December 30, 2010

பரிசு பெற்ற கதையும் பரிசும்

விளையாட்டாய் எழுத வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஒன்றும் பெரிசாக எழுதிக் கிழிக்கவில்லையென்றாலும் என் மனதிற்குப் பிடித்தவற்றை கிறுக்கி வைக்கிறேன். ஒரு சேமிப்புக் கிடங்காய். விளையாட்டாகவே தான் ஆதியும் பரிசலும் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பியது. அறிவிப்பு வந்தவுடன் வெளியான (நான் படித்த) நிறைய கதைகள் ஏதோவொரு வகையில் சஸ்பென்ஸ்/சயின்ஸ் ஃபிக்‌ஷனோடு சம்பந்தப்பட்டிருந்தது. சரி நாமலும் முயல்வோம் என ஆரம்பித்து, வேண்டாம் நமக்கு மொக்கை தான் சரிப்பட்டு வருமென பாதியில் டைவர்ட் பண்ணிய கதை இது. பதிவுலகம் சாராத நண்பர்களுக்கு படிக்க அனுப்பியபோது ஃப்ளோ நல்லாருக்கு என்று எல்லோரும் சொல்லவும் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். கதையை பதிவில் வெளியிட்ட போது எல்லோரும் ஓரளவுக்கு நல்லாருக்கு என்றே கமெண்டினார்கள். அதோடு அதை மறந்தும் விட்டேன். முடிவுகள் அறிவிக்கும் தேதி நெருங்கிய வேளையில் கூகிள் பஸ்ஸில் கூட கிண்டலாகத்தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

ஆறுதல் பரிசு என்று தெரிந்ததும் நிஜமாகவே சந்தோஷமாய் இருந்தது. போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும், இதுவரை தொடர்ந்து என்னை வாசித்து ஊக்கமளித்து விமர்சித்து வரும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள். ஆறுதல் பரிசான புத்தகங்கள் வந்துச் சேர்ந்துள்ளன. கிராவின் கோபல்ல கிராம மக்கள், கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு, பரிசலின் டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும். கிராவை இதுவரை நான் வாசித்ததேயில்லை. எனக்கு பரவலான/ஆழ்ந்த வாசிப்பறிவு கிடையாது. என்னைக் கவரும் தலைப்புகளைக் கொண்ட புத்தகங்களையே வாசிக்கிறேன். சில சமயங்களில் இவ்வகைத் தேர்வுகள் காலை வாரியதும் உண்டு. எளிமையான மொழி நடையில், கதைக்களத்தில் நம்மையும் உலவச் செய்யும், கதை மாந்தர்களோடு நம்மையும் உறவாடவைக்கும் படைப்புகளே என்னை பெரிதும் ஈர்க்கின்றன. இதுபோன்ற கதைகள் என் பால்யப் பருவத்தை ஏதோவொரு வகையில் கண்முன் கொண்டு வரவோ, நினைவொடைகளில் நீந்தவோச் செய்கின்றன. தன்னுடைய புத்திசாலித்தனத்தை, அதிமேதாவித்தனத்தை வலிந்து திணிக்கும் கதைசொல்லிகளின் கதைகள் என்னை கவர மறுக்கின்றன.

பரிசாய் பெற்ற கிராவின் புத்தகம், நண்பர்கள் பரிசளித்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பு என படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதோ இன்னும் கொஞ்சம் நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. இதெல்லாம் வாங்கனும்ன்னு எதுவும் பட்டியல் போட்டுவைக்கவில்லை. சென்ற முறை வாங்கிய புத்தகங்களில் இன்னும் பாதிக்கு மேல் படிக்காமல் வைத்திருக்கிறேன். இந்த முறை எப்படியெனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ஏனோதானோ என்றில்லாமல் பொறுமையாக வாங்கவேண்டும்.

34வது புத்தகக் கண்காட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல் வாரநாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரையும், விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணி முதல் இரவு 8.30 வரையும் நடைபெறுகிறது. மேலதிக விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

அனைவருக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டு எல்லாவிதத்திலும் உங்களுக்கு இன்பத்தைத் தர (நோ நோ. நான் எழுதறத நிறுத்த மாட்டேன்)வேண்டுகிறேன்.

11 comments:

RVS said...

தி.ஜா.. கி.ரா.. லா.சா.ரா... நகுலன்... கல்கி.. புதுமைப் பித்தன்.. கரிச்சான் குஞ்சு... எம்.வி. வெங்கட்ராம்.. இப்படி ஒரு நீள பட்டியல் என்னிடம் உள்ளது. அட்டகாசமான எழுத்தொட்டத்துடன் நம்மையும் வாரிசுருட்டி உள்ளே இழுத்துவிடுவார்கள்.
வாத்தியார் திரும்ப திரும்ப எவ்ளோ படிச்சாலும் அலுக்காதவர். ;-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

'பரிவை' சே.குமார் said...

Wish u a Happy New year to u and ur family members.

ஹுஸைனம்மா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வித்யா.

சி.பி.செந்தில்குமார் said...

>>>சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை.

s correct

CS. Mohan Kumar said...

Happy new year to you, your husband & son.

சுஜாதா பற்றி நீங்கள் சொன்னதை நானும் உணர்ந்துள்ளேன். ஆனாலும் அவரை தாண்டி படிக்க இன்னும் நிறைய நல்ல எழுத்தாளர்கள் நம் தமிழிலேயே உள்ளனர். தற்சமயம் எழுதுபவர்களில் எஸ். ராம கிருஷ்ணன் என்னை கவர்கிறார்

செ.சரவணக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

Happy newyear vidhya..

R. Gopi said...

புத்தாண்டு வாழ்த்துகள் வித்யா:)

VELU.G said...

happy new year

Unknown said...

// சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை//

முகிலன்னு ஒருத்தர் எழுதுறாரு, இன்னாமா எழுதுறாருங்கிறீங்க? அவரைப் படிச்சிப் பாருங்க. அப்புறம் நீங்க சுஜாதாவை ஈஸியா தாண்டிடலாம். :)))

தக்குடு said...

Wish you a happy new year vidya akka!