விடாது பெய்து கொண்டிருக்கிறது மழை. விடாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் நானும். ஞாபகங்களை கிளறிச் செல்வதில் மழையின் பங்கு அபாரமானது. அதுவும் உன் நினைவுகளை. எப்போதோ எடுத்த புகைப்படங்களை புரட்டிப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு ஒப்பானது உன்னை நினைத்துப் பார்ப்பது. உன்னை என்று சொல்வதை விட நம்மை என சொல்வது சரியாக இருக்கும். சேர்ந்திருந்த நிமிடங்கள் விட்டுச் சென்ற இன்பங்கள் ஆயுசுக்கும் போதுமானது.
மாலைப்பொழுதுகள் எப்போதுமே ரம்மியமானவை. மறையும் சூரியனின் செங்கதிர்கள் பட்டு தகரமும் தங்கமாய் ஜொலிக்கும். அதுவும் மழை பெய்தோய்ந்த மாலையில் சூரியன் சம்பிரதாயமாய் வந்து செல்லும்போது சுற்றிலும் இருக்கும் அத்தனையும் பேரழகாகத் தெரியும். அப்படி ஒரு அழகிய மாலையில் தான் உன்னை சந்தித்தேன். அந்த சந்திப்பினூடாக நீ என்னுள் விருட்சமாய் வளர்ந்து கிளை பரப்புவாய் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. சென்ற மழைக்காலத்தில் நாம் நெருங்கி வந்தோம். உனக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். எனக்கு மழையில் நனையும் உன்னை பார்க்க பிடிக்கும். கைகளை கட்டிக்கொண்டு தலைதூக்கி கண் மூடி நீ மழையில் நனையும்போது குழந்தையாக தெரிவாய். உன் மீதிறங்கும் மழைத்துளிகளை எண்ண முயன்று தோற்றேன். நான் உன் மீது கொண்டுள்ள காதலை விட அதிகமாக இருக்கிறது என நிச்சமாய் நம்பினேன். நம்புகிறேன். சொட்டச் சொட்ட நனைந்தபின் சூடாக முத்தம் தருவாய். உன் கைகளுக்குள் இருக்கும்போது உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடமிதுதான் எனத் தோன்றியது. மழைத்துளி உன் மீது இறங்கியதை விட வேகமாய் நீ என்னுள் பரவினாய். என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்தாய். என்னுள் நீயே உதிரமாய் ஓடுகிறாய். இதுவரை நான் கண்டிராத, என் மீது காட்டப்படாத அன்பை உன்னிடத்தில் கண்டேன். மழைக்கு கரையும் மண் போல நான் முழுவதும் கரைந்தேன். மழையைப் பார்த்துக்கொண்டே உன்னோடு அருந்தும் தேநீர், உன் மடியில் படுத்தபடி படிக்கும் புத்தகம், உன் கைகோர்த்து நடந்த கடற்கரை என உலகத்தில் உள்ள அத்தனையும் ஏதாவது ஒரு விதத்தில் உன்னை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.
வெட்கப்பட வைத்தாய். சிரிக்க வைத்தாய். அதை விட அதிகமாய் அழ வைக்கிறாய். அழகான காதலிற்கு ஆயுசு கம்மி போலும். காதலில் விட்டுக்கொடுத்தல் இருக்கவேண்டுமென்றாய். ஆனால் அது நான் மட்டுமே செய்ய வேண்டுமென நீ எதிர்பார்த்தது ஏன் எனப் புரியவில்லை. இருந்தும் கொடுத்தேன். என்னை முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன். உனக்குப் பிடிக்காதவற்றை செய்யாமலிருந்தேன். நட்புகளை ஒதுக்கினேன். ப்ரியங்களைப் புறந்தள்ளினேன். பார்வை இழந்தேன். செவிடானேன். வார்த்தைகளை மௌனித்தேன். உனக்கானவளாக மாறினேன். காலடியிலே கிடந்தேன்.
நீ திருப்தியுற மறுக்கிறாய். இன்னும் இன்னும் என்கிறாய். என் சின்ன சின்ன சந்தோஷங்களையும் மறுக்கிறாய். என்னைத் தெரியாதா உனக்கு? பிறர் என்ன சொன்னால் என்ன எனக் கேட்டால் ஆத்திரமடைகிறாய். நான் உன்மேல் கொண்டுள்ள எல்லையில்லாக் காதல் ஏன் உனக்குப் புரியவில்லை. நீ என் மீது கொண்டிருப்பது பொசஸிவ் என்கிறாய். உன் பொசசிவ்னெஸ்ஸே என்னையும் நம் காதலையும் மரிக்க வைக்குமென்றேன். நான் பயந்தது நடந்தேவிட்டது. உப்புப் பெறாத விஷயத்திற்காக நம் காதலை கொன்றுவிட்டாய். உன்னை மறக்க முடியாமல் நானும் விரைவில் மரித்துவிடுவேன் என நினைக்கிறேன். என்னால் இந்த மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தொண்டை கிழிய கத்தி, ஒலமிட்டு அழவேண்டும் போலிருக்கிறது. அதற்குக் கூட சுதந்திரமற்றவளாய் இருக்கிறேன். ஏன் என் வாழ்வில் வந்தாய். அழகான நாட்களை தந்தாய். ஏன் இவ்வளவு விரைவில் சென்றுவிட்டாய்? புயல் புரட்டிப்போட்ட ஓடமாய் கிடக்கிறேன். மீள்வேனா இல்லை வீழ்வேனா எனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. உன் நினைவுகள் என்னை விட்டு நொடியும் அகலாது. நீ என்னை எவ்வளவு வெறுத்தாலும். புரிந்துக்கொள்ள மறுத்தாலும். என்றாவது இந்தக் கடித்ததை நீ படிக்கக் கூடும். என்றாவது ஒரு நாள் நான் உன்மேல் கொண்டிருப்பது பவித்ரமான அன்பு எனத் தெரியவரும். அன்றைக்கு என்னைத் தொடர்பு கொள்ள முயல்வாய். நான் புண்ணியம் செய்திருப்பேனானால் உன் அன்பு மழையில் திளைக்கும் வாய்ப்பை இந்த வாழ்விலேயே பெறுவேன். இல்லையேல் உன்னைத் தாலாட்டும் தாயாய், தோள் தாங்கும் தோழியாய் ஏதோவொரு விதத்தில் உன்னை வந்தடையும் வரம் பெறுவேன் தவம் செய்து.
என் பொக்கிஷம் என நீ கொண்டாடிய ஈர விழிகள் இப்போதெல்லாம் எப்போதும் ஈரமாக...
கயல்..
August 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
திங்கள்கிழமையே சோகத்துல ஆரம்பிக்கறீங்களே :((
டைட்டில் நல்லாருக்கு
ம்..ம் :)))
வெட்கப்பட வைத்தாய். சிரிக்க வைத்தாய். அதை விட அதிகமாய் அழ வைக்கிறாய். அழகான காதலிற்கு ஆயுசு கம்மி போலும். காதலில் விட்டுக்கொடுத்தல் இருக்கவேண்டுமென்றாய். ஆனால் அது நான் மட்டுமே செய்ய வேண்டுமென நீ எதிர்பார்த்தது ஏன் எனப் புரியவில்லை.
...... அழகான வரிகள்! எத்தனை விஷயங்கள்.... இந்த வரிகளில்!
அழகான காதலிற்கு ஆயுசு கம்மி போலும். // ஏதேதோ பழைய நினைவுகளை கிளறிச் சென்றது இந்த வரி. இறுதிப்பகுதி கனமான, 'நீ என்னை என்ன செய்தாலும்..' என்பதான காதலின் வலியை பகிர்கிறது. காதலின் ஒவ்வொரு விஷயமும் ஆயிரம் தடவை பகிரப்பட்டாலும் பகிர்பவரின் எழுத்துத் திறன் அதை இன்னொரு மறக்கமுடியாத பகிர்வாக்குகிறது. இதையும் அவ்வகையில் சேர்க்கலாம்.
Awesome
மிக அருமை.
காதல் கடிதம் எழுதுவதில் வல்லவரோ நீங்கள்? :-)
ஒரே சோகமாக்கீது
//என் பொக்கிஷம் என நீ கொண்டாடிய ஈர விழிகள் இப்போதெல்லாம் எப்போதும் ஈரமாக...//
அழகான வரிகள்!
sogama irukku....
நன்றி ரகு.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி சித்ரா.
நன்றி ஆதி.
நன்றி ராஜி.
நன்றி உழவன்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி குமார்.
நீங்க எழுதியது அப்படியே என் கதை போலவே உள்ளது
கண்ணீர் வர வைத்தது உங்கள் எழுத்து
ரொம்ப நெருட வைக்கிறீங்களே :)
எதார்த்தமான வாழ்வின்
நடைமுறையை சொல்கிறது கவிதை.
இது இன்று நான்
படித்ததில் குறிப்பிடத்
தக்க பதிவு
அருமை! அருமையான பதிவுங்க..... வாழ்த்துக்கள்.
நன்றி நவீன்.
நன்றி விஜய்.
நன்றி தமிழ் யாளி.
நன்றி நித்திலம்.
மழைக்கு கரையும் மண் போல நான் முழுவதும் கரைந்தேன் -அருமையான வரிகள் -இந்த இடுகையைப் படித்து முடித்ததும் மனம் கனமாக இருந்தது.காதலின் வலி (மை)யை உணர முடிந்தது. அருமையான பதிவு
வார்த்தைகள் மிக அழகு...
உருகி உருவிச் செல்லும் வலி. ரொம்ப நல்லாருக்கு வித்யா.
மிகவும் நேகுழவைக்கும் வரிகள்..
பாராட்டுகள்..
இந்த வாழ்விலேயே அவள் விரும்பும் அன்பு கிடைக்க
வாழ்த்துக்கள்..
Post a Comment