பள்ளி இறுதிக் காலத்திலிருந்தே நகைகளின் மீதான ஆர்வம் போய்விட்டது. இன்றுவரை மருதாணியின் மீதான் க்ரேஸ் குறையவேயில்லை. மெஹெந்தியை விட மருதாணியே அழகாக இருக்கிறதென்பது என் கருத்து. முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும், லட்சக்கணக்கான டிசைன்களில் பலவித வண்ணங்களில் மெஹெந்தி போடப்பட்டாலும் விரல்களுக்கு தொப்பி போட்டது போல வைக்கப்படும் நம்மூர் ஸ்டைல் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.
மருதாணி வளர்ப்பது முதல் வைப்பது வரை பெரிய கலை. என் பாட்டிக்கு மருதாணி செடி வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு நல்லதில்லையென்ற நினைப்புண்டு. எனக்கும் அம்மாவிற்கும் நினைத்த நேரத்திற்கு மருதாணி வைத்துக்கொள்ள வீட்டில் செடியில்லன்னா எப்படி என்று தோன்றும். காஞ்சிபுரத்தில் நல்ல அடர்த்தியான மருதாணிச்செடி வளர்த்தோம். இலைகள் ரொம்ப திக்காக இருக்கும். மருதாணி இலை பறிப்பது நேரம் முழுங்கும் வேலை. நண்பர்களோடு கதையடித்துக்கொண்டே ஒவ்வொரு இலைகளாக பொறுமையாக பறிக்கலாம். ரொம்ப அவசரமென்றால் அப்படியே நீட்டக் கிளைகளை ஒடித்துக்கொண்டு போய் இலைகளை மட்டும் பின்னர் உருவிக்கொள்ளலாம். எப்படிப் பறித்தாலும் மருதாணி சீக்கிரமே துளிர்த்துவிடும் (வளர்க்கும் மண்ணைப் பொறுத்து).
சிலச் செடிகள் இலையை உருவிப் பறிக்கும்போதே கைகளில் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும். சிலது பறித்து அரைக்கும்போது வண்ணம் கொடுக்கும். சில இலைகள் என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்தாலும் அசரவே அசராது. இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஆரஞ்சிலே நின்று கடுப்பேற்றும். இன்று வரை எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்து, கிச்சன் சுத்தப்படுத்திய பின்னரே மருதாணி அரைப்பார்கள். காஞ்சிபுரம், வாலாஜா வீடுகளில் அம்மிக் கல் இருந்தது. கொஞ்சம் கொட்டைப் பாக்கு சேர்த்து அரைப்பார்கள். மருதாணி வைத்தால் சளி பிடிக்குமென்பவர்களுக்காக கொஞ்சம் யூக்லிப்டஸ் ஆயில் சேர்ப்பார்கள். மருதாணி கிடைக்காத இடங்களில்/அவசரத்திற்கு குங்குமம், மைதா இன்னும் ஏதோ வஸ்துவெல்லாம் சேர்த்து பசை மாதிரி ரெடி செய்வார்கள். ஆனால் அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மி. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அதே மாதிரி பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பெயிண்ட் வாசனைபோல் இருக்கும்.
அடுத்து மருதாணி வைக்கும் படலம் ஆரம்பமாகும். முதலில் வாண்டுகளுக்கு வைத்துவிட்டு பின்னர் பெரியவர்கள் வைத்துக்கொள்வார்கள். சின்ன மக்கில் தண்ணி எடுத்து வைச்சுப்பாங்க. முதலில் சுண்டு விரலிலிருந்து ஆரம்பித்து கட்டை விரலில் முடியும். சின்னதாய் உருண்டை உருட்டி கைகளில் வைத்து அழுத்தி அப்படியே முழு விரலையும் மூடிவிடுவார்கள். எனக்கு விரலின் கால் பாகம் வைப்பது புடிக்கும். அம்மா, பெரியம்மா, அக்காவிற்கெல்லாம், முக்கால்வாசி விரல்கள் மூடும்படி வைப்பார்கள். விரல்கள் முடித்த பின்னர் உள்ளங்கையில் ஒரு சிறிய வட்டம். காம்பஸ் வைத்து வரைந்தாற்போல் தத்ரூபமாக இருக்கும். பின்னர் அதைச் சுற்றி சின்ன பொட்டுகள் ஏழோ எட்டோ கைக்குத் தகுந்தாற்போல் முளைக்கும். அவ்வளவுதான்.
இனிமேதான் இருக்கு சாமர்த்தியமே. அதென்னவோ மருதாணி வச்சு முடிச்சப்புறம் தான் முதுகு அரிக்கும், மூக்கு அரிக்கும், தண்ணி தாகம் எடுக்கும், முடி கலைஞ்சு மூஞ்சில வந்து விழும், கண்ணுல தூசி விழும், இல்லாத இம்சையெல்லாம் க்யூ கட்டி நிற்கும். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் மருதாணி கலையாமல் பாதுகாப்பாய் தூங்கி பாதி இரவில் எழுப்பி/தூக்கத்திலேயே கைகளில் எலுமிச்சை சாறு கொஞ்சம் தடவி, காலையில் எழுந்தவுடன் கைகளில் இருக்கும் காய்ந்த கலவையை சுரண்டி எடுக்கும்போதே தெரிந்துவிடும் பத்திருக்கா இல்லையான்னு.
சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். என் அக்காக்கு கருப்பாகவே இருக்கும். பித்தம் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லி சொல்லியே நாலு நாளைக்கு காஃபியைக் கட் பண்ணிடுவாங்க பெரியம்மா. எனக்கு எப்பவுமே நல்ல சிவப்பாகவும் எப்போதாவது ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். காலேஜ் படிக்கும்போதெல்லாம் மருதாணியின் நிறத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் உண்டு. மருதாணி கலைச்சவுடனே கையக் கழுவக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு மணிநேரத்துக்கு தண்ணி படாம பாதுகாத்தா இன்னும் கொஞ்சம் கலர் கூடும். அப்புறம் கையக் கழுவும்போது தான் ஒரிஜினல் கலர் என்னன்னு தெரியும். அன்னிக்கு முழுக்க மருதாணியோட வாசம் மூக்கச் சுத்திக்கிட்டேயிருக்கும். மருதாணி வச்சு எடுத்தன்னிக்கு ப்ரெஷ்ஷா உறையூத்துன கெட்டித் தயிர சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா. ம்ம்ம்ம். சொர்க்கம் தான் போங்க. நல்ல தரமான மருதாணியின் கலர் குறைய எப்படியும் மூணு வாரமாகும். அதுவரைக்கும் அநாட்டிய பேரெலிகள் கூட சும்மா சும்மா அபிநயம் பிடிச்சு பார்த்துப்பாங்க:))
முன்னமெல்லாம் எங்கவீட்ல எதாவது விசேஷம்னாலே மருதாணிச் செடிதான் முதல் வெட்டு. கல்யாணம், தீபாவளி, பொங்கல்ன்னு இப்படி எதுக்கெடுத்தாலும் மருதாணி வச்சுப்போம். அப்புறம் செடி இல்லை, இலை கிடைக்கலன்னு ஆரம்பிச்சு வெறும் கல்யாணத்துக்கு மட்டுமே மருதாணி வைக்கிற நிலைமை வந்திடுச்சு. இந்த மாதத் துவக்கத்தில் மாமா பெண்ணின் கல்யாணம் நடந்தது. கடைசியாக என் வளைகாப்பிற்கு மருதாணி வைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு இப்போதான் வைத்துக்கொண்டேன். ஆசையாசையாய் இரண்டு கைகளிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொண்டேன். இப்போது தான் கலர் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் என் இரு கையையும் பிடித்துக்கொண்டு “அம்மாக்கு உவ்வா இக்கா. மந்து போடவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
20 comments:
அழகு வித்யா........மருதாணி என்க்கும் கூட ரொம்பப் பிடிக்கும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யாருக்கு இதயெல்லாம் ரசிப்பதற்கு நேரமிருக்கிறது? அழகு நிலையம் சென்று கலர் கலராக செயற்கை வண்ணங்களை கைகளில் தீட்டிக் கொண்டு........என்னமோ........வாழ்த்துக்கள்.
தலைப்பைப் பார்த்ததும் யாருக்கோ (கன்னத்தில்) கொடுத்துச் சிவந்த கைகள்ன்னு நினைச்சேன். எங்க வீட்டிலும் மருதாணி மரம் உண்டு. சிறு வயதில் மருதாணி வைத்துக்கொள்வதே ஒரு திருவிழா தான். இப்போ வீட்டில் மக்கள்ஸ் பெரும்பாலும் மெஹந்தி வைத்துக்கொள்வதில், அதுவும் பகலிலேயே படமாய் வரைந்து கை கால் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கழுவி எடுத்துக்கொள்வதில் பழைய மருதாணியின் த்ரில் போய்விட்டது. இந்தப் பதிவு படிக்கிறப்போ யாருக்கு நன்றாக சிவக்கிறது என்ற போட்டியும் (கருப்பானால் ஆட்டத்தில் இல்லை), காலை வரை உதிர்ந்துவிடாமல் இருந்தது என்பதும் (மருதாணி போட்ட அன்று இரவு தூங்கறதே ஒரு பெரிய கலை) நினைவலைகளாக வருகிறது, கூடவே மருதாணி வாசனையும்.
enge veetil maruthani sedi irruke...
இன்னிக்கு பக்கத்து வீட்டுக்கு போக வெச்சுட்டிங்களே. அவங்க வீட்டுலதான் மருதாணி மரம் இருக்கு. எங்க வீட்டுல இல்லை :)
மருதாணி வைக்கறதை விட பெரிய விஷயம் அன்னிக்கு நைட் தூங்கறதுதான். தலையணையில படக்கூடாது. சுவத்தில படக்கூடாதுன்னு 1008 கண்டிசன் போடற பாட்டி ஞாபகம் வர்றாங்க :)
கைகள் யாரோடது.?நல்லாப் பத்தியிருக்கே.
அச்சொ இந்த மருதாணி அருமையை நான் என்னன்னு சொல்லுவேன்.அதன் மேல் வெறிதான் எனக்கு. இப்பவும் எங்க வீட்டுக்கு மூணாம் வீட்டு மருதாணிச் செடி இலைகள் அதிகமாகும்போது எனக்குக் கண் உறுத்தும். எதிர்த்த வீட்டுத் தோட்டக்காரரிடம் சொல்லி பறித்துவந்து அலம்பி மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொண்டு ஒருவாரம் கெடாமல் கைகளில் கால்களில் மாற்றி மாற்றி வைத்துக் கொள்வேன். ஐப்பசிக்கு மருதாணி நன்றாகப் பத்தும். இதில் பகல் மருதாணி ராத்திரிமருதாணி என்றேல்லாம் வேறு சொல்வார்கள்.ஹ்ம்ம்.நல்ல கொசுவத்தி.
ம்ம்... சூபெர்
தலைக்கு மருதாணி போட ஆரம்பிச்சாச்சு... :))
வித்யா, செப்டம்பர் ஒன்று அன்னைக்கு நானும் மருதானி பதிவு எழுதி வச்சிருந்தேன்,அதுக்குள்ள ப்ளாக்கே காக்கா தூக்கிட்டு போயிடுச்சு... மருதாணியோட அழகு வேற எதுவும் வராது..இப்பக்கூட ஆகஸ்ட் 28 ஆம் தேதி வச்ச மருதானி இன்னும் லேசா இருக்கு :))))
நன்றி சங்கரி மேடம்.
நன்றி KVR (நான் பரம் சாதுங்க).
நன்றி அமுதா கிருஷ்ணா (ஸ்டமக் பர்னிங்).
நன்றி தாரணி பிரியா (மருதாணி வைக்கும்போது யூஸ் பண்ணவே தனியா தலையணையுறை வச்சிருப்பாங்க எங்க வீட்ல. அன்னிக்கு பாய்லதான் தூக்கம்).
நன்றி வல்லிசிம்ஹன் (அது நெட்லருந்து சுட்டது. இதைவிட எனக்கு நல்ல பத்திருந்தது இந்த தடவை).
நன்றி விதூஷ் (வயசாயிடுச்சுல்ல உங்களுக்கு).
நன்றி விஜி (அதானா. என்னடா விஜி ப்லாக் ஓப்பன் ஆகமாட்டேங்குதேன்னு பார்த்தேன்).
எங்க வீட்டுல பொம்பள பசங்களே கெடயாது. எங்கம்மாவுக்கு அதுல கொஞ்சம் மன வருத்தம். அஞ்சாவது படிக்கிற வரைக்கும் எனக்கு சடை பின்னி விடுவாங்க. பத்தாவது வரைக்கும் எனக்கு மருதாணி வெச்சி விடுவாங்க.
வித்யா, சிவந்த கைகள் பற்றி இன்னமும்: எக்கச்சக்க மிகுந்த கற்பனாவளம் கொண்டவர்; மென்மையான மனம் உடையவர்; கடவுள் போன்ற விஷய்ங்களில் நம்பிக்கை உண்டு; வீட்டுல ஒப்புகிட்ட மாப்பிள்ளையை கல்யாணம் செய்தவர். சரியா? (ரொம்ப பொதுவா இருக்கா? ஸாரி! அவ்வளவா வலது கை தெரியல..)
எனக்கும் மருதாணி வேற யாராவது அவங்களே வச்சுகிட்டா / வேற யாராவதுக்கு வச்சு விட்டா பிடிக்கும். எனக்கு இஷ்டப்பட்ட போது இருக்கணும், இஷ்டப் படாத போது அழிஞ்சுடணும்னு பாத்தா முடியல... அதுனால;-)))
கோபி ராமமூர்த்தி, உங்க ரகசியத்தை வேற யார்ட்டயும் சொல்லல:-)
சிறு வயசுல மருதாணி வச்ச ஞாபகம் லேசா இருக்கு..
Maruthani pathivu maruthaniyaip pola azhagu.
மருதாணி பற்றிய நினைவலைகள் அருமை! சுவையான சிறுகதை போல!
ஒரு சந்தோஷம்- என்னைப்போல மெஹந்தியைவிட மருதாணியைத்தான் அதிகம் நேசிப்பவர் நீங்கள் என்பது! மருதாணியின் வாசனைக்காக மனம் ஏங்குகிறது!!
நன்றி கோபி.
நன்றி கெக்கே பிக்குணி.
நன்றி உழவன்.
நன்றி குமார்.
நன்றி மனோ சாமிநாதன்.
Ellathayum vida.. Unga junior oda reaction than arumai !!
Well sister! You have to put Marudhani in one hand first and wait for 2hrs;then use the same method for another hand.
// பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன்//
அது அல்ட்டாவேதான். இங்கே உ.பி, மற்றும் பீகார் மாநில சகோதரிகளும் உபயோகிப்பாங்க, வீட்ல பூஜை மற்றும் கல்யாணம் வந்தா கால்களில் கண்டிப்பா இட்டுக்கணும்.வர்ற சொந்தக்காரங்களும் கண்டிப்பா சின்னவங்க் கையால இட்டுக்கணும்.. அது ஒரு சம்பிரதாயம் அவங்களுக்கு. இதை குங்குமம் மற்றும் சர்க்கரைக்கரைசலில் பாரம்பரிய முறைப்படி தயார்செஞ்சு வெச்சிருப்பாங்க..
மருதாணியைத்தான் இந்தியில் மெஹந்தின்னு சொல்றோம். ஆனாலும், கோனில் அடைச்சு வர்றதைவிட, பச்சையிலைகளை அரைச்சு வெச்சிக்கிட்டா அந்த வாசனையே அருமை.
realy its amazing... en vazhkaiyil nadanthathu polaver erukirathu.. ana maruthani vaikira aniku enga amma than satham uthuvanga.. athil erukum ananthamey anantham than ponga.......
Post a Comment