April 30, 2009

அண்ணா நகரில் ஒரு வீடு

அப்பாவிற்கு மாற்றல் வந்ததால் அண்ணா நகரில் குடியேறினார்கள். பழைய வீட்டை காலி பண்ணிவிட்டு அண்ணா நகருக்கு வர ஒரு டூரிஸ்ட் கார் ஏற்பாடு பண்ணிருந்தோம். டிரைவர் தெரிந்தவர் தான். வேலை முடிந்து திரும்புகையில் என்னிடம் கேட்டார்.

"ஏன்க்கா ஐயர வச்சி பூஜை எதுவும் பண்ணாமலே புது வீட்டுக்கு போறாரே அப்பா."
"வாடகை வீட்டுக்கு எதுக்குங்க அதெல்லாம். நாளைக்கு காலைல பால் காய்ச்சுவாங்க. அது போதும்."
"வாடகை வீடா? நான் சொந்த வீடுன்னுல்ல நினைச்சேன்."
"அண்ணாநகரில் சொந்த வீடு வாங்குற அளவுக்கு வசதி இருந்தா எங்கப்பா ஏன் வாடைக்கு உங்ககிட்ட கார் எடுக்கிறாரு? சொந்தமா அவரே ரெண்டு வண்டி வாங்கிருக்கமாட்டாரு?"
"அதுவும் சரிதான்"
********

ஆனந்த தாண்டவம் படத்தில் வரும் கனா காண்கிறேன் பாடல் தான் இப்போதைக்கு என் ஹிட் லிஸ்டில் உள்ளது. கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்) பாட்டிற்க்குப் பிறகு நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் அட்டகாசமான பாடல். பாடல் தொடங்கும்போதும் முடியும்போதும் வரும் சுபா முட்கலின் குரலும் சூப்பர். நல்ல சாய்ஸ் GVP:)
**********

அண்ணன் குழந்தைகளோடு கோயிலுக்குப் போயிருந்தோம். பிரசாதமாய் கொடுத்த சர்க்கரைப் பொங்கலைப் பார்த்த அண்ணன் மகள் கேட்டாள். "ஏன் அத்த எப்பபாரு சாமிக்கு ரைஸே சாப்பிட தர்றாங்களே. போரடிக்காதா? சாமி பிட்ஸா சாப்பிடாதா?"
*********

SK, கார்க்கியோட வயித்தெரிச்சலோ என்னமோ தெரியல. நல்ல ரெஸ்டாரெண்ட் போய் ரொம்ப நாளாச்சு. ரொம்ப நல்லாருக்கும்டான்னு என் தம்பிய அழைச்சிகிட்டு போன ரெஸ்டாரெண்ட் சொதப்பினதுல அவன் செம டென்ஷனாய்ட்டான். ரொம்ப நாளா போகனும்னு நினைச்சிட்டிருந்த உணவகத்துக்கு ரகுவும், நாத்தனார் கணவரும் சர்ப்ரைஸாக அழைத்துக்கொண்டு போனாலும், அது சூப்பர் விக்கெட் ஆகி கடுப்பை கிளப்பிவிட்டது. அதப் பத்தின டீடெய்லான பதிவு அப்புறமா:)
*******

Times Now, NDTV, CNN IBN என எல்லா சேனல்களிலும் தேர்தல் ஸ்பெஷல் debate என்கிற பெயரில் குழாயடி சண்டை நடத்திக்கொண்டிருக்கின்றன. ராகுல் காந்தி ரசகுல்லா சாப்பிடதிலிருந்து, மோடி வாக்கிங் போறது வரை லைவ் கவரேஜ். நல்லவேளை நம்மூர் சேனல்களெல்லாம் வெறும் பிரசார ஒளிப்பரப்போடு தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டுள்ளன. இவனுங்களும் debate ஏதாவது ஆரம்பிச்சாங்க முடிஞ்சுது கதை. தேர்தல் வர்றதுக்குள்ள ஒரு வேட்பாளரும் உயிரோடு இருக்கமாட்டாங்க. எல்லாம் வெட்டிக்கிட்டு செத்துடுவானுங்க.
**********

April 28, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சகோதரர் அப்துல்லாவின் இளைய மகளுக்கு நேற்று பிறந்தநாள்.மருமகளுக்கு அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாரி குட்டிமா. இந்த தடவை கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அடுத்த தடவை ஜமாய்ச்சிடலாம்.

April 23, 2009

அடுத்தது என்ன?

ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.அடுத்தது என்ன? சவ ஊர்வலம் தான? எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. அடிக்கடி உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?

அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.

கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.

அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.

April 20, 2009

அப்பவே சொல்லிருக்கனும்

உன்னை முதன் முதலில் HOD அறையின் முன் பார்த்த போது ஒரே டிபார்ட்மெண்ட் என்ற தெரிந்தபின் நீ உதிர்த்த அந்த சினேகமான புன்னகையின்போதே சொல்லிருக்கனும். மெல்ல நண்பர்களான பின்னொருநாளில் தொழிற்சாலை பயிற்சிக்கு சென்றபோது பேசிய ஸ்வீட் நத்திங்ஸின் போதே சொல்லிருக்கனும். உன்னையும் என்னையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்தபோது உள்ளலவில் மகிழ்ந்தாலும், வேற ஆளே கிடைக்கலயாடா என்று கேட்டபோதே சொல்லிருக்கனும்.

கல்லூரி ஆண்டு விழாவின் போது புடவை கட்டிக்கொண்டு வந்து எப்படியிருக்கு என்று நீ கேட்டதற்க்கு தேவதைகள் புடவை கட்டினால் நன்றாகத் தான் இருக்குமென என சொல்ல வாய்திறந்து பேரலுக்கு துணி சுத்தினமாதிரி இருக்குன்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும். மருதாணி வைத்த கைகளைக் காட்டி நல்லாருக்கான்னு கேட்டபோது உன் உள்ளங்கைகளில் முத்தம் பதிக்க நினைத்தாலும் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்குன்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என நீ பாடிமுடித்தபோது எனக்காகத்தானே பாடினே என்று கேட்க நினைத்து காக்கா கத்தினத இன்னிக்கு தான் லைவ்வா கேட்டேன் என்றேனே அப்போதே சொல்லிருக்கனும். கொலை பசியோடு கேண்டீன் சென்றபோது இரண்டாவது தோசை கொஞ்சம் லேட்டாகுமென தெரிந்து முதல் தோசையை உன்னை சாப்பிட சொன்னேன். என் மேல அவ்ளவு அக்கறையான்னு நீ கேட்டபோது நான் அக்கறை காட்டாம வேற யார் காட்டுவா என மனதினுள் நினைத்தாலும் வெளிக்காட்டாமல் முதல்ல நீ சாப்பிடு. உனக்கு எதுவும் ஆகலைன்னா நான் சாப்பிடறேன் என்றேனே அப்பவே சொல்லிருக்கனும்.

விபத்தில் கை எலும்பு முறிந்து கட்டோடு நீ வகுப்புக்கு வந்தபோது எல்லாரும் get well soon என்றெழுதிய கட்டை காமித்து நீ எதுவும் எழுதலையா என்று கேட்டாய். வேண்டாம் உனக்கு வலிக்குமென்று சொல்லாமல் ரெண்டு கையும் உடைஞ்சிருந்தா நல்லாருந்திருக்கும்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும். ஒரே கம்பெனியில் இருவருக்கும் வேலை கிடைத்ததால் நம் வாழ்க்கைப் பயணம் தொடர்வதை எண்ணி சந்தோஷப்பட்ட நான் உன்னிடம் கர்மம் காலேஜ் முடிச்சும் உன் மூஞ்சிய பார்க்கும்படி ஆகிடுச்சே என்றேனே அப்பவே சொல்லிருக்கனும். என் அம்மாவைப் பார்க்க வந்திருந்த உன்னை உன் மருமகள பாருமா என சொல்ல நினைத்து காலேஜ்லிருந்து என் உயிரெடுக்கற பிசாசு இதுதான்மா என சொல்லிமுடித்தேனே அப்பவே சொல்லிருக்கனும்.

மின்னஞ்சலில் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என நீ சொன்னபோது அவர்களை வரவேண்டாமென சொல். நானிருக்கும்போது வேற எவன் உன் கழுத்துல தாலி கட்டுவான்னு பார்க்கிறேன் என சொல்ல தைரியம் வராமல் பாவம் அந்த பையன் என சொன்னேனே அப்பவாவது சொல்லிருக்கலாம். உன் கல்யாணத்துக்கு வராத காரணத்திற்காக நீ கோபித்துக் கொண்டாயே அப்பவாவது சொல்லிருக்கலாம். ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து அழைப்போ அஞ்சலோ வரும்போது அடித்துக்கொள்கிறதென் மனது. சொல்லித் தோற்ற காதலை விட சொல்லாமல் தோற்கும் காதலில் வலி அதிகமாம். உணர்கிறேன் உன்னால்.

April 17, 2009

Grand Palace - Chrompet

டிஸ்கி : பசி நேரத்தில் பதிவை பார்த்து வயிறெரிந்தால் கம்பெனி பொறுப்பாகாது:)

தாம்பரத்தில் ஹாட் சிப்ஸ், அடையார் ஆனந்த பவனை விட்டால் வேறு ஏதும் நல்ல ரெஸ்டாரெண்ட் கிடையாது. ஆனால் நல்ல கையேந்தி பவன்கள் உண்டு:) (அது அப்புறமாய் தனி பதிவு). ரகுவின் ஆபிஸ் நண்பர்கள் மூலமாக அறிமுகமானது கிராண்ட் பேலஸ். குரோம்பேட்டையில் உள்ளது. நாங்கள் சென்றது பஃபேக்கு. 250 ரூபாய்க்கு அசத்தலான பஃபே. அளவான அயிட்டங்கள். அத்தனையுமே அட்டகாசம். இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள். முதலாவது கொசகொசவென்றில்லாமல் நல்ல spacious பஃபே ஹால் (நாங்கள் சென்றபோது மூன்று டேபிள்கள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தன). சூடான உணவுகள். ஸ்டார் ஹோட்டல்களில் பரிமாறப்படும் ஆறிப்போன அயிட்டங்களை ஓப்பிடும்போது ஆச்சர்யத்தக்க வகையில் கொதிக்க கொதிக்க பஃபே அயிட்டங்கள். சரி over to the spread now.


வெஜ்/நான் வெஜ் சூப்கள் டேபிளில் சர்வ் செய்யப்படுகின்றது. நாங்கள் சென்றிருந்தன்று பப்பாளி ஜூஸும் பரிமாறப்பட்டது. ஸ்டார்டர்களான கோபி வறுவல், சில்லி வெஜிடபிள்ஸ் ரெண்டுமே மொறு மொறுவென சூப்பர். ஸாலட்களில் தக்காளி பேபி கார்ன் சாலட், weight watchers salad, முளைகட்டிய பயறு சாலட் மூன்றும் நன்றாக இருந்தன.டேபிளில் சர்வ் செய்யப்பட்ட நாண்/ரொட்டி ரொம்ப மோசம். ஆனால் சைட் டிஷ்கள் எல்லாமே ருசியாக இருந்தன. மேத்தி மலாய் சப்ஜி, தால் மக்கனி, பனீர் ஜால்ப்ரைஸ், தால் தட்கா, கோவா முட்டை கறி எல்லாம் worth mentioning. நான் வெஜ் அயிட்டங்களில் ரெண்டு கிரேவியும் மட்டன் பிரியாணியும் இருந்தது.

இதோடு schezwan fried rice, sprouted bean noodles, சாதம், ரசம் ஆகியவையும் இருந்தன. Desserts ரொம்ப நார்மல். ஆனால் என்னோட பேவரிட்டான கேரட் அல்வாவும், கேரமல் புட்டிங் ரெண்டும் டாப் கிளாஸாக இருந்தன. தேங்காய் பர்ஃபி, ஜாங்கிரி, fruit tiramsu ஆகியவையோடு வெண்ணிலா/ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமும் வைக்கப்பட்டிருந்தன.
மேலதிக தகவல்கள்

உணவகம் - ஹோட்டல் கிராண்ட் பேலஸ்
இடம் - குரோம்பேட்டை பேருந்து நிலையத்தின் எதிர்புறம். Nitra பர்னிச்சர்ஸ் பக்கத்தில்.
டப்பு - பஃபே உணவுக்கு 250 ரூபாய். இருவருக்கு வரிகளும் சேர்த்து 520 ரூபாய் ஆனது.

பரிந்துரை - கொடுத்த காசுக்கு திருப்தியான உணவு. வெரைட்டி கொஞ்சம் கம்மி தானென்றாலும், சுவை ரொம்ப நல்லாருக்கு. கண்டிப்பா ஒரு தடவை முயற்சி செய்யலாம்.

டிஸ்கி : 4 மாதங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு. எப்படியோ மிஸ்ஸாகியிருந்தது:)

April 16, 2009

ஹேர் ஸ்டைல் - ஜூனியர் டைம்ஸ்

ஜூனியர் பிறந்தபோது தலை நிறைய முடி. ஆனால் சைடில் மட்டும் ஒன்னுமே இருக்காது. வீட்டிலிருப்பவர்களுக்கு அப்பவே கவலை. விளக்கெண்ணைய் தடவு அது இதுன்னு ஆயிரம் டிப்ஸ்.

ஒன்பது மாசத்துல எடுத்தது இது.
இது பெரியம்மா பண்ண வேலை
மொட்டை அடிக்கிறதுக்கு பத்து நாளுக்கு முன்னால எடுத்த போட்டோ இது. அம்மா வீட்ல வேலை செஞ்சவங்களோட கைங்கர்யம்.
அவனுக்கு காது குத்தினதுக்கப்புறம் எல்லாம் ரொம்ப பயந்தது மொட்டை அடிக்கதான். குலதெய்வம் கோயிலுக்கு மொட்டை அடிக்க போனபோது எக்ஸ்ட்ரா ஒரு வேண்டுதல வேற வெச்சிருந்தாங்க அம்மாவும் மாமியாரும். அது என்னன்னா மொட்டை அடிக்கும்போது குழந்தைக்கு ரத்த காயம் ஆகக்கூடாதுன்னு. எங்க வேண்டுதல்களுக்கெல்லாம் வேலையே வைக்காம ஜூனியர் நடந்துகிட்டார். போட்டோவ பாருங்க.


துளிகூட அசையல. ஒருவேளை அவர் எடுத்தது துரைக்கு சுகமா இருந்ததா தெரியல.


கரெக்டா முடிஞ்சவுடனே எழுந்துட்டான்.


அப்புறம் கோவில் குருக்கள் வீட்டிலேயே குளிப்பாட்டி சந்தனம் தடவியாச்சு.

இது மொட்டை அடிச்சு ரெண்டு மாசம் கழிச்சு எடுத்தது. ஸ்பைக்ஸ் ட்ரை பண்ணினேன்:)

அதுக்கப்புறம் ரகுவோட தாத்தா தவறிட்டதால பாக்கி இருக்கும் ரெண்டு மொட்டைகள் தள்ளி போச்சு. நிறைய முடி வளர்ந்துடவே வியர்வை சேர்ந்து ரொம்ப கஷ்டமா இருந்தது. அடிக்கடி சளி வேற. டாக்டர் கூட ஹேர் கட் பண்ண சொன்னார். சரி சிகை அலங்கார நிபுணரை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து ஹேர் கட் பண்ணிடலாம்னு முடிவு பண்ணோம். காலைல 7 மணிக்கு வந்தவர் ஒரு மணிநேரம் கழிச்சு "நானும் எவ்வளவோ குழந்தைகளுக்கு முடி வெட்டிருக்கேன். இந்தளவுக்கு கஷ்டப்பட்டதே இல்லை". பேசாம ஒரு ட்ரிம்மர் வாங்கி நீங்களே கட் பண்ணிடுங்கன்னுட்டு போய்ட்டார்.

அதுக்கப்புறம் ரெண்டு தடவை அவனுக்கு ஹேர்கட் பண்ணியாச்சு. எலக்ட்ரிகல் ட்ரிம்மர் வாங்கிட்டு வந்து துரை நல்லா தூங்கும்போது நான் பிடிச்சுக்க ரகுவே வேலையே முடிச்சிட்டார். மொட்டை அடிக்காதது தான் குறை. நல்லா ஒட்ட வெட்டியாச்சு. சம்மருக்கு ஜூனியருக்கும் வசதியா இருக்கு. அநேகமா இந்த ஜூன் மாதம் அவனுக்கு ரெண்டாவது மொட்டை போடுவாங்கன்னு நினைக்கிறேன். போடறபட்சத்தில் பயணக்குறிப்புகளோட போட்டோ செஷன் ஒன்னு வெச்சிடலாம்.

April 15, 2009

ஈழமும் ஓட்டு வங்கியும்

எவ்வளவோ போராட்டங்கள். எவ்வளவோ பேரணிகள். எவ்வளவோ தீக்குளிப்புகள். தீர்வே இல்லையா என கதறும் சொந்தங்கள். நம் சொந்தங்கள். ஆனால் அதிகாரவர்க்கம் அழுத்தமாய் மௌனம் காக்கின்றது. இல்லையேல் அவ்வப்போது கொஞ்சம் கண்துடைப்புகள். சீக்கியர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு டைட்டலருக்கும், சஜ்ஜானுக்கும் போட்டியிட வாய்ப்பளிப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிதம் போராட்டம் என சொந்தங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழர்களின் குரல் காதில் விழவில்லையா? இல்லை கேட்காததுபோல் நடிக்கிறார்களா? இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் நாளைக்கு நமக்கும் நடக்கும். நடக்காதென்பதிற்க்கு யார் உத்திரவாதம்?


பதவியை துறந்தால் தீர்வு வந்துவிடுமா? சிலர் பேசும் பேச்சுக்கு நான் பதவியில் இருப்பதால் தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் முதல்வர். தமிழ் உணர்வாளர்களென தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவுக்கோ, வைகோவுக்கோ இப்போது எம்.பி சீட் தான் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை.


நம்மால் ஏதும் செய்ய இயலுமா? நாம் ஏன் இந்த சுயநல அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கக் கூடாது? ஓட்டு வங்கிகளாக இருந்தது போதும். இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். ஒட்டு மொத்த அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமேனும் பயத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நம் கையிலிருக்கும் ஆயுதம் 49O. ஏற்கனவே இம்முறையினில் வாக்களிப்பதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார். இது சாத்தியமா என தெரியவில்லை. நடைமுறைப் படுத்தலாம் என்றால் நாம் ஏன் 49Oவை ஆயுதமாக உபயோகிக்கக்கூடாது? அவ்வாறு செய்து மறுபடியும் தமிழகத்துக்கு தேர்தல் நடக்குமேயானால் ஈழப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கட்சிக்கே ஓட்டு என அறிவித்தால் நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு தீர்வுகாணமாட்டார்களா? இதுவும் நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.

Make a wise decision. Vote for YOUR future.

April 9, 2009

காலாண்டு முடிவுகள் - அதிக வருமானம் ஈட்டிய துறை

எல்லாரும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அரசுத் துறை ஒன்று எப்போழுதும் இல்லாத அளவுக்கு பெரும் லாபம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையே பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்குமென பொருளாதார நிபுணர்கள் கூறிவந்த நிலையில் இந்தச்செய்தி எல்லாரையும் அதிர்ச்சியிலும்/ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தீவிரமான அலசலுக்கு பின் தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளும் வகையில் இன்ன்னொரு தகவலும் வெளியாகிவுள்ளது. அத்துறையின் இந்த மெகா லாபத்துக்கு முக்கியமான காரணம் தமிழகம் தானாம். சரி அது எந்த துறை என்று தானே யோசிக்கிறீர்கள்?

*******************

*******
**********

*************************************
**************


*****************************

*****************முக்கிய காரணகர்த்தவான கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி தந்தி தலை வெளியிடுவதென்றும், சைடு காரணமான இளையத் தளபதியை பாராட்டி அவரின் சமீப படத்தை அனைத்து தபால் துறை ஊழியர்களும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இயற்றப்போவதாகவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

April 8, 2009

கஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி

டிஸ்கி (எ) எச்சரிக்கை : சங்கர் நேத்ராலயா/ அகர்வால் போன்ற கண் மருத்துவமனை பில்களையும், கண், இதயம் மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களின் செலவை கம்பெனி ஏற்றுக்கொள்ளாது.

கஜினி படத்தில் வரும் குஸாரிஷ் பாடலில் அமீர்கானின் கெட்டப்பைப் பார்த்த கோலிவுட்டின் பிரபல நடிகர் அந்த கெட்டப்பை தானும் போட வேண்டுமென்று ஆசைப் பட்டதோடில்லாமல், அமீர்கானை விட பெட்டராக இருக்கவேண்டும் என்று மெனெக்கெட்டாராம். விரைவில் திரையரங்குகளை ஆக்கரமிக்கவிருக்கும் அந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியை காஸ்டியூமிற்காகவே ஒன்ஸ் மோர் கேட்பார்கள் என கேள்விப்பட்டதாக கேபிள் சங்கர் கூறினார்.
இதைக் கேள்விப்பட்ட அமீர்கான் நடிப்பதையே விட்டுவிடலாமென முடிவெடுத்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். மேலே உள்ள போட்டோவுக்கு டஃப் காம்படீஷனாக இருக்கப்போறவர்

.......................

.............................


..............


................April 6, 2009

அல்லோவ் மைக் டெஸ்டிங்

ம்ம்ம். நாலு தெரு கூடுற இடத்திலெல்லாம் இனிமே காதைப் பொத்திக்கிட்டு தான் போகனும். அரசியல் கட்சிக்காரங்க அளப்பறைய ஆரம்பிச்சாச்சு. இனிமே நம்ம சொல்ல வேண்டிய டயலாக் இதுதான் "நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாரயணா." நானும் என் பங்குக்கு கொஞ்சம் தோரணம் கட்டலாம்ன்னு தான் இந்த பதிவு.
**************

3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி - கேப்டன் விஜயகாந்த்

அப்புறம் எதுக்கு உங்க மச்சான் சுதிஷும் பண்ரூட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்கு போய் தொன்னை சே அன்னை சோனியாவை சந்திச்சாங்களாம். ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?
**************

சீரஞ்சீவி பற்றி சிலாகித்துப் பேசியிருக்கார் சரத்குமார். அவர் தான் தன் ரோல் மாடல்ங்கற மாதிரி சொல்லிருக்கார். ஏதேது விட்டா புயல் ஆந்திராவில் மையம் கொண்டு அங்கே ஆட்சிய கைப்பற்றிடும் போலிருக்கே. போங்கய்யா போய் புள்ளய படிக்க வைங்க.
**************

"தன் மகனின் பதவிக்காக முடிவை மாற்றினார் ராமதாஸ்". கலைஞர் குற்றச்சாட்டு. தோடா பதவியப் பத்தி யார் பேசறது. ஆஸ்பத்திரில படுத்துக் கிடந்தாலும் பரவால்ல. ஆனா நான் தான் முதலமைச்சரா இருப்பேன் அடம்பிடிச்ச நீங்க இந்த ஸ்டேட்மெண்ட் வுடக்கூடாதய்யா.
**************

அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
**************

பா.ம.க அண்புமணியிடம் கேக்கக் கூடாத கேள்வி - "சார் ஜெயிச்சு கப் வாங்கறதுன்னா என்னா சார்?"
************

தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்போம் - பிரகாஷ் காரத்.
காங்கிரசுடன் இனிமேல் எப்போதுமே கூட்டணியில்லை - சீதாராம் யெச்சூரி.

பொலிட் பீரோவை கூட்டி பொளிச்சுன்னு ஒன்னு வைச்சா தான் சரிவரும் போல. பொறந்ததிலிருந்தே நீங்க இப்படித்தானா? அரசியல்ல காமெடி பண்ணலாம். ஆனா அரசியலையே காமெடியா பண்ணா?
************

கூட்டணியில் சிறுத்தைகளை சேர்க்கக்கூடாது - காங்கிரஸ்.
தி.மு.க கூட்டணியில் தான் இருப்போம் - தொல்.திருமாவளவன்.

திருமா சார் போடா நீங்களும் உங்க தொகுதி ஒதுக்கீடும்ன்னு தூக்கிப்போட்டுட்டு வரவேண்டியதுதானே. சோக்கா உண்ணாவிரதமெல்லாம் இருந்தீங்க. இப்போ எங்க போச்சு ஈழ பேச்சு. தேர்தல் தேதி அறிவிச்சதிலிருந்து ஈழத்துக்கு ஸ்பெல்லிங்கூட மறந்துபோயிருச்சு உங்களுக்கு. நீங்கன்னுல்ல எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஈழம்ங்கறது தோள்ல போடுற துண்டு மாதிரி தான். இதப் புரிஞ்சுக்காம ஏதாவது நல்லது நடந்துடும்ன்னு ப்ச்ச் விடுங்க. மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.

அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க.

இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.

கர்ணனின் மனைவி பேர் என்ன?

ஒரே நாள்ல ரெண்டு படத்த பத்தி விமர்சனம் போட்டிருந்தேன். யார் கண்ணு பட்டுச்சோ தெரியல. வெண்ணிலா கபடிகுழுவிற்க்கு பிறகு படம் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை (அலுக்க அலுக்க பயணங்கள், அசரடித்த ஆணிகளின் புண்ணியம்.). ரொம்ப நாளாக யாவரும் நலம், அருந்ததீ பார்க்கனும்ங்கற ஆவல் போன வெள்ளி தான் நிறைவேறிச்சு. அதுவும் யாவரும் நலம் மட்டும் தான் பார்க்க முடிந்தது. வீணாப் போன மீனாவும், பாழாப்போன பிரசாந்தும் நடிச்ச???!!!! ஷாக் படத்தைப் பார்த்து நொந்து போயிருந்த எனக்கு தமிழில் இப்படியோர் த்ரில்லர். விறுவிறுப்பான திரைக்கதை. பார்ட் இரண்டுக்கு வெயிட்டிங் விக்ரம் சார்.
*******************

யாவரும் நலம் பார்த்தது அன்னை அபிராமி திரையரங்கில். இதுக்கு முன்னாடி அபிராமி மாலில் ஆதி என்ற சூரமொக்கை படத்துக்கு (ஸாரி கார்க்கி) போனேன். அன்னை அபிராமியை சைனீஸ் தீமில் வடிவமைத்திருக்கிறார்கள். தியேட்டர் சூப்பராக இருந்தது. ஆனால் பயங்கர கும்பல். ரொம்பவே குறுகலான பாதைகள். கொஞ்சம் கவனிங்கப்பா. எமர்ஜென்ஸி காலங்களில் ரொம்ப கஷ்டம்.
********************

அப்பாவிற்க்கு உடல்நிலை சரியில்லாததால் மெடிக்கல் லீவில் இருக்கிறார். (வேற வழியே இல்லாமல்) டிவி பார்த்து செம எரிச்சலில் இருக்கார். போன வாரம் அங்கு சென்றிருந்தபோது ராஜ் டிவியில் கர்ணன் படம் போட்டிருந்தார்கள். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர்தான் பார்க்க ஆரம்பித்தோம். "உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்" பாட்டு முடியும் வரை சேனல் மாற்றக்கூடாது என அம்மா உத்தரவிட்டார்கள். தீடிரென்று கர்ணனின் மனைவி பெயர் அறியும் ஆவல் ஏற்படவே
"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன?"
"தேவிகா"
"அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்."
"Mrs. கர்ணன்"
"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
*************

நண்பன் ஒருவனை ரொம்ப வருடங்கள் கழித்து நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரகுவும் உடன்வந்திருந்தார். என் கல்யாணத்துக்கு அவன் வரவில்லை. ரகுவிடம் பேசிக்கொண்டிந்தபோது இதைக் கூறி வருத்தப்பட்டான். உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.
***********

வர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க. விட்டா சாப்பிடவே கூடாது. சாப்பிட்டா வாய்ல கேன்சர் வரும்ன்னு சொல்லுவாங்க போலிருக்கு. நடத்துங்கப்பு நடத்துங்க.
***********

வரும் நாட்களில் இரண்டு தொடர் பதிவுகளை எழுத ஆரம்பிக்கலாமென்றிருக்கேன் (இருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது). பயப்படாதீங்க அதுவும் ஒரு விதமான மொக்கை தான். மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே.

April 2, 2009

யூத்புல்விகடனில் எனது பதிவு

ஹே எல்லாரும் பாருங்கப்பு நானும் ரவுடிதான்:) வெள்ள நிவாரணம் பற்றிய என்னுடைய பதிவுக்கான சுட்டி யூத்புல் விகடனில் கொடுக்கப்பட்டுள்ளது. ப்பூ இதெல்லாம் ஒரு மேட்டரா எனக் கூறுபவர்களுக்கு என்னுடைய எழுத்துக்கும் அங்கீகாராம் கிடைத்திருக்கிறதே. என்னைப் பொறுத்த மட்டில் அது பெரிய விஷயம் தான். தகவல் தந்த உழவனுக்கு மிக்க நன்றி.

பதிவில் நான் கூறியிருந்த தீர்வுகளை செயல்படுத்திப் பார்க்க விழைகிறேன். SK கூறியதுபோல் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பதால் நிலங்கள் குப்பை மேடாவதை தடுக்க முடியுமென நினைக்கிறேன். இதற்கான முயற்சிகளை எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. அடுத்த பருவ மழைக்குள் ஒரு சிறிய இடத்தையாவது சீரமைக்கவேண்டுமென்பது என் ஆசை. விவரம் தெரிந்தவர்கள் யாரேனும் உதவுங்களேன். ஏதோ நம்மால் முடிந்தளவு பூமியின் அழிவை தள்ளிப்போடுவோமே.

நதியின் நடை

நீராவியாய் எழுந்து

மேகமாய் தவழ்ந்து

மழையாய் பொழிந்து

அருவியாய் விழுந்து

நளினமாய் நடக்கும்

நதியே

உன் நடையில் ஏனிந்த அவசரம்?

கடல் காதலனுடன் கூடச் செல்கிறாயே அதனாலேயா?


டிஸ்கி 1 : மணிகண்டனின் இந்தக் கவுஜையைப் பார்த்தது பழைய நினைவுகளை மீட்டெடுத்து (பள்ளிப் பருவத்தில் வடித்த கவுஜையிது) கவுஜை பதிந்திருக்கிறேன்.


டிஸ்கி 2 : திட்டறதுக்கு முன்னாடி லேபில பார்த்துடுங்கப்பு :)

April 1, 2009

நிவா"ரணம்"

முன்னாடி எழுதின துணுக்ஸ் பதிவுல பாண்டிச்சேரில நிவாரண நிதி கொடுத்தது தொடர்பா நான் என்னோட கருத்துக்களைப் பதிவு செஞ்சிருந்தேன். அதுக்கு பரிசல் "அதுல 10%தான் மக்களுக்குப் போகும். இதுல அட்லீஸ்ட் 50%ஆவது பணமா மக்கள் கைல போகும். நல்லா யோசிச்சு, அப்படிப் பண்றதால என்ன நன்மை.. தீமைன்னு பதிவு போடுங்க"ன்னு சொல்லிருந்தார். பெரியவங்க சொல்றத நான் என்னிக்குமே கேட்பேன் (கொலை வெறியோட நீங்க பரிசல துரத்தப்போறீங்கன்னு எனக்குத் தெரியும்). சரி விஷயத்துக்கு வருவோம். வெள்ள நிவாரண நிதி அவசியமான ஒன்றா?எது முக்கியம்? நிவாரணமா? நிரந்தர தீர்வா? பிரச்சனைக்கு யாரெல்லாம் காரணம்? இந்தப் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? முடிந்தவரை நடுநிலைமையாக என் கருத்துக்களை முன் வைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொழியும் பருவ மழையானது கடந்த ஏழெட்டு வருடங்களாக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகமெங்குமே இந்தப் பிரச்சனையிருந்தாலும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது வடசென்னை தான் (மீடியாக்கள் அப்படித்தான் கூறுகின்றன). நானும் சென்னையையே உதாரணத்திற்க்கு எடுத்துக்கொள்கிறேன். மழை என்றால் முக்கியமாக பாதிக்கப்படும் இடங்கள் வேளச்சேரி, மடிப்பாக்கம், வடசென்னை மற்றும் பல பகுதிகள். அரை நாள் மழைக்கே இந்தப் பகுதிகள் எல்லாம் குளம் போலாகிவிடும். ஒரு நாள் முழுவதும் மழை பெய்தால்? படகு மூலம் தான் வீட்டை விட்டு வெளியேற முடியும். ஒவ்வொரு வருஷமும் மக்கள் படும்பாடு நான்கு மாதங்களுக்கு தான் பேசப்படுகிறது. கொஞ்சம் வெயிலின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்போதும் வாயில் கரையும் தர்பூசணி துண்டுகள் போல் பிரச்சனைகளும் கரைந்து விடுகிறது. ஏனிந்தளவிற்க்கு தண்ணீர் தேங்குகிறது. பிரச்சனைக்கு யார் காரணம்? கண்டிப்பாக நாம்தான். நம் ஒவ்வொரு செயலும் இயற்கைக்கு முரணாக ஆபத்தாகத்தானிருக்கிறது. பருவ நிலைகளில் மாற்றம், பூமியின் தட்ப வெப்பங்களில் மாற்றம் என மறைமுகமாக நாம் இயற்கையின் மீது போர் தொடுக்கின்றோம். இந்தக் காரணங்கள் ஒரு புறம். இன்னொரு மிகப்பெரிய காரணம் நீர்நிலைகளை அழிப்பது. சரியான வடிகால் வசதி இல்லாதது. இருக்கும் வடிகால்களையும் சரியாக பராமரிக்காமலிருப்பது. ஒரு இடம் விடாமல் பிளாட் போட்டு வித்தால் என்னாகும்? பிளாட் போட்டது போக மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிலங்களையும் குப்பை மேடாக மாற்றிவிடுகிறோம். அப்புறம் தண்ணீர் எப்படி வடியும்? நதியின் பாதையை அடைத்து கட்டப்பட்டிருக்கும் நிகர்நிலை பல்கலைகழகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அடையாறின் இன்றைய நிலையை பார்த்து ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? ஏரியில் ஆக்ரமிப்பு செய்து வீடு கட்ட வேண்டியது. அப்புறம் மழைத்தண்ணி வீட்டுக்குள் புகுந்துவிட்டது என ஒப்பாரி வைக்க வேண்டியது. இங்கு யாரை குற்றம் சொல்வது? ஏரியை கூறு போட்டு வித்தவனையா? வாங்கினவனையா? இல்ல வீடு கட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அதிகாரிகளையா? எல்லாரையும் தான். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்பதுபோல் இந்த விஷயத்திலும் மக்களுக்கு விஷயத்தின் வீரியம் புரியும் வரை இந்த அவல நிலை தொடரத்தான் செய்யும்.
ஒவ்வொரு முறை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆயிரங்களை நிவாரண நிதியாக அளித்து தப்பித்துக்கொள்கிறதே அரசாங்கம். நிவாரண நிதி இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகிவிடுமா? பரிசல் சொல்வதென்னமோ உண்மை தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் தீர்வு காணக்கூடிய பிரச்சனைக்கு வெட்டியாக பணம் செலவழிப்பதை விட, நிரந்தர தீர்வு கிட்டினால் வேறு நல்ல திட்டங்களுக்கு இந்தப் பணத்தை உபயோகிக்கலாமே. கிடைக்காத பலாக்காய்க்கு கையிலிருக்கும் களாக்காய் மேலென்பதை எத்தனை காலம் ஒற்றுக்கொள்ள முடியும்? பலாவை ருசிக்க நமக்கு உரிமையிருக்கும்போது எத்தனை நாட்கள் இந்த சமாதானத்தை சொல்லப்போகிறோம்? 2000 ரூபாய் பணம், ஒரு புடவை, ஒரு வேஷ்டி, பத்து கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணைய்க்காக எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் மிதிபட்டு செத்தார்களே. எவருக்கேனும் நினைவிருக்கிறதா? என் உறவினர் ஒருவருக்கு இந்த மழையால் ஏற்பட்ட செலவு 15,000. கிடைத்த நிவாரணம் 2000. இது வெறும் உதாரணம் தான். இதைவிட கொடிய இழப்பான உயிரிழப்புக்கு யாரால் நிவாரணம் தரமுடியும்?

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு. நம் சக்திக்குட்பட்ட தீர்வுகள் நிறையவே இருக்கு. அவற்றில் என் சிற்றறிவுக்கு எட்டிய சில

# வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தாமலிருப்பது. அதாவது குப்பையை குப்பைத்தொட்டியில் மட்டுமே கொட்டுவது.

# பிளாஸ்டிக்கின் உபயோகத்தை கூடுமானவரை தவிர்ப்பது. மறுசுழற்ச்சி செய்யமுடியாத பொருட்களால் தான் குப்பை தேங்குவது, வடிகால் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

# நீர் நிலைகளை பராமரிப்பது. குளம், ஏரி போன்றவற்றை அசுத்தப்படுத்தாமல் அடிக்கடி தூர் வாரி பராமரித்தால் சுபிக்ஷ்ம் நிச்சயம்.

# சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது. இதனால் பருவ நிலைகளின் மாற்றத்தை கொஞ்சமாவது தடுக்க முடியும்.

# Go green. முடிந்தவரை மரம், செடி கொடிகளை காப்பாற்றுங்கள். பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

# மழை நீர் சேகரிப்பு திட்டம். இது காஸ்ட்லியான திட்டமானாஅலும் ராமருக்கு அணில் உதவியது போல நிலத்தடி நீரின் அளவை ஒரளவேனும் உயர்த்தும்.


இம்மாதிரியான திட்டங்களின் மூலம் சிறுவேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

இது கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கு. மேற்கூறியவற்றில் கொஞ்சம் கடைபிடித்தாலே போதும்.ஒரளவேனும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

புகைப்படங்களுக்கு நன்றி http://www.anandnataraj.com/chennai-floods-2008