Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

December 24, 2010

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்

நவம்பர் தொடங்கி ஜனவரி வரை ஏதோவொரு வகையில் ஃபெஸ்டிவ் சீசன் என்ற மூட் இருந்துக்கொண்டே இருக்கும். டமால் டூமில் என வெடிக்கும் வெடிகள் தீபாவளியின் வரவைச் சொல்வது போல் வீட்டின் வாயிலில் கலர்கலராய் ஒளிவீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் க்றிஸ்துமசின் வரவைச் சொல்லும்.

பள்ளிக் காலம் தொட்டு க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அளவில்லா குதூகலத்தைத் தருகின்றது. காஞ்சிபுரத்தில் நான் படித்த பள்ளி க்றித்துவ அமைப்பால் நடத்தப்பட்டது. வெள்ளுடை சிஸ்டர்ஸ் தான் சகலமும் அங்கே. அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் தான் ஆரம்பிக்கும். டிசம்பர் முதல் வாரத்திலேயே பள்ளியின் நுழைவாயிலிலும், ஜீசஸ் சிலை இருக்கும் இடத்திலும், சிஸ்டர்களின் கான்வெண்டிலுமாக மூன்று ஸ்டார்கள் ஒளிர ஆரம்பித்துவிடும். க்றிஸ்துமஸிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மரம் டெகரேட் செய்து, பெரிய குடில் அமைத்து, பொம்மைகள் வைப்பார்கள். கிட்டத்தட்ட கொலு போல. ப்ரெக்னெண்டாக இருக்கும் மேரி மாதா சிலை க்றிஸ்துமஸன்று குழந்தை யேசுவோடிருக்கும்;) ஒவ்வொரு க்றிஸ்துமஸின் போதும் யேசுவின் பிறப்பைப் பற்றிய நாடகமிருக்கும். ஒரிரு வருடங்கள் narrator ஆக இருந்த ஞாபகமிருக்கிறது. அப்புறம் பாட்டு டான்ஸென ஒரு மணிநேரம் வண்ணமயமாக கடந்துச் செல்லும். எல்லோருக்கும் கேக் விநியோகிக்கப்பட்ட பின் ப்ரார்த்தனைகள், ஸ்தோத்திரங்கள் என கொண்டாட்டங்கள் தற்காலிக முடிவிற்கு வரும்.

அங்கிருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கு க்றிஸ்துமஸ் என்றில்லை எந்தவொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இரண்டே வருடங்களில் மீண்டும் வேறு பள்ளி மாறினேன். அங்கு எல்லா நாட்களும் கொண்டாட்டம் தான். சீனியர் வகுப்பிலிருந்ததால் ஆர்கனைசிங் கமிட்டியில் மெம்பராகும் வாய்ப்பும் கிடைத்தது. தீபாவளி பெரிதாக ஒன்றுமிருக்காது. க்றிஸ்துமசும் பொங்கலும் க்ராண்டாக செலிப்ரேட் செய்யப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்னரே Choir டீமிற்கு (ஹி ஹி. நானும் பார்ட் ஆஃப் தி டீம்) ஜாக்குலின் மற்றும் செலினா மிஸ்ஸிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். வருடா வருடம் ஆரம்ப பாடல் மட்டும் மாறும். முதலில் ஒரு பாடல். பின்னர் நடனம். அடுத்து ஜிங்கிள் பெல்ஸ் பாடல். மீண்டுமொரு நடனம். ஆசிரியர்களும், கெஸ்ட்டுகளும் கலந்து கொள்ளும் சில விளையாட்டுக்கள். கடைசியாக We wish you a merry christmas பாடல். ஒரிரு நிமிடப் ப்ரேயர். க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும். ரிகர்சலின் போது ஆசிரியர்களை அழவிடுவது அலாதியானது. வேணுமென்றே நோட்ஸ் மாற்றிப் பாடுதல், சின்க் தவறவிடுதல், ஹைப் பிட்சில் சொதப்புதல் என நிறைய கலாட்டா செய்வோம். எப்பேற்ப்பட்ட மூடில் இருந்தாலும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் பீட்ஸ் கொண்டது ஜிங்கிள் பெல்ஸ் பாடல். பாடுவதோடில்லாமல் ஃபுட் டேப்பிங், ஆர்ம் ஸ்விங்கிங் போன்ற எளிமையான நளினமான மூவ்களையும் தரவேண்டும். இம்மாதிரியான charolsக்கு உச்சரிப்பு தெளிவாகவும் அதே சமயம் ஸ்டைலிஷாகவும் இருக்க வேண்டும் என்பது செலினா மிஸ்ஸின் நம்பிக்கை. அவர் எதிர்பார்க்கிற ரிசல்ட் வரும் வரை விடமாட்டார். என்னதான் டார்ச்சர் செய்தாலும் விழாவின் போது கரெக்டாகப் பாடி அப்ளாஸ் வாங்கும் எங்கள் டீம்.


அதே போல் இந்தப் பாட்டையும் கேளுங்கள்.


பின்னர் காலேஜில் Christ Mom Christ Child விளையாடுவதோடு சரி (Day Scholar கேங் எல்லாம் பொங்கலுக்கு இதை விளையாடியது தனிக் கதை). மணமணக்கும் ரம் ப்ளம் கேக், பால் பாயாசம், வெனிலா/மேங்கோ ஃப்ளேவர்டு கஸ்டர்ட் என ஷீலா ஆண்டியின் கை வண்ணத்தில் ஒரிரு வருடங்கள் க்றிஸ்துமஸ் கொண்டாடியதுண்டு. இம்முறை அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் க்றிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு முறை படியேற அவர்கள் வீட்டு வாயிலைக் கடக்கும்போது காணக் கிடைக்கும் டெக்கரேட் செய்யப்பட்ட க்றிஸ்துமஸ் மரமும், ஸ்டாரும் என் பழைய நினைவுகளை கிளறிக் கொண்டே இருக்கின்றன. குட் ஓல்ட் டேஸ்..

பதிவர்கள் அனைவருக்கும் க்றிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...

September 27, 2010

சிவந்த கைகள்

ஒவ்வொரு விஷயத்தின் மீதான பற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. பொம்மைகள் என்றால் உயிராய் இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அவற்றின் மீதிருந்த காதல் காமிக்ஸ் புத்தகங்கள் மீது திரும்பியது. பின்னர் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் ஏற்பட்ட ஆர்வம். எதிர்காலம்/பொருளாதார பயங்கள் எழும்பி பொருளீட்டலில் பயணிக்க வைக்கும். குடும்பென்றானபின் குழந்தை மீது கவனம் திரும்பும். இப்படி நிறைய பட்டியலிடலாம். ஆனால் எல்லோருக்கும் சிறு வயது தொட்டு இன்று வரை ஏதேனும் ஒரு விஷயம் அல்லது சிலவற்றின் மீது தீராக் காதல் இருந்துக்கொண்டே இருக்கும். நான் ரொம்பவே காதலிக்கும் விஷயங்களில் மருதாணியும் ஒன்று.

பள்ளி இறுதிக் காலத்திலிருந்தே நகைகளின் மீதான ஆர்வம் போய்விட்டது. இன்றுவரை மருதாணியின் மீதான் க்ரேஸ் குறையவேயில்லை. மெஹெந்தியை விட மருதாணியே அழகாக இருக்கிறதென்பது என் கருத்து. முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும், லட்சக்கணக்கான டிசைன்களில் பலவித வண்ணங்களில் மெஹெந்தி போடப்பட்டாலும் விரல்களுக்கு தொப்பி போட்டது போல வைக்கப்படும் நம்மூர் ஸ்டைல் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.

மருதாணி வளர்ப்பது முதல் வைப்பது வரை பெரிய கலை. என் பாட்டிக்கு மருதாணி செடி வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு நல்லதில்லையென்ற நினைப்புண்டு. எனக்கும் அம்மாவிற்கும் நினைத்த நேரத்திற்கு மருதாணி வைத்துக்கொள்ள வீட்டில் செடியில்லன்னா எப்படி என்று தோன்றும். காஞ்சிபுரத்தில் நல்ல அடர்த்தியான மருதாணிச்செடி வளர்த்தோம். இலைகள் ரொம்ப திக்காக இருக்கும். மருதாணி இலை பறிப்பது நேரம் முழுங்கும் வேலை. நண்பர்களோடு கதையடித்துக்கொண்டே ஒவ்வொரு இலைகளாக பொறுமையாக பறிக்கலாம். ரொம்ப அவசரமென்றால் அப்படியே நீட்டக் கிளைகளை ஒடித்துக்கொண்டு போய் இலைகளை மட்டும் பின்னர் உருவிக்கொள்ளலாம். எப்படிப் பறித்தாலும் மருதாணி சீக்கிரமே துளிர்த்துவிடும் (வளர்க்கும் மண்ணைப் பொறுத்து).

சிலச் செடிகள் இலையை உருவிப் பறிக்கும்போதே கைகளில் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும். சிலது பறித்து அரைக்கும்போது வண்ணம் கொடுக்கும். சில இலைகள் என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்தாலும் அசரவே அசராது. இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஆரஞ்சிலே நின்று கடுப்பேற்றும். இன்று வரை எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்து, கிச்சன் சுத்தப்படுத்திய பின்னரே மருதாணி அரைப்பார்கள். காஞ்சிபுரம், வாலாஜா வீடுகளில் அம்மிக் கல் இருந்தது. கொஞ்சம் கொட்டைப் பாக்கு சேர்த்து அரைப்பார்கள். மருதாணி வைத்தால் சளி பிடிக்குமென்பவர்களுக்காக கொஞ்சம் யூக்லிப்டஸ் ஆயில் சேர்ப்பார்கள். மருதாணி கிடைக்காத இடங்களில்/அவசரத்திற்கு குங்குமம், மைதா இன்னும் ஏதோ வஸ்துவெல்லாம் சேர்த்து பசை மாதிரி ரெடி செய்வார்கள். ஆனால் அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மி. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அதே மாதிரி பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பெயிண்ட் வாசனைபோல் இருக்கும்.

அடுத்து மருதாணி வைக்கும் படலம் ஆரம்பமாகும். முதலில் வாண்டுகளுக்கு வைத்துவிட்டு பின்னர் பெரியவர்கள் வைத்துக்கொள்வார்கள். சின்ன மக்கில் தண்ணி எடுத்து வைச்சுப்பாங்க. முதலில் சுண்டு விரலிலிருந்து ஆரம்பித்து கட்டை விரலில் முடியும். சின்னதாய் உருண்டை உருட்டி கைகளில் வைத்து அழுத்தி அப்படியே முழு விரலையும் மூடிவிடுவார்கள். எனக்கு விரலின் கால் பாகம் வைப்பது புடிக்கும். அம்மா, பெரியம்மா, அக்காவிற்கெல்லாம், முக்கால்வாசி விரல்கள் மூடும்படி வைப்பார்கள். விரல்கள் முடித்த பின்னர் உள்ளங்கையில் ஒரு சிறிய வட்டம். காம்பஸ் வைத்து வரைந்தாற்போல் தத்ரூபமாக இருக்கும். பின்னர் அதைச் சுற்றி சின்ன பொட்டுகள் ஏழோ எட்டோ கைக்குத் தகுந்தாற்போல் முளைக்கும். அவ்வளவுதான்.

இனிமேதான் இருக்கு சாமர்த்தியமே. அதென்னவோ மருதாணி வச்சு முடிச்சப்புறம் தான் முதுகு அரிக்கும், மூக்கு அரிக்கும், தண்ணி தாகம் எடுக்கும், முடி கலைஞ்சு மூஞ்சில வந்து விழும், கண்ணுல தூசி விழும், இல்லாத இம்சையெல்லாம் க்யூ கட்டி நிற்கும். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் மருதாணி கலையாமல் பாதுகாப்பாய் தூங்கி பாதி இரவில் எழுப்பி/தூக்கத்திலேயே கைகளில் எலுமிச்சை சாறு கொஞ்சம் தடவி, காலையில் எழுந்தவுடன் கைகளில் இருக்கும் காய்ந்த கலவையை சுரண்டி எடுக்கும்போதே தெரிந்துவிடும் பத்திருக்கா இல்லையான்னு.

சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். என் அக்காக்கு கருப்பாகவே இருக்கும். பித்தம் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லி சொல்லியே நாலு நாளைக்கு காஃபியைக் கட் பண்ணிடுவாங்க பெரியம்மா. எனக்கு எப்பவுமே நல்ல சிவப்பாகவும் எப்போதாவது ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். காலேஜ் படிக்கும்போதெல்லாம் மருதாணியின் நிறத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் உண்டு. மருதாணி கலைச்சவுடனே கையக் கழுவக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு மணிநேரத்துக்கு தண்ணி படாம பாதுகாத்தா இன்னும் கொஞ்சம் கலர் கூடும். அப்புறம் கையக் கழுவும்போது தான் ஒரிஜினல் கலர் என்னன்னு தெரியும். அன்னிக்கு முழுக்க மருதாணியோட வாசம் மூக்கச் சுத்திக்கிட்டேயிருக்கும். மருதாணி வச்சு எடுத்தன்னிக்கு ப்ரெஷ்ஷா உறையூத்துன கெட்டித் தயிர சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா. ம்ம்ம்ம். சொர்க்கம் தான் போங்க. நல்ல தரமான மருதாணியின் கலர் குறைய எப்படியும் மூணு வாரமாகும். அதுவரைக்கும் அநாட்டிய பேரெலிகள் கூட சும்மா சும்மா அபிநயம் பிடிச்சு பார்த்துப்பாங்க:))

முன்னமெல்லாம் எங்கவீட்ல எதாவது விசேஷம்னாலே மருதாணிச் செடிதான் முதல் வெட்டு. கல்யாணம், தீபாவளி, பொங்கல்ன்னு இப்படி எதுக்கெடுத்தாலும் மருதாணி வச்சுப்போம். அப்புறம் செடி இல்லை, இலை கிடைக்கலன்னு ஆரம்பிச்சு வெறும் கல்யாணத்துக்கு மட்டுமே மருதாணி வைக்கிற நிலைமை வந்திடுச்சு. இந்த மாதத் துவக்கத்தில் மாமா பெண்ணின் கல்யாணம் நடந்தது. கடைசியாக என் வளைகாப்பிற்கு மருதாணி வைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு இப்போதான் வைத்துக்கொண்டேன். ஆசையாசையாய் இரண்டு கைகளிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொண்டேன். இப்போது தான் கலர் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் என் இரு கையையும் பிடித்துக்கொண்டு “அம்மாக்கு உவ்வா இக்கா. மந்து போடவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

April 21, 2010

சென்னையின் மழைக்காலங்களில்...

கிட்டத்தட்ட 12 வருடங்களை வேலூர் வெயிலில் கரைத்த எனக்கு சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. வேலூரில் என்ன தான் கொளுத்தியெடுத்தாலும் கசகசப்பு இருக்காது. சென்னை நேரெதிர். கொஞ்சமே வெயிலடித்தாலும் கசகசவென எரிச்சல் படுத்திவிடும். என்றைக்குமே மழையில் நனைவதென்பது எனக்கு அறவே பிடிக்காது. டிரெஸ் நனைந்து, முடியெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு i hate it. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic).

இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.



அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.

ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)

February 18, 2010

தீரா அவப்பெயர்

ஒவ்வொரு முறை நான் மறுக்கும்போதெல்லாம் நான் செய்த அந்த வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்படுகின்றேன். அப்படி என்ன பிழைன்னு கேக்கறீங்களா? இருங்க சொல்றேன். அது தெரிஞ்சுக்க நீங்க கொஞ்சம் என்னோட கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி ட்ராவல் பண்ணனும். சுமார் 8 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த "துயர" சம்பவம்.

2001ஆம் ஆண்டு (வரலாறு மிக முக்கியம்) பிளஸ் டூ முடித்து ரிசல்ட் பற்றிய கவலையில்லாமல் எண்டரன்ஸ் எக்ஸாம் தலைவலிகளுடன் போராடிக்கொண்டிருந்தோம். வாரம் மூன்று நாட்கள் குரூப் ஸ்டடி. அப்புறம் ஒரு நாள் முழுவதுமாய் ரிலாக்சேஷன் (அபிஷியலாய்). இந்த ரிலாக்சேஷன் நாளன்று யாராவது ஒரு நண்பர் வீட்டில் கூடி கும்மியடிப்போம். மோஸ்ட்லி ஒரு படம் பார்த்துவிடுவோம். சிடியோ இல்லை டிவியோ. அப்படி ஒரு முறை நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது (அல்லது பாவ்லா பண்ணிக்கொண்டிருந்தபோது) கவிதா அந்த யோசனையை சொன்னாள் (நாங்கள் என்பது நான், கவிதா, ஜெயா, பவி, பிரபா). வரலாற்றுப் பிழைக்கான முதல் விதை. என்ன யோசனையென்றால் அப்போது ரிலிசாகி ஒ(ட்)டிக்கொண்டிருந்த அந்த படத்தை தியேட்டரில் போய் பார்ப்பதென்று. சாம்பிள் பேப்பருள் புதையுண்டிருந்த நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். Movie in theatre. That too with friends. Sounded great. ஆனால் வீட்டில் பர்மிஷன் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாய் தோன்றியது. யார் யார் பெற்றோரிடம் பரிந்து பேசி ஓகே பெறுவது என சார்ட் போடப்பட்டது. பிரபா வீட்டில் அவள் கசின் கல்யாணத்தை காரணம் காட்டி கறாராய் அனுமதி மறுக்கப்பட்டது (தப்பித்துவிட்டாள்).

அப்பவே அண்ணா அந்தப் படமா என இழுத்தார்கள். எனக்கு அந்த நடிகர் மீது பெரிய அபிமானம் ஏதுமில்லை. எனக்கு எப்பவுமே கமல்ஹாசன் தான். எப்பவாவது ஆமிர்கான். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் வரும் ரிவ்யூக்களை பெரிதாய் மதிப்பதில்லை/படிப்பதில்லை. அந்த கறுப்பு ஞாயிறு இன்னும் நினைவில். தனித்தனியாய் போனால் வெயிட்டிங் பிராப்ளம் வருமென்பதாலும், தியேட்டரில் மற்றவர்களின் பார்வையை சமாளிக்க வேண்டியும் நால்வரும் முத்துக்கடையில் சந்தித்துவிட்டு சேர்ந்தே தியேட்டருக்கு போவதென்றும் முடிவாகியது. பஸ்சில் கண்டக்டர் சில்லறை இல்லைன்னா இறங்கிடுங்க என்று முதல் பிரச்சனையை துவக்கினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என புரிந்து அப்போதே அப்பீட் ஆகியிருக்கனும். விதி யாரைவிட்டது. வாங்கடி வாங்க என வலைவிரித்தது தெரியாமல் போய்விட்டது.

சில்லறை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ் பிடித்து தியேட்டருக்குள் நுழைவதற்குள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். யார் க்யூவில் நின்று டிக்கெட் வாங்குவதென்ற பெருங்குழப்பத்தை நொடியில் தீர்த்து பவி டிக்கெட் வாங்கினாள். இரண்டாவது பல்பாக வந்திருந்த கொஞ்ச நஞ்ச பெண்களில் தனியாக வந்தது நாங்கள் நால்வர் தான். மொத்த தியேட்டரில் பெண்கள் எண்ணிக்கை ஆறோ ஏழோ தான். We didnt bother though. உள்ளே சென்று வரிசை தொடக்கத்திலிருந்து அமர்ந்தோம். ஜெயாவின் பக்கத்தில் ஒரு சீட் காலியாகவே இருந்தது. ஜெயா என்னை என்ன என்பது போல் பார்த்தாள். நான் ரியாக்ட் செய்வதற்குள் படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு படத்தை சென்சார் சர்ட்டிபிகேட்டிலிருந்து பார்த்தால் தான் திருப்தியாகிறது.

ஆரம்பமே திகிலாயிருந்தது. படத்தின் முதல் நொடியிலிருந்து ஆரம்பித்த அதிர்ச்சி படம் முடியுறவரைக்கும் தொடருமாறு டைரக்டர் பார்த்துக்கொண்டார். ஹீரோவுக்கு அப்பா மகன் (மாக்கான்) என இரட்டை வேடங்கள். இண்டர்வெலில் போய்விடலாம் என்ற என் கோரிக்கை டிக்கெட் விலையையும், மற்ற நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு (குறிப்பாய் பசங்க. கலாட்டா பண்ணிவிடுவார்கள்) ஆளாவோம் என்ற அபத்த காரணத்தையும் காட்டி ரிஜெக்ட் செய்யப்பட்டது. ஹீரோவின் மீதான கோவத்தை பாப்கார்ன், குட்டி சமோசா, வீல் சிப்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டு தீர்த்தோம். செகண்ட் ஹாஃப்பில் அப்பா கேரக்டர் சூப்பராய் எழவைக் கூட்டினார். அதைவிட அவர் ஜோடி. மேக்கப் போட்டாலே அவிங்க ஆண்ட்டி மாதிரி தான் இருப்பாங்க. இதில மேக்கப் இல்லாம வேற க்ளோசப்லலாம் வந்து கலங்கடிச்சாங்க. ஒவ்வொரு பாடலின்போது பேய் படம் பார்ப்பது மாதிரி கையால் முகத்தை மூடி விரலிடுக்கு வழியாகவே பார்த்தேன்(தோம்). க்ளைமேக்ஸ் வந்தப்புறமும் ஒரு டூயட் பாட்டு. எக்ஸ்ட்ரா லார்ஜ் வயிறோடு ஹீரோ ஹீரோயின் ஆடியபோது அழுவதா சிரிப்பதா எனத் தெரியாத பரவச நிலையில் இருந்தோம். கோர்ட்டில் ஹீரோ பேசும் வசனங்கள். முடியலடா சாமீ.

மூன்று விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. ஒன்று தலைவலிக்கு குறைந்தது 2 சாரிடானாவது வேண்டும். ரெண்டு தெரிஞ்சவங்க எல்லாம் கிண்டல் பண்ணியே சாவடிக்கப்போறாங்க. மூன்றாவது இந்தப் படம் என சஜெஸ்ட் செய்த கவிதா மரண அடி வாங்கப்போவது. மூன்றுமே கனஜோராய் நடந்தது. "வெற்றிப் படம் பார்த்த வீராங்கனைகள் பராக் பராக் பராக்" என கோச்சிங் கிளாசில் நுழைந்தபோது கத்தி கலாட்டா பண்ணார்கள். படம் பார்த்த எஃபெக்ட் மூன்று நாள் குரூப் ஸ்டடியைத் தவிர்த்தோம். உறவுகள் நட்புகள் என அனைவரின் கேலிப்பேச்சுக்கும் ஆளானோம். என்னை கிண்டல் செய்தவர்கள் எல்லாரும் அந்தப் படத்தை ட்ரேய்லரோடு நிறுத்திவிட்டார்கள் என்பது கூடுதல் செய்தி.

அதற்கு அப்புறம் எவ்வளவோ சூரை மொக்கைப் படங்களை (இந்த லிஸ்டில் ஒண்டிப்புலியின் ஆதி. ஷப்பா. ஜுரமே வந்திருச்சு) நண்பர்களுடன் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் படத்தினால் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது கூட அந்தப் படத்தின் காட்சியோ, பாடலோ டிவியில் பார்க்க நேரிட்டால் ரூமிற்கு சென்று ஒளிந்துகொள்கிறேன். ஹைலைட்டாக சென்ற வாரம் "The Curious Case of Benjamin Button" பார்க்க அமர்ந்தோம். அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. "சுத்த போர்ண்ணா. நான் தூங்கப் போறேன்" என்றவளைப் பார்த்து கோரசாக அண்ணாவும் தம்பியும் "சிட்டிசன் படத்தையே தியேட்டர்ல பார்த்தவ நீ. இது போரடிக்குதா" என்றார்கள்.

ஹூம். என்று தான் நீங்குமோ இந்த அவப்பெயர்:(

January 18, 2010

காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்

பொங்கல் பொங்கித் தின்னு, கட்டு கட்டா கரும்பு கடிச்சு (விக்னேஷ்வரி அழாதீங்க) டயர்டா படுத்தா, மறுநாள் அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி ஒரே அடம். காலம் காலமா தொடர்ந்து செய்யற இந்த சேவையை??!! இந்த வருடமும் பண்ணியாச்சு. தீபாவளில காசு கரியாகற மாதிரி இல்லாம பொங்கல் போது வசூல் சூப்பரா இருக்கும். அதுவும் காணும் பொங்கல் அன்னிக்கு கால்ல விழுந்தா காசு. ஸ்ட்ரிக்ட்லி ஃபார் லேடீஸ்:)

எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும். கல்யாணத்துக்கு முன்னால குளிச்சோமா, போட்டத தின்னோமான்னு ஜம்முன்னு போச்சு. கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்) பாதி வேலைய பண்றது (அ) ஒத்தாசை பண்றது. மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே காய்கறி நறுக்கறது, தேங்காய் கீறறதுன்னு எடுபுடி வேலைலயே ஓட்டிக்கிட்டிருக்கேன். க.முல பொங்கலன்னிக்கு தலைவாழை இலைல சர்க்கரைப் பொங்கல், தயிர் பச்சடி, வடை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், பரங்கிக்காய் பொரியல், சௌசௌ கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், தாளிச்ச மோர் மெனுவப் போட்டுடுவாங்க (வாழை இலைல ரசம் சாதம் சாப்பிடற கலைய இன்னும் கத்துக்காம கஷ்டப்படறது வேற விஷயம்). க.பில கிடைக்கிற காயெல்லாம் போட்டு கூட்டுக்கு ஏதோ ஒரு உறவுபோல சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பச்சடி, ரசம், வடை. மூணு வருஷமா மாமியாரும் உங்கம்மா வீட்டு வழக்கமென்னன்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் சொல்லிட்டே இருக்கேன். மறைமுகமா அதெல்லாம் மறந்துரு. இனி இதான் பொங்கல் மெனுன்னு சொல்றா மாதிரியே இருக்கு.

காலைல 4 மணிக்கே எந்திரிச்சு காலைக்குள்ள சமையல முடிச்சு, பொங்கப் பானைல பாலோடு அரிசி, பருப்பு, வெல்லம் போட்டு பொங்கும்போது குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல்ன்னு சவுண்டு விடறது வழக்கம். திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. கீழே ஒரு நியூஸ்பேப்பர பரத்தி வச்சு அதுல சக்கைய சேமிச்சு??!! பின்னால கொளுத்தி அதுல பிஞ்சு மக்காச்சோளத்த வாட்டி திம்பது வழக்கம். இது க.முல. க.பில பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அதை குப்பைத்தொட்டியில போடும்போது, இப்படி நடந்துகொள்வது, நம்ம மரியாதைய காப்பாத்திக்கவா? இல்ல அவங்களுக்கு தர்ற மரியாதையா? இல்ல நல்ல பொண்ணு இமேஜான்னு தெரியல. என் இயல்பு தொலைவதெதனால்ன்னும் தெரியல. இந்த தடவை தை மாசம் மதியம் தான் பொறந்ததால ஆற அமர மாமியாரோட அரட்டை அடிச்சுகிட்டே பொறுமையா சமையல் முடிச்சு பொங்கல் பொங்கி சாப்பிட்டப்போது மனி சாயந்திரம் 4.30. எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. மறுநாள் காணும் பொங்கல்.

பொங்கலன்று பண்ண சர்க்கரைப் பொங்கல், சாம்பார், பொரியல், கூட்டு, சாதம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து தனியா வச்சிருவாங்க. இதுல சாம்பார், பொரியல், கூட்டு எல்லாத்தையும் போட்டு ஒன்னா கொதிக்க வெச்சு எரிச்ச கூட்டு ஆக்கிடுவாங்க (சாம்பார மட்டும் ரிப்பேர் பண்னி நைட் சாப்பிடற மேட்டர் ஒன்னு இருக்கு. அப்புறமா வேற பதிவுல அதப் பத்தின ரெசிபி தர்றேன்). அப்புறம் வெறும் சாதத்தில மஞ்சள் தூள், குங்குமம் போட்டு பிசைஞ்சு கலர் கலரா சாதம் பண்ணிப்பாங்க. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும். க.முல காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாவில் வசித்த வீடுகளில் தோட்டமிருந்தது. அதனால தோட்டதிலேயே கோலம் போட்டு (நான் இப்பவும் வேடிக்கப் பார்த்து) மஞ்சள் கொத்தின் இலைய பரப்பி வச்சு கணு வைக்கனும். முதல்ல சர்க்கரைப் பொங்கல். அப்புறம் மஞ்சள் சாதம். அப்புறம் சிகப்பு சாதம். எரிச்ச கூட்டு. இப்படி எல்லாத்தையும் வரிசையா, அழகா "காக்கா பிடி வெச்சேன். கணுப் பிடி வெச்சேன். காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்"ன்னு சொல்லிக்கிட்டே வைக்கனும் (சத்தியமா ஏன்னு தெரியாது). அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). முந்தின நாள் வாங்கின மஞ்சள் கிழங்கை பெரியவங்க கிட்ட (இதுவும் லேடிஸ் ஒன்லி. கல்யாணமானவங்கன்னா வூட்டுக்காரர் செய்யலாம்) கொடுத்து நெத்தில, கன்னத்துல எல்லாம் தேய்க்க சொல்லி கால்ல விழுனும் (நோ. காசு இப்ப தரமாட்டாங்க). அப்பால குளிச்சிட்டு வந்து மறுபடியும் கால்ல விழுந்தா துட்டு மாமே. துட்டு. "என்னா மாமா. ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வெறும் 100 ரூபாயா தர்றது"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்டியல ரொப்பிடுவோம். ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த வருஷம் கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய், ஒரு டிசைனர் சல்வாரோட நின்னுடிச்சு. க.பில இந்த டெக்னிக் வொர்க் அவுட் பண்றதுக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. ஏதோ அவங்களா பார்த்து கொடுத்து தான் உண்டு.

க.மு பொங்கலுக்கும் க.பி பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் மாறாம நடந்துக்கிட்டே இருக்கு. அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்:)

October 14, 2009

தித்தி(க்கும்)த்த தீபாவளி

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.

வயது ஏற ஏற பண்டிகைகளிம் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)

Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.

என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.

தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(

தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)

September 17, 2009

ஓரம் போ..

நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள், உயரம் கம்மியான இரண்டு சக்கர சைக்கிள், லெக் ஸ்கூட்டர் என ஜூனியரின் வாகனங்கள் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கின்றன அவன் வளர்ச்சியை போல். எனக்கு நடைவண்டி ஓட்டிய ஞாபகம் இல்லை. தம்பியைப் பின்னாடி உட்காரவைத்துக்கொண்டு மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது நினைவிருக்கிறது. அப்புறம் கொஞ்சம் உயரம் கம்மியான, இரண்டு பக்கமும் பேலன்ஸுக்கு வீல் இருக்கும் வாடகை சைக்கிள் ஓட்டியதும் நினைவிருக்கிறது. நான் முதன் முதல் சைக்கிள் கற்றுக்கொண்டது காஞ்சிபுரத்தில் இருந்தபோது. "எப்பதான் பெரிய சைக்கிள் கத்துக்க போற?" என மாமா பெண், மாடி வீட்டு ஷீலாவின் சைக்கிளை கடன் வாங்கி ஒட்டக் கற்றுத்தருகிறேன் என முதுகில் மாத்திக்கொண்டிருந்தாள். ஹூம் அவளுக்கு என்ன கோவமோ? அது வரை குரங்குப் பெடல் அடித்துக்கொண்டிருந்த நான் ஓரளவுக்கு ஓட்டக் கற்றுகொண்டேன். ஒட்டமட்டும்தான் கத்துக்கொடுத்தாளே தவிர ஏறவோ இறங்கவோ கற்றுக்கொடுக்கவில்லை. பிளாட்பார்மில் சைக்கிளை சாய்த்து நானே ஏறக்கற்றுக்கொண்டேன். இறங்குவது பெரும்பாடாக இருந்தது. நல்ல மொட்டை வெயிலில், புதிதாகப் போட்ட தார் ரோட்டில், வண்டியோடு விழுந்து, கை முட்டி கால் முட்டி எல்லாம் பேந்து, ஆயுதப் படை காவலர் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கப்புறம் பிராக்டீஸ்??!! பண்ணி பிரேக் போட்டவுடன் தொபுக் என கீழே குதிக்கும் அளவிற்கு வந்தேன்.

வாலாஜாவிற்கு குடிவந்தபிறகு சைக்கிள் உபயோகிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. எட்டாவது லீவில் அப்பா ஒரு லேடி பேர்ட் வாங்கித் தந்தார். அதுகூட ஹவுசிங் போர்டில் ஓட்ட மட்டுமே வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து NHஇல் ஓட்ட வேண்டியதிருந்தது. அதுவும் ரொம்ப விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் அம்மாக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை. மேத்ஸ் ட்யூஷன் முடித்து வர 8 மணி ஆகிவிடும். நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டே மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவோம். ஒரு நாள் முதல் முறையாக லாரியை ஒவர்டேக் பண்ணேன் (ஹி ஹி நின்றுக்கொண்டிருந்த லாரி என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்). அதைக்கூட லெப்ட் சைடில் பண்ணியதை KB கிளாஸ்மேட்ஸிடம் சொல்லி அவர்கள் கிண்டல் பண்ண ஒரே ரகளை. கொஞ்ச நாளிலேயே பெரிய ப்ரொபெஷனலாகி விட்டேன்.

பத்தாவது படிக்கும்போது ஸ்கூட்டர் பழக வேண்டுமென்ற ஆசை வந்தது. அப்பாவிடம் இருந்தது ராயல் என்பீஃல்ட். அதை தாங்கிப் பிடிப்பதை யோசிக்கும் தெம்புக்கூட இல்லை. அந்த வருடம் ஊருக்கு போனபோது பெரியம்மாவிடம் கெஞ்சி அண்ணாவை வண்டி ஓட்டக் கத்துகொடுக்க சம்மதம் வாங்கினேன். பெரியம்மாவோட கண்டிஷன் "குழந்தையை அடிக்காம, திட்டாம ஓட்ட சொல்லிக்கொடு. துளி கீறல் விழுந்தாலும் தொலைச்சுடுவேன்" என அண்ணாவை மிரட்டி அனுப்பிவைத்தார். தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று. அடுத்த லீவு எப்படா வரும் என காத்துக்கிடப்பேன். கள்ளக்குறிச்சி - சேலம் மெயின் ரோடில் பயிற்சி. ஒரு தடவை அண்ணாவிடம் கெஞ்சியே ஆத்தூர் வரை போனேன். சரியான கைவலி. ரிடர்ன் அண்ணா ஓட்டிக்கொண்டு வந்தார்.

எவ்வளவு நாள் தான் அண்ணாவை வைத்துக்கொண்டே ஓட்டிப் பழகுவது? தனியே ஓட்டத்தீர்மானித்து வண்டியை எடுத்தேன். எல்லாருக்கும் சிங்கிள்ஸ் ஈசியா பழகிரும். லோடு வச்சு ஓட்றது கஷ்டமா இருக்கும். என் நிலைமை டாப்ஸி டர்வி. தனியே ஓட்டுவது பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இங்கேயும் சட்டென்று பிரேக் அடித்து பேலன்ஸ் செய்வது பெரும்பாடாய் இருந்தது. எலக்ட்ரிக் கம்பம், குப்பைத் தொட்டி இவையெல்லாம் தான் என் பார்க்கிங் ஸ்பாட். வண்டியைப் போட்டுவிட்டு சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். திட்டிக்கொண்டே அண்ணா போய் வண்டியை எடுத்துவருவார். ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
"அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"
அவ என்னடா பண்ணுவா பாவம். நீ ஒழுங்கா இறங்க சொல்லிக்கொடுக்கலை என்ற பாட்டோடு என்னை அழவைத்ததற்காக எக்ஸ்ட்ராவாக திட்டுக் கிடைத்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் ஸ்கூட்டி வாங்கித் தருகிறேன் என்றார் அப்பா. நண்பனின் டிவிஎஸ் 50 ஓட்டி மணலில் ஸ்கிட்டாகி கீழே விழுந்து முதுகில் அடி. லிகமண்ட் டேர் என ஒரு மாசம் வீட்டில் படுக்க வைத்து விட்டார்கள். அதுக்கப்புறம் வண்டி என்றாலே துரத்தி துரத்தி அடிதான்.

பல வருடங்கள் கழித்து டூ வீலர் நமக்கு ராசியில்லை என என் பார்வையை கார் பக்கம் திருப்பினேன். அப்பாவிடம் கேட்டதுக்கு எரித்து விடுவது போல் பார்த்தார். ஒருவழியாய் அப்பாவை சம்மதிக்க வைத்து நான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டபோது ஜூனியர் பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. இஸ்மாயில் அங்கிள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி வண்டியைக் கரெக்ட் பண்ணி கற்றுக்கொண்டேன். "60க்கு மேல போகாத பாப்பா. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு." என அங்கிள் அடிக்கடி கூறுவார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் "பிரேக் போடு பாப்பா" என அவர் கத்திக்கொண்டிருந்த போது "இருங்க அங்கிள் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்" என அங்கிளை டெரராக்கியிருக்கேன். இது வேலைக்காவது என நினைத்தவர், ட்ரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அங்கே என்னை விட டெரராய் நிறைய பேர். "ஹால்ஃப் கிளட்ச் கொடுப்பா" என இண்ஸ்டரக்டர் சொன்னால் "அது எங்க சார் இருக்கு" என்றான் இன்னொருவன். ஒரு வழியாய் நானும் லைசென்ஸ் எடுத்துட்டேன்.

வண்டி இல்லை. ஆனால் LMV லைசென்ஸ் வைத்துக்கொண்டு நான் விடும் அலப்பறை தாங்காமல் ரகு வண்டி வாங்கித் தர சம்மதித்துள்ளார். ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என் சாய்ஸ். அவர் கைனடிக் ஹோண்டாவில் நிற்கிறார். இன்னும் பைனலைஸ் பண்ணவில்லை. எதுவானாலும் டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்:)

June 29, 2009

தருமன் மாமா

சிலசமயங்களில் ஒருவருடைய சரித்திரத்தை சொன்னால கூட அவரைப் பார்த்ததாய் நினைவிருக்காது. வெகுசிலரை நினைவுப்படுத்த ஒரிரு வார்த்தைகளை போதும். சமீபத்தில் ஒரு பதிவால் சடாரென நினைவுக்கு வந்தவர் தருமன் மாமா. பதினெட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்றாலும் துளிக்கூட மங்காமல் புதிதாய் ப்ரிண்ட் போட்ட போட்டோ ஆல்பம் போல் தெளிவாய் நினைவுக்கு வருகின்றன. தருமன் மாமா பேசியவை, அவரைப் பற்றி அப்பாவும் ரவி அங்கிளும் சொன்னவை என எல்லாம் ஞாபகமிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தோம். நியூ ஹவுஸிங் போர்டில் குடியிருந்தபோது தான் தர்மன் மாமாவைத் தெரியும். அப்பாவிடம் பணிபுரிந்தவர். ஐந்தே முக்கால் அடி உயரம், கறுப்பு நிறம் எப்பவுமே (அ) நான் பார்க்கும் போதெல்லாம் சந்தனக் கலர் அல்லது லைட் வுட் கலரில் சஃபாரியும், கறுப்பு ஷூவும், தங்கக் கலரில் வாட்சும் அணிந்திருப்பார். அப்பாவிடம் வேலை செய்தவர்களில் பாதிப் பேரை மாமா என்றுதான் அழைப்போம். ரவி அங்கிள் மட்டும் விதிவிலக்கு. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு ஸார் என்றழைக்க பழகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்கு மேல் மாமாவுக்கு நைட் ட்யூட்டி வரும். சாயந்திரம் மாமா வீட்டுக்கு வந்தாலே தெரியும் அன்று மாமாவுக்கு நைட் ட்யூட்டியென. வரும்போது முகம் கொள்ளா சிரிப்பும் கைக்கொள்ளா இனிப்புமாக தான் உள்ளே வருவார். மாமா வாங்கி வரும் இனிப்புகள் ரேவல்கானின் பான்பசந்த் சாக்லேட்டும், மேங்கோ பைட் சாக்லேட்டும். ஒன்னு ரெண்டு இல்ல. ஒரு பாக்கெட் வாங்கிட்டு வருவார். அது எப்படின்னு தெரியாது. கரெக்டா அந்தக் கவரிலுள்ள சாக்லேட்டுகள் முடியும் தருவாயில் மாமாவிடமிருந்து அடுத்த பாக்கெட் வந்துவிடும் (இத்தனைக்கும் ஒரு நாளைக்கு இவ்ளோதான் என்ற அம்மாவின் கணக்கை எப்பவாவது தான் ஃபாலோ பண்ணுவோம். அம்மாக்குத் தெரிந்து ஒன்னு, தெரியாம பல என்றுதான் போய்க்கொண்டிருந்தது). மாமாவின் அந்த பளீர் சிரிப்பும் "என்ன பாப்பா நல்லா படிக்கிறயா?" என்ற சிரிப்பினூடே விசாரிக்கும் அக்கறையும் இன்னும் நினைவிலிருக்கிறது.

"உனக்கெதுக்குயா இந்த தேவையில்லாத வேலை?" என ஆரம்பிக்கும் அட்வைஸ்களை அடிக்கடி ரவி அங்கிள் தர்மன் மாமாவிடம் சொல்லக் கேட்டிருக்கேன். அப்போதிருந்த வயதில் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என புரிந்துகொள்ள இயலவில்லை. பின்னர் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் மாமா கொஞ்சம் விளம்பரப் பிரியர் எனத் தெரிந்தது. வேலையை சரியாக செய்துவிடுவார். அடிக்கடி மாமா செய்திதாள்களைக் கொண்டு வந்து மூலையில் அவர் நிற்கும் போட்டோவை காமிப்பார். "பாரு பாப்பா. மாமா போட்டோ பேப்பர்ல வந்திருக்கு". கடைசியாக மாமா வந்துபோனதிலிருந்து இரு வாரம் கழித்து அம்மா தான் எழுப்பி சொன்னார்கள். "வித்யா. தர்மன் மாமா செத்துப்போய்ட்டார்டி. பேப்பர்ல அவர் போட்டோ வந்திருக்குப் பார்" என்று. தனியாக இறந்து போனவர்கள் பட்டியலிலும், பிணக்குவியலுக்கிடையிலும் என இரண்டு போட்டோவாக வந்தது. அப்போதைக்கு இறப்பின் வலியை நான் உணர்ந்திருக்கவில்லை. அந்தநொடி என் கவலையெல்லாம் இனிமே யார் பான்பசந்த் சாக்லேட் வாங்கித்தருவார்கள் என்பதுதான். சிறிது சிறிதாக தெளிவு வர வர தர்மன் மாமாவின் மறைவுக்கு ரொம்ப வருந்தினேன். அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.

பான்பசந்த் சாக்லேட்டுகள் வருவதேயில்லையென்றாலும், உங்கள் நினைவுகள் மட்டும் வரத்தவறுவதில்லை மாமா. உங்களை ரொம்ப மிஸ் செய்தேன். ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது.

June 1, 2009

ஆடாத ஆட்டமெல்லாம்

ஆகாயநதி தொடர்பதிவுக்கு (சங்கிலிப்பதிவு என்பதே சரி என்று யாரோ எழுதிப் படித்த ஞாபகம்) அழைத்திருக்கிறார். என்னையும் மதிச்சு??!! கூப்பிட்டதால இதோ நானும் வத்தி சுத்தறேன்.

என்னுடைய பள்ளிப்பருவங்கள் ரெண்டு ஊர்களில் கழிந்தது. ஆறாம் வகுப்பு வரை காஞ்சிபுரம். அதற்குப் பின் முழுவதும் வாலாஜாப்பேட்டை. இரண்டு இடங்களிலும் எனக்கு அருமையான நண்பர்கள். காஞ்சிபுரத்தில் சரியாக கலெக்டர் ஆபிஸ் பின்னால் இருக்கும் ஹவுசிங் போர்ட் குடியிருப்பு. சித்திரை வருடப் பிறப்புக்கு முன்னமே முழுஆண்டுத் தேர்வை முடித்துவிடுவார்கள். 3 சக்கர சைக்கிளில் இருந்து இரண்டு சக்கர சைக்கிளுக்கு பிரமோட் ஆனது மே மாதத்தில் தான். என் மாமா பொண்ணு தான் ட்ரெய்னர். ஒரளவுக்கு கற்றுக்கொண்டதும் தனியே ரொம்ப தூரம் போய் திருப்பத் தெரியாமல் புதிதாய் போட்ட தார் ரோட்டில் விழுந்து வாரியது இன்னும் நினைவிலிருக்கிறது. கை கால் முட்டிகள் பேந்து சரியான அடி. கலெக்டர் ஆபிஸ் அருகிலிருக்கும் ஆயுதப் படை போலீஸ் பயிற்சி நிலையத்திலிருந்த அங்கிள் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்.

எல்லா ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும். காலாண்டு, அரையாண்டு என்றாலும் பரவாயில்லை. முழு ஆண்டுத் தேர்வுக்கு பயிற்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்த வகுப்பு போகும்போது இது எதற்கு. லீவு விட்டவுடன் கர்ம சிரத்தையாக இரண்டே நாட்களில் இதை எழுதி முடித்துவிட்டு மூலையில் போட்டால், பள்ளி திறப்பதற்கு முதல் நாள் தான் கவனிக்கப்படும். விடுமுறை தினங்களில் பாட்டு கிளாஸ், ஹிந்தி டியூஷன் ஆகியவை கொஞ்சம் டிலே செய்யப்படும். வழக்கமாக விடியற்காலையில் ஆரம்பிக்கப்படும் வகுப்புகள் விடுமுறை தினங்களில் மாலைக்கு ஷிப்ட் செய்யப்படும். 2 மணியிலிருந்து 5 மணி வரை வகுப்புகள். அதற்குப்பிறகு ஆரம்பிக்கும் ஆட்டம் படுசுவாரசியம். அழகான நாட்கள் அவை.

வாலாஜாப்பேட்டை வந்தபிறகு மெல்ல மெல்ல விளையாட்டுகள் குறைந்தது (Bloody Society??!!). கேரம் போர்ட்டே கதியென கிடந்த நாட்களும், த்ரோ பால் பிராக்டிஸ் செய்த நாட்களும் இன்றும் நினைவிருக்கின்றன. விளையாடுவது குறைந்ததும் கொஞ்சமே கொஞ்சமாய் புத்தகங்கள் அறிமுகமாகின. அதற்குள் அடுத்த கட்டமான பொதுத்தேர்வு, எண்டரன்ஸ் கோச்சிங்க என விளையாட்டு என்பதே மறந்துவிட்டது. கல்லூரி நாட்களில் மே மாதங்கள் நண்பர்கள் வீட்டில் அரட்டைக் கச்சேரி, சினிமா, சீட்டுக்கட்டு, எப்பவாச்சும் படிப்பு என தான் கழிந்தது. வேலையில் சேர்ந்த பின் கேக்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைக்கூட அலுவலகம் வரவழைத்த டேமஜர் கிட்ட சம்மர் வெகேஷன் என வாயத் தொறக்கமுடியுமா? அதையும் மீறி ஒரு மே மாதத்தில் ஊட்டி ட்ரிப் போனோம். லவ்லி டேஸ்:)

இப்போ ஜூனியரால எல்லா நாளும் விடுமுறை நாள் போல சந்தோஷமாகக் கழித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தி நான்கு மணி நேரமும் எனக்கு வேலை வைக்கிறான். வளர வளர சேட்டைகளும் ஜாஸ்தியாகிறது (ஆஹா பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சு:))

இனி வரும் வருடங்களும் சந்தோஷமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில்:)

March 2, 2009

கருநாகமும் பதிமூனாம் நம்பர் வீடும்

1996ஆம் வருடம் என்று நினைக்கிறேன். வாலாஜாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பா பணி நிமித்தமாக அரக்கோணத்திலிருந்தார். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் சன் டிவியில் நகைச்சுவை வாரம், காதல் வாரம், கண்றாவி வாரம் என திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு படங்கள் ஒளிப்பரப்புவார்கள். என் பெரியம்மாவின் இரண்டாவது பையன் எங்கள் வீட்டில் தங்கி லெதர் டெக்னாலஜி படித்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது சன் டிவியில் திகில் வாரம். அன்று 13ஆம் நம்பர் வீடு படம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அண்ணாவும் நானும் அந்தப் படத்தைப் பார்ப்பதென்று முடிவு செய்தோம். அம்மாவும் தம்பியும் உறங்க போயாச்சு (வீட்டில் எல்லோரும் 8.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம்).

நான் வீட்டுப்பாடங்களை செய்துக்கொண்டிருக்க அண்ணா தோல் சாம்பிள்களை ஒழுங்கப்படுத்திக்கொண்டிருந்தார். படம் ஆரம்பித்து ஒடிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டு டீவியை ஹாலின் மூலையில் வைத்திருந்தோம். டீவியின் ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கண்ணாடி ஜன்னலும் (மூன்றும் முக்கோண வடிவிலிருக்கும். முக்கோணத்தின் base டீவி). எதேச்சயாக ஜன்னலைப் பார்த்த நான் கருப்பாக ஏதோ இருக்கவும் கேபிள் ஒயரென நினைத்தேன். கேபிள் ஒயர் வாசல் அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக தானே வருமென நினைத்து அம்மா கரித்துணியை (துடைக்க உபயோகப்படுத்தும் துணி) எங்க போட்ருக்கா பார் என திட்டிக்கொண்டே கையிலிருந்த பென்சிலால் அதை எடுக்கப் போனவள் அப்படியே ஷாக்காயிட்டேன். துணி நகர்ந்து கொண்டிருந்தது.

4 அடி நீளமுள்ள ஜன்னல் கம்பியில் மொத்த உடலையும் சுற்றிக்கொண்டு இருந்தது. மெதுவாக அண்ணாவிடம் "அண்ணா பாம்புன்னா" என்றேன்.

"ஏய் இந்தப் படத்துல பாம்பெல்லாம் வராதுடீ. நான் ஏற்கனவே படத்த பார்த்திருக்கேன். பயமா இருந்துதுன்னா நீ போய் படுத்துக்கோ"

"அண்ணா ஜன்னல் கம்பில பாம்பு சுத்திண்டிருக்குண்ணா"

"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடீ பாம்பு வரும்"

"அண்ணா நீங்க இங்க வந்து பாருங்க"

அண்ணா வந்து பார்த்துவிட்டு "நீ இங்கயே நில்லு. நான் போய் சித்திய எழுப்பி சொல்றேன்" (என்னா ஒரு வில்லத்தனம்)

"சித்தி ஹால் ஜன்னல்ல பாம்பு இருக்கு சித்தி"

"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடா பாம்பு வரும்?" (எனக்கு ரொம்ப சந்தோஷம்)

"இல்ல சித்தி நிஜமாத்தான். நீங்க வந்து பாருங்க"

அம்மா வந்து பார்த்துட்டு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் அண்ணாவும் நானும் நீ போடுற சத்தத்துல பாம்பு டென்ஷனாகி நம்மள போடப்போறது வாய மூடிட்டு இருன்னு அம்மாவ திட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிச்சோம் (போர்ட் மீட்டிங்க் போடற டைமா இது?)

நானும் அண்ணாவும் பாம்புக்கு காவலிருக்க அம்மா மத்த அறைகளை பூட்டினார். பின்னர் தம்பிய நாலு சாத்து சாத்தி (அவன் சரியான கும்பகர்ணன்) வெளியே உட்கார வைத்தார். அடுத்து பாம்ப எப்படி அடிக்கறதுன்னு விவாதம் (டெக்னிகல் டிஸ்கஷன்). பாம்படிக்க தோதான ஆயுதம் எங்களிடம் இல்லாததால் (resource deficiency) அருகில் குடியிருந்த சர்வேயர் அங்கிளிடம் ஆயுத உதவி கோரப்பட்டது. அங்கிளின் குடும்பத்தில் அனைவருமே ரொம்ப நல்லவர்கள். ரொம்ப helpful. அங்கிளும் அவர் பசங்களும் இரும்புக் கழியோடு வந்து சேர பாம்புக்கு பாடை கட்ட வியூகம் தயாரானது. என்ன பாம்பு என்று சரியாகத் தெரியவில்லை. கருப்பும் கோதுமையும் கலந்த நிறம். கண்டிப்பாக விஷப் பாம்புதான் என எனக்குத் தோன்றியது. உடல் பருமனும், பாம்பின் நீளமும் அப்படி (சயின்ஸில் நான் சூரப்புலி). இத்தனை களேபரத்திலயும் பாம்பு மோட்டாரில் காயில் சுற்றுவதை போல் (அட நாங்களும் டெக்னிக்கலா எழுதுவோம்ல) உடம்பை முறுக்கிக்கொண்டிருந்தது.

பாம்பு அடிக்கும்போது ஜன்னல் கண்ணாடி உடைஞ்சிட்டா என்ன பண்றதுன்னு அங்கிள் அம்மாவ கேட்டார். வீடே இடிஞ்சாலும் பரவால்ல சார் என்றார் அம்மா. இரும்பு கம்பியைக்கொண்டு பாம்பின் தலையை சுவற்றோடு அழுத்துவதென்றும், மற்ற இரண்டு பேர் அதை அடிப்பது என்றும் முடிவானது. இதனிடையில் எதிர்த்த வீட்டு மாமி "விளக்கு வெச்சப்புறம் பாம்ப அடிக்கறது பாவம். ஒருவேளை நல்லதா இருந்துட்டா இன்னும் மோசம்" என்றார். அவ்ளோதான் அம்மாக்கு இன்னும் பயம் ஜாஸ்தியாகிவிட்டது. "அதுக்குன்னு விடியற வரைக்கும் அப்படியேவா பார்த்துண்டிருக்க முடியும். நாளைக்கு உங்காத்துக்கு வந்துடுத்துன்னா கஷ்டம் மாமி" என்றார் அண்ணா.ஒருவழியா நீண்ட விவாதத்திற்க்குப் பிறகு பாம்படிக்க தாய்குலம் சம்மதம் வழங்கியது. பாம்படிக்கறத நானும் பார்ப்பேன் என அடம்பிடித்து அங்கேயே நின்றுகொண்டேன். அங்கிள் அதன் தலையை குறிபார்த்து இரும்பு கம்பியால் சுவற்றோடு சேர்ந்து நசுக்கினார். கிணற்றின் ராட்டினத்திலிருந்து கயிறு பிரிவதுபோல பாம்பு சரசரவென்று ஜன்னல் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. அங்கிள் விடாமல் இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.

பின்னர் ஆராய்ந்ததும் தெரிந்தது கருநாகம்/ராஜ நாகம் என்று. The most deadly snake. கிட்டத்தட்ட ஒரு 3.5 அடி நீளமிருந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன். பார்மலின்ல போட்டு லேபில் டிஸ்ப்ளேக்கு வைக்கலாம் என்று. ம்ஹூம். ஒருத்தர் சொன்னார். பாம்பிற்க்கு வாலில் இன்னொரு உயிர் இருக்கும். கொஞ்ச நேரம் விட்டால் அதுக்கு திரும்ப உயிர் வந்துடும் (எங்கேருந்துடா இப்படிப்பட்ட கான்செப்ட் புடிக்கிறீங்க). ஒருவழியா கொஞ்சம் மண்ணென்னைய் ஊற்றி வைக்கோல் படுக்கையில் வைத்து அண்ணாவே கொள்ளி போட்டார். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அம்மா கர்ம சிரத்தையாய் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கோவிலுக்கு சென்று புற்றுக்கு பாலூத்தி பாவத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் கொண்டிருந்தார்.

இப்போக்கூட அண்ணா எதுக்காவது என்னை கிண்டல் செஞ்சால் சொல்லுவேன் "ஹூம் பாம்புக்கிட்டருந்து உன்ன காப்பாத்தினேன் பார். எனக்கு இது தேவைதான்". அண்ணா கொஞ்ச நேரத்திற்க்கு கப்சிப்:)

February 18, 2009

ஆய்வகமும் ஆங்கிலமும்

பதிவுலகத்திற்க்கும் மொக்கைப் பதிவுகளுக்கும் (அதாவது நான் எழுதறது மாதிரியான பதிவுகளுக்கு) உள்ள உறவு போன்றது பொறியியல் படிப்புக்கும் ஆய்வகத்துக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். நான் படிச்சது நிகர்நிலை பல்கலைக்க(ல)ழகம். அதாங்க deemed university. ஆய்வகங்களைப் பொறுத்த மட்டும் பாவம் பண்ண டிபார்ட்மெண்ட்ஸ் மூணு இருக்கு. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில். இந்த மூணு டிபார்ட்மெண்ட் தவிர மத்த டிபார்ட்மெண்ட் பசங்கெல்லாம் நல்லா ஏசி ரூம்ல உக்காந்து பெரிய ஆராய்ச்சி பண்ற மாதிரி "Hello World"ன்னு பிரிண்ட் பண்ற புரோகிராம் அடிப்பானுங்க:( ரொம்பவே பாவப்பட்ட ஜென்மங்க சிவில் டிபார்ட்மெண்ட் பசங்க தான். பாலு மகேந்திரா கேமரா கணக்கா ஒரு ஸ்டேண்ட வச்சிகிட்டு உச்சி வெயில்ல நேர்த்தி கடன் தீர்க்கற மாதிரி நடுரோட்டில நிந்துகிட்டிருப்பானுங்க. நான் நாலு வருஷம் பெஞ்ச தேச்சது EEE டிபார்ட்மெண்ட்ல.


பொதுவா லெக்சரர்ஸ் விட லேப் அட்டெண்டர்ஸ்க்கு தான் மரியாதை ஜாஸ்தியா கிடைக்கும். அவரு தான் பூசாரி மாதிரி. அவர் மனசு வைச்சாதான் internal marks என்ற வரம் விரிவுரையாளர் என்ற கடவுள் மூலமாய் கிடைக்கப் பெறும். Practicalsல அவங்க தயவில்லாம ஒன்னும் பண்ண முடியாது. ஆனா முக்கால்வாசி பேர் ரொம்ப பிரெண்டிலியா பழகுவாங்க. கேண்டீன்ல சாப்பிடும்போது பார்த்தா கூப்பிட்டு கூட உக்கார வைச்சு டீ வாங்கித் தருவாங்க:) சில பேர் நேரெதிர். எப்பவுமே கடுகடுன்னு தான் இருப்பாங்க. விரிவுரையாளர்களை விட இவங்களுக்கு subject knowledge ரொம்ப ஜாஸ்தி. இவங்க எல்லோருக்கும் (atleast 80%) இருக்கும் ஒரே பிரச்சனை ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாததுதான். Infact சில விரிவுரையாளர்களை விட இவங்க நல்லாவே ஆங்கிலம் பேசுவாங்க. எங்க காலேஜ்ல 40% ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவங்க. அதனால எல்லா staffம் இங்கீலிஷ்ல தான் பேசனும். இல்லன்னா பசங்க கலாட்டா பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.

சில நேரங்களில் விரிவுரையாளர்கள்/லேப் அசிஸ்டெண்டுகளின் பேச்சு சரி காமெடியா இருக்கும். மார்க்குக்கு பயந்து கம்முன்னு இருப்போம். உதாரணத்துக்கு,

#முதல் வருஷத்துல எல்லா டிபார்ட்மெண்ட் பசங்களும் workshop கட்டாயம். இரும்பு அறுத்து L joint, V joint பண்ணனும். அதுக்காக இரும்ப ஃபைல் (filing) பண்ணிட்டிருந்தபோது ஒரு பையன் வேகமா தேச்சிட்டிருந்தத பார்த்த lab incharge சொன்னார் "Dont do filefilefilefilefile. Do file file file". அவர் சொல்ல வந்த மேட்டர் வேகமா பண்ணாத. மெதுவா பண்ணு. அந்த வருஷம் முழுக்க இத சொல்லி சொல்லி சிரிப்போம்.

#இரண்டாம் ஆண்டு டிபார்ட்மெண்டில் terror என சீனியர்களால் அடையாளம் காணப்பட்ட lecturers எங்களுக்கு காமெடியன்களாகத்தான் தெரிந்தார்கள். அதில் Loveking என்ற ஒருவர் பண்ணும் லூட்டிக்கு அளவேயில்லை. (Electrical) Machines lab incharge அவர். அவருக்கு "ச" வராது. முதல் நாள் lab instructions என அவர் எங்களிடம் கூறியது "Nobody should shit on the lab". குழப்பத்திலிருந்த எங்களுக்கு பிறகுதான் புரிந்தது he actually meant "Nobody should sit on the lab". நாலு வருஷம் படிப்பு முடிந்தும் கூட இப்போது நண்பர்கள் சந்தித்த போதும் இதை நினைவுகூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம். கிளாஸ் நடத்திக்கிட்டே இருக்கும்போது தீடிர்னு ஜன்னல் வழியா காறித்துப்புவார்???!!. அதே மாதிரி கிளாஸ்க்கு வந்ததும் board நல்லா க்ளீன் பண்ணுவார். அத துடைச்சிவச்சிருந்தாலும் மனுசன் உடமாட்டார். அவர் தேய்க்கறதுல டஸ்டர்க்கு ரத்தமே வந்துடும்:)

# அடுத்தது cowgoya மேடம். இவங்க எங்களுக்கு எந்த சப்ஜெக்ட்டும் எடுத்ததில்ல (நல்லவேளை தப்பிச்சோம்). மேடம் மெட்ராஸ் பாஷைல வூடு கட்டுவாங்க. எதாவது தவறு செய்துவிட்டால் அய்ய என்று ஆரம்பித்து இவர் கொடுக்கும் அர்ச்சனை தாங்கமுடியாது. Practical exam தாமதமாக ஆரம்பித்ததால் viva டிலே ஆகிவிட்டது. சாப்பிட்டு வந்துவிடலாம் என நினைத்தபோது யாரும் எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சரியான பசியோடு மேடம் முன்னாடி போய் உட்கார்ந்தேன். டேபிள் மேல ஒரு கவர் முழுக்க சமோசாக்கள் (எங்க கேண்டீன் சமோசா டாப்பா இருக்கும்). சமோசாவை வாயிலே அதக்கிக்கொண்டு "watish omfa?" என்றார்.
"Pardon me. I dont get u?"
"Dummy omfa?'
"Maam"
(டீ குடிச்சிட்டு)"U girl. U have no ears wat? Tell me om's law."
இப்படியா சமோசாவால செவிட்டு பட்டம் வாங்கி எப்படியோ கப் வாங்காம பாஸ் ஆயாச்சு.

இன்னும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய நடந்தது. அதெல்லாம் அப்பாலிக்கா சொல்றேன். வர்ட்டா.

January 23, 2009

பாட்டீஈஈஈஈ

ஜூனியர் தன் பாட்டியோடு பயங்கர அட்டாச்டு. பாட்டி தான் வேணும் எல்லாத்துக்கும். அம்மாவும் பேரன் மேல பாசத்தை பொழியறாங்க. நான் எங்கம்மா வழி தாத்தா பாட்டிய பார்த்தது கூட இல்ல. என் அம்மா வழி தாத்தா எங்கம்மா கைக்குழந்தையா இருக்கும்போதே தவறிட்டாங்க. பாட்டி அம்மா 8ஆவது படிக்கும்போது போய்ட்டாங்க. அப்பா வழி தாத்தா பாட்டி எனக்கு நினைவு தெரிந்து என்னை அரவணைத்த ஞாபகமில்லை. தாத்தாவுக்கு என் தம்பிய ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவன் கருப்பு (நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:)). இப்போ பாட்டி மட்டும் தான் இருக்காங்க. 89 வயசாகுது அவங்களுக்கு. வரிசையாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பரிகொடுத்தவங்க. சில குடும்ப அரசியல்??!!! காரணமாக பாட்டியின் பாசம் முழுவதும் டைவர்ட் செய்யப்பட்டது. வயசாகிட்டாலே வர்ற பிராப்ளம் அவங்களுக்கும் ஆரம்பிச்சிடிச்சு. என்ன பேசுறோம்னே தெரியமாட்டேங்குது. இப்போன்னில்ல ஏழெட்டு வருஷமாவே பாட்டி வாயத்திறந்தாலே அலறுவோம். சாம்பிளுக்கு


* வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித் தோழனிடம் நீ என்ன ஜாதின்னு கேட்டுட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தேன். அப்பா பாட்டியிடம் அப்படியெல்லாம் கேக்காதேம்மா என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?"


* பாட்டிக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப ஜாஸ்தி. இப்போகூட டிவில மேட்ச் பார்த்தா பிளேயர்ஸ் டிரஸ் கலர வெச்சே எந்த நாடுன்னு சொல்லிடுவாங்க. டெண்டுல்கர் மேல பாட்டிக்கு தனி பாசம். டெண்டுல்கர் சிக்ஸ் அடிச்சுருப்பார். பாட்டி கேப்பாங்க "டெண்டுல்கர் அவுட்டா??" அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.


* என் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். அவர் சொன்னதால் தான் நான் டாக்டருக்கு படிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது.


* எனக்கு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வருகிறேன். என்னிடம் வந்து 'சித்திரைல பையன் பிறந்திருக்கான். வீட்டு பின்னாடியிருந்த தென்னம்படல் வேற விழுந்திடுத்து, இதோட போய்ட்டா பரவாயில்ல. யாருக்காவது ஏதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது?" என்றார். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.


* நவம்பர் மாதம் நண்பனின் திருமணத்திற்காக நானும் அம்மாவும் ஊருக்கு சென்றிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலிருந்து கீழே வந்த பாட்டி அம்மாவிடம் "நீ போய்ட்டன்னா உன் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படும்" என்றார். மறுநாளே பேருந்தில் படிக்கட்டிலிருந்து அம்மா கீழே விழுந்தார்.

* ஊருக்கு புறப்படும்போது பாட்டியிடம் காசு கொடுத்துவிட்டு, கிளம்புறேன் பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க என்றதுக்கு "பொம்மனாட்டிகள் தனியா போறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது" என்றார். திரும்பி வரும்போது கார் டயர் பஞ்சர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாய் வீடு வந்து சேர்ந்ந்தோம்.

* மூத்த மகனுக்கு பொண்ணு பிறந்திருந்த சந்தோஷத்திலிருந்த பெரியம்மாவிடம் "உன் மாட்டுப்பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிடுத்தா?" என கேட்கவும் பெரியம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

* வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு வந்த அம்மாவிடம் "சந்துருவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை நீ என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச?" என்றார். பத்து நிமிஷத்தில் அப்பாவிடமிருந்து போன். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை ஒரம் இருந்த மரத்தில் பார்க் செய்யப்பட்டது என. அம்மாவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இதுபோல ஏராளமான சம்பவங்கள். அவர் சொல்வதனால் தான் நடக்கிறது என்றில்லை. ஆனாலும் அந்த நிமிஷம் கோபம் வரத்தான் செய்கிறது. பின்னால் யோசித்துப்பார்க்கையில் தான் தெரிகிறது. வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. பாட்டி மூலம் நான் கற்ற ரெண்டு முக்கியமான விஷயம். 1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது.

December 5, 2008

கொள்கைகளும் சில காம்பரமைஸ்களும்

டிஸ்கி : இது அரசியல் பதிவல்ல.


அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.


சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும் இந்த கனகாம்பரம், டிசம்பர் பூ எல்லாம் பயங்கர அலர்ஜி. வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் கொஞ்சமே கொஞ்சமாய் மல்லி அல்லது முல்லை தலையில் குடியேறும். அதுகூட கொஞ்ச நேரம் தான். அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்டில் எனக்கு பயங்கர ஷாக். அங்க டிசம்பர் பூவை காசு கொடுத்து வாங்குவார்கள். என்கிட்ட மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்ப நான் பூ வைக்கிறதுலருந்து தப்பிக்க என் பையன தான் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறேன். "இல்லம்மா பூ வைச்சா அது கீழ உதிருதா. சஞ்சு எடுத்து வாயிலப் போட்டுக்கிறானேன்னு வைக்கறதேல்ல". ஆனாலும் ஒரு சின்ன துணுக்காவது கொடுத்து வைச்சுக்கோன்னு சொல்லும்போது மறுக்க முடியல.


அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு. அத்தை (அப்பாவின் அக்கா) வரும்போதெல்லாம் அம்மா என்கிட்ட கெஞ்சுவாங்க. வளையல் போட்டுக்கோ, கொலுசு போட்டுக்கோ, ஜிமிக்கி வெச்ச தோடு போட்டுக்கோன்னு. இல்லைன்னா பொண்ண வளர்த்துருக்கற லட்சணத்தப் பாருன்னு என்னதாண்டி சொல்லுவாங்க என்பாள். நீயேம்மா அடுத்தவங்களுக்கு பயந்து வாழற. உனக்குத் தெரியாத உன் வளர்ப்பைப்பற்றி என்று பேசி அவள் வாயடைப்பேன். அதே மாதிரி எனக்கு சின்ன வயசுல மூக்கு குத்தனும்னு சொன்னப்போ நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து எல்லாரும் கப்சிப். நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே என் மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குகுத்திடுமா என்று சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. எங்கம்மா வேற நான் சொன்னா கேக்கல இல்ல இப்ப என்ன பண்ணுவேன்னு வெறுப்பேத்தினாங்க. வேற வழியில்லாம் சின்னக்குழந்தைங்கல்லாம் நான் கத்தறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு மூக்கு குத்திட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் சபையில வச்சு மாமியார் எனக்கு வைர மூக்குத்தி குடுத்தாங்க. ஆனா நல்லவேளையா என்கிட்டருந்து வைர மூக்குத்தியும், மூக்குத்திகிட்டரூந்து நானும் தப்பிக்க ஏதுவாய் எனக்கு மூக்கு குத்தின இடம் செப்டிக் ஆகிடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சப்போது கொஞ்ச நாளைக்கு மூக்குத்திய கழட்டி வைங்கன்னுட்டாங்க. அப்ப கழட்டின மூக்குத்தி இரண்டரை வருஷமாய் பொட்டிக்குள்ளயே தூங்குது.


எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது. தெரிஞ்சிருந்தும் பெற்றோர் அவர்களுடைய மரியாதைக்கு எனக்கு எல்லாம் செஞ்சிக்கொடுத்தாங்க. அதுல பிரச்சன்னை என்னன்னா என் மாமியார் எதாவது ஒரு விசேஷம்னா போதும். எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கோ என்பார். எனக்கு நகைக்கடை மாடல் போல் தோற்றமளிப்பதில் இஷ்டமேகிடையாது. ஆனா மாமியார் தப்பா எடுத்துக்காத மாதிரியும் சொல்லனும். இந்த விஷயத்தில் என்னோட ஆபத்பாந்தவன் ரகுதான். அவருக்கும் தங்க நகைகள் மேல் ஈடுபாடு இல்லாததால் "உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.


எல்லா விதத்துலயும் ஒரளவுக்கு தப்பிச்சிக்கிட்ட என்னை கோழி அமுக்குறாபோல சிக்க வச்சது என்னோட வளைகாப்பன்னிக்குதான். குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கையிலயும் ரெண்டு டஜன் வளையல்களையும், தலையில் ஒரு ஏழெட்டு முழம் பூவையும் கட்டிட்டாங்க. அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(


என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது (இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டுன்னு கேக்கறீங்களா?? எல்லாம் ஒரு விளம்பரம் தான்).


ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).

October 29, 2008

ஐஸ் பாய்

போன பதிவோடத் தொடர்ச்சி தான் இதுவும். ஆனா இந்த தடவ வேற ஒரு ஆட்டம். ஆட்டத்துக்கு பேரு ஐஸ் பாய் (அதென்ன பாய்?? வெரி பேட்). இத ஐஸ் பார்ன்னும் (அந்த பார் இல்ல) சொல்லுவாங்க. இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அண்ணன்(பெரியம்மா பையன்). அப்பாவின் சொந்த ஊரில் போட்ட ஆட்டங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சரி lets play now:)


வழக்கம்போல் இந்த விளையாட்டையும் சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கணும். கேட்சர் கண்ணை மூடிக்கொண்டு 1,2,3 எண்ணனும். அதுக்குள்ள மத்தவங்க போய் ஒளிஞ்சிக்கனும். ஒளிந்துக்கொண்டிருக்கும் எல்லாரையும் ஐஸ் போடறது (கண்டுபிடிக்கறது) கேட்சரோட வேலை. அத்தனை பேரும் மாட்டினதுக்கு அப்புறம் முதல்ல அவுட் ஆனவன் கேட்சராகி கேமை கண்டினியூ செய்யனும். எல்லாரையும் அவுட் பண்றதுக்குள்ள யாராவது ஐஸ் போட்டுட்டாங்கன்னா அதே ஆள் திரும்பவும் கேமை பிரெஷ்ஷா ஆரம்பிக்கணும். இத ரெண்டு விதமா விளையாடலாம். ஒன்னு பொதுவா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஐஸ் போடுறதையும், ஐஸ் அடிக்கறதையும் அங்கேயே வச்சிக்கிறது. இந்த typeல ஐஸ் அடிக்கறது ரொம்ப கஷ்டம். இலவு காத்த கிளியா கேட்சர் அங்கேயே சுத்திகிட்டு இருப்பான். ரெண்டாவது வகை ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடறது. அதாவது ஆள் சிக்கினவுடனே ஐஸ் நம்பர் 1 வித்யா அப்படின்னு உரக்க டிக்ளேர் பண்ணிடனும்(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி). அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா கேட்சர் கேமை ரிப்பீட்டு பண்ணனும்.


நான் இந்த விளையாட்டை கத்துக்கிட்டதும், அதிகம் விளையாடினதும் என் அப்பாவின் சொந்த ஊரில் தான். என் அண்ணன்கள், அவர்களுடைய நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள பசங்கள் என மினிமம் 15 பேரோட தான் ஆட்டம் ஆரம்பமாகும். பெரியப்பாவின் வீடும் அதற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியும் தான் எங்க பிளே ஏரியா. பெரியப்பா வீட்டு மாடி ஐஸ் பார் விளையாடுறதுக்குன்னே கட்டினா மாதிரி அவ்ளே அம்சமா இருக்கும். மாடியில் உள்ள இரண்டு ரூம்களுக்கும் பொதுவாக ஒரு சுவர் தான். ஒரு ரூமில் இருந்து மற்றொன்றுக்கு ஈசியாகப் போலாம்.

எனக்குத் தெரிந்து ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடும் வகையைத்தான் அதிகம் விளையாடிருக்கேன். இந்த ஆட்டத்தில் நிறைய கேப்மாரித்தனங்களை செய்யலாம். கேட்சரை நம்பர் எண்ண சொல்லிட்டு ஒளிந்து கொள்ளும்போது அண்ணன்கள் இருவரும் போட்டிருக்கும் சட்டையை மாற்றிக்கொள்வார்கள். கேட்சர் அறிவாளி மூஞ்சியப் பார்க்காம சட்டையைப் பார்த்து ஐஸ் போடுவான். அப்போ ராங் (wrong) ஐஸ் அடிச்சு அவனையே திரும்பவும் புடிக்கவைச்சது உண்டு. சிலசமயம் ஒரு குறிப்பிட்ட ஆளை கட்டம்கட்டிடுவாங்க. சாபூத்ரிலருந்து அவன் தப்பிச்சிட்டான்னா முதல்ல அவன கேட்சரா ஆக்கறதுக்கான பிளான் அரங்கேறும். அதுக்காக வேணும்னே அவன ஐஸ் போடறவரைக்கும் வேற யாரப் பார்த்தாலும் கண்டுக்கமாட்டாங்க. அவன முதல் ஐஸா டிக்ளேர் பண்ணதுக்கப்புறம் மளமளன்னு மத்தவங்க எல்லாரும் வேணும்னே அவுட் ஆயிடுவாங்க. அதுக்குப்பறம் தான் கச்சேரியே. எதிரி?????!!!! கேட்சரானப்புறம் அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி, அழற வரைக்கும் ஐஸ் அடிச்சுகிட்டே இருப்போம். ஒரு ஸ்டேஜ்க்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம பார்ட்டி பாதி கேமிலேயே எஸ்ஸாகிடும். விளையாட ஆரம்பிச்சுட்டா சோறு தண்ணி திங்கலைங்கறதுக் கூட தெரியாம ஆட்டம் தொடரும். ஹூம். அதெல்லாம் ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.

சரி பதிவோட முக்கிய கட்டத்துக்கு வருவோம். எனக்கு இத ஒரு தொடர் பதிவா மாத்தனும்னு ஆசை. அதனால சில பேரை விளையாட கூப்பிடலாம்னு இருக்கேன். ஆடறதும் ஆடாததும் உங்க இஷ்டம். ரூல்ஸ் ரொம்ப சிம்பிள்.

1. சிறு வயதில் நீங்கள் விரும்பி ஆடின விளையாட்டு (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).
2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.

இவங்களையெல்லாம் ஆடறதுக்கு கூப்பிட்டுருக்கேன்.

1. அருண் அண்ணாத்தே
2. ஆபிசர் அக்கா
3. குசும்பரை

October 23, 2008

கல்லா மண்ணா

திருவான்மியூரில் இருந்து தாம்பரம் வந்து ஆறு மாசம் ஆக போகுது. வந்த புதிதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இப்போது தான் தாம்பரம் பழகியிருக்கிறது. இரண்டு இடங்களுக்கும் நிறையவே வித்தியாசம். திருவான்மியூரில் நான் இருந்த ஏரியா(காமராஜ் நகர்) மிகவும் அமைதியாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது கொஞ்சம் அரிது. இங்கு தாம்பரத்தில் நேரெதிர். எப்போதும் கலகல என்று தான் இருக்கும். வாண்டூஸ் ஸ்கூல் இருக்கும்போதே பட்டையக் கிளப்புவாங்க. லீவு நாள்ல கேக்கவே வேணாம். சாயங்கலாம் இவர்களின் ஆட்டத்தை பார்ப்பது ஜூனியரின் ரெகுலர் வேலைகளில் ஒன்று. இவர்களைப் பார்க்கும்போது என் சிறு வயது நினைவுக்கு வரும்.


அப்பா வேலை காரணமாக நிறைய ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எங்கள் படிப்பு வீணாகக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். என் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் காஞ்சிபுரத்திலும் (UKG - 6), வாலாஜாப்பேட்டையிலுமே (6 - 12) முடித்தேன். காஞ்சியில் இருந்த நாட்களே பொன்னாட்கள் என்பேன். கலெக்டர் ஆபிஸ் பின்புறம் இருந்த ஹவுஸிங் போர்டில் தான் ஜாகை. என் வகுப்பு நண்பர்கள் வீடும் அங்கேயே தான். ஸ்கூல் விட்டு வந்ததும் எதையாவது சாப்பிட்டு விட்டு கிளம்பினால் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆட்டம் போட்டுவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்போதே கேர்ள்ஸ் கேங்க் பாய்ஸ் கேங்க் என்று இருந்தது. ஆனாலும் கொஞ்ச நேரம் எல்லோரும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு.


ஸ்க்கிப்பிங், நொண்டி என நிறைய விளையாடினாலும் என் ஆல் டைம் பேவரிட்களில் ஒன்று கல்லா மண்ணா தான். இந்த விளையாட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் இருந்த தெரு இந்த விளையாட்டுக்கு அவ்வளவு அமைப்பாக இருக்காது என்றாலும் லோக்கல் ரூல்ஸ் வைத்து விளையாடுவோம். தெரு மண் ஏரியாவாகவும், அதன் இருபுறங்களும் கல் ஏரியாவாகவும் கருதப்படும். இந்த விளையாட்டு சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கப்படும். மோஸ்ட்லி முதலில் புடிக்க ஆரம்பிப்பவர் ஒரு வழியாகிவிடுவார். எல்லோரையும் அவுட் செய்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். பிடிப்பவர் பெரும்பாலும் மண் ஏரியாவை தான் தேர்ந்தெடுப்பர். அதான் புத்திசாலித்தனமும். ரூல்ஸ் படி கல் ஏரியாவில் நிற்ப்பவர்கள் மண்ணைக் கடந்து எதிர்புறம் செல்ல வேண்டும். அப்படி மண்ணில் போகும்போது அவுட் ஆகிவிட்டால் அவர் தான் கேமை கண்டினியூ செய்ய வேண்டும். கேட்சரை வெறுப்பேத்த ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைப்பதும் நடக்கும். எனக்கு இன்னும் நினைவில் இருக்கும் ஆச்சரியமான விஷயம் நான் ஒரே ஒருமுறை தான் கேட்சர் ஆகியிருக்கிறேன். அதுவும் மழை வந்ததால் ஆட்டம் பாதியிலே க்ளோஸ். மற்றபடி கேட்சருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகும்போது கிடைக்கும் சுகமே தனி:)


இந்த கேம் ஏரியாவுக்கு ஏரியா வேறுபடும். காஞ்சி ஹவுஸிங் போர்டில் பின்பற்றிய சில ரூல்ஸ் இதோ.


1. பிளேயர்ஸ் யாரும் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரே ஏரியாவில் நிற்கக்கூடாது. அப்படி நின்றது நிரூபிக்கப்பட்டால்???!! அவர் தான் கேட்சராக வேண்டும்.
2. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ஆப்சனை இருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடாது.
3. கேம் தொடங்கும்போது இருக்கும் தலை கணக்கை வைத்து மேக்ஸிமம் இத்தனை பேரை அவுட் செய்தால் போதும் என்று சிலசமயம் ரூல்ஸ் போடப்படும். (வானிலையைக் கருத்தில் கொண்டு)
4. அதே போல் ஆட்டம் தடைப்பட்டால் (மழையைத் தவிர்த்து) மறுநாளும் அதே நபர் தான் கேட்சராக கண்டினியூ பண்ணவேண்டும்.


அடுத்த பதிவும் விளையாட்டைப் பத்தி தான்.