January 24, 2011

துணுக்ஸ் 24-01-2011

தொலைக்காட்சிகளில் பொங்கலுக்காக ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் (எனக்குத் தெரிந்து) உருப்படியாக இருந்தது வசந்த தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தான். ஞாயிற்றுக்கிழமை பாலமேடு ஜல்லிக்கட்டும், திங்கட்கிழமை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் ஒளிபரப்பினார்கள். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலும், கூகிள் பஸ்ஸில் பகிரப்பட்ட நர்சிம் எழுதிய ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையும் போட்டியை முழுதும் பார்க்க வைத்தன. ஒவ்வொரு காளையும் கடோத்கஜனின் க்ளோனிங் போலிருந்தன. சளைக்காமல் விட்டுக்கொண்டே இருந்தார்கள். மாடுபிடிப்பவர்களும் அசராமல் முயற்சி செய்துக்கொண்டே இருந்தார்கள். நான் பார்த்த மட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே காளைகள் அடக்கப்பட்டன. மற்றவையெல்லாம் “தொட்டுப்பார்றா. தில்லு இருந்தா வாடா” என்ற ரேஞ்சுக்கு நின்று விளையாடின.

ஜல்லிக்கட்டு மற்ற விளையாட்டுகளிலிருந்து வேறுபடும் புள்ளி முக்கியமானது. எந்த விளையாட்டிலுமே சம்பந்தப்பட்ட இருவருக்கும் ‘இது விளையாட்டுத்தான்’ என்று தெரிந்திருக்கும். ஆனால் இதில் அப்படியில்லை. மனிதனுக்கு விளையாட்டு. மிருகத்துக்கு அது தெரியாது. - பெருமாள் முருகன் எழுதிய முன்னுரையில் வரும் வரிகளிவை. களத்திலிருக்கும் வீரர்களுக்கு காளையை அடக்குவது நோக்கம். காளைகளின் நோக்கமென்னாவாயிருக்கும்? யாரிடமும் பிடிபடக்கூடாதென்பதா? தன்னைத் தற்காத்துக்கொள்வதா? காளைக்கு மட்டுமே வெளிச்சம். ஒவ்வொரு காளையும் வாடிவாசலிலிருந்து வெளிவரும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும் நமக்கே பரபரப்பும் பதற்றமும் ஏற்படுகின்றது. மாடு அணைக்க களத்தில் நிற்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? வாழ்க்கையில் ஒருமுறையாவது ஜல்லிக்கட்டை நேரில் பார்த்துவிடவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏகப்பட்ட கெடுபிடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் இறந்ததால் அடுத்த வருடம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்ற கேள்வியோடு ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விடுமா? பார்க்கனும். பார்ப்போம்.
**************

ரொம்ப எதிர்பார்த்துப் போய் ஒரு விஷயத்தில் ஏமாந்ததும் பொங்கல் சீசனில் நடந்தது. இரண்டு வருடங்களாக சென்னை சங்கமம் பார்க்கனும் என்ற ஆசை பொங்கலன்று நிறைவேறியது. அண்ணாநகர் டவர் பார்க்கில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். ஒரத்தநாடு கோபு குழுவினரின் நாட்டுபுறப் பாடல்கள், காவடியாட்டம், கருப்பசாமியாட்டம் ஆகியவைற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காவடியாட்டம் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் ரொம்ப நன்றாக இருந்தது. மேடையின் உயரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியிருந்தால் எல்லாருக்கும் எளிதாக தெரிந்திருக்கும். கொஞ்சம் எம்பிப் பார்த்தால் தான் தெரிந்தது. அடுத்தது அருணா சாய்ராமின் கச்சேரி என அறிவித்தார்கள். இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைன்னு ஃபுட் ஸ்டால் பக்கம் நடையைக் கட்டினோம். நண்பர்கள் ரொம்பவே பில்டப் கொடுத்து வைத்திருந்த பர்மா பாய் பரோட்டா ஸ்டாலில் முட்டை பரோட்டா சாப்பிட்டோம். ரொம்ப சுமாராகத்தான் இருந்தது. பெட்டர் லக் நெக்ஸ் டைம் என மனதைத் தேற்றிக்கொண்டு ஜூனியர் பின்னால் ஓட ஆரம்பித்துவிட்டோம்.
*****************

ஃபேஸ்புக்கில் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. அங்கேயும் அப்படித்தானா என்றெண்ணம் ஏற்பட்டது:)

12 comments:

Porkodi (பொற்கொடி) said...

adada.. aruna katcheri poi miss panlama? (yes i did read your story ;D)

அமைதிச்சாரல் said...

அதானே.. ஹெல்மெட் போடலைன்னா தப்பில்லையா :-))))))))

மோகன் குமார் said...

துணுக்ஸ் குறைச்சல். இன்னும் கொஞ்சம் கிறுக்கிருக்கலாம்

Chitra said...

மினி லாரி ஒட்ட ஹெல்மெட் வேணுமா? அதுக்கும் நூறு ரூபா அபராதம்..... சரியா போச்சு!

சே.குமார் said...

thunukks arumai... innum konjam karakara morumoru serthirukkalaam.

ஹுஸைனம்மா said...

//அங்கேயும் அப்படித்தானா என்றெண்ணம் ஏற்பட்டது//

ஏன் அப்படி? கர்நாடகாவும் இந்தியாவுலத்தான இருக்கு, அதுவும் தங்கத் தமிழ்நாட்டுக்குப் பக்கத்துலயே!!

வித்யா said...

நன்றி பொற்கொடி.
நன்றி அமைதிச்சாரல்.

நன்றி மோகன் குமார் (அடுத்த தடவை ட்ரை பண்றேன்).

நன்றி சித்ரா.
நன்றி குமார்.

நன்றி ஹுஸைனம்மா (வாஸ்தவம்தான். ஆனாலும் கல்லா கட்றதுல நம்ம மாம்ஸுங்கள அடிச்சுக்கவே முடியாது)

செ.சரவணக்குமார் said...

வாடிவாசல் நாவல் படிப்பதே ஜல்லிக்கட்டை நேரில் பார்ப்பதைப்போன்ற அனுபவம்தான். வாடிவாசல் பற்றிய உங்கள் பார்வையை எழுதுங்கள் வித்யா.

//வாஸ்தவம்தான். ஆனாலும் கல்லா கட்றதுல நம்ம மாம்ஸுங்கள அடிச்சுக்கவே முடியாது//

உண்மைதான்.

விக்னேஷ்வரி said...

ஜல்லிக்கட்டு அவ்ளோ பிடிச்சிருக்கா.. இருங்க, களத்துல இறக்கி விடறோம்.

அமுதா கிருஷ்ணா said...

நான் நிறைய முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்த்து இருக்கேன். ஜல்லிக்கட்டு நடத்தும் குடும்பம் சொந்தம் எங்களுக்கு. சொல்லுங்க எப்ப போலாம்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஏன் இப்படி சுருக்கிட்டீங்க வித்யா.......சூப்பர் வழ்க்கம் போல

DINESH said...

mini lorry ku helmet ah...enna koduma saravanan ithu