கண்மனி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். பாயிண்ட் டு பாயிண்ட், கிரிவலம் ஸ்பெஷல், தோல் பையை ஒரு குலுக்கு குலுக்கி சில்லறை தேடும் சோடா புட்டி அணிந்த கண்டக்டர், சின்னப் பசங்களோ, வயதானவர்களோ யார் உட்கார்ந்திருந்தாலும் எழுப்பிவிட்டு, தன் பெருத்த சாரீரத்தை தன் சீட்டிலடைத்து நான்காய் எட்டாய் மடிக்கப்பட்டிருக்கும் கோடு போட்ட பேப்பரில் கோழி கிறுக்கலாய் எண்களைப் பதியும் கள்ளக்குறிச்சி வண்டி கண்டக்டர், பஞ்சரான வண்டிக்கு டயர் மாத்த உதவி தேடும் திருச்சி வண்டி ட்ரைவர், கட்டைவிரலை சுண்டுவிரலின் ஆரம்பத்திற்கு முட்டுக்கொடுத்து, நான்கு விரலைக் காட்டி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் ஸ்டாஃப் என எப்போதோ என் வாழ்க்கையில் கடந்து சென்ற நபர்களின் மறுபக்கத்தை, அவர்களின் அன்றாட வாழ்வை, டிப்போ என்ற ஒரு தனித் தீவில் அவர்கள் படும்பாட்டை உள்ளது உள்ளபடி மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது நெடுஞ்சாலை நாவல்.
நாவலின் பிரதான கதாப்பாத்திரங்களான அய்யனார், தமிழரசன், ஏழைமுத்து ஆகிய மூவரும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்கள் (Casual Labour/ சி.எல் என நாவல் முழுக்க அடையாளம் காட்டப்படுகிறார்கள்). இம்மூவரின் மூலமாக தற்காலிக தொழிலாலர்களின் பணியிடப் பிரச்சனைகள், நிரந்தரமாக அவர்கள் படும் கஷ்டங்கள், ஒரு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் என நிறைய விஷயங்களை கண்முன் விரிவாக வரைகிறார் குணசேகரன். நாவலை முடிப்பதற்குள் விழுப்புரம் பெரியாரில் வேலைப் பார்த்த மாமாவும், விருத்தாச்சலத்தில் தனியாரில் கண்டக்டராய் பணிபுரிந்த பெரியப்பாவும் எண்ணிலடங்காமல் எண்ணத்தில் வந்தார்கள்.
நாவல் வீடு, நாடு என இரண்டு பாகங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான வீடு பகுதிதான் நாவலின் பிராதனப் பகுதி. பணி நிரந்தரம் தாமதமாவதால், திருமணமும் தள்ளிப் போவதை எண்ணி வருந்தும் அய்யனாருக்கு டெப்போவில் டெக்னிகல் வேலை. ஏ.இ தள்ளிவிடும் வேலைகளை நிரந்தரமாகவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மறுபேச்சுபேசாமல் செய்யும்போதும், யாரையோ பழிவாங்க மேற்கொண்ட நடவடிக்கையால் தானும் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் இருக்கும் நாட்களில், ஏற்கனவே பார்தத கொளுத்து வேலைக்குப் போகும்போதும், சக சி.எல்களான தமிழ் மற்றும் ஏழைக்காக இறக்கப்படும்போதும் வெவ்வேறு முகம் காட்டி, நகமும் சதையுமாக கண் முன்னே உலவுகிறார் அய்யனார். வீட்டில் மனைவிக்கும் தாயிற்குமான பிரச்சனையை சமாளிக்க திணறும் சராசரி ஆணாக ஏழைமுத்து. ஓரளவிற்கு வசதியான குடும்ப பின்புலம் கொண்ட ஆளாக கண்டக்டர் தமிழரசன். டூட்டி போனத் தடத்தில், பள்ளி செல்லும் பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் தமிழரசன். அதுவரை கனக்கச்சிதமாக கணக்கு வழக்குகளை காட்டுபவர், காதல் மயக்கத்தில் கணக்கில் குழம்புகிறார். டூட்டியிலிருக்கும்போது ஒரு முறை செக்கிங்களிடம் மாட்டி வேலையிழக்கிறார். அதே போல் பால்யப் பருவ காதலியால் ஏழைமுத்துவின் வேலையும் போய்விடுகிறது. இச்சம்பவங்களுக்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றது? அவற்றை எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிகாலை நெடுஞ்சாலைப் பயணம் போல் அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
நாவல் தொடங்கும்போது வலிந்து திணிப்பதைப் போல் தோற்றமளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவரணைகள் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், போகப் போக பழகிவிடுகிறது. நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.
நூல் : நெடுஞ்சாலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
விலை : 230 ரூபாய்
போதுமென்றளவிற்கு ஏற்கனவே அழுதிருந்தாலும், ஏனோ நெடுஞ்சாலையால் ஏற்பட்ட நினைவுகள் அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத, மனதைப் பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது. நான் பிறந்த ஊர், ஓரிரு முறை விடுமுறையை கழித்த இடம் என்றளவிற்குத் தான் விருத்தாசலத்துடன் எனக்கான தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் தவறிய என் பெரியம்மாவிற்கும் விருத்தாச்சலத்திற்குமான தொடர்புகள் எழுத்திலடங்காதவை. அம்மா வழியில் கிட்டத்தட்ட எங்கள் தலைமுறை முழுக்கப் பிறந்தது விருத்தாச்சலத்தில் தான். பெரியம்மாவிற்கு பொருளாதார வசதிகள் இல்லையென்றாலும், அத்தனை பிரசவங்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது உடல் உழைப்பு மறக்கவே முடியாத ஒன்று. பெரியம்மா இன்று இல்லையென்றாலும் அம்மா வீட்டு வரவேற்பறையில் பளிச்சிடும் பீங்கான் பொம்மைகள் பெரியம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
May 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
உங்களின் விமர்சனப் பதிவும், பஸ் கருத்துக்களும் இந்த நாவலைப் படிக்கத் தூண்டுகிறது
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
கண்டிப்பா வாங்கி படிக்கணுமின்னு தோணுது வித்யா உங்க விமர்சனம் படித்ததும்
நச் விமர்சனம் வித்யா. நிஜமாவே ஒரு வாசிப்புக்கப்பறம் நம்ம எழுத்து வித்தியாசப்படுது பாருங்க. அது தான் நல்ல, முழுமையான வாசிப்பு. ரொம்ப அருமையான எழுத்து வித்யா.
நல்ல நூல்நயம். நாவலின் சாரம்சத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ;-))
அசரடித்த எழுத்து. கண்மணி குணசேகரன் என்னை மொத்தமாக ஆக்ரமித்துக்கொண்டார் இந்நூலில். தமிழில் கொண்டாடப்படவேண்டிய நாவல்களின் வரிசையில் மிக முக்கியமான இடம் நெடுஞ்சாலைக்கு உண்டு.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வித்யா. தொடர்ந்து நீங்கள் வாசித்த நூல்கள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
நாவலை வாசிக்கத்தூண்டும் நல்ல விமர்சனம்.
நன்றி ...கண்மணி குணசேகரன் எங்கள் மண்ணின் சொத்து. நீங்களும் விருத்தாசலத்தில் தான் பிறந்தீர்கள் என்பது கூடுதல் சந்தோஷம்.நான் பிறந்தது முதல் கல்லூரிபடித்து 24 வயது வரை வாழ்ந்த இடம்.திரைப்படம் மற்றும் கலை இலக்கியங்களில் இன்னும் எமது மண்ணின் கலாச்சாராம் நிறைய பதியப்பட வேண்டியுள்ளது.அண்ணன் அறிவுமதி,வே.சபாநாயகம்,கரிகாலன்,இரத்தினப்புகழேந்தி,கண்மணி குணசேகரன்,சு.தமிழ்ச்செல்வி.எஸ்ஸார்சி,என பலர் எங்கள் ஊர்காரர்கள் தான்.
ஒரு நல்ல உணவகத்துக்குச் சென்று முழுமையாக உணவருந்தியதுபோல மனதிற்கு நிறைவாக இருந்தது. :-)))
மற்றபடி சரவணக்குமார் அவர்களின் வார்த்தைகளை ரிபீட்டிகிறேன்.
நல்லதொரு அறிமுகம். நன்றி..!
-
DREAMER
வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_08.html
Post a Comment