பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? நீங்கள் அத்தருணத்தில் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? நான் அனுபவித்தேன். பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் ஏற்படும் பிரளயம் நான்
baby sitter வைத்துக்கொள்ளப் போகிறேன் என சொன்னவுடன் எங்கள் வீட்டில் ஏற்பட்டது. இத்தனைக்கும் மாலை இரண்டு மணிநேரம் தான் குழந்தையப் பார்த்துக்கொள்ள ஆள் வைக்கலாமென எண்ணினோம். ஐடியா குடுத்ததே ரகு தான். இரண்டு பேர் வீட்டில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார்கள். இருப்பவர்களோடு அபத்தமான ஒப்பிடு.
அவளும் தான் குழந்தை வளர்க்கிறாள். அவளென்ன ஆளா வைத்துக்கொண்டாள்? ஏகப்பட்ட கம்பேரிசன்கள். மறுப்புகள். என்(ங்கள்) பக்க வாதங்களைக் கேக்ககூட தயாராக இல்லை.
குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன்.
குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன்.
24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.
காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன்
அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(
குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே.
எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை
யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக
புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "
சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.
அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன.
நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all
ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.
கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "
பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "
எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)
டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.