நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து என்றிருக்கும் அரசியல்வாதி. அவர் கட்டி வைத்திருக்கும் சாம்ராஜ்யத்திற்கு ஒரே வாரிசு. நேர்மையாக இருக்க விரும்பும் அசிஸ்டெண்ட் கமிஷனர். குடி கும்மாளம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் வாரிசிற்கு தொழிலதிபர் மகளோடு காதல் ஏற்படுகிறது. சின்ன மோதலுக்குப் பின் அரசியல்வாதியின் சாணக்கிய மூவ்களால் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்படுகிறது. இதைக் கொண்டாட செல்லும் அரசியல்வாதியின் மகனை யாரோக் கடத்துகிறார்கள். வாரிசை மீட்கக் களமிறங்குகிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர். கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? அசிஸ்டெண்ட் கமிஷனர் வாரிசைக் கண்டுபிடித்தாரா? விடைத் தருகிறான் ஈசன்.
எந்த விமர்சனமும் படிக்காமல் ரிலீஸான மறுநாளே படத்திற்கு புக் செய்திருந்தோம். சசிக்குமாரை மட்டும் நம்பி. சசிக்குமார் ஏமாற்றவில்லை. அதே சமயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவுமில்லை. மிகச் சாதாரணமான பழிவாங்கும் கதைதான். அதைக் கொடுத்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. நகரத்து இளசுகளின் பார்ட்டி கலாச்சாரம். பப், டிஸ்கோத்தே, கேட்டமின், ப்ரைவேட் பார்ட்டி என கெட்டு சீரழிகிறார்கள் படத்தில் (நிஜத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது). ஈசிஆரில் இரவில் நடக்கும் drunk and drive விபத்துகளும், காலை வேளைகளில் கஃபேக்களிலும், இரவில் பப்பிலும் கூடும் இளைஞர்களிம் ஈசி கோ வாழ்க்கைமுறையுமாக ஒரு ட்ராக் ஓடுகிறது. அடாவடி அரசியல்வாதியும், அவர் அல்லக்கையும், இவர்களின் கட்டப்பஞ்சாயத்து வேலைகளுமாக இன்னொரு ட்ராக். முதல் பாதி இவை இரண்டு மட்டும்தான். சரி காதலை மையமாக வைத்து அரசியல்வாதியும், தொழிலதிபரும் விளையாடப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் இடைவேளையில் சடாரென ஈசனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
இன்னார் தான் ஹீரோ/ஹீரோயின் என அடையாளம் காட்ட முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. அதிலும் தனித்து முத்திரைப் பதிக்கிறார் சமுத்திரக்கனி. அசிஸ்டெண்ட் கமிஷனர் சங்கைய்யா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். போலீஸ் வேடம் ஏற்றவுடனே ஹீரோயிஸம் காட்டாமல் தன் கையாலாகாததனத்தை நொந்துக் கொள்ளும்போது நடிப்பில் மிளிர்கிறார். இவர் உயரமும் குரலும் மிகப் பெரிய பலம். அரசியல்வாதியாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். பேச்சிலேயே நரித்தனத்தைக் காண்பிக்கிறார். பிள்ளை என்று வரும்போது ஒரு விதமான குரலிலும், மற்றவர்களிடம் அதிகாரத் தொனியிலும் பேசி கவர்கிறார். இவரின் அல்லக்கையாக வரும் நமோ நாராயணன் சூப்பர் (நாடோடிகள் படத்தின் போஸ்டர் பார்ட்டி்). ”தெய்வமே” என்ற ரிங்டோனும், போலீஸ் வண்டியில் ஏறியதும் சமுத்திரக்கனியின் காரெக்டரை நக்கலடிப்பதும், மனுஷனுக்கு அடிப்படைத் தேவையான ஏசி இல்லையான்னு கேட்டதுக்கு அடிச்சிட்டாருங்கைய்யா எனும்போதும் க்ளாப்ஸ் அள்ளுகிறார். வைபவ் ரோமியோ கேரக்டருக்கு ஓக்கே. அபிநயா தான் ஹீரோயின் என பில்டப் செய்திருந்தார்கள். மொத்தமே முக்கால்மணிநேரம் கூட வரவில்லை. ஆனாலும் கண்களாலேயே சிரித்து மனசை கொள்ளையடிக்கிறார். கடைசி காட்சியில் அவர் அப்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மடமடவென காஃபியை குடிக்கும்போது குடுக்கும் எக்ஸ்பிரஷன் மனதை தொடுகிறது ஈசனாக வரும் அந்தப் பையனும் ரொம்ப எதார்த்தமாக செய்திருக்கிறான்.
நாம் அன்றாடம் கடந்து போகும் சில செய்திகளின் பிண்ணனி தெரியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. படம் தொடங்கி சில காட்சிகளிலேயே ஈவ் டீசிங்கினால் இறக்கும் அந்தப் பெண், நிலத் தகராறால் கொல்லப்பட்டு கள்ளக்காதலால் கொலை என செய்தி வரும்போதும், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை என்பதன் உண்மையான பிண்ணனியும் அதிர வைக்கின்றன. அசிஸ்டெண்ட் கமிஷனரின் வசனங்களுக்கு இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து போலீஸ்காரர்கள் மேஜர் இஞ்சூரியா ஸ்பாட் அவுட்டா என்றெல்லாம் பேச மாட்டார்கள். சில இடங்களில் வசனங்களுக்கு தியேட்டரில் ரொம்ப நேரம் க்ளாப்ஸ். உதாரணத்திற்கு “அரசியல்வாதி பிஸினெஸ்மேன் ஆகலாம். பிண்னெஸ்மேன் என்னிக்குமே அரசியல்வாதியாக ஆக முடியாது”. “நான் உங்க புள்ளை இல்லையான்னு கேட்ட. நாந்தான் உங்கப்பன்னு சொல்லத் தாண்டா அடிச்சேன்”.
இசை ஏற்கனவே பார்த்துவிட்டோம். “இந்த இரவுதான் பாடலை” வேஸ்ட் பண்ணிவிட்டார்கள். மொக்கையான கொரியோகிராஃபி:( அதே சமயம் ஜில்லா விட்டு சாங் நன்றாக வந்திருக்கிறது. நல்லவேளையாக நாங்கள் படம் பார்த்த போது சுகவாசு பாட்டுக்கு கத்திரி போடப்பட்டிருந்தது. பிண்ணனி இசை சில இடங்களுக்கு சரியாக பொருந்தினாலும் பல இடங்களில் தேவையில்லாமல் டெம்ப்போவை ஏற்றிவிடுகிறது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் ஸ்பீட் தான். படம் செம்ம ஸ்லோ. சில இடங்களில் அந்தக் குறை தெரியாமல் காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலும் அந்தக் கிராமத்து திருவிழா காட்சிகள், அபிநயா கலந்துக்கொள்ளும் பார்ட்டி காட்சிகள், க்ளைமேக்ஸ் காட்சிகள் இழுஇழு என இழுக்கிறார்கள். க்ளைமேக்சும் ரொம்ப சினிமாட்டிக். இன்னும் கொஞ்சம் வேகமாக திரைக்கதை நகர்ந்திருந்தால் பெரிய ஹிட்டடித்திருக்கும் படம். இப்போவும் மோசமில்லை. பொறுமையிருப்பவர்கள் பார்க்கலாம்.
ஈசன் - தவறு செய்தவர்களை நின்று நிதானமாக கொல்கிறான்..
December 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இங்கே படம் வரலை. அதனால இந்தப் படம் தப்பிச்சுது. இல்லைன்னா நானும் ஒரு விமர்சனம் போட்டிருப்பேன்:)
நறுக்கென்ற விமர்சனம்!
பொருமையில்லாதவர்களுக்கு ஈசன் - அழிப்பவனா அளிப்பவனா? துன்பத்தை அழித்து இன்பத்தை அளிப்பவனா என்று கேட்டேன். ;-)
வர வர சினிமா எல்லாம் பார்த்து விமர்சனம் எல்லாம் எழுதுறீங்க.
//ஈசன் - தவறு செய்தவர்களை நின்று நிதானமாக கொல்கிறான்.//
யார் தவறு செய்தவர்கள்? சினிமா பார்க்கப் போனவர்களா?
//க்ளைமேக்ஸ் காட்சிகள் இழுஇழு என இழுக்கிறார்கள்//
// நின்று நிதானமாக கொல்கிறான்//
நின்று நிதானமாகக் கொன்றால், இழுஇழுவென இழுத்துதான ஆகனும் :-)
இந்த படம் பாக்க ஏனோ தோணவில்லை இங்கே வந்துதன்னு தெரியவும் இல்லை
உங்க விமர்சனம் படிச்சதுலையே பார்த்த உணர்வு
நன்றி
நல்லா எழுதியிருக்கீங்க வித்யா. சசிக்குமாருக்காக இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றி கோபி.
நன்றி RVS.
நன்றி மோகன்(வேண்டாங்கறீங்களா??)
நன்றி முகிலன் (எப்படியெல்லாம் கேள்வி கேக்கறாய்ங்க. விமர்சனம் எழுதினது குத்தமாய்யா)
நன்றி உழவன்.
நன்றி காயத்ரி.
நன்றி சரவணக்குமார்.
Post a Comment