February 26, 2010

வலையப்பட்டி தவிலே

ஸ்ப்ரிங் போன்ற முடியும், கொஞ்சம் வெட்கம் கலந்தப் புன்னகையுமாய் ஹிந்தி மியூசிக் சேனலான சேனல் V இல் இவர் பாடியபோது யாரும் ஏன் இவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். குறுகிய காலத்தில் இந்த உயரத்தை அடைவோம் என. நரேஷ் ஐயர். 29 வயது இளைஞர். பார்த்தா பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கிறார். நான் பார்த்து இவர் பங்கேடுத்த ஷோக்களில் அநாவசியமாகவோ, அதிர்ந்தோ பேசியதில்லை. கோணங்கி சேட்டைகளோ, வீணான அலட்டல்களோ கிடையாது. பாட்டைப் போல் பேச்சும் மென்மை. ஹைபிட்சில் பிசிறடிக்காமல் பாடுவது இவர் ஸ்பெஷாலிட்டி.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இசைப்புயலின் பார்வை இவர் மீது பட, தொட்டதெல்லாம் சாரி.. பாடினதெல்லாம் ஹிட்டாகிறது. 2005ல் ஆரம்பித்தது இசைப் பயணம். அன்பே ஆருயிரே ஷார்ட்டாக அ.ஆ என்ற ஒரு அதிசிறந்தப் படத்தில் மயிலிறகே என வருடினார் (இப்பவும் அந்தப் பாட்ட நான் கண்ண மூடிட்டு பார்க்கிறேன். கண்ணத்தொறக்க பயம்ம்மா இருக்கு). 2006 ஆம் வருடம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் த்ரூ. Rang De Basanthi படத்தில் இவர் பாடிய 'ரூபரூ' பாட்டு 'பாட்ஷாலா' பாட்டும் வடக்கில் பட்டையைக் கிளப்பின. இவை இரண்டும் foot tappin ரகம். அதே படத்தில் அருமையான மெலடியாக 'து பின் பதாயே' பாடியிருக்கிறார். ரூபரூ பாட்டுக்கு தேசிய விருதும், ப்லிம்பேஃர் விருதும் கிடைத்தது. இசைப் பயணம் தொடங்கி ஒரு வருடத்துக்குள்ளவே இரண்டு பெரிய விருதுகள் பெற்ற பாடகர் என்ற பெருமை இவரைச் சேரும். 'பாட்ஷாலா'வின் ரீமிக்ஸ் வெர்ஷனில் பிளேஸூடன் பின்னியிருப்பார். அதே வருடம் இவர் வரலாறுப் படத்தில் பாடிய இரு பாடல்களும் ஹிட். 'இன்னிசை' பாட்டுக்கு தல ஆடிய பரதநாட்டியம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது:)சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இவர் பாடிய 'முன்பே வா' பாட்டை இன்றளவும் நான்கு முறையாவது ஒளிபரப்பிவிடுகின்றன தமிழ் மியூசிக் சேனல்கள். ரிங் டோன், காலர் ட்யூன் என எங்கேத் திரும்பினாலும் இது தான். எனக்கு இந்தப் பாட்டை விட 'கும்மியடி' பாட்டு ரொம்ப பிடிக்கும்.சிவாஜி படத்தில் 'வாடா வாடா வாங்கிக்கடா'ன்னு ஒரு தீம் சாங் வருமே. பிளேஸேவுடன் சேர்ந்து பாடியது.டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் 'வலையப்பட்டித் தவிலே'. என் ஐபாடில் இருக்கும் ஒரே விஜய் பாட்டு. ரஹ்மானின் இசையும் இவர் குரலும் நடத்தும் ஜுகல்பந்தி அருமையாக இருக்கும்.2008ஆம் ஆண்டு இரண்டு பாடல்கள் ஹிட்டடித்தன. ஒன்று வெள்ளித்திரை படத்தில் 'உயிரிலே என் உயிரிலே' என்ற மெலடி. இசையருவி இதற்கு சிறந்த மெலடி அவார்ட் கொடுத்தது.அடுத்து வாரணம் ஆயிரம் படத்தில் வரும் 'முன் தினம் பார்த்தனே' பாட்டு. இந்தப் பாட்டிற்காக பிலிம்பேஃர் அவார்ட் கிடைத்தது. பின்னர் பசங்க படத்தில் பாடிய 'ஒரு வெட்கம் வருதே' பாட்டு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஏதோவொரு நிகழ்ச்சியில் சுப்ரமணியபுரம் படத்தில் ஹிட்டடித்த 'கண்கள் இரண்டால்' பாட்டை பாட முதலில் இவரைத்தான் அனுகினாராம். லோ பிட்சில் பாடுவது வசதியாக இல்லாததால் பெள்ளி ராஜை பாட வைத்ததாகக் கூறினார். திரும்பவும் தலக்கு வருவோம். ஏகன் படத்தில் வரும் 'ஏ சாலா' பாட்டும் இவர் பாடியது தான். ஜூனியருக்கு பிடித்த பாட்டு. கந்தக்கோட்டை படத்தில் வரும் 'உன்னை காதலி என்று ச்ச்சொல்வா' பாட்டு நன்றாக இருக்கும் (ஆனால் ஏன் ச்சொல்லவான்னு பாடறாங்கன்னு தெரியல. லேடி வாய்ஸ் இன்னும் மோசம். அவுங்க ஜொள்ளவாம்பாங்க. கொடுமை).

விண்ணைத்தாண்டி வருவாயா வரைக்கும் வந்த இவர் விண்ணைத் தாண்டியும் சாதிப்பதற்கான தகுதிகள் கொண்டவர். மேலும் பல ஹிட்கள் கொடுத்து இசைப் பிரியர்களை மகிழச் செய்ய வாழ்த்துகள் நரேஷ்.

February 22, 2010

ரத்தக் கறை

பரந்து விரிந்து கிளை பரப்பிய ஆலமரத்தை கவுத்து வைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது அந்த மெழுகுவர்த்தி. உருக்குலைந்து, உயரம் குறைந்து, உடம்பு பெருத்து, அகல் விளக்கில் நிற்கவைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி தன்னால் இயன்றளவு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவள் உடல் எனக்குத் தெரிந்தது. தெளிவாய். சமீபத்தில் தான் உயிரை விட்டிருந்தால். என்னால். ஆம் நான் தான் அவளைக் கொன்றேன். இதோ என் கைகளில் இன்னும் உலர ஆரம்பிக்காத ரத்தம். அடர்சிவப்பு ரத்தம். கறைபடிந்த என் கரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் செய்தது சரியா தவறா என்ற விவாதத்தை என் மனமும் மூளையும் ஆரம்பிக்கவில்லை. இன்னும் இல்லை. ஏனென்றால் இப்பொழுதுதான் அவளைக் கொன்றேன்.


எந்த சலனமும் இல்லாமல் அவள் உடலைப் பார்த்தேன். ப்ச். அநியாயமாய் உயிரை விட்டிருந்தாள். திரும்பவும் என் கைகளைப் பார்த்தேன். ரத்தம் மெதுவாய் உலர ஆரம்பித்திருந்தது. அங்கங்கே கொஞ்சம் கருஞ்சிவப்பாய் மாற ஆரம்பித்தது. இவள் ரத்தம் எந்த குரூப்பாய் இருக்கும். தெரியவில்லை. தெரிந்துகொள்வதிலும் ஆர்வமில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரியும். இந்த ரத்தம் உழைப்பை உறிஞ்சி எடுத்த ரத்தம். உடல் கிழித்து வெளியேற்றப்பட வேண்டிய ரத்தம். அசுத்தமான ரத்தம்.

அவள் குடும்பத்தைப் பத்தி நினைத்தேன். எத்தனைப் பேர் இவளை நம்பியிருப்பார்கள்? அம்மா, அப்பா, அண்ணா, தம்பி என யாராவது? கல்யாணம் ஆனவளா? குழந்தை இருக்குமா? அவளுடம்பில் எந்த அடையாளமும் இல்லை. இவள் வீடு திரும்புவாள் என எத்தனைப் பேர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனரோ? இன்று வரவில்லையென அச்சம் கொள்வனரோ? இனி வரவேமாட்டாள் எனத் தெரிந்தால் அவர்கள் என்ன ஆவார்கள்? எப்படி நடந்துக்கொள்வார்கள்? சர்வ நிச்சயமாய் எனக்குத் தெரியாது. கொன்றது நானெனத் தெரிந்தால் என்னை சபிப்பார்களோ? என் மீது வன்மம் கொண்டு என் உயிரெடுக்க முயற்சிப்பார்களோ? பழிக்குப் பழி? தெரியவில்லை.

அவளின் இறப்பிற்கு நான் காரணமாவேனா? இல்லவே இல்லை. அவளேதான் காரணம். ஆம். அவளேதான். எனக்கு அவளைப் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. என்னையே சுற்றி சுற்றி வந்தாள். அலட்சியம் செய்தேன். விடவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சல் கோபமாய் மாறியது. விளைவு என் கண் முன் கிடக்கிறது அவளது உடல். ரொம்ப மூர்க்கத்தனமாய் நடந்துகொண்டேனோ எனத் தோன்றுகிறது. ம்ம்ம். கோபத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ப்ச். முடிந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதை மட்டுமே யோசிக்கனும். இந்த உடலை என்ன செய்வது? தெரியவில்லை. எப்படி டிஸ்போஸ் செய்வது? தெரியவில்லை. கூறு போட்டு மூலைக்கொன்றாய் வீசிவிடலாமா? நினைக்கும்போதே குமட்டிக் கொண்டு வந்தது. சகல மரியாதையுடன், தப்படித்து நாக்கை மடித்து ஆடிக்கொண்டு இவளை இடுகாட்டில் எரிக்கவோ புதைக்கவோ முடியுமா? முடியவே முடியாது. எனினும் அப்படி நடந்தால்? நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. ஒரு கொலையை செய்துவிட்டு கவலையேப் படாமல் சிரித்துக்கொண்டிருக்க என்னால் தான் முடியும்.

மறுபடியும் கைகளைப் பார்த்தேன். ரத்தம் சுத்தமாய் உலர்ந்திருந்தது. மெதுவாய்ச் சுரண்டினேன். உதிர்ந்தது. மறுபடியும் சுரண்ட மீண்டும் கொஞ்சம் அடையாய் உதிர்ந்தது. சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தேன் அவள் ரத்தத்துடன். தீடிரென அருவெறுப்பாய் உணர்ந்தேன். உடம்பெல்லாம் ஏதோ ஊர்வது போலிருந்தது. குளித்துவிடலாம் என முடிவு செய்தேன். குளித்தால் அழுக்குப் போகும். ஆனால் நான் செய்த பாவம்? ஒரு உயிரை எடுத்திருக்கிறேன். யார் தந்தது இந்த உரிமையை? ஆனால் அவள் செய்தது நியாயமாகுமா? அவள் என் உரிமையில் தலையிடப் பார்த்தாளே.

இப்படியே எவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருப்பது? தெரியவில்லை.
நான் செய்தது சரியா தவறா? தெரியவில்லை.
இவள் உடலை என்ன செய்ய வேண்டும். தெரியவில்லை?

மெல்லிய ஆரஞ்சு வெளிச்சத்தில் அவளின் உயிரற்ற உடல் நன்று தெரிந்தது...

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். எதைப் பற்றியும் நினைக்காமல். நினைக்கப் பிடிக்காமல். ஆனால் நினைக்காமலிருக்க முடியவில்லை. பலத்த சப்தத்துடன் அவள் வாங்கிய அடி. வலியால் கத்தக் கூட நேரமின்றி அவள் உயிரைவிட்ட அந்த நொடி. அவளிடத்தில் நானிருந்திருந்தால்?? நினைத்தவுடனேயே உடம்பு உதறியது. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தேன். மெல்லிய சத்தத்துடன் மின்சாரம் வந்தது. பெருத்த சப்தத்துடன் சுழலத் தொடங்கிய மின்விசிறி மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைத்தது. அவளுடனே அவள் நினைவுகளும் பறந்துப்போனது.

February 18, 2010

தீரா அவப்பெயர்

ஒவ்வொரு முறை நான் மறுக்கும்போதெல்லாம் நான் செய்த அந்த வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்படுகின்றேன். அப்படி என்ன பிழைன்னு கேக்கறீங்களா? இருங்க சொல்றேன். அது தெரிஞ்சுக்க நீங்க கொஞ்சம் என்னோட கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி ட்ராவல் பண்ணனும். சுமார் 8 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த "துயர" சம்பவம்.

2001ஆம் ஆண்டு (வரலாறு மிக முக்கியம்) பிளஸ் டூ முடித்து ரிசல்ட் பற்றிய கவலையில்லாமல் எண்டரன்ஸ் எக்ஸாம் தலைவலிகளுடன் போராடிக்கொண்டிருந்தோம். வாரம் மூன்று நாட்கள் குரூப் ஸ்டடி. அப்புறம் ஒரு நாள் முழுவதுமாய் ரிலாக்சேஷன் (அபிஷியலாய்). இந்த ரிலாக்சேஷன் நாளன்று யாராவது ஒரு நண்பர் வீட்டில் கூடி கும்மியடிப்போம். மோஸ்ட்லி ஒரு படம் பார்த்துவிடுவோம். சிடியோ இல்லை டிவியோ. அப்படி ஒரு முறை நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது (அல்லது பாவ்லா பண்ணிக்கொண்டிருந்தபோது) கவிதா அந்த யோசனையை சொன்னாள் (நாங்கள் என்பது நான், கவிதா, ஜெயா, பவி, பிரபா). வரலாற்றுப் பிழைக்கான முதல் விதை. என்ன யோசனையென்றால் அப்போது ரிலிசாகி ஒ(ட்)டிக்கொண்டிருந்த அந்த படத்தை தியேட்டரில் போய் பார்ப்பதென்று. சாம்பிள் பேப்பருள் புதையுண்டிருந்த நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். Movie in theatre. That too with friends. Sounded great. ஆனால் வீட்டில் பர்மிஷன் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாய் தோன்றியது. யார் யார் பெற்றோரிடம் பரிந்து பேசி ஓகே பெறுவது என சார்ட் போடப்பட்டது. பிரபா வீட்டில் அவள் கசின் கல்யாணத்தை காரணம் காட்டி கறாராய் அனுமதி மறுக்கப்பட்டது (தப்பித்துவிட்டாள்).

அப்பவே அண்ணா அந்தப் படமா என இழுத்தார்கள். எனக்கு அந்த நடிகர் மீது பெரிய அபிமானம் ஏதுமில்லை. எனக்கு எப்பவுமே கமல்ஹாசன் தான். எப்பவாவது ஆமிர்கான். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் வரும் ரிவ்யூக்களை பெரிதாய் மதிப்பதில்லை/படிப்பதில்லை. அந்த கறுப்பு ஞாயிறு இன்னும் நினைவில். தனித்தனியாய் போனால் வெயிட்டிங் பிராப்ளம் வருமென்பதாலும், தியேட்டரில் மற்றவர்களின் பார்வையை சமாளிக்க வேண்டியும் நால்வரும் முத்துக்கடையில் சந்தித்துவிட்டு சேர்ந்தே தியேட்டருக்கு போவதென்றும் முடிவாகியது. பஸ்சில் கண்டக்டர் சில்லறை இல்லைன்னா இறங்கிடுங்க என்று முதல் பிரச்சனையை துவக்கினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என புரிந்து அப்போதே அப்பீட் ஆகியிருக்கனும். விதி யாரைவிட்டது. வாங்கடி வாங்க என வலைவிரித்தது தெரியாமல் போய்விட்டது.

சில்லறை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ் பிடித்து தியேட்டருக்குள் நுழைவதற்குள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். யார் க்யூவில் நின்று டிக்கெட் வாங்குவதென்ற பெருங்குழப்பத்தை நொடியில் தீர்த்து பவி டிக்கெட் வாங்கினாள். இரண்டாவது பல்பாக வந்திருந்த கொஞ்ச நஞ்ச பெண்களில் தனியாக வந்தது நாங்கள் நால்வர் தான். மொத்த தியேட்டரில் பெண்கள் எண்ணிக்கை ஆறோ ஏழோ தான். We didnt bother though. உள்ளே சென்று வரிசை தொடக்கத்திலிருந்து அமர்ந்தோம். ஜெயாவின் பக்கத்தில் ஒரு சீட் காலியாகவே இருந்தது. ஜெயா என்னை என்ன என்பது போல் பார்த்தாள். நான் ரியாக்ட் செய்வதற்குள் படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு படத்தை சென்சார் சர்ட்டிபிகேட்டிலிருந்து பார்த்தால் தான் திருப்தியாகிறது.

ஆரம்பமே திகிலாயிருந்தது. படத்தின் முதல் நொடியிலிருந்து ஆரம்பித்த அதிர்ச்சி படம் முடியுறவரைக்கும் தொடருமாறு டைரக்டர் பார்த்துக்கொண்டார். ஹீரோவுக்கு அப்பா மகன் (மாக்கான்) என இரட்டை வேடங்கள். இண்டர்வெலில் போய்விடலாம் என்ற என் கோரிக்கை டிக்கெட் விலையையும், மற்ற நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு (குறிப்பாய் பசங்க. கலாட்டா பண்ணிவிடுவார்கள்) ஆளாவோம் என்ற அபத்த காரணத்தையும் காட்டி ரிஜெக்ட் செய்யப்பட்டது. ஹீரோவின் மீதான கோவத்தை பாப்கார்ன், குட்டி சமோசா, வீல் சிப்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டு தீர்த்தோம். செகண்ட் ஹாஃப்பில் அப்பா கேரக்டர் சூப்பராய் எழவைக் கூட்டினார். அதைவிட அவர் ஜோடி. மேக்கப் போட்டாலே அவிங்க ஆண்ட்டி மாதிரி தான் இருப்பாங்க. இதில மேக்கப் இல்லாம வேற க்ளோசப்லலாம் வந்து கலங்கடிச்சாங்க. ஒவ்வொரு பாடலின்போது பேய் படம் பார்ப்பது மாதிரி கையால் முகத்தை மூடி விரலிடுக்கு வழியாகவே பார்த்தேன்(தோம்). க்ளைமேக்ஸ் வந்தப்புறமும் ஒரு டூயட் பாட்டு. எக்ஸ்ட்ரா லார்ஜ் வயிறோடு ஹீரோ ஹீரோயின் ஆடியபோது அழுவதா சிரிப்பதா எனத் தெரியாத பரவச நிலையில் இருந்தோம். கோர்ட்டில் ஹீரோ பேசும் வசனங்கள். முடியலடா சாமீ.

மூன்று விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. ஒன்று தலைவலிக்கு குறைந்தது 2 சாரிடானாவது வேண்டும். ரெண்டு தெரிஞ்சவங்க எல்லாம் கிண்டல் பண்ணியே சாவடிக்கப்போறாங்க. மூன்றாவது இந்தப் படம் என சஜெஸ்ட் செய்த கவிதா மரண அடி வாங்கப்போவது. மூன்றுமே கனஜோராய் நடந்தது. "வெற்றிப் படம் பார்த்த வீராங்கனைகள் பராக் பராக் பராக்" என கோச்சிங் கிளாசில் நுழைந்தபோது கத்தி கலாட்டா பண்ணார்கள். படம் பார்த்த எஃபெக்ட் மூன்று நாள் குரூப் ஸ்டடியைத் தவிர்த்தோம். உறவுகள் நட்புகள் என அனைவரின் கேலிப்பேச்சுக்கும் ஆளானோம். என்னை கிண்டல் செய்தவர்கள் எல்லாரும் அந்தப் படத்தை ட்ரேய்லரோடு நிறுத்திவிட்டார்கள் என்பது கூடுதல் செய்தி.

அதற்கு அப்புறம் எவ்வளவோ சூரை மொக்கைப் படங்களை (இந்த லிஸ்டில் ஒண்டிப்புலியின் ஆதி. ஷப்பா. ஜுரமே வந்திருச்சு) நண்பர்களுடன் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் படத்தினால் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது கூட அந்தப் படத்தின் காட்சியோ, பாடலோ டிவியில் பார்க்க நேரிட்டால் ரூமிற்கு சென்று ஒளிந்துகொள்கிறேன். ஹைலைட்டாக சென்ற வாரம் "The Curious Case of Benjamin Button" பார்க்க அமர்ந்தோம். அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. "சுத்த போர்ண்ணா. நான் தூங்கப் போறேன்" என்றவளைப் பார்த்து கோரசாக அண்ணாவும் தம்பியும் "சிட்டிசன் படத்தையே தியேட்டர்ல பார்த்தவ நீ. இது போரடிக்குதா" என்றார்கள்.

ஹூம். என்று தான் நீங்குமோ இந்த அவப்பெயர்:(

February 15, 2010

பாராட்டு விழா - I'm Lovin it..

ஷங்கர் - எஹ்ஸான் - லாய் கூட்டணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. Karthik calling karthik படத்தில் Uff teri ada பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. படத்தையும் பார்க்கவேண்டும். இரண்டு காரணங்கள். ஒன்று ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. இரண்டாவது பஃர்ஹான் அக்தர் மற்றும் தீபிகா படுகோன். ரெண்டு பேரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். பார்க்கணும். பார்ப்போம்:)
*********

நாணயம் படத்தில் எஸ்.பி.பி சித்ரா காம்பினேஷனில் "நான் போகிறேன் மேலே" நிஜமாகவே மேலே போக வைக்கிறது. சித்ரா மேடம் மறுபடியும் கலக்கியிருக்கிறார்கள். அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் ஆரோமலே பாடல் சூப்பர். வித்தியாசமான பீலிங் தருகிறது. உயிரேவில் வரும் நெஞ்சினிலே பாட்டில் வரும் மலையாள வரிகள் பிடித்திருந்தது போலவே இதுவும். கௌதம் வி ஆர் வெயிட்டிங் பாஃர் அ விசுவல் ட்ரீட். சொதப்பிடாதீங்க சாமி.
***********

தம்பியிடம் பேசலாமென போன் போட்டேன். தியேட்டரில் இருக்கிறேன் என துண்டித்தான்.
மறுநாள் அவனே பேசினான். வழக்கமான குசலம் விசாரித்தப்பின்

என்ன படம்டா?

அசல்

எப்படி இருக்கு?

ம்ம்ம். ஒரு தடவை கஷ்டப்பட்டு பார்க்கலாம்.

கிர்ர்ர். எப்படியெல்லாம் ரிவ்யூ கொடுக்கிறாங்க
**********

டி.நகரில் பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்தில் இருக்கும் இரண்டு மூன்று கடைகளை இடித்துவிட்டு அந்த இடத்தை நடிகர் சங்கத்திற்கு எழுதித்தரலாமென்றிருக்கிறேன். எனக்கும் பாராட்டு விழா எடுப்பார்களா? நன்றி சொல்லி விளம்பரம் கொடுத்தோமா, சால்வையப் போத்துனோமான்னு இல்லாமா. ஹுக்கும். விரைவில் முற்றும் துறந்த??!! ஸ்ரீஸ்ரீ ரகசியானந்தமையின் பரவச நடனம் கலைஞர் டிவியிலோ, இசையருவியிலோ காணக் கிடைக்கும் பாக்கியம் கிட்டும். ஜெய் ரகசியானந்தமையி. இந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டே வள்ளுவர் கோட்டம் பக்கம் போனால் ஒரே காக்கி மயம். என்னவென்று விசாரித்தால் ஜெகத்ரட்சகன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிச்சதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறாராம். ஆணியே புடுங்க வேணாம் போ!!!
*************

இடத்தைப் பத்தி பேசியதும் போன மாதம் நடந்தது நினைவுக்கு வருகிறது. வேளச்சேரி சதர்லேண்ட் எதிரே இருக்கும் செல்போன் டவரில் ஒரு ஆள் ஏறிக்கொண்டு குதிக்கப் போவதாக அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்தார். தீ அணைப்பு வண்டி, போலீஸ் என ஒரே அல்லோல்கலப்பட்டது ஏற்கனவே அப்படி இருக்கும் சாலை. மாலை ஆட்டோக்காரரிடம் ஆளை இறக்கிட்டாங்களான்னு கேட்டேன். இறக்கிட்டாங்க. நீலாங்கரையாம். ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய நிலத்தை ஆளுங்கட்சி ஆளுங்க புடுங்கிக்கிட்டாங்களாம் என்றார். பாவமாய் இருந்தது. ஆங். மேலே இருக்கிற பிட்டுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ:)
**************

ஓப்பனிங் ஷார்ட்லி என்ற அறிவிப்போடு வீட்டுப் பக்கத்தில் மெக்டொனால்ட்ச் மராமத்து வேலைகள் நடக்குது. டில்லிக்கு காலேஜ் டூர் போயிருந்தபோது அங்கிருந்து மெக்டொனால்ட்ஸில் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு அஞ்சு ரூவா குடுத்தபோது எரிக்கிற மாதிரி பார்த்தது இன்னும் ஞாபகமிருக்கு. மெக்டோனால்ட்சின் தீவிர ரசிகையில்லை என்றாலும் அவர்களின் மெக் ஆலு டிக்கி ரொம்ப பிடிக்கும். Its raining food in Velachery. வேளச்சேரியைப் பிடிக்க ஆரம்பித்திருப்பதற்கு ஒரே காரணம் எண்ணிலடங்கா விதவிதமான உணவகங்கள். எத்தனை மாதம் இங்கேன்னு பார்ப்போம்.

February 11, 2010

இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்


February 9, 2010

கவிதைகளும் நடுவர்களும் மன்னார் அண்ட் கோவும்

பதிவுலகமே பரபரப்பாக கவிதையில் கபடியாடிக்கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் கவிதைகள்/கவுஜைகள். கவுண்டமனி சொல்வதுபோல் "இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமீ. அ ஆ எழுதறவனெல்லாம் கவிஞர்ங்கறான்". பதிவர்கள் கவிதை எழுதுவதைப் பார்த்து மன்னாருக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. துணைகளான சோடா மற்றும் மாரியிடம் மன்னாரு தன் ஆசையை வெளிப்படுத்த அடுத்த யாரை தூக்குவது என்பதற்கான திட்டம் தீட்டுகிறது மன்னார் & கோ

மன்னாரு கவுஜ எய்தற்தெல்லாம் அம்புட்டு சுகரில்ல. நெம்ப யோஜிக்கனும். எப்பவும் எத்தையோ பறிகொடுத்தாப்புல அண்ணாந்து பாத்துக்கினே இர்க்கனும். இதெல்லாம் வேலைக்காவது மன்னாரு.

சும்மா கிட மாரி. பாட்டு மட்டும் மன்னாருக்கு தெரியுமா இன்னா. அய்யர தூக்கல. அதுமேரி எவனாங்காட்டியும் கவுஜ எல்தறவனையும் தூக்கியாந்து மன்னாருக்கு கத்துத்தார சொல்லுவோம். என்னா சொல்ற மன்னாரு?

டக்கர் ரோஜனைடா சோடா. சரி யாரடா தூக்கறது?

ஒரு நாலஞ்சு பேரோட மேட்டர எட்துக்கினு பெரிய மனுசங்களாண்ட போவோம். அவுங்கோ யார்து டக்கராக்குதுன்னு சொல்றாங்களோ அவங்கள தூக்கியாந்து பட்றையப் போட்ருவோம். என்ன சொல்ற?

யோசனையை செயல்படுத்த மன்னார் அண்ட் கோ முதலில் போவது போயஸ் கார்டனுக்கு.

கையில் சின்ன கர்ச்சீப்போடு உள்ளே வருகிறார் செல்வி.ஜெயலலிதா.

"நாட்டில் ஆயிரம் பிரச்சனை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கையில் கதை, கவிதை, சினிமா என கிளம்பி விடுகிறார் முதலமைச்சர். இதே என் ஆட்சியில்..(விளங்கிறும். அம்மா நீங்க தான் ஜட்ஜம்மா) நான் சர்ச் பார்க் பள்ளியில் படித்தபோது நிறைய ஆங்கில கவிதைகள் எழுதியிருக்கிறேன். கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக பேனா மையின் விலையை அதிரடியாய் குறைத்தது என் அரசு தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் கொடநாடுக்கு ஓய்வெடுக்க செல்கிறேன். அப்போது உடன்பிறவா சகோதரியுடன் கலந்தாலோசித்து நல்ல கவிதைகளை இனம் காண்பதெப்படி என அறிவிக்கிறேன்."

இது வேலைக்காவது என அடுத்து ம.அ.கோ பார்க்கப் போனது முத்தமிழறிஞர் கலைத்தாயின் தவப்புதல்வன் பெண்சிங்கம் தரப்போகும் ஆண்சிங்கம் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

"உடன்பிறப்புகளே. கவிதை, கவியரங்கம் போன்ற இடங்களில் தான் என் ஓயாத பணிச்சுமையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வு பார்க்க முடிகிறது. ஆனால் என்னை நிரந்தரமாய் ஓய்வெடுக்கச் சொல்கிறார் ஒரு சதிகாரி. பெண்சிங்கம் படம் வெளிவரும் முன்னரே அதற்கு சிறந்த படம் விருதை கொடுக்க வந்திருப்பது என்னை மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது".

ஹூக்கும். ஐயா நல்ல கவிதைன்னா இன்னா? இத்தப் படிச்சுப் பார்த்து எது நல்லாருக்குன்னு சொல்லுங்க

கவிதைகளைப் படிக்க ஆரம்பிக்கிறார் முதல்வர். நான்கைந்து கவிதைகளிலேயே டென்ஷனாகி. "யாரது? இப்படியெல்லாம் கேவலமாக கவிதை எழுதுவது? வரலாறு தெரியாதவர்கள். இதுவரைக்கும் படித்த கவிதைகள் ஒன்றில் கூட என்னைப் புகழ்ந்து யாரும் எழுதவில்லயே? நீங்க என்ன செய்றீங்க. ஒரு கவிதைப் பட்டறைக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஜெகத்ரட்சகனை சிறப்பு பயிற்சியாளரா அனுப்பி வைக்கிறேன். கூடவே பா.விஜய், வைரமுத்து, வாலி, சு.ப.வீ எல்லாரையும் அனுப்புறேன். பயிற்சி முடிஞ்சாற்பாடு புதுசா போட்டி வைங்க. பெரிய விழா எடுத்து போட்டில வெற்றி பெற்றவங்களுக்கு எல்லாம் கவிமாமணி பட்டம் கொடுப்போம். என்ன சொல்றீங்க"

ஒரு பக்கம் வைரமுத்து, பா.விஜய் மறுபக்கம் வாலி, ஆப்துல் ரகுமானை நினைத்துப் பார்த்து டர்ர்ர்ர்ராகி அடுத்து லேண்ட் ஆகுமிடம் பிரதமர் இல்லம்.

"ஹான் ஜி. டீக் ஹை ஜி. ஜி. ஜி. ஒகே ஜி" என தரையில் குத்துக்காலிட்டு போன் பேசி முடிக்கிறார் பிரதமர். "சோனியாஜி வாஸ் ஆன் தி லைன்".

நீ பம்மும்போதே தெரிஞ்சுதுடி யாருன்னு. வெளக்கம் வேறயா. பி.எம்ஜி யூ படி திஸ். டெல்லு எது டக்கரு?

"Why did u come here. U know i cant take any decision. U better go to madamji" என்கிறார். சோனியா வீட்டு வாசலில் தமிழக காங்கிரஸின் அத்தனை கோஷ்டிகளும் இருப்பதைப் பார்த்து மண்டையை காப்பாற்றிக்கொள்ள மீண்டும் தமிழ்நாடு ரிடர்ன்.

2011 முதல்வராக இருக்கும் இருவரை கேட்டால் என்ன என எண்ணி முதலில் சின்ன கவுண்டரிடம் போகிறது ம.அ.கோ

"என்னது கூட்டா சேர்ந்து தேர்வு செய்யனுமா. கூட்டா சேர நான் ஏன் தனிக்கட்சி ஆரம்பிச்சேன்? கவிதைகளை மக்களுடன் கடவுளுடனும் சேர்ந்து படித்து தான் செலக்ட் செய்வேன். (இது வேலைக்கே ஆவாதென்பதை எடுத்துக் கூறியதும்) ஒரு நாளைக்கு பதிவுலகத்துல சுமார் 200 கவிதைகள் எழுதப்படுது. அதுல புரியறது 4. புரியாதது 66. எண்டர் தட்டுனது எண்பது. ஹைக்கூ அம்பது" ஆ உம் என நாக்கை மடிக்க, நாக்கு வெளியே தள்ள நாட்டாமையை பார்க்கப் போகிறது ம.அ.கோ. அவர் கட்சியை சேல்ஸ் பண்னுவது சம்பந்தமாக வெளியே போயிருப்பதால் அடுத்து கவுண்டமணி. கூடவே செந்திலும்.

சூரியன் பட பேக்கிரவுண்டு மியுசிக்கோடு கவுண்டர் எண்ட்ரி.

"அய்யய்ய எம்.எல்.ஏ ஆனாலே தொல்லை தான். அங்க வா. இங்க வா. அதத் தொற. இதத் தொறன்னு. ஒரே கஷ்டமப்பா. ஆங் எங்க கவிதா. எத்தன கவிதாவை செலக்ட் பண்ணனும்?"
(கவிதை பேப்பர்களை நீட்ட)
"அடப்பாவிகளா. கவிதை செலக்ட் பண்ணவா என்னிய கூப்புட்டீங்க. நானு ஏதோ கவிதாங்கற பொண்ண செலக்ட் பண்ண கூப்டீங்கன்னுல்ல நினைச்சேன்."
செந்தில் சிரிக்க

"ஏண்டா டமாரத் தலையா உனக்கு கவிதாவப் பத்தி என்னத் தெரியும்ன்னு நீ சிரிக்கிற?"

"அண்ணே கவிதைய கவிதைன்னு சொல்லலாம். கவுஜன்னு சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்ணே"

அடேய் என செந்திலைத் துரத்திக்கொண்டு கவுண்டர் ஓட அடுத்து நிற்பது மானாட மயிலாட குழு முன்பு.

"ம்ம். பின்னிட்டீங்க. ஆனா பாருங்க. இந்த கவிதைல ஒரு லைனுக்கும் இன்னொரு லைனுக்கும் நிறைய கேப் இருக்கு. அதனாலேயே கெமிஸ்ட்ரி மிஸ்ஸாகுது"

"சூப்பர். சூப்பர். ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் இருக்கிற சின்க் நல்லா வந்திருக்கு. ஹாட்ஸ் ஆஃப்"

"ஓ மச்சான்ஸ் இது தமில்ல எளுதியிருக்குது. எனிக்கு புர்ய மாட்டேங்குது. மச்சான்ஸ் நீ நமீதா தமில்ல போடி வைக்குது. நான் ஜட்ஜ் ஆவுது"

மண்டை சுத்திய அடுத்து ஆஜராவது நீயா நானா செட்டிலிருக்கும் கோபிநாத்திடம்.

"வாவ். அடுத்த நீயா நானா போட்டிக்கு இந்த மேட்டரையே யூஸ் பண்ணிப்போம். கவிதைகள் Vs கவுஜைகள். யாரையும் முழுசா பேச உடமாட்டோம். கண்டிப்பா போட்டியாளர்கள்ல ஒரு 4 பேராச்சும் பிழிய பிழிய அழுவனும். நான் அவங்கள் ஆறுதல் பண்னி அவங்களுக்கே பரிசை கொடுத்துடறேன். இத வெச்சே நடந்தது என்ன? அப்படின்னு ஒரு ப்ரோகிராமையும் பண்ணிடலாம். முக்கியமான விஷயம் நீங்களும் கூட காம்பியரிங் பண்ணனும்னா கோட்டு போட்டுகிட்டு தான் வரனும். ஓகேவா?"

வேலைக்காவாது என ராணி ஆறு ராஜா யாரு டீமிடம் போகிறார்கள். பப்லு, அப்பாஸ் போன்றோர் கோரஸாக "செலக்ஷன் எல்லாம் பண்ணிடலாம். வெற்றி பெற்றவங்களை அறிவிக்கும்போது கண்டிப்பா கட்டிபிடிச்சு முத்தம் கொடுப்போம்".

ஒருவேளை பொம்பிளிங்கா கவுஜ ஒகேயாயிருச்சுன்னு வை செருப்ப கயிட்டி இறுக்குவாங்கோ மாரி. வா எஸ்ஸாயிரலாம்.

கடைசி முயற்சியாக டீ.ஆரிடம் போகிறது ம.அ.கோ. கவிதை அனைத்தையும் படித்து முடிப்பவர் சொடுக்கு போட்டபடியே "என்னய்யா எழுதறாங்க? பிரஞ்யை, அசூயை, ஆயாசம் பாயாசம்னு. கவிதன்னா இப்படி எழுதனும்யா." குனிந்து தலைமுடியை கோதிவிட்டவாறே டான்ஸ் ஆடிக்கொண்டே ஒரு கவிதை சொல்கிறார். அதைக் கேட்ட மன்னாரு மாமே என்க்கு கவுஜ வடிக்கிற ஆசையே பூட்ச்சுடா என சொல்லி எகிறி குதித்து ஒடுகிறார். அந்தக் கவிதைஇதில் கவிதையோடு ஆடலுடனான தற்காப்பு கலை


போனஸாக ஒரு இங்லீஸ் கவுஜ.


டிஸ்கி : இந்த இடுகை நகைச்சுவை நோக்கத்திற்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

February 5, 2010

செக்கர் வானம் இதுதானோ?

சென்ற பதிவின் தொடர்ச்சி.

ஜனவரி 26ஆம் தேதி சாயந்திரம் 4 மணிக்கு கன்யாகுமாரி சென்று இறங்கினோம். விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவரை கண்டுக்கினு வர போட் ஏறலாம் என்று போனால் அனுமர் வாலை விட நீண்டிருக்கிறது க்யூ. க்யூவில் நின்று பத்து நிமிடம் கழிச்சு நண்பன் சொன்னது "ஹே மறந்துட்டேன். 4.30 மணிக்கெல்லாம் ஃபெரி சர்வீஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க". அப்புறம் அவன் ஏன் கொஞ்ச நேரம் நொண்டிக்கிட்டு இருந்தான் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அங்கிருந்த நேரா மூக்குத்தியம்மன்/பகவதி அம்மன் கோவிலுக்கு போனோம். அங்க நடை திறப்பதற்கு முன்னமே 2 கி.மீ தொலைவிற்கு க்யூ. ஆணியே புடுங்க வேணாம். கடற்கரையில் காலை நனைச்சுட்டு அப்படியே சூர்ய அஸ்தமனத்தைப் பார்த்திடலாம்ன்னு கிளம்பினோம்.


கடற்கரையில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை பார்க்கும் வ்யூ பாய்ண்ட்
உருக்கிய வெள்ளி போன்ற கடலலை
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
தகதகக்கும் தங்க தட்டாய் சூரியன்

நர்சிம் செக்கர் வானம் என்றொரு பதிவு எழுதியிருந்தார். அவர் விவரித்திருந்த செக்கர் வானம் இதுதானோ? நர்சிம் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்றது சரியான்னு சொல்லிட்டுப் போங்க.


அஸ்தமனத்த பார்த்த கையோட கொய்யா, அன்னாசி, கரும்பு ஜூஸ் எல்லாத்தையும் முழுங்கிட்டு ரூமுக்கு போய் ஒரு குட்டி தூக்கம் போட்டோம். திரும்பவும் டின்னரின் போது படம் போவது பற்றி பேச்சு வர நாணயம் பார்க்கலாமென்று முடிவாகி தியேட்டர் பற்றி விசாரிக்கையில் "அந்த தியேட்டர்ல ரொம்ப கொசு கடிக்கும். படமே பார்க்க முடியாது. ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடும் தியேட்டர் ஏசியோட நல்லா இருக்கும்" என்றார். விடு ஜூட். படம் பார்த்துவிட்டு வந்து தூங்க ஆரம்பிக்கும்போதே எழுப்பிட்டாங்க. கல்யாணத்த சிறப்பா நடத்தி வைச்சுட்டு???!!! மண்டபத்துலேயே டிஸ்கஷன் ஆரம்பிச்சாச்சு அடுத்து எங்கன்னு? சாயந்திரம் 5.30க்கு தான் ட்ரெய்ன். மணி 10.30 தான் ஆவுது. பேசாம திருநெல்வேலி போய்ட்டு வருவோமா என ஒரு ஐடியா. அல்வா வாங்க தான் முடியும். பேசாம கன்னியாகுமாரியே போவோம். வள்ளுவர் கிட்ட போய் "அய்யா பெரியவரே. நீர் பாட்டுக்கும் பொழுது போகாம எழுதி வச்சிட்டு போய்ட்டீரு. ஒவ்வொரு வருசமும் 30 குறள மனப்பாடம் பண்ணி மார்க் வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு"ன்னு நியாயம் கேட்டுட்டு வரலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி கிளம்பியாச்சு.
இந்த தடவை பத்தே நிமிசத்துல ஃபெரில உட்கார்ந்துட்டோம் (ஃபெரியில் அனுமதிக்கும் முறையில் பல குறைகள். பெரிய தள்ளுமுள்ளு ஏற்படுகிறது). விவேகானந்தர் பாறைல ஒரு பத்து நிமிசம் சுத்திட்டு வள்ளுவரப் பார்க்கப் போகலாம்னா ஃபெரிக்கு வெயிட் பண்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. இனிமே வள்ளுவரப் பார்த்து நியாயம் கேட்டா, "நாங்க ஏறாம எப்படி ட்ரெய்ன் எடுக்கலாம்ன்னு?" மம்தா பானர்ஜியோடு வீணா சண்டை வருமேன்னு வள்ளுவர்கிட்ட போகாம ரூமுக்கு நடைய கட்டிட்டோம். மூட்டை முடிச்செல்லாம் எடுத்துகிட்டு வர்ற வழியில எஃக் பஃப்ஸ், க்ரீம் பன், கோக், முறுக்கு, தட்டை, பிஸ்கெட், வேர்கடலை பக்கோடா மட்டும் வாங்கிக்கொண்டோம்.

ட்ரெய்ன் ஏறினவுடனே சாப்பிட ஆரம்பித்தது. போரடிக்கும்போது மொக்கை போடுவதும் பின்பு சாப்பிடுவதுமாய் போனது. நடுவில் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்தோம். மொபைல் போனில் ஸ்டோர் பண்னி வைத்திருந்த பாட்டுகளை போட்டு விட்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். எவ்வளவு வயசானாலும், எங்க போனாலும் இந்த பிட் அடிக்கிற பழக்கம் போகவே போகாதா என அவனைக் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் சைட் சீட்டில் உட்கார்ந்திருந்த ரயில்வே போலீசார் அடிக்கடி துப்பாக்கியை தொட்டுப் பார்த்துக்கொண்டதால், உசாராகி எங்கள் இசைப் பயணத்திற்கு தேசிய கீதம் வாசித்துவிட்டோம். ஏற்கனவே சொன்னா மாதிரி டாக்டருக்கு கதை மட்டும் சிக்கியது. சீன் எல்லாம் இனிமே தான் டெவலப் செய்யனும். 28 காலை வீடு வந்து சேரும் வரை மீண்டும் கல்லூரி சென்று வந்தது போலவே இருந்தது.

February 3, 2010

தமன்னாவா வடிவேலுவா??

ஜனவரி 25 மாலை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் டிக்கெட் புக் செய்திருந்தோம். 6.45க்கு ட்ரெய்ன் என தகவல் தரப்பட நான் 5.15 மணிக்கே ஜூனியர் பார்வையில் படாமல் வீட்டை விட்டு எஸ்கேப் ஆக பிளான் செய்திருந்தேன். MTC இணையதளத்தில் அண்ணா நகரிலிருந்து எக்மோர் போக 75 நிமிடங்கள் ஆகும் எனப் போட்டிருந்தது. கடைசி நேரத்தில் அப்பா "எனக்கு நுங்கம்பாக்கத்தில் தான் வேலை. நானே உன்னை ட்ராப் செய்துவிடுகிறேன்" என சொல்ல, 5.30 மணிக்கெல்லாம் புறப்பட்டாச்சு. சரியாய் 50.50க்கு எக்மோரில் வண்டியை நிறுத்தி இறங்கிக்கோ என்றார்.

"ஏன்ப்பா. வேலை வந்துடுச்சா? நான் ஆட்டோல போகவா?"

"எக்மோர் ஸ்டேஷன் வந்துடுச்சு"

"யாரக் கேட்டு இவ்வளவு சீக்கிரம் வந்தது. MTC வெப்சைட்ல 75 நிமிஷம் ஆகும்ன்னு போட்ருந்தானே."

"அவன் ஊரெல்லாம் சுத்தி காமிச்சுட்டு வர அவ்வளவு நேரம் ஆகும்."

"கிர்ர்ர். நீயாவது சொல்லிருக்கலாம்ல. ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு?"

"எனக்கு என்னடி தெரியும். நீ உன் பிரெண்ட்ஸ் பார்க்க போறியோன்னு நினைச்சேன்"

ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு நினைச்சுகிட்டே போனா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பத்தின டீடெய்ல்ஸ் எதுவுமே போடல. பக்கத்துலயே ரூம்ல இருந்த இரண்டு அங்கிள்ஸ்கிட்ட எவ்வளவு பவ்யமா கேக்க முடியுமோ அவ்வளவு மரியாதையோட

"நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எப்ப சார் வரும்?"

"அது 5.30 மணிக்கே போய்டுச்சேமா"

நான் அப்படியே ஸாக் ஆயிட்டேன். அடக்கடவுளே. 5.45ன்னு சொல்றதுக்கு பதிலா 6.45ன்னு சொல்லிட்டானோ என நினைத்தபடியே "இல்ல 6.45க்குன்னு சொன்னாங்களே?"

"ஓ. டைம் சொல்லிக் கேளும்மா. அது ஸ்பெஷல் ட்ரெய்ன். இனிமேதான் வரும்."

அவரிடம் என்ன சொல்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போதே மக்களிடமிருந்து போன் வர எஸ்கேப்.

ரவானா ஹோகி என நான் ஸ்டாப்பை கதறிக்கொண்டிருந்த ஸ்பீக்கரைப் பார்த்து எரிச்சலுடன்

"இவங்களுக்கு வாயே வலிக்காதா?"

"ஹே அதுக்குதானடி சம்பளம் தர்றாங்க"

கிர்ர்ர்ர் என அவளை முறைக்க, அதற்குள் அங்கிள் ரொம்ப சீரியசாய்

"அது ரெக்கார்டட் வாய்ஸ்மா" என்றார். மற்ற நால்வரும் கோரசாய் "ஆணியே புடுங்க வேணாம் போ" என மனதிற்குள் சொல்லிக் கொண்டோம்.

ஒவ்வொருத்தராய் வந்து சேர 6.30 மணியாகிவிட்டது. ட்ரெய்ன் கிளம்பியும் கதவருகேயே நின்றுகொண்டிருந்த நண்பனை தமன்னாவுக்கு வெயிட்டிங்கா என கிண்டல் பண்ண, அதற்கு இன்னொரு தோழி, வழியனுப்ப வந்தவனை உள்ளாற ஏத்திவிட்ட வடிவேலு கதையாகப்போகுது என நக்கலடிக்க களைகட்ட ஆரம்பித்தது.

"கோவில்பட்டி எப்ப வரும்?"

"ஏன்?"

"இல்ல. என் கூட வேலை செய்றவருக்கு கோவில்பட்டி சொந்த ஊரு. லீவுல இப்ப அங்கதான் இருக்காரு. கோவில்பட்டி வந்ததும் கூப்பிட சொன்னாரு."

(கோவில்பட்டி விடியற்காலை 3மணிக்கு வரும்போல)

"எதுக்கு? ஸ்டேஷனுக்கு வந்து டாட்டா சொல்லுவாரா. ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி லூசுங்களோட ட்ராவல் பண்ண வைக்கற"

கிட்டத்தட்ட பத்தரை மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். சக பயணிகளின் வற்புறுத்தலால் தூங்கப்போனோம் (இந்த பெருசுங்க தொல்லை தாங்கமுடியலடா சாமீ). காலையில் ஐந்தரை மணிக்கு சூடா பஜ்ஜி, வடை சமோசா விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்துக்கு யார்ரா சாப்பிடுவா என்று யோசித்த எங்களுக்கு கொஞ்ச நேரத்திற்கு பிறகு புரிந்தது. 7 மணிக்கு போக வேண்டிய ட்ரெய்ன் 9 ஆகியும் முக்கிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய சோகம் ட்ரெய்னில் பாண்ட்ரி இல்லை. தண்ணி காலி. திங்க ஏதுவுமில்லை. 5 மணிக்கே பல்லை விளக்கினது எவ்வளவு பெரிய தவறு எனப் புரிந்தது. அதைவிட மாபெரும் தவறு பஜ்ஜி வாங்கி வைக்காமல் விட்டது. ரிடர்ன் ட்ரிப்பின் போது ஒரு மினி பேக்கரியே ஸ்டாக் வைத்தக் கதை அடுத்த பதிவில். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வள்ளியூரில் ட்ரெய்ன் நின்றுகொண்டிருந்தது. அப்போ எடுத்த புகைப்படங்கள் இவை. எங்க பார்த்தாலும் பச்சைப் பசேல்ன்னு ஊரே ஏசி போட்டுவிட்டால் போல் இருந்தது.ஸ்டேஷனில் இறங்கி அங்கிள் வீட்டில் கொட்டிகிட்டு ஏசி ரூம் வந்தால் கண்ண கட்டுது. இருந்தும் ஊர் சுத்தனும்ங்கற உயர்ந்த லட்சியத்தோட, கடமையுணர்ச்சியோட கிளம்பி எங்களுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருந்த ட்ரைவரிடம் மத்தூர் தொட்டிப்பாலம் பார்க்கனும் என்றோம். அதெல்லாம் நல்லாருக்காது. திற்பரப்பு அருவி போய்ட்டு அப்படியே பத்மநாபபுரம் அரண்மனை பார்க்கலாம்ன்னாரு. நாங்கதான் அறிவாளி ஆச்சே. இன்னிக்கு ஜனவரி 26. அரண்மனை மூடியிருப்பாங்க என்ற இணையத்தகவலை சொன்னதும் அப்படியான்னாரு. அப்பவே உசாராயிருக்கனும். நாகர்கோவிலிலிருந்து ஒரு மணி நேர பயணம். திற்பரப்பு அருவி அன்புடன் (ஹுக்கும்) வரவேற்றது.

போட்டோவுல என்னாமா தண்ணி கொட்டுதுன்னு பார்த்தீங்கல்ல. இப்ப நிஜ அருவியப் பாருங்க.


அருவியப் பார்த்து காண்டாகி கிளம்பிவிட்டோம். அருவிக்கு வந்து சும்மா போனா நல்லாருக்குதுன்னு ஆளுக்கொரு வாழைக்காய் பஜ்ஜியும், பழம்பூரியும் (நேந்திரம் பழ பஜ்ஜியாம். டக்கரா இருந்தது) அமுக்கிவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு கிளம்பினோம். ட்ரைவர் :"இங்கன" என ஆரம்பித்தார். நேரா பொண்ணு வீட்டுக்கு வண்டிய விடுங்க சாமின்னு ஒருசேர பெரிய கும்பிடு போட்டோம். அங்க போய் மதியம் செம லஞ்ச் சாப்பிட்டோம் (வடை, பாயாசம், அப்பளம், 3 பொரியல், அவியல், எரிசேரி, பருப்பு, சாம்பார், ரசம், மோர்ங்கற மெனுவ சொன்னா நீங்க வயித்தெரிச்சல் படமாட்டீங்க தானே). தூக்கம் கண்ண சுழுட்ட அடுத்த நாங்க கிளம்பின இடம் கன்னியாகுமாரி. சூர்ய அஸ்தமனம் அடுத்த பதிவில்...

February 1, 2010

கன்னியாகுமாரியில் ஆயிரத்தில் ஒருத்தி

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக பிளான் செய்த ப்ரோகிராம் தடைகளை மீறி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. ஜனவரி 27 தோழி கல்யாணத்திற்காக இரண்டு நாட்கள் நாகர்கோவில்/கன்யாகுமாரி சென்று வந்தேன் நண்பர்களுடன். ஜூனியர் சமர்த்தாக பாட்டியிடம் இருந்துகொண்டான். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் காலேஜ் சென்று வந்தது போன்ற உணர்வு. மூன்று பேர் மிஸ்ஸிங் எங்கள் கேங்கில். அந்த குறை அவ்வப்போது தெரிந்தது. திங்கள் மாலையில் இருந்து வியாழன் காலை வரை எந்தக் கவலையுமில்லாமல் (ஜூனியர் என்ன செய்கிறான் என்பதை தவிர) இருந்தேன். சூப்பர் விருந்தோம்பல். தங்குவதற்கு ஏசி அறை, மூன்று வேளை சாப்பாடும் வீட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற அன்புக் கட்டளை, ஸ்டேஷனில் இறங்கியதும் ஒதுக்கப்பட்ட இன்னோவா கார் மறுபடி ஸ்டேஷனில் ட்ராப் செய்த வரை எங்களுக்காகவே ஒதுக்கப்பட்டது என அங்கிள் தூள் பண்ணிவிட்டார்.
**********

நாங்கள் சென்ற இடம் சரியில்லையா இல்ல இடமே அப்படித்தானான்னு தெரியல. நாகர்கோவிலில் இருந்து ஒரு மணி நேரம் பயணத்தில் வருகிறது திற்பரப்பு அருவி (அப்படி சொல்லலாம தெரியல). அருவியப் பார்த்தவுடனே பிரெண்ட் சொன்னது "எங்க வீட்டு ஷவர்ல இத விட அதிகமா தண்ணி கொட்டும்". உருப்படியா பார்த்தது குமரியில் சூர்ய அஸ்தமனம். புகைப்படங்கள் அடுத்த பதிவில்.
***********

ஏற்கனவே சொன்னது போல் காலேஜில் இருந்த உணர்வே இருந்தது, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு பழங்கதைகள் பேசி என ஜாலியாக போனது. அதிகமாக பேசப்பட்ட மேட்டர் யார்யாருக்கு கல்யாணம். யார் காதல் கல்யாணத்தில் முடிந்தது என்பதுதான். நான்கு வருடங்கள் தெரியாமலே இருந்த பல காதல் கதைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.
***********

பதிவுலகமே துவைத்து தொங்க விட்ட இரு படங்களை இந்த வாரத்தில் பார்த்தாகிவிட்டது. ஒன்று விரும்பிப் பார்த்தது. நாகர்கோவிலில் ஆயிரத்தில் ஒருவன். படம் என் பார்வையில்.. சரி வேண்டாம் விடுங்க. ஐ லைக்ட் இட். இன்னொன்ன்று டாக்டர் நடித்தது. என்னது படத்த பத்தி ஏதாவது சொல்லனுமா? ப்ளீஸ் வேண்டாம். நான் அழுதுடுவேன்.
**********

ட்ரெய்னில் திரும்பியபோது ஆயிரத்தில் ஒருவன் ஸ்பூஃப் மேட்டரும், இளைய தளபதி டாக்டர் ஒண்டிப்புலிக்கான ஸ்க்ரிப்ட் ஒன்றும் கிடைத்தது. கூடிய விரைவில் பட்டி டிங்கரி பார்த்து வலையேற்றப்படும். ட்ரெய்னில் நாங்கள் போட்ட மொக்கையைத் தாங்கிக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு அங்கிளுக்கும், எங்களை இறக்கிவிடாமல் பெரிய மனதுடன் நடந்துகொண்ட ரெயில்வே போலீசார் இருவருக்கும், அந்தப் பதிவுகளை டெடிகேட் செய்யலாமென்றிருக்கிறேன்.
**********