ஜூனியர் தன் பாட்டியோடு பயங்கர அட்டாச்டு. பாட்டி தான் வேணும் எல்லாத்துக்கும். அம்மாவும் பேரன் மேல பாசத்தை பொழியறாங்க. நான் எங்கம்மா வழி தாத்தா பாட்டிய பார்த்தது கூட இல்ல. என் அம்மா வழி தாத்தா எங்கம்மா கைக்குழந்தையா இருக்கும்போதே தவறிட்டாங்க. பாட்டி அம்மா 8ஆவது படிக்கும்போது போய்ட்டாங்க. அப்பா வழி தாத்தா பாட்டி எனக்கு நினைவு தெரிந்து என்னை அரவணைத்த ஞாபகமில்லை. தாத்தாவுக்கு என் தம்பிய ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவன் கருப்பு (நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:)). இப்போ பாட்டி மட்டும் தான் இருக்காங்க. 89 வயசாகுது அவங்களுக்கு. வரிசையாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பரிகொடுத்தவங்க. சில குடும்ப அரசியல்??!!! காரணமாக பாட்டியின் பாசம் முழுவதும் டைவர்ட் செய்யப்பட்டது. வயசாகிட்டாலே வர்ற பிராப்ளம் அவங்களுக்கும் ஆரம்பிச்சிடிச்சு. என்ன பேசுறோம்னே தெரியமாட்டேங்குது. இப்போன்னில்ல ஏழெட்டு வருஷமாவே பாட்டி வாயத்திறந்தாலே அலறுவோம். சாம்பிளுக்கு
* வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித் தோழனிடம் நீ என்ன ஜாதின்னு கேட்டுட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தேன். அப்பா பாட்டியிடம் அப்படியெல்லாம் கேக்காதேம்மா என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?"
* பாட்டிக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப ஜாஸ்தி. இப்போகூட டிவில மேட்ச் பார்த்தா பிளேயர்ஸ் டிரஸ் கலர வெச்சே எந்த நாடுன்னு சொல்லிடுவாங்க. டெண்டுல்கர் மேல பாட்டிக்கு தனி பாசம். டெண்டுல்கர் சிக்ஸ் அடிச்சுருப்பார். பாட்டி கேப்பாங்க "டெண்டுல்கர் அவுட்டா??" அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.
* என் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். அவர் சொன்னதால் தான் நான் டாக்டருக்கு படிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது.
* எனக்கு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வருகிறேன். என்னிடம் வந்து 'சித்திரைல பையன் பிறந்திருக்கான். வீட்டு பின்னாடியிருந்த தென்னம்படல் வேற விழுந்திடுத்து, இதோட போய்ட்டா பரவாயில்ல. யாருக்காவது ஏதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது?" என்றார். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
* நவம்பர் மாதம் நண்பனின் திருமணத்திற்காக நானும் அம்மாவும் ஊருக்கு சென்றிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலிருந்து கீழே வந்த பாட்டி அம்மாவிடம் "நீ போய்ட்டன்னா உன் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படும்" என்றார். மறுநாளே பேருந்தில் படிக்கட்டிலிருந்து அம்மா கீழே விழுந்தார்.
* ஊருக்கு புறப்படும்போது பாட்டியிடம் காசு கொடுத்துவிட்டு, கிளம்புறேன் பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க என்றதுக்கு "பொம்மனாட்டிகள் தனியா போறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது" என்றார். திரும்பி வரும்போது கார் டயர் பஞ்சர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாய் வீடு வந்து சேர்ந்ந்தோம்.
* மூத்த மகனுக்கு பொண்ணு பிறந்திருந்த சந்தோஷத்திலிருந்த பெரியம்மாவிடம் "உன் மாட்டுப்பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிடுத்தா?" என கேட்கவும் பெரியம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
* வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு வந்த அம்மாவிடம் "சந்துருவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை நீ என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச?" என்றார். பத்து நிமிஷத்தில் அப்பாவிடமிருந்து போன். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை ஒரம் இருந்த மரத்தில் பார்க் செய்யப்பட்டது என. அம்மாவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
இதுபோல ஏராளமான சம்பவங்கள். அவர் சொல்வதனால் தான் நடக்கிறது என்றில்லை. ஆனாலும் அந்த நிமிஷம் கோபம் வரத்தான் செய்கிறது. பின்னால் யோசித்துப்பார்க்கையில் தான் தெரிகிறது. வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. பாட்டி மூலம் நான் கற்ற ரெண்டு முக்கியமான விஷயம். 1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது.