October 27, 2009

காணி நிலம்

இன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது. சளக் சளக்குகளும், சரக் சரக்குகளும் அவசரமாய் ஆரம்பித்து அழகிய கோலங்கலாய் முடிந்திருந்தன. நான்கு மழை கண்டு நமுத்துப் போய் மக்கிய வாசம் வீசும் கூரையின் வெளியிலிருந்து அகிலாண்டம் கத்திக் கொண்டிருந்தாள்.

"ஒரு பொட்டு சீமெண்ண கூட இல்லை. இன்னிக்கு கஞ்சிக்கு கையேந்தனும். போக்கத்தவன கட்டிக்கிட்டு நான் சீரழியனும்னு கருப்புசாமி எந்தலைல எழுதிருக்கு."

வழக்கம்போலவே இந்த பொழுதும் அகிலாண்டத்தின் இரைச்சலோடு தான் விடிந்தது மாரி என்கிற மாரியப்பனுக்கு. சலித்துக்கொள்ளக்கூட சலிப்பாக இருந்தது மாரிக்கு. மெல்ல பாயிலிருந்து எழுந்தவர் கண்கள் தேடியது தெய்வானையை. மூங்கில் தடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் பை இல்லாததால் கிளம்பிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவராய், எழுந்து, பழுப்பேறிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பினார். தெரு முக்கு வரை அகிலாண்டத்தின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. குரல் தேய தேய மாரியின் நடையின் வேகம் குறைந்து செட்டியார் கடை முன் நின்றது.

மாரிக்கு உத்தியோகம் என எதுவும் கிடையாது. இருந்த மூன்று செண்ட் நிலமும் மழை குறைந்ததால் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலமாகப் போனது. கூலி வேலை செய்ய மாரியின் உடல் ஒத்துழைக்கவில்லை. செட்டியார் கடையே கதி எனக்கிடந்து, பொட்டலம் மடிப்பது, பாக்கெட் போடுவது, பாட்டில் கழுவுவது என காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரே மகள் தெய்வானை பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் காட்சியென பண்ண என்ன செய்வதென்பது தெரியாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இவை எல்லாவற்றிர்கும் மேல் அகிலாண்டம். பொழுது போய் பொழுது விடிந்தால் பஞ்சப் பாட்டு தான். கவலையில் மூழ்கியிருந்தவரை செட்டியாரின் குரல் கலைத்தது.

"எல மாரி. யோசனையெல்லாம் பலமாருக்காப்புல இருக்கு?"

"என்னத்த சொல்றது செட்டி? பொழுது எப்படா விடியும், எப்படா வூட்ட வுட்டு கிளம்பலாம்ங்கற அளவுக்கு அவ கரசல் கூடிட்டே இருக்கு. ரவைக்கு வீட்டுக்கடையவே விசனமா இருக்கு."

"தெனம் நடக்கிற கூத்துதானே. இதுக்கேன் மூஞ்சிய ஆகாசத்துக்கு உசத்தி வச்சிருக்க?"

"தெய்வான பெரிய பள்ளிக்கோடம் போகனும்னு நச்சரிக்குது. ஏதோ ராங்காமே. அதெல்லாம் நிறைய வாங்கிருக்குதாம். அதுக்கு 15000 காசு கட்டனுமாம். எங்கிட்டு போறது?"

"மச்சு வூட்டு பெரியம்மாகிட்ட கேக்க சொல்லு. அவுகதான இவ்ளோ நாள் தெய்வான படிப்புக்கு காசு குடுத்தாங்க?"

"கேட்டுப் பார்த்துச்சாம். அந்தம்மா கையவிரிச்சுட்டாங்களாம். புள்ள ஆசப்படுது. நாந்தேன் படிக்கல. அதையாவது படிக்க வைக்கலாம்னு பார்த்தா காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியல."

"பேசாம நாஞ்சொல்றது கேளு. நம்மூருக்கு பைபாஸ் வருதுல்ல. ரோடு போற இடத்துல தான் உன் நிலமும் இருக்கு. பேசாம வித்துடு. வர்ற காசை புள்ள படிப்புக்கு எடுத்துக்கோ. நிறைய மிஞ்சும். அத வச்சு இதே போல ஒரு கடைய டவுன்ல போடு. சரக்கெல்லாம் நான் இறக்குறேன். கொஞ்சம் வருமானம் வரும். அகிலாண்டம் வாயையும் மூடலாம்ல. என்ன சொல்ற?"

"செட்டி அது எங்கப்பாரு கஷ்டப்பட்டு வாங்கினது. விக்க மனசு வரமாட்டேங்குது."

"போடா பொசக்கெட்டவனே. செத்துப்போன உன் அப்பனா வந்திப்ப கஞ்சியூத்த போறாரு? வித்துட்டு வேலையப் பாப்பியா? வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு"

"ஹும்ம். நீ சொல்றது சரிதேன். பார்ப்போம். யாராச்சு வேணும்னு வந்தா சொல்லியனுப்பு செட்டி."
****************

மாலை பள்ளியிலிருந்து வந்த தெய்வானை, விறகு தேய்த்துக்கொண்டிருந்த அகிலாண்டத்திடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"யம்மா. நான் கேட்ருந்தேனே? என்னம்மா பண்ணப் போற?"

"என்ன?"

"அதாம்மா காலேஜ் போக காசு.."

"காசுமில்ல ஒன்னுமில்ல. கஞ்சிக்கே வழியக்காணோம். காலேசூ போறாளாம்"

"அதில்லமா. மச்சூ வூட்டு பெரிம்மா ஒரு வழி சொன்னாங்கமா. நம்ம நிலத்த வித்து"

"எடு வெளக்கமாத்த. எப்படியாப்பட்ட குதிரையே எரவாணத்த புடுங்குதாம். நொல்ல குதிரைக்கு கொள்ளு கேக்குதாம்மா? நிலத்த விக்கதாண்டி போறேன். வர்ற காசுல வூட்டுக்கு ஒரு ஓடு காமிச்சிட்டு மிச்சத்துல உன்ன எவன் கையிலயாவது குடுத்துட்டு நான் நிம்மதியா இருப்பேன்"

"தாத்தா சம்பாரிச்சத என் சம்மதமில்லாம விக்க முடியாது தெரியுமா?"

முடிக்கும் முன்னரே விறகு கட்டையால் அடிவாங்கினாள் தெய்வானை. அழுதுக்கொண்டே குடிசை உள்ளே ஓடினாள்.
**************

"யோவ் குமாரசாமி. எத்தன நாளாய்யா அந்த ஜி.ஓவ ரெடி பண்ணுவ? பெரியவர் நாளைக்கு கையெழுத்துப் போட கேப்பாரு. அவர் முன்னாடி தலை சொறிய வச்சிடாத."

"அடிச்சாச்சுப்பா."

"எத்தனை ஏக்கர்ப்பா வருது"

"20 ஏக்கர். பைபாஸ் போடலாம்னு NH ல சொன்னாங்கள்ள. அதயும் சேர்த்து தான். பெரியவரு கையெழுத்து போட்டவுடனேயே ஓட்டிரவேண்டியதுதான். இந்ததபா அக்கொயரிங்ல எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது. சட்டுபுட்டுன்னு முடிச்சிடனும்."
*************

"பல்கலைகழகம் கட்ட நிலம் கையகப்படுத்தபட உள்ளது."

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் புதிய பல்கலைக் கழகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள முதல் நடவடிக்கையாக நிலம் கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் அமையவிருக்குமிடத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்ததே. இப்போது அத்திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 comments:

Anonymous said...

நல்லா இருக்குங்க கதை.

pudugaithendral said...

நல்லா வந்திருக்கு வித்யா.

வாழ்த்துக்கள்

Thamira said...

இதேபோல எப்போதோ எங்கோ படித்த நினைவு.!

விக்னேஷ்வரி said...

நல்ல நடை வித்யா. நல்ல உரையாடல்களும். நல்லாருக்கு.

கார்க்கிபவா said...

இங்கயும் சிறுகதையா? ரைட்டு..

ஆரம்ப வரி சூப்பருங்கோவ்

மணிகண்டன் said...

விவரணைகள் எல்லாம் சூப்பரா வந்து இருக்கு வித்யா. கதையும் நல்லா இருக்கு. இத ஏன் ப்ளாக்ல பப்ளிஷ் பண்றீங்க ? எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பலாம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி சின்ன அம்மிணி.
நன்றி கலா அக்கா.
நன்றி ஆதி (அவ்வ்வ்வ்).
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி கார்க்கி.
நன்றி மணிகண்டன்.

"உழவன்" "Uzhavan" said...

//இன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது//
 
அழகான கற்பனை
 
நிலம் கையகப்படுத்தினாலும் அரசாங்கம் அதற்குரிய காசு கொடுக்கும். ஆனால் அது அடிமாட்டு ரேஞ்சுக்குத்தான் இருக்கும். அப்படித்தானே வித்யாஜி? :-)

Truth said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
இதேபோல எப்போதோ எங்கோ படித்த நினைவு.!

இதே போல தான் எனக்கும் தோனுது. அதனால என்ன? அருமையா எழுதியிருக்கீங்க...

உங்க முதல் வரி உங்களோட ஸ்டைல். இதுக்கு முன்னாடியும் ஒரு முறை கொட்டிக்கிலாம் வாங்கல இப்படி எழுதியிருந்தீங்க - மிளகாயில் காரம் இல்லைன்னு சொல்றவங்க இங்கே போக வேண்டாம் அப்படின்னு.
வாழ்த்துக்கள்.

சர்வேசன் நச்சுன்னு ஒரு கதையில பார்டிசிபேட் பண்ணலியா?

Rajalakshmi Pakkirisamy said...

Good one mam

நேசமித்ரன் said...

ரசித்தேன் மிக ரசித்தேன்

நல்ல நடை

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன் (அதே அதே).
நன்றி ட்ரூத் (டாங்க்யூ).
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி நேசமித்ரன்.

நர்சிம் said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

வட்டார வழக்கு மொழி மிக நன்றாக வந்துள்ளது.

Raghu said...

இதெல்லாம் இருக்க‌ட்டுங்க‌, அடுத்த‌ "கொட்டிக்க‌லாம் வாங்க‌"வை ஏன் இவ்ளோ த‌ள்ளி போட‌றீங்க‌? சீக்கிர‌ம் அந்த‌ ப‌திவ‌ போடுங்க‌!

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம் (நிஜமாவா?).

நன்றி குறும்பன் (ரெடியாகிட்டே இருக்கு. நவம்பரில் முதல் போஸ்ட் அதான்).