Showing posts with label எப்படி வேணாலும் வச்சிக்கலாம். Show all posts
Showing posts with label எப்படி வேணாலும் வச்சிக்கலாம். Show all posts

June 24, 2010

என்னை காதலித்தவன்..

நீ காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
கோபப்படுவது எவ்வளவோ மேல்
எரிமலையின் வெப்பத்தை வி்ட
பனிமலையின் குளிர்ச்சி
குத்திக் கொல்கிறது..
**************

அடித்தொண்டையில் கத்தியதும்
செல்போன் சிதறியதும்
பொங்கிப் பொங்கி அழுததும்
கனவே.
நினைத்ததை மறுத்தது
ஈரத் தலையணை..
*************

சாட் பாக்ஸை மூடும்போதும்
செல்பேசி அழைப்பை துண்டிக்கும்போதும்
சபித்திருப்பான் என்னை காதலித்தவன்.
அவனைப் பிரிந்த பின்னான வாழ்க்கையுடன் ஏற்பட்ட பிணக்கு
இன்னும் கூடாதிருக்கவே இத்தனையும்
என அவனுக்குத் தெரியாதிருக்கட்டும்.
***************

கரடி பொம்மை
சில்க் உறையிட்ட தலையணை
அம்மாவின் உள்ளங்கை
எதுவுமே தேவைப்படுவதில்லை.
உன் நினைவுகள் மட்டும் அதிகமாய் இருக்கிறது.
தூக்கத்தை காணவில்லை.
****************

மழை தொடரலாமா நின்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறது.
வேடிக்கை பார்க்க வந்தவள்
எல்லாவற்றிலும் உன்னைப் பார்க்கிறேன்.
என்னைச் சுற்றிலும் நீ.
என்னிலும் நீ.
‘டீல சர்க்கரை ஜாஸ்தியாயிடுச்சு. திகட்டுது இல்ல’ என்ற அம்மாவிற்கு
இல்லை என்ற என் பதில்
ஆச்சர்யமேற்படுத்தியதில் ஆச்சர்யமேது??!!
******************

April 7, 2010

Technology has improved so much you know

பாடி பாய்ஸ் டீமின் குமார் சச்சினுடன் சேர்ந்து சிரிக்கிறான்
உலகக்கோப்பையைக் கையில் பிடித்தபடி

முந்தாநாள் வயசுக்கு வந்த கலைசெல்விக்கு
தன் வீணையையும் வெள்ளைத் தாமரையையும்
கடன் கொடுத்திருக்கிறாள் கலைமகள்

இடதுபுறம் திரும்பி நின்று
நேராய் பார்த்து சிரிக்கும்
ராஜாவையும் கமலாவையும்
இடப்பக்கத்திலிருந்து சிவன் பார்வதியும்
வலப்பக்கத்திலிருந்து அம்மாவும்
வலக்கையுயர்த்தி ஆசிர்வதிக்கிறார்கள்
கைகளிலிருந்து கொட்டுகிறது பூக்கள்

வானளந்த வாமணன் உசரத்தில்
நடந்து வரும் அய்யாவின் காலடியில்
வெள்ளை மாளிகை

முடி சிலுப்பி
புருவம் நெரித்து
சிறுத்தை சீறுகிறது
சே குவேராவென

மருந்துக்குக் கூட மரமில்லாத இடத்தை மறைத்தபடி நிற்கிறது
ப்ரெஞ்ச் விண்டோவும் ஜெர்சி பசுக்கள் மேயும்
ஸ்வீடிஷ் புல்வெளியும் கொண்ட வீடு

மீண்டும் தலைப்பு