010

Wang's Kitchen

வாங்’ஸ் கிச்சன் - சிட்டி செண்டர், ஸ்பென்சர் ப்ளாஸா இன்ன பிற பெரிய மால்களிலுள்ள ஃபுட் கோர்ட்களில் கட்டாயம் ஒரு கவுண்டரை இந்த பெயர் பலகையோடு பார்த்திருப்பீர்கள். சைனீஸ் உணவுகளை பரிமாறும் உணவகம். To be more precise Indo chinese foods;)

பர்ஸ் அதிகம் பழுக்காமல், சைனீஸ் உணவுகளின் தூரத்து உறவு என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்கும் சைனீஸ் உணவுகளை ட்ரை பண்ண ஏதுவான இடம். தயவு செய்து மால்களில் ட்ரை செய்யாதீர்கள். தனியாக இருக்கும் ரெஸ்டாரெண்டுகள் பெட்டர்.

முதன் முதலில் டிபிக்கல் சைனீஸ் உணவு சாப்பிட்டது பெசண்ட் நகரில். ஸ்பென்சர்ஸ் டெய்லியின் மாடியில் ஷாங்கிரி லா என்றொரு ஹோட்டல் இருந்தது. நண்பனொருவனை ட்ரீட் என அழைத்துக்கொண்டு போய் பர்ஸை பழுக்க வைத்தோம். ஆனால் லவ்லி ஃபுட். ஓனரம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கையில் அங்கு சர்வ் செய்யப்படும் அனைத்தும் உணவுகளும் ஒரிஜினல் சைனீிஸ் என்றும், இந்தியர்களின் டேஸ்ட்டிற்கேற்ப ரெசிபிகளை மாற்றவில்லை எனவும் கூறினார். இப்போது அந்த ரெஸ்டாரெண்ட் அங்கில்லை:(

சரி நம்ம வாங்’ஸ் கிச்சனுக்கு போவோம். Neat Menu. வழக்கம்போலவே வெஜ் ஆப்சன் கொஞ்சம் கம்மி. நண்பர்களோடு கெட் டு கெதர் போனோம். இரண்டு பேர் வெஜிடேரியன். இரண்டு பேர் நான் வெஜிடேரியன். இன்னொரு தோழியின் வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் ஸ்டார்டர்ஸ் ஆர்டர் செய்தோம். செய்தோம். செய்துக்கொண்டே இருந்தோம். அவள் வருவதற்குள் மூன்று ஸ்டார்டர்களை முக்கிவிட்டார்கள். நானும் ஜூனியரும் ஒன்று. அவள் வந்த பின் அவளுக்காக ஒன்று. மக்கள் சாப்பிட்டவை பெப்பர் சிக்கன், ட்ராகன் சிக்கன் அப்புறம் ப்ரான் ஐட்டமொன்று. நாங்கள் மசாலா பொட்டேட்டோ மற்றும் கார்ன் ஃப்ரை சாப்பிடடோம். டாம் யும் சூப்பும் நன்றாக இருந்தது. ஸ்டார்டரிலேயே வயிறு முக்கால்வாசி நிறைந்துவிட்டது. மெயின் கோர்ஸிர்கு வெஜிடபிள் நூடுல்ஸும், schezwan ப்ரைட் ரைஸும், வெஜிடபிள் பால்ஸ் (க்ரேவி) ஆர்டர் செய்தோம். ஆவ்ரேஜ். டெசர்டிற்கு டேட் பான் கேக், லைம் சோடா. ரெண்டுமே சுமார்தான்.

குடும்பம்/நண்பர்களுடன் ஹாயாக பேசி உண்டு மகிழலாம் (எவ்வளவு நேரமானாலும் உட்கார விடுகிறார்கள்). வீக் எண்டுகளில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி. மொத்ததில் இந்தியன் வெர்ஷன் ஆஃப் சைனீஸ் உணவுகளை சாப்பிடலாம்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Wang's Kitchen
உணவு/cuisine - சைனீஸ் (Indo-Chinese) Veg/Non-veg
இடம் - நிறைய கிளைகள் உண்டு. நான் ட்ரை செய்தது வேளச்சேரி தரமணி லிங்க் ரோட் மற்றும் அடையார் கஸ்தூரிபாய் நகர்.
டப்பு - ஆவரேஜ். நான்கு பேருக்கான உணவு 700 ரூபாய். (2 பேர் அசைவம்)


பரிந்துரை - வொர்த் ட்ரையிங்.

June 18, 2010

அப்பாவும் நானும்..

பெண் குழந்தைகளென்றாலே அப்பாவிடம் பாசமாக இருக்கும் விஷயம் தெரிந்த ஒன்று தான். அப்பாவைப் பற்றி பேசும்போது இந்த டயலாக்கையும் மீறி "எங்கப்பா தான் தி பெஸ்ட்" என்ற கர்வம் எல்லாப் பெண்களுக்குமே இருக்கும். நானும் விதிவிலக்கல்ல. தந்தை என்பவர் குழந்தைகளிடம் கண்டிப்போடுதான் இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக அப்பா ரொம்பவே பிரெண்ட்லி. எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோவக்காரர். அவர் உத்யோகம் அப்படி.

அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பப் பிண்ணனியில் M.A வரை அவர் படித்ததை நினைத்து இன்றளவும் நான் வியப்பதுண்டு. இதெல்லாம் சொல்லி வளர்த்தனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பவே இருந்தது. தான் பட்ட கஷ்டங்களைப் பிள்ளைகள் படக்கூடாதென்பதில் ரொம்பவே உறுதியா இருந்தார். We were also not demanding kids though:) படிப்பு சம்பந்தமாக எது கேட்டாலும் உடனே கிடைக்கும். அப்பாவின் வாசிப்பு பழக்கம் ஒரளவுக்கு எனக்கும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆங்கிலப் பேப்பர்களை வாசிக்க சொல்வது, அதில் வரும் கிராஸ்வோர்ட்க்கு விடை கண்டுபிடிக்க டிக்ஷ்னரியை புரட்டுவது என அப்பா சூப்பரா ஆங்கிலம் கற்றுத் தருவார். என்னோட ஒரளவுக்கு சுமாரான ஆங்கிலத்துக்கு அவரே குரு.



அப்பாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம். எங்க போய்ட்டு வந்த? ஏன் லேட்டு? யாரது போன்ற எந்த கேள்விகளும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையை எனக்கே தந்திருந்தார். +2 முடித்தபின் டீச்சர் ட்ரெய்னிங் தான் என வற்புறுத்திய உறவுகளிடம் "என் பொண்ணை என்ன விட அதிகமாத்தான் படிக்க வைப்பேன்" என சொல்லி பொறியியல் படிக்க வைத்தார். படிப்பு முடித்தவுடன் கல்யாணம் என வற்புறுத்திய அம்மாவை அப்பா மூலம் தான் சமாளிக்க முடிந்தது. ஆனால் நான் கேட்ட மூன்று வருடங்களை அப்பாவால் சாங்ஷன் பண்ண முடியவில்லை. ஒரு வருடத்துக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது மொத்த பாசத்தையும் அன்பையும் ஜூனியரிடம் கொட்டும்போதும் ரொம்ப பொறாமையா இருக்கு. அவனுக்கு சமமாக இவரும் உட்கார்ந்துகொண்டு ப்ளாக்ஸ் அடுக்குகையில் ஒரு குழந்தையாகவே தெரிகிறார்.

எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ம்ம்ம் திரும்பவும் சின்னப்பொண்ணா மாறி உன் அரவணைப்பிலேயே இருக்கனும்ன்னு தோணுதுப்பா. Happy Birthday Appa.

டிஸ்கி : முதன்முதலாக மீள் பதிவு.

June 15, 2010

நொடியில் பறக்கும் வருடங்கள்

காலம் தான் எத்தனை வேகமாக சுழல்கிறது. நேற்று தான் நடந்தவை போலிருக்கிறது.

அண்ணாவின் கல்யாணத்தில் நாத்தனார் முடிச்சு போட்டுவிட்டு கீழே இறங்கும்போதே என்னவோ போலிருந்தது. அசதியாக இருக்குமென விட்டுவிட சிறுது நேரத்திற்கெல்லாம் இனம் புரியாத வலி. நர்ஸாக இருந்த அத்தையிடம் வலியைப் பற்றி சொல்ல லேபர் பெயின் என்றுவிட்டார்கள். கொடுத்திருந்த தேதியை விட ஒரு மாதம் முன்னராகவே. கண்டிப்பாக ட்ராவல் செய்யக்கூடாது என மதுராந்தகத்தில் பார்த்த டாக்டர் சொல்லியும் (அம்மா வீட்டில் பிரசவம்) அண்ணா கல்யாணத்திற்கு வந்ததை எல்லோரும் கண்டித்தார்கள். மடிப்பாக்கத்திலிருந்து அடையார். அவசர அவசரமாய் டாக்டரை வரவழைத்தார் ரகு. செக் செய்து பார்த்துவிட்டு அனிதா பார்த்தசாரதி சொன்னது ”போடி உனக்கு இப்பல்லாம் ஆகாது. சித்திரை தான ஆறது. வைகாசில தான் பொறக்கும்.”

பத்து நாள் கழித்து ரெகுலர் செக்கப்பிற்கு போனபோது குழந்தை பொசிஷன் பார்க்க ஸ்கேன் எடுக்க சொன்னார் டாக்டர். ஸ்கேன் பண்ண மற்றொரு டாக்டர் தலைய சைடுவாக்கில் ஆட்ட அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தை உள்ளவே தண்ணி குடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் உடனே எடுத்துவிடுவது நல்லது எனவும் சொன்னார்கள். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டு தியேட்டருக்குப் போனதும், முதுகில் ஊசி போட்டு, சரியாய் 5.08க்கு ”பையன்ம்மா”, “4 கிலோ இருக்கான்”, “எப்படிம்மா தூக்கிட்டு நடந்த” இவற்றை தொடர்ந்து தொம் என்ற சத்தமும் வீல் என அவனின் முதல் குரலும் கேட்டது. I still dont know how i felt. வலியிலும் மயக்கத்திலும் அவனைப் பார்க்க முடியவில்லை. செக்கச் செவேல்ன்னு இருக்காண்டி என்ற அம்மாவின் வர்ணனை மட்டும் அடிக்கடி கேட்டு்க்கொண்டிருந்தது. ஒரளவுக்கு நினைவு வந்து பார்க்கையில் பச்சை நிற காட்டன் புடவையில் சுற்றப்பட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

அன்று தொட்டு இன்று வரை மூன்று வருடங்களும் என் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிக் கொண்டிருக்கிறது குட்டிப் பிசாசு ஒன்று. முதல் சிரிப்பு, முதன் முதலில் கவிழ்ந்துப் படுத்தது, முட்டிப் போட்டது, உட்கார்ந்தது, தவழ்ந்தது, நின்றது, நடந்தது, அத்தை, மாமா, தாத்தா, ம்மா, தாட்டி (பாட்டி) ஆரம்பித்து அடடா மழடா, சிங்கம் சிங்கம் வரை ஒவ்வொரு நிகழ்வையும் கூடவே இருந்து பார்க்கும், பரவசப்படும் வாய்ப்பு கிடைத்தது/ஏற்படுத்திக்கொண்டது வரமே. நான்கு மாதக் குழந்தையை காப்பாற்றுவது கடினம், இருந்தும் முயற்ச்சிக்கிறோம் எனக் கூறியபோது கண்டிப்பாக என்னை விட்டுப் போகமாட்டான் என்று நினைத்தேன். எல்லாமே நேற்று நடந்தவை போல் கண் முன்னே ஓடுகிறது. மூன்று வருடங்கள் பறந்தேப் போய்விட்டன. 17ஆம் தேதியிலிருந்து பள்ளி செல்லவிருக்கிறான். ஏற்கனவே 8 மாதங்கள் ப்ளே ஸ்கூல் சென்றிருந்தாலும் ஏப்ரல் முதற்கொண்டு லாங் லீவில் இருக்கும் சார் எப்படி செட்டிலாவார் என்ற கவலை நிறையவே இருக்கிறது. டோரா பேக், டோரா லஞ்ச் பேக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (இதை எடுக்க அந்த போட்டோகிராபர் உயிர் போய் வந்த கதை தனியாக), என எல்லாம் ரெடி செய்தாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பேக்கை மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போய்ட்டு வந்துரேன் என டாட்டா காட்டுபவன் 17ஆம் தேதியிலிருந்து என்ன செய்யப் போகிறானோ என்று பயம்ம்ம்மாக இருக்கிறது.

ஆல் த பெஸ்ட் ச்சின்னு. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

June 10, 2010

Karthik Calling Karthik

ஒரு தொலைபேசி அழைப்பினால் உங்கள் வாழ்க்கை நீங்கள் விரும்பிய வகையில் அமையும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? அதே போல் அதே தொலைபேசி அழைப்பு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென தீர்மானிக்கும்போதும், தலைகீழாய் புரட்டிப் போடும்போதும் எப்படி இருக்கும்? அப்படி ஒருவனுக்கு நடக்கும் சம்பவங்கள் தான் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தின் கதை.

கண்ஸ்டரக்ஷ்ன் கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் கார்த்திக் (ஃபர்ஹான் அக்தர்) ரொம்பவே கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் உடையவன். பாஸிடம் செமத்தியாக பாட்டு வாங்குகிறான். அவன் ஒருதலையாக காதலிக்கும் ஷோனாலியும் (தீபிகா படுகோன்) வேறு ஒருவரைக் காதலிக்கிறாள். கார்த்திக்கின் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவமும் அவனை குற்ற உணர்ச்சியில் வதைக்கிறது. ஒரு நாள் அளவுக்கதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலும்போது போன் அடிக்கிறது. மறுமுமையில் பேசுபவர் தன்னையும் கார்த்திக் என சொல்லி கார்த்திக்கிற்கு அட்வைஸ் செய்கிறார். கார்த்திக்கைப் பற்றிய அத்தனை விஷயங்களும் டெலிபோன் ஆசாமிக்குத் தெரிந்திருக்கிறது. இருப்பிடம், தோற்றம் உட்பட அனைத்தும். சிறுவயதில் நடந்த அந்த சம்பவமும் கூட. தன் ஒருவனால் மட்டுமே கார்த்திக்கின் வாழ்க்கையை சரி செய்ய முடியும் என சொல்லும் டெலிபோன் ஆசாமி கார்த்திக்கிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் தன்னைப் பற்றியோ தன் உதவியைப் பற்றியோ யாரிடமும் சொல்லக்கூடாது என்பது.

அதன் பிறகு கார்த்திக்கின் லைஃப் ஸ்டைலே மாறுகிறது. பாஸ் பணிவாக நடந்துக்கொள்கிறார். ஷோனாலியின் காதல் கிடைக்கப்பெறுகிறது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது டெலிபோன் ஆசாமியைப் பற்றி ஷோனாலியிடம் சொல்லப் போக, அவர் அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பே இல்லை. டாக்டரைப் பார்க்கச் சொல்கிறார். அதன் பின் தொடர்ச்சியாய் நிகழும் சம்பவங்கள், அந்த மர்ம ஆசாமி யார், அவன் பிடியிலிருந்து கார்த்திக் மீண்டானா என்பது மிச்சக் கதை.

சிம்பிள் ஆனால் இண்டரஸ்டிங்கான ஸ்டோரி லைன். இந்த மனோதத்துவ டைப் கதைகளில் ஹீரோ மக்களுக்காக போராடுவார். நல்லவேளையாக அப்படியில்லாமல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்கள். ஃபர்ஹான் அக்தரை தவிர வேறு யாராவது இந்தக் கேரக்டருக்கு பொருந்திப் போவார்களா என்பது சந்தேகமே. கன கச்சிதம். போன் காலிற்கு முந்தின அப்பாவி/அய்யோ பாவம் முகபாவமாகட்டும், காலிற்கு பிந்தைய தெனாவட்டான/தன்னம்பிக்கை மிளிரும் நடிப்பாகட்டும், பிரச்சனையில் சிக்கித் தவித்து புழுங்குவதாகட்டும் கலக்கியெடுத்திருக்கிறார். தீபிகா படுகோன். ஹூம்ம்ம். என்னா ஸ்டரக்ச்சர். க்யூட் ஸ்மைல். இசை ஷங்கர் அண்ட் கோ. ஊஃப்ஸ் தேரி அதா, தும் தோ மேரி சாத் ஹோ இரண்டும் அட்டகாசம். ட்ராப்டில் சேர்த்து வைத்திருக்கும் மெயில்களை காட்டி ஷோனாலியிடம் தன் நெடுநாள் காதலை சொல்லுவது அழகு. பர்ஹான், தீபிகா மற்றும் ஷங்கரை இன்னமும் பிடிக்க வைத்த படம்.

கார்த்திக் காலிங் கார்த்திக் - கண்டிப்பாய் பார்க்கலாம்.

பி.கு : அங்காடித் தெருவிற்கு அடுத்து பார்த்த படம். ரியலிஸ்டிக்/யதார்த்தம்/வாட்சோஎவர் என்ற வகையில் பெஸ்ட் என்று சொல்லலாம்.

June 9, 2010

போச்சுடா...

கல்யாணத்த பண்ணிப் பார். வீட்டக் கட்டிப் பார்னு சொல்லுவாங்க. இதோட வீட்டை மாத்திப் பார்ன்னுங்கறதையும் சேர்த்துக்கனும். புது வீடு வந்தாச்சு. மே மாதத்தின் ஒரு பெரிய வேலை முடிந்தது. இந்த முறை பேக்கர்ஸ் & மூவர்ஸ்க்கு ரொம்ப வேலை இல்லை. பின்னர் வேளச்சேரி வந்து பத்தே மாதங்களில் அடுத்த ஷிப்டிங். பரணில் இருந்த எந்த பெட்டியையும் பிரிக்கவேயில்லை. அப்படியே அலாக்காகத் தூக்கி வைத்தாகிவிட்டது. நானும் ஒவ்வொரு வீடு மாறுகையில் வேண்டாமென நிறைய பொருட்களை விட்டுவிட்டு வருகிறேன். இருந்தும் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கை குறையமாட்டேன் என்கிறது. இன்னும் நான்கைந்து அட்டைப்பெட்டிகள் பாக்கி இருக்கின்றன ஒழுங்குப்படுத்த. அடுத்தது ஜூனியர் ஸ்கூல் வேலைகள்.
***************

பப்ளிக் செக்டாரும், ப்ரைவேட் செக்டாரும் அடிக்கும் கூத்துகள் தாங்கவில்லை. டெலிபோன் இணைப்பை மாற்ற BSNLல் 20 நாட்கள் ஆகுமென்றனர். ரகு பாதி ஆபிஸ் வேலைகளை வீட்டிலிருந்தே முடித்துவிட்டு சாவகாசமாக கிளம்புவார். நெட் கனெக்ஷ்ன் இல்லையெனில் கையுடைந்தாற்போலாகிவிடும் அவருக்கு. ஏர்டெல்லை அனுகினோம். ரெண்டே நாட்களில் 512kbps இணைப்பை தந்து விட்டனர். ஆஹா என தலைமேல் தூக்கி வைத்துப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே க(ஷ்)ஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு. உங்களுக்கு 1mbps ஸ்பீட் அலாகேட் பண்ணிருக்கோம். 20GB லிமிட். அதற்கு மேல் போனால் 256kbps ஸ்பீட் வருமென்றார்கள். யாரைக் கேட்டு ப்ளான் மாத்தினீங்க என எகிறியதும் செக் செய்துவிட்டு சொல்கிறேன் என வைத்துவிட்டார்கள். ப்ரொஷரில் இருப்பது ஒன்று இவர்கள் செய்வது
ஒன்று. ஹூம்.
***************

சில மாதங்களுக்கு முன் அப்பாவை வற்புறுத்தி சினிமா அழைத்துக்கொண்டு போனோம். முதன்முறையாக சென்னையில் படம் பார்க்கிறார். அப்பாவிற்கு சீட்டிங் ரொம்ப பிடித்திருந்தது. படத்தையும் கொஞ்சம் ரசித்தார். படம் முடிந்து வந்தபோது எல்லாத்தையும் ஓட்னாங்களே. முக்கியமா இரண்டு க்ளீஷேசை மறந்துட்டாங்க என்றார். என்ன என கேட்டதற்கு
1. ஹீரோ குங்குமம் வெச்சாலே ஹீரோயின் அவருடைய மனைவியாயிடறது.
2. சென்சார்ட்:)
************

சென்ற வருட நிதியாண்டில் தமிழக போக்குவரத்துக் கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக எங்கேயோ படித்தேன். ஏன் ஆவாது. சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்றேன். ட்ரைவர், கண்டக்டரோடு சேர்த்து மொத்தம் 12 பேர். எங்கள் வண்டியை ஓவர்டேக் செய்து போன மற்ற இரண்டு விரைவுப் பேருந்துகளில் நான்கைந்து தலைகள் கூட காணோம். கோடிக்கணக்கில் நஷ்டமாகம லாபம் கூரையப் பிச்சிகிட்டு கொட்டுமாக்கும்.
************

நாசிக் கந்தார்
பெல் சியோ
டெக்சாஸ் பியஸ்டா
தோசா காலிங்
வெஜ் நேஷன்

இவை அடுத்தடுத்து பதியப் போகும் உணவகங்கள்.

இதற்கிடையே ஒரு கதை(தொடர்) வேறு எழுதிவைத்திருக்கிறேன். அப்புறம் இன்னும் நிறைய மொக்கைகள் என பதிவு போட்டே டயர்டாகிவிடுவேன் போல:)
அடுத்த மாதத்தில் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் இந்த மொக்கை தளத்தை விடாம படிக்கும் (ஹுக்கும்) 152 பேருக்கும் நன்னி (ஒருவழியா 152 followers ஆச்சு. ஆனா இந்த ஹிட் கவுண்டர் 34,000த்திலேயே முக்குது. கமெண்டு கேக்கவே வேணாம். சரி விடு அதுக்காகவா எழுதறேன்:))).
*****************

தலைப்புக்கு ஏற்றதாய்...



எங்கம்மாவோட லீவ் முடிஞ்சு போச்சு:)