December 29, 2011

Scribblings 2011

மற்றுமொரு ஆண்டு முடிவுக்கு வருகிறது. வழக்கம்போலவே இந்த வருடமும், அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்துக்கோர்த்த மலர்ச்செண்டாகவே இருந்தது. பெரிய இழப்பென்று சொல்ல எதுவுமில்லையென்றாலும், வழக்கம்போல மனிதர்களைப் பற்றிய புரிதல்களில்/தீர்மானங்களில் நான் இன்னும் பாலப்பாடத்திலேயே இருப்பதை இந்த ஆண்டு உணர்த்தியது. இவ்வளவுதானா/இதற்க்காகவா போன்ற கேள்விகள் எழுந்த தருணங்கள் வலிமிகுந்ததாக இருந்தாலும், அத்தருணங்களை கடக்க/மறக்க தோள் கொடுத்து உதவிய நட்புகள் வாய்த்திருப்பது மகிழ்ச்சியே. நிறைய மகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத/ஆனந்த மனநிலையில் கூத்தாடிய தருணங்களை இந்த ஆண்டு பரிசளித்தது.

உடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.

பதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ??) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.

December 19, 2011

Scribblings 19-12-2011

இதோ அதோன்னு ஆட்டம் காட்டிட்டு ஒருவழியா கூகிள் பஸ்ஸ மூடிட்டாங்க. ரொம்ப நாள் கூடப் பழகின ஒருத்தர் திடீர்ன்னு இல்லாமப் போனா மாதிரி வெறுமையா இருக்கு. ப்ளஸ் இருக்குன்னாலும், பஸ்ஸின் இடத்தை வேற எந்த தளத்தாலும் ஆக்ரமிக்க முடியாது. கொஞ்ச நஞ்ச லூட்டியா? என்னா ஆட்டம்? என்னா கும்மி? ப்ளஸ் ரொம்ப கொசகொசன்னு சந்தைக்கடை மாதிரி இருக்க ஃபீலிங்:( இப்போதைக்கு அங்க போற ஐடியா இல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். மிஸ் யூ கூகிள் பஸ்.
***********

பஸ் போனதின் நீட்சியாய் (இதப் பார்றா)ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு போனவாரம் தான் தொடர்ந்து அஞ்சு நாள் பதிவு போட்டிருக்கேன். தொடர்ந்து அந்த மாதிரி பதிவு போட்டு உங்களை கொல்ல முடியாது. அட இந்த ஒரு வாரத்துக்கு பதிவுக்கு மேட்டர் தேத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. இந்த லட்சணத்துல ஒன்னு மீள் பதிவு வேற. இனிமே அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு பதிவாவது போட்டு எல்லாரையும் கொல்லலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.
***********

2010ல் வெளியாகி ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் ஹிட்டடிச்ச ஷீலா கி ஜவானிக்குப் போட்டியா, சிக்னி சமேலி வந்திருக்கா. காத்ரீனா கைஃப் கொலக்குத்து குத்தியிருக்கும் இந்தப் பாட்டு இப்போ ஹிட்ன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ, ஷீலா தான் இன்னும் டாப்ல இருக்கா மாதிரி தோணுது. நீங்களே பார்த்து சொல்லுங்க:)


************

அப்பப்போ ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கிறேன். பின்ன அத மட்டும் விட்டுவச்சா நல்லாவா இருக்கும்? அங்கே போட்ட மொக்கைகளிலேயே ஆகச்சிறந்த மொக்கைகளை மட்டும் இங்கே அப்டேட் பண்ணும் எண்ணமிருக்கு. அப்படியாகப்பட்ட மொக்கை ஒன்னு

மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலப்படறது நம்ம வேலை இல்ல #தத்துபித்துவம்
***********

இந்த வட்டார மொழியால அடிக்கடி பல்பு வாங்கறேன். அப்படி சமீபத்துல என் மாமனார் கொடுத்த பல்பு.

கார் ரோட்ல விடுவியாம்மா?

எதுக்குப்பா? நம்ம வீட்ல தான் பார்க்கிங் இருக்கே.

பார்க் பண்றதப் பத்தி கேக்கலம்மா? ரோட்ல விடுவியா?

கவர்ட் கார் பார்க்கிங் இருக்கும்போது ரோட்ல எதுக்குப்பா விடனும். வண்டி டேமேஜ் ஆகிடாது?

அய்யய்யோ அதக் கேக்கலாமா? ரோட்ல, ட்ராஃபிக்ல ஆக்சிடெண்ட் பண்ணாம விடுவியான்னு கேட்டேன்.

ஹி ஹி வண்டி ஓட்டுவியான்னு கேக்கறீங்களா?

ஆமா. என்னமா இதுகூட புரியல உனக்கு?

ஙே!!!!

எங்கூர்ல வண்டி ஓட்றதுன்னு சொல்வோம். தஞ்சாவூர் பக்கம் அத விடறதுன்னு சொல்லுவாங்க போல. என்னமோ போடா மாதவா.
*********

December 16, 2011

The Rock

The Rock - சென்னையில் மற்றுமொரு தீம் ரெஸ்டாரெண்ட். அடையார் ரெயின் ஃபாரெஸ்ட் போயிருக்கீங்களா. கிட்டத்தட்ட அதோட ஜெராக்ஸ் காப்பி தான் இது. ரெண்டு பெரிய வித்யாசம். ரெயின் ஃபாரெஸ்ட்டை விட நல்ல சுவையான உணவு வகைகள், குறைவான விலை. ஓரியண்ட்டல், தந்தூர் வகை உணவுகளை பரிமாறும் இந்த உணவகம் அடையார், அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் இயங்கி வருகிறது.

நான் இதுவரை மூன்று/நான்கு முறை சென்றுவிட்டதால், இது ஒரு mixed review. முதலில் ஆம்பியன்ஸ். More or less close to jungle theme. ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி செட்டப். அங்கங்கே காட்டு விலங்குகள், ஆதிவாசி பொம்மைகள் என ரெயின் ஃபாரெஸ்ட் போலவே இருக்கிறது. நண்பர்களோடு ஒரு முறையும், குடும்பத்தோடு இரு முறையும் சென்றேன். நண்பர்களோடு சென்றபோது ஸ்டார்டர்ஸாகவே தின்று தீர்த்தோம். ஒவ்வொரு முறையும் inhouse compliment என மலேஷியன் வெஜ் ரோல் தந்தார்கள். பெப்பர் சிக்கன், Pan griddled vegetables, சில்லி பனீர், புக்கெட் ஃபிஷ் என நாங்கள் சாப்பிட்ட அத்தனை ஸ்டார்டர்களுமே அட்டகாசமாய் இருந்தது. சூப் வகைகள் ஓக்கே. மெயின் கோர்ஸிற்கு மலேஷியன் நூடுல்ஸ் (ரிப்பன் டைப்), Thai fried rice, ஹாங்காங் ஃப்ரைட் ரைஸ், ப்ரெட் பாஸ்கெட் எல்லாமே சூப்பர். சைட் டிஷ் க்ரேவிகளும் upto the mark. டெசர்ட் செக்‌ஷன் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணலாம். ஐஸ்க்ரீம் தான் பிரதானமாய் இருக்கிறது. Sizzling Brownie ஆவரேஜ் ரகம் தான்.


குறையாகத் தெரியும் விஷயம் இடப்பற்றாக்குறை தான். சின்ன இடமாக இருப்பதால் ரொம்ப இரைச்சலாக இருக்கிறது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - தி ராக்
உணவு/Cuisine - Oriental, Tandoor Veg & Non-Veg. No buffet.
இடம் - அடையார் (பஸ் டிப்போ சிக்னல் அருகில். Next to Sony Center)
அண்ணாநகர் (3rd avenue. ஆர்ச்சிஸ், அமரான் பேட்டரி கடை அருகில்)
வேளச்சேரி. விஜயநகர் அடையார் ஆனந்த பவன் எதிரில் (நான் இங்கு சென்றதில்லை)
டப்பு - Moderate. ஒருவருக்கு வெஜ் - 350, நான் வெஜ் - 400 ஆகும். Value for money.

பரிந்துரை : Must try.

December 15, 2011

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.


விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க


எச்ச

ரி

ர்ரீக்காம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.


அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே


யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா


அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே


இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி


சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.


-மார்கழி ஆரம்பிப்பதை முன்னிட்டு மீள்ஸ்:)

December 14, 2011

நினைவெல்லாம் நிவேதா - 4

நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் ரோட்டில் அந்த கட்டிடம் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தது. கொஞ்சமே கொஞ்சம் புல்வெளி, ஒரு சின்ன நீரூற்று, நாலைந்து பூந்தொட்டிகளை தாண்டி, புஷ் மீ என்ற கண்ணாடிக் கதவை தள்ளி, அரைவட்ட மேஜையில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி நடந்தார்கள் கணேஷும் வசந்தும். காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்த பெண்ணைப் பார்த்ததும் சன்னமாக விசிலடித்தான் வசந்த். இவர்களைப் பார்த்ததுமே ஒரு இன்ஸ்டெண்ட் புன்னகை அந்தப் பெண்ணின் இதழில் ஒட்டிக்கொண்டது.

“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றாள் ஹஸ்கியான வாய்ஸில்.

மேஜையில் முழங்கையை ஊன்றிகொண்ட வசந்த சற்று குனிந்து “நீங்க என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சக்கனும்” என்றான்.

“வசந்த்” என்று அவனை அதட்டி, “மிஸ், எங்களுக்கு உங்கள் எம்டியைப் பார்க்க வேண்டும்.” என்றான் கணேஷ்.

”அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?”

“யெஸ். கணேஷ் என்ற பெயரில். பத்தரைக்கு”

”ஒன் மினிட்” என்றபடி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தவள் “யூ ஆர் லேட் பை ஃபிஃப்டீன் மினிட்ஸ்” என உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹெல் வித் த ட்ராஃபிக்” என்றான் கணேஷ்.

“ஒக்கே. நீங்கள் எம்டியை இப்போது பார்க்கப் போகலாம். எண்ட் ஆஃப் தி காரிடார்ல அவர் ரூம். பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்காதீங்க” என சொல்லிவிட்டு, டெலிபோன் ரீசிவரை கையிலெடுத்தாள்.

இருவரும் அவள் சொன்ன வழியில் நடக்க ஆரம்பிக்க, "பாஸ், இந்த ரிசப்ஷன் பட்சியை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் வசந்த்.

“அழகான பொண்ணுங்கள நீ பார்த்ததில்லன்னு சொன்னாதாண்டா ஆச்சர்யம்”.

“இல்ல பாஸ். வேற ஏதோவொரு ஆஃபிஸ்ல இவள நான் பார்த்திருக்கேன். எங்கன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஒன்னு பண்ணுங்க. நீங்க அஷோக்கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ள அவள்ட்ட என் டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறேன்.”

“யூ ஆர் ஹோப்லெஸ் வசந்த்” என்றபடி R.Ashok Managing Director என்று பிராஸ்ஸோவில் பளபளத்த போரட் தொங்கிய கதவின் முன் நின்றார்கள் இருவரும். அறைக்குள் இயற்கை வெளிச்சம் இருக்கும்படியாக பெரும்பகுதி கண்ணாடியில் இருந்தது.

”மிஸ்டர் அஷோக்?”

கணேஷுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் திரும்பினார். முப்பதிரண்டு முப்பதைந்து வயதிருக்கலாம் போலத் தோன்றியது. பாதி மயிரை இழந்த முன் மண்டையால் நெற்றி பெரிதாக இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களுக்குள் மகா சாந்தம். சுத்தமாக சவரம் செய்யப்பட்ட மழுமழு முகம். 6 அடிக்கு ஏற்ற மாதிரி ஆஜானுபாகுவான உடம்பு. ஹீரோவே தான். கணேஷ் ஒரு நொடி அஷோக்கின் பக்கத்தில் நிவேதாவை கற்பனைப் பண்ணிப் பார்த்தான். பெர்ஃபெக்ட் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

”யெஸ். உங்களில் கணேஷ்....” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் அஷோக்.

“மைசெல்ஃப்” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் முன்சென்று அஷோக்குடன் கைகுலுக்கினான்.

”உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நிவேதா கேஸை எடுத்துக்கப் போறீங்களாமே?”

“இன்னும் தீர்மானிக்கலை.”

“ஹா. கமான். தீர்மானிக்காமல் தான் என்னை விசாரிக்க வந்திருக்கீங்களா?”

“நாங்கள் விசாரணைக்கு வரல மிஸ்டர் அஷோக்.”

“கால் மீ அஷோக். நோ மிஸ்டர் ப்ளீஸ்”

“ஒக்கே. நாங்க விசாரணைக்கு வரல. கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டது. அதற்காகதான் வந்தோம். வீ ஆர் நாட் யெட் இன்ட்டு த கேஸ் அஃபிஷியலி”

”என்ன மாதிரியான விவரங்கள். எங்கே சந்திச்சீங்க? வேர் யூ ஹாப்பி? மாதிரியான போரிங் கேள்விகளா?”

“ஹா ஹா. இல்லை. நான் நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். ஜெயராமன், நிவேதாவின் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார். ஹோப் யூ ஆர் அவேர் ஆஃப் திஸ்.”

“யெஸ்”

”அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் தெரியுமா?”

“யெஸ். அது சுத்த...”

“அதைப் பற்றின விளக்கம் அப்புறம். அதற்கு முன் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி இறந்த நான்கே நாட்களில், யூ க்ளீண்ட் அப் ஹெர் திங்ஸ். ரூம் சுத்தமா இருக்கு. நீங்களும். உங்கள் மனைவி இறந்ததில்?”

“யெஸ். அவ செத்துப்போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஐ ஹேட் ஹெர். ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்” என சுவற்றைக் குத்தினான் அஷோக்.

கணேஷும் வசந்தும் ஸ்தம்பித்து நின்றனர்.

December 13, 2011

கல்கியில் ஜூனியர் அப்டேட்ஸ்

நேற்றிரவு:

“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”

“ஏண்டா?”

“சத்தமா வருதும்மா”

“அதனால என்னடா?”

“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”

இன்று காலை:

பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...

“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”

ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:

படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...

“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”

# பாசக்கார பய :)
============================

“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”

“அப்புறமா...”

“இப்ப சொல்லாம்டா.”

“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”

#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================

டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..

“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”

“யார்றா சொன்னா இதெல்லாம்.”

“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”

# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================

“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?

பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================

“போதும்மா.”

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”


“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”

“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”

ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.

#ஙே!!!
================================

இன்னைக்கு என்ன டே?"

பிள்ளையார் சதுர்த்தி."

அப்படின்னா?"

”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."

ஹாப்பி பர்த்டேவா?"

ஆமாம்."

உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"

# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================

மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...

ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.

# கேப்பியா? கேப்பியா...கேப்பியா

-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.

December 12, 2011

Scribblings 12-12-2011

எழுதறத நிறுத்திட்டாலும், நம்ம எழுத்துப்பணிய தொடர சொல்லி ஆயிரம் அழைப்புகள், சரி சரி ஒன்னு ரெண்டு ரெக்வெஸ்ட்டுகள் வருது. நீ மொக்கையா மொக்கை போட்டாலும் பரவால்ல. இந்த வாரம் யுடான்ஸ் நட்சத்திரமா இருன்னு கேபிள் சங்கர் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார். இப்பல்லாம் நான் ரொம்ப பிஸி, எழுதறதுக்கு டைமே இல்லைன்னாலும், ஒரு பன்முக எழுத்தாளர், இவ்ளோ தூரம் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார்ங்கற ஒரே காரணத்துக்காக இந்த வாரம் ஸ்டாரா இருக்க சம்மதிச்சிருக்கேன். வழக்கம்போல உங்ககிட்ட வேறென்ன கேட்கப் போறேன். உங்க ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து குடுங்க சாமிங்களா..
*****

முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************

டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************

எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************

விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.

December 8, 2011

நினைவெல்லாம் நிவேதா - 3

நினைவெல்லாம் நிவேதா - 1
நினைவெல்லாம் நிவேதா -2

ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.

“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.

விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.

”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”

“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”

மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.

“ரூம் காலியா இருக்கே?”

“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”

ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.

“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”

“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.

“நீ எங்கிருந்த?”

“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”

“வாட்ச்மேன்?”

“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.

“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”

“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”

“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”

”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”

“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”

“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”

”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”

”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”

“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”

”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”

“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”

“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”

“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”

“புரியலீங்க."

”சண்ட போட்டுப்பாங்களா?”

“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”

வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.

“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”

“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”

“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”

கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.

“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”

December 5, 2011

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

தோழிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்ல ஃபோன் செய்தேன்.

வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.

க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.

(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.

ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.

டொக்

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்

***********

நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?

மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.

நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.

மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.

நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

*************

நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.

மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.

நண்பன் : &^#$^*%$*

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

***************

தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.

நான் : தேங்ஸ். அப்புறம்.

தோழி : என்னடி அப்புறம்?

நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.

தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.

நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?

தோழி : ^&%(&(()^^% டொக்

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************

If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..

ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.

வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?

இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?