அடையாறின் இருதயப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான பங்களா, கம்பெனியின் 60% பங்குகள் என் பெயரில், எத்தனை கோடிகள் எனத் தெரியாத பேங்க் பேலன்ஸ், வைரம் பிரதானமாய் தங்கம் நிறைய என எக்கச்சக்கமான நகைகள், பொழுதுக்கு ஒரு கார், கட்டற்ற சுதந்திரம். இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற இருபத்தியோரு வயது பெண்ணுக்கு கவலை ஏதேனும் இருப்பது சாத்தியமா? என் விஷயத்தில் சாத்தியமாகிறது. மேற்கொண்டு என் கவலைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் என்னைப் பற்றி கொஞ்சம் இல்லை கொஞ்சம் நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.
நான் மேகா...
இரண்டு வாரங்களுக்கு முன் நான் மேகா. என் பிறப்பைப் பற்றி அறிந்திடாத மேகா.
எக்கச்சக்கமாய் வெளிநாட்டு நன்கொடைகளைப் பார்க்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தான் நான் வளர்ந்தேன். அல்லது வளர்க்கப்பட்டேன். நான் அங்கு எப்படி வந்தேன், யார் கொண்டு வந்து போட்டார்கள், என்ன வயதில் அங்கு சேர்ந்தேன் என எந்த ரெக்கார்டும் இல்லை. ஐந்து வயதிலேயே எனக்கு வாயும், அறிவும் ஜாஸ்தி என ஹோம் சிஸ்டர் திட்டுவதை கேட்டு வளர்ந்தேன். கைகளில் கிழிந்த பஃப் வைத்த சட்டை. என்னுடனே மேல்நோக்கி வளரும் பாவாடை, யாராவது பிறந்தநாள் என வந்தால் அவரை வாழ்த்திப் பாடிவிட்டு, அவர் போடப்போகும் சோற்றிற்காக கண் விரிந்து, வாய் பிளந்து காத்திருப்பது, தீபாவளியன்று அபூர்வமாய் கிடைக்கப் பெறும் மத்தாப்பு சீக்கிரமே எரிந்துவிடக் கூடாது என கவலைப்பட்டுக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கு அறவே பிடிக்கவில்லை.
நான் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு அந்த சிறையிலிருந்து விடுதலை கிருஷ்ணன்-ராதா தம்பதியினர் மூலம் கிடைத்தது. அதாவது நான் அப்பா அம்மா என அழைக்கவேண்டிய, அதற்கு அஃபிஷியலாய் தகுதிப் பெற்றவர்கள். சுருக்கமாய் என்னை தத்தெடுத்தவர்கள். மேகா என பெயர் சூட்டியவர்கள். அதுவரை குட்டியாக இருந்த நான் மேகாவாக அவதரித்தேன். அவர்களின் அதீத அன்பினால் நான் ஹோம் வாழ்க்கையை முற்றிலுமாக மறந்து தேவலோக வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில் இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் கை நழுவலாம் என்பதால் படிப்பில் ரொம்பவே கான்சண்ட்ரேட் செய்தேன். இதோ பைனல் இயர் MBA. இன்னும் இரண்டு மாதங்களில் தலையில் வைத்திருக்கும் தொப்பியை தூக்கிப்போடுவது போல் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்ததும் கம்பெனியில் ட்ரெய்னிங். பின்னர் போர்ட் கூடி முடிசூடல் என கிருஷ் சத்தியம் பண்ணிருக்கார்.
கிருஷ் அப்படித்தான் அப்பாவை கூப்பிடுகிறேன். இவர்களிடம் வந்து சேர்ந்த 13 வருடங்களில் என் வேர்களைத் தேடியலையும் வாய்ப்பை எனக்குத் தரவில்லை. என் பேச்சு தான் வேதம். என் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே பிறவியெடுத்திருப்பதாய் நடந்துகொள்ளும் கிருஷ். மகள் என்றில்லாமல் ஒரு தோழியைப் போல நடத்துபவர். வெரி இண்டலிஜண்ட். வெரி வெரி பிராக்டிகல். அவரைப் பார்த்து வளர்ந்த நானும் அப்படியே. நான் செத்துப்போ என்றால் மறுகணம் செய்யத் தயாராய் இருக்கும் ராதா. இந்த அம்மாக்கள் அல்லது முக்கால்வாசி பெண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என எனக்குப் பிடிபடவில்லை. முணுக்கென்றால் ஒப்பாரி. இன்னதுக்குத்தானென்றில்லை. ஆவுன்னா பெண்ணின் வலி என ஆரம்பித்து நீளும் சலிப்பேற்றும் ஓப்பாரி. வுமன்ஹுட்டை செலிபிரேட் செய்யத் தெரியாதவர்கள். ஆண்கள் நம் வலியை உணரவேண்டும் என எப்படி ஏதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. சயின்ஸ். ஆண்களால் பிள்ளைப் பெற முடியுமென்றால் பெற்றுவிட்டு போகிறார்கள். முடியாது. நம்மால் எப்படி ஆண்களின் பிரச்சனையை அணுக முடியாதோ அதேபோல் அவர்களால் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் முடியாது. இதனாலேயே நான் ராதாவிடம் அதிகம் பேசுவது கிடையாது. ராதாவோ பொம்பளப் பொண்ணு அப்பா மேல பாசமா இருக்குது என்ற அபத்தமான விதியை ஃபாலோ செய்கிறது.
சிறகடித்து வானத்தில் பறந்து கொண்டிருந்த என்னை இரண்டு வாரங்களுக்கு முன் தரையில் நடக்க வைத்த சம்பவம் அரங்கேறியது. ஈசிஆரில் ஒரு லேண்ட் டீலிங்கை முடித்துவிட்டு திருவான்மியூர் சிக்னலில் வெயிட் செய்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து எப்படி வந்தான் எனத் தெரியாமல் ஒருவன் திடீரென காரின் ஜன்னலை படபடவென அடித்தான். ஒரு செகண்ட் திகைத்துவிட்டு மறுகணம் சுதாரித்துக் கொண்டேன். மாதங்களாய் பிளேடை பார்க்காத தாடி, எண்ணைய் காணாத கேசத்தைத் தவிர வேறெதுவும் அவனை பிச்சைக்காரனாய் எடை போடுவதை தடுத்தது. கொஞ்சம் தயக்கத்துடன் டாஷ்போர்டிலிருந்து சில நாணயங்களை எடுத்துக் கொடுக்க கொஞ்சமாய் கார் கண்ணாடியை இறக்கினேன். அதுவரை என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் "விஜயா விஜயா உன் அம்மாவ அப்படியே உரிச்சு வச்சிருக்க" என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்து எஞ்ஜினை உயிர்ப்பித்தேன். "உன் அம்மா உன்னை ஹோம் வாசலில் போட்டபோது நானும் கூட இருந்தேன்" மூடிக்கொண்டிருந்த ஜன்னல் கண்ணாடி தாண்டி அவன் குரல் தேய்ந்து வந்து விழுந்தது. உடம்பில் சுர்ரென்று ஏதோ ஒரு உணர்வு பாய்ந்தது.
ஹன்னா மௌண்டானாவில் மனம் லயிக்கவில்லை. ராதா செய்த குணுக்கு தொண்டை தாண்டி கீழே இறங்கமாட்டேன் என ஸ்ட்ரைக் செய்தது. சுஜாதாவின் பெண் இயந்திரம் மக்கர் செய்தது. மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஏதோ ஒரு பைத்தியக்காரன்/பிச்சைக்காரனைப் போய் சிக்னல் சிக்னலாய் தேடுவது ரொம்ப அப்ஸர்டாகப்பட்டது. ஆனாலும் ஒரு குறுகுறுப்பு, நிஜமாய் நான் யாரென்ற தேடல், என் வேர்களின் ரகசியமறியும் ஆசையும் கொஞ்சம் எழுந்தது.
விஜயா என்றானே. என்னைப் பெற்றவள் வைத்த பெயராய் இருக்குமோ? ரொம்ப ஓல்ட் ஃபேஷன் பெயர். இந்த சம்பவத்தை மறக்கவும் முடியவில்லை.
கிருஷ் ரிலாக்ஸ்டாக இருந்த சாயந்திரம் அவர் முன் போய் அமர்ந்தேன். சுருக்கமாக நடந்தவற்றை சொல்லி முடித்தேன். சின்னதாக ஸ்மைல் பண்ணியவர் "
லுக் மேகா. இது உன் லைஃப். இதில் டெசிஷன் எடுக்க எனக்கு உரிமையில்லை. Probably ஐ கேன் அட்வைஸ் யூ. அதை ஃபாலோ செய்வதும் உன் இஷ்டம். இத்தனை வருடம் கழித்து அந்த நபர் உன்னை ஏன் சந்திக்கனும்? உன்னிடமிருக்கும் பணத்திற்காக கூட இருக்கலாமல்லவா? ஸோ திங்க் அண்ட் ஆக்ட் வைஸ்லி. த பால் இஸ் இன் யுவர் கோர்ட்" என கன்னத்தைத் தட்டி விட்டு போனார்.
ஹி இஸ் ரைட். நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? இத்தனை வருடமாய் இல்லாமல் போனவளை இனிமேல் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன?ஒருவேளை அவன் சொல்வது நிஜமாக இருந்தாலும் கண்டிப்பாக நான் என்னைப் பெற்ற தாயை கொண்டாடப் போவதில்லை. என்னைத் தூக்கி போட எப்படி மனது வந்தது என நாடகத்தனமான கேள்விகளையும் கேக்கப்போவதில்லை. நோ யூஸ். லீவ் த கிராப் ஹியர் என முடிவெடுத்தேன். ஆனாலும் மனித மனம் குரங்கு என்பதை நிருபித்தது. அந்தாளைப் பார்ப்பதால் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. என்னைப் பெற்றவள் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதிலும் நோ ஹார்ம். அவனைப் பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். சென்ற ஞாயிற்றுகிழமை திருவான்மியூர் சிக்னலுக்கு அருகே பாம்பே டயிங் ஷோரூம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு நடந்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்தேன். எங்கிருந்து எப்போது வேண்டுமென்றாலும் அவன் வரலாம் என்ற எண்ணத்தில். ஒருவேளை அவன் பணத்துக்காக என்னை கடத்திவிட்டால்? விளைவுகள் பக்கென்றிருந்தது. யோசனையில் நடந்துகொண்டே இடதுபக்கம் பார்த்தேன்.
வலது தோளை ஒரு கை அழுந்தப் பற்றியது.
திடுக்கிட்டு திரும்பினேன்.
பசிக்குது ஸ்வேதா என்றார். இன்னும் 10 பக்கம் தான் பாக்கி. ஹூம்ம்ம். புக்மார்க் சொருகிவிட்டு சமையல்கட்டில் நுழைந்தேன் என்னவரின் உணவிற்காக.
நான் ஸ்வேதா...