ஒரு பாட்டு பாட்றீ
என்ன பாட்டய்யா?
நம்ம பாட்டுத்தேன்
இது தேவர் மகனில் வரும் டயலாக்.
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.
இது எந்த படம்ன்னு தெரியல.
நான் காலேஜ் படிக்கும்போது ரொம்ப பேமஸ் டயலாக் இதுரெண்டும். என் வகுப்பில் சுமாராக பாடக்கூடியவர்களில் நிறைய பேர். (நானும் ஒருத்தின்னு சொன்னா நம்பவா போறீங்க). ஸ்கூல் choir (தமிழ்ல என்ன?) டீமில் பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு இடம் கொடுத்தாங்க. பாரதியாரின் "பூட்டைத் திறப்பது" பாட்டுக்கு இசையமைத்து பாடியதில் எங்களுக்கு நி்றைய பாராட்டுக்கள். சிறு வயதில் விடியற்காலையில் தலையில் ஸ்கார்ஃப் கட்டி கதறக் கதற பாட்டு கிளாசுக்கு துரத்தப்பட்ட சிறுமிகளில் நானும் ஒருத்தி. நல்லவேளையாக பாட்டு டீச்சர் கல்யாணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் நானும் தப்பித்தேன். என் இசைப் பயணம் "ராரா வேணு கோபாலா"வோடு நின்றுவிட்டது. தொடர்ந்திருக்குமேயானால் நானும் இன்னிக்கு ஏதாவது ஒரு சேனலில் யாரோட அபஸ்வரத்திற்க்காவது மார்க் போட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் என் திறமையை???!! வளர்க்க முயற்சி செய்தது பள்ளி நிர்வாகம். கர்நாடிக் கத்துக்க சொன்ன மியுசிக் டீச்சரிடம் "நீங்க போதும் மிஸ். நான் வேறயா?"ன்னு கேட்டு அவங்க கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டு நான் ரொம்ப லேட்டா சாரி சொன்னது தனிக்கதை.
சரி மேட்டருக்கு வருவோம். என்னை மாதிரி சரி சரி காண்டாவதீங்க. பொதுவா பாத்ரூம் சிங்கர் என்றழைக்கப்படும் கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப் பேருக்கு குரல் வளம் ரொம்ப நல்லாருக்கும். கல்லூரியில் விரிவுரையாளர் வராத சமயங்களிலோ, டூர் போகும்போதோ அந்தாக்ஷ்ரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு விளையாடுவது வழக்கம். செம ஜாலியா இருக்கும். மொழி வரைமுறை இல்லாமல் ஒரே பாட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரீப்பிட்டடிக்கப்படும். சில சமயம் ஸோலோ பெர்பாமன்சும் நடத்தப்படும். அம்மாதிரியான சமயங்களில் அடிக்கடிப் பாடப்படும் (கணக்கிலடங்கா) பாடல்களில் சிலவற்றை, எனக்குப் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. கண்மனி அன்போடு காதலன் - குணா
2. நறுமுகையே நறுமுகையே - இருவர்
3. மனம் விரும்புதே - நேருக்கு நேர்
4. நேற்று இல்லாத மாற்றம் - புதிய முகம்
5. யமுனை ஆற்றிலே - தளபதி (நூத்துல 90 பேரோட சாய்ஸ் இதுதான்)
6. மின்னல் ஒரு கோடி - வி.ஐ.பி
7. ராசாத்தி உன்னை காணாத - வைதேகி காத்திருந்தாள்.
8. கண்ணன் வந்து பாடுகின்றான் - ரெட்டைவால் குருவி
9. கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்
ஸோலோ பெர்மான்ஸ் மாதிரியே குழுவாய் கும்மியடிக்கவும் சில ரெடிமேட் பாடல்கள் இருக்கும். நாலு வரிக்கு மேல் யாருக்குமே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஆரம்பிக்கும்போது இருக்கும் டெம்போ கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஸ்ருதி சேராமல் ஒருத்தர் மட்டும் மெய்மறந்து??!! பாடிக்கொண்டிருக்க மற்றவர்கள் கிண்டல் பண்ண என முடியும். கண்டிப்பாக யாராவது ஒருத்தர் டேபிள், நோட் புக் என எதிலாவது தாளம் போடுவார். சில இடங்களில் கோரஸ் சப்தம் காதைக் கிழிக்கும். எவ்வளவு சோகமாக இருந்தாலும் இப்படி குழுவாகப் பாடும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அலாதியானது. அதில் சில
1. செந்தமிழ் தேன்மொழியாள்
2. காட்டுக்குயிலே - தளபதி
3. முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்
4. தண்ணீ குடம் எடுத்து - வைகாசி பொறந்தாச்சு
5. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்
இது வெறும் உதாரணம் தான். இந்த மாதிரி நிறைய பாட்டு இருக்கு. இப்போதைக்கு இந்த பாட்டெல்லாம் அசைப் போட்டு ஜாலியா இருங்க.
அப்புறம் முக்கியமான விஷயம் மறந்துட்டனே. பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு அவருக்கு டெடிகேட் செஞ்சுக்கறேன் (ஏண்டா பாடினோம்ன்னு பீல் பண்றீங்களாண்ணே).