Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

March 7, 2012

நினைவெல்லாம் நிவேதா - 7

”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா?” என்றான் கணேஷ்.

“நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணிருக்காங்க.” என்றவாரே ஒரு ஃபைலை கணேஷிடம் நீட்டினான் வசந்த். ”ரிசப்ஷன்ல வழக்கம்போல் எந்த டீடெய்லும் கொடுக்கமாட்டேன்னுட்டாங்க. ஒரு வழியா என்னோட ஸ்டைல்ல. எல்லா தகவலையும் கறந்துட்டு வந்துட்டேன்.”

கணேஷ் மௌனமாக அந்த ஃபைலைப் புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து “எப்படி வாங்கினேன் கேக்கமாட்டீங்களா பாஸ்?” என்றான் வசந்த்.

”இதுக்கூட தெரியாமலா வசந்த் இருப்பேன். ரிசப்ஷனிஸ்ட் பேர் என்ன?”.

“ப்ரியா பாஸ். நீங்க சொல்லாம நான் செஞ்ச இன்னொரு வேலையக் கேட்டீங்கன்னா அசந்துருவீங்க”.

“அப்படி என்னடா வேலை?”

“இந்த ஃபைல்ல இருக்கிறதெல்லாம் நிவேதாவிற்கு டிப்ரெஷெனுக்காக டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள். இதில் வேடிக்கை என்னன்னா, இந்த மருந்து எதுவுமே வியாதிய குணப்படுத்தாது." ஆச்சர்யமாய் நிமிர்ந்த கணேஷைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே “டாக்டர் பேர் ஸ்வாதி” என்றான் வசந்த்.

”ஓஹ். ஜெயராமன் நான் நினைச்சத விட பயங்கரமான வேலை பண்ணிருப்பார் போலயே? சரி நீ தெரிஞ்சுகிட்டு வந்ததையெல்லாம் ஒரேடியா கொட்டிடு பார்ப்போம்” என்றான் கணேஷ்.

“இல்ல பாஸ். முதல்ல நீங்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்.”

“ஆல்ரைட். முதல் நாளிலிருந்தே எனக்கு ஜெயராமனோட நடவடிக்கைகளில் சந்தேகம். அந்தாளு நம்மள தேடி வந்தது மொத தப்பு. நிவேதா நம்மகிட்ட என்ன சொல்லியிருந்தா, இவருக்கென்ன? நேரா போலீஸ் கம்ப்ளையிண்ட் லாட்ஜ் பண்ண வேண்டியது தானே? ரெண்டாவது நிவேதாவின் வீட்டில் நடந்த விசாரணையில் சில முக்கியமான தடயங்கள் சிக்கிச்சு. நிவேதா நம்மள பார்க்க வந்ததை அவர் எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னார்?”

“டெலிஃபோன் பக்கத்துல, ஸ்க்ரிப்ளிங் பேட்ல நம்ம அட்ரெஸும் ஃபோன் நம்பரும் இருந்ததா சொன்னார்”.

“ம்ம்ம். அந்த பேப்பரை ஃபாரென்ஸிக் டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி செக் பண்ணதுல, அது நிவேதா கையெழுத்து இல்ல. ஜெயராமனோடதுன்னு கன்ஃபர்ம் ஆச்சு. ரெண்டாவது வேலைக்காரி தினம் பதினொரு மணிக்கு ஜெயராமன் நிவேதா வீட்டிற்கு வருவாரென்றும், கம்ப்யூட்டரில் டைம் ஸ்பெண்ட் செய்வார்ன்னும் சொன்னாளே ஞாபகமிருக்கா?”

“ஆமாம் பாஸ். பன்னெண்டு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டார்ன்னு சொல்லிச்சே”.

“அதான். அந்த சிஸ்டத்த நோண்டினதுல சில சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏற்பட்டது. மொதல்ல அந்த சிஸ்டத்துல நிவேதா தன் மெயில் அக்கவுண்ட்ல ஆட்டோ லாகின் செட் பண்ணி வச்சிருக்காங்க. நிவேதா அனுப்பினதா ஜெயராமன் நம்மிடம் காட்டிய நான்கு மெயில்களிலும் டைமை செக் பண்ணிப்பாரு. 11.15க்கு நிவேதாவின் அக்கவுண்ட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கு. இந்த சிஸ்டத்திலிருந்துதான். ரெண்டாவது ஹிஸ்டரிய தோண்டுனதுல, ஜெயராமன் யுஎஸ்லிருந்து கிரெடிட் கார்ட் மூலமா ஒரு கருவி ஆர்டர் பண்ணிருக்கார். அதன் மூலமா ஒருவருடைய ஆழ்மன சிந்தனைகளை சிதைக்க முடியுமாம். சைபர் க்ரைமிலிருந்து வந்த தகவல்கள் இவை. என் கணிப்பு படி, இவரே மெயில் அனுப்பிச்சுகிட்டு, நிவேதாவை சூசைட் அட்டெம்ப்ட்டிற்கு ட்ரிக்கர் பண்ணியிருக்கார். மனநல மருத்துவர் ஆலோசனைகளெல்லாம் தன் மேல் சந்தேகம் வராமலிருக்க செய்த செட்டப்.”

“கரெக்ட் பாஸ். நான் கொஞ்சம் துருவினதுல, நிவேதாவிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர், ஜெயராமனின் தோழி வசந்தாவோட பொண்ணு. நிவேதாவிற்கு ஏதாவது நேர்ந்தால், சொத்துப் போய் சேரும் ட்ரஸ்ட்டில் நிர்வாகிகளில் ஒருவரின் தங்கை தான் இந்த வசந்தா. பக்காவா ப்ளான் பண்ணிருக்கானுங்க பாஸ். திருட்டு பசங்க.”

“சோ, கேம் எண்ட்ஸ் ஹியர்.”

“இப்ப நம்ம என்ன பண்ணப்போறோம் பாஸ்?”

“அஷோக்கிற்கு விவரங்களை தெரியப்படுத்திவிட்டு, காதாம்பரி கேஸ்கட்ல தலையக் கொடுக்கப் போறோம்.”

“சரி பாஸ். ஒரு அவசர வேலையா நான் கிளம்பறேன்.”

“சரி.”

“எங்கன்னு கேக்க மாட்டீங்களா?”

“மச்ச சாஸ்திரம் புக் வாங்கத்தானே? உன்ன திருத்தவே முடியாதுடா.”

(முற்றும்)

February 2, 2012

நினைவெல்லாம் நிவேதா - 6

”செம்ம ட்ராஃபிக் பாஸ். ரெண்டு மணிநேரமா க்ளட்ச்ச மாத்தி மாத்தி கால் வலிக்குது” என்றபடியே உள்ளே நுழைந்தான் வசந்த். ஒரு கேஸிற்காக சட்ட புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த கணேஷ், வசந்திடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

“வேணாம் பாஸ். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவதிருக்கா?” என்றபடியே ஃப்ரிட்ஜை ஆராய்ந்தவன், ஒரு ஆப்பிளைக் கடித்தபடியே வந்து கணேஷின் முன் அமர்ந்தான்.

“போன காரியம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.

“சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக இந்த வேலைக்கு என்ன அனுப்பிச்சீங்கன்னு சொல்லுங்க. என்னாலயும் ஒரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனாலும்..”

“சொல்றேன் வசந்த். இது கண்டிப்பா நிவேதாவே எடுத்த முடிவில்லங்கறது என்னோட யூகம். இந்த விஷயத்துல ரெண்டே பேரத்தான் நாம சந்தேகப்படமுடியும். ஒன்னு ஜெயராமன். இல்லன்னா அஷோக். மோட்டிவ் ஒன்னுதான். சொத்துக்காக.”

“அப்ப கொலைன்னு சொல்ல வர்றீங்களா. போஸ்ட்மார்ட்டம்ல கயிறு இறுகி, மூச்சுக்குழாய் முறிந்ததால் மரணம்ன்னு தெளிவாருக்கே. ரெண்டாவது, சம்பவம் நிகழ்ந்த அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஸ்ட்ராங்கான அலிபி இருக்கு.”

“அவசரப்படாத வசந்த். இது ஒருவரின் மேற்பார்வையில், வழிகாட்டுதலின் படி நடந்த தற்கொலை.”

“அப்படித்தான ஜெயராமனும் சொல்றாரு. அஷோக்தான் அந்த ஒருவன்ங்கறது அவரோட குற்றச்சாட்டு.”

”கரெக்ட். இப்ப அது நெஜமாவே அஷோக்தானாங்கறத தான் நாம கன்ஃபர்ம் பண்ணனும்.”

“சரி பாஸ். இப்ப உங்களோட மைண்ட்ல என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்களேன்.”

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்ட ரெண்டையும் கொண்டு வந்தியா?”

“கொண்டு வந்திருக்கேன் பாஸ். நீங்க கேக்காமலேயே இன்னொரு வேலையும் பண்ணி முடிச்சிருக்கேன்”. என்ன என்பது போல பார்த்தான் கணேஷ். ”முதல்ல நீங்க உங்க கெஸ்ஸ சொல்லுங்க பாஸ், அப்புறம் நான் என்ன பண்ணேன்ங்கறத சொல்றேன்”.

“ஆல்ரைட். முதல்ல அஷோக்கிட்டருந்து ஆரம்பிப்போம். லவ் மேரேஜ். பிரச்சனை எதுவும் இல்லை. அட்லீஸ்ட் எதுவுமில்லைன்னு அவர் நினைச்சுகிட்டிருக்கார். நல்ல வருமானம் ஈட்டிக்கொடுக்கும் தொழில். நஷ்டமோ, பெரிய பணத்தேவையோ இல்லை”.

“இந்தக் காரணங்கள் போதுமா பாஸ்? தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.”

“இரு வசந்த். அவசரப்படாத. இதெல்லாம் சும்மா ஆட் ஆன் வாதங்கள் தான். ஒரே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கு வசந்த். இம்மாதிரி நிவேதாவை தற்கொலைக்கு தூண்டுவதன் மூலம் தான் ஈசியாக மாட்டிக்கொள்வோம் என யோசிக்கத் தெரியாதவரல்ல அஷோக்.”

“எப்படி சொல்றீங்க?”

“சிம்பிள்டா. நிவேதாவின் அப்பா எழுதிவைத்திருக்கும் உயில் அப்படி. பொண்ணுக்கு கல்யாணம் ஆனப்புறம், ஏதாவது ஆச்சுன்னா புருஷந்தான் பொறுப்புன்னு தெளிவா எழுதிவச்சிருக்காரே. அதனால, நிவேதாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னைத்தான் பிடிப்பாங்கன்னு அவருக்கு தெரியாம இல்ல. அதுவுமில்லாம, அவருடைய பிசினெஸை கொஞ்சம் கிளறினேன். க்ளீனாதான் இருக்கார். நிவேதா இறப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் தொகை, அவருக்கு பெரிய அமவுண்ட்டாக இருக்காது. இதை அவரே சொல்லிருக்காரு.”

“ம்ம்ம். அப்ப அஷோக்க லிஸ்ட்ல இருந்து தூக்கிடலாம்”.

“யெஸ். ஜெயராமன தெளிவா டிக்கடிச்சிடலாம்”.

”ரீசன்?”

“சொல்றேன். இரு”.

-தொடரும்......

January 11, 2012

நினைவெல்லாம் நிவேதா - 5

”அஷோக்??? என்ன சொல்றீங்க?” என்றான் கணேஷ் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில். இருவருக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு சலனமற்று நின்றுக்கொண்டிருந்த அஷோக்கை மெல்ல நெருங்கினான். அருகே செல்ல செல்ல அஷோக்கின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பது கணேஷிற்கு தெளிவாகத் தெரிந்தது. மெதுவாக அவர் தோளைத் தொட்டதும், உடைந்து அழத் தொடங்கினார் அஷோக். இதனை சற்றும் எதிர்பாராத கணேஷ் “ஈசி அஷோக். ஈசி. சாரி உங்களை புண்படுத்த அப்படிக் கேட்கவில்லை”
முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி துடைத்துவிட்டு நிமிர்ந்த அஷோக், ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இட்ஸ் ஒக்கே. அது உங்க கடமை. ஐ லவ்ட் ஹெர் சோ மச் கணேஷ். பாசம் தெரியாமல், அப்பாவின் பரபரப்பையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த என் வாழ்க்கையில் நிவேதாவின் வரவு வசந்தமாக இருந்தது. இந்த மூணு வருஷம் எங்களுக்குள் எந்த விதமான சண்டையோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. வேலையில் நான் பிஸியானது உண்மைதான். அதை என்னிடம் சொல்லியிருந்தால் சரிசெய்திருப்பேனே. இவ்ளோ பெரிய தண்டனையா தரனும்? இப்படி பாதில விட்டுட்டுப் போனவள எதுக்கு இன்னும் நினைச்சுகிட்டிருக்கனும்? எதுக்கு லவ் பண்ணனும்? முடியல கணேஷ். வீட்ல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நரகமாருக்கு. அவள் சம்பந்தப்பட்ட எதையுமே பார்க்க பிடிக்கல. அதான் ஏறக்கட்டச்சொன்னேன்.” என்றார்.

”மறுபடியும் சாரி அஷோக். எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. நாங்கள் இங்கே வந்தது, நிவேதாவின் திங்ஸை பார்க்க முடியுமா எனக் கேட்கத்தான்.”

"எதுக்கு?”

“ஜஸ்ட் ஒரு ரொட்டீன் ஃபார்மாலிட்டி தான்.”

“ஒக்கே. நான் வேலைக்காரிகிட்ட சொல்றேன். நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்”

”நன்றி. நாங்க கிளம்புறோம்.”

“கணேஷ்.. ஒரு நிமிஷம். ஜெயராமன் போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்தா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?”

“அவரிடம் இருக்கும் எவிடென்ஸை பொறுத்திருக்கிறது. நாங்க வர்றோம்.”

“வருவீங்களா?”

“தேவைப்பட்டால்.”

“தேவைப்படுமா?”

பதில் எதுவும் சொல்லாமல், சிரித்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். வெளியே வந்து சிகரெட் பத்த வைத்த கணேஷிடம் “என்ன பாஸ்? மூடிடலாமா? ஒன்னுமில்லாமத்தான் போகும் போலயே?” என்றான் வசந்த்.

”இல்லை வசந்த். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது” என்றான் கணேஷ் புகையை வெளியே விட்டபடி.

“என்ன பாஸ் சொல்றீங்க? ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு சொல்லுது. சித்தப்பன் புருஷன் தான் ட்ரிக்கர் பண்ணான்னு சொல்றாரு. புருஷனோ, பொண்டாட்டி செத்த வருத்தம் துளியும் இல்லாம, ஹீரோ கணக்கா ஜம்முன்னு வேலையப் பார்க்கிறான். ஜெயராமன கேஸ் ஃபைல் பண்ணச் சொல்லலாம். ஆட்டம் முடியப் போகுது. இனிமேதான் சூடு பிடிக்கப்போகுதுன்னு சொல்றீங்க? மனசுல என்ன ஓடுது பாஸ்? சொல்லிடுங்க.”

“பொறுமையா இரு வசந்த். சொல்றேன். அதுக்கு முன்னால கொஞ்சம் க்ரவுண்ட் ஒர்க் பண்ணலாம். நான் எதிர்பார்க்கிற லீட் கிடைச்சுதுன்னா ஆட்டத்த ஈசியா முடிக்கலாம்”.

December 14, 2011

நினைவெல்லாம் நிவேதா - 4

நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் ரோட்டில் அந்த கட்டிடம் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தது. கொஞ்சமே கொஞ்சம் புல்வெளி, ஒரு சின்ன நீரூற்று, நாலைந்து பூந்தொட்டிகளை தாண்டி, புஷ் மீ என்ற கண்ணாடிக் கதவை தள்ளி, அரைவட்ட மேஜையில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி நடந்தார்கள் கணேஷும் வசந்தும். காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்த பெண்ணைப் பார்த்ததும் சன்னமாக விசிலடித்தான் வசந்த். இவர்களைப் பார்த்ததுமே ஒரு இன்ஸ்டெண்ட் புன்னகை அந்தப் பெண்ணின் இதழில் ஒட்டிக்கொண்டது.

“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றாள் ஹஸ்கியான வாய்ஸில்.

மேஜையில் முழங்கையை ஊன்றிகொண்ட வசந்த சற்று குனிந்து “நீங்க என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சக்கனும்” என்றான்.

“வசந்த்” என்று அவனை அதட்டி, “மிஸ், எங்களுக்கு உங்கள் எம்டியைப் பார்க்க வேண்டும்.” என்றான் கணேஷ்.

”அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?”

“யெஸ். கணேஷ் என்ற பெயரில். பத்தரைக்கு”

”ஒன் மினிட்” என்றபடி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தவள் “யூ ஆர் லேட் பை ஃபிஃப்டீன் மினிட்ஸ்” என உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹெல் வித் த ட்ராஃபிக்” என்றான் கணேஷ்.

“ஒக்கே. நீங்கள் எம்டியை இப்போது பார்க்கப் போகலாம். எண்ட் ஆஃப் தி காரிடார்ல அவர் ரூம். பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்காதீங்க” என சொல்லிவிட்டு, டெலிபோன் ரீசிவரை கையிலெடுத்தாள்.

இருவரும் அவள் சொன்ன வழியில் நடக்க ஆரம்பிக்க, "பாஸ், இந்த ரிசப்ஷன் பட்சியை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் வசந்த்.

“அழகான பொண்ணுங்கள நீ பார்த்ததில்லன்னு சொன்னாதாண்டா ஆச்சர்யம்”.

“இல்ல பாஸ். வேற ஏதோவொரு ஆஃபிஸ்ல இவள நான் பார்த்திருக்கேன். எங்கன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஒன்னு பண்ணுங்க. நீங்க அஷோக்கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ள அவள்ட்ட என் டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறேன்.”

“யூ ஆர் ஹோப்லெஸ் வசந்த்” என்றபடி R.Ashok Managing Director என்று பிராஸ்ஸோவில் பளபளத்த போரட் தொங்கிய கதவின் முன் நின்றார்கள் இருவரும். அறைக்குள் இயற்கை வெளிச்சம் இருக்கும்படியாக பெரும்பகுதி கண்ணாடியில் இருந்தது.

”மிஸ்டர் அஷோக்?”

கணேஷுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் திரும்பினார். முப்பதிரண்டு முப்பதைந்து வயதிருக்கலாம் போலத் தோன்றியது. பாதி மயிரை இழந்த முன் மண்டையால் நெற்றி பெரிதாக இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களுக்குள் மகா சாந்தம். சுத்தமாக சவரம் செய்யப்பட்ட மழுமழு முகம். 6 அடிக்கு ஏற்ற மாதிரி ஆஜானுபாகுவான உடம்பு. ஹீரோவே தான். கணேஷ் ஒரு நொடி அஷோக்கின் பக்கத்தில் நிவேதாவை கற்பனைப் பண்ணிப் பார்த்தான். பெர்ஃபெக்ட் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

”யெஸ். உங்களில் கணேஷ்....” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் அஷோக்.

“மைசெல்ஃப்” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் முன்சென்று அஷோக்குடன் கைகுலுக்கினான்.

”உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நிவேதா கேஸை எடுத்துக்கப் போறீங்களாமே?”

“இன்னும் தீர்மானிக்கலை.”

“ஹா. கமான். தீர்மானிக்காமல் தான் என்னை விசாரிக்க வந்திருக்கீங்களா?”

“நாங்கள் விசாரணைக்கு வரல மிஸ்டர் அஷோக்.”

“கால் மீ அஷோக். நோ மிஸ்டர் ப்ளீஸ்”

“ஒக்கே. நாங்க விசாரணைக்கு வரல. கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டது. அதற்காகதான் வந்தோம். வீ ஆர் நாட் யெட் இன்ட்டு த கேஸ் அஃபிஷியலி”

”என்ன மாதிரியான விவரங்கள். எங்கே சந்திச்சீங்க? வேர் யூ ஹாப்பி? மாதிரியான போரிங் கேள்விகளா?”

“ஹா ஹா. இல்லை. நான் நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். ஜெயராமன், நிவேதாவின் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார். ஹோப் யூ ஆர் அவேர் ஆஃப் திஸ்.”

“யெஸ்”

”அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் தெரியுமா?”

“யெஸ். அது சுத்த...”

“அதைப் பற்றின விளக்கம் அப்புறம். அதற்கு முன் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி இறந்த நான்கே நாட்களில், யூ க்ளீண்ட் அப் ஹெர் திங்ஸ். ரூம் சுத்தமா இருக்கு. நீங்களும். உங்கள் மனைவி இறந்ததில்?”

“யெஸ். அவ செத்துப்போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஐ ஹேட் ஹெர். ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்” என சுவற்றைக் குத்தினான் அஷோக்.

கணேஷும் வசந்தும் ஸ்தம்பித்து நின்றனர்.

December 8, 2011

நினைவெல்லாம் நிவேதா - 3

நினைவெல்லாம் நிவேதா - 1
நினைவெல்லாம் நிவேதா -2

ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.

“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.

விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.

”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”

“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”

மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.

“ரூம் காலியா இருக்கே?”

“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”

ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.

“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”

“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.

“நீ எங்கிருந்த?”

“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”

“வாட்ச்மேன்?”

“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.

“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”

“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”

“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”

”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”

“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”

“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”

”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”

”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”

“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”

”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”

“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”

“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”

“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”

“புரியலீங்க."

”சண்ட போட்டுப்பாங்களா?”

“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”

வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.

“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”

“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”

“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”

கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.

“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”

November 21, 2011

நினைவெல்லாம் நிவேதா - 2

கணேஷும், வசந்தும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஓ மை காட். வீ ஃபீல் சாரி பார் யூ. என்ன நடந்தது?” என்றான் கணேஷ்.

“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார். தூக்குல தொங்கிண்டிருந்தா. நாக்கக் கடிச்சிண்டு, முழி பிதுங்கி. ஐயோ நிவேதா...”

ஜெயராமனைக் கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது கணேஷிற்கு. அவர் அழுது ஓயும் வரைக் காத்திருந்தனர் இருவரும். இருபது நிமிடத்தில் மொத்தக் கண்ணீரையும் செலவழித்துவிட்டு நிமிர்ந்தார் ஜெயராமன்.

"ஈஸி. ஈஸி. டூ வி ஹேவ் எனிதிங் இன் திஸ் சூசைட் சார்?" என்றான் வசந்த்.

"யெஸ். நிவேதா எதுக்காக உங்கள பார்க்க வந்தாங்கறத சொல்லமுடியுமா? ஐ பீல் ஷி வாஸ் ட்ரிக்கர்ட் டு கமிட் சுசைட்" என ஜெயராமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் செல்ஃபோனில் ஜென்ஸி காதல் ஓவியம் பாடஆரம்பித்தார். படக்கென ஃபோனை எடுத்து “பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் லைனைத் துண்டித்தார்.

“ஸாரி. வேர் வேர் வி? ஆங். நிவேதா உங்களை எதுக்காக பார்க்க வந்தா?”

"மிஸஸ் நிவேதா இங்கே வந்தாங்களே தவிர எந்த விவரத்தையும் நாங்க கேட்டுக்கல. வீ ஆஸ்க்ட் ஹெர் டு மீட் அஸ் சம்டைம் லேட்டர். அதுக்கப்புறம் அவங்க வரல. ஆனா நீங்க வந்திருக்கீங்க. வித் ஹெர் டெத் நியூஸ். ஹூம். பை த வே நிவேதா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என நீங்கள் நினைக்க காரணம்?"

"அது வந்து...”

“தயங்காம சொல்லுங்க சார்.”

“சமீப காலமாக அவளிடமிருந்து எனக்கு சில இமெயில்கள் வந்தது. அஷோக் அவளிடம் பிரியமாக இல்லையென. அவளை இக்னோர் செய்கிறார் என. இரண்டாவது நிவேதாவின் பெயரில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருக்கு. ஒரு விபத்தில் இறந்து போன என் அண்ணா, நிவேதாவிற்கு கல்யாணம் ஆகும்வரை நான் கார்டியனாக இருக்கவேண்டுமென்றும், கல்யாணத்திற்கு பின்னர் அவளுடைய கணவர் கார்டியனாக இருக்கவேண்டுமெனவும் உயிலெழுதியிருக்கிறார். நிவேதாவிற்குப் பிறகு சொத்துக்கள் அஷோக்கிற்குதான் போகும்.”

“ஓ. நீங்கள் நிவேதாவின் கணவரை சந்தேகப் படுகிறீர்களா?”

”ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ்”

”அப்ப நீங்க போலீஸ்ல கம்ப்ளையெண்ட் பண்ணலாமே?”

“செய்யப்போகிறேன். அஷோக் மேல் சந்தேகம் இருப்பதாக. மீன்வைல் நிவேதா உங்ககிட்ட என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். இஃப் யூ கைஸ் டோண்ட் மைண்ட் எனக்காக இந்த வழக்கை ப்ரொசீட் பண்ண முடியுமா?”

"வி வில் லெட் யூ நோ சார்.”

“இது என் கார்ட். ஐ’ல் பி வெயிட்டிங் ஃபார் யூ கைஸ்”.

“ஒரு நிமிஷம் சார். நிவேதா எங்கள பார்க்க வந்தாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் வசந்த்.

”வெல். ஹாலில் இருந்த ஸ்க்ரிப்ளிங் பேடில் உங்கள் பெயரையும், அட்ரஸையும் கிறுக்கி வைத்திருந்தாள். உங்களைப் பற்றி விசாரித்துப் பார்த்தேன். எதற்காக அவளுக்கு ஒரு வக்கீலின் முகவரி தேவைப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள வந்தேன்” என்றார் ஜெயராமன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு. ”ஒக்கே எனக்கு டைமாச்சு. எந்த முடிவாக இருந்தாலும் ஒரு கால் பண்ணுங்க” என சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

”என்ன பாஸ். போரடிக்குதுன்னு சொன்னீங்களே. உள்ள இறங்கிடுவோமா?” என்றான் வசந்த்.

ஜெயராமன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் “ம்” என்றான்.

October 31, 2011

நினைவெல்லாம் நிவேதா - 1

கணேஷ் காதம்பரி கேஸ்கட்டில் தலையைக் கொடுத்திருந்தான்.

“இனிமே இந்த மாதிரி அராத்து கேஸ்லாம் என்கிட்ட கொண்டுவராதடா. சரியா இழுத்தடிக்குது. காம்ப்ரமைஸ்க்கு வழியிருக்காப் பாரு.”

“என்ன பாஸ். திடுதிப்புன்னு காம்ப்ரமைஸ்ன்னுட்டீங்க. நான் இப்பதான் பாஸ் காதம்பரிக்கு கைரேகை பார்க்கிற அளவுக்கு வந்திருக்கேன். மச்ச சாஸ்திரம் பார்க்கனும். ச்சே சொல்லனும். அப்புறம்..”

“ஷட் அப். வசந்த்.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது. காதம்பரி என விசிலடித்துக்கொண்டே கதவை திறந்த வசந்தின் விசில் சத்தம் சட்டென நின்றது.

“மிஸ்டர் கணேஷைப் பார்க்கனும்” என்ற பெண்ணுக்கு 23 வயதிருக்கும்.

“அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்றான் வசந்த் அவளை கண்களால் அளந்துக்கொண்டே.

“இல்லை. ஆனால் ரொம்ப அவசரம்”.

“சாரி மிசஸ்???”

”மிஸஸ் நிவேதா”

“சாரி மிஸஸ் நிவேதா. பாஸ் இப்போது கோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார். றோம். மாலையில் ஒரு போன் செய்துவிட்டு வாருங்களேன்”

“ஐ வோண்ட் டேக் மோர் தென் டென் மினிட்ஸ். ப்ளீஸ். ஐ’ம் கன்ப்யூஸ்ட். ஐ நீட் ஹிஸ் ஹெல்ப் டெஸ்பரேட்லி.”

“நீங்க பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கமாட்டீங்க. ஆனா இங்கிருந்து கோர்ட்டுக்குப் போக ட்ராபிக் சுளையா முக்கா மணிநேரத்த முழுங்கிடுமே. லேட்டாப் போனா கிருஷ்ணமாச்சாரி வாய்தா வாங்கிடுவார். ஏற்கனவே பாஸ் காதம்பரி கேஸால கடுப்புல இருக்கார். இதயே காரணம் காட்டி கழட்டி விட்டுட்டார்னா? நான் அட்லீஸ்ட் மச்ச சாஸ்திரமாவது பார்க்கனும்”

“எக்ஸ்யூஸ் மீ?”

“சாரி. உங்களுக்குப் புரியாது. நீங்க போய்ட்டு அப்புறமா வாங்களேன்.”

அந்தப் பெண் விழிகளில் அப்பட்டமாய் ஏமாற்றத்தைக் காட்டிவிட்டு நகர்ந்தாள்.

“இன்னிக்கு அடைமழை நிச்சயம்டா வசந்த்”

“நீங்க வேற பாஸ். 40 கிட்ட கொளுத்தறது. இப்போதைக்கு எந்த சைக்ளோனும் கிடையாதுன்னு வேற சொல்லிட்டாங்க. இப்ப ரமணனுக்கு பதிலா குழந்தைவேலுன்னு ஒருத்தர் வர்றார். பார்த்தீங்களோ?”

“டேய். ஒரு பொண்ண. அதுவும் ஜீன்ஸ் குர்தாவுல வந்த பொண்ண, முக்கியமா ரொம்ப அழகா இருந்த பொண்ண வசந்த் திருப்பியனுப்பிருக்கான்னா அது இயற்கைக்கு அப்பாற்பட்ட
விஷயமில்லயா?"

"நீங்க இன்னும் பழைய வசந்தாவே பார்க்கறீங்க. அவன் செத்துட்டான் பாஸ்"

"இப்பதான் காதம்பரின்னு கூப்பாடு போட்டுக்கிட்டிருந்த?"

"ஐயோ பாஸ். கல்யாணமான பொண்ணுங்களுக்கு ரூட் விடறதில்லன்னு பாலிசி கொண்டுவந்திருக்கேன். நெத்தி வகிட்ல குங்குமம் வச்சிருந்தது பாஸ்."

"சரிதான். எதுக்குடா வந்திருப்பா? முஞ்சு முழுக்க கவலை கபடியாடித்து."

"டைவர்ஸ் சம்பந்தமா டவுட் கேக்க வந்திருப்பாங்க பாஸ். பிட்ஸா வாங்கித்தரலன்னாகூட பிரியறதுக்கு ரெடியா இருக்காங்க பாஸ். ஹூம்"

"என்னவோ. சரிக் கிளம்புடா."

"ஆனாலும் நீங்க ரொம்பவே அடம்பிடிக்கறீங்க பாஸ். காரையும் மாத்த மாட்டேங்கறீங்க. ஆபிஸையும் மாத்த மாட்டேங்கறீங்க. ரெண்டுமே படுத்தறது. மவுண்ட் ரோட்ல ஆடி ஷோரூம்
தொறந்துருக்கான் பாஸ். வண்டி டக்கரா இருக்கு. ரிசப்ஷனிஸ்ட் பேர் ரீட்டா. அவ வண்டியவிட சூப்பரா இருக்கா பாஸ். ஒருதடவையாவது ஓட்டிப் பார்த்தடனும்."

"டேய்ய்.."

"நான் வண்டிய சொன்னேன் பாஸ்."

"யுவர் ஆனர் காதம்பரி கொடுத்துள்ள புகாரில் இம்மியளவும் உண்மையில்லை" என ஆரம்பித்து எதிர்த்தரப்பு வக்கீல் போரடித்துக்கொண்டிருந்ததை கனேஷும், வசந்தும் கன்னத்தில்
கைவைத்தபடி வேண்டா வெறுப்பாய் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆடி அசைந்து இரண்டு அரசுத் தரப்பு சாட்சிகள் சொன்னவற்றை மகாப் பொறுமையுடன் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி
வைப்பதாகக் கூறி எழுந்துச் சென்றார்,

"சட். சரியான நச கேஸு" என்று புலம்பியபடியே ஆபிஸ் வந்து சேர்ந்தனர் இருவரும். பையன் வாங்கிவந்த டீக்கு சிகரெட்டோடு கல்யாணம் நடத்திவிட்டு கேஸ்கட்டுகளில் மூழ்கினர்.

"ஒரு வாரம் ரொம்ப ஹெக்டிக்கா போச்சுடா. பேசாம கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலைமறைவா போய்டலாம்ன்னு பாக்கறேன். கோர்ட்டுன்னாலே கடுப்பா இருக்கு."

"சொல்லாதீங்க பாஸ். உங்க வாய் முகூர்த்தம். நீங்க வெகேஷனப் பத்தி பேசறச்சேல்லாம் ஏதாவது ஒரு கேஸ் வந்துடுது." வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது.

உள்ளே வந்தவருக்கு வயதைக் கணிக்க முடியாத தோற்றம். கண்டிப்பாய் ரிடயர்டு மிலிட்டரி பெர்சன் என்பதை இரண்டுக்காதுகளுக்கு மேலே ஒரு இஞ்ச் முடியிழந்த மண்டையும், டக்கின்
செய்திருந்த டீ-சர்ட்டும் சொல்லியிருந்தன.

"ஹலோ. ஐ'ம் ஜெயராமன். ரிடயர்டு மிலிட்டரிமேன்."

"ஐ'ம் கணேஷ். ஹி இஸ் மை அசிஸ்டெண்ட் வசந்த். என்ன விஷயமா..."

"ஒன் வீக் பிஃபோர் என் டாட்டர் உங்களைப் பார்க்க வந்திருந்தாளா?"

"உங்க டாட்டருக்கு பேர் வச்சீங்களா சார்?"

"வசந்த்” என்று அவனை அதட்டி, “சாரி சார். உங்க டாட்டர் பேர்?" என்றான் கணேஷ்.

"நிவேதா அஷோக்".

"ஓ யெஸ். ஷி கேம். டோண்ட் சே மீ தட் யூ ஹேவ் அ நியூஸ்.”

“அப்கோர்ஸ் ஐ ஹேவ் அ வெரி பேட் நீயூஸ். மை டாட்டர் இஸ் நோ மோர்.”

- நன்றி பண்புடன் இணைய இதழ்.

-பண்புடனின் வெளிவரும் எனது தொடர்கதையின் முதல் பகுதி.

September 15, 2011

கைதிகள்

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதுமே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தான். ஒருமணிநேரம் கஷ்டப்பட்டது வீணாகப் போய்விடுமோ என்ற கவலையோடு அம்மா குழந்தையை தட்டிகொடுக்க ஆரம்பித்தாள். விரித்துப் போட்டிருந்த முடியை அள்ளி முடிந்துக்கொண்டு கதவை திறந்தேன். வெளியே நின்றவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு நல்லாருக்கீங்களாம்மா என்று கேட்டார். மையமாய் தலையாட்டிவிட்டு என்ன கேட்பது எனத் தெரியாமல் நின்றேன். அவரே தொடர்ந்தார்.

“அய்யா இருக்காங்களா?”

“குளிச்சிட்டிருக்காங்க. நீங்க??”

“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”

“ஓ. உள்ள வாங்க”

“பரவால்லம்மா. அய்யா வரட்டும்”

“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.

வாங்க ராஜன்.

அய்யா தொந்தரவு பண்ணிட்டேனா.

அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா?

இது ஒத்து வருமா பாருங்கய்யா.

(சிறிது நேர அமைதிக்குப் பின்)

இந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.

ஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா? எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.

அப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.

முடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும்? கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.

நியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.

அம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.

இப்பதான் வர்றியா?

ஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.

சாப்ட்டியா?

இல்ல.

தாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா?” என்றேன்.

அதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி?

இல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க?

ஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.

வெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.

“ஆர்டர் கொடுத்தாச்சா அவருக்கு?”

“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.

“யாருப்பா? காலைல வந்தாரே அவரா? என்னாச்சு?”

“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்‌ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”

“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா? அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா?”

“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”

அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற?” என்றேன். மறுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.

“நீ உடனே கிளம்பி வா”

“Is everything alrite? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”

“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”

“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா?”

“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”

அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.

அதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.

“என்ன ஆச்சு? இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க? உடம்புக்கு முடியலையா? ஹாஸ்பிட்டல் போவோமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.”

“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”

“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”

“வாட்?”

“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”

“ஸ்டாப் ஜோக்கிங்.”

“Do u think i am? bloody hell"

"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன ஆச்சு?”

“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me? இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.

நன்றி அதீதம்

May 17, 2011

பழிக்கு பழி

கொலைப்பட்டினியோடிருக்கும் பத்து சிங்கங்களிருக்கும் குகையின் வாசலில் நிற்கும் ஆடு போல் DK கல்யாண மண்டப வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அவசியம் உள்ளே போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். கண்களை மூடி ஒரு தடவை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டேன். மனதைரியத்தை வரவழத்தைக்கொண்டு உள்ளே நுழைந்தேன். வராந்தா போன்றிருக்கும் அமைப்பில் சிதறிய அன்ன உருண்டைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவயதுப் பெண்கள். ”இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போய்டல. அப்படியே திரும்பி ஓடிடு” என என் மூளை எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே “ஹேய் ஸ்வேதா. வா வா வா. என்ன அங்கேயே நின்னுண்டிருக்கே. உள்ளே வா. அப்பாம்மா வர்லையா?” எனக் கேட்டபடியே என் பதிலை எதிர்பார்க்காமல் சச்சு மாமி என் கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். என்னைக் கொண்டுபோய் அவள் நிறுத்திய இடத்தில் சங்கர் மாமா உட்கார்ந்திருந்தார்.

”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.

“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.

“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”

“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”

“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.

“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”

“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”

“BTSல தான வேலை பார்க்கிற?”

“ஆமாம்”

“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.

மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.

“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.

“7 இயர்ஸ் ஆய்டுத்து”

“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”

“சிட்டி ஆஃபிஸ்”

“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.

“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”

“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.

"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.

ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.

“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’

“தேங்ஸ்டி.”

“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”

“கொலவெறில இருக்கேன். போய்டு.”

“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”

“அடியேய்ய்ய்ய்ய்”

“சும்மா சொல்லுடி”

“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.

கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.

“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"

"யெஸ் வேலு.”

“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”

“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"

"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."

"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”

“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."

ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.

Name : Mahadevan Keshava Krishnan

வாடி வா.......

January 19, 2011

ச ரி க ம படுத்தாத நீ

ஆனா ஆவண்ணா படிக்கத் தெரியாதவனிடம் பின்நவீனத்துவ கவிதை ஒன்றைக் கொடுத்து, படித்துப் பார்த்து சிலாகிக்க சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை? அதற்கொப்பான கொடுமை ஒன்று எனக்கு நேர்ந்தது. அதற்கு முழுமுதற்காரணம் என் அம்மாதான். ஏதோவொரு மார்கழி வெள்ளிக்கிழமையில் வீட்டுக் காலிங்பெல் அடிக்கவும் கதைவைத் திறந்தால் வாசல் முழுக்க மோகனா மாமி அடைத்திருந்தாள். மாமி உள்ளே வருவதைப் பார்க்கும் ஆவலில் தலையைத் திருப்பாமல் குரலை மட்டும் சமையல்கட்டிற்கு அனுப்பினேன். “அம்மா மோகனா மாமி வந்திருக்கா பாரு. என்ன மாமி பட்டுப் புடவை, வைரமூக்குத்தின்னு மின்றேள். ஏதாவது ரிசப்ஷனா?” என்றேன். ”என்னடி இப்படி எண்ணைய் வழிஞ்சிண்டு நிக்கற. கிளம்பலையா இன்னும்? நாழியாயிடுத்துல்ல?” என்றாள் மாமி. ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்க அம்மா வந்து “போரடிக்கறதுன்னு சொல்லிண்டிருந்தல்ல. அதான் மாமி உன்னை இன்னைக்கு மியூசிக் அகாடமிக்கு அழைச்சிண்டு போக வந்திருக்கா” என்றாள். இன்னும் ரெண்டு செகண்ட் அம்மாவை முறைத்திருந்தேனென்றால் அம்மா சாம்பாலாகியிருப்பால். போரடிக்குதுன்னு சொன்ன பொண்ணை ஒரு மிகப்பெரிய வைக்கப் போரோடு கோர்த்து விட்டு அக்கப் போர் பண்ணிட்டியேம்மா என மனதுக்குள் அழுதுக்கொண்டே கிளம்பினேன். போதாக்குறைக்கு மாமியை எதிர்த்துப் பேசக்கூடாது, கெக்கே பிக்கேன்னு கமெண்ட் அடிக்கக்கூடாதுன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு நாள் வாங்கிக் கட்டிக்கப்போறே என நினைத்துக் கொண்டே மாமியோடு ஆட்டோவில் கிளம்பினேன்.

மியூசிக் அகாடமி போவதற்குள் மாமியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். மாமிக்கு கும்பகோணம் பக்கம். தனக்கு எல்லாம் தெரியுமென்பதில் மாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கை எனக்குமுண்டு. மாமிக்கு ஒன்னுமே தெரியாதென்பதில். இரண்டு பையன்களும் கல்யாணமாகி அமெரிக்காவிலிருக்கிறார்கள். மூத்த மாட்டுப்பெண் பிள்ளையாண்டிருப்பதால் இன்னும் ஆறு மாதங்களில் மாமி அமெரிக்காப் போகப் போவதாக அம்மா சொன்னாள்.

”அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போறது” என ஆரம்பித்தாள் மாமி.
”போறது மாமி. As usual"
"ஸ்விஸ்லன்னா வேலைப் பார்க்கிற?”
“ஆமா மாமி”
“ப்ராபர் ஸ்விஸா” என்றாளே பார்க்கனும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மாமி கத்துகிட்ட ஆங்கில வார்த்தைகளில் ப்ராபரும் உண்டு. கிராமம், டவுன், மாவட்டம், மாநிலம் தாண்டி இப்போ நாட்டுக்கும் ”ப்ராபர்” போட ஆரம்பித்துவிட்டாள். அடுத்த என்ன அபத்தமான கேள்வி வருமோ என பயந்துண்டுருக்கும்போது நல்லவேளையாக மியூசிக் அகாடமி வந்துவிட்டது. ஆட்டோவிற்கு காசைக் குடுத்துவிட்டு திரும்பிய எனக்கு பாட்டுப் ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா இல்லை பட்டுப் புடவை ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா என்ற பெரிய சந்தேகம் வந்தது. அந்தளவுக்கு கூடியிருந்த மொத்த ஜனமும் ஆர்.எம்.கேவியில் கொள்ளை அடித்துவிட்டு வந்தாற்போலிருந்தது. இறங்கியவுடனே மாமி பட்டுப் பாட்டை ஆரம்பித்தாள். பார்க்கிற அத்தனை பேரிடமும் “ராமர் பச்சைதான் வேணும்ன்னு தேடித் தேடி வாங்கினதாக்கும். சுத்த ஜரி. எவ்ளோ கெணம்மா இருக்குப் பாருங்கோ” எனப் பாடிக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய அரை வட்ட மாநாடு நடந்துக்கொண்டிருக்க, வேண்டாவெறுப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீர்ன்னு யாரோ என் காதைப் பிடித்து இழுக்கவும் பயந்துட்டேன். ஐந்துக்கு மூன்றில் ஒரு மாமி என் காதை ஸ்கேன் பண்ணிக்கொண்டிருந்தாள். பெரிய ப்ரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு என் காதை மாமியின் கையிலிருந்து விடுவித்துக்கொண்டேன். எத்தனை கேரட் என்று ஒலித்த மாமியின் குரல் வெண்கலப் பாத்திரக் கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது. தெரியாது மாமியென்றேன்.

”மோகனாக்கு என்ன வேணும்”
“தெரியலையே மாமி. அநேகமா கச்சேரி முடிச்சுட்டு தான் சாப்பிடுவான்னு நினைக்கிறேன்”
“அசடே. மோகனாக்கு நீ என்ன உறவு வேணும்ன்னு கேட்டேன்” என்றாள். அந்தக் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிஞ்சிட்டா சிவில் சர்வீஸ் எக்ஸாமெல்லாம் ஊதி தள்ளிட மாட்டேனா என நினைத்துக்கொண்டேன். மோகனா மாமி எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அநேகமாக எனக்குத் தெரிந்த எல்லோருக்கும். அதற்குள் மாமியே வந்துவிட்டாள். நம்ம லெட்சுமி பொண்ணுடி எனச் சொல்லிக்கொண்டே என்னை அடுத்த மாநாடு நடக்குமிடத்திற்கு தள்ளிகொண்டு போனாள். நேற்றைக்கு நீ எஸ்.ஆர் கச்சேரி கேட்டிருக்கனுமே. என்னமா பாடினான் தெரியுமா என ஆரம்பித்து மாமிகளனைவரும் தத்தம் புலமைகளைக் காட்டிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒரு மாமி பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள். முடியாதவா போலிருக்கு, என்னமோ ஏதோ என பதறி மாமியைத் தாங்கிப் பிடிக்க ஓடுகையில் சட்டென ஓலம் நின்றது. போயேச் சேர்ந்துட்டாளா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே இதே ஆலாபனை கரகரப்பிரியாவில் எப்படியிருக்கும் என்றாள் என்னைப் பார்த்து. ”கண்றாவியா இருக்கும். ஸ்டெர்ப்சில்ஸ் சாப்பிட்டா சரியாப் போய்டுமென்றேன்” கடுப்பாய். கொல்லென்று சிரித்தது சுத்தி நின்றக் கூட்டம். மோகனா மாமிதான் என் சங்கீத ஞானத்தை எக்ஸ்ட்ரா பிட்டுகள் சேர்த்து படமாய் ஓட்டிக்கொண்டிருந்தாள். ”சின்ன வயசுலப் பாட்டுக் கத்துக்க போனா. கீர்த்தனை கத்துக்கிற நேரத்துல பாட்டு டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி வேற எடத்துக்கு மாறிட்டா. பாட்டு டீச்சர்ன்னு இல்ல. இவ யார்ட்ட பாடம் கத்துக்கப் போனாலும் அவாளுக்கு கல்யாணமாயிடறது. ஹிந்தி, பரதம் என எல்லா டீச்சரும் கல்யாணமாகிப் போய்டவே குழந்தைக்கு கலை மேலிருந்து ஆர்வமே போய்டுத்து. ஆனாப் பாருங்கோ சினிமாப் பாட்டெல்லம் அட்சர சுத்தமா ஸ்ருதி பிசகாமல் பாடுவா.” என ஒரு ஃபில்டர் காஃபிக்கு மயங்கி என் அம்மா சொன்ன சங்கதிகளை மாமி வாசித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் ஹால் கதவுகள் திறக்கப்பட்டது. நான்கு பேரின் காலை மிதித்து, நாற்பது சாரி சொல்லி மாமி அமர்ந்தாள். பக்கத்திலேயே நான். கச்சேரி பண்ண வேண்டிய ஆர்.எஸ்ஸும் பப்பளா பளபளாவென்றிருந்தாள். ஆர்.எஸ் பாடப் பாட எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிகொண்டு வந்தது. தலை தொங்கும் தருணத்தில் ஆர்.எஸ்ஸின் ஆஆஆஅ எழுப்பிவிட்டுவிடும். நடுவில் ஆர்வ மிகுதியில் மாமி ஓங்கி என் தொடையில் தட்டிவிட்டாள். ஊர்பக்கம் அள்ளி அள்ளி சாப்பாடு போடுபவர்களுக்கு பெரிய கை என்பார்கள். மாமியையும் அப்படித்தான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இன்றுதான் மாமிக்கு நிஜமாகவே பெரிய கை என்றுணர்ந்தேன். அவ்வப்போது மாமி பாஸ் பண்ணும் கமெண்ட்டுகளுக்கு பதில் வேறு சொல்லனும். அப்படித்தான் தீடிரென ”சுத்ததன்யாசி ஜோரா இருக்குல்ல” என்றாள். நானும் தூக்கக் கலக்கத்தில் “எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி” என்று உளறிவைத்தேன். “கடவுளே இப்படி ஒரு ஞான சூன்யத்தோட என்னை கச்சேரி பார்க்க வச்சிட்டியே” என மாமி புலம்புவது போல் எனக்கு கேட்டது. உடனே எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அடுத்து ஆர்.எஸ் பாடிய பாடலை சிந்துபைரவி ராகம்தானே மாமி என்றதுக்கு, ஆர்.எஸ்ஸின் மீது வைத்தக் கண்ணை எடுக்காமலே “மத்யமாவதி” என்றாள். என் காதில் மத்யமாவது என விழுந்து தொலைக்கவே “நன்னா இருட்டிடுத்து. இப்பப் போய் மதியமாறதுங்றேளே மாமி” என்றேன். மாமிக்கு ரொம்ப எரிச்சலாகிவிட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். இதைப் போல முழுக் கச்சேரியிலும் என் அறிவாளித்தனத்தை பறைசாற்றிக்கொண்டே இருந்தேன். இனி ஜென்மத்துக்கும் என்னை அழைத்துக்கொண்டு எந்தக் கச்சேரிக்கும் போகமாட்டாள் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், ஊரெங்கும் என் பேரை ரிப்பேர் ஆக்கிடுவாளே என்ற கவலையும் குடிகொண்டது. இந்த இரண்டு மாத விடுப்பில் சங்கீதம் கத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஸ்விஸ்ஸில் ஒரு கச்சேரிப் பண்ணாலென்ன எனத் தோன்றியது. வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாய் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சங்கீதம் கத்துக்கொடுக்க ஆளிருக்கா எனத் தேடனும் என்று நினைத்துக்கொண்டேன்.

தோழிகளிடம் என் முடிவை சொன்னதும் சிரித்தார்கள். ரெண்டே மாசத்தில் எப்படிடி என்று கிண்டலடித்தார்கள். ”கத்துண்டு நான் பாடப்போறது ஸ்விசிலாக்கும். அதனால நான் பாடறது தான் கர்நாடிக சங்கீதம்” என்றேன். பின்னர் அம்மா வீடு இருக்கும் ஏரியாவிலேயே ஒருத்தர் சொல்லிக்கொடுக்கிறார் எனக் கேள்விப்பட்டவுடனேயே அந்த அட்ரஸில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தேன். கதவைத் திறந்தவர் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்தார். நான் தயங்கி பாட்டுக் கத்துக்கனும்ன்னு இழுத்ததும், உள்ளே அழைத்துக்கொண்டு போய் காஃபியெல்லாம் கொடுத்து உபசரித்தார். பின்னர் தனக்கு அடுத்த மாதம் டெலிவரியென்றும், வேண்டுமென்றால் தன் மாமியாரிடம் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்லி தன் மாமியாரின் அட்ரஸை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். எந்த ஏரியா என்று பார்க்க அந்தக் காகிதத்தைப் பிரித்த போது முதலில் பெயரைத் தான் பார்த்தேன். மிசஸ். மோகனா என்றிருந்தது. மேற்கொண்டு படிக்காமலேயே அந்தக் காகிதத்தை கசக்கி கீழேப் போட்டு வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தேன்.

-அதீதம் (15-01-2011) இதழில் வெளியானது.

October 27, 2010

வலியின் மொழி

இரண்டு முறை கட் செய்தும் விடாமல் மூன்றாவது தடவையும் அம்மா போன் செய்யவும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பரத்தை தொடர சொல்லிவிட்டு கான்பரன்ஸ் ரூமிலிருந்து வெளியே வந்தேன். லைன் கிடைக்கவில்லை. கொஞ்சம் படபடப்பாகவும் அதிக எரிச்சலாகவும் இருந்தது. போன் கட் செய்தால் மீண்டும் தொடர்ந்து அழைத்தால் எமர்ஜென்சி என்பது எனக்கும் அம்மாவிற்கும் போடப்பட்ட ஒப்பந்தம். ஒரு தடவை ப்ரொடெக்ஷ்ன் டேட்டாவை சரிப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை தொடர்ந்து அடித்தாள். என்ன என அழைத்துக் கேட்டபோது 'சாயந்திரம் வர்றச்சே மறக்காம காபி பொடி வாங்கிண்டு வந்துடு. இன்னைக்கு செகண்ட் டோசுக்கு தான் இருக்கு' என்றவளை என்ன செய்வதென தெரியாமல் எனது நிலை விளக்கிப் போடப்பட்ட ஒப்பந்தம். எமர்ஜென்சி என்றால் மட்டும் திரும்ப கூப்பிடு என்று. உப்பு சப்பில்லாத விஷயங்கள் கூட எமர்ஜென்சி என்பாள். கொஞ்சம் கடிந்து கொண்டால் போதும். ஒப்பாரி ஆரம்பித்துவிடும். 'உங்களுக்கெல்லாம் நான் வேண்டாதவளாப் போய்ட்டேன். என்னை யாரும் மதிக்கமாட்டேங்கறேள்'. உங்கள் என்பது நான் அல்லது அப்பா. அல்லது இருவருமே. இந்தப் பாட்டுக்கு பயந்தே அவள் எது கேட்டாலும் மறுபேச்சின்றி செய்தோம். மார்கழி மகா உற்சவத்திற்கு அழைத்துச் செல்வதை விட மீட்டிங் முக்கியமா என கேட்பவளை என்ன சொல்வது? நாலைந்து முயற்சிக்குப் பிறகு லைனுக்கு வந்தாள்.

'என்னம்மா?'

'நீ சீக்கிரம் லீவு சொல்லிட்டி கிளம்பி வா.'

'கவர்மெண்ட் ஆபிசில்லமா இது. நினைக்கறச்சே கிளம்ப. முதல்ல என்னன்னு சொல்லு. உடம்புக்கு படுத்தறதா ஏதாவது?'

'நான் நன்னாதான் இருக்கேன். ரமணிம்மாஞ்சி தான் போய் சேர்ந்துட்டாராம். நீ கிளம்பி வா. எனக்கு அவாத்துக்கு தனியாப் போத்தெரியாது. சாயந்திரம் பாடி எடுக்கறதுக்குள்ள போகனும்.'

'விளையாடறியாம்மா. இங்க தலைக்கு மேல வேலை இருக்கு. என்னால வர முடியாது. அப்பாவ அழைச்சிண்டு போய்ட்டு வா.'

'அவர் டிசி மீட்டிங் முடியாதுன்னுட்டார். உன்ன கூட்டிண்டு போக சொன்னார்.'

'எனக்கும் இன்னிக்கு க்ளையண்ட் கால் இருக்குமா. இன்னைக்கு போகலன்னா என்ன? பத்துக்கு முன்னால ஒரு நாள் போய் விசாரிச்சிட்டு வரலாம்.'

'நீயும் முடியாதுங்கறே. நானென்ன பீச், பார்க்குன்னா கூட்டிண்டு போக சொல்றேன். என் அம்மாஞ்சி மூஞ்ச கடைசி தடவை பார்க்கனும்ங்கற ஆசை இருக்காதா எனக்கு?'

பாட்டு ஆரம்பித்துவிட்டது. அப்பா தப்பித்துவிட்டார். ’ஹாஃப்’ என்றவளை முறைத்த பரத்திடம் அடுத்த மாதம் நான் பார்த்துக்கொள்கிறேன் என பொய் சத்தியம் செய்து கிளம்பி வீட்டை அடைவதற்கு மணி இரண்டானது. அம்மா தயாராய் வாசலில் இருந்தாள்.

'மயிலாப்பூருக்கு ஆட்டோலயே போய்டலாமா?'

'மயிலாப்பூர் என்னத்துக்கு?'

'ரமணி மாமா ஆம் அங்கதானே இருக்கு. அவாத்துக்கு தானே பாடி கொண்டு வருவா? இல்லை மாமியாத்துக்கு போறதா?'

'அடியே. இறந்தது குண்டு ரமணி.'

'நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ்சம் வந்தாப்ல அத்தனை ரமணி. குண்டு ரமணி, சேப்பு ரமணி, கல்யாண ரமணின்னு ஒரே ரமணி மயமா இருக்கு. நல்ல வேளை நான் மயிலாப்பூருக்கு போன் பண்ணி ஆத்துக்கு வழி கேட்கலை. அசடு வழிஞ்சிருக்கனும்.'

'அருணுக்கு போன் பண்ணி அவா ஆம் எங்க இருக்குன்னு கேளு. அவன் தான் எனக்கு தகவல் சொன்னான்.'

அருண் என் பெரியம்மா பையன். மெடிக்கல் ஃபீல்டில் இருப்பதால் யாருக்காவது உடம்பு என்றால் கட்டாயம் உதவி வரும். அண்ணாவை அழைத்து வழி கேட்டதுக்கு 'மாம்பலத்துல தான் வீடு. அயோத்தியா மண்டபத்திற்கு எதுதாப்புலயே இருக்கு' என்றார். மாம்பலத்திலிருக்கும் முக்கால்வாசி பேர் சொல்வது தான். அயோத்தியா மண்டபத்திற்கு எதிர்ல தான் வீடு. எத்தனை வீடு தான் இருக்க முடியும் அயோத்தியா மண்டபத்திற்கெதிரவே? அயோத்தியா மண்டபம் போய் சேர்ந்து மறுபடியும் போன் செய்தோம். லைன்லயே இருன்னு சொல்லி 2 கி.மீ தொலைவிற்கு வழி சொன்னார். அந்தத் தெருவில் நுழைந்தபோதே ஷாமியானாவும், நீல்கமல் சேர்களும் ரமணி மாமா வீட்டை அடையாளம் சொன்னன. வாசலிலேயே அருணண்ணாவும் பாடை கட்டுபவனுக்கு இண்ஸ்டரக்ஷன் கொடுத்துக்கொண்டு இருந்தார். நீங்க வந்தத நான் கவனிச்சேன் என்பது போல் பார்த்தவர்களெல்லாம் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள். அம்மா உள்ளே செல்ல நான் அண்ணாவின் அருகிலேயே நின்றுவிட்டேன். அம்மா உள்ளே நுழைந்ததும் பெரிதாக அழுகை சத்தம் எழும்பி அடங்கியது. வாசலில் கொஞ்சம் மாமாக்கள் அங்கங்கே உட்கார்ந்து கொண்டு பேப்பரை நாலாய் எட்டாய் மடித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். "உள்ளே போலியா" என்றார் அண்ணா.

”ப்ச். போய் என்ன பண்றது. யாரு என்னன்னே தெரியாது. கடைசியா உங்க கல்யாணத்துச்சே பார்த்தது. என்ன ப்ராப்ளம்?”

“ஹார்ட் அட்டாக். மாஸிவ். ஏற்கனவே கொஞ்சம் ட்ரபிள் இருந்தது போல.”

“நீங்க எப்படி?”

“கான்ஃபரன்ஸ் விஷயமா டாக்டரப் பார்க்க போயிருந்தேன். சின்னவ என்ன பார்த்திருக்கா.”

“பெரியம்மா வரலையா?”

“பெங்களூர்ளன்னா இருக்கா. ப்ராப்ளமா இருக்கு. நாளன்னிக்கு கிளம்பி வர்றா. நீ எப்படி?”

“உங்க அருமை சித்தியால வந்தது. ஒரே ஒப்பாரி. சொல்லி சொல்லி காமிப்பா. அதான் நானே அழைச்சுண்டு வந்துட்டேன்.”

“ஜாப் எப்படி போயிண்ட்ருக்கு?”

“என்னத்த சொல்ல. பேர்தான் ப்ராஜெக்ட் லீடர். டெவலபர், டெஸ்டர்ன்னு நாலு பேருக்கான பில்லிங் குடுத்துக்கிட்டிருக்கேன். இப்போக் கூட க்ளையெண்ட் கால விட்டுட்டு தான் வந்திருக்கேன். ஆப்ரைசல்ல ரிஃப்ளெக்ட்டாகுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு எப்படி போறது?”

“அதே நாய் பொழப்பு தான். ஏய் சுதா அத்தை வர்றாடி”

“அய்யோ நான் உள்ளே போறேன் சாமி. அத்தை வாயாலேயே வறுத்தெடுத்துடுவா.”

ஹாலின் நடுவில் நெடுஞ்சான்கிடையாக ஐஸ் பாக்ஸில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் மாமா. போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை என்பது மார்பு வரை போர்த்தியிருந்த துணியின் மூலம் தெரிந்தது. நாலு நாள் முள்ளு தாடியுடன் கையை மார்பில் வைத்தாவறு கிடந்தார் மாமா. தலைமாட்டில் பீதாம்பரி பவுடரால் அங்கங்கே நான் பித்தளை வம்சம் தான் என காட்ட முயன்றுக்கொண்டிருந்த காமாட்சி விளக்கு நிதானமாய் எரிந்துக் கொண்டிருந்தது எந்த சலனமுமில்லாமல் ரமணி மாமாவைப் போல். ஐஸ் பாக்ஸின் மேல் ஒரு பெரிய ரோஜாப் பூ மாலை போடப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் பாக்ஸின் அருகே தலை குனிந்து நின்றேன். அதற்குள் அத்தை வந்து மாமியைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துருந்தாள். நான் எதிர்பக்கம் ஹாலின் மூலையில் அமர்ந்தேன். அம்மா மாமிக்கு ஆறுதலளிக்க வேண்டி அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் என்ன பண்ண என்ற கண்ணாலேயே கேட்டாள். நான் முறைத்துவிட்டு பார்வையை மாமி மேல் நகர்த்தினேன். இதற்குமேல் அழ திராணியில்லையென்பதுபோல் அரை மயக்கத்தில் இருந்தாள் சாரதா மாமி. ரமணி மாமாக்கு இரு பெண்கள். பெரியவளின் ஜாதகத்தை தையில் எடுத்துவிட்டதாய் அம்மா பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மாவின் தூரத்து உறவென்பதால் ரமணி மாமா குடும்பத்துடன் அந்தளவு பழக்கமில்லை. எப்போதாவது பெரியம்மா வீட்டு விசேஷங்களில் பார்த்துக்கொண்டு நன்னாருக்கியா? யாருன்னு தெரியறதா என்ற சம்பிரதாயக் கேள்விகளோடும் பரஸ்பரப் புன்னகை பரிமாற்றங்களோடும் நகர்ந்துவிடுவதோடு சரி. பெரியவளின் முகத்தை நினைவிலிருந்து தூசு தட்டி எடுத்துக்கொண்டிருந்தேன். பாக்ஸை சுத்தி பார்வையைச் சுழட்டியதில் மாமிக்கு எதிர்த்தாற்போல் இரு பெண்களும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சின்னவளுக்கு 13 வயதிருக்கும். பெரியவளுக்கு கிட்டத்தட்ட என் வயதுதான். பெயர் நினைவிலில்லை. பெரியவள் கன்னத்தில் கண்ணீர் கோடுகளாய் காய்ந்திருந்தது. மாமாவை வெறித்துப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள். அருணன்னாவின் கல்யாணத்தில் கடைசியாய் பார்த்தேன். கொஞ்சும் குரலில் நலங்கின் போது அவள் பாட்டு பாடியது ஞாபகத்துக்கு வந்தது. எழுந்துபோய் அவளருகில் அமர்ந்தேன். என் இருப்பை உணர்ந்தவளாய்

'நன்னாத்தான் இருந்தார். மைல்டா ஹார்ட்ல பிராப்ளம் இருந்தது. நத்திங் சீரியஸ்ன்னு தான் டாக்டர் சொல்லிருந்தார். நேற்றைக்கு தீடிர்ன்னு அட்டாக். மாஸிவ். போய்ட்டார்'.

எந்த உணர்ச்சியுமில்லாமல் அவள் சொல்லிமுடிக்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். அவளே தொடர்ந்தாள்.

'பயமாயிருக்கு. என்னப் பண்ணப்போறேன்னு தெரியல.'

'நீ இப்பதான் தைரியமா இருக்கனும். அம்மாக்கும் தங்கைக்கும் தெம்பு கொடுக்கனுமில்லையா' என்றேன். இதற்குமேல் என்ன பேச வேண்டுமெனத் தெரியவில்லை. அழலாமா என யோசித்தேன். இண்ஸ்டண்ட் அழுகை பழக்கமில்லாததால் முயற்சியைக் கைவிட்டேன். கடைசியாக அழுதது எப்போது என்ற கேள்வி எழுந்தது. சிறுமியாக இருந்தபோது பெரியப்பா, தாத்தா, சித்தப்பா என அடுத்தடுத்து பறிகொடுத்த குடும்பம். புதிதாக எழும்பிக் கொண்டிருந்த வீட்டில் அண்ணன்களோடு விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருந்தது. சென்ற வருடம் பாட்டி இறந்தபோது அழவில்லை. காட்டுக்குப் போய்விட்டு வீடு வந்து குளித்தவுடனே சாப்பிடாமல் கிளம்பி ஓடியதும் நினைவில் இருந்தது. துக்கமோ, வருத்தமோ இல்லாத மனநிலையில் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான உணர்ச்சியும் என்னில் இல்லை.

இதற்கிடையில் அவள் சித்தப்பா வந்து சேர, பாடியை எடுக்கும் வேலைகள் ஆரம்பமானது. மாமியால் முடியாததால் சாஸ்திரத்துக்கு பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்து தண்ணி கொண்டு வந்து கொட்டப்பட்டது. அண்ணாவும், சித்தப்பாவும் சேர்ந்து மாமாக்கு வேஷ்டி போர்த்தினார்கள். பாடையில் கிடத்த பாடியை தூக்கியபோது எழுந்த அழுகை அடர்த்தியான ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகையை மீறி அனைவரையும் தாக்கிற்று. பாடியை தூக்கும் நேரம் பெரியவள் அலற ஆரம்பித்தாள்.

'மெதுவா தூக்குங்கோ. கைய அழுந்தப் புடிக்காதீங்கோ. அவருக்கு கை வலி இருக்கு'

சட்டென திரும்பி என் பக்கம் பார்த்து

'என் கூட வர்றியா. நானும் காட்டுக்குப் போகனும். அப்பா ரொம்ப சூடு தாங்க மாட்டார். நான் வர்றதுக்குள்ள அம்மாக்கு என்ன பண்ணனுமோ பண்ணிடுங்க. அதெயெல்லாம் என்னை பார்க்க வச்சிடாதீங்கோ. அம்மாவ ரொம்ப படுத்தாதீங்க.'

டக்கென்று அவள் சித்தப்பா “என்ன புது பழக்கம். பொம்ணாட்டிகள் காட்டுக்கு வர்றது? எல்லாம் இங்கேயே இருங்கோ. நான் அண்ணாவை அனுப்சிட்டு வர்றேன்” என்றார்.

”என்னக் காலத்திலடா இருக்க சங்கரா? இப்பல்லாம் எல்லாருமேதான காட்டுக்குப் போறா. விடுடா. அவாளும் வரட்டும். அப்பாக்கு பெண்குழந்தேள் கொள்ளிப் போடறதொன்னும் மாபாதம் கிடையாது” என்றாள் கூட்டத்திலிருந்து ஒரு வயதான மாமி. பேச்சுகள், எதிர்பேச்சுகள் என ஹாலில் சிறு குழப்பம் ஆரம்பமாயிற்று. வாத்தியார் நாழியாயிடுத்து என்றார். கடைசியில் வழக்கம்போலவே ஆண்கள் மட்டும் காட்டுக்குப் போகலாம் என முடிவெடுக்கப்பட்டது. மாமியாத்திலும் பயங்கரமான மடி ஆச்சாரம் என கேள்விப்பட்டேன்.

ஐந்து நிமிடங்களில் மாமாவைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். பெரியவள் விடாமல் பேசினாள். அவள் நிலையிலில்லை என உணர்ந்து அவளை நானும் அண்ணாவும் வெளியே அழைத்துக்கொண்டு போனோம்.

'எல்லாம் முடிஞ்சிடுத்துல்ல. இனிமே என்ன பண்றது. எல்லாத்தையும் நாந்தான் பார்க்கனும். எவ்வளவு சேர்த்திருக்காருன்னு கூட தெரியாது. அந்தளவுக்கு பார்த்துண்டார். ஈபி கார்ட் முதற்கொண்டு எங்கிருக்குன்னு அவருக்குத் தான் தெரியும். கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்ல இருக்கு. இனிமே புதுசா முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். இனி நான் ராஜகுமாரி இல்ல. வெறும் சேவகி. தங்கையப் படிக்க வைக்கனும். அம்மாவ கடைசி வரைக்கும் குறையில்லாம வச்சிக்கனும். எப்படி? தெரியல. ஏன் இப்படி திடீர்ன்னு போய்ட்டார்' என தேம்பினாள்.

'அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நாங்க எல்லாம் இருக்கோம். தைரியமா இருடி' என்றார் அண்ணா.

'எத்தனை நாளைக்குண்ணா இருப்பேள். உங்களுக்குன்னு வாழ்க்கையிருக்குல்ல?'

என் கைய அழுந்தப் பற்றிக்கொண்டவள் 'எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடு ஸ்வேதா. வேற எதுவும் வேணாம். யாரும் வேணாம். நான் கடைசி வரை இப்படியே இருந்திடறேன் அம்மாக்குத் துணையா.'

ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது. நீச்சல் தெரியாமல் கடலைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது கொடுமைதானே. ஒரே நிமிடம் இவள் நிலையில் என்னை வைத்துப் பார்த்தேன். உடம்பு அதிர்ச்சியில் உதறியது. எல்லாம் முடித்து அம்மா வந்து காதைக் கடித்தாள். 'போய்ட்டு வர்றேன்னு அச்சு பிச்சுன்னு உளறாதே. அப்படியே வா'

செருப்பை மாட்டியவள், ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன். அவள் கையைப் பற்றி அழுத்தினேன். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. கிளம்பிவிட்டேன். ஆட்டோ ஏறியவுடன் அழ ஆரம்பித்த என்னை அம்மா விநோதமாக பார்த்தாள்.

August 16, 2010

காதலின் கடைசி குறிப்புகள்

விடாது பெய்து கொண்டிருக்கிறது மழை. விடாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் நானும். ஞாபகங்களை கிளறிச் செல்வதில் மழையின் பங்கு அபாரமானது. அதுவும் உன் நினைவுகளை. எப்போதோ எடுத்த புகைப்படங்களை புரட்டிப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு ஒப்பானது உன்னை நினைத்துப் பார்ப்பது. உன்னை என்று சொல்வதை விட நம்மை என சொல்வது சரியாக இருக்கும். சேர்ந்திருந்த நிமிடங்கள் விட்டுச் சென்ற இன்பங்கள் ஆயுசுக்கும் போதுமானது.

மாலைப்பொழுதுகள் எப்போதுமே ரம்மியமானவை. மறையும் சூரியனின் செங்கதிர்கள் பட்டு தகரமும் தங்கமாய் ஜொலிக்கும். அதுவும் மழை பெய்தோய்ந்த மாலையில் சூரியன் சம்பிரதாயமாய் வந்து செல்லும்போது சுற்றிலும் இருக்கும் அத்தனையும் பேரழகாகத் தெரியும். அப்படி ஒரு அழகிய மாலையில் தான் உன்னை சந்தித்தேன். அந்த சந்திப்பினூடாக நீ என்னுள் விருட்சமாய் வளர்ந்து கிளை பரப்புவாய் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. சென்ற மழைக்காலத்தில் நாம் நெருங்கி வந்தோம். உனக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். எனக்கு மழையில் நனையும் உன்னை பார்க்க பிடிக்கும். கைகளை கட்டிக்கொண்டு தலைதூக்கி கண் மூடி நீ மழையில் நனையும்போது குழந்தையாக தெரிவாய். உன் மீதிறங்கும் மழைத்துளிகளை எண்ண முயன்று தோற்றேன். நான் உன் மீது கொண்டுள்ள காதலை விட அதிகமாக இருக்கிறது என நிச்சமாய் நம்பினேன். நம்புகிறேன். சொட்டச் சொட்ட நனைந்தபின் சூடாக முத்தம் தருவாய். உன் கைகளுக்குள் இருக்கும்போது உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடமிதுதான் எனத் தோன்றியது. மழைத்துளி உன் மீது இறங்கியதை விட வேகமாய் நீ என்னுள் பரவினாய். என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்தாய். என்னுள் நீயே உதிரமாய் ஓடுகிறாய். இதுவரை நான் கண்டிராத, என் மீது காட்டப்படாத அன்பை உன்னிடத்தில் கண்டேன். மழைக்கு கரையும் மண் போல நான் முழுவதும் கரைந்தேன். மழையைப் பார்த்துக்கொண்டே உன்னோடு அருந்தும் தேநீர், உன் மடியில் படுத்தபடி படிக்கும் புத்தகம், உன் கைகோர்த்து நடந்த கடற்கரை என உலகத்தில் உள்ள அத்தனையும் ஏதாவது ஒரு விதத்தில் உன்னை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

வெட்கப்பட வைத்தாய். சிரிக்க வைத்தாய். அதை விட அதிகமாய் அழ வைக்கிறாய். அழகான காதலிற்கு ஆயுசு கம்மி போலும். காதலில் விட்டுக்கொடுத்தல் இருக்கவேண்டுமென்றாய். ஆனால் அது நான் மட்டுமே செய்ய வேண்டுமென நீ எதிர்பார்த்தது ஏன் எனப் புரியவில்லை. இருந்தும் கொடுத்தேன். என்னை முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன். உனக்குப் பிடிக்காதவற்றை செய்யாமலிருந்தேன். நட்புகளை ஒதுக்கினேன். ப்ரியங்களைப் புறந்தள்ளினேன். பார்வை இழந்தேன். செவிடானேன். வார்த்தைகளை மௌனித்தேன். உனக்கானவளாக மாறினேன். காலடியிலே கிடந்தேன்.

நீ திருப்தியுற மறுக்கிறாய். இன்னும் இன்னும் என்கிறாய். என் சின்ன சின்ன சந்தோஷங்களையும் மறுக்கிறாய். என்னைத் தெரியாதா உனக்கு? பிறர் என்ன சொன்னால் என்ன எனக் கேட்டால் ஆத்திரமடைகிறாய். நான் உன்மேல் கொண்டுள்ள எல்லையில்லாக் காதல் ஏன் உனக்குப் புரியவில்லை. நீ என் மீது கொண்டிருப்பது பொசஸிவ் என்கிறாய். உன் பொசசிவ்னெஸ்ஸே என்னையும் நம் காதலையும் மரிக்க வைக்குமென்றேன். நான் பயந்தது நடந்தேவிட்டது. உப்புப் பெறாத விஷயத்திற்காக நம் காதலை கொன்றுவிட்டாய். உன்னை மறக்க முடியாமல் நானும் விரைவில் மரித்துவிடுவேன் என நினைக்கிறேன். என்னால் இந்த மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தொண்டை கிழிய கத்தி, ஒலமிட்டு அழவேண்டும் போலிருக்கிறது. அதற்குக் கூட சுதந்திரமற்றவளாய் இருக்கிறேன். ஏன் என் வாழ்வில் வந்தாய். அழகான நாட்களை தந்தாய். ஏன் இவ்வளவு விரைவில் சென்றுவிட்டாய்? புயல் புரட்டிப்போட்ட ஓடமாய் கிடக்கிறேன். மீள்வேனா இல்லை வீழ்வேனா எனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. உன் நினைவுகள் என்னை விட்டு நொடியும் அகலாது. நீ என்னை எவ்வளவு வெறுத்தாலும். புரிந்துக்கொள்ள மறுத்தாலும். என்றாவது இந்தக் கடித்ததை நீ படிக்கக் கூடும். என்றாவது ஒரு நாள் நான் உன்மேல் கொண்டிருப்பது பவித்ரமான அன்பு எனத் தெரியவரும். அன்றைக்கு என்னைத் தொடர்பு கொள்ள முயல்வாய். நான் புண்ணியம் செய்திருப்பேனானால் உன் அன்பு மழையில் திளைக்கும் வாய்ப்பை இந்த வாழ்விலேயே பெறுவேன். இல்லையேல் உன்னைத் தாலாட்டும் தாயாய், தோள் தாங்கும் தோழியாய் ஏதோவொரு விதத்தில் உன்னை வந்தடையும் வரம் பெறுவேன் தவம் செய்து.

என் பொக்கிஷம் என நீ கொண்டாடிய ஈர விழிகள் இப்போதெல்லாம் எப்போதும் ஈரமாக...

கயல்..

December 8, 2009

நான் மேகா...

அடையாறின் இருதயப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான பங்களா, கம்பெனியின் 60% பங்குகள் என் பெயரில், எத்தனை கோடிகள் எனத் தெரியாத பேங்க் பேலன்ஸ், வைரம் பிரதானமாய் தங்கம் நிறைய என எக்கச்சக்கமான நகைகள், பொழுதுக்கு ஒரு கார், கட்டற்ற சுதந்திரம். இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற இருபத்தியோரு வயது பெண்ணுக்கு கவலை ஏதேனும் இருப்பது சாத்தியமா? என் விஷயத்தில் சாத்தியமாகிறது. மேற்கொண்டு என் கவலைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் என்னைப் பற்றி கொஞ்சம் இல்லை கொஞ்சம் நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.

நான் மேகா...

இரண்டு வாரங்களுக்கு முன் நான் மேகா. என் பிறப்பைப் பற்றி அறிந்திடாத மேகா.

எக்கச்சக்கமாய் வெளிநாட்டு நன்கொடைகளைப் பார்க்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தான் நான் வளர்ந்தேன். அல்லது வளர்க்கப்பட்டேன். நான் அங்கு எப்படி வந்தேன், யார் கொண்டு வந்து போட்டார்கள், என்ன வயதில் அங்கு சேர்ந்தேன் என எந்த ரெக்கார்டும் இல்லை. ஐந்து வயதிலேயே எனக்கு வாயும், அறிவும் ஜாஸ்தி என ஹோம் சிஸ்டர் திட்டுவதை கேட்டு வளர்ந்தேன். கைகளில் கிழிந்த பஃப் வைத்த சட்டை. என்னுடனே மேல்நோக்கி வளரும் பாவாடை, யாராவது பிறந்தநாள் என வந்தால் அவரை வாழ்த்திப் பாடிவிட்டு, அவர் போடப்போகும் சோற்றிற்காக கண் விரிந்து, வாய் பிளந்து காத்திருப்பது, தீபாவளியன்று அபூர்வமாய் கிடைக்கப் பெறும் மத்தாப்பு சீக்கிரமே எரிந்துவிடக் கூடாது என கவலைப்பட்டுக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கு அறவே பிடிக்கவில்லை.

நான் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு அந்த சிறையிலிருந்து விடுதலை கிருஷ்ணன்-ராதா தம்பதியினர் மூலம் கிடைத்தது. அதாவது நான் அப்பா அம்மா என அழைக்கவேண்டிய, அதற்கு அஃபிஷியலாய் தகுதிப் பெற்றவர்கள். சுருக்கமாய் என்னை தத்தெடுத்தவர்கள். மேகா என பெயர் சூட்டியவர்கள். அதுவரை குட்டியாக இருந்த நான் மேகாவாக அவதரித்தேன். அவர்களின் அதீத அன்பினால் நான் ஹோம் வாழ்க்கையை முற்றிலுமாக மறந்து தேவலோக வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில் இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் கை நழுவலாம் என்பதால் படிப்பில் ரொம்பவே கான்சண்ட்ரேட் செய்தேன். இதோ பைனல் இயர் MBA. இன்னும் இரண்டு மாதங்களில் தலையில் வைத்திருக்கும் தொப்பியை தூக்கிப்போடுவது போல் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்ததும் கம்பெனியில் ட்ரெய்னிங். பின்னர் போர்ட் கூடி முடிசூடல் என கிருஷ் சத்தியம் பண்ணிருக்கார்.

கிருஷ் அப்படித்தான் அப்பாவை கூப்பிடுகிறேன். இவர்களிடம் வந்து சேர்ந்த 13 வருடங்களில் என் வேர்களைத் தேடியலையும் வாய்ப்பை எனக்குத் தரவில்லை. என் பேச்சு தான் வேதம். என் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே பிறவியெடுத்திருப்பதாய் நடந்துகொள்ளும் கிருஷ். மகள் என்றில்லாமல் ஒரு தோழியைப் போல நடத்துபவர். வெரி இண்டலிஜண்ட். வெரி வெரி பிராக்டிகல். அவரைப் பார்த்து வளர்ந்த நானும் அப்படியே. நான் செத்துப்போ என்றால் மறுகணம் செய்யத் தயாராய் இருக்கும் ராதா. இந்த அம்மாக்கள் அல்லது முக்கால்வாசி பெண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என எனக்குப் பிடிபடவில்லை. முணுக்கென்றால் ஒப்பாரி. இன்னதுக்குத்தானென்றில்லை. ஆவுன்னா பெண்ணின் வலி என ஆரம்பித்து நீளும் சலிப்பேற்றும் ஓப்பாரி. வுமன்ஹுட்டை செலிபிரேட் செய்யத் தெரியாதவர்கள். ஆண்கள் நம் வலியை உணரவேண்டும் என எப்படி ஏதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. சயின்ஸ். ஆண்களால் பிள்ளைப் பெற முடியுமென்றால் பெற்றுவிட்டு போகிறார்கள். முடியாது. நம்மால் எப்படி ஆண்களின் பிரச்சனையை அணுக முடியாதோ அதேபோல் அவர்களால் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் முடியாது. இதனாலேயே நான் ராதாவிடம் அதிகம் பேசுவது கிடையாது. ராதாவோ பொம்பளப் பொண்ணு அப்பா மேல பாசமா இருக்குது என்ற அபத்தமான விதியை ஃபாலோ செய்கிறது.

சிறகடித்து வானத்தில் பறந்து கொண்டிருந்த என்னை இரண்டு வாரங்களுக்கு முன் தரையில் நடக்க வைத்த சம்பவம் அரங்கேறியது. ஈசிஆரில் ஒரு லேண்ட் டீலிங்கை முடித்துவிட்டு திருவான்மியூர் சிக்னலில் வெயிட் செய்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து எப்படி வந்தான் எனத் தெரியாமல் ஒருவன் திடீரென காரின் ஜன்னலை படபடவென அடித்தான். ஒரு செகண்ட் திகைத்துவிட்டு மறுகணம் சுதாரித்துக் கொண்டேன். மாதங்களாய் பிளேடை பார்க்காத தாடி, எண்ணைய் காணாத கேசத்தைத் தவிர வேறெதுவும் அவனை பிச்சைக்காரனாய் எடை போடுவதை தடுத்தது. கொஞ்சம் தயக்கத்துடன் டாஷ்போர்டிலிருந்து சில நாணயங்களை எடுத்துக் கொடுக்க கொஞ்சமாய் கார் கண்ணாடியை இறக்கினேன். அதுவரை என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் "விஜயா விஜயா உன் அம்மாவ அப்படியே உரிச்சு வச்சிருக்க" என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்து எஞ்ஜினை உயிர்ப்பித்தேன். "உன் அம்மா உன்னை ஹோம் வாசலில் போட்டபோது நானும் கூட இருந்தேன்" மூடிக்கொண்டிருந்த ஜன்னல் கண்ணாடி தாண்டி அவன் குரல் தேய்ந்து வந்து விழுந்தது. உடம்பில் சுர்ரென்று ஏதோ ஒரு உணர்வு பாய்ந்தது.

ஹன்னா மௌண்டானாவில் மனம் லயிக்கவில்லை. ராதா செய்த குணுக்கு தொண்டை தாண்டி கீழே இறங்கமாட்டேன் என ஸ்ட்ரைக் செய்தது. சுஜாதாவின் பெண் இயந்திரம் மக்கர் செய்தது. மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஏதோ ஒரு பைத்தியக்காரன்/பிச்சைக்காரனைப் போய் சிக்னல் சிக்னலாய் தேடுவது ரொம்ப அப்ஸர்டாகப்பட்டது. ஆனாலும் ஒரு குறுகுறுப்பு, நிஜமாய் நான் யாரென்ற தேடல், என் வேர்களின் ரகசியமறியும் ஆசையும் கொஞ்சம் எழுந்தது. விஜயா என்றானே. என்னைப் பெற்றவள் வைத்த பெயராய் இருக்குமோ? ரொம்ப ஓல்ட் ஃபேஷன் பெயர். இந்த சம்பவத்தை மறக்கவும் முடியவில்லை.

கிருஷ் ரிலாக்ஸ்டாக இருந்த சாயந்திரம் அவர் முன் போய் அமர்ந்தேன். சுருக்கமாக நடந்தவற்றை சொல்லி முடித்தேன். சின்னதாக ஸ்மைல் பண்ணியவர் "லுக் மேகா. இது உன் லைஃப். இதில் டெசிஷன் எடுக்க எனக்கு உரிமையில்லை. Probably ஐ கேன் அட்வைஸ் யூ. அதை ஃபாலோ செய்வதும் உன் இஷ்டம். இத்தனை வருடம் கழித்து அந்த நபர் உன்னை ஏன் சந்திக்கனும்? உன்னிடமிருக்கும் பணத்திற்காக கூட இருக்கலாமல்லவா? ஸோ திங்க் அண்ட் ஆக்ட் வைஸ்லி. த பால் இஸ் இன் யுவர் கோர்ட்" என கன்னத்தைத் தட்டி விட்டு போனார். ஹி இஸ் ரைட். நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? இத்தனை வருடமாய் இல்லாமல் போனவளை இனிமேல் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன?

ஒருவேளை அவன் சொல்வது நிஜமாக இருந்தாலும் கண்டிப்பாக நான் என்னைப் பெற்ற தாயை கொண்டாடப் போவதில்லை. என்னைத் தூக்கி போட எப்படி மனது வந்தது என நாடகத்தனமான கேள்விகளையும் கேக்கப்போவதில்லை. நோ யூஸ். லீவ் த கிராப் ஹியர் என முடிவெடுத்தேன். ஆனாலும் மனித மனம் குரங்கு என்பதை நிருபித்தது. அந்தாளைப் பார்ப்பதால் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. என்னைப் பெற்றவள் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதிலும் நோ ஹார்ம். அவனைப் பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். சென்ற ஞாயிற்றுகிழமை திருவான்மியூர் சிக்னலுக்கு அருகே பாம்பே டயிங் ஷோரூம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு நடந்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்தேன். எங்கிருந்து எப்போது வேண்டுமென்றாலும் அவன் வரலாம் என்ற எண்ணத்தில். ஒருவேளை அவன் பணத்துக்காக என்னை கடத்திவிட்டால்? விளைவுகள் பக்கென்றிருந்தது. யோசனையில் நடந்துகொண்டே இடதுபக்கம் பார்த்தேன்.

வலது தோளை ஒரு கை அழுந்தப் பற்றியது.

திடுக்கிட்டு திரும்பினேன்.

பசிக்குது ஸ்வேதா என்றார். இன்னும் 10 பக்கம் தான் பாக்கி. ஹூம்ம்ம். புக்மார்க் சொருகிவிட்டு சமையல்கட்டில் நுழைந்தேன் என்னவரின் உணவிற்காக.

நான் ஸ்வேதா...

October 27, 2009

காணி நிலம்

இன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது. சளக் சளக்குகளும், சரக் சரக்குகளும் அவசரமாய் ஆரம்பித்து அழகிய கோலங்கலாய் முடிந்திருந்தன. நான்கு மழை கண்டு நமுத்துப் போய் மக்கிய வாசம் வீசும் கூரையின் வெளியிலிருந்து அகிலாண்டம் கத்திக் கொண்டிருந்தாள்.

"ஒரு பொட்டு சீமெண்ண கூட இல்லை. இன்னிக்கு கஞ்சிக்கு கையேந்தனும். போக்கத்தவன கட்டிக்கிட்டு நான் சீரழியனும்னு கருப்புசாமி எந்தலைல எழுதிருக்கு."

வழக்கம்போலவே இந்த பொழுதும் அகிலாண்டத்தின் இரைச்சலோடு தான் விடிந்தது மாரி என்கிற மாரியப்பனுக்கு. சலித்துக்கொள்ளக்கூட சலிப்பாக இருந்தது மாரிக்கு. மெல்ல பாயிலிருந்து எழுந்தவர் கண்கள் தேடியது தெய்வானையை. மூங்கில் தடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் பை இல்லாததால் கிளம்பிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவராய், எழுந்து, பழுப்பேறிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பினார். தெரு முக்கு வரை அகிலாண்டத்தின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. குரல் தேய தேய மாரியின் நடையின் வேகம் குறைந்து செட்டியார் கடை முன் நின்றது.

மாரிக்கு உத்தியோகம் என எதுவும் கிடையாது. இருந்த மூன்று செண்ட் நிலமும் மழை குறைந்ததால் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலமாகப் போனது. கூலி வேலை செய்ய மாரியின் உடல் ஒத்துழைக்கவில்லை. செட்டியார் கடையே கதி எனக்கிடந்து, பொட்டலம் மடிப்பது, பாக்கெட் போடுவது, பாட்டில் கழுவுவது என காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரே மகள் தெய்வானை பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் காட்சியென பண்ண என்ன செய்வதென்பது தெரியாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இவை எல்லாவற்றிர்கும் மேல் அகிலாண்டம். பொழுது போய் பொழுது விடிந்தால் பஞ்சப் பாட்டு தான். கவலையில் மூழ்கியிருந்தவரை செட்டியாரின் குரல் கலைத்தது.

"எல மாரி. யோசனையெல்லாம் பலமாருக்காப்புல இருக்கு?"

"என்னத்த சொல்றது செட்டி? பொழுது எப்படா விடியும், எப்படா வூட்ட வுட்டு கிளம்பலாம்ங்கற அளவுக்கு அவ கரசல் கூடிட்டே இருக்கு. ரவைக்கு வீட்டுக்கடையவே விசனமா இருக்கு."

"தெனம் நடக்கிற கூத்துதானே. இதுக்கேன் மூஞ்சிய ஆகாசத்துக்கு உசத்தி வச்சிருக்க?"

"தெய்வான பெரிய பள்ளிக்கோடம் போகனும்னு நச்சரிக்குது. ஏதோ ராங்காமே. அதெல்லாம் நிறைய வாங்கிருக்குதாம். அதுக்கு 15000 காசு கட்டனுமாம். எங்கிட்டு போறது?"

"மச்சு வூட்டு பெரியம்மாகிட்ட கேக்க சொல்லு. அவுகதான இவ்ளோ நாள் தெய்வான படிப்புக்கு காசு குடுத்தாங்க?"

"கேட்டுப் பார்த்துச்சாம். அந்தம்மா கையவிரிச்சுட்டாங்களாம். புள்ள ஆசப்படுது. நாந்தேன் படிக்கல. அதையாவது படிக்க வைக்கலாம்னு பார்த்தா காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியல."

"பேசாம நாஞ்சொல்றது கேளு. நம்மூருக்கு பைபாஸ் வருதுல்ல. ரோடு போற இடத்துல தான் உன் நிலமும் இருக்கு. பேசாம வித்துடு. வர்ற காசை புள்ள படிப்புக்கு எடுத்துக்கோ. நிறைய மிஞ்சும். அத வச்சு இதே போல ஒரு கடைய டவுன்ல போடு. சரக்கெல்லாம் நான் இறக்குறேன். கொஞ்சம் வருமானம் வரும். அகிலாண்டம் வாயையும் மூடலாம்ல. என்ன சொல்ற?"

"செட்டி அது எங்கப்பாரு கஷ்டப்பட்டு வாங்கினது. விக்க மனசு வரமாட்டேங்குது."

"போடா பொசக்கெட்டவனே. செத்துப்போன உன் அப்பனா வந்திப்ப கஞ்சியூத்த போறாரு? வித்துட்டு வேலையப் பாப்பியா? வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு"

"ஹும்ம். நீ சொல்றது சரிதேன். பார்ப்போம். யாராச்சு வேணும்னு வந்தா சொல்லியனுப்பு செட்டி."
****************

மாலை பள்ளியிலிருந்து வந்த தெய்வானை, விறகு தேய்த்துக்கொண்டிருந்த அகிலாண்டத்திடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"யம்மா. நான் கேட்ருந்தேனே? என்னம்மா பண்ணப் போற?"

"என்ன?"

"அதாம்மா காலேஜ் போக காசு.."

"காசுமில்ல ஒன்னுமில்ல. கஞ்சிக்கே வழியக்காணோம். காலேசூ போறாளாம்"

"அதில்லமா. மச்சூ வூட்டு பெரிம்மா ஒரு வழி சொன்னாங்கமா. நம்ம நிலத்த வித்து"

"எடு வெளக்கமாத்த. எப்படியாப்பட்ட குதிரையே எரவாணத்த புடுங்குதாம். நொல்ல குதிரைக்கு கொள்ளு கேக்குதாம்மா? நிலத்த விக்கதாண்டி போறேன். வர்ற காசுல வூட்டுக்கு ஒரு ஓடு காமிச்சிட்டு மிச்சத்துல உன்ன எவன் கையிலயாவது குடுத்துட்டு நான் நிம்மதியா இருப்பேன்"

"தாத்தா சம்பாரிச்சத என் சம்மதமில்லாம விக்க முடியாது தெரியுமா?"

முடிக்கும் முன்னரே விறகு கட்டையால் அடிவாங்கினாள் தெய்வானை. அழுதுக்கொண்டே குடிசை உள்ளே ஓடினாள்.
**************

"யோவ் குமாரசாமி. எத்தன நாளாய்யா அந்த ஜி.ஓவ ரெடி பண்ணுவ? பெரியவர் நாளைக்கு கையெழுத்துப் போட கேப்பாரு. அவர் முன்னாடி தலை சொறிய வச்சிடாத."

"அடிச்சாச்சுப்பா."

"எத்தனை ஏக்கர்ப்பா வருது"

"20 ஏக்கர். பைபாஸ் போடலாம்னு NH ல சொன்னாங்கள்ள. அதயும் சேர்த்து தான். பெரியவரு கையெழுத்து போட்டவுடனேயே ஓட்டிரவேண்டியதுதான். இந்ததபா அக்கொயரிங்ல எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது. சட்டுபுட்டுன்னு முடிச்சிடனும்."
*************

"பல்கலைகழகம் கட்ட நிலம் கையகப்படுத்தபட உள்ளது."

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் புதிய பல்கலைக் கழகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள முதல் நடவடிக்கையாக நிலம் கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் அமையவிருக்குமிடத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்ததே. இப்போது அத்திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

September 7, 2009

நினைவோ ஒரு...

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எப்படியும் இந்த டிராஃபிக்கில் வீடு போய் சேர ஒரு மணி நேரமாவது ஆகும். உட்கார்ந்தவுடனே செல்போன் ட்ர்ர்ரியது. லேண்ட் லைனிலிருந்து வந்த நம்பர். மதியமே மீட்டிங்கில் இருக்கும்போது இதே நம்பரிலிருந்து வந்தது. பொதுவாக தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு அலட்டிக்கொள்வதில்லையென்றாலும் இரண்டு தடவை யார் செய்வார்கள் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

"ஸ்வேதா இருக்காங்களா" என்ற பெண் குரல் கேட்டது.

சட்டென்று குரலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாததால் மறுபடியும் ஹலோ என்றேன். இந்த முறை

"ஸ்வேதா இருக்காங்களா நான் செல்வி பேசறேன்".

செல்வி பேரைக் கேட்டவுடன் ஏற்பட்ட ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டு "ஹே செல்வி எப்படியிருக்க?" என்றேன். பத்து நிமிடம் பேசியபிறகு செல்வி தயங்கியவாறே "சித்தி உன்னை பார்க்கனும்னு சொல்லுது ஸ்வேதா" என்றாள். என் மௌனத்தின் அர்த்தம் புரிந்தவளாய் "ஒரே ஒரு தடவை வா ஸ்வேதா. எனக்காக. நம் பிரெண்ட்ஷிப்பிற்காக. ப்ளீஸ்". முயற்சி செய்கிறேன் என போனை வைத்தேன்.

போனை வைத்ததும் தூறல் போட ஆரம்பித்தது. தூறலுக்கு கிளம்பும் மண்வாசனைப்போல் செல்வியின் போன் அவள் நினைவுகளை என்னுள் கிளறிச் சென்றது.


செல்வியும், அம்மி ஆண்ட்டியும் என் நினைவில் சிரித்துக்கொண்டேயிருந்தார்கள்.

தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் தான் அந்த காலனிக்கு குடிவந்தோம். வந்தன்னிக்கே அம்மாக்கு மெட்ராஸ் ஐ. தீபாவளியன்று பலகாரம் வினியோகிக்கும் வேலை என்னிடம் தரப்பட்டது. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அம்மி ஆண்ட்டி. எல்லாரும் அவங்களை அப்படிதான் கூப்பிடுவாங்க. அம்மி ஆண்ட்டிக்கு இரண்டு குழந்தைகள். அங்கிள் மேத்ஸ் லெக்சரர். மாநிறம் தான் என்றாலும் மாசில்லாத முகத்தில் எப்போதுமே படர்ந்திருக்கும் ஒரு சினேகப் புன்னகை. அம்மி ஆண்ட்டியின் சிரிப்பை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. செய்யும் எல்லா வேலைகளையும் ரசனையோடு செய்வார். ஸ்வேதாக்குட்டி என்றவர் அழைக்கும்போது பாசமும், அன்பும் தெரிக்கும். முக்கால்வாசி நேரம் ஆண்ட்டி வீட்டிலேயே தான் இருப்பேன். என்ன செய்தாலும் ஸ்வேதாக்கு பிடிக்கும் என்று குடுத்தனுப்புவார். ஸ்வேதா தான் என் மூத்தப்பொண்ணு என எல்லாரிடம் சொல்லுவார்.

அம்மா என்னை திட்டினால் அம்மாவிடம் சண்டைக்கு வருவார். ஆண்ட்டியின் அக்கா பொண்ணு செல்வி. லீவுக்கு இங்கு வரும். எனக்கும் செல்விக்கும் நிறை விஷயங்களில் ஒத்துப்போகும். பாட்டு, படிப்பு, புத்தகங்கள் என நிறைய விஷயங்களில் எங்கள் ரசனையை பகிர்ந்து கொண்டோம். செல்வி என்னை விட ஓரு வருடம் தான் பெரியவள். என் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து மடல் அனுப்புவாள். அந்த காலனிக்கு சென்றதிலிருந்து காலாண்டு, அரையாண்டு லீவுக்கு ஊருக்குப்போவதில்லை. செல்வியும் நானும் ஜோடிப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றினோம்.

நான் ப்ளஸ்டூ படித்துக்கொண்டிருந்தபோது செல்விக்கு எங்கள் ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. செல்வி அம்மி ஆண்ட்டி வீட்டிலேயே தங்கி படிப்பதென முடிவானது. எனக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசையொத்த தோழி அருகிலேயே இருப்பது மகிழ்வாய் இருந்தது. செல்வி என்னை காலேஜூக்கு கூட்டிப் போய் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தது. ப்ளஸ்டூ முடித்ததும் எனக்கும் அதே காலேஜில் வேறு துறையில் இடம் கிடைத்தது. ராகிங் பண்ண முயன்ற சீனியர்களிடம் என் சொந்தக்கார பொண்ணு என சொல்லி காப்பாற்றிவிட்டது. ஒன்றாக காலேஜ் போகவர ஆரம்பித்த வேளையில் அப்பாவிற்கு மாற்றலாகி ஐந்து கி.மீ தொலைவிலுள்ள வேறு ஊருக்கு சென்றோம்.

வீட்டை காலி செய்த அன்று நானும் ஆண்ட்டியும் அழுத அழுகையை இன்று நினைத்தால் சிரிப்பு வரும். அவ்வளவு எமோஷனல் சீன். இதற்கிடையில் காலேஜில் செல்வியை ஒரு பையனோடு அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஒரே வகுப்பு என்பதால் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அம்மி ஆண்ட்டியுடன் போனில் அடிக்கடியும் நேரில் எப்பவாவதும் பேசிக்கொண்டிருந்தேன். காலேஜ் போக வரவே நேரம் சரியாக இருந்தது. அதோடில்லாமல் காலேஜில் விரிந்த நட்புவட்டம் மெல்ல ஆண்ட்டி வீட்டிற்க்கு செல்வதைக் குறைத்தது. பலத்த மழை மெல்ல அடங்குவது போல் அடர்ந்த உறவு மெல்ல மெல்ல விட்டுக்கொண்டிருந்தது.

செல்வி பைனல் இயர் முடித்து இண்டர்வ்யூகளை அட்டெண்ட் செய்துகொண்டிருந்தது. அந்த வேளையில் செல்விக்கு வீட்டில் பையன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த இரண்டு மூன்று வரன்கள் முதலில் சரியென்று சொல்லிவிட்டு பின்னர் போன் பண்னி வேண்டாமென்றார்கள். ஆண்ட்டி அம்மாவிடம் ரொம்ப வருத்தப்பட்டார்கள்.

பின்னர் ஒருநாள் வீட்டிற்கு வந்த ஆண்ட்டி ஆவேசமாக

"உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்தேனே. இப்படி பண்ணிட்டியே. நீ நல்லாருப்பியா? நாசமாபோய்டுவ. உனக்கு கல்யாணம் ஆவாம உங்கம்மா கஷ்டப்படப்போறாங்க"

என மண்ணை தூற்றி வாரி சாபமிட்டார். வீட்டில் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. எனக்கும்தான். ஆனால் எல்லாருக்கும் ரொம்ப கோவம். முக்கியமாய் எனக்கு. என்ன ஏது என்று தெரியாமலேயே ரொம்ப பாசமாய் இருந்தவரிடமிருந்து இப்படிபட்ட வார்த்தைகளை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அம்மி ஆண்ட்டியுடனான தொடர்பு சுத்தமாய் விட்டுப்போனது. காலேஜ் முடிக்கும்தருவாயில் அப்பாவிற்கு மறுபடியும் மாற்றலாகி சென்னை வந்துவிட்டோம். பின்னர் பவுனம்மாவின் மூலமாக செல்வி தன் கூடப் படித்த பையனை காதலித்ததாகவும், அவன் தான் பையன் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி எல்லா வரனையும் கெடுத்ததாகவும், ரொம்ப வருஷம் கழித்து சொந்த அத்தைப் பையனுக்கே செல்வியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் தெரியவந்தது. எனக்கு இந்த காதல் விவகாரம் முன்னமே தெரியுமென்றும், நாந்தான் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாகவும் அம்மி ஆண்ட்டி நினைத்தார் எனவும் சொன்னார். ரொம்பவே எரிச்சலாகிப் போனதெனக்கு. ஆண்ட்டி “இதெல்லாம் உண்மையாடி” என என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே எனத் தோன்றியது. சிறிது நாட்களில் எல்லாம் மறந்து என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து செல்வியிடமிருந்து போன். அவள் குரலில் இருந்த கெஞ்சல் ஏனோ எனக்கு ஆண்ட்டியை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மாவிற்கு போன் செய்தேன். உன் இஷ்டம்மா என்றார். வரும் ஞாயிறு அவரையும் அழைத்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவரிடம் கன்பஃர்ம் செய்துவிட்டு செல்வியை அழைத்து, வருவதை உறுதிப்படுத்தவேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கையில் ஸ்டாப்பிங் வந்தது.

மழையின்றி வீடு வந்து சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மழையின்போது ஆண்ட்டி போடும் இஞ்சி டீ நினைவுக்கு வந்தது. அன்று முழுவதும் ஆண்ட்டியே நினைவிலிருந்தார். மெல்ல ஆண்ட்டி செய்தது தவறில்லையோ எனக்கூட தோன்றியது.

நான்கு நாட்கள் கழித்து மதியம் மூன்று மணியளவில் செல்வியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளுக்கு போன் செய்ய மறந்தவிட்டதை நினைத்து வருந்திக்கொண்டே காலை அட்டெண்ட் செய்தேன்.

அழுதுக்கொண்டே செல்வி அம்மி ஆண்ட்டி கேன்சரால் இறந்ததைச் சொன்னாள். என்னையும் மீறி வெடித்து அழ தொடங்கியிருந்தேன்.இஞ்சி டீயின் வாசம் அறையெங்கும்.

..

June 8, 2009

என்ன திடிர்னு?

வெளிச்சக் கற்றைகளினூடே நாட்டியமாடும் துரும்புகளை ரசிப்பதும்
கூந்தலுக்கு வலிக்காமல் போடப்படும் பின்னல்களும்
காரணமே இல்லாமல் இதழோரம் நிரந்தரமாய் குடியிருக்கும் சின்னப் புன்னைகையும்
கண்ணாடி முன் செலவழிக்கப்படும் நேரங்களும்
நான்கு முறையாவது உடை மாற்றுவதும்
அழுக்கேறிய பேருந்து ஜன்னல்களில் எழுதப்படும் இனிஷியல்களும்
அடிக்கடி முணுமுணுக்கப்படும் "நெஞ்சினிலே"க்களும்
உறக்கமில்லா இரவுகளும்
சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் கோலங்களும்
தழையத் தழைய புடவை கட்டி
கண்ணுக்கு மையிட்டு
தலை நிறைய பூ சூடிக்கொள்ளும்போதும் தான் தெரிகிறது
உன் காதல் மெல்ல மெல்ல என்னை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறதென்று.
"என்னடி தீடிர் மாற்றம்?" என கண்ணடித்துக் கேட்கும் தோழியிடம் எப்படி சொல்வது?
காதல் மட்டும் சொல்லிவிட்டா வருகிறதென்று.

May 28, 2009

யாருமில்லா கடற்கரையில்

"இந்தமுறை நமது பயணத்தின்போது உனக்கு ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருக்கிறது" என்றாய். நீ காரைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் ஆள் நடமாட்டம் கம்மியான கடற்கரை. "இந்த இடத்தை எப்படிடா கண்டுபிடித்தாய்?" என்றேன். "கண்ணம்மாவுக்காக ஸ்பெஷலாய் தேடியது" என்றாய். இரண்டடி எடுத்து வைத்தால் உருக்கிய வெள்ளி போல் பொங்கி வரும் கடலலையில் காலை நனைத்துவிடலாம். ஏனோ அன்று உன்னுடன் முதன் முதல் கடற்கரை சென்றபோது கால் நனைக்கத் தோணவில்லை. அடிக்கடி பார்க்கும்/பார்த்த கடல் என்றாலும் அன்று உன் அருகாமையினால் ரொம்பவே ரம்மியமாயிருந்தது.


ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் அமைதியாக இருந்தோம். மனதில் நினைப்பதையெல்லாம் வார்த்தைகளாய் வடிக்க முடியாமல் நாம் தவித்ததைப் போன்று தான் அலைகளும் எதையோ திரும்ப திரும்ப சொல்ல தவிப்பது போலிருந்தது. பொது இடங்களில் என் கைவிரலைப் பிடிக்கக்கூட தயங்கும் நீ அன்று என் தோளில் கை வைத்து நின்றாய். உன் தோளில் சாய்ந்து நிற்கவேண்டுமென்ற என் ஆசையை கொஞ்சம் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டேன். ரொம்ப நேரம் கழித்து "என்ன யோசிக்கிறாய்?" என கேட்டாய். "I want to freeze this moment" என்றேன் அமைதியாக. இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் நின்றாய். போகலாம் என்றேன். "அதுக்குள்ள என்னடி அவசரம்? இன்னும் கொஞ்சம் நேரம் நிற்கலாம்" என்றாய். "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இங்கேயே இப்படியே இருக்கனும்னு அடம்பிடிப்பேன். சம்மதமா?" என்றேன். அழகாய் தலைகோதியபடி சிரித்துக்கொண்டே சொன்னாய் "இருந்துட்டாப் போச்சு".

"என்னையே ஏன் பார்த்துகிட்டிருக்கிற?" என கேட்டாய். "நான் உன்னைப் பார்க்கலை. உன்னிள் இருக்கும் என்னைப் பார்க்கிறேன்" என நான் சமாளித்தாலும், உன் கண்ணில் தெரியும் காதலானது கடலை விட பெரிதாக இருக்கிறது. உன்னைத் தவிர வேறெதையும் என் கண்கள் காண மறுக்கின்றன. இளநீர் குடித்தபோது அந்த கடையில் இருந்தவர் நம்மையே பார்த்துக்கொண்டிருந்தார். முதன் முதலாக the perfect ஜோடியைப் பார்க்கிறார் போலும். நான் இதை சொன்னதும் சிரித்தாய். "அழகாய் சிரிக்கிறாய்" என்றேன். மறுபடியும் சிரித்தாய். Infectious Smile. கொஞ்ச நேரம் பேசிவிட்டு திரும்பி நடக்கையில் என்னை அணைத்துக்கொண்டு நடந்தாய். நாம் அங்கு கழித்த 20 நிமிடங்கள் 20 வருடங்கள் வாழ்ந்த வாழ்வின் திருப்தியை மனதுக்கு அளித்தது.

திகட்ட திகட்ட நம்முள் காதல் பொங்கிப் பெருகியதால் கடல் நீர் அன்று கற்கண்டாய் இனித்திருக்கும்.

May 15, 2009

முதல் கடிதம்

அபி
அதான் தினமும் பார்த்துக்கறோமே. போன்ல பேசறோமே. இப்போ எதுக்கு இந்த கடிதம்ன்னு நீ யோசிக்கலாம். காதலித்தால் கடிதம் எழுதனும்னு எழுதப்படாத விதியிருக்காம். அதுவுமில்லாம உன்னைப் பார்த்தால் நான் பேச நினைக்கும் விஷயங்களை மறந்துவிடுகிறேன். இன்றளவும் நீ எப்படி என்னுள் வந்தாய் என ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த தினம் எல்லாக் காதலர்களுக்கும் போலவே எனக்கும் மறக்கமுடியாத தினம். சம்பிரதாயமான நம் முதல் சந்திப்பிலேயே நம்மிருவருக்குமான காதல் விதை முளைக்கத் தொடங்கியிருந்தது. ஏனோ தெரியவில்லை எந்த வித தயக்கமுமின்றி என் கண்ணைப் பார்த்து பேசிய உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. I just felt u close to my heart. அடுத்தடுத்து நிகழ்ந்த நம் சந்திப்புகளில் நாம் கொண்டிருந்த காதலை "I Love You" என சொல்லாமல் உறுதிப்படுத்திக்கொண்டோம்.
நீ பேசும் அழகிருக்கிறதே. சிரிப்பும், குறும்பும் கொப்பளிக்கும் உன் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். உன் பெயரைச் சுருக்கி அபி என அழைக்கவா என கேட்டதுக்கு நீ சிரித்துக் கொண்டே "தங்கள் சித்தம் என் பாக்கியம்" என்றாய். அந்த சிரிப்பு என் கண்ணை விட்டு அகலமறுக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே என் கைகளை உன் கைகளில் எடுத்துக் கொண்டு விரல்களில் நீ சொடுக்கெடுக்கும் சுகம் அலாதியானது. இதழ்கள் வலிக்க ஒரு முத்தம் பின்னர் அந்த வலிக்கு மருந்தாக மற்றொரு முத்தம் என நித்தம் என்னை திக்குமுக்காட வைக்கிறாய்.

என்னை ஏன் பிடித்திருக்கிறது என்ற உன் கேள்விக்கு என்னிடம் எப்போதுமே பதிலில்லை. என்னை எனக்கே புதிதாகக் காட்டியவன் நீ. "I'm Struck at your eyes" என நீ சொன்னபோது நான் எங்கோ பறந்துக்கொண்டிருந்தேன். நான் வெட்கப்படுகிறேன் என எனக்கு உணர்த்தியவனும் நீதான். கன்னங்கள் சிவந்து சிரித்தால் அது 100% வெட்கம் தான் என்றாய். உன்னால் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என்னை சுற்றி இருப்பவை அனைத்துமே அழகாய்த் தெரிகிறது எனக்கு. எப்போதுமே ஒரு சின்னப் புன்னைகை இதழோரத்தில் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

உன்னைப் பார்க்க முடியாத நாட்களில் நான் என் நிலை மறக்கிறேன். தேவையில்லாத கோபங்களும், அழுகைகளுமே அந்த நாட்களை ஆக்கிரமிக்கின்றன. பிரிவுகள் நம் காதலை வலுப்படுத்தினாலும் என்னை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன. எவ்வளவோ எழுதனும் என தான் பேனாவை எடுத்தேன். உன் நினைவுகள் கூட என் வார்த்தைகளை களவாடுகின்றன. கடிதத்தை முடிக்க மனமில்லாமல் தொடர வார்த்தைகளுமில்லாமல் அவஸ்தையாக இருக்கிறது.

வற்றாத ஜீவநதிபோல் தான் உன் மீதான என் காதலும்.

கயல்

April 20, 2009

அப்பவே சொல்லிருக்கனும்

உன்னை முதன் முதலில் HOD அறையின் முன் பார்த்த போது ஒரே டிபார்ட்மெண்ட் என்ற தெரிந்தபின் நீ உதிர்த்த அந்த சினேகமான புன்னகையின்போதே சொல்லிருக்கனும். மெல்ல நண்பர்களான பின்னொருநாளில் தொழிற்சாலை பயிற்சிக்கு சென்றபோது பேசிய ஸ்வீட் நத்திங்ஸின் போதே சொல்லிருக்கனும். உன்னையும் என்னையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்தபோது உள்ளலவில் மகிழ்ந்தாலும், வேற ஆளே கிடைக்கலயாடா என்று கேட்டபோதே சொல்லிருக்கனும்.

கல்லூரி ஆண்டு விழாவின் போது புடவை கட்டிக்கொண்டு வந்து எப்படியிருக்கு என்று நீ கேட்டதற்க்கு தேவதைகள் புடவை கட்டினால் நன்றாகத் தான் இருக்குமென என சொல்ல வாய்திறந்து பேரலுக்கு துணி சுத்தினமாதிரி இருக்குன்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும். மருதாணி வைத்த கைகளைக் காட்டி நல்லாருக்கான்னு கேட்டபோது உன் உள்ளங்கைகளில் முத்தம் பதிக்க நினைத்தாலும் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்குன்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என நீ பாடிமுடித்தபோது எனக்காகத்தானே பாடினே என்று கேட்க நினைத்து காக்கா கத்தினத இன்னிக்கு தான் லைவ்வா கேட்டேன் என்றேனே அப்போதே சொல்லிருக்கனும். கொலை பசியோடு கேண்டீன் சென்றபோது இரண்டாவது தோசை கொஞ்சம் லேட்டாகுமென தெரிந்து முதல் தோசையை உன்னை சாப்பிட சொன்னேன். என் மேல அவ்ளவு அக்கறையான்னு நீ கேட்டபோது நான் அக்கறை காட்டாம வேற யார் காட்டுவா என மனதினுள் நினைத்தாலும் வெளிக்காட்டாமல் முதல்ல நீ சாப்பிடு. உனக்கு எதுவும் ஆகலைன்னா நான் சாப்பிடறேன் என்றேனே அப்பவே சொல்லிருக்கனும்.

விபத்தில் கை எலும்பு முறிந்து கட்டோடு நீ வகுப்புக்கு வந்தபோது எல்லாரும் get well soon என்றெழுதிய கட்டை காமித்து நீ எதுவும் எழுதலையா என்று கேட்டாய். வேண்டாம் உனக்கு வலிக்குமென்று சொல்லாமல் ரெண்டு கையும் உடைஞ்சிருந்தா நல்லாருந்திருக்கும்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும். ஒரே கம்பெனியில் இருவருக்கும் வேலை கிடைத்ததால் நம் வாழ்க்கைப் பயணம் தொடர்வதை எண்ணி சந்தோஷப்பட்ட நான் உன்னிடம் கர்மம் காலேஜ் முடிச்சும் உன் மூஞ்சிய பார்க்கும்படி ஆகிடுச்சே என்றேனே அப்பவே சொல்லிருக்கனும். என் அம்மாவைப் பார்க்க வந்திருந்த உன்னை உன் மருமகள பாருமா என சொல்ல நினைத்து காலேஜ்லிருந்து என் உயிரெடுக்கற பிசாசு இதுதான்மா என சொல்லிமுடித்தேனே அப்பவே சொல்லிருக்கனும்.

மின்னஞ்சலில் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என நீ சொன்னபோது அவர்களை வரவேண்டாமென சொல். நானிருக்கும்போது வேற எவன் உன் கழுத்துல தாலி கட்டுவான்னு பார்க்கிறேன் என சொல்ல தைரியம் வராமல் பாவம் அந்த பையன் என சொன்னேனே அப்பவாவது சொல்லிருக்கலாம். உன் கல்யாணத்துக்கு வராத காரணத்திற்காக நீ கோபித்துக் கொண்டாயே அப்பவாவது சொல்லிருக்கலாம். ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து அழைப்போ அஞ்சலோ வரும்போது அடித்துக்கொள்கிறதென் மனது. சொல்லித் தோற்ற காதலை விட சொல்லாமல் தோற்கும் காதலில் வலி அதிகமாம். உணர்கிறேன் உன்னால்.

March 20, 2009

சம்பங்கி

பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி முல்லையின் வாசனையைத் தாண்டி வீசும் சம்பங்கியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்குமென்றால் கைகொடுங்கள். நானும் உங்கள் கட்சிதான். ஆனால் இந்த சம்பங்கியை ஏன் பெண்கள் யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை? இத்தனைக்கும் மார்க்கெட்டில் விசாரித்துப் பார்த்தால் சம்பங்கி தான் விலை ஜாஸ்தி. என்ன அப்படி பார்க்கறீங்க? ஓ யாரிவ பேசிக்கிட்டே போறாளேன்னா? என் பேரு கல்யாணி. எனக்கு இன்னிக்கு வளைகாப்பு. நேத்துதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்குன்னு அம்மா சிரிச்சுகிட்டே சொன்னபோது வெட்கத்தையும் தாண்டி என்னமோ மாதிரி இருந்தது. எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமாகப்போகுது. அங்க பாருங்க. வர்றவங்களை வரவேற்கிறேன் பேர்வழின்னு அங்கிங்க ஓடிக்கிட்டிருக்காரே ராம் அவர் தான் என் வீட்டுக்காரர். முழுப்பேரு கல்யாணராமன். பெயர் பொருத்தம் நல்லாருக்குன்னு தான யோசிக்கிறீங்க. எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்த ஜோசியர் அசந்தே போய்ட்டார். அவர் வாழ்நாளில இப்படி அம்சமா பொருந்தின ஜாதகத்தை பார்த்ததேயில்லையாம். எந்த தோஷமுமில்லாத எல்லா பொருத்தங்களும் நிறைஞ்ச அம்சமான ஜாதகமாம் எங்க ரெண்டு பேருக்கும்.

ராம் கம்ப்யூட்டர் கம்பெனில வேலை பார்க்கிறார். கைநிறைய சம்பளம், எந்த கெட்ட பழக்கமுமில்லை, சொந்த வீடுன்னு தரகர் போட்டோ குடுக்கும்போதே அம்மாக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இத்தனைக்கும் இதான் முதல் வரன். போட்டோல நல்லா ராஜா மாதிரி இருந்தார். வழக்கமான பொண்ணு பார்க்கிற சம்பிரதாயமெல்லாம் இல்லாம பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு வரசொன்னாங்க. அங்கேயே கைத்தாம்பூலம் மாத்தி நிச்சயதார்த்தையும் ரொம்ப சிம்பிளா முடிச்சாங்க. சீர் பத்தி அம்மா பேசினபோது உடனே அவர் அதெல்லாம் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமாயிருந்தது. பக்கத்து வீட்டு கண்மணி புருஷன் வீட்டுல ஒரு பெரிய பட்டியலே கொடுத்தாங்க. கடன வாங்கி எல்லாத்தையும் செஞ்சு முடுக்க மணி மாமா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல. அந்த மாதிரி எதுவும் கேக்காம இருந்தது ரொம்ப சந்தோஷம். ஆடி மாசம் முடிஞ்ச முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம். குறைவான கூட்டத்துடன் ரொம்ப எளிமையா ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானத்தோட நல்லபடியா நடந்தது. கல்யாணத்துக்கு ஆன செலவுல பாதியை எங்கம்மா கையில கொடுத்து அம்மாவ அழவைச்சிட்டாங்க என் மாமியார்.


தேன்நிலவுக்கு ஊட்டி போனது, அப்புறம் விருந்துங்கற பேர்ல ஊரூரா போய் சாப்பிட்டு நான் கொஞ்சம் சதை போட்டதெல்லாம் சுவாரசியமில்லாத விஷயங்கள். என் மாமியார் என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்கறாங்க. கல்யாணமான இந்த பதினொன்றை மாதங்களில் ஒருநாள் கூட அவங்க என்னை அதட்டி பேசினது கிடையாது. ராமுக்கும் என்மேல் கொள்ளைப் பிரியம். இந்தமாதிரி ஒரு குடும்பத்துல வாக்கப்பட்டதுக்கு நான் குடுத்துவச்சிருக்கனும். வீட்டுக்கு வாரிசு வரப்போற சந்தோஷத்தில மாமியார் ரொம்ப பெரியளவுல வளைகாப்பு ஏற்பாடு பண்ணிருக்காங்க. ரெண்டு ஜோடி வைர வளையல்கூட வாங்கியிருக்காங்க. இதோ பங்க்ஷன் ஆரம்பிச்சிருச்சு. சந்தனம் பூசி குங்குமம் வைச்சி பன்னீர் தெளிக்கறாங்க. அய்யோ ஏன் இவ்வளவு பன்னீர் தெளிக்கிறாங்க?


"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு. சனியன். இந்த வயசுல பூக்கட்டி வித்து பொழப்ப ஒட்டனும்னு என் தலைல எழுதிருக்கு. அதுக்காவது ஒத்தாசையாஇருக்குதா? எப்ப பாரு ஏதாவது நினைப்பு. ஒன்னுக்கும் உதவாத தண்டக்கருமாந்திரம். ஏய் எருமை எங்கடீ பராக்கு பாத்துக்கிட்டிருக்க? ஒழுங்கா மாலைய கட்டுடீ எழவெடுத்தவளே."


வளைகாப்பு நல்லபடியா முடுஞ்சுது. ராமுக்கும், மாமியாருக்கும் பெண் குழந்தை வேணும்னு ஆசை. எனக்கு பையன். உங்களுக்கு என்ன தோணுது?


டிஸ்கி : கதைய படிச்சிட்டு நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டீங்கனா போனபோதுன்னு இத்தோட விட்டுடறேன். ஏதாவது வம்பு பண்ணிங்கன்னா அடிக்கடி இப்படி ஏதாவது எழுதி ரப்சர் பண்ணுவேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.