இரண்டு முறை கட் செய்தும் விடாமல் மூன்றாவது தடவையும் அம்மா போன் செய்யவும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பரத்தை தொடர சொல்லிவிட்டு கான்பரன்ஸ் ரூமிலிருந்து வெளியே வந்தேன். லைன் கிடைக்கவில்லை. கொஞ்சம் படபடப்பாகவும் அதிக எரிச்சலாகவும் இருந்தது. போன் கட் செய்தால் மீண்டும் தொடர்ந்து அழைத்தால் எமர்ஜென்சி என்பது எனக்கும் அம்மாவிற்கும் போடப்பட்ட ஒப்பந்தம். ஒரு தடவை ப்ரொடெக்ஷ்ன் டேட்டாவை சரிப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை தொடர்ந்து அடித்தாள். என்ன என அழைத்துக் கேட்டபோது 'சாயந்திரம் வர்றச்சே மறக்காம காபி பொடி வாங்கிண்டு வந்துடு. இன்னைக்கு செகண்ட் டோசுக்கு தான் இருக்கு' என்றவளை என்ன செய்வதென தெரியாமல் எனது நிலை விளக்கிப் போடப்பட்ட ஒப்பந்தம். எமர்ஜென்சி என்றால் மட்டும் திரும்ப கூப்பிடு என்று. உப்பு சப்பில்லாத விஷயங்கள் கூட எமர்ஜென்சி என்பாள். கொஞ்சம் கடிந்து கொண்டால் போதும். ஒப்பாரி ஆரம்பித்துவிடும். 'உங்களுக்கெல்லாம் நான் வேண்டாதவளாப் போய்ட்டேன். என்னை யாரும் மதிக்கமாட்டேங்கறேள்'. உங்கள் என்பது நான் அல்லது அப்பா. அல்லது இருவருமே. இந்தப் பாட்டுக்கு பயந்தே அவள் எது கேட்டாலும் மறுபேச்சின்றி செய்தோம். மார்கழி மகா உற்சவத்திற்கு அழைத்துச் செல்வதை விட மீட்டிங் முக்கியமா என கேட்பவளை என்ன சொல்வது? நாலைந்து முயற்சிக்குப் பிறகு லைனுக்கு வந்தாள்.
'என்னம்மா?'
'நீ சீக்கிரம் லீவு சொல்லிட்டி கிளம்பி வா.'
'கவர்மெண்ட் ஆபிசில்லமா இது. நினைக்கறச்சே கிளம்ப. முதல்ல என்னன்னு சொல்லு. உடம்புக்கு படுத்தறதா ஏதாவது?'
'நான் நன்னாதான் இருக்கேன். ரமணிம்மாஞ்சி தான் போய் சேர்ந்துட்டாராம். நீ கிளம்பி வா. எனக்கு அவாத்துக்கு தனியாப் போத்தெரியாது. சாயந்திரம் பாடி எடுக்கறதுக்குள்ள போகனும்.'
'விளையாடறியாம்மா. இங்க தலைக்கு மேல வேலை இருக்கு. என்னால வர முடியாது. அப்பாவ அழைச்சிண்டு போய்ட்டு வா.'
'அவர் டிசி மீட்டிங் முடியாதுன்னுட்டார். உன்ன கூட்டிண்டு போக சொன்னார்.'
'எனக்கும் இன்னிக்கு க்ளையண்ட் கால் இருக்குமா. இன்னைக்கு போகலன்னா என்ன? பத்துக்கு முன்னால ஒரு நாள் போய் விசாரிச்சிட்டு வரலாம்.'
'நீயும் முடியாதுங்கறே. நானென்ன பீச், பார்க்குன்னா கூட்டிண்டு போக சொல்றேன். என் அம்மாஞ்சி மூஞ்ச கடைசி தடவை பார்க்கனும்ங்கற ஆசை இருக்காதா எனக்கு?'
பாட்டு ஆரம்பித்துவிட்டது. அப்பா தப்பித்துவிட்டார். ’ஹாஃப்’ என்றவளை முறைத்த பரத்திடம் அடுத்த மாதம் நான் பார்த்துக்கொள்கிறேன் என பொய் சத்தியம் செய்து கிளம்பி வீட்டை அடைவதற்கு மணி இரண்டானது. அம்மா தயாராய் வாசலில் இருந்தாள்.
'மயிலாப்பூருக்கு ஆட்டோலயே போய்டலாமா?'
'மயிலாப்பூர் என்னத்துக்கு?'
'ரமணி மாமா ஆம் அங்கதானே இருக்கு. அவாத்துக்கு தானே பாடி கொண்டு வருவா? இல்லை மாமியாத்துக்கு போறதா?'
'அடியே. இறந்தது குண்டு ரமணி.'
'நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ்சம் வந்தாப்ல அத்தனை ரமணி. குண்டு ரமணி, சேப்பு ரமணி, கல்யாண ரமணின்னு ஒரே ரமணி மயமா இருக்கு. நல்ல வேளை நான் மயிலாப்பூருக்கு போன் பண்ணி ஆத்துக்கு வழி கேட்கலை. அசடு வழிஞ்சிருக்கனும்.'
'அருணுக்கு போன் பண்ணி அவா ஆம் எங்க இருக்குன்னு கேளு. அவன் தான் எனக்கு தகவல் சொன்னான்.'
அருண் என் பெரியம்மா பையன். மெடிக்கல் ஃபீல்டில் இருப்பதால் யாருக்காவது உடம்பு என்றால் கட்டாயம் உதவி வரும். அண்ணாவை அழைத்து வழி கேட்டதுக்கு 'மாம்பலத்துல தான் வீடு. அயோத்தியா மண்டபத்திற்கு எதுதாப்புலயே இருக்கு' என்றார். மாம்பலத்திலிருக்கும் முக்கால்வாசி பேர் சொல்வது தான். அயோத்தியா மண்டபத்திற்கு எதிர்ல தான் வீடு. எத்தனை வீடு தான் இருக்க முடியும் அயோத்தியா மண்டபத்திற்கெதிரவே? அயோத்தியா மண்டபம் போய் சேர்ந்து மறுபடியும் போன் செய்தோம். லைன்லயே இருன்னு சொல்லி 2 கி.மீ தொலைவிற்கு வழி சொன்னார். அந்தத் தெருவில் நுழைந்தபோதே ஷாமியானாவும், நீல்கமல் சேர்களும் ரமணி மாமா வீட்டை அடையாளம் சொன்னன. வாசலிலேயே அருணண்ணாவும் பாடை கட்டுபவனுக்கு இண்ஸ்டரக்ஷன் கொடுத்துக்கொண்டு இருந்தார். நீங்க வந்தத நான் கவனிச்சேன் என்பது போல் பார்த்தவர்களெல்லாம் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள். அம்மா உள்ளே செல்ல நான் அண்ணாவின் அருகிலேயே நின்றுவிட்டேன். அம்மா உள்ளே நுழைந்ததும் பெரிதாக அழுகை சத்தம் எழும்பி அடங்கியது. வாசலில் கொஞ்சம் மாமாக்கள் அங்கங்கே உட்கார்ந்து கொண்டு பேப்பரை நாலாய் எட்டாய் மடித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். "உள்ளே போலியா" என்றார் அண்ணா.
”ப்ச். போய் என்ன பண்றது. யாரு என்னன்னே தெரியாது. கடைசியா உங்க கல்யாணத்துச்சே பார்த்தது. என்ன ப்ராப்ளம்?”
“ஹார்ட் அட்டாக். மாஸிவ். ஏற்கனவே கொஞ்சம் ட்ரபிள் இருந்தது போல.”
“நீங்க எப்படி?”
“கான்ஃபரன்ஸ் விஷயமா டாக்டரப் பார்க்க போயிருந்தேன். சின்னவ என்ன பார்த்திருக்கா.”
“பெரியம்மா வரலையா?”
“பெங்களூர்ளன்னா இருக்கா. ப்ராப்ளமா இருக்கு. நாளன்னிக்கு கிளம்பி வர்றா. நீ எப்படி?”
“உங்க அருமை சித்தியால வந்தது. ஒரே ஒப்பாரி. சொல்லி சொல்லி காமிப்பா. அதான் நானே அழைச்சுண்டு வந்துட்டேன்.”
“ஜாப் எப்படி போயிண்ட்ருக்கு?”
“என்னத்த சொல்ல. பேர்தான் ப்ராஜெக்ட் லீடர். டெவலபர், டெஸ்டர்ன்னு நாலு பேருக்கான பில்லிங் குடுத்துக்கிட்டிருக்கேன். இப்போக் கூட க்ளையெண்ட் கால விட்டுட்டு தான் வந்திருக்கேன். ஆப்ரைசல்ல ரிஃப்ளெக்ட்டாகுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு எப்படி போறது?”
“அதே நாய் பொழப்பு தான். ஏய் சுதா அத்தை வர்றாடி”
“அய்யோ நான் உள்ளே போறேன் சாமி. அத்தை வாயாலேயே வறுத்தெடுத்துடுவா.”
ஹாலின் நடுவில் நெடுஞ்சான்கிடையாக ஐஸ் பாக்ஸில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் மாமா. போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை என்பது மார்பு வரை போர்த்தியிருந்த துணியின் மூலம் தெரிந்தது. நாலு நாள் முள்ளு தாடியுடன் கையை மார்பில் வைத்தாவறு கிடந்தார் மாமா. தலைமாட்டில் பீதாம்பரி பவுடரால் அங்கங்கே நான் பித்தளை வம்சம் தான் என காட்ட முயன்றுக்கொண்டிருந்த காமாட்சி விளக்கு நிதானமாய் எரிந்துக் கொண்டிருந்தது எந்த சலனமுமில்லாமல் ரமணி மாமாவைப் போல். ஐஸ் பாக்ஸின் மேல் ஒரு பெரிய ரோஜாப் பூ மாலை போடப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் பாக்ஸின் அருகே தலை குனிந்து நின்றேன். அதற்குள் அத்தை வந்து மாமியைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துருந்தாள். நான் எதிர்பக்கம் ஹாலின் மூலையில் அமர்ந்தேன். அம்மா மாமிக்கு ஆறுதலளிக்க வேண்டி அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் என்ன பண்ண என்ற கண்ணாலேயே கேட்டாள். நான் முறைத்துவிட்டு பார்வையை மாமி மேல் நகர்த்தினேன். இதற்குமேல் அழ திராணியில்லையென்பதுபோல் அரை மயக்கத்தில் இருந்தாள் சாரதா மாமி. ரமணி மாமாக்கு இரு பெண்கள். பெரியவளின் ஜாதகத்தை தையில் எடுத்துவிட்டதாய் அம்மா பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மாவின் தூரத்து உறவென்பதால் ரமணி மாமா குடும்பத்துடன் அந்தளவு பழக்கமில்லை. எப்போதாவது பெரியம்மா வீட்டு விசேஷங்களில் பார்த்துக்கொண்டு நன்னாருக்கியா? யாருன்னு தெரியறதா என்ற சம்பிரதாயக் கேள்விகளோடும் பரஸ்பரப் புன்னகை பரிமாற்றங்களோடும் நகர்ந்துவிடுவதோடு சரி. பெரியவளின் முகத்தை நினைவிலிருந்து தூசு தட்டி எடுத்துக்கொண்டிருந்தேன். பாக்ஸை சுத்தி பார்வையைச் சுழட்டியதில் மாமிக்கு எதிர்த்தாற்போல் இரு பெண்களும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சின்னவளுக்கு 13 வயதிருக்கும். பெரியவளுக்கு கிட்டத்தட்ட என் வயதுதான். பெயர் நினைவிலில்லை. பெரியவள் கன்னத்தில் கண்ணீர் கோடுகளாய் காய்ந்திருந்தது. மாமாவை வெறித்துப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள். அருணன்னாவின் கல்யாணத்தில் கடைசியாய் பார்த்தேன். கொஞ்சும் குரலில் நலங்கின் போது அவள் பாட்டு பாடியது ஞாபகத்துக்கு வந்தது. எழுந்துபோய் அவளருகில் அமர்ந்தேன். என் இருப்பை உணர்ந்தவளாய்
'நன்னாத்தான் இருந்தார். மைல்டா ஹார்ட்ல பிராப்ளம் இருந்தது. நத்திங் சீரியஸ்ன்னு தான் டாக்டர் சொல்லிருந்தார். நேற்றைக்கு தீடிர்ன்னு அட்டாக். மாஸிவ். போய்ட்டார்'.
எந்த உணர்ச்சியுமில்லாமல் அவள் சொல்லிமுடிக்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். அவளே தொடர்ந்தாள்.
'பயமாயிருக்கு. என்னப் பண்ணப்போறேன்னு தெரியல.'
'நீ இப்பதான் தைரியமா இருக்கனும். அம்மாக்கும் தங்கைக்கும் தெம்பு கொடுக்கனுமில்லையா' என்றேன். இதற்குமேல் என்ன பேச வேண்டுமெனத் தெரியவில்லை. அழலாமா என யோசித்தேன். இண்ஸ்டண்ட் அழுகை பழக்கமில்லாததால் முயற்சியைக் கைவிட்டேன். கடைசியாக அழுதது எப்போது என்ற கேள்வி எழுந்தது. சிறுமியாக இருந்தபோது பெரியப்பா, தாத்தா, சித்தப்பா என அடுத்தடுத்து பறிகொடுத்த குடும்பம். புதிதாக எழும்பிக் கொண்டிருந்த வீட்டில் அண்ணன்களோடு விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருந்தது. சென்ற வருடம் பாட்டி இறந்தபோது அழவில்லை. காட்டுக்குப் போய்விட்டு வீடு வந்து குளித்தவுடனே சாப்பிடாமல் கிளம்பி ஓடியதும் நினைவில் இருந்தது. துக்கமோ, வருத்தமோ இல்லாத மனநிலையில் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான உணர்ச்சியும் என்னில் இல்லை.
இதற்கிடையில் அவள் சித்தப்பா வந்து சேர, பாடியை எடுக்கும் வேலைகள் ஆரம்பமானது. மாமியால் முடியாததால் சாஸ்திரத்துக்கு பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்து தண்ணி கொண்டு வந்து கொட்டப்பட்டது. அண்ணாவும், சித்தப்பாவும் சேர்ந்து மாமாக்கு வேஷ்டி போர்த்தினார்கள். பாடையில் கிடத்த பாடியை தூக்கியபோது எழுந்த அழுகை அடர்த்தியான ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகையை மீறி அனைவரையும் தாக்கிற்று. பாடியை தூக்கும் நேரம் பெரியவள் அலற ஆரம்பித்தாள்.
'மெதுவா தூக்குங்கோ. கைய அழுந்தப் புடிக்காதீங்கோ. அவருக்கு கை வலி இருக்கு'
சட்டென திரும்பி என் பக்கம் பார்த்து
'என் கூட வர்றியா. நானும் காட்டுக்குப் போகனும். அப்பா ரொம்ப சூடு தாங்க மாட்டார். நான் வர்றதுக்குள்ள அம்மாக்கு என்ன பண்ணனுமோ பண்ணிடுங்க. அதெயெல்லாம் என்னை பார்க்க வச்சிடாதீங்கோ. அம்மாவ ரொம்ப படுத்தாதீங்க.'
டக்கென்று அவள் சித்தப்பா “என்ன புது பழக்கம். பொம்ணாட்டிகள் காட்டுக்கு வர்றது? எல்லாம் இங்கேயே இருங்கோ. நான் அண்ணாவை அனுப்சிட்டு வர்றேன்” என்றார்.
”என்னக் காலத்திலடா இருக்க சங்கரா? இப்பல்லாம் எல்லாருமேதான காட்டுக்குப் போறா. விடுடா. அவாளும் வரட்டும். அப்பாக்கு பெண்குழந்தேள் கொள்ளிப் போடறதொன்னும் மாபாதம் கிடையாது” என்றாள் கூட்டத்திலிருந்து ஒரு வயதான மாமி. பேச்சுகள், எதிர்பேச்சுகள் என ஹாலில் சிறு குழப்பம் ஆரம்பமாயிற்று. வாத்தியார் நாழியாயிடுத்து என்றார். கடைசியில் வழக்கம்போலவே ஆண்கள் மட்டும் காட்டுக்குப் போகலாம் என முடிவெடுக்கப்பட்டது. மாமியாத்திலும் பயங்கரமான மடி ஆச்சாரம் என கேள்விப்பட்டேன்.
ஐந்து நிமிடங்களில் மாமாவைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். பெரியவள் விடாமல் பேசினாள். அவள் நிலையிலில்லை என உணர்ந்து அவளை நானும் அண்ணாவும் வெளியே அழைத்துக்கொண்டு போனோம்.
'எல்லாம் முடிஞ்சிடுத்துல்ல. இனிமே என்ன பண்றது. எல்லாத்தையும் நாந்தான் பார்க்கனும். எவ்வளவு சேர்த்திருக்காருன்னு கூட தெரியாது. அந்தளவுக்கு பார்த்துண்டார். ஈபி கார்ட் முதற்கொண்டு எங்கிருக்குன்னு அவருக்குத் தான் தெரியும். கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்ல இருக்கு. இனிமே புதுசா முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். இனி நான் ராஜகுமாரி இல்ல. வெறும் சேவகி. தங்கையப் படிக்க வைக்கனும். அம்மாவ கடைசி வரைக்கும் குறையில்லாம வச்சிக்கனும். எப்படி? தெரியல. ஏன் இப்படி திடீர்ன்னு போய்ட்டார்' என தேம்பினாள்.
'அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நாங்க எல்லாம் இருக்கோம். தைரியமா இருடி' என்றார் அண்ணா.
'எத்தனை நாளைக்குண்ணா இருப்பேள். உங்களுக்குன்னு வாழ்க்கையிருக்குல்ல?'
என் கைய அழுந்தப் பற்றிக்கொண்டவள் 'எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடு ஸ்வேதா. வேற எதுவும் வேணாம். யாரும் வேணாம். நான் கடைசி வரை இப்படியே இருந்திடறேன் அம்மாக்குத் துணையா.'
ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது. நீச்சல் தெரியாமல் கடலைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது கொடுமைதானே. ஒரே நிமிடம் இவள் நிலையில் என்னை வைத்துப் பார்த்தேன். உடம்பு அதிர்ச்சியில் உதறியது. எல்லாம் முடித்து அம்மா வந்து காதைக் கடித்தாள். 'போய்ட்டு வர்றேன்னு அச்சு பிச்சுன்னு உளறாதே. அப்படியே வா'
செருப்பை மாட்டியவள், ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன். அவள் கையைப் பற்றி அழுத்தினேன். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. கிளம்பிவிட்டேன். ஆட்டோ ஏறியவுடன் அழ ஆரம்பித்த என்னை அம்மா விநோதமாக பார்த்தாள்.
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
அருமையான கதை. நல்லா எழுதி இருக்கீங்க
நல்லா இருக்கு வித்யா. .ரொம்ப பெருசா இருக்கு...
ப்ளாகர் போஸ்ட் கன்டன்ட் பாக்ஸ்'ஸின் விட்த் பெருசு பண்ண முடியுமான்னு பாருங்க... என்னோடதில் அப்படி செய்தேன்..
Nice story...keep writing
அருமையா இருக்கு வித்யா!
முதல் பாரா முடிக்கும் பொது நகைச்சுவை கதையா இருக்கும்னு நினைச்சேன், முடிக்கும் பொது ஒரு சின்ன கனம் மனசுல ஏறிக்கிடுச்சு..
நல்லா எழுதி இருக்கீங்க வித்யா....hats off!!! இதே கதைய ரெண்டாக பிரிச்சு இன்னும் நெறையா விவரணைகள் சேர்த்து எழுதி இருந்தா ரம்யமா இருந்திருக்கும்...[Scribblings ரொம்ப நாளா படிக்கிறேன், ஆனால் இது தான் முதல் பின்னூட்டம்.]
நட்புடன்,
அய்யனார்.
super. ...... don't have any other words. :)
ரொம்ப நல்லா இருக்கு. கொஞ்சம் வேற போல பழசை ஞாபகம் படுத்துச்சு :). இது போலவும் நிறைய எழுதுங்க
//super. ...... don't have any other words//
மத்த வார்த்தைகளும் மௌன விரதம் இருக்கோ என்னமோ!!
கொஞ்சம் நெகிழ்ச்சியாகவே இருக்கு. கொஞ்சம் நகைச்சுவையா ஆரம்பித்தாலும் நெருடலும் முடித்திருக்கிறீர்கள்.
ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன். அவள் கையைப் பற்றி அழுத்தினேன். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. கிளம்பிவிட்டேன்.
.....Super! மனதை நெகிழ வைத்தது.
NICE..கொஞ்சம் நீளமாய் போகுது..
அருமை வித்யா
//ப்ளாகர் போஸ்ட் கன்டன்ட் பாக்ஸ்'ஸின் விட்த் பெருசு பண்ண முடியுமான்னு பாருங்க... //
+100
கடைசி வரிகள் கண்களை கலங்க வைத்துவிட்டன.
கதை அருமை..
உங்கள் பதிவுகள் அனைத்தும் காமெடியாக இருந்தாலும் உங்கள் கதைகள் மட்டும் கொஞ்சம் வலியுடன் நெகிழ வைக்கிறது.
அருமையான கதை வித்யா. வாழ்த்துக்கள்.
நடை நன்றாக உள்ளது.
இறுதியில் கலங்க வைத்துவிட்டீர்கள்.
நன்றி கோபி.
நன்றி கவிதா.
நன்றி குணா.
நன்றி பாலாஜி.
நன்றி அய்யனார்.
நன்றி விதூஷ் (கலாய்ச்சீங்??)
நன்றி தாரணி.
நன்றி எறும்பு.
நன்றி விஜய்.
நன்றி சித்ரா.
நன்றி அமுதாக்கா.
நன்றி LK.
நன்றி ராதாகிருஷ்ணன்.
நன்றி நவீன்குமார்.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி மணிநரேன்.
//நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ்சம் வந்தாப்ல அத்தனை ரமணி. குண்டு ரமணி, சேப்பு ரமணி, கல்யாண ரமணின்னு ஒரே ரமணி மயமா இருக்கு. நல்ல வேளை நான் மயிலாப்பூருக்கு போன் பண்ணி ஆத்துக்கு வழி கேட்கலை. அசடு வழிஞ்சிருக்கனும்.//
அட்டகாசம். அப்படியே ஒரு துக்கத்துக்கு போயிட்டு வந்தா மாதிரி இருந்தது. எக்சலேன்ட் நரேஷன்.
ஹேய், சூப்பர் நடை வித்யா. செமையா போச்சு. இலகுவா ஆரம்பிச்சு அதே இலகுவோட பயணிச்சு அழுத்தமா முடிஞ்சது. க்ரேட். இதே மாதிரி நல்ல ரைட்டிங் அதிகம் ட்ரை பண்ணுங்க. ரொம்ப நல்லாருக்கு வித்யா.
கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் கதைத் தனமாக(?) இருந்ததாகப்பட்டது எனக்கு. மற்றபடி துவக்கத்திலிருந்து இறுதிபாகம் தொடும் வரை மிக அழகாக கதை சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். இயல்பு வாழ்க்கையை அப்படியே பதிந்திருக்கிறீர்கள்.
ஒரு விசயம் சொல்ல மிஸ் பண்ணிட்டேன்.
/ஷாமியானாவும், நீல்கமல் சேர்களும் ரமணி மாமா வீட்டை அடையாளம் சொன்னன//
இந்த 'சொன்னன' என்ற வார்த்தையை எங்கேயும் படித்தமாதிரியே இல்லையேன்னு கொஞ்சம் 'பிளாங்' ஆகி முழித்துக்கொண்டிருந்தேன். என்ன விவரம்? இப்போ தோன்றுகிறது, 'சொல்லின' என்று வரவேண்டுமோ.? :-)))))
நன்றி RVS.
நன்றி விக்கி.
நன்றி ஆதி (நாங்களும் புதுசா வார்த்தைக் கண்டுபிடிப்போமே:))) அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன்).
அருமையா எழுதியிருக்கீங்க வித்யா.. பாராட்டுகள்.
எத்தனை ரமணி, அயோத்யா மண்டபத்திற்கு எதிரே வீடு போன்றவை சிரிக்க வைத்தாலும் போக போக மனது கனத்தது. இதனை சற்று மெருகூற்றி மறு படி எழுதி கல்கி அல்லது வேறு பத்திரிக்கைக்கு அனுப்புங்கள். அல்லது புதிதாய் எழுதும் கதையையாவது அனுப்புங்கள். கதை நன்றாக வருகிறது.
மிகவும் யதார்தமாக உள்ளது ,கண் முன்னாள் காட்சியாக தெரிகிறது .வாழ்த்துக்கள்
படித்து முடித்ததும் மனசு கனத்தது வித்யா... :( நல்ல நடை...
Idhu unmaya nadandhadhu madhiri irundhadhu. Kadaisi varigal padikkum bodhu azhudhuten. Romba touching. Ippo dhaan unga blog padikka arambichi iruken. Reading all of them together. Very nice narration. Keep up the good work!
Neriya vishayam ungala therincha madhiri irukku - naanum walajala irundhu iruken. VITla padichen , CTSla campus placement! But Whites road branch and I should be a couple of years senior to you as well.
- Vaneetha
Idhu unmaya nadandhadhu madhiri irundhadhu. Kadaisi varigal padikkum bodhu azhudhuten. Romba touching. Ippo dhaan unga blog padikka arambichi iruken. Reading all of them together. Very nice narration. Keep up the good work!
Neriya vishayam ungala therincha madhiri irukku - naanum walajala irundhu iruken. VITla padichen , CTSla campus placement! But Whites road branch and I should be a couple of years senior to you as well.
- Vaneetha
ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது. நீச்சல் தெரியாமல் கடலைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது கொடுமைதானே. ஒரே நிமிடம் இவள் நிலையில் என்னை வைத்துப் பார்த்தேன். உடம்பு அதிர்ச்சியில் உதறியது.
வலியின் மொழி"புரிந்தது!!
Post a Comment