March 20, 2009

சம்பங்கி

பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி முல்லையின் வாசனையைத் தாண்டி வீசும் சம்பங்கியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்குமென்றால் கைகொடுங்கள். நானும் உங்கள் கட்சிதான். ஆனால் இந்த சம்பங்கியை ஏன் பெண்கள் யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை? இத்தனைக்கும் மார்க்கெட்டில் விசாரித்துப் பார்த்தால் சம்பங்கி தான் விலை ஜாஸ்தி. என்ன அப்படி பார்க்கறீங்க? ஓ யாரிவ பேசிக்கிட்டே போறாளேன்னா? என் பேரு கல்யாணி. எனக்கு இன்னிக்கு வளைகாப்பு. நேத்துதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்குன்னு அம்மா சிரிச்சுகிட்டே சொன்னபோது வெட்கத்தையும் தாண்டி என்னமோ மாதிரி இருந்தது. எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமாகப்போகுது. அங்க பாருங்க. வர்றவங்களை வரவேற்கிறேன் பேர்வழின்னு அங்கிங்க ஓடிக்கிட்டிருக்காரே ராம் அவர் தான் என் வீட்டுக்காரர். முழுப்பேரு கல்யாணராமன். பெயர் பொருத்தம் நல்லாருக்குன்னு தான யோசிக்கிறீங்க. எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்த ஜோசியர் அசந்தே போய்ட்டார். அவர் வாழ்நாளில இப்படி அம்சமா பொருந்தின ஜாதகத்தை பார்த்ததேயில்லையாம். எந்த தோஷமுமில்லாத எல்லா பொருத்தங்களும் நிறைஞ்ச அம்சமான ஜாதகமாம் எங்க ரெண்டு பேருக்கும்.

ராம் கம்ப்யூட்டர் கம்பெனில வேலை பார்க்கிறார். கைநிறைய சம்பளம், எந்த கெட்ட பழக்கமுமில்லை, சொந்த வீடுன்னு தரகர் போட்டோ குடுக்கும்போதே அம்மாக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இத்தனைக்கும் இதான் முதல் வரன். போட்டோல நல்லா ராஜா மாதிரி இருந்தார். வழக்கமான பொண்ணு பார்க்கிற சம்பிரதாயமெல்லாம் இல்லாம பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு வரசொன்னாங்க. அங்கேயே கைத்தாம்பூலம் மாத்தி நிச்சயதார்த்தையும் ரொம்ப சிம்பிளா முடிச்சாங்க. சீர் பத்தி அம்மா பேசினபோது உடனே அவர் அதெல்லாம் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமாயிருந்தது. பக்கத்து வீட்டு கண்மணி புருஷன் வீட்டுல ஒரு பெரிய பட்டியலே கொடுத்தாங்க. கடன வாங்கி எல்லாத்தையும் செஞ்சு முடுக்க மணி மாமா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல. அந்த மாதிரி எதுவும் கேக்காம இருந்தது ரொம்ப சந்தோஷம். ஆடி மாசம் முடிஞ்ச முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம். குறைவான கூட்டத்துடன் ரொம்ப எளிமையா ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானத்தோட நல்லபடியா நடந்தது. கல்யாணத்துக்கு ஆன செலவுல பாதியை எங்கம்மா கையில கொடுத்து அம்மாவ அழவைச்சிட்டாங்க என் மாமியார்.


தேன்நிலவுக்கு ஊட்டி போனது, அப்புறம் விருந்துங்கற பேர்ல ஊரூரா போய் சாப்பிட்டு நான் கொஞ்சம் சதை போட்டதெல்லாம் சுவாரசியமில்லாத விஷயங்கள். என் மாமியார் என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்கறாங்க. கல்யாணமான இந்த பதினொன்றை மாதங்களில் ஒருநாள் கூட அவங்க என்னை அதட்டி பேசினது கிடையாது. ராமுக்கும் என்மேல் கொள்ளைப் பிரியம். இந்தமாதிரி ஒரு குடும்பத்துல வாக்கப்பட்டதுக்கு நான் குடுத்துவச்சிருக்கனும். வீட்டுக்கு வாரிசு வரப்போற சந்தோஷத்தில மாமியார் ரொம்ப பெரியளவுல வளைகாப்பு ஏற்பாடு பண்ணிருக்காங்க. ரெண்டு ஜோடி வைர வளையல்கூட வாங்கியிருக்காங்க. இதோ பங்க்ஷன் ஆரம்பிச்சிருச்சு. சந்தனம் பூசி குங்குமம் வைச்சி பன்னீர் தெளிக்கறாங்க. அய்யோ ஏன் இவ்வளவு பன்னீர் தெளிக்கிறாங்க?


"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு. சனியன். இந்த வயசுல பூக்கட்டி வித்து பொழப்ப ஒட்டனும்னு என் தலைல எழுதிருக்கு. அதுக்காவது ஒத்தாசையாஇருக்குதா? எப்ப பாரு ஏதாவது நினைப்பு. ஒன்னுக்கும் உதவாத தண்டக்கருமாந்திரம். ஏய் எருமை எங்கடீ பராக்கு பாத்துக்கிட்டிருக்க? ஒழுங்கா மாலைய கட்டுடீ எழவெடுத்தவளே."


வளைகாப்பு நல்லபடியா முடுஞ்சுது. ராமுக்கும், மாமியாருக்கும் பெண் குழந்தை வேணும்னு ஆசை. எனக்கு பையன். உங்களுக்கு என்ன தோணுது?


டிஸ்கி : கதைய படிச்சிட்டு நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டீங்கனா போனபோதுன்னு இத்தோட விட்டுடறேன். ஏதாவது வம்பு பண்ணிங்கன்னா அடிக்கடி இப்படி ஏதாவது எழுதி ரப்சர் பண்ணுவேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

29 comments:

முரளிகண்ணன் said...

நல்லாருக்கு

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நல்லாயிருக்கு

நட்புடன் ஜமால் said...

வாசனை எனக்கு பிடிக்குமே!

சொல்லலாமா!

சந்தனமுல்லை said...

ஆனந்த விகடனை அதிகமா படிக்கறீங்க போல ..:-)...

Cable சங்கர் said...

rரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வித்யா..

அ.மு.செய்யது said...

//பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி முல்லையின் வாசனையைத் தாண்டி வீசும் சம்பங்கியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமா?//

ஆரம்பமே வாசம் வீசுகிறதே !!!!

Vidhya Chandrasekaran said...

நன்றி முரளிகண்ணன்:)

நன்றி ஜமால். தாராளமா சொல்லலாம்.

Vidhya Chandrasekaran said...

ஹி ஹி கம்பெனி சீக்ரெட்டை வெளில சொல்லாதீங்க முல்லை:)

சங்கர்ஜி இப்படி கிண்டல் பண்ணாலும் தொடர்ந்து எழுதுவேன்:)

அ.மு.செய்யது said...

அந்த சிகப்பு வரிகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.

சூப்ப‌ர் வித்யா.

எம்.எம்.அப்துல்லா said...

டிஸ்கி நல்லாருக்கு

(அப்பாடா வித்யா சொன்னதையும் செஞ்சாச்சு...சைக்கிள் கேப்பில வாரியாச்சு)

:)

Unknown said...

எழுத்து நடை நல்லாருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

ஒரு வேண்டுகோள்.

இந்த கடைசியில் “எல்லாம் கனவு” என்ற உத்தி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப் பழசு.

“எல்லாம் கனவு” இல்லாமல் வேறு ஒரு முடிவு இருக்கிறது. கிழே clue
இதை வைத்து முடிக்கலாம்.

//அவள் பூக்காரி.விதவிதமான பூக்களை தினமும் தொட்டு முகர்ந்து
அனுபவிப்பவள். பூ இல்லாமல் வாழ்க்கை இல்லை..கல்யாணம்..//

Please try.

அதற்கு முன் ஒரு திகில் கதை இங்கு
படிக்கவும்:-


சுமதியின் ராசி பலன்
http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை

நன்றி.

www.narsim.in said...

வெள்ளிக்கிழமை பதிவு!

கே.ரவிஷங்கருடன் உடன்படுகிறேன்.

pudugaithendral said...

கதை என்பதால் கொஞ்சம் கூட பத்தி பத்தியா பிரிச்சா நல்லா இருக்குமோ!!!

எழுத்து நடை நல்லா இருக்கு.

(சம்பங்கி பேரைப்பாத்ததும் எனக்காக சம்பங்கி. பூவை பறித்து கோத்து மாமாவிடம் சண்டைபோட்டு தினமும் அனுப்பிவைத்த என் அம்மாவின் தாத்தா நினைவுக்கு வந்துவிட்டார்.சம்பங்கியின் வாசனையே அலாதி)

Vidhya Chandrasekaran said...

நன்றி அ.மு.செய்யது.

அப்துல்லா அண்ணே இதெல்லாம் நல்லால்ல.அவ்வளதான் சொல்லிட்டேன்.

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிஷங்கர். முதல் தடவையில்லையா. போகப்போக திருத்திக்கிறேன்.

நன்றி நர்சிம்.

நன்றி தென்றலக்கா. அடுத்த கதைல திருத்திடறேன்.

Deepa said...

ரசித்தேன்.

இவ்வளவு அருமையாகக் கல்யாணம் பண்ணியவர்கள் கடைசியில் மோசம் என்று ஏதாவது நெகட்டிவிட்டி வந்து விடுமோ என்று பயந்தேன். அப்படி எதுவும் இல்லாமல் கனவு தான் என்பது ஆறுதல் அளிக்கிறது.

நல்ல நடை. தொடர்ந்து எழுதுங்கள்.

மணிகண்டன் said...

மீண்டும் மீண்டும் இதே போன்று கதைகள் எழுதுங்க வித்யா.

கதை சூப்பர்.

தமிழ் அமுதன் said...

///"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு.///


ஆயில்ய நட்சத்திர பொண்ணுகளுக்கு மாமியார் ஆகாதாம்

மத்த நட்சத்திர கார பொண்ணுங்க என்னமோ மாமியார் கூட
அன்பாலயும்,பாசத்தாலயும் பின்னி பிணைஞ்சு இருக்குறது போல!!

Vidhya Chandrasekaran said...

நன்றி தீபா.

நன்றி மணிகண்டன்.

வருகைக்கு நன்றி ஜீவன்:)

Sanjai Gandhi said...

அட என்ன மம்மி இது? ஜாலியான கதைன்னு நினைச்சி படிச்சா. கடைசில கண் கலங்க வச்சிட்டிங்களே..

( கொஞ்சம் ஓவரா இருக்கோ? :))

ஆனாலும் லைட்டா சோகம் வந்திடிச்சி மம்மி. :(

நாகை சிவா said...

ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க னு ஒரு படத்தில் மயில்சாமி ஷாம் போட்டு இருக்கும் ஜிப்பா வை பற்றி ஒரு நாலு தடவை சொல்லிட்டு போவார்

சார், ஜிப்பா சூப்பர்... னு...

அதை அப்படியே மைண்ட்ல ஒட்டிக்கிட்டு இப்ப படிங்க...

வித்யா, கதை சூப்பர்!

Vidhya Chandrasekaran said...

வாங்க அங்கிள். ரொம்ப நாள் கழிச்சு கடை பக்கம் வந்திருக்கீங்க.

நன்றி சிவா.

Arun Kumar said...

ரொம்ப நல்லா இருக்கு..
அடிக்கடி இப்படி எழுதி தொந்தரவு செய்யவும் :)

இந்துமதி எழுதிய படைப்புகளை ரொம்ப படிப்பீங்களா?

Vidhya Chandrasekaran said...

நன்றி அருண். இதுவரைக்கும் நான் இந்துமதி கதைகளைப் படிச்சதில்லை.

தாரணி பிரியா said...

ரொம்ப நல்லாயிருக்கு :)

தாரணி பிரியா said...

நிஜமாவே நல்லா இருக்குங்க‌ :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் கல்யாணிக்குதான் ஏதோ ஆகிடுமோன்னு நெனச்சு பயந்தேன்..

மெகா சீரியல் கணக்கா இழுக்காம, சட்டு புட்டுன்னு கனவை சொல்லி கதைய முடிச்சதுக்கு பெரிய நன்றி.

நன்றி கதைய முடிச்சதுக்கு மட்டுமல்ல..:))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜீவன் said...
///"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு.///


ஆயில்ய நட்சத்திர பொண்ணுகளுக்கு மாமியார் ஆகாதாம்

மத்த நட்சத்திர கார பொண்ணுங்க என்னமோ மாமியார் கூட
அன்பாலயும்,பாசத்தாலயும் பின்னி பிணைஞ்சு இருக்குறது போல!!


ரொம்ப நேரம் சிரிச்சேன் இந்த கமெண்டுக்கு...:)))))))0

ஜீவன் இங்கனயும் கலக்கறீங்க...

Vidhya Chandrasekaran said...

நன்றி அமித்து அம்மா.

நன்றி தாரணிபிரியா:)