December 29, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கொஞ்ச நாள் என் இம்சையில்லாம சந்தோஷமா இருந்திருப்பீங்க. அது அப்படியே நீடிச்சு நிலைக்க விட்ருவேனா? அதான் வந்துட்டேன். இன்னைக்கு காலை தான் தாம்பரம் வந்தேன். மூன்று நாட்களும் சந்தோஷமாகவே சென்றன. So now back to the pavillion. நிறைய ஆணிகள் சேர்ந்துபோச்சு. எல்லா வேலையையும் முடிச்சுட்டு, புத்தாண்டையும் நல்லபடியா வரவேற்றுட்டு, பயணக்குறிப்புகளையும், பிற மொக்கைகளையும் அடுத்த ஆண்டிலிருந்து பதியறேன்.
எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

December 19, 2008

ஷார்ட் பிரேக்

என் கிறுக்கல்களை (சகித்துக்)படித்துக்கொண்டிருக்கும் வலையுலக பெருமக்களே உங்களுக்கெல்லாம் ஒர் நற்செய்தி. ஆமா அதேதான்.

கொஞ்ச நாளைக்கு என் மொக்கைகளிலிருந்து உங்களுக்கு ஜாமீன் தரலாம்னு இருக்கேன். நோட் தி பாயிண்ட் கொஞ்ச நாள்தான். கொஞ்ச நாளாவே கொஞ்சம் depressed feel பண்றேன் (காரணத்தை அப்புறமா பதிவிடுறேன்). என்னை refresh பண்ணிக்கறதுக்காக ரகுவின் ஐடியாப்படி ஊட்டில ஒரு நாலு நாள் பொறுக்கலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம இப்பதான் பாண்டிச்சேரிலருந்து வந்ததால வீடு அலங்கோலமா (ரகுவின் உபயம்) இருக்கு. அத வேற சரி பண்ணனும். வர்ற புதன் இரவு பயணம் ஆரம்பமாகுது.

So கொஞ்ச நாள் மீ த எஸ்கேப் from பதிவுலகம். நடுவில் நேரம் இருந்தால் எல்லார் பதிவிலும் ஆஜராரேன். இப்போதைக்கு அவ்ளோதான்.

Will be back with a bang after 2 weeks:)

December 16, 2008

ஜூனியரின் க்ளிக் கலாட்டா

டிஸ்கி : எப்பவோ எடுத்த ஜூனியரின் போட்டோஸையும் சில பதிவர்களையும் கோர்த்து விட்டுருக்கேன். யார் மனசாவாது கஷ்டப்படறமாதிரி இருந்தா சொல்லுங்க டெலீட்டிட்றேன்.


கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??


எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?


நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:)


முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா?


என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா? ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.


நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.


அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.


பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.


ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)


கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.


December 10, 2008

49ஓ

உங்கள் தொகுதியில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் அதே சமயம் உங்கள் வாக்கினையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கான வழி தான் இந்த 49ஓ.


49ஓ என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஓட்டுச் சீட்டு முறைப்படி வாக்களிக்கும்போது, யாருக்குமே வாக்களிக்க விருப்பம்யில்லையெனில், செல்லா வோட்டு போடுவார்கள். ஆனால் இய்ந்திரத்தின் மூலம் வாக்கைப் பதியும்போது அப்படி செய்ய முடியாது. கண்டிப்பாக யாருக்காவது வோட்டு போட்டுத்தான் ஆகவேண்டும். இந்த இடத்தில் தான் 49ஓ காட்சிக்கு வருது (வாக்குச்சீட்டு முறையின்போதும் இந்த விதி அமலில் இருந்தது). வோட்டுச்சாவடிக்கு சென்று உங்கள் identification சரிபார்த்த பின், அங்கு இருக்கும் ஆபிஸரிடம் (presiding) சென்று என் வாக்கினை 49ஓவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொன்னால் அவர் ஒரு படிவம் தருவார். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் பெருவிரல் ரேகையை அதில் இட்டு, ஆபிஸரும் கையெழுத்து போட்டால் முடிந்தது. நீங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதே சமயம் உங்கள் வோட்டும் misuse செய்யப்படவில்லை என நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.


இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒன்றுமில்லை. உங்கள் வோட்டு கள்ளவோட்டாக மாறவில்லை. அவ்வளவே. நிறைய பேரிடம் ஒரு தப்பான தகவல் பரவி வருகிறது. அதென்னவென்றால் "ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வாக்காளருக்கு கிடைத்த ஓட்டு எண்ணிக்கையைவிட அந்த தொகுதியில் பதிவான 49ஓ வாக்குகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் அறிவக்கப்படும். ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் மறுபடியும் களத்தில் இறங்கக்கூடாது. கட்சிகள் அனைத்தும் புது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்." ஆனால் இதுபோல் தேர்தல் கமிஷனின் விதியில் குறிப்பிடப்படவில்லை. ஹூம் இது மட்டும் நடைமுறைக்கு வருமேயானால், அரசியல்வாதிகளின் குடுமி மக்கள் கையில்.


நான் இரு முறை முயற்சி செய்து ஒரு முறை 49ஓ முறைப்படி என் வாக்கினைப் பதிந்தேன். முதல் தடவை காலேஜ் படிக்கும்போது பூத் ஆபிஸரிடம் சென்று படிவம் கேட்டதுக்கு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். form இல்லை போ என்றார். கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு, அப்புறம் போய் ஒரு சுயேச்சைக்கு வோட்டுப் போட்டுட்டு வந்தேன். அடுத்த தடவை விடக்கூடாது என்று, ஆபிசரை மிரட்டி (form தரலைன்னா chief election commissionerக்கு புகார் அனுப்புவேன் என்று) கடமையை நிறைவேத்தினேன்.


மக்களுக்கு வோட்டு போடாமல் (எந்த வேட்பாளருக்கும்) இருக்கும் உரிமையை 49ஓ விதி வழங்குகிறது.


டிஸ்கி : என்னோட முந்தைய பதிவின் பின்னூட்டத்தில ஜீவன், ஜமால், அமித்து அம்மா, பூர்ணிமா போன்றோர் 49ஓவப் பத்தி கேட்ருந்தாங்க. அவங்க நிஜமாவே தெரியாமா கேட்ருந்தா இது விளக்கப் பதிவு. சும்மானாச்சுக்கும் விளையாட்டுக்கு கேட்ருந்தாலும், பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடிடுச்சேன்னு நான் சந்தோஷப்படுவேன்:)

December 9, 2008

விழிப்பது எப்போது?

இன்னும் ஒரு மாதம்? அல்லது 3 மாதம்? இல்லை அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரை தான் இந்த சம்பவம் பேசப்படும் என்று ஒரு பதிவர் இன்னொருவரின் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். என் பிரார்த்தனை அது பொய்யாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஒரு சாமானியனாக நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். அரசியல்வாதிகளின் அலட்சியம் போல் நமக்கும் பன்மடங்கு இருக்கிறது. நான் வோட்டுப் போட்டால் எல்லாம் மாறிடுமான்னு கேக்கறவங்க நிறைய பேர். கண்டிப்பா மாறாதுதான். ஆனால் நம் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய முயற்சியாக வோட்டுப் போடுவது இருக்காலமில்லையா? நம்மில சில பேருக்கு 49ஓ என்ற ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. நான் கடந்த இரண்டு முறையாக என் வோட்டை 49ஓவாகத்தான் பதிந்திருக்கிறேன் (இதற்கு நான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருந்தது). முதல்ல நம்ம கிட்ட இருக்கற குறைகளைக் குறைத்துக்கொள்வோம். அப்போ தான் அடுத்தவன தைரியமாய் கேள்வி கேக்கலாம்.

சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.

1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி

பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).

December 5, 2008

கொள்கைகளும் சில காம்பரமைஸ்களும்

டிஸ்கி : இது அரசியல் பதிவல்ல.


அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.


சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும் இந்த கனகாம்பரம், டிசம்பர் பூ எல்லாம் பயங்கர அலர்ஜி. வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் கொஞ்சமே கொஞ்சமாய் மல்லி அல்லது முல்லை தலையில் குடியேறும். அதுகூட கொஞ்ச நேரம் தான். அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்டில் எனக்கு பயங்கர ஷாக். அங்க டிசம்பர் பூவை காசு கொடுத்து வாங்குவார்கள். என்கிட்ட மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்ப நான் பூ வைக்கிறதுலருந்து தப்பிக்க என் பையன தான் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறேன். "இல்லம்மா பூ வைச்சா அது கீழ உதிருதா. சஞ்சு எடுத்து வாயிலப் போட்டுக்கிறானேன்னு வைக்கறதேல்ல". ஆனாலும் ஒரு சின்ன துணுக்காவது கொடுத்து வைச்சுக்கோன்னு சொல்லும்போது மறுக்க முடியல.


அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு. அத்தை (அப்பாவின் அக்கா) வரும்போதெல்லாம் அம்மா என்கிட்ட கெஞ்சுவாங்க. வளையல் போட்டுக்கோ, கொலுசு போட்டுக்கோ, ஜிமிக்கி வெச்ச தோடு போட்டுக்கோன்னு. இல்லைன்னா பொண்ண வளர்த்துருக்கற லட்சணத்தப் பாருன்னு என்னதாண்டி சொல்லுவாங்க என்பாள். நீயேம்மா அடுத்தவங்களுக்கு பயந்து வாழற. உனக்குத் தெரியாத உன் வளர்ப்பைப்பற்றி என்று பேசி அவள் வாயடைப்பேன். அதே மாதிரி எனக்கு சின்ன வயசுல மூக்கு குத்தனும்னு சொன்னப்போ நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து எல்லாரும் கப்சிப். நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே என் மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குகுத்திடுமா என்று சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. எங்கம்மா வேற நான் சொன்னா கேக்கல இல்ல இப்ப என்ன பண்ணுவேன்னு வெறுப்பேத்தினாங்க. வேற வழியில்லாம் சின்னக்குழந்தைங்கல்லாம் நான் கத்தறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு மூக்கு குத்திட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் சபையில வச்சு மாமியார் எனக்கு வைர மூக்குத்தி குடுத்தாங்க. ஆனா நல்லவேளையா என்கிட்டருந்து வைர மூக்குத்தியும், மூக்குத்திகிட்டரூந்து நானும் தப்பிக்க ஏதுவாய் எனக்கு மூக்கு குத்தின இடம் செப்டிக் ஆகிடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சப்போது கொஞ்ச நாளைக்கு மூக்குத்திய கழட்டி வைங்கன்னுட்டாங்க. அப்ப கழட்டின மூக்குத்தி இரண்டரை வருஷமாய் பொட்டிக்குள்ளயே தூங்குது.


எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது. தெரிஞ்சிருந்தும் பெற்றோர் அவர்களுடைய மரியாதைக்கு எனக்கு எல்லாம் செஞ்சிக்கொடுத்தாங்க. அதுல பிரச்சன்னை என்னன்னா என் மாமியார் எதாவது ஒரு விசேஷம்னா போதும். எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கோ என்பார். எனக்கு நகைக்கடை மாடல் போல் தோற்றமளிப்பதில் இஷ்டமேகிடையாது. ஆனா மாமியார் தப்பா எடுத்துக்காத மாதிரியும் சொல்லனும். இந்த விஷயத்தில் என்னோட ஆபத்பாந்தவன் ரகுதான். அவருக்கும் தங்க நகைகள் மேல் ஈடுபாடு இல்லாததால் "உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.


எல்லா விதத்துலயும் ஒரளவுக்கு தப்பிச்சிக்கிட்ட என்னை கோழி அமுக்குறாபோல சிக்க வச்சது என்னோட வளைகாப்பன்னிக்குதான். குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கையிலயும் ரெண்டு டஜன் வளையல்களையும், தலையில் ஒரு ஏழெட்டு முழம் பூவையும் கட்டிட்டாங்க. அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(


என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது (இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டுன்னு கேக்கறீங்களா?? எல்லாம் ஒரு விளம்பரம் தான்).


ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).

December 2, 2008

ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008

இதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:


டான்ஸ் நம்பர்ஸ்:
*********************
இந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(


1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)
2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)
3. ஹாப்பி நீயு இயர் - குருவி
4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி
5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)
6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்
7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்
8. குட்டிப் பிசாசே - காளை


டான்ஸ் நம்பர் அல்லாதவை
**********************************
இவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.


1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)
2. ஹர ஹர சம்போ - அலிபாபா
3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்
4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
5. அன்பே என் அன்பே - தாம் தூம்
6. தாம் தூம் - தாம் தூம்
7. யாரோ மனதிலே - தாம் தூம்
8. தேன் தேன் - குருவி
9. சின்னம்மா - சக்கரக்கட்டி
10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா
11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்
14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்
15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்
16. டோனா - சத்யம்
17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி
19. ச்சூ ச்சூ மாரி - பூ

சில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.

இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)