January 31, 2011

கண்ணீரில் மிதக்க வைத்தான்:(

மானங்கெட்ட, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளிருக்கும் நாட்டில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள் மீனவர்கள்? ஒன்றல்ல இரண்டல்ல ஐநூற்றி சொச்சம் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக (இதுவே கடைசியாக இருக்குமென வேண்டுகிறேன்) ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு கொடூரமான முறையில் சாகடித்துள்ளனர். ஐந்து லட்சமோ ஒரு லட்சமோ, அரசுப் பதவியோ, கட்சிப் பதவியோ எந்த விதத்திலும் அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தாது. இணைய நண்பர்கள் தங்களால் இயன்றவரை உங்கள் நட்புலகத்திற்கும், உறவினர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துச்சொல்லுங்கள். http://www.savetnfisherman.org/ என்ற தளத்தினை பரவலாக அறியச்செய்யுங்கள். Lets make a difference.






January 28, 2011

White Pepper

ரொம்ப நாட்களாக ரீசனபிள் விலையில், அட்டகாசமான சுவையில் உணவளிக்கும் சைனீஸ் உணவகத்தை தேடிக்கொண்டிருந்தோம். ஒரு சுபயோக சுபதினத்தில் (ஹி ஹி என் பொறந்தநாளு) எங்கள் தேடுதல் நிறைவுற்றது. திருவான்மியூரிலிருக்கும் White Pepper Dim Sum Delicacy Restaurant எங்களை அன்புடன் வரவேற்றது.


குறைவான வெளிச்சத்தில் நீட்டான இண்டீரியர். ஆளே இல்லை:( ரொம்பவே கனிவான உபசரிப்பு. Veg Hot & Sour Soup, Veg Dim Sums Assorted இரண்டும் ஆர்டர் செய்தோம். ஜூனியருக்கு கொஞ்சம் மைல்ட் ஸ்பைசியான ஸ்டார்டர் தேடிக்கொண்டிருந்தபோது ஆர்டர் எடுக்க வந்தவரே ஸ்பைசி பொட்டேட்டோ ஃபிங்கர்சை காரம் கம்மியாக போட்டு செய்து தருவதாக சொன்னார். பெரிய தேங்க்ஸ் சொல்லிவிட்டு அப்படியே சூப்பில் கொஞ்சம் நிறைய காய்கறிகள் சேர்க்க சொன்னோம்.

அருமையான சூப். Loads of mushrooms & broccoli. Clear Soup with crunchy veggies:)

ஜூனியருக்காக பிரத்யோகமாய் தயாரான Spicy Potato fingers

திம்சும்ஸுடன் பரிமாறப்பட்ட நான்கு வகை டிப்ஸ். திம்சும்கள் அருமையாக இருந்ததால் உடனுக்குடன் காலி. ஃபோட்டோ எடுக்கவில்லை. Yet another healthy dish:) Popiah எனப்படும் மலேசியன் ஃப்ரைட் ஸ்ப்ரிங் ரோல் காம்ப்ளிமெண்டாக தந்தார்கள்.

Customized service மட்டுமல்லாமல் இந்த உணவகத்தில் ஹாஃப் போர்ஷன் ஆப்ஷனும் உண்டு. ரங்ஸ் ரைசிற்கு இழுக்க நான் நூடுல்ஸிற்கு ஃபேவராக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரி half portion கான்செப்ட் வரப்பிரசாதம். இம்முறை மூன்று பேர் சென்றிருந்ததால் இரண்டு நூடுல்ஸ் ஐட்டமும், ஒரு ரைஸ் ஐட்டமும், இரண்டு க்ரேவிகளும் ஆர்டர் செய்தோம். எல்லாமே ஹாஃப் போர்ஷன்ஸ். Kuai tiao (Flat rice noodles) மற்றும் Thai Spicy Noodles இரண்டுமே நன்றாக இருந்தது. முதல் ஐட்டம் கொஞ்சம் tangy சுவையிலும், இரண்டாவது roasted peanuts, sprouts எல்லாம் போட்டு காரமாக நன்றாக இருந்தது. Stuffed Eggplant in Schezwan sauce மற்றும் Five Spiced Vegetables இரண்டுமே மைல்ட் ஸ்பைஸியாக இருந்தது. Went well with Fried Rice.



And here comes the cherry on the cake:)

டெசர் ஆப்ஷன்ஸில் ஃப்ரைட் ஐஸ்க்ரீம் செட்டாகவில்லை என ஏமாற்றிவிட்டார்கள். Choco Coated lychees, Ice kachanga, mango cheese cake ஆகியவை ஆர்டர் செய்தோம். Delicious:)


மேலதிக தகவல்கள்

உணவகம் - White Pepper
உணவு - சைனீஸ் வெஜ் & நான் வெஜ்
இடம் - திருவான்மியூர் (ஜெயந்தி தியேட்டர் தாண்டியவுடன் இடதுபுறம் வரும் முதல் தெருவின் உள்ளே)
டப்பு - ரீசனபிள். கம்ப்ளீட் வெஜ் மீல் 300லிருந்து 350ற்குள்/ஒரு நபருக்கு.

பரிந்துரை - பெஸ்ட் சைனீஸ் @ சென்னை. பைசா வசூல்.

January 24, 2011

துணுக்ஸ் 24-01-2011

தொலைக்காட்சிகளில் பொங்கலுக்காக ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் (எனக்குத் தெரிந்து) உருப்படியாக இருந்தது வசந்த தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தான். ஞாயிற்றுக்கிழமை பாலமேடு ஜல்லிக்கட்டும், திங்கட்கிழமை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் ஒளிபரப்பினார்கள். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலும், கூகிள் பஸ்ஸில் பகிரப்பட்ட நர்சிம் எழுதிய ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையும் போட்டியை முழுதும் பார்க்க வைத்தன. ஒவ்வொரு காளையும் கடோத்கஜனின் க்ளோனிங் போலிருந்தன. சளைக்காமல் விட்டுக்கொண்டே இருந்தார்கள். மாடுபிடிப்பவர்களும் அசராமல் முயற்சி செய்துக்கொண்டே இருந்தார்கள். நான் பார்த்த மட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே காளைகள் அடக்கப்பட்டன. மற்றவையெல்லாம் “தொட்டுப்பார்றா. தில்லு இருந்தா வாடா” என்ற ரேஞ்சுக்கு நின்று விளையாடின.

ஜல்லிக்கட்டு மற்ற விளையாட்டுகளிலிருந்து வேறுபடும் புள்ளி முக்கியமானது. எந்த விளையாட்டிலுமே சம்பந்தப்பட்ட இருவருக்கும் ‘இது விளையாட்டுத்தான்’ என்று தெரிந்திருக்கும். ஆனால் இதில் அப்படியில்லை. மனிதனுக்கு விளையாட்டு. மிருகத்துக்கு அது தெரியாது. - பெருமாள் முருகன் எழுதிய முன்னுரையில் வரும் வரிகளிவை. களத்திலிருக்கும் வீரர்களுக்கு காளையை அடக்குவது நோக்கம். காளைகளின் நோக்கமென்னாவாயிருக்கும்? யாரிடமும் பிடிபடக்கூடாதென்பதா? தன்னைத் தற்காத்துக்கொள்வதா? காளைக்கு மட்டுமே வெளிச்சம். ஒவ்வொரு காளையும் வாடிவாசலிலிருந்து வெளிவரும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும் நமக்கே பரபரப்பும் பதற்றமும் ஏற்படுகின்றது. மாடு அணைக்க களத்தில் நிற்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? வாழ்க்கையில் ஒருமுறையாவது ஜல்லிக்கட்டை நேரில் பார்த்துவிடவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏகப்பட்ட கெடுபிடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் இறந்ததால் அடுத்த வருடம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்ற கேள்வியோடு ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விடுமா? பார்க்கனும். பார்ப்போம்.
**************

ரொம்ப எதிர்பார்த்துப் போய் ஒரு விஷயத்தில் ஏமாந்ததும் பொங்கல் சீசனில் நடந்தது. இரண்டு வருடங்களாக சென்னை சங்கமம் பார்க்கனும் என்ற ஆசை பொங்கலன்று நிறைவேறியது. அண்ணாநகர் டவர் பார்க்கில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். ஒரத்தநாடு கோபு குழுவினரின் நாட்டுபுறப் பாடல்கள், காவடியாட்டம், கருப்பசாமியாட்டம் ஆகியவைற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காவடியாட்டம் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் ரொம்ப நன்றாக இருந்தது. மேடையின் உயரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியிருந்தால் எல்லாருக்கும் எளிதாக தெரிந்திருக்கும். கொஞ்சம் எம்பிப் பார்த்தால் தான் தெரிந்தது. அடுத்தது அருணா சாய்ராமின் கச்சேரி என அறிவித்தார்கள். இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைன்னு ஃபுட் ஸ்டால் பக்கம் நடையைக் கட்டினோம். நண்பர்கள் ரொம்பவே பில்டப் கொடுத்து வைத்திருந்த பர்மா பாய் பரோட்டா ஸ்டாலில் முட்டை பரோட்டா சாப்பிட்டோம். ரொம்ப சுமாராகத்தான் இருந்தது. பெட்டர் லக் நெக்ஸ் டைம் என மனதைத் தேற்றிக்கொண்டு ஜூனியர் பின்னால் ஓட ஆரம்பித்துவிட்டோம்.
*****************

ஃபேஸ்புக்கில் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. அங்கேயும் அப்படித்தானா என்றெண்ணம் ஏற்பட்டது:)

January 21, 2011

தெரியலயேப்பா...தெரியலயே...

நீங்க நல்லவரா கெட்டவரா? தெரியலேயேப்பா...தெரியலயே.. ஸ்டைலில்

ராமதாஸிடம் - உங்களை திமுக கூட்டணில சேர்த்துக்குமா? சேர்த்துக்காதா?

அம்மாவிடம் - ரெஸ்ட் எடுக்க கொடநாடு பெஸ்ட்டா? சிறுதாவூர் பெஸ்ட்டா?

நடிகர் விக்ரமிடம் - உங்க அடுத்த படம் 2016ல ரிலீஸாகிடுமா?

கலைஞர் கருணாநிதியிடம் - டெல்லிக்கு மெசேஜ் கொடுக்க கடுதாசி பெட்டரா? தந்தி பெட்டரா?

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் - எது ஈசி? இடமிருந்து வலம் தலையாட்றதா? வலமிருந்து இடம் தலையாட்றதா?

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிலரிடம் - எந்த மொழிப் படங்கள் சுடுவதற்கு ஏற்றவை? கொரியப் படங்களா? ஜப்பானியப் படங்களா?

தமிழ் மையம் ஜெகத் கஸ்பரிடம் - எது சுலபம்? பத்திரிக்கையாளர்களின் கேள்விகளா? சிபிஐ கேள்விகளா?

வரும்....ஆனா வராது...ஸ்டைலில்

மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் - ஊழல் நடந்துச்சா இல்லையா? = நடந்துச்சு.. ஆனா நடக்கலை

இளங்கோவன்/யுவராஜிடம் - காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? - போட்டியிடும் ஆனா போட்டியிடாது.

சிபிஐயிடம் - ஆ.ராசாவை கைது செய்வீங்களா மாட்டீங்களா? = செய்வோம். ஆனா செய்யமாட்டோம்..

January 19, 2011

ச ரி க ம படுத்தாத நீ

ஆனா ஆவண்ணா படிக்கத் தெரியாதவனிடம் பின்நவீனத்துவ கவிதை ஒன்றைக் கொடுத்து, படித்துப் பார்த்து சிலாகிக்க சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை? அதற்கொப்பான கொடுமை ஒன்று எனக்கு நேர்ந்தது. அதற்கு முழுமுதற்காரணம் என் அம்மாதான். ஏதோவொரு மார்கழி வெள்ளிக்கிழமையில் வீட்டுக் காலிங்பெல் அடிக்கவும் கதைவைத் திறந்தால் வாசல் முழுக்க மோகனா மாமி அடைத்திருந்தாள். மாமி உள்ளே வருவதைப் பார்க்கும் ஆவலில் தலையைத் திருப்பாமல் குரலை மட்டும் சமையல்கட்டிற்கு அனுப்பினேன். “அம்மா மோகனா மாமி வந்திருக்கா பாரு. என்ன மாமி பட்டுப் புடவை, வைரமூக்குத்தின்னு மின்றேள். ஏதாவது ரிசப்ஷனா?” என்றேன். ”என்னடி இப்படி எண்ணைய் வழிஞ்சிண்டு நிக்கற. கிளம்பலையா இன்னும்? நாழியாயிடுத்துல்ல?” என்றாள் மாமி. ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்க அம்மா வந்து “போரடிக்கறதுன்னு சொல்லிண்டிருந்தல்ல. அதான் மாமி உன்னை இன்னைக்கு மியூசிக் அகாடமிக்கு அழைச்சிண்டு போக வந்திருக்கா” என்றாள். இன்னும் ரெண்டு செகண்ட் அம்மாவை முறைத்திருந்தேனென்றால் அம்மா சாம்பாலாகியிருப்பால். போரடிக்குதுன்னு சொன்ன பொண்ணை ஒரு மிகப்பெரிய வைக்கப் போரோடு கோர்த்து விட்டு அக்கப் போர் பண்ணிட்டியேம்மா என மனதுக்குள் அழுதுக்கொண்டே கிளம்பினேன். போதாக்குறைக்கு மாமியை எதிர்த்துப் பேசக்கூடாது, கெக்கே பிக்கேன்னு கமெண்ட் அடிக்கக்கூடாதுன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு நாள் வாங்கிக் கட்டிக்கப்போறே என நினைத்துக் கொண்டே மாமியோடு ஆட்டோவில் கிளம்பினேன்.

மியூசிக் அகாடமி போவதற்குள் மாமியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். மாமிக்கு கும்பகோணம் பக்கம். தனக்கு எல்லாம் தெரியுமென்பதில் மாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கை எனக்குமுண்டு. மாமிக்கு ஒன்னுமே தெரியாதென்பதில். இரண்டு பையன்களும் கல்யாணமாகி அமெரிக்காவிலிருக்கிறார்கள். மூத்த மாட்டுப்பெண் பிள்ளையாண்டிருப்பதால் இன்னும் ஆறு மாதங்களில் மாமி அமெரிக்காப் போகப் போவதாக அம்மா சொன்னாள்.

”அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போறது” என ஆரம்பித்தாள் மாமி.
”போறது மாமி. As usual"
"ஸ்விஸ்லன்னா வேலைப் பார்க்கிற?”
“ஆமா மாமி”
“ப்ராபர் ஸ்விஸா” என்றாளே பார்க்கனும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மாமி கத்துகிட்ட ஆங்கில வார்த்தைகளில் ப்ராபரும் உண்டு. கிராமம், டவுன், மாவட்டம், மாநிலம் தாண்டி இப்போ நாட்டுக்கும் ”ப்ராபர்” போட ஆரம்பித்துவிட்டாள். அடுத்த என்ன அபத்தமான கேள்வி வருமோ என பயந்துண்டுருக்கும்போது நல்லவேளையாக மியூசிக் அகாடமி வந்துவிட்டது. ஆட்டோவிற்கு காசைக் குடுத்துவிட்டு திரும்பிய எனக்கு பாட்டுப் ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா இல்லை பட்டுப் புடவை ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா என்ற பெரிய சந்தேகம் வந்தது. அந்தளவுக்கு கூடியிருந்த மொத்த ஜனமும் ஆர்.எம்.கேவியில் கொள்ளை அடித்துவிட்டு வந்தாற்போலிருந்தது. இறங்கியவுடனே மாமி பட்டுப் பாட்டை ஆரம்பித்தாள். பார்க்கிற அத்தனை பேரிடமும் “ராமர் பச்சைதான் வேணும்ன்னு தேடித் தேடி வாங்கினதாக்கும். சுத்த ஜரி. எவ்ளோ கெணம்மா இருக்குப் பாருங்கோ” எனப் பாடிக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய அரை வட்ட மாநாடு நடந்துக்கொண்டிருக்க, வேண்டாவெறுப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீர்ன்னு யாரோ என் காதைப் பிடித்து இழுக்கவும் பயந்துட்டேன். ஐந்துக்கு மூன்றில் ஒரு மாமி என் காதை ஸ்கேன் பண்ணிக்கொண்டிருந்தாள். பெரிய ப்ரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு என் காதை மாமியின் கையிலிருந்து விடுவித்துக்கொண்டேன். எத்தனை கேரட் என்று ஒலித்த மாமியின் குரல் வெண்கலப் பாத்திரக் கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது. தெரியாது மாமியென்றேன்.

”மோகனாக்கு என்ன வேணும்”
“தெரியலையே மாமி. அநேகமா கச்சேரி முடிச்சுட்டு தான் சாப்பிடுவான்னு நினைக்கிறேன்”
“அசடே. மோகனாக்கு நீ என்ன உறவு வேணும்ன்னு கேட்டேன்” என்றாள். அந்தக் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிஞ்சிட்டா சிவில் சர்வீஸ் எக்ஸாமெல்லாம் ஊதி தள்ளிட மாட்டேனா என நினைத்துக்கொண்டேன். மோகனா மாமி எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அநேகமாக எனக்குத் தெரிந்த எல்லோருக்கும். அதற்குள் மாமியே வந்துவிட்டாள். நம்ம லெட்சுமி பொண்ணுடி எனச் சொல்லிக்கொண்டே என்னை அடுத்த மாநாடு நடக்குமிடத்திற்கு தள்ளிகொண்டு போனாள். நேற்றைக்கு நீ எஸ்.ஆர் கச்சேரி கேட்டிருக்கனுமே. என்னமா பாடினான் தெரியுமா என ஆரம்பித்து மாமிகளனைவரும் தத்தம் புலமைகளைக் காட்டிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒரு மாமி பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள். முடியாதவா போலிருக்கு, என்னமோ ஏதோ என பதறி மாமியைத் தாங்கிப் பிடிக்க ஓடுகையில் சட்டென ஓலம் நின்றது. போயேச் சேர்ந்துட்டாளா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே இதே ஆலாபனை கரகரப்பிரியாவில் எப்படியிருக்கும் என்றாள் என்னைப் பார்த்து. ”கண்றாவியா இருக்கும். ஸ்டெர்ப்சில்ஸ் சாப்பிட்டா சரியாப் போய்டுமென்றேன்” கடுப்பாய். கொல்லென்று சிரித்தது சுத்தி நின்றக் கூட்டம். மோகனா மாமிதான் என் சங்கீத ஞானத்தை எக்ஸ்ட்ரா பிட்டுகள் சேர்த்து படமாய் ஓட்டிக்கொண்டிருந்தாள். ”சின்ன வயசுலப் பாட்டுக் கத்துக்க போனா. கீர்த்தனை கத்துக்கிற நேரத்துல பாட்டு டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி வேற எடத்துக்கு மாறிட்டா. பாட்டு டீச்சர்ன்னு இல்ல. இவ யார்ட்ட பாடம் கத்துக்கப் போனாலும் அவாளுக்கு கல்யாணமாயிடறது. ஹிந்தி, பரதம் என எல்லா டீச்சரும் கல்யாணமாகிப் போய்டவே குழந்தைக்கு கலை மேலிருந்து ஆர்வமே போய்டுத்து. ஆனாப் பாருங்கோ சினிமாப் பாட்டெல்லம் அட்சர சுத்தமா ஸ்ருதி பிசகாமல் பாடுவா.” என ஒரு ஃபில்டர் காஃபிக்கு மயங்கி என் அம்மா சொன்ன சங்கதிகளை மாமி வாசித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் ஹால் கதவுகள் திறக்கப்பட்டது. நான்கு பேரின் காலை மிதித்து, நாற்பது சாரி சொல்லி மாமி அமர்ந்தாள். பக்கத்திலேயே நான். கச்சேரி பண்ண வேண்டிய ஆர்.எஸ்ஸும் பப்பளா பளபளாவென்றிருந்தாள். ஆர்.எஸ் பாடப் பாட எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிகொண்டு வந்தது. தலை தொங்கும் தருணத்தில் ஆர்.எஸ்ஸின் ஆஆஆஅ எழுப்பிவிட்டுவிடும். நடுவில் ஆர்வ மிகுதியில் மாமி ஓங்கி என் தொடையில் தட்டிவிட்டாள். ஊர்பக்கம் அள்ளி அள்ளி சாப்பாடு போடுபவர்களுக்கு பெரிய கை என்பார்கள். மாமியையும் அப்படித்தான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இன்றுதான் மாமிக்கு நிஜமாகவே பெரிய கை என்றுணர்ந்தேன். அவ்வப்போது மாமி பாஸ் பண்ணும் கமெண்ட்டுகளுக்கு பதில் வேறு சொல்லனும். அப்படித்தான் தீடிரென ”சுத்ததன்யாசி ஜோரா இருக்குல்ல” என்றாள். நானும் தூக்கக் கலக்கத்தில் “எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி” என்று உளறிவைத்தேன். “கடவுளே இப்படி ஒரு ஞான சூன்யத்தோட என்னை கச்சேரி பார்க்க வச்சிட்டியே” என மாமி புலம்புவது போல் எனக்கு கேட்டது. உடனே எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அடுத்து ஆர்.எஸ் பாடிய பாடலை சிந்துபைரவி ராகம்தானே மாமி என்றதுக்கு, ஆர்.எஸ்ஸின் மீது வைத்தக் கண்ணை எடுக்காமலே “மத்யமாவதி” என்றாள். என் காதில் மத்யமாவது என விழுந்து தொலைக்கவே “நன்னா இருட்டிடுத்து. இப்பப் போய் மதியமாறதுங்றேளே மாமி” என்றேன். மாமிக்கு ரொம்ப எரிச்சலாகிவிட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். இதைப் போல முழுக் கச்சேரியிலும் என் அறிவாளித்தனத்தை பறைசாற்றிக்கொண்டே இருந்தேன். இனி ஜென்மத்துக்கும் என்னை அழைத்துக்கொண்டு எந்தக் கச்சேரிக்கும் போகமாட்டாள் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், ஊரெங்கும் என் பேரை ரிப்பேர் ஆக்கிடுவாளே என்ற கவலையும் குடிகொண்டது. இந்த இரண்டு மாத விடுப்பில் சங்கீதம் கத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஸ்விஸ்ஸில் ஒரு கச்சேரிப் பண்ணாலென்ன எனத் தோன்றியது. வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாய் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சங்கீதம் கத்துக்கொடுக்க ஆளிருக்கா எனத் தேடனும் என்று நினைத்துக்கொண்டேன்.

தோழிகளிடம் என் முடிவை சொன்னதும் சிரித்தார்கள். ரெண்டே மாசத்தில் எப்படிடி என்று கிண்டலடித்தார்கள். ”கத்துண்டு நான் பாடப்போறது ஸ்விசிலாக்கும். அதனால நான் பாடறது தான் கர்நாடிக சங்கீதம்” என்றேன். பின்னர் அம்மா வீடு இருக்கும் ஏரியாவிலேயே ஒருத்தர் சொல்லிக்கொடுக்கிறார் எனக் கேள்விப்பட்டவுடனேயே அந்த அட்ரஸில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தேன். கதவைத் திறந்தவர் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்தார். நான் தயங்கி பாட்டுக் கத்துக்கனும்ன்னு இழுத்ததும், உள்ளே அழைத்துக்கொண்டு போய் காஃபியெல்லாம் கொடுத்து உபசரித்தார். பின்னர் தனக்கு அடுத்த மாதம் டெலிவரியென்றும், வேண்டுமென்றால் தன் மாமியாரிடம் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்லி தன் மாமியாரின் அட்ரஸை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். எந்த ஏரியா என்று பார்க்க அந்தக் காகிதத்தைப் பிரித்த போது முதலில் பெயரைத் தான் பார்த்தேன். மிசஸ். மோகனா என்றிருந்தது. மேற்கொண்டு படிக்காமலேயே அந்தக் காகிதத்தை கசக்கி கீழேப் போட்டு வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தேன்.

-அதீதம் (15-01-2011) இதழில் வெளியானது.

January 17, 2011

ஆடுகளம்

சேவல் சண்டையை பிண்ணனியாய் வைத்து விறுவிறுப்பான படம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பேட்டைக்காரன் (கவிஞர் ஜெயபாலன்), அவர் கூட்டாளிகள் அயூப், துரை (கிஷோர்), கருப்பு (தனுஷ்) ஆகியோர் சேவல் சண்டையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இவர்களை ஒருமுறையாவது ஜெயித்துவிடவேண்டும் என்ற வெறியோடு அலையும் இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி அண்ட் கோ. இரு குழுக்களுக்கும் பிரச்சனை ஆகிவிடுவதால் இனி இன்ஸ்பெக்டருடன் சேவல் சண்டைக்கேப் போகமாட்டேன் எனக் கூறிவிடுகிறார் பேட்டைக்காரன். கூட்டாளியான அயூப்பைக் கொன்றதோடு மட்டுமில்லாமல், ஸ்டேஷனில் வைத்து அவமானப்படுத்தப்படுவதால் பேட்டைக்காரன் இன்ஸ்பெக்டரிடம் சவால் விடுகிறார். சேவல் சண்டையில் இன்ஸ்பெக்டரின் ஒரு சேவல் ஜெயித்தாலும் மொட்டைப் போட்டுக்கொண்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதோடில்லாமல், அதன்பின் சேவல் சண்டையில் ஈடுபடவே கூடாதென்பது பந்தயம். பேட்டைக்காரன் ஜெயிக்காது என அறுத்துவிடச் சொல்லும் சேவலை வைத்துக்கொண்டு பேட்டைக்காரனை மீறி களமிறங்குகிறார் தனுஷ். அந்தப் போட்டியில் அவருக்கு கிடைக்கும் வெற்றியானது அவருக்கு விளைவிக்கும் சங்கடங்களே மீதி ஆட்டம்.

மற்றுமொரு நேட்டிவிட்டி/மதுரை/கிராமத்துப் படமாக இல்லாமல் ஒரு வித்யாசமான கதைக்களத்தை அமைத்த வெற்றி்மாறனுக்குப் பாராட்டுகள். மனிதர்களின் நம்பிக்கை, கோபம், துரோகம், வஞ்சகம், காதல் போன்ற உணர்வுகளை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் திரைக்கதையில். பேட்டைக்காரனாக வரும் ஜெயபாலன் அருமையாக செய்துள்ளார். சேவல்களைப் பற்றி தன் கணிப்பு தவறவே தவறாது என்ற எண்ணத்தை தனுஷ் உடைக்கும்போது மருகுபவர், பின்னர் படிப்படியாக வில்லத்தனம் காட்டும்போது வெளுத்து வாங்குகிறார். அதுவும் பணத்தை தொலைத்துவிட்டதால் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் தனுஷிற்கும் கிஷோருக்கும் லாவகமாக சண்டை மூட்டி விடுவதாகட்டும், அம்மா செத்துப் போச்சு என புலம்பும் தனுஷைப் பார்த்து ஒரு நொடி குரூரப் புன்னகை புரியும்போதும் அசத்துகிறார். தனுஷிற்கு அசத்தலான கேரக்டர். மற்ற இடங்களை விட ஹீரோயினிடம் இவர் காட்டும் ரியாக்‌ஷன்களும் டயலாக்குகளும் க்ளாப்ஸை அள்ளுகின்றது. கிஷோர் நன்றாக நடித்திருக்கிறார். அந்த விக் அவருக்கு பொருந்தவில்லை:(

பாடல்கள் தனித்து இல்லாமல் படத்தோடு வருவது மிகப் பெரிய ப்ளஸ். அதுவும் ஒத்த சொல்லால பாட்டில் தனுஷின் இயல்பான ஆட்டம் சூப்பர். இந்தப் பாட்டிற்கும் யாத்தே யாத்தே பாட்டிற்கும் தியேட்டரில் கைத் தட்டிக்கொண்டேயிருந்தார்கள். ஹி ஹி. நானும்:) பிண்ணனி இசை ஆஹா ஒஹோ ரகமில்லையென்றாலும் மோசமில்லை. இன்னும் கொஞ்சம் மெனெக்கட்டிருக்கலாம். ஒளிப்பதிவும் ரொம்ப நன்றாக இருக்கிறது. கதை பெரும்பாலும் இரவில் நடப்பதாகக் காட்டுப்படுவதால் ஸ்க்ரீனிலும் இருட்டடிக்கிறது. வெற்றிமாறனின் வசனங்கள் மதுரை ஸ்லாங்கில் நன்றாக இருக்கிறது. அதுவும் தனுஷ் ”என்னைய காதலிக்கறன்னு சொல்லி ஏமாத்தினியில்ல. அதுக்கு ஃபைன்” என தாப்ஸியிடம் காசு புடுங்கும்போதும், “நாங்கல்லாம் சுனாமியிலே சும்மிங்க போட்றவய்ங்க”, தம்பி தம்பி என சேவலிடம் பேசும்போதும் கலக்குகிறார்.

ஆடுகளம் - அசத்தல்களம்:)

January 12, 2011

அரசியல் டூன்ஸ் 12-1-2011







January 5, 2011

ராஜ்தானி

சென்னையில் ஆம்பா ஸ்கை வாக் மாலிலும், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சைவ தாலி (thali) உணவகம் ராஜ்தானி. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி உணவுகளை எழுபதிற்கும் மேற்பட்ட காம்பினேஷனில் தருகிறார்கள்.

உட்கார்ந்தவுடனே எவர்சில்வர் தட்டில் குட்டி குட்டி கிண்ணங்களை வைத்துவிட்டுப் போகிறார்கள். 4 வகையான சப்ஜி (ஒரு பனீர் ஐட்டத்துடன்), ஸ்வீட் தால், ஸ்பைசி தால், ஸ்வீட் கடி, ஸ்பைசி கடி, சாலட், க்ரீன் சட்னி, இம்லி சட்னி, மூன்று விதமான ஸ்டார்டர்கள், ஃபுல்கா, பூரி, ஸ்பெஷல் ரொட்டி, கிச்சடி, தயிர் சாதம், ஊறுகாய், ஸ்வீட் என இருபதிற்கு மேற்பட்ட ஐட்டங்கள் அன்லிமிடெடாக வழங்கப்படுகின்றன (ஸ்வீட்டில் மூன்று வகை இருக்கிறது. ஏதாவது ஒன்று மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்).

நாங்கள் சென்றிருந்தபோது ஸ்டார்டராக தயிர்வடை, கட்லட் மாதிரி ஒன்று மற்றும் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, வேர்க்கடலை இன்னபிற பொடிகள் போட்டு ஒரு ஐட்டம் தந்தார்கள். தயிர்வடை அட்டகாசமாய் இருந்தது. வழக்கமாய் நம்மூர் ஸ்டைலில் இல்லாமல், புளிப்பும் இனிப்புமாய் ரொம்பவே நன்றாக இருந்தது.


ஃபுல்கா, பூரியோடு பக்ரி (bhakri) என்ற பெயரில் பிஸ்கட் மாதிரி ஒரு வஸ்து கொடுத்தார்கள். ஃபுல்கா சாஃப்டாக நன்றாக இருந்தது. வேண்டுமெனில் தனியாக ஃபுல்காவின் மேல் நெய் தடவிக்கொள்ளலாம். நெய் இல்லாமலேயே நன்றாக இருந்தது. சப்ஜிகளில் வெண்டைக்காய், உருளை, மொச்சை மற்றும் பனீர் சப்ஜி இருந்தது. எல்லாமே above average. கடி சுமார் தான். இரண்டு ரவுண்ட் முடிந்தப்புறம் கிச்சடி கொண்டுவந்தார். வேண்டாம் என சொன்னதற்கு “கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க” என ஹிந்தியில் சொன்னதோடு சாப்பிட்டப்புறம் இன்னும் கொஞ்சம் கேப்பீங்க என்றார் சிரித்துக்கொண்டே. கிச்சடி நம்மூர் வெண்பொங்கல் டேஸ்டிலிருக்கிறது. நல்ல குழைவாக வாயில் தள்ளியவுடன் வழுக்கிக் கொண்டு போகிறது. தயிர் சாதம் சுமார் ரகம் தான் (இதுல நம்மாளுங்கள அடிச்சுக்கவே முடியாது). ஊறுகாயும் ராஜஸ்தானி/குஜராத்தி ஸ்டைலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆந்திரா ஆவக்காய்:(


டெசர்ட்டில் ஃப்ரூட் ஷ்ரிகந்த், ஸ்ட்ராபெர்ரி கேசரி மற்றும் காஜர் ஹல்வா. நான் ஃப்ரூட் ஷ்ரிகந்த் சாப்பிட்டேன். டிவைன். அவ்வளவு க்ரீமியாக ரியல் ஃப்ரூட்ஸோடு அட்டகாசமாய் இருந்தது. மொத்த மெனுவிலேயே நான் அதிகம் ரிப்பீட்டடித்தது இதுதான். மூன்று முறை:))

இரண்டு இண்ட்ரெஸ்டிங்கான விஷயங்களை பார்த்தேன். ஒன்று கை கழுவ பெரிய பித்தளை சொம்பு/கூஜாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். Gives a royal feel;)) இரண்டாவது சூப்பர்வைசர்கள் கிச்சனுக்கு கம்யூனிகேட் பண்ணும் சைகை மொழி. ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு sign. சிக்னல் கொடுத்த சில நொடிகளில் ஐட்டம் டேபிளுக்கு வருகிறது.

+ அட்டகாசமான சர்வீஸ். பொறுமையாக கேட்டு கேட்டு பரிமாறுகிறார்கள்.

- லொக்கேஷன். இரண்டு கிளைகளுமே மாலில் அமைந்திருப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. வெயிட்டிங் டைம் ஒரு மணி நேரத்திற்கும் மேல். வாரயிறுதிகளில் டேபிள் ரிசர்வ் செய்யும் வசதியில்லை.

மேலதிக தகவல்கள்

உணவகம் - ராஜ்தானி
உணவு - ராஜஸ்தானி/குஜராத்தி சைவ உணவுகள் (Thali only)
இடம் - ஆம்பா ஸ்கை வாக் மால் மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஃபுட்கோர்ட்டில்
டப்பு - 225/thali including taxes

பரிந்துரை - கண்டிப்பாக முயற்சிக்கலாம். காரம் கம்மியான உணவுகள். நன்றாக இருந்தாலும் comparatively அண்ணா நகர் ஸ்ரீ ராஜஸ்தானி தாபா டேஸ்டில் நன்றாக இருக்கிறது.

January 3, 2011

நடிகர் விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு







ண்ணா சத்தியமா இனிமே விஜய் ஏன் கெட்டப் சேஞ்ச் பண்ணமாட்டேங்கறாருன்னு கேக்கவே மாட்டேங்ண்ணா