Showing posts with label என்னன்னே தெரியல. Show all posts
Showing posts with label என்னன்னே தெரியல. Show all posts

April 7, 2010

Technology has improved so much you know

பாடி பாய்ஸ் டீமின் குமார் சச்சினுடன் சேர்ந்து சிரிக்கிறான்
உலகக்கோப்பையைக் கையில் பிடித்தபடி

முந்தாநாள் வயசுக்கு வந்த கலைசெல்விக்கு
தன் வீணையையும் வெள்ளைத் தாமரையையும்
கடன் கொடுத்திருக்கிறாள் கலைமகள்

இடதுபுறம் திரும்பி நின்று
நேராய் பார்த்து சிரிக்கும்
ராஜாவையும் கமலாவையும்
இடப்பக்கத்திலிருந்து சிவன் பார்வதியும்
வலப்பக்கத்திலிருந்து அம்மாவும்
வலக்கையுயர்த்தி ஆசிர்வதிக்கிறார்கள்
கைகளிலிருந்து கொட்டுகிறது பூக்கள்

வானளந்த வாமணன் உசரத்தில்
நடந்து வரும் அய்யாவின் காலடியில்
வெள்ளை மாளிகை

முடி சிலுப்பி
புருவம் நெரித்து
சிறுத்தை சீறுகிறது
சே குவேராவென

மருந்துக்குக் கூட மரமில்லாத இடத்தை மறைத்தபடி நிற்கிறது
ப்ரெஞ்ச் விண்டோவும் ஜெர்சி பசுக்கள் மேயும்
ஸ்வீடிஷ் புல்வெளியும் கொண்ட வீடு

மீண்டும் தலைப்பு

February 22, 2010

ரத்தக் கறை

பரந்து விரிந்து கிளை பரப்பிய ஆலமரத்தை கவுத்து வைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது அந்த மெழுகுவர்த்தி. உருக்குலைந்து, உயரம் குறைந்து, உடம்பு பெருத்து, அகல் விளக்கில் நிற்கவைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி தன்னால் இயன்றளவு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவள் உடல் எனக்குத் தெரிந்தது. தெளிவாய். சமீபத்தில் தான் உயிரை விட்டிருந்தால். என்னால். ஆம் நான் தான் அவளைக் கொன்றேன். இதோ என் கைகளில் இன்னும் உலர ஆரம்பிக்காத ரத்தம். அடர்சிவப்பு ரத்தம். கறைபடிந்த என் கரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் செய்தது சரியா தவறா என்ற விவாதத்தை என் மனமும் மூளையும் ஆரம்பிக்கவில்லை. இன்னும் இல்லை. ஏனென்றால் இப்பொழுதுதான் அவளைக் கொன்றேன்.


எந்த சலனமும் இல்லாமல் அவள் உடலைப் பார்த்தேன். ப்ச். அநியாயமாய் உயிரை விட்டிருந்தாள். திரும்பவும் என் கைகளைப் பார்த்தேன். ரத்தம் மெதுவாய் உலர ஆரம்பித்திருந்தது. அங்கங்கே கொஞ்சம் கருஞ்சிவப்பாய் மாற ஆரம்பித்தது. இவள் ரத்தம் எந்த குரூப்பாய் இருக்கும். தெரியவில்லை. தெரிந்துகொள்வதிலும் ஆர்வமில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரியும். இந்த ரத்தம் உழைப்பை உறிஞ்சி எடுத்த ரத்தம். உடல் கிழித்து வெளியேற்றப்பட வேண்டிய ரத்தம். அசுத்தமான ரத்தம்.

அவள் குடும்பத்தைப் பத்தி நினைத்தேன். எத்தனைப் பேர் இவளை நம்பியிருப்பார்கள்? அம்மா, அப்பா, அண்ணா, தம்பி என யாராவது? கல்யாணம் ஆனவளா? குழந்தை இருக்குமா? அவளுடம்பில் எந்த அடையாளமும் இல்லை. இவள் வீடு திரும்புவாள் என எத்தனைப் பேர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனரோ? இன்று வரவில்லையென அச்சம் கொள்வனரோ? இனி வரவேமாட்டாள் எனத் தெரிந்தால் அவர்கள் என்ன ஆவார்கள்? எப்படி நடந்துக்கொள்வார்கள்? சர்வ நிச்சயமாய் எனக்குத் தெரியாது. கொன்றது நானெனத் தெரிந்தால் என்னை சபிப்பார்களோ? என் மீது வன்மம் கொண்டு என் உயிரெடுக்க முயற்சிப்பார்களோ? பழிக்குப் பழி? தெரியவில்லை.

அவளின் இறப்பிற்கு நான் காரணமாவேனா? இல்லவே இல்லை. அவளேதான் காரணம். ஆம். அவளேதான். எனக்கு அவளைப் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. என்னையே சுற்றி சுற்றி வந்தாள். அலட்சியம் செய்தேன். விடவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சல் கோபமாய் மாறியது. விளைவு என் கண் முன் கிடக்கிறது அவளது உடல். ரொம்ப மூர்க்கத்தனமாய் நடந்துகொண்டேனோ எனத் தோன்றுகிறது. ம்ம்ம். கோபத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ப்ச். முடிந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதை மட்டுமே யோசிக்கனும். இந்த உடலை என்ன செய்வது? தெரியவில்லை. எப்படி டிஸ்போஸ் செய்வது? தெரியவில்லை. கூறு போட்டு மூலைக்கொன்றாய் வீசிவிடலாமா? நினைக்கும்போதே குமட்டிக் கொண்டு வந்தது. சகல மரியாதையுடன், தப்படித்து நாக்கை மடித்து ஆடிக்கொண்டு இவளை இடுகாட்டில் எரிக்கவோ புதைக்கவோ முடியுமா? முடியவே முடியாது. எனினும் அப்படி நடந்தால்? நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. ஒரு கொலையை செய்துவிட்டு கவலையேப் படாமல் சிரித்துக்கொண்டிருக்க என்னால் தான் முடியும்.

மறுபடியும் கைகளைப் பார்த்தேன். ரத்தம் சுத்தமாய் உலர்ந்திருந்தது. மெதுவாய்ச் சுரண்டினேன். உதிர்ந்தது. மறுபடியும் சுரண்ட மீண்டும் கொஞ்சம் அடையாய் உதிர்ந்தது. சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தேன் அவள் ரத்தத்துடன். தீடிரென அருவெறுப்பாய் உணர்ந்தேன். உடம்பெல்லாம் ஏதோ ஊர்வது போலிருந்தது. குளித்துவிடலாம் என முடிவு செய்தேன். குளித்தால் அழுக்குப் போகும். ஆனால் நான் செய்த பாவம்? ஒரு உயிரை எடுத்திருக்கிறேன். யார் தந்தது இந்த உரிமையை? ஆனால் அவள் செய்தது நியாயமாகுமா? அவள் என் உரிமையில் தலையிடப் பார்த்தாளே.

இப்படியே எவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருப்பது? தெரியவில்லை.
நான் செய்தது சரியா தவறா? தெரியவில்லை.
இவள் உடலை என்ன செய்ய வேண்டும். தெரியவில்லை?

மெல்லிய ஆரஞ்சு வெளிச்சத்தில் அவளின் உயிரற்ற உடல் நன்று தெரிந்தது...

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். எதைப் பற்றியும் நினைக்காமல். நினைக்கப் பிடிக்காமல். ஆனால் நினைக்காமலிருக்க முடியவில்லை. பலத்த சப்தத்துடன் அவள் வாங்கிய அடி. வலியால் கத்தக் கூட நேரமின்றி அவள் உயிரைவிட்ட அந்த நொடி. அவளிடத்தில் நானிருந்திருந்தால்?? நினைத்தவுடனேயே உடம்பு உதறியது. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தேன். மெல்லிய சத்தத்துடன் மின்சாரம் வந்தது. பெருத்த சப்தத்துடன் சுழலத் தொடங்கிய மின்விசிறி மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைத்தது. அவளுடனே அவள் நினைவுகளும் பறந்துப்போனது.

December 17, 2009

இயந்திரமாய் நட

இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாண்டி கீழே இறங்கும் உற்சாகம்
பால் போடும் பையனின் குட்மார்னிங்
மெல்லிய ஈரத்துடனான தார் ரோடுகள்
தலைக்கு மேலே தொட்டு விடும் தூரத்தில் மினி மேகக்கூட்டமாய் பனிமூட்டம்
மூக்கின் நுனியை அடிக்கடி நீவச் செய்யும் குளிர்
மூங்கில் கழிகளில் கட்டப்பட்ட தென்னந்துடப்பத்தின் இடுக்குகளில் சிக்கிய சருகுகளின் சங்கீதம்
பளிச்செனப் பெருக்கிய கான்க்ரீட் தரையில் வரையப்படும் மெருகு குறையா கோலங்கள்
இன்னமும் சர்வீசில் இருப்பதாய் நினைக்க வைக்கும் ரிடையர்ட் தாத்தாக்களின் கைவீச்சுகள்
காலை டிபன், மதிய லஞ்ச் மெனுக்களினூடே மாமியார் பாட்டு பாட்டும் ஆபிஸ் ஆண்டிகள்
காதிலும் கழுத்திலும் ஆப்பிள் தொங்கவிட்டுக்கொண்டும் ஓடும் யுவதிகள்
அவர்கள் பின்னே ஓட்டமும் நடையுமாக ஜிடிபி பேசும் அரை டிராயர் அங்கிள்கள்
கறிவேப்பிலை தோரணம் கட்டி,
உருளை மூட்டையில் ஊர்வலம் போகும் காய்கறி மாப்பிள்ளைகள்
மணக்க மணக்க சந்தனமும்
பட்டை பட்டையாய் விபூதியும் தீட்டி சவாரிக்கு தயாராகும் ஆட்டோக்காரர்கள்
ஆவி பறக்கும் டீயை சுழற்றி சுழற்றிக் குடிக்கும் தினக்கூலிகள்
ஆராவாரமில்லாத ரோட்டின் நடுவே தைரியமாய் வண்டி ஓட்டிப் பழகும் இளம்பெண்
மாடர்ன் ஆர்டாய் தோன்றும் வியர்வை நனைத்த சட்டை
இடமிருந்து வலமாக சரக்கென்று இழுத்து நெற்றி வியர்வையை உதறும் விரல்கள்
ஒவ்வொருவர் கடக்கும் போதும் கரையும் ஒற்றை வேப்பமரத்துக் காகம்
இவை யாவுமே காணக் கிடைப்பதில்லை
ஏசி அறையில் நின்ற இடத்திலிருந்தே
5 கி.மீ நடக்கும் இயந்திர மனிதர்களுக்கு...