Showing posts with label சங்கிலிப் பதிவுகள். Show all posts
Showing posts with label சங்கிலிப் பதிவுகள். Show all posts

March 14, 2011

வித்யா ரம்பம் கரிஷ்யாமி

பெயர்க்காரணம் பற்றிய தொடர்பதிவிற்கு கோபி அழைப்பு விடுத்திருந்தார். என்னுடைய பெயருக்கான காரணம் பெரிய வரலாற்றுச் சம்பவமா இல்லைன்னாலும் தொடர்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சே. இத சாக்கா வச்சி மொக்கையப் போடலாமேன்னு எழுதறேன். என்னையும் மதிச்சு எழுதச் சொன்னதுக்கு நன்றி கோபி:)

எனக்கு வித்யான்னு பெயர் வச்சது என் அத்தைதானாம். பெரிய பெரியப்பா/பெரியம்மா டீச்சர். ரெண்டாவது பெரியப்பா மிலிட்டரில இருந்தாரு. அவருக்கும் கிட்டத்தட்ட டீச்சர் போஸ்ட்தானாம். அத்தையும் மாமாவும் டீச்சர்ஸ். எங்கப்பாவும், சித்தப்பாவும் தான் டீச்சர் உத்யோகம் பார்க்காம வேற லைனுக்கு போனது. குடும்பத்துல பாதி பேர் பயிற்றுவிக்கும் பணில இருந்ததால் எனக்கு படிப்புக் கடவுளான சரஸ்வதியின் பெயரையே வச்சிட்டாங்க. சின்ன வயசில அம்மா சொல்லிக்கொடுத்த ஸ்லோகமான ”நமஸ்துப்யம் வரதே”வில் என் பெயரும் வருதேன்னு ரொம்ப பெருமையா இருக்கும். பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:)

என்னுடையது unique பெயரெல்லாம் கிடையாது. தெருவுக்கு தெரு வித்யாங்கற பேர்ல யாராவது இருப்பாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் இன்னொரு வித்யாவால பெயர்க்குழப்பம் வந்ததேயில்லை. பள்ளியில், என் வகுப்பில் நான் ஒருத்திதான் வித்யா. கல்லூரியில் நிறைய வித்யாக்கள் இருந்தாலும் எல்லோரும் வேற வேற டிபார்ட்மெண்ட். அதனால் நோ ப்ராப்ளம். வேலைக்குப் போகும்போது ட்ரெய்னிங்கில் இன்னொரு வித்யா இருந்தாள். அவள் வித்யாலக்‌ஷ்மி. அதனால் அங்கேயும் குழப்பம் லேது.

பேரென்ன?

வித்யா

இனிஷியல்?

C

ஓஹ். ஸ்ரீ வித்யாவா?

இல்லைங்க C.வித்யா

அதான்மா ஸ்ரீ வித்யா தான நானும் சொல்றேன்.

ஐய்யோ சார். ஸ்ரீ இல்ல சார். C. C. இது வேலைக்காவது. நீங்க வித்யா சந்திரசேகரன்னே ரெஜிஸ்டர் பண்ணுங்க.

இப்படித்தான் C.Vidhyaவாக இருந்த நான் வித்யா சந்திரசேகரனானேன். அன்றிலிருந்து இன்று வரை, இனிமேலும் நான் வித்யா சந்திரசேகரன் தான். கல்யாணமான பின்பு நிறைய பெண்கள் கணவர் பெயரை சேர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். என் அம்மா உட்பட. என் மாமியார் வீட்டில் கூட “என்ன அப்பா பேரை எழுதற. ஹஸ்பெண்ட் பேர்தான எழுதனும்?” அப்படின்னு சொன்னாங்க. அப்படியெதுவும் ரூல் இருக்கா என்ன எனத் திருப்பிக் கேட்டேன். அதோடில்லாம ஜஸ்ட் லைக் தட் பெயரெல்லாம் மாத்திக்கமுடியாது. கெஸட்ல பதியனும். சர்ட்டிஃபிக்கேட்ல எல்லாம் என்ன பெயர் இருக்கோ அதுதான் கடைசி வரைக்கும் யூஸ் பண்ணனும். அதான் நல்லதுன்னு சொல்லி ஒரு வழியா சமாளிச்சேன்.

அவ்ளோதான் பெயர்காரணம், புராணமெல்லாம். எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)

July 23, 2010

நான் யார் தெரியுமா?

பதிவுலகத்தில் நான் எப்படிப்பட்டவர் என்ற தொடர் பதிவுக்கு விதூஷக்கா கூப்பிட்டிருக்காங்க. ஓய்ய்ய்ய்ய்ய்ய். நாங்கள்லாம் யார் தெரியும்ல என சவுண்ட் விட நானும் களத்தில் குதிச்சாச்சு. கமான் கொஸ்டீன் மீ. கொஸ்டீன் மீ..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வித்யா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சிங்கம் எங்க போனாலும் சிங்கம் தான். அதே மாதிரி நான் இங்கயும் வித்யா தான்:)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அந்த மங்களகரமான நிகழ்வை (நாசமாப் போக என நீங்கள் சொல்வது எனக்கு கேக்குது) இதோடு நூத்தி நாப்பது தடவை எழுதியாச்சு. இங்கன போய் படிச்சு பார்த்துக்கோங்க.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஆங் அப்படியே செஞ்சி பிரபலமாயிட்டாலும். இன்னும் கொஞ்சம் பெட்டராய் சொல்லனும்னா “எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காதுங்க. நான் என் மனநிறைவுக்காக எழுதறேன். ஹிட்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் முக்கியமில்ல”. (இதான் சாக்குன்னு கமெண்ட் போடாம போனீங்க பூச்சாண்டிக்கிட்ட புடிச்சிகுடுத்திடுவேன்).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எழுதற முக்கால்வாசி மேட்டர் நம்ம சொந்தக் கதை சோகக் கதைதான். ஏன்னு கேட்டா யோசிச்சு எழுதற அளவுக்கு சரக்கு லேது. விளைவுகள் ஏற்படுமளவிற்கு நான் எதையும் (இங்கு) யாரிடமும் பகிர்வதில்லை.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் எழுதற மொக்கைக்கெல்லாம் காசு கொடுப்பாங்களா? Time pass. Relaxation. அம்புட்டுதேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் நிறைய ஏற்படுவதுண்டு. தவறுகளை சுட்டிக்காட்டும் அளவிற்கு எனக்கு யாருடனும் பழக்கமில்லை. ஒருமுறை பட்டதே போதுமென தோன்றுகிறது. (நட்பைப் பொறுத்தவரை பதிவுலகத்திற்காக என் உலகத்தை திறப்பதற்கு ரொம்பவே தயக்கமாய் இருக்கிறது. I know i'm wrong here. Still i've my own reasons). நான் எழுத வந்தது ரிலாக்சேஷனுக்காக. அதை மட்டும் பார்த்தால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. அதையும் மீறி சில நிகழ்வுகள் எரிச்சலடைய செய்கின்றன. I act as a blind, deaf n dumb in blogdom during serious issues.

பொறாமை நிறைய பேரின் எழுத்தைப் பார்த்து. மொக்கை, சீரியஸ், இலக்கணம் என நிறைய விஷயங்களில் பலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். நீயும் இருக்கியே என்ற எண்ணம் ஏற்படும். அந்த லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

ஹி ஹி. என்னை எழுதுன்னு சொன்ன என் தம்பிதான் (அடிக்க தேடாதீங்க. அவன் பதிவுகலத்தை விட்டு எஸ்ஸாயிட்டான்). என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் பாராட்டுவாங்க. ஆனாலும் எப்படி இப்படி உன்னால அடக்கி வாசிக்க முடியுதுன்னு கலாய்ச்சிக்கிட்டே இருப்பாங்க. காங்க. இப்பல்லாம் கமெண்ட் வரதே பெரிய விஷயமா இருக்கு. பதிவர்களில் எப்போதாவது விக்கி உரையாடியில் பதிவு நல்லாருக்குன்னு பாராட்டுவார். நோட் பண்ணுங்க எப்போதாவது. ஏன்னா நான் எப்பவாவது தான் நல்லா எழுதறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

ஒன்னியும் தெரிய வேணாம். தெரிஞ்ச வரைக்கும் போதும். 2016ல சி.எம் ஆனதுக்கப்புறம் அவங்கள எனக்கு நல்லா தெரியுமேன்னு யாராச்சும் சிபாரிசுக்கு வந்துட்டா. என்னதான் கொடை வள்ளலா இருந்தாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வேணுமல்லவா. ஆகவே தோழர்களே....

இதை கண்டினியூ பண்ண நான் கூப்டறது

வெட்டிவம்பு விஜய்
"No time for blog" என அலப்பறை பண்ணும் ராஜி
“பிரபல பதிவர்” விக்னேஷ்வரி (விக்கி நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்கள
பிரபலமாக்கிட்டேன். அமவுண்ட் சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்க)
உழவன்

March 24, 2010

பஸ் நம்பர் 1

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என மூன்று கட்டங்களில் பேருந்து என்பது எனக்கு தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகவே இருந்தது. எந்தக் காலத்திலும் பேருந்து பயணத்தில் காதல் வயப்படவில்லை (சத்தியமா. நம்புங்க). பள்ளியின் போது பொறுப்பான ரெப்ரசெண்டேடிவாய் ஜூனியர்களை ஒழுங்குப்படுத்தி அமர வைப்பது, யாரும் கூச்சலிடாமல் பார்த்துக்கொள்வது என பல வேலைகள். பொறுப்பு நம்மிடமிருக்கும்போது நாமளே அடாவடித்தனம் செய்யலாமா (க.க.க)? அதனால் சேட்டைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நல்ல பெண்ணாய் நடித்துக்கொண்டிருந்தேன். பற்றாக்குறைக்கு பள்ளி ஆசிரியர்கள் வேறு உடன் வருவார்கள். அதனால் நோ சேட்டை.

காலேஜுக்கு 45 நிமிட பேருந்து பயணம். அதுவும் நான் படித்த காலேஜ் டைமிங் 7.30 முதல் 3 மணி வரை. சரியாக 5.45 மணிக்கு காலேஜ் பஸ் வந்துவிடும். வீட்டிலிருந்து பத்து நிமிடங்கள் நடக்கனும் ஸ்டாப்பிங்குக்கு. நாய்த் தொல்லை வேற (நிஜமான நாலு கால் நாய்). இது வேலைக்காகது. பொண்ணு கஷ்டப்படக்கூடாதுன்னு வீட்டை/ஊரை மாற்றினார் அப்பா. 5 கி.மீ தள்ளி ராணிப்பேட்டைக்கு குடிபோனோம் இங்கு வீட்டை விட்டு இறங்கி நடந்தால் பஸ் ஸ்டாப். 6 மணிக்கு பஸ் வரும். வீடு மாறியும் காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும்ங்கற என்னோட கஷ்டத்தை யாருமே புரிஞ்சுக்கல. எங்கள் பஸ் நம்பர் 1. வாலாஜாவில் ஆரம்பிக்கும் வண்டி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பாரதி நகர், சிப்காட், BHEL என காட்பாடி போய் சேர முக்கால் மணி நேரமாகும். ஆரம்பத்தில் பெண்கள் ஒரு கேங்காகவும், பசங்க ஒரு கேங்காகவும் இருந்தோம். இதில் சீனியர்ஸ் வேறு. கொஞ்ச நாட்கள் ராகிங் இருந்தது. பாட்டு பாடு, அந்தப் பையன் பேர் கேட்டுட்டு வா, ட்ரைவர் கிட்ட போய் பாட்ட மாத்த சொல்லுன்னு. அப்புறம் அவங்க வேலையப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்தாண்டு தான் நிகர்நிலை அந்தஸ்து பெற்றிருந்ததாலும், கல்லூரியிலிருந்து தூரம் அதிகமென்பதாலும் பஸ்சில் ஆட்கள் மிகக் குறைவு. இருந்தாலும் பஸ்சின் கடைசி இருக்கைகளை ஆக்கிரமிப்பதில் பாய்ஸுக்கும் கேர்ள்சுக்கும் கடும் போட்டி இருந்தது. அங்கிருந்துதானே அனைவரையும் கண்கானிக்க???!! முடியும். பஸ்ஸில் வரும் ஒரு சீனியர் ஜோடி பயங்கர லவ்ஸில் இருந்தார்கள். ஒரு த்ரீ சீட்டர அண்ணன் ஆக்குபய் பண்ணிடுவாரு. அக்கா ஏறி நேரா அந்த சீட்டுக்கு போய்டுவாங்க. கைய கோர்த்துகிட்டு உட்கார்ந்துகிட்டே இருப்பாங்க. ஒரு வார்த்தை பேசனுமே. உஹூம். கண்ணு மட்டும் அங்க இங்க நகராது. இதுல சில சமயம் சிச்சுவேஷன் சாங் வேற ஒடும் பஸ்ஸுல. 'கண்ணாலே காதல் கடிதம் சொன்னாலே எனக்காக'ன்னு. நாங்க எல்லாம் ஹேன்னு கத்துனா அந்தக்கா ரொம்ப வெட்கப்பட்டுகிட்டே மூஞ்ச மூடிப்பாங்க. ஆரம்பத்தில் அவங்க என்ன பண்றாங்க என நோட்டம் விடுவதற்காகவே பின்னாலிருந்து எழுந்து போய் ட்ரைவர் தாத்தாவிடம் பாட்டை மாற்ற சொல்லிவிட்டு வருவோம். 'ஹே கையக் கோத்துக்கிட்டிருக்காங்கப்பா. தோள்ல சாஞ்சிகிட்டிருக்காங்கப்பா' என கமெண்ட்கள் கிடைக்கும்.

பஸ் ட்ரைவர் ரொம்ப வயசானவர். பொறுமையா தான் ஓட்டுவார். க்ளீனர் அண்ணா தான் பாட்டு போடறது, கேசட் ரீவைண்ட் பண்றது எல்லாமே. சரியாக அரை வருடம் ஆனது கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் நட்பு பாராட்ட. தயக்கமென்றில்லை. அது ஏனோ பசங்க வந்து பேசட்டும் என நாங்களும், பொண்ணுங்க பேசட்டும் என பசங்களுன் இருந்துவிட்டோம். இத்தனைக்கும் சிலர் கிளாஸ்மேட்ஸ் வேறு. கிளாசில் பேசிக்கொண்டாலும் பஸ்சில் பேசுவது கிடையாது. பாரதி நகரோடு எங்கள் கேங் மெம்பர்கள் ஏறிவிடுவார்கள். சுகர் மில் ஸ்டாப்பிங்கில் ஏறும் ரேகாவை மட்டும் எங்கள் கேங்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அல்லது சங்கத்தில் அவள் சேரவில்லை. முதல் இரண்டரை வருடங்கள் பேருந்து பயணம் சொர்க்கமாய் இருந்தது. மொத்தப் பேருந்துக்கும் 12 பேர்தான். ஆட்டம், பாட்டம் என கலகலப்பாய் இருக்கும். செட் வேலை செய்யாத நாட்களில் அந்தாக்ஷ்ரி நடக்கும். க்ரிஸ் மாம், க்ரிஸ் சைல்ட் போல நாங்கள் பொங்கலுக்கு இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறோம். இதுவும் எங்கள் நட்பு பாலம் உறுதிபெற உதவியது. சில நாட்களில் அத்தனை பேரும் காரணமேயில்லாமல் அமைதியாய் வருவோம். வாரத்தில் நான்கு முறையாவது பேருந்து ரெயில்வே கேட்டில் சிக்னலுக்கு ஐந்து நிமிடங்களாவது நிற்கும். விடியற்காலை சுத்தமான காற்றும், இளஞ்சிவப்பு நிற வானமும் பார்க்க இதமாய் இருக்கும். சரியாய் கல்லூரியை நெருங்கும்போது சொல்லிவைத்தார் போல் கிட்டத்தட அனைவருக்கும் கொட்டாவி வரும். கல்லூரியில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிப்புகளும் ஆரம்பித்த பிறகு பீக் அவர் பீச் ரயில் மாதிரி ஆகிவிட்டது பஸ். ஒரே கும்பல் தான். கடுப்பாகிவிட்டது. எவ்வளவு பேர் ஏறினாலும் கடைசியிலிருக்கும் நான்கைந்து இருக்கைகளை விட்டுத் தருவதேயில்லை. கடைசி வருடம் ப்ராஜெக்ட்டில் பிஸியாக இருந்த சமயம் ஜூனியர்கள் பஸ்சில் பிழிய பிழிய காதலித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது கூப்பிட்டு ஓட்டுவோம். அதோடு சரி. கடைசி நாளன்று க்ளீனர் அண்ணாவிற்கு நல்லதாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தோம். அத்துடன் பஸ் நம்பர் 1 உடனான தொடர்பு அறுந்துபோனது. ஆனால் அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது (சங்கத்தில் ஒருத்தியின் கல்யாணத்துக்கு தான் நாகர்கோவில் சென்றுவந்தோம்). அடுத்தாண்டு வந்தால் பத்து வயதாகிறது எங்கள் நட்புக்கு.

வேலைக்கு செல்கையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ப்ராஞ்ச் கதீட்ரல் ரோடில் இருந்த ஆபிஸ். மற்ற எல்லா கிளைகளுக்கும் கம்பெனி பேருந்து வசதி உண்டு. இந்தக் கிளையைத் தவிர. ஷட்டில் சர்வீஸ் கூட இல்லை. அப்போது நாங்கள் தங்கியிருந்தது பெசண்ட் நகர். அங்கிருந்து பெரம்பூர்/அயனாவரம் போகும் வண்டிகள் 29Cல் பயணம். டிப்போவில் ஏறுவதால் இடம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் வுட்லேண்ட்ஸில் இறங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். சரியாக மியூசிக் அகாடமி வரும்போதே எழுந்து நகர ஆரம்பித்தால் தான் வுட்லேண்ட்ஸில் இறங்க முடியும். எப்பவும் பிதுங்கி வழியும், வெயிலும், வாகனப் புகையும், வியர்வையினால் ஏற்படும் கசகசப்பும், பையை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் (ஒரு முறை என் பர்ஸை ஆட்டையப் போட்டுட்டாங்க), இதற்கிடையில் வயதானவர்களுக்கோ/குழந்தையோடு நிற்பவர்களுக்கோ இடம் கொடுக்க வேண்டிய மனிதாபிமானம், பாக்கி சில்லறைக்காக கண்டக்டரை தேடுதல் என இருக்கும்போது காதலிக்க நேரமில்லை. ஆனால் எப்பவாவது அத்திப்பூ பூத்தாற் போல் அழகை ரசிக்கும் தருணங்கள் வாய்க்கப் பெறும். அதுவும் கொஞ்ச நேரம் தான். இறங்க வேண்டிய இடம் வந்துவிடும் இல்லையெனில் ரசித்த அழகு நொடியில் மறைந்துவிடும்

பின்னர் கம்பெனி வோல்வோக்களில் (சில சமயங்களில் ஏசி பஸ்), புஷ் பேக் இருக்கைகளுடன், காலை மடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லாமல் நீட்டிக்கொண்டு, விருப்பமான இடத்திலமர்ந்துகொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும், காதுக்கு ஐபாட், சுய முன்னேற்ற புத்தகங்களில் தலை புதைந்து, பல சமயங்களில் தூங்கிகொண்டும், அலுவலக நேரத்தில் புடுங்காத ஆணியை பேருந்தில் புடுங்கிக்கொண்டிருக்கும் தோலாலான இயந்திரங்களோடு பயணிப்பது பேரிம்சையாகவே இருந்தது. பஸ் நம்பர் 1 ரூட் நம்பர் 1ஆக மாறினாலும் அந்த நான்கு வருட பேருந்து பயணத்தின் ஹாரன் சத்தம் அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

பேருந்து காதல் என தொடர் பதிவிட அழைத்த சங்கவிக்கு நன்றி. காதல் அனுபவம் ஏதுமில்லாததால் பொதுவானவற்றைப் பகிர்ந்துகொண்டேன்.

தொடரை தொடர அழைக்க விரும்புவது

பதிவெழுத நாள் நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கும்

விக்னேஷ்வரி.
ராஜி.
தாரணி பிரியா.
கேவிஆர்

அழைத்துள்ள நால்வரில் விக்கி மற்றும் ராஜியிடம் மட்டும் தான் டேக் செய்யவா என கேட்டேன். மற்ற இருவர் விருப்பமிருப்பின் தொடருங்கள்.

December 23, 2009

எஸ்.டி.டீன்னா...

தோழி விக்னேஷ்வரி நம்மளையும் ரவுடியா மதிச்சு ஒரு தொடர்பதிவுக்கு கூப்டனுப்பிருக்காங்க. எவ்வளவோ பணிசுமைகளுக்கு மத்தியிலே (சரி சரி) கிடைச்ச நேரத்த பயன்படுத்தி நான் எப்படி எழுத வந்தேன் (ஏன் எழுத வந்தேன் நீங்க நறநறக்கறது கேக்குது) அப்படிங்கற எஸ்.டி.டீயை விளக்குறேன் (பாத்திரம் மாதிரி கடையையும் பளிச்சுன்னு காலியா வெச்சிருக்காதீங்கப்பா).

ஆக்சுவலா இந்த மேட்டர் தான் என்னோட முதல் பதிவா எழுதியிருந்தேன் (என்னா ஒரு தொலைநோக்கு பார்வை). டெலிவரிக்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தபோது தம்பி அறிமுகப்படுத்தியது தான் இந்த பதிவுலகம். ரொம்ப நாளைக்கு சும்மா படிச்சிகிட்டேயிருந்த என்னை நீயும் ஒன்னு ஆரம்பிச்சு எழுதுன்னு சொன்னதே அவன் தான். பதிவு தொடங்கினவுடனே என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்கன்னு தமிழ்மணத்துல கேட்டேன். ச்சீப் போன்னு தொறத்திவிட்டுட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் கேட்டபோது 25 பதிவு எழுதியிருந்தேன். தமிழ்மணத்துல சேர்ந்ததுக்கப்புறம், நம்மளையும் எழுத்தாளர்ன்னு (இதப் பார்றா) மதிச்சு கொஞ்சம் பேர் ரெகுலரா ஊக்கமளிக்கிறாங்க. இதுக்கு நடுவுல வரலாற்றுல பொன்னெழுத்தூகளால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் நடந்தது. என் தீவிர பற்றின் காரணமாய் சங்கத்தில் கொ.ப.செ பதவி கொடுத்து கவுரவித்தார்கள் போர்படை தளபதியும், பொருளாளரும். இந்த மூன்றரை வருஷத்துலா 113 followers (நான் கிழிக்கறதுக்கு இது பெரிய விஷயம்). அதே மாதிரி அதிகப்படியா ஒரு பதிவுக்கு 168 கமெண்ட் வந்தது (என்னாது கும்மியலாம் கணக்குல வராதா?). சக பதிவர்களான ச்சின்னப்பையன், நர்சிம் மற்றும் அ.மு.செய்யது ஆகியோரு என்னோட சில பதிவுகளை நல்லாருக்குன்னு சொல்லி வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஓரே ஒரு பதிவு (எனக்குத் தெரிஞ்சு) யூத் விகடன்ல வந்திருக்கு. அப்புறம் மூணு பதிவு தமிழ்மணம் வாசகர் பரிந்துரைல வந்திருக்கு (ஸப்பா கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளிவிவரம் கொடுத்தாச்சு).

இதுவரைக்கும் உருப்படியா ஒன்னும் எழுதலன்னாலும் (அதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே. நானும் அப்படியே ஆரம்பிச்சுட்டா மொக்கை யார் போடறது) still i enjoy scribbling (அப்பாடி பிளாக் பேர் வர்ற மாதிரி பார்த்துகிட்டாச்சு). இது மட்டும் தான் எழுதனும்ன்னு ஒரு எல்லை இல்லாம, நான் கேட்ட, பார்த்த, என்னை பாதித்த, எனக்குப் பிடித்த, எனக்கு தோன்றிய அனைத்தையும் பகிர்ந்துகொள்ள நல்லதொரு இடமா இது இருக்கு. அடுத்த வருஷத்தோட நான்கு வருடங்களாகிறது பதிவெழுத வந்து. இன்னதான்னு இல்லாம எல்லா விஷயங்களையும் அலசி காயப்போடுகிற பதிவுலகம் நிறைய சுவாரசியங்களை எனக்கு கொடுத்துகிட்டே இருக்கு.

உங்களோடு ஆதரவும் தொடரும்கிற நம்பிக்கையோடு...

June 4, 2009

என்னைத் தெரியுமா?

இந்த 32 கேள்விகளுக்கு பதில் (சாய்ஸ்ல எதையும் விடக்கூடாதா?) சொல்லும் வேலையை கேபிள் சங்கர் மற்றும் விக்னேஷ்வரி கொடுத்திருக்காங்க. கொடுத்த வேலையை செவ்வனே செய்ய முயற்சி செய்திருக்கிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றவர்கள் வைத்தது. கண்டிப்பா ரொம்பவே பிடிக்கும். பெயருக்கு ஏத்த மாதிரியே படிப்புல நான் குயின்:)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
முணுக்குன்னா அழற ஆளில்லை நான். ஓரளவுக்கு எமோஷனலி ஸ்ட்ராங். 20 மாதங்களுக்கு முன் விடியற்காலை 5 மணியளவில் ஜூனியரின் அலறல் (ட்ரிப்ஸ் ஏத்த நரம்பு தேடிக்கொண்டிருந்தார்கள்) கேட்டு கதறி அழுதது தான் கடைசி. அழுவதற்க்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை அழகாய் போய்க்கொண்டிருக்கிறது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப. காலேஜில் சீனியர்ஸ்க்கு ரெக்கார்ட் எழுதி கொடுக்கிற அளவுக்கு அழகாய் இருக்கும்:)

4).பிடித்த மதிய உணவு என்ன?
மெக்சிகன், இட்டாலியன், ஜப்பானீஸ் சுஷி, கொரியன், சைனீஸ் என அடுக்குவேன் என நினைக்காதீங்க.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மோர் மிளகாய் தாளித்துக் கொட்டிய கொஞ்சூண்டு மோர் விட்டு பிசைந்த பழையது, தொட்டுக்க பூண்டு தொக்கு.
இஞ்சி துவையலும் தயிர் கீரையும்
பூண்டு ரசமும் சுட்ட அப்பளமும்
வெங்காயமும் மிளகும் நிறைய போட்ட ஆம்லெட்
தேங்காய் அரைத்து கொட்டி, மணத்தக்காளி வத்தலை பொரித்துப் போட்ட வத்தக்குழம்பில் சரியாக 3 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கப்பட்ட கல்தோசை/ஊத்தப்பம்
அரிசி உப்புமா (காந்தல்)
கேழ்வரகு கூழ் தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய்.. Oops விட்டா நான் தனியா வலைப்பூ ஆரம்பிக்கிற அளவுக்கு அடுக்குவேன். Next?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ம்ம் கொஞ்சம் கஷ்டம். என்னை நானாகவே இருக்க விடுகின்ற நட்பினைத் தான் அதிகம் விரும்புவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்கப் பிடிக்கும். கடலலையில் கால் நனைக்கப் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களையும் அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸையும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : நிறைய இருக்கே. ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் சாதக பாதகங்களை கம்ப்ளீட்டா அலசி ஆராய்வது.
பிடிக்காத விஷயம் : ம்ம் இது ரொம்பவே கம்மி. அடிக்கடி எட்டிப்பார்க்கும் கோவம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது : என் மேல் அவர் கொண்டுள்ள அன்பும் பாசமும்.
பிடிக்காத விஷயம் : குறிப்பிட்டு சொல்லும்படி எதுவுமில்லை. நான் அவரை அவராகவே ஏற்றுக்கொண்டிருப்பதால் குறைகளென்று எதுவும் தெரியவில்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நெருங்கிய நண்பர்கள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு வெள்ளை குர்தா பைஜாமா.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் (லவ்லி பாட்டு)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு - கம்பீரத்தின் நிறம்

14.பிடித்த மணம்?
மதுரை மல்லி. ஜான்சன் பேபி சோப் வாசனை:)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீபா
ஆகாயநதி
மயில்

இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணத்தில் அழைத்திருக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
சங்கர் - வாரத்துல ஏழு நாள் தான்னாலும் 70 படம் பார்ப்பார் போல. நிறைய மொக்கை படங்களில் இருந்து காப்பாற்றுவதால்.
விக்னேஷ்வரி - என்னை மாதிரியே ஃபுட்டி:)

17. பிடித்த விளையாட்டு?
பள்ளி நாட்களில் த்ரோ பால். இப்போ ஜூனியரோடு:)

18.கண்ணாடி அணிபவரா?
வெயில் காலங்களில் கூலர்ஸ்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லா விதமான படங்களும். திராபையா இல்லாம இருக்கனும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். மழையில் நனையப் பிடிக்காது. ஆனால் சூடாக ஒரு கப் டீயுடன் அமர்ந்து ரசிக்கப் பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் (முடிச்சாச்சு)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஜூனியர் தான். வேறு வேறு போஸ்களில்:)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : ஜூனியரின் சிரிப்பு, மனதுக்குப் பிடித்த பாடல்கள்.
பிடிக்காதது : ஹார்ன் இரைச்சல், அதிக சத்ததில் டீவி, அரசியல் கட்சிப் பிரச்சாரங்கள்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மலேசியா, சிங்கப்பூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நேரம் தவறுதல், Negligince

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போனதில் நந்தி ஹில்ஸ், ஜெய்ப்பூர். போக விரும்புவது கூர்க்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதை செய்தாலும் அவரிடம் சொல்லிவிடுவதுண்டு

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
Life is beautiful as always:)

June 1, 2009

ஆடாத ஆட்டமெல்லாம்

ஆகாயநதி தொடர்பதிவுக்கு (சங்கிலிப்பதிவு என்பதே சரி என்று யாரோ எழுதிப் படித்த ஞாபகம்) அழைத்திருக்கிறார். என்னையும் மதிச்சு??!! கூப்பிட்டதால இதோ நானும் வத்தி சுத்தறேன்.

என்னுடைய பள்ளிப்பருவங்கள் ரெண்டு ஊர்களில் கழிந்தது. ஆறாம் வகுப்பு வரை காஞ்சிபுரம். அதற்குப் பின் முழுவதும் வாலாஜாப்பேட்டை. இரண்டு இடங்களிலும் எனக்கு அருமையான நண்பர்கள். காஞ்சிபுரத்தில் சரியாக கலெக்டர் ஆபிஸ் பின்னால் இருக்கும் ஹவுசிங் போர்ட் குடியிருப்பு. சித்திரை வருடப் பிறப்புக்கு முன்னமே முழுஆண்டுத் தேர்வை முடித்துவிடுவார்கள். 3 சக்கர சைக்கிளில் இருந்து இரண்டு சக்கர சைக்கிளுக்கு பிரமோட் ஆனது மே மாதத்தில் தான். என் மாமா பொண்ணு தான் ட்ரெய்னர். ஒரளவுக்கு கற்றுக்கொண்டதும் தனியே ரொம்ப தூரம் போய் திருப்பத் தெரியாமல் புதிதாய் போட்ட தார் ரோட்டில் விழுந்து வாரியது இன்னும் நினைவிலிருக்கிறது. கை கால் முட்டிகள் பேந்து சரியான அடி. கலெக்டர் ஆபிஸ் அருகிலிருக்கும் ஆயுதப் படை போலீஸ் பயிற்சி நிலையத்திலிருந்த அங்கிள் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்.

எல்லா ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும். காலாண்டு, அரையாண்டு என்றாலும் பரவாயில்லை. முழு ஆண்டுத் தேர்வுக்கு பயிற்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்த வகுப்பு போகும்போது இது எதற்கு. லீவு விட்டவுடன் கர்ம சிரத்தையாக இரண்டே நாட்களில் இதை எழுதி முடித்துவிட்டு மூலையில் போட்டால், பள்ளி திறப்பதற்கு முதல் நாள் தான் கவனிக்கப்படும். விடுமுறை தினங்களில் பாட்டு கிளாஸ், ஹிந்தி டியூஷன் ஆகியவை கொஞ்சம் டிலே செய்யப்படும். வழக்கமாக விடியற்காலையில் ஆரம்பிக்கப்படும் வகுப்புகள் விடுமுறை தினங்களில் மாலைக்கு ஷிப்ட் செய்யப்படும். 2 மணியிலிருந்து 5 மணி வரை வகுப்புகள். அதற்குப்பிறகு ஆரம்பிக்கும் ஆட்டம் படுசுவாரசியம். அழகான நாட்கள் அவை.

வாலாஜாப்பேட்டை வந்தபிறகு மெல்ல மெல்ல விளையாட்டுகள் குறைந்தது (Bloody Society??!!). கேரம் போர்ட்டே கதியென கிடந்த நாட்களும், த்ரோ பால் பிராக்டிஸ் செய்த நாட்களும் இன்றும் நினைவிருக்கின்றன. விளையாடுவது குறைந்ததும் கொஞ்சமே கொஞ்சமாய் புத்தகங்கள் அறிமுகமாகின. அதற்குள் அடுத்த கட்டமான பொதுத்தேர்வு, எண்டரன்ஸ் கோச்சிங்க என விளையாட்டு என்பதே மறந்துவிட்டது. கல்லூரி நாட்களில் மே மாதங்கள் நண்பர்கள் வீட்டில் அரட்டைக் கச்சேரி, சினிமா, சீட்டுக்கட்டு, எப்பவாச்சும் படிப்பு என தான் கழிந்தது. வேலையில் சேர்ந்த பின் கேக்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைக்கூட அலுவலகம் வரவழைத்த டேமஜர் கிட்ட சம்மர் வெகேஷன் என வாயத் தொறக்கமுடியுமா? அதையும் மீறி ஒரு மே மாதத்தில் ஊட்டி ட்ரிப் போனோம். லவ்லி டேஸ்:)

இப்போ ஜூனியரால எல்லா நாளும் விடுமுறை நாள் போல சந்தோஷமாகக் கழித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தி நான்கு மணி நேரமும் எனக்கு வேலை வைக்கிறான். வளர வளர சேட்டைகளும் ஜாஸ்தியாகிறது (ஆஹா பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சு:))

இனி வரும் வருடங்களும் சந்தோஷமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில்:)

December 9, 2008

விழிப்பது எப்போது?

இன்னும் ஒரு மாதம்? அல்லது 3 மாதம்? இல்லை அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரை தான் இந்த சம்பவம் பேசப்படும் என்று ஒரு பதிவர் இன்னொருவரின் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். என் பிரார்த்தனை அது பொய்யாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஒரு சாமானியனாக நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். அரசியல்வாதிகளின் அலட்சியம் போல் நமக்கும் பன்மடங்கு இருக்கிறது. நான் வோட்டுப் போட்டால் எல்லாம் மாறிடுமான்னு கேக்கறவங்க நிறைய பேர். கண்டிப்பா மாறாதுதான். ஆனால் நம் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய முயற்சியாக வோட்டுப் போடுவது இருக்காலமில்லையா? நம்மில சில பேருக்கு 49ஓ என்ற ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. நான் கடந்த இரண்டு முறையாக என் வோட்டை 49ஓவாகத்தான் பதிந்திருக்கிறேன் (இதற்கு நான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருந்தது). முதல்ல நம்ம கிட்ட இருக்கற குறைகளைக் குறைத்துக்கொள்வோம். அப்போ தான் அடுத்தவன தைரியமாய் கேள்வி கேக்கலாம்.

சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.

1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி

பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).