January 31, 2009

பெப்பே காட்டிய பெப்பே

Don Pepe. இந்த மெக்சிகன் உணவகத்துக்கு முதல்முறை நிச்சயதார்த்தம் முடிந்த பின் சென்றோம். (நாந்தான் பில் கட்டினேன்:( அப்பவே ஒரளவுக்கு தெரிஞ்சு போச்சு ரகு எப்படின்னு). கல்யாணத்துக்கப்புறம் ஒருமுறையும், சீமந்தத்திற்க்கு செல்வதற்க்கு முன் ஒரு முறையும் சென்றிருக்கிறோம். அப்புறம் கொஞ்ச காலம் renovation காரணமாக ECRல் இயங்கியது. சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் இயங்க ஆரம்பித்தார்கள். இந்த தடவை என் தம்பியோடு மதிய உணவிற்காக சென்றிருந்தோம். Renovation பண்றேன்ங்கற பேர்ல கெடுத்து வசிருக்காங்க. ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடி உபயோகித்திருக்கிறார்கள். ஏர் கண்டிஷனரையும் தாண்டி வெயிலின் சூடு தெரிகிறது. சரி சாப்பாட்டிற்க்கு வருவோம். Veg Nachos & Strawberry Margarita ஆகியவற்றோடு ஆரம்பித்தோம். As usual both of them were excellent. அதுக்குப் பிறகு ஆர்டர் பண்ண எதுவுமே சரியில்லை. நான் Burritos,
ரகு Chimi changas,
என் தம்பி texas chicken with mexican rice
என ஆளுக்கு ஒரு ஐட்டம் ஆர்டர் செய்தோம். Burritos & Chimi changas were too bland. உப்பு சப்பு ஒன்னுமேயில்லை. சர்வரைக் கூப்பிட்டு கேட்டதுக்கு அப்படிதான் இருக்கும் என்றார். எங்ககிட்டயேவா. நாங்கள் ஏற்கனவே இதே ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டிருப்பதையும், எங்களுக்கும் அதன் சுவை தெரியுமென்பதை சுட்டிக் காட்டினோம். மாற்றித்தருவதாக சொல்லி வேறோன்று கொண்டு வந்தார். This time it had salt??!! தம்பி அவன் டிஷ் பரவாயில்லை என்றான் (நானும் ரகுவும் முட்டை மட்டும் சாப்பிடும் சைவ பட்சிணிகள். என் தம்பி மாமிச பட்சிணி). Fried icecream வாங்கிய தம்பி நொந்து போனான். Fried icecreams tastes great in Cascade restaurants. எனக்கும் அதே கதிதான். இப்படி ஒரு ஹார்டான chocolate brownie நான் சாப்பிட்டதேயில்லை. ரகு மட்டும் ஏதுவும் வேண்டாமென தப்பிச்சாச்சு. பில் செட்டில் பண்ணும்போது தம்பி சொன்னான் "பேசாம பிரெண்ட்ஸோட சேர்ந்து வீட்லயே ஏதாவது செஞ்சு சாப்பிட்டிருக்கலாம்".

உணவகம் : Don Pepe
எங்கே : Cathedral Road. சோழா ஷெரட்டான் எதிரில். Hot breads மாடியில்.
Cuisine : Mexican
பர்ஸ் : பழுத்திருக்கனும். மூன்று பேருக்கு கம்ப்ளீட் மீல் 800 ரூபாய்க்கு
மேல் ஆகும் (only vegetarian).
போலாமா : ஒரு தடவை போய் பார்க்கலாம். அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது:(

January 29, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே

எனக்கு ரகுவுக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளில் ஒன்று சொந்த வீட்டினைப் பற்றிய கருத்து. இருவருக்குமே வீடு வாங்கனும்ங்கற ஆசை சுத்தமாக இல்லை. பணத்தை வீட்டில் முடக்குவது வேஸ்ட் என்பது எங்கள் எண்ணம். ஆனா சொந்தக்காரங்க எல்லாம் நாங்கள் வாடகை வீட்டில் இருப்பது பெரிய பாவமா நினைக்கிறாங்க. அடிக்கடி நாங்கள் எதிர்கொள்ளும் கேள்வி "இன்னும் ஏன் வீடு வாங்கலை??" அவசியமில்லை என்று சொன்னால் சேமிப்பின் அவசியம் பற்றிய லெக்சர் ஆரம்பமாயிடும். இதையும் மீறி ஒரு அபத்தமான அறிவுரை வாடகைக்கு குடுக்கிற காசை வீட்டு லோனா கட்டலாம்ல???!! ஏனோதானோன்னு இல்லாம ஒரு நல்ல வீடு வாங்க குறைந்தது 40 லட்சத்திற்க்கு மேலாகும். அதற்கு EMI கணக்கு போட்டால் சம்பளத்தில் முக்கால்வாசி வங்கிக்கு தான் அழனும். இதையெல்லாம் அவங்ககிட்ட விளக்கவா முடியும். ரெண்டு பேருமே அநாவசியமாவோ ஆடம்பரமாவோ செலவு செய்யறதில்ல. குடும்ப செலவு போக மீதி ஷேர் மார்க்கெட்லயும் வங்கிலயும் இருக்கு. அவசர தேவையை கலக்கமில்லாமல், அடுத்தவரிடம் கை நீட்டாமல் சமாளிக்க முடிகிறது. ஜூனியரின் மருத்துவ செலவு இந்த தடவை பத்தாயிரத்தை தொட்டுவிட்டது. We managed. அதுக்குன்னு வீடு வாங்க ஆசைபடுவது தப்புன்னு நான் சொல்லல. உங்களின் எதிர்காலத்தையும், அவசரத் தேவைகளையும், எமர்ஜென்ஸி என்றால் சமாளிக்க பெரிய தொகையை புரட்ட முடியுமா என்பதையும் யோசித்து வாங்குவது உத்தேசம் என்பது தான் எங்கள் கருத்து. இன்று ஐ.டி துறையை விட அத்துறை ஊழியர்கள் நிறைய பேர் ஆட்டம்கண்டு போயிருப்பதாக வரும் செய்திகள் இந்த E.M.I மேட்டராகத்தான் இருக்கமுடியும் என்பது என் ஊகம்.


அடுத்தபடியா அதிகம் விமர்சிக்கப்படுவது நாங்கள் உணவகங்களுக்கு செல்வதைப் பற்றி தான். வாரக்கடைசியில் ஒரு வேளை(யாவது) உணவகம் சென்று சாப்பிடுவது எங்கள் வழக்கம். I'm passionate about food. அதுக்குன்னு சட்டி முழுக்க சாப்பிடுற ஜீவன் இல்லை. அளவா சாப்பிடனும் அதே சமயம் அனுபவிச்சும் சாப்பிடனும். ரகுவும் என்னைப் போல் தான். எனக்கு வித்தியாசமான உணவுகளை ரசிப்பதில் ரொம்பவே ஆர்வமுண்டு. நிறைய ரெஸ்டாரெண்ட் டிரை பண்ணிருக்கோம். கையேந்தி பவனிலிருந்து பார்க் ஹோட்டல் வரை பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வீட்டிலோ சாப்பாட்டிற்காக ஏன் இவ்ளோ செலவழிக்கறீங்கன்னு கேக்கறாங்க. அட நாய்படாதபாடுபட்டு சம்பாதிக்கிறது எதுக்கு? உயிர் வாழறதுக்கு அவசியமான விஷயம் சோறு தானே? அத அனுபவிச்சு ருசிக்கறதுல என்ன தப்பு?

நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது?

பி.கு : நான் போற வித்தியாசமான உணவகங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். இனிமே எழுதப் போறதை தங்கிலீஷில் எழுதலாமான்னு ஒரு யோசனையில் இருக்கேன். அடுத்த பதிவு உணவகத்தைப் பத்தி தான். உங்க ஆதரவ அள்ளித் தெளிங்க மக்களே:)

January 23, 2009

பாட்டீஈஈஈஈ

ஜூனியர் தன் பாட்டியோடு பயங்கர அட்டாச்டு. பாட்டி தான் வேணும் எல்லாத்துக்கும். அம்மாவும் பேரன் மேல பாசத்தை பொழியறாங்க. நான் எங்கம்மா வழி தாத்தா பாட்டிய பார்த்தது கூட இல்ல. என் அம்மா வழி தாத்தா எங்கம்மா கைக்குழந்தையா இருக்கும்போதே தவறிட்டாங்க. பாட்டி அம்மா 8ஆவது படிக்கும்போது போய்ட்டாங்க. அப்பா வழி தாத்தா பாட்டி எனக்கு நினைவு தெரிந்து என்னை அரவணைத்த ஞாபகமில்லை. தாத்தாவுக்கு என் தம்பிய ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவன் கருப்பு (நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:)). இப்போ பாட்டி மட்டும் தான் இருக்காங்க. 89 வயசாகுது அவங்களுக்கு. வரிசையாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பரிகொடுத்தவங்க. சில குடும்ப அரசியல்??!!! காரணமாக பாட்டியின் பாசம் முழுவதும் டைவர்ட் செய்யப்பட்டது. வயசாகிட்டாலே வர்ற பிராப்ளம் அவங்களுக்கும் ஆரம்பிச்சிடிச்சு. என்ன பேசுறோம்னே தெரியமாட்டேங்குது. இப்போன்னில்ல ஏழெட்டு வருஷமாவே பாட்டி வாயத்திறந்தாலே அலறுவோம். சாம்பிளுக்கு


* வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித் தோழனிடம் நீ என்ன ஜாதின்னு கேட்டுட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தேன். அப்பா பாட்டியிடம் அப்படியெல்லாம் கேக்காதேம்மா என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?"


* பாட்டிக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப ஜாஸ்தி. இப்போகூட டிவில மேட்ச் பார்த்தா பிளேயர்ஸ் டிரஸ் கலர வெச்சே எந்த நாடுன்னு சொல்லிடுவாங்க. டெண்டுல்கர் மேல பாட்டிக்கு தனி பாசம். டெண்டுல்கர் சிக்ஸ் அடிச்சுருப்பார். பாட்டி கேப்பாங்க "டெண்டுல்கர் அவுட்டா??" அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.


* என் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். அவர் சொன்னதால் தான் நான் டாக்டருக்கு படிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது.


* எனக்கு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வருகிறேன். என்னிடம் வந்து 'சித்திரைல பையன் பிறந்திருக்கான். வீட்டு பின்னாடியிருந்த தென்னம்படல் வேற விழுந்திடுத்து, இதோட போய்ட்டா பரவாயில்ல. யாருக்காவது ஏதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது?" என்றார். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.


* நவம்பர் மாதம் நண்பனின் திருமணத்திற்காக நானும் அம்மாவும் ஊருக்கு சென்றிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலிருந்து கீழே வந்த பாட்டி அம்மாவிடம் "நீ போய்ட்டன்னா உன் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படும்" என்றார். மறுநாளே பேருந்தில் படிக்கட்டிலிருந்து அம்மா கீழே விழுந்தார்.

* ஊருக்கு புறப்படும்போது பாட்டியிடம் காசு கொடுத்துவிட்டு, கிளம்புறேன் பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க என்றதுக்கு "பொம்மனாட்டிகள் தனியா போறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது" என்றார். திரும்பி வரும்போது கார் டயர் பஞ்சர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாய் வீடு வந்து சேர்ந்ந்தோம்.

* மூத்த மகனுக்கு பொண்ணு பிறந்திருந்த சந்தோஷத்திலிருந்த பெரியம்மாவிடம் "உன் மாட்டுப்பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிடுத்தா?" என கேட்கவும் பெரியம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

* வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு வந்த அம்மாவிடம் "சந்துருவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை நீ என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச?" என்றார். பத்து நிமிஷத்தில் அப்பாவிடமிருந்து போன். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை ஒரம் இருந்த மரத்தில் பார்க் செய்யப்பட்டது என. அம்மாவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இதுபோல ஏராளமான சம்பவங்கள். அவர் சொல்வதனால் தான் நடக்கிறது என்றில்லை. ஆனாலும் அந்த நிமிஷம் கோபம் வரத்தான் செய்கிறது. பின்னால் யோசித்துப்பார்க்கையில் தான் தெரிகிறது. வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. பாட்டி மூலம் நான் கற்ற ரெண்டு முக்கியமான விஷயம். 1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது.

January 15, 2009

துணுக்ஸ் - 16/1/09

இந்த வருடம் பொங்கல் கொஞ்சம் டல்லாகவே கழிந்தது. சொந்த ஊருக்கு போகலாம் என்ற ஐடியாவும் ஜூனியரின் உடல்நிலை காரணமாக கைவிடப்பட்டது. அம்மாவுக்கும் எனக்கும் ஜூனியர் கொடுத்த சளி படுத்தியது. அப்பாவுக்கும் உடல்நிலை சரியில்லை. பொங்கல் காசும் இந்த தடவை கொஞ்சம் கம்மி தான். வந்த காச வைச்சு உருப்படியா ஏதாவது வாங்கனும்.
**********************************

இந்த மீடியாக்களின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. CNN-IBN சேனலில் நம் நாட்டு ராணுவ தளவாடங்களைப் பற்றிய செய்தி ஒன்றை கூறினார்கள். பகீரென்றிருந்தது. அட அறிவுகெட்ட ஜென்மங்களே நீங்கள் வெளியிட்ட செய்தி நாட்டுக்கு பெரிய ஆபத்தினை கொண்டு வரும் என்பதை யோசிக்கவே மாட்டீங்களா??
******************************

தொடர்ந்து ஆறு வருடங்களாக புத்தகக்கண்காட்சியை மிஸ் பண்ணவேயில்லை. இந்த முறை செல்லமுடியாதது ரொம்பவே வருத்தமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம் ஏதாவது மேஜிக் நடந்து ஞாயிற்றுக்கிழமையாவது போக முடியுமான்னு.
***********************

20 வயதில் காதல், கர்ப்பம், கொலை என திருச்சி மாணவர்களின் அரங்கேற்றம் அச்சப்படவைக்கிறது. ஒரே பையனை ரெண்டு பெண்கள் லவ்விருக்காங்க. அதில் ஒருத்தி கர்ப்பம். அவனை பதிவு திருமணம் செய்துகொண்ட இன்னொருத்தி, கர்ப்பத்தை கலைக்கலாம் என சொல்லி வீட்டுக்கு வரவழைத்து, கணவனுடன்????!!! சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தன் ஆடையை அணிவித்து எரித்திருக்கிறார்கள். என்னமா பிளான் பண்ணிருக்காங்க. யாரை குற்றம் சொல்வது??
********************

சிலம்பாட்டத்தில் வரும் நலந்தானா பாட்டு டிவியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. பாட்டின் கடைசி நடனத்தை??!! பார்த்து அப்பா அடித்த கமெண்ட் "ஒரு குச்சியை வச்சி தாண்டுடா ராமா தாண்டுடா ராமான்னு சொல்லிருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல".
********************

இந்த வார தமாஷ் - ஜூனியர் விகடன் அட்டையில் "காற்றுகூட எங்களை பிரிக்க முடியாது" தயாநிதி பற்றி அழகிரி.
*************************

வாழ்த்துக்கள் - குமுதம் மற்றும் ஆனந்த விகடனால் பாராட்டப் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும்.

January 14, 2009

படிக்காதவன்

வில்லு போவதாய் தான் இருந்தது. கடைசி நேரத்தில் வேண்டாம்ன்னுட்டு படிக்காதவன் போனோம். கொஞ்சம் தயக்கத்தோட தான் போனேன். ஆனா பொல்லாதவன்ல வர்ற மாதிரி தனக்கு இதுதான் ஒத்து வரும்ன்னு புரிஞ்சு பண்ணிருக்கார் தனுஷ்.அண்ணன்கள், தம்பி, தங்கை, அண்ணிகள் முதல்கொண்டு எல்லாரும் மெத்த படித்த குடும்பத்தில் படிக்காதவனாய் வருகிறார் தனுஷ். பிரெண்ட்ஸ் கொடுக்கிற ஐடியாக்களின் மூலம் தமன்னாவை லவ்வுகிறார். பின்னர் வரும் பிரச்சனைகளே படம். கடைசியில் சுபம். கதை என்று பெரிதாக ஏதுவுமில்லை. ஆனால் திரைக்கதை சூப்பர். பின்பாதியில் கொஞ்சம் திராபையாக இழுக்கிறார்கள். தனுஷ், விவேக் ரெண்டு பேருமே நல்லா ஸ்கோர் பண்ணுகிறார்கள். தமன்னா ஹூம். ஹோம் வொர்க் செய்யுங்க மேடம். கல்லூரில நல்லாருந்தாங்க. காமெடி, ஆக்ஷன் என நல்ல பேமிலி எண்டர்டெய்னர். ஒரு தடவை பார்க்கலாம்.டெயில் பீஸ்: டைரக்டர் சொல்றது மட்டும் செய்யறதுதான் வேலைக்காகும்ன்னு தனுஷ் புரிஞ்சுகிட்டாரு. சிம்புக்கு இது எப்ப விளங்கப்போதோ தெரியல. அதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏழரை சனி தான்.

January 10, 2009

வீட்டுக்கு வந்தாச்சு

நண்பர்களே
நான்கு நாட்கள் ஆஸ்பத்திரி வாசம் முடிந்து இன்று காலை தான் ஜூனியர் வீடு திரும்பினார்.வீசிங் படிப்படியாக குறைந்துள்ளது. பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள். விரைவில் ஆஸ்பத்திரியில் நேர்ந்த கசப்பான அனுபவங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
மீண்டும் நன்றி.

January 8, 2009

பிரார்த்தனை செய்யுங்களேன்

நண்பர்களே
ஜூனியருக்கு உடம்புக்கு முடியாமல் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறோம்(கடுமையான வீஸிங்). தயவு செய்து எல்லாரும் அவன் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்துகொள்ளுங்களேன் ப்ளீஸ்:(

January 7, 2009

துணுக்ஸ்

நீயு இயர்க்கு முதல் நாள் ரகுவின் பிரெண்ட் கூட டின்னர் சாப்பிடலாம்னு ஒரு பிளான். அவர் வீடு வேளச்சேரியில. நாங்க வேளச்சேரி போய்ட்ற மாதிரியும், அங்க அவர் எங்கள பிக்கப் பண்ணிக்கற மாதிரியும் பிளான். தாம்பரத்தில் இருந்து மாநகராட்சி பேருந்தில் போனோம். 6 மணிக்கு கிளம்பி வேளச்சேரி போக 7.15 ஆயிடுச்சு. அவரோட பிரெண்ட் கேட்டார். "ஏண்டா White board பஸ்ல வந்திருந்தேன்னா சீக்கிரமே வந்துருக்கலாமே". அதற்கு ரகு சொன்னது "காஸ்ட் கட்டிங்டா மச்சி" (ரகு கம்பெனியில் recession காரணமாக 10% சம்பளம் கட்).
*********************************

ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்டம் போயிருந்தோம் (தெரிஞ்சே சூனியம் வெச்சிக்கிட்டேன்). இந்த தடவையும் ஜூனியர் ரொம்ப சமர்த்தா இருந்தார். ஆனா படம்தான்:(. இதுக்கு முன்னாடி தாம் தூம் இதே தியேட்டர்ல பார்த்தோம் (அதான் ஜூனியரை first time தியேட்டர் கூட்டிக்கிட்டு போனது). தியேட்டர் ராசி போல. விஜய டி.ஆர் இன்னும் படத்த பார்க்கல போல. ஏன்னா அடுத்த சூப்பர் ஸ்டார் என் பையன் தான் கூசாம பேட்டி கொடுக்கிறாரூ. காலக் கொடுமைடா சாமி.
*************************************

இதுவும் சிலம்பாட்டம் பத்திதான். பாட்டுல டான்ஸ் ஆடுறேன்னு சிம்பு சாவடிக்கிறார். அப்புறம் அந்த ஹீரோயின். ஹூம் இன்னும் ஒரு கர்ச்சீப் சேர்த்து கட்டிருக்கலாம். எனக்கு புடிச்ச பாட்டு வைச்சிக்கவா ரீமிக்ஸ் & Where is the party song? முகேஷ் வாய்ஸ் சூப்பர்.
*************************************

போன ஞாயிறு நைட் டின்னருக்கு ஆனந்த பவன் போயிருந்தோம். ஆர்டர் பண்ணிட்டு காத்துகிட்டிருந்தபோது பக்கத்து டேபிளிலிருந்து கேட்டது.

ஆண் : என்ன ஆர்டர் பண்ணட்டும்?
பெண் : சுஜிக்கு pizza ரொம்ப பிடிக்கும். அதுவும் சொல்லுங்க.
குட்டிப் பெண் (சுஜியாக தான் இருக்கனும்): ஹும் எப்படியும் ஒரு sliceக்கு மேல என்ன சாப்பிட விட போறதில்ல. உனக்கு எது பிடிக்குமோ அதெயே சொல்லு.

என் பின்னால அமர்ந்திருந்ததால என்னால் அவர்கள் ரியாக்ஷனை பார்க்கமுடியல.
*****************************************

சேனல் மாத்திக்கிட்டுருக்கும்போது விஜயில் ஒரு விளம்பரம். நடந்தது என்ன நிகழ்ச்சிக்காக, ஒரு பெண்மனியை பேட்டி எடுத்துகிட்டிருந்தாங்க. அம்மணி போன ஜென்மத்துல ஜோதா பாயா இருந்தாங்களாம். ஃபதேபூரில் இருக்கும் கோட்டையில் நடந்தபடியே பேட்டி குடுக்கறாங்க. "நான் வாழ்ந்த அரண்மனை இப்படி போற வர்றவன் பாக்குற மாதிரி ஆகிடுச்சே". எத்தனை பேர் இப்படி கிளம்பப்போறாங்கலோ தெரியல.
***********************************

January 5, 2009

வெள்ளி விழா

இதனால சகலமானவர்களுக்கும் அறிவித்துதுக்கொள்(ல்)வது என்னவென்றால் நாளை தங்கத்தலைவன், பார் போற்றும் வள்ளல், வீரத்தளபதியின் நாயகன் படம் 150வது நாள் celebrate பண்ணுதுங்கோ. படம் கோபிகிருஷ்ணா தியேட்டர்ல ஓ(ட்)டிகிட்டுருக்கு. இந்த மாபெரும் வெற்றி விழாவை கொண்டாட மன்றத்து சார்புல பொருளாளர் அண்ணன் அப்துல்லா அவர்கள் மன்றத்துல followersa இருக்கறவங்க எல்லாருக்கும் பிரியாணி வாங்கித்தரப்போறார். என்ஸாய் பண்ணுங்க மக்கா:)

உன்னையெல்லாம் படிக்க வெச்சது வேஸ்ட்

பி.டெக் மூன்றாம் ஆண்டு இறுதியில் என்னோட மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்கள். CTS-ல் ஆணி புடுங்கறதுக்கு என்னை தேர்வு செய்திருந்தார்கள். பரம்பரையில் முதல் engineer என்பதோடு இல்லாமல், அவ்ளோ சம்பளத்தில் வேலை கிடைத்தது எனக்குத்தான். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப பெருமை. என் தம்பிக்கு அப்போதே அட்வைஸ் இம்சைகள் ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்து நான் ஆணி புடுங்கின அழகே தனி. வேலைல சேர்ந்து ரெண்டே அ(ஆ)ப்ரைசலிலே மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பிச்சாச்சு. எவ்வளவோ கெஞ்சினேன். இன்னும் ஒரு வருஷம் கல்யாணம் வேண்டாம்னு. எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கா போச்சு. அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ரகு பலிஆடா ஆனார்:)


நான்கு மாத கர்ப்பமா இருக்கும்போது நான்கு பேர் கொண்ட டீமை லீட் செய்ய அழைத்தார்கள். US(உழவர் சந்தையா?? அடிங்க) வேற போகவேண்டியதிருக்கும்ன்னு சொன்னாங்க. Project delivery ஜூன் மாதத்தில். என் டெலிவரியோ மே மாசத்துல. என் நிலைமைய சொன்னதும் இது வேலைக்காவதுன்னு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெஞ்சு தேய்க்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓசி சம்பளம். சரி இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் ஓட்றேன்னு தான கேக்கறீங்க. இருங்க இனிமேல்தான் மேட்டரே. (அப்ப இதுவரைக்கும் எழுதினது??)

குழந்தைய பார்த்துக்க ஆள் கிடையாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னேன். (டெண்டேடிவ் டெலிவரி டேட் கொடுத்தப்பவே நானும் ரகுவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்). அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் எக்கச்சக்கமான விமர்சனங்கள். என் பெற்றோருக்கும் சரி ரகுவின் பெற்றோருக்கும் சரி நான் வேலையை ரிசைன் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அம்மா "எப்படியாவது லீவ எக்ஸ்டண்ட் பண்ணு. குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும் நான் வளர்க்கறேன். நீ வேலைக்குப் போ. வாரக்கடைசியில் இங்க வந்துட்டு போ"ன்னாங்க. நீ ஏம்மா வேலைக்கு போல. இந்நேரம் நீ வேலைல இருந்திருந்தீன்னா தலைமையாசிரியையா ஆயிருக்கலாமேன்னு கேட்டேன்(அம்மா டீச்சர் டிரெய்னிங் முடிச்சுட்டு அரசாங்க வேலைல சேர இருந்தாங்க.). அவங்களால பதில் சொல்ல முடியலை. ஒரு வழியா அவர்களை சமாதானம் பண்ணியாச்சு. ஆனா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் "ஏன் வேலையை விட்ட?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. Atleast weekly once someone throws this question on me. நண்பர்கள் கூட ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போதும் அடுத்த என்ன பண்ண போறதா உத்தேசம் என்று கேட்பார்கள். நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தடவை ஜூனியர் ஸ்கூல் போகிற வரைக்கும் வேலைக்குப் போகபோவாதில்லை என்று சொன்னேன். ஆனா திரும்ப திரும்ப அதே கேள்வி? "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?" "அடுத்து என்ன பிளான்?" விதவிதமாக ஒரே கேள்வி. இவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடி கேட்பதால் நானென்னமோ தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கெல்ல்லாம் ஹைலைட்டாக கொஞ்ச நாள் முன்னாடி உறவினர் ஒருவர் அடித்த கமெண்ட், ஏற்கனவே காண்டுல இருந்த என்னை ரொம்பவே எரிச்சலடைய செய்துவிட்டது. அவருடனான உரையாடல்.

"ஏம்மா வேலைய ரிசைன் பண்ண?"

குழந்தைய பார்த்துக்கணும்.

"ஏன் உன் அம்மாவையோ மாமியாரையோ வர சொல்ல வேண்டியதுதானே?"

அவங்களால வர முடியாது.

"அப்ப என்னதான் பண்ணப்போற?"

-----

"கேக்கறேன்ல சொல்லு"

(மனதுக்குள்) தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க?

"எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."

(சரியான கோபம் எனக்கு) நீங்க எதுக்கு அழறீங்க? உங்க காசா போச்சு. எங்க அப்பா காசு தானே. போனா போட்டும். கத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்.


எனக்குத் தெரியும் படிப்பு என்றுமே வீணாகாதென்று. But திரும்ப திரும்ப துக்கம் விசாரிக்கர மாதிரி இப்படி ஆகிபோச்சேன்னு கேக்கும்போது ரொம்ப irritatinga தான் இருக்கு. இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? Atleast நண்பர்களாவது புரிஞ்சுப்பாங்கன்னு பார்த்தா. ஹூம். அக்கறைங்கற பேர்ல டார்ச்சராதான் இருக்கு. பார்ப்போம் இந்த இம்சை எவ்வளவு நாளைக்கு கண்டினியூ ஆகுதுன்னு.


டிஸ்கி : இது எப்பவோ எழுதினது. பதிவிட்ட கொஞ்சம் கோபம் குறையும்னு தோணிச்சு. அதான் பொலம்பிருக்கேன்.

January 1, 2009

ஊட்டி

குமரகத்தில் ஆரம்பித்து மூணாறுக்கு ட்ரை பண்ணி கடைசியாக ஊட்டில லேண்ட் ஆனோம். ஏற்கனவே நான் ஊட்டிக்கு மூணு தடவை போயிருக்கேன். கடைசியா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆபிஸ்ல இருந்து 12 பேர் ஊட்டிக்கு போனோம். ஊட்டில இப்போ சரியான குளிர். எனக்கு ஜீனியர் எப்படி அடாப்ட் பண்ணிப்பானோன்னு தான் கவலை. ஆனா நானும் ரகுவும் தான் ரொம்ப கஷ்டப்பட்டோம். ஜூனியர் அவர் பாட்டுக்கு சரியான ஆட்டம். 3 நாள் எந்த கவலையும் இல்லாம நல்லா எண்ஜாய் பண்ணோம். அப்புறம் ஊட்டி பத்தி நான் சொல்ல புதுசா எதுவும் இல்ல. As usual எங்கப் பார்த்தாலும் கூட்டம் தான். அதுவும் வட இந்தியர்கள் ரொம்ப ஜாஸ்தி. பகலெல்லாம் நல்ல வெயில் அடித்தாலும் மாலை 6 மணிக்கு மேல் சரியான குளிர். பைக்காரா, குன்னூர், ஊட்டி, முதுமலை ஆகிய இடங்களை தான் மூன்று நாட்களில் கவர் செய்தோம். முதுமலையில் மட்டும் சபாரிக்கு டிக்கெட் கிடைக்காததால் ரிட்டர்ன் ஆகிட்டோம். என் ரேடியோவ இத்தோட ஆஃப் பண்ணிட்டு அங்க நான் எடுத்த போட்டோஸ பாருங்க (சுமாரா தான் இருக்கும்).மேல இருக்கிற படத்துல ஒரு குகை மாதிரி தெரியுதே அங்கதான் உயிரே படத்துல வர தைய தையா பாட்டு எடுத்தாங்கலாம்.