May 17, 2011

பழிக்கு பழி

கொலைப்பட்டினியோடிருக்கும் பத்து சிங்கங்களிருக்கும் குகையின் வாசலில் நிற்கும் ஆடு போல் DK கல்யாண மண்டப வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அவசியம் உள்ளே போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். கண்களை மூடி ஒரு தடவை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டேன். மனதைரியத்தை வரவழத்தைக்கொண்டு உள்ளே நுழைந்தேன். வராந்தா போன்றிருக்கும் அமைப்பில் சிதறிய அன்ன உருண்டைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவயதுப் பெண்கள். ”இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போய்டல. அப்படியே திரும்பி ஓடிடு” என என் மூளை எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே “ஹேய் ஸ்வேதா. வா வா வா. என்ன அங்கேயே நின்னுண்டிருக்கே. உள்ளே வா. அப்பாம்மா வர்லையா?” எனக் கேட்டபடியே என் பதிலை எதிர்பார்க்காமல் சச்சு மாமி என் கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். என்னைக் கொண்டுபோய் அவள் நிறுத்திய இடத்தில் சங்கர் மாமா உட்கார்ந்திருந்தார்.

”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.

“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.

“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”

“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”

“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.

“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”

“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”

“BTSல தான வேலை பார்க்கிற?”

“ஆமாம்”

“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.

மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.

“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.

“7 இயர்ஸ் ஆய்டுத்து”

“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”

“சிட்டி ஆஃபிஸ்”

“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.

“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”

“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.

"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.

ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.

“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’

“தேங்ஸ்டி.”

“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”

“கொலவெறில இருக்கேன். போய்டு.”

“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”

“அடியேய்ய்ய்ய்ய்”

“சும்மா சொல்லுடி”

“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.

கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.

“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"

"யெஸ் வேலு.”

“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”

“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"

"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."

"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”

“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."

ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.

Name : Mahadevan Keshava Krishnan

வாடி வா.......

20 comments:

RVS said...

புனைவோ நினைவோ ரொம்ப நல்ல நேரேஷன். மலையாளி என மைக் போட்டு தெரிவித்தது அற்புதம். ;-))

ராம்ஜி_யாஹூ said...

http://dubukku.blogspot.com/2007/05/blog-post_16.html

அருமை

Cable சங்கர் said...

க்யூட்..

எல் கே said...

கதைய விடுங்க வித்யா. இவங்க பண்ற அலப்பறை தாங்கமுடியாது . அதுவும் அவங்க பையனோ / பொண்ணோ ஐ டில இருந்து நாம ஐ டில இல்லைனா அவ்ளோதான் காலி .

உலக மகா குற்றம் பண்ணமாதிரி பேச ஆரம்பிச்சுடுவாங்க. சாமி தாங்க முடியாது.

விஜி said...

புனைவல்ல..உண்மை :)))))))))))))

taaru said...

Confirm டா காமெடி தான்.... "காமெடி மாதிரி"ன்னு இருக்குற label ல மாதிரிய எடுத்துடுங்க....

CS. Mohan Kumar said...

கடைசி பகுதி வரும் போது முடிவை ஊகிக்க முடிந்தாலும்....அருமை.

ராம்குமார் - அமுதன் said...

ந‌ல்ல‌ காமெடி ப‌திவு...

ஆர‌க்கிளா? க‌ம்பெனி ப‌ஸ்ஸே ஓட‌ற‌தில்ல‌, சின்ன‌க் க‌ம்பெனியா ? அப்ப‌டில்லாம் மொக்க‌ போடுவாங்க‌...

நேசமித்ரன் said...

நரேஷன் !

தக்குடு said...

Ha ha ha..:)

sundar said...

அட்டகாசம்....சிரிப்பை அடக்க முடியல...ஆபீஸ்ல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்கறா

Cheers

Raghu said...

இந்த மட்டும் இல்ல, இன்னும் நிறைய இம்சை இருக்குங்க :(

மதுரை சரவணன் said...

அருமை... வாழ்த்துக்கள்

Unknown said...

கண்டிப்பா இது உண்மை தான் .கதை நல்லா இருக்குங்க.

பின்னோக்கி said...

ரசிக்க வைக்கும் நடை. ஆனால் அவ்வளவு பதட்டத்துடன் ஏன் அவள் கல்யாணத்திற்கு சென்றாள் என்பது புரியவில்லை.

mohan said...

Hey! what happened? No posts for a long time??!!

-Mohan

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... சூப்பர்... இனி டிசூம் டிசூம் தானா? nice narration...:))

Unknown said...

கதையோட flow and narration ரொம்ப நல்லா இருக்கு வித்யா...ரொம்ப நாள் கழிச்சு உங்க வலைத்தளம் வந்தேன் சிரிக்க வைச்சிட்டீங்க. பெண்களாலே காமெடியாக எழுத முடியாதுன்னு இங்க குறறச்சாட்டுகள் இருக்கு. பழிக்கு பழியை படிச்சா நிச்சயம் அவங்க அந்த ஒபினினை மாத்திப்பாங்க. வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்க....உங்க வலைத்தளத்தின் லிங்கை பகிர்ந்த நண்பருக்கும் உங்களுக்கும் நன்றி ;)))

Mrs.Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

மாய உலகம் said...

காமெடி பதிவு கலக்கல்...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்