படத்தில் ஹீரோவின் இண்ட்ரோக்கு முன்னரே வில்லன்களாக வரும் அந்தப் பையன்களின் இண்ட்ரோ. ஒவ்வொருத்தரும் பாடி லேங்வேஜில் மிரட்டுகிறார்கள். அந்தப் பரட்டைத் தலையோடு கருப்பாக வரும் ஆளும், பெரிய கண்களுடன் வரும் எல்லாவற்றிற்கும் உடனே கோவப்படும் ஆளும் அருமையான தேர்வு. அதிலும் பின்னவர் குரூரப் புன்னகை புரியும்போது அவ்வளவு வில்லத்தனம். ஒரு மிடில் க்ளாஸ், ஈசி கோயிங், டோண்ட் கேர் ஆட்டிடியூட் கேரக்டருக்கு கார்த்தி கனக்கச்சிதமாய் பொருந்துகிறார். ஹேப்பி நியூர் ஆரம்பித்து, காஜலை காதல் வலையில் விழவைப்பது, நண்பர்களை கலாய்ப்பது, கலெக்ஷன் வேலையில் ரவுசு பண்ணுவது, அப்பாவை நினைத்து உருகுவது என நன்றாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் முதல் பாதி அழகாக வந்து போவதோடு சரி. அவரின் பாதி வேலையை கண்களும் உதடுகளுமே பார்த்துக்கொள்கின்றன. அப்பாவாக ஜெயப்பிரகாஷ். கொஞ்ச நேரமே வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் (வில்லன் மற்றும் கேரக்டர் ரோலிற்கு இப்போதைக்கு இவர்தான் பெஸ்ட் சாய்ஸ்). கார்த்தியின் நண்பராக வரும் வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா தின்பவர் நன்றாக நடித்திருக்கிறார்.

முதல் பாதியின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் காமெடியும், வில்லன்களின் கேரக்டரை க்ளியராக சொல்வதும் தான். அதிலும் முதல் பாதி முழுவதும் நகைச்சுவை துருத்திக் கொண்டு தெரியாமல் கதையோடு பயணிப்பது இயல்பாய் இருக்கிறது. கல்யாண வீட்டு மாடியில் விக்ரமன் பட வசனத்தைப் பேசி மியூசிக்கிற்கு இடம் விடுவது கலக்கல். அதே போல் அபிராமி மெகா மால் காட்சிகள், போனில் பேசியே மானேஜரையும் அவர் மனைவியையும் டைவர்ஸ் வரை கொண்டு விடுவது, குடும்பஸ்தன்களப் பார்த்தாலே மரியாதைப் பொங்குது என நிறைய ஹார்ட்டி லாஃப்ஸ்.
பிற்பாதியில் ஆக்ரோஷமும் வன்முறையும் அதிகம். ஒரு ப்ரொபெஷனல் ரவுடியையே ஈசியாக வெட்டிச் சாய்க்கும் நால்வர் அணியை கார்த்தி ஒற்றை ஆளாக ஆயுதமேதுமில்லாமல் எதிர்கொள்வது வந்துட்டான்யா வீராதி வீரன் என்றே எண்ணத் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் பிண்ணனி இசை. அதுவும் இடைவேளைக்குப் பிறகு bgm நல்ல டெம்போ ஏற்றுகிறது. யுவன் கலக்கியிருக்கிறார். பாடல்கள் பெரிதாக சொல்லும்படி இல்லை. இறகைப் போல பாடல் நன்றாக இருக்கிறது. தெய்வம் இல்லை பாடலில் மதுபாலகிருஷ்ணனின் குரல் மனதைக் கிழிக்கிறது. தொய்வில்லாத திரைக்கதை, பொருத்தமான பாத்திரத் தேர்வு என இயக்குனர் கமர்ஷியல் பெஸ்ட் கொடுத்திருக்கிறார்.
நான் மகான் இல்லை - மோசமில்லை.