சில மனிதர்கள் நம் வாழ்வில் நமக்குத் தெரியாமலேயே முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவனின்றி/அவளின்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கேற்ப பால் போடுபவர், பேப்பர்காரர், வீட்டு வேலை செய்பவர் என நிறைய பேரின் துணையோடு தான் நாம் ஒவ்வொரு நாளையும் ஓட்டுகின்றோம். மேற்படி லிஸ்டில் ஒருவர் வரவில்லையென்றாலும் கொஞ்சமாவது டென்ஷன் ஏற்படும். நம் வீட்டையும் தாண்டி வெளியிலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு உதவுபவர்கள் நிறைய. அப்படிப்பட்ட மனிதர்களுடனான கலந்துரையாடலே இப்பதிவு(கள்).
தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரம் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தபோது ஆட்டோ ஓட்டுனர்களோடு பேசிய உரையாடல்களிவை. பேசிய பின் பதிவுலகம் பற்றி சொல்லி உங்கள் கருத்தை பதியலாமா என கேட்டதற்கு பெயர் போட வேண்டாமென கேட்டுக்கொண்டதால் போடவில்லை. இரு ஓட்டுனர்களின் (அண்ணா நகர் ஸ்டாண்டிலிருந்து ஒருவர், எக்மோர் ரயில் நிலைய ரன்னிங் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்) கருத்து.
(பேட்டி போலில்லாமல் சும்மா பேசிக்கொண்டிருந்ததைப் பதிந்திருப்பதால் கேள்விகள் அங்கங்கே எகிறி குதித்து ஓடும். கண்டுக்காதீங்க).
எந்த சீசன்ல ஆட்டோ ஓட்றது கஷ்டம்? வெயிலா? மழையா? ரெண்டுமே கஷ்டம் தான். வெயில் காலத்துல அனல் காத்து ரொம்ப அடிக்கும். ரொம்ப நேரம் தொடர்ந்து ஓட்ட முடியாது. மழைக்காலம் தான் ரொம்ப கஷ்டம்மா. ஆட்டோக்கு நிறைய்ய செலவு வைக்கும். பள்ளம் மேடு தெரியாது. ஆட்டோக்குள்ள தண்ணி வந்துடும்.
ஒரு பிஃக்சட் ரேட்டுன்னு இல்லாம இஷ்டத்துக்கு வாங்கறீங்களே ஏன்? உதாரணத்துக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து அண்ணாநகர் மேற்கு வர 60, 70, 80 வாங்கறீங்க. ஏன் இப்படி?ரேட்டு ஒவ்வொரு ஸ்டாண்ட்க்கும் மாறும். கோயேம்பேடு ஸ்டாண்ட்ல 80 ரூபா வாங்குவாங்க. நாங்க (அண்ணாநகர் ஸ்டாண்ட்) 70 ரூவா வாங்குவோம்.
ஒரு தடவை ஒரு ட்ரைவர் 40 ரூபாய் தான் வாங்கினார். எப்படி?
அது ரிடர்ன் ஆட்டோவா இருக்கும். ரிடர்ன் ஆட்டோ எப்பவுமே குடுக்கற காசுக்கு வருவோம். இப்ப உங்கள வேளச்சேரில இறக்கிவிட்டு ரிடர்ன் எம்ப்டியா வந்தா பெட்ரோல் வேஸ்டாகும். அதுக்கு 150 ரூபா குடுக்கறேன்னு சொன்னாலும் சவாரி ஏத்திப்போம். காலியா வர்றதுக்கு ஏதோ கொஞ்சமாவது காசு வருதுல்ல. எங்களுக்கு அப்போ நினைப்புக்கு இருக்கறதெல்லாம் ஸ்டாண்ட்க்கு ரிடர்ன் ஆவும்போது காலியா வரக்கூடாது. அவ்வளவுதான்.
ஆட்டோல மீட்டர் போடமாட்டேங்கறீங்களே ஏன்?மீட்டர் கட்டுபடியாகாது. ஒரு பேச்சுக்கு வச்சுப்போம். இங்க இருந்து (அண்ணாநகர்) வேளச்சேரி போக மீட்டர் போட்டா 120 ரூபாய்க்குள்ள ஆகும். கிட்டத்தட்ட 25 கி.மீ தூரம். பெட்ரோல் முதற்கொண்டு கணக்குப் போட்டா கட்டுபடியாகாது. அதனால வாங்கறது 300 ரூபா.
அப்போ பெட்ரோல் விலை, ஆட்டோக்கான மெயிண்டனன்ஸ், உங்களுக்கு சார்ஜ்ன்னு சேர்த்து ஒரு நியாயமான விலைக்கு மீட்டர் பிஃக்ஸ் பண்ணலாமே? அதெல்லாம் வேலைக்காகதுங்க. மீட்டரில்லாம இருக்கிறதான் முக்காவாசி பேர் விரும்புறாங்க. ஏறும்போதே இந்த ரேட்டுன்னு தெரிஞ்சிக்கிறது சேஃப் தானுங்களே. மீட்டர் போட்டா இறங்கும்போது மீட்டர் காட்ற ரேட்டு கைல இல்லன்னா கஷ்டம். (எப்படியெல்லாம் சப்பக்கட்டு கட்றாங்க). ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ப்ரீபெய்ட் ஆட்டோ சிஸ்டம்கூட சரியா ஒர்க் அவுட ஆகலயே. கஸ்டமருங்க கம்ப்ளையெண்ட் நிறைய வருதே.
அதுக்கும் நீங்கதானே காரணம். இறக்கிவிடும்போது எக்ஸ்ட்ரா கொடுங்கன்னு முரண்டு பண்றீங்களே.கஸ்டமருங்க மேல தான் மேடம் மிஸ்டேக். சரியான அட்ரஸ் சொல்லாம ஜெனரலா சொல்லவேண்டியது. ஒருதடவ மலர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலன்னு சொல்லி ஏறுனவங்க இறங்கினது சாந்தோம்ல. எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?
ஒரு நாளைக்கு எவ்ளோ கலெக்ஷன் ஆகும்?ஓட்றதப் பொறுத்தும்மா. ஆட்டோ வாடகை, பெட்ரோல் செலவு போக ஒரு நாளைக்கு 500 ரூபா வர்ற வரைக்கும் ஓட்டுவோம். சில சமயம் 1000 ரூபா இருந்தாலும் பத்தாது. தேவைக்கேத்த மாதிரி ஓட்டிப்போம்.
ஆட்டோ வாடகை எவ்ளோ ஆகும்?சேட்டுங்க வாரக்கணக்கில வாங்குவாங்க. சவாரி வந்தாலும், வரலைன்னாலும் தினப்படிக்கு 200 ரூவா சேட்டுக்கு கொடுக்கனும். சில பேர் தின வாடகைக்கு வண்டி உடுவாங்க. என்னுது சொந்த வண்டி.
எவ்ளோ வருஷமா ஆட்டோ ஓட்றீங்க?10 வருஷமா ஓட்றேன். இந்த வண்டி 2 வருஷத்துக்கு முன்னால தான் வாங்கினேன்.
அப்ப இருந்ததுக்கும் இப்பத்தைக்கும் என்ன வித்தியாசம்?ட்ராபிக் தாம்மா. அப்போ இந்த அளவுக்கு வண்டிங்க கிடையாது. இப்ப பாருங்க பார்க் பண்ண இடமில்லாட்டியும் பரவால்லன்னு எல்லாரும் கார் வச்சிருக்க்காங்க. ஒரு இலட்ச ரூபாய்க்கே புது கார் கிடைக்குது. ஆட்டோ விலை 2 லட்சம்.
எவ்ளோ வண்டி வந்தாலும், அதுக்கு சரிசமமா ஆட்டோவும் ஓடுதே.எல்லாமே பழைய வண்டிங்க. இப்பல்லாம் யாரும் புதுசா வண்டி எடுக்கறதுல்ல. இந்தா இப்ப கவர்மெண்ட்ல 200 ஆட்டோக்கு பர்மிட் குடுத்திருக்காங்க. ஆனா 80,000 வெட்டினாதான் பர்மிட் கைக்கு வரும். அவ்ளோ செலவு பண்ணி ஆட்டோ எடுக்கறது வேஸ்ட். இந்த நெரிசல்ல ஓட்றதுக்குள்ள ஒரு வழியாவுது.
என்னங்க நீங்க. சிட்டி ட்ராபிக்கே ஆட்டோன்னா அலறுது? ஓவர் ஸ்பீட். அது ஏன்? சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்றதுங்கறது எவ்ளோ பேமஸ் டயலாக்.எல்லாரும் இப்படியே சொல்றீங்களே? நாங்க என்ன கவர்மெண்ட் உத்யோகமா பார்க்கிறோம். அடுத்தடுத்து சவாரி பார்த்தாதான் பிழைப்பு ஓடும். நாங்களும் எப்பப்பாரா அப்படி ஓட்றோம்? கஸ்டமருங்க சீக்கிரம் போங்கன்னு சொன்னாங்கன்னா நாங்க போய்த்தானே ஆகனும்?
சென்னைல எப்பப் போணாலும் சவாரி கிடைக்கிற இடம்?தி.நகர்.
ஏண்டா இங்க சவாரிக்கு வந்தோம்ன்னு தோணற இடம்?பீக் அவர்ல நூறடி சாலை முழு ஸ்ட்ரெட்ச், அடையார் ஏரியா. மழைக்காலத்துல மடிப்பாக்கம், வேளச்சேரி, நார்த் மெட்ராஸ் ஏரியால கொஞ்சம் இடம்.
ஏன் ஆட்டோ ஓட்ட வந்தோமோன்னு எப்பவாச்சு தோணிருக்கா.அப்பப்ப போலீஸ் மடக்கும்போது தோணுங்க. ஆனா அதைத்தாண்டி இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.
பி.கு : இந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமே தனிநபர் கருத்துகள் தான். ஜெனரலைஸ்ட் அல்ல.