April 19, 2010

நான் ஆட்டோக்கார(ர்)ன்...

சில மனிதர்கள் நம் வாழ்வில் நமக்குத் தெரியாமலேயே முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவனின்றி/அவளின்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கேற்ப பால் போடுபவர், பேப்பர்காரர், வீட்டு வேலை செய்பவர் என நிறைய பேரின் துணையோடு தான் நாம் ஒவ்வொரு நாளையும் ஓட்டுகின்றோம். மேற்படி லிஸ்டில் ஒருவர் வரவில்லையென்றாலும் கொஞ்சமாவது டென்ஷன் ஏற்படும். நம் வீட்டையும் தாண்டி வெளியிலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு உதவுபவர்கள் நிறைய. அப்படிப்பட்ட மனிதர்களுடனான கலந்துரையாடலே இப்பதிவு(கள்).

தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரம் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தபோது ஆட்டோ ஓட்டுனர்களோடு பேசிய உரையாடல்களிவை. பேசிய பின் பதிவுலகம் பற்றி சொல்லி உங்கள் கருத்தை பதியலாமா என கேட்டதற்கு பெயர் போட வேண்டாமென கேட்டுக்கொண்டதால் போடவில்லை. இரு ஓட்டுனர்களின் (அண்ணா நகர் ஸ்டாண்டிலிருந்து ஒருவர், எக்மோர் ரயில் நிலைய ரன்னிங் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்) கருத்து.

(பேட்டி போலில்லாமல் சும்மா பேசிக்கொண்டிருந்ததைப் பதிந்திருப்பதால் கேள்விகள் அங்கங்கே எகிறி குதித்து ஓடும். கண்டுக்காதீங்க).

எந்த சீசன்ல ஆட்டோ ஓட்றது கஷ்டம்? வெயிலா? மழையா?

ரெண்டுமே கஷ்டம் தான். வெயில் காலத்துல அனல் காத்து ரொம்ப அடிக்கும். ரொம்ப நேரம் தொடர்ந்து ஓட்ட முடியாது. மழைக்காலம் தான் ரொம்ப கஷ்டம்மா. ஆட்டோக்கு நிறைய்ய செலவு வைக்கும். பள்ளம் மேடு தெரியாது. ஆட்டோக்குள்ள தண்ணி வந்துடும்.

ஒரு பிஃக்சட் ரேட்டுன்னு இல்லாம இஷ்டத்துக்கு வாங்கறீங்களே ஏன்? உதாரணத்துக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து அண்ணாநகர் மேற்கு வர 60, 70, 80 வாங்கறீங்க. ஏன் இப்படி?

ரேட்டு ஒவ்வொரு ஸ்டாண்ட்க்கும் மாறும். கோயேம்பேடு ஸ்டாண்ட்ல 80 ரூபா வாங்குவாங்க. நாங்க (அண்ணாநகர் ஸ்டாண்ட்) 70 ரூவா வாங்குவோம்.

ஒரு தடவை ஒரு ட்ரைவர் 40 ரூபாய் தான் வாங்கினார். எப்படி?

அது ரிடர்ன் ஆட்டோவா இருக்கும். ரிடர்ன் ஆட்டோ எப்பவுமே குடுக்கற காசுக்கு வருவோம். இப்ப உங்கள வேளச்சேரில இறக்கிவிட்டு ரிடர்ன் எம்ப்டியா வந்தா பெட்ரோல் வேஸ்டாகும். அதுக்கு 150 ரூபா குடுக்கறேன்னு சொன்னாலும் சவாரி ஏத்திப்போம். காலியா வர்றதுக்கு ஏதோ கொஞ்சமாவது காசு வருதுல்ல. எங்களுக்கு அப்போ நினைப்புக்கு இருக்கறதெல்லாம் ஸ்டாண்ட்க்கு ரிடர்ன் ஆவும்போது காலியா வரக்கூடாது. அவ்வளவுதான்.

ஆட்டோல மீட்டர் போடமாட்டேங்கறீங்களே ஏன்?

மீட்டர் கட்டுபடியாகாது. ஒரு பேச்சுக்கு வச்சுப்போம். இங்க இருந்து (அண்ணாநகர்) வேளச்சேரி போக மீட்டர் போட்டா 120 ரூபாய்க்குள்ள ஆகும். கிட்டத்தட்ட 25 கி.மீ தூரம். பெட்ரோல் முதற்கொண்டு கணக்குப் போட்டா கட்டுபடியாகாது. அதனால வாங்கறது 300 ரூபா.

அப்போ பெட்ரோல் விலை, ஆட்டோக்கான மெயிண்டனன்ஸ், உங்களுக்கு சார்ஜ்ன்னு சேர்த்து ஒரு நியாயமான விலைக்கு மீட்டர் பிஃக்ஸ் பண்ணலாமே?

அதெல்லாம் வேலைக்காகதுங்க. மீட்டரில்லாம இருக்கிறதான் முக்காவாசி பேர் விரும்புறாங்க. ஏறும்போதே இந்த ரேட்டுன்னு தெரிஞ்சிக்கிறது சேஃப் தானுங்களே. மீட்டர் போட்டா இறங்கும்போது மீட்டர் காட்ற ரேட்டு கைல இல்லன்னா கஷ்டம். (எப்படியெல்லாம் சப்பக்கட்டு கட்றாங்க). ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ப்ரீபெய்ட் ஆட்டோ சிஸ்டம்கூட சரியா ஒர்க் அவுட ஆகலயே. கஸ்டமருங்க கம்ப்ளையெண்ட் நிறைய வருதே.

அதுக்கும் நீங்கதானே காரணம். இறக்கிவிடும்போது எக்ஸ்ட்ரா கொடுங்கன்னு முரண்டு பண்றீங்களே.

கஸ்டமருங்க மேல தான் மேடம் மிஸ்டேக். சரியான அட்ரஸ் சொல்லாம ஜெனரலா சொல்லவேண்டியது. ஒருதடவ மலர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலன்னு சொல்லி ஏறுனவங்க இறங்கினது சாந்தோம்ல. எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?

ஒரு நாளைக்கு எவ்ளோ கலெக்ஷன் ஆகும்?

ஓட்றதப் பொறுத்தும்மா. ஆட்டோ வாடகை, பெட்ரோல் செலவு போக ஒரு நாளைக்கு 500 ரூபா வர்ற வரைக்கும் ஓட்டுவோம். சில சமயம் 1000 ரூபா இருந்தாலும் பத்தாது. தேவைக்கேத்த மாதிரி ஓட்டிப்போம்.

ஆட்டோ வாடகை எவ்ளோ ஆகும்?

சேட்டுங்க வாரக்கணக்கில வாங்குவாங்க. சவாரி வந்தாலும், வரலைன்னாலும் தினப்படிக்கு 200 ரூவா சேட்டுக்கு கொடுக்கனும். சில பேர் தின வாடகைக்கு வண்டி உடுவாங்க. என்னுது சொந்த வண்டி.

எவ்ளோ வருஷமா ஆட்டோ ஓட்றீங்க?

10 வருஷமா ஓட்றேன். இந்த வண்டி 2 வருஷத்துக்கு முன்னால தான் வாங்கினேன்.

அப்ப இருந்ததுக்கும் இப்பத்தைக்கும் என்ன வித்தியாசம்?

ட்ராபிக் தாம்மா. அப்போ இந்த அளவுக்கு வண்டிங்க கிடையாது. இப்ப பாருங்க பார்க் பண்ண இடமில்லாட்டியும் பரவால்லன்னு எல்லாரும் கார் வச்சிருக்க்காங்க. ஒரு இலட்ச ரூபாய்க்கே புது கார் கிடைக்குது. ஆட்டோ விலை 2 லட்சம்.

எவ்ளோ வண்டி வந்தாலும், அதுக்கு சரிசமமா ஆட்டோவும் ஓடுதே.

எல்லாமே பழைய வண்டிங்க. இப்பல்லாம் யாரும் புதுசா வண்டி எடுக்கறதுல்ல. இந்தா இப்ப கவர்மெண்ட்ல 200 ஆட்டோக்கு பர்மிட் குடுத்திருக்காங்க. ஆனா 80,000 வெட்டினாதான் பர்மிட் கைக்கு வரும். அவ்ளோ செலவு பண்ணி ஆட்டோ எடுக்கறது வேஸ்ட். இந்த நெரிசல்ல ஓட்றதுக்குள்ள ஒரு வழியாவுது.

என்னங்க நீங்க. சிட்டி ட்ராபிக்கே ஆட்டோன்னா அலறுது? ஓவர் ஸ்பீட். அது ஏன்? சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்றதுங்கறது எவ்ளோ பேமஸ் டயலாக்.

எல்லாரும் இப்படியே சொல்றீங்களே? நாங்க என்ன கவர்மெண்ட் உத்யோகமா பார்க்கிறோம். அடுத்தடுத்து சவாரி பார்த்தாதான் பிழைப்பு ஓடும். நாங்களும் எப்பப்பாரா அப்படி ஓட்றோம்? கஸ்டமருங்க சீக்கிரம் போங்கன்னு சொன்னாங்கன்னா நாங்க போய்த்தானே ஆகனும்?

சென்னைல எப்பப் போணாலும் சவாரி கிடைக்கிற இடம்?

தி.நகர்.

ஏண்டா இங்க சவாரிக்கு வந்தோம்ன்னு தோணற இடம்?

பீக் அவர்ல நூறடி சாலை முழு ஸ்ட்ரெட்ச், அடையார் ஏரியா. மழைக்காலத்துல மடிப்பாக்கம், வேளச்சேரி, நார்த் மெட்ராஸ் ஏரியால கொஞ்சம் இடம்.

ஏன் ஆட்டோ ஓட்ட வந்தோமோன்னு எப்பவாச்சு தோணிருக்கா.

அப்பப்ப போலீஸ் மடக்கும்போது தோணுங்க. ஆனா அதைத்தாண்டி இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.

பி.கு : இந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமே தனிநபர் கருத்துகள் தான். ஜெனரலைஸ்ட் அல்ல.

22 comments:

Chitra said...

ஏன் ஆட்டோ ஓட்ட வந்தோமோன்னு எப்பவாச்சு தோணிருக்கா.

அப்பப்ப போலீஸ் மடக்கும்போது தோணுங்க. ஆனா அதைத்தாண்டி இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.


....... எதார்த்தமா பேசும்போது, பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்லி விட்டார்.

நானானி said...

சவாரி கேப்பிலே நல்ல நல்ல கேள்விகளாத்தான் கேட்டுருக்கிறீங்க.
பதில்களும் நியாயமாத்தானிருக்கு.
ஆட்டோ உரிமையாளர்கள் சேட்டுகள் மட்டுமல்ல, எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும்தான். அதனால்தான் ஆட்டோக்களை நெறிப் படுத்தமுடிவதில்லை.

Vijay said...

சென்னையில் ஆடோ ஓட்டியெ அம்பானி ஆகிடலாம். நியாயமான ஒரே விலை என்று எதுவும் கிடையாது. இதற்கு ஆடோ ஓட்டினர்களை குறை சொல்ல முடியாது. அரசாங்கத்தைத் தான் குறை சொல்ல முடியும். இந்த ஏரியாவுக்கு இவ்வளவுன்னு முன்னாடியே சொல்லிட்டு முன் பணம் வாங்கிக் கொண்டு, மீதத்தை மீட்டர் எவ்வளவு காட்டுகிறதோ, அதை வாங்கிக்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஆனால் யாருக்கும் இதை நடைமுறையாக்கும் மனமில்லை.

ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறுவதை கஸ்டமர்கள் மேல் சுமத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. பெட்ரோலை சேமிப்பதற்காக ராங் சைடில் வருவார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்கும் போலீஸுக்கு மாமூல் அழுது விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். ஏதாவது கேட்டால் ஸ்ட்ரைக் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் சில நல்ல ஓட்டுநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லம் பூதக்கண்ணாடி வைத்துத் தான் தேடணும் :)

Vidhoosh said...

அடுத்த முறை ஷேர் ஆட்டோக்காரரை அறிமுகப் படுத்துங்க.

அப்புறம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்காம விட்டுட்டீங்களே?

அவ்ளோ வேகமாப் போறப்போ ஆட்டோ கவுந்துடுச்சுன்னா டபக்குனு குதிச்சு ஓடிடலாம் போல ஒரு போஸ்ல, சாஞ்சாப்லையே சீட்டு ஓரத்துல உட்காந்து ஆட்டோ ஓட்டுவாரே அது....

Raghu said...

அனுப‌வ‌த்தில் நான் தெரிஞ்சுகிட்ட‌து....ஸ்டாண்ட்ல‌ இருக்க‌ற‌ ஆட்டோவை விட‌ ர‌ன்னிங்ல‌ வ‌ர்ற‌ ஆட்டோக்கார‌ர் கொஞ்ச‌ம் க‌ம்மியாதான் கேட்பார். அதுக்கும் மேல‌ க‌ம்மி ப‌ண்ற‌து ந‌ம்ம‌ சாம‌ர்த்திய‌ம்.

மேலும் சென்னையில் ஓடும் ஆட்டோக்க‌ளில் 80% க‌ரை வேட்டிக‌ளுக்கும், காக்கிக‌ளுக்கும்தான் சொந்த‌ம். அத‌னால்தான் எவ்வ‌ள‌வு ச‌ட்ட‌ மீற‌ல் இருந்தாலும் அவ‌ர்க‌ள் எளிதாக‌ த‌ப்பிக்கிறார்க‌ள்.

//ஆட்டோல மீட்டர் போடமாட்டேங்கறீங்களே ஏன்?//

நிஜ‌மாவே உங்க‌ளுக்கு தைரிய‌ம்தான்...:)

Anonymous said...

இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.
---wow

evlo periya thathuvam..evlo easya simpla choli erukkanga..

padiviruku nandri.

cycle gapla..(lunch gapla namalum oru comments poturvom...)
simply super.

vidyama..

nandri
v.v.s
complan surya

அண்ணாமலையான் said...

கலக்குங்க....

நேசமித்ரன் said...

//அவ்ளோ வேகமாப் போறப்போ ஆட்டோ கவுந்துடுச்சுன்னா டபக்குனு குதிச்சு ஓடிடலாம் போல ஒரு போஸ்ல, சாஞ்சாப்லையே சீட்டு ஓரத்துல உட்காந்து ஆட்டோ ஓட்டுவாரே அது....
//

விதூஷ் உங்க ஆதங்கம் புரியுது :)

பதிவு நல்லா இருக்குங்க வித்யா

pudugaithendral said...

ஆட்டோக்காரங்க பக்கமும் கஷ்டம் இருக்குன்னு தெரியும். நல்லவங்க புரிஞ்சவங்க இருக்காங்க. ஆனா சென்னையில் நான் பார்த்தது அடாவடிப்பேர்வழிகள் என்பதால் வேறெந்த பின்னூட்டமும் போடவில்லை.

Thamira said...

பத்திரிகையாளி ஆயிட்டீங்க.. ஹிஹி.!

Unknown said...

பகலில் ஆட்டோ ஓட்டுறவங்க கிட்டேர்ந்து ஆட்டோவை நைட்டுக்கு மட்டும் வாடகைக்கு எடுத்துக்கிட்டு ஓட்டும் ஆட்டோக்காரர்கள் உண்டு. அவர்களுடைய பேட்டி இன்னும் சுவாரசியமா இருக்கும்.

விதூஷ் கேள்விக்குப் பதில் - பொதுவா ஆட்டோ ஓட்டுறப்போ ஒரு சைடா இழுக்கிற மாதிரி இருக்கும். நாம கொஞ்சம் இஸ்துகின்னு உட்கார்ந்தா பேலன்ஸ் ஈஸியா கிடைக்கும்

Vidhya Chandrasekaran said...

நன்றி சித்ரா.
நன்றி நானானி.
நன்றி விஜய்.

நன்றி விதூஷ் (ஷேர் ஆட்டோல ஏறவேமாட்டேன்னு MTC பஸ் மேல சத்தியம் பண்ணிருக்கேங்க).

Vidhya Chandrasekaran said...

நன்றி ர‌கு.
நன்றி Complan Surya.
நன்றி அண்ணாமலையான்.
நன்றி நேசமித்ரன்.
நன்றி கலா அக்கா.
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.
நன்றி கேவிஆர்.

க ரா said...

நல்லா பேட்டி எடுத்திருக்கிங்க.

ஹுஸைனம்மா said...

காவல்துறையின் லஞ்சம் இல்லாத நியாயமான கெடுபிடி மட்டும் இருந்தால் (இருந்துட்டாலும்...) எல்லா ஆட்டோக்காரர்களும் நல்லவர்களே!!

தாரணி பிரியா said...

ரிப்போர்ட்டர் வித்யா பதிவு நல்லா இருக்குங்க :)

ராமுடு said...

Autowalas are the one of the worst fellows in Tamilnadu, especially in chennai. Everytime, when I want to use the auto, I asked them whatever it show on the meter, I am ready to pay it.. But they always fight with me saying that.. "it will show more than 40Rs, of wat I am asking.." Even that is fine. But they wont come.

But when we go with family, it is unavoidable. To avert them, I used call taxi.. I think before call taxi, he must have drove auto. He charged 100Rs. more than the amount told by the customer care. Everybody wanted to cheat others.

நர்சிம் said...

நல்ல பேட்டி

Rajalakshmi Pakkirisamy said...

நான் வந்த ஆட்டோல , ஆட்டோக்காரர் சொன்னது "காலையில இருந்து ராத்திரி வரைக்கும் ஆபீஸ்ல நிம்மதி இல்லாம நீங்க உட்கார்ந்து இருக்கீங்க. நான் நினைச்ச நேரத்துக்கு ஆட்டோ ஓட்டுறேன். புள்ள குட்டிங்க கூட சந்தோசமா இருக்கேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன்."

நல்ல வேளை என் salary எவ்வளவுன்னு கேட்கல

Vidhya Chandrasekaran said...

நன்றி இராமசாமி கண்ணன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தாரணி பிரியா.
நன்றி நர்சிம்.
நன்றி ராஜி.

"உழவன்" "Uzhavan" said...

//. ஒருதடவ மலர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலன்னு சொல்லி ஏறுனவங்க இறங்கினது சாந்தோம்ல. எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?//
 
ஹே.. அது யாருப்பா அப்படி இறங்குனது? :-)
 
இது போன்ற முயற்சிக்கு பாராட்டுக்கள்!

விக்னேஷ்வரி said...

ஒரு நிருபர் ரேஞ்சுக்குக் களத்துல இறங்கிட்டீங்க வித்யா. உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.