May 28, 2009

யாருமில்லா கடற்கரையில்

"இந்தமுறை நமது பயணத்தின்போது உனக்கு ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருக்கிறது" என்றாய். நீ காரைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் ஆள் நடமாட்டம் கம்மியான கடற்கரை. "இந்த இடத்தை எப்படிடா கண்டுபிடித்தாய்?" என்றேன். "கண்ணம்மாவுக்காக ஸ்பெஷலாய் தேடியது" என்றாய். இரண்டடி எடுத்து வைத்தால் உருக்கிய வெள்ளி போல் பொங்கி வரும் கடலலையில் காலை நனைத்துவிடலாம். ஏனோ அன்று உன்னுடன் முதன் முதல் கடற்கரை சென்றபோது கால் நனைக்கத் தோணவில்லை. அடிக்கடி பார்க்கும்/பார்த்த கடல் என்றாலும் அன்று உன் அருகாமையினால் ரொம்பவே ரம்மியமாயிருந்தது.


ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் அமைதியாக இருந்தோம். மனதில் நினைப்பதையெல்லாம் வார்த்தைகளாய் வடிக்க முடியாமல் நாம் தவித்ததைப் போன்று தான் அலைகளும் எதையோ திரும்ப திரும்ப சொல்ல தவிப்பது போலிருந்தது. பொது இடங்களில் என் கைவிரலைப் பிடிக்கக்கூட தயங்கும் நீ அன்று என் தோளில் கை வைத்து நின்றாய். உன் தோளில் சாய்ந்து நிற்கவேண்டுமென்ற என் ஆசையை கொஞ்சம் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டேன். ரொம்ப நேரம் கழித்து "என்ன யோசிக்கிறாய்?" என கேட்டாய். "I want to freeze this moment" என்றேன் அமைதியாக. இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் நின்றாய். போகலாம் என்றேன். "அதுக்குள்ள என்னடி அவசரம்? இன்னும் கொஞ்சம் நேரம் நிற்கலாம்" என்றாய். "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இங்கேயே இப்படியே இருக்கனும்னு அடம்பிடிப்பேன். சம்மதமா?" என்றேன். அழகாய் தலைகோதியபடி சிரித்துக்கொண்டே சொன்னாய் "இருந்துட்டாப் போச்சு".

"என்னையே ஏன் பார்த்துகிட்டிருக்கிற?" என கேட்டாய். "நான் உன்னைப் பார்க்கலை. உன்னிள் இருக்கும் என்னைப் பார்க்கிறேன்" என நான் சமாளித்தாலும், உன் கண்ணில் தெரியும் காதலானது கடலை விட பெரிதாக இருக்கிறது. உன்னைத் தவிர வேறெதையும் என் கண்கள் காண மறுக்கின்றன. இளநீர் குடித்தபோது அந்த கடையில் இருந்தவர் நம்மையே பார்த்துக்கொண்டிருந்தார். முதன் முதலாக the perfect ஜோடியைப் பார்க்கிறார் போலும். நான் இதை சொன்னதும் சிரித்தாய். "அழகாய் சிரிக்கிறாய்" என்றேன். மறுபடியும் சிரித்தாய். Infectious Smile. கொஞ்ச நேரம் பேசிவிட்டு திரும்பி நடக்கையில் என்னை அணைத்துக்கொண்டு நடந்தாய். நாம் அங்கு கழித்த 20 நிமிடங்கள் 20 வருடங்கள் வாழ்ந்த வாழ்வின் திருப்தியை மனதுக்கு அளித்தது.

திகட்ட திகட்ட நம்முள் காதல் பொங்கிப் பெருகியதால் கடல் நீர் அன்று கற்கண்டாய் இனித்திருக்கும்.

May 27, 2009

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தால்?

நாத்தனாருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம். தம்பி பாப்பாவை தொடக்கூடாது என் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் என மூத்தவன் ஒரே அழுகை. "அது என்ன அவர் பாப்பவா? தொடக்கூடாதுன்னு சொல்ல" என பயங்கர ரகளை. அண்ணா ஆனதுக்கு கங்கிராட்ஸ்டா என்றேன். அதுக்கு அவன் "நான் ஏற்கனவே மூணு தடவை அண்ணா ஆகிட்டேனே. முதல் தடவை புவனேஷ்க்கு, சௌந்தர்யாவுக்கு (சித்தப்பா குழந்தைகள்), சஞ்சய்க்கு அப்புறம் இவனுக்கு" என்றான். அவன் பக்குவத்தையும் பாசத்தையும் பார்த்து அசந்துவிட்டேன்.
********

இரண்டாவது தடவையாக ஜூனியரை பிரிந்திருந்தேன். அவனென்னவோ தாத்தா பாட்டியுடன் செம ஜாலியாக இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. 2 மணி நேரத்துக்கு ஒரு முறை போன் பண்ணி அம்மாவிடம் அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தேன். சென்ற புதன்கிழமை அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் சனிக்கிழமை சந்தித்துவிட்டு ஞாயிறு கிளம்பியாச்சு. மறுபடியும் நேற்று மாலை பார்த்தேன். இந்த நொடி வரை ரெண்டு பேரும் பேசிக்கொண்டே இருக்கின்றோம் அவன் மொழியில். பிரிவுத் துயர் வாட்டியெடுத்துவிட்டது. Those days were hell da kutty:(
*********

கடந்த ஒரு வாரமாக பாண்டியில் லவ்லி கிளைமேட். மாலை வேளைகளில் சிலுசிலுவென்று வீசும் காற்றும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மழையும் ஊரே ஏ.சி போட்டால்போல் ஜில்லென்றிருக்கிறது. ஒரு கப் டீயுடன் என் வாழ்வின் மிக இனிய தருணங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தேன். I was wandering in my own world:)
*********

சீக்கிரமே கடுப்பை கிளப்பிய 2 ரெஸ்டாரெண்ட் (போய் 2 மாசம் ஆகுது) பத்தி பதிவு போடறேன். அதுவரைக்கும் இந்த choco truffle பார்த்து பசியாத்திக்கோங்க.
*********

கடந்த வாரம் முழுவதும் பயங்கர வேலை. நண்பர்களின் கடைக்கு ரெகுலராக வர முடியவில்லை. பதிவெழுத நேரமுமில்லை. இரண்டுக்கும் சேர்த்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

May 18, 2009

ஆலம்பறை கோட்டை

பொங்கல் விடுமுறையின் போது குடும்பமாய் சின்ன ட்ரிப் அடித்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. வழக்கம்போல் அப்பா வேலையிருக்கென ஜகா வாங்கிவிட்டார். அம்மாவும் வரவில்லையென கூறிவிட (இந்த அம்மாக்களே இப்படித்தான்) ரகு, நான், என் தம்பி மூவரும் மட்டும் கிளம்பினோம். மகாபலிபுரம் பார்த்தாச்சு. எத்தனை தடவை தான் தூங்கிட்டிருக்கிற முதலையையே பார்க்கிறது. அப்பா கடப்பாக்கம் போய்ட்டு வாங்களேன்னு சொல்ல விடு ஜூட்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் கடப்பாக்கம் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலம்பறை கோட்டை. கோட்டைன்னவுடனே ரொம்ப பெருசா எதிர்பார்த்தீங்கன்னா என்னை மாதிரி ஏமாந்து தான் போவீங்க. நுழையும்போதே தென்படும் தமிழ்நாடு தொல்பொருள் துறையின் அறிவிப்பு பலகையை பார்க்கும்போதே கோட்டையின் பராமரிப்பு லட்சணம் தெரிந்துவிடுகிறது. அந்த இத்துப்போன பலகையில கோட்டையின் (ஆக்சுவலா அப்படி சொல்றதே ரொம்ப தப்பு. குட்டி சுவர்ன்னு வேணா சொல்லலாம்) வரலாறு போட்டிருந்தாங்க. கி.பி 1735 ஆம் ஆண்டு, நவாப் தோஸ்த் அலிகான் இந்த கோட்டையை ஆண்டு கொண்டிருந்தார்! கி.பி 1750 இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய ஃபிரெஞ்சு தளபதி ட்யூப்ளக்ஸுக்கு இந்த கோட்டையை அப்போதைய நவாப் சுபேதார் முசாஃபர்ஜங் பரிசளித்தார்! பின்னர் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் அதை சேதப்படுத்தினர். வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன கொஞ்ச நஞ்ச சுவத்தையும் 2004 வருடம் வந்த சுனாமி வழிச்சிட்டு போயிடுச்சு.

மேல படத்துல இருக்கிற மாதிரி அங்கங்க நீளமான சுவர்களே எஞ்சியிருக்கின்றன.



இந்த இடிபாடிகளின் மேலேறி பார்க்கும்போது தெரியும் கடல். வாவ். சிம்ப்ளி சூப்பர். மொட்டை வெயிலையும் மீறி கடலின் அழகு கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கடலின் அழகை ரசித்து முடித்துவிட்டு உள்ளூர் மீனவர்கள் உடன்வர மோட்டார் படகில் பயணம் ஆரம்பம். ஆர்பரிக்கும் அலையை எதிர்த்து படகு போகும்போது வரும் ஃபீலிங் ரொம்பவே த்ரில்லிங்காய் இருந்தது. எங்கள் மூவரையும் சேர்த்து 7 பேர் இருந்தோம் படகில். ரொம்ப நன்றாகப் பேசினார்கள். எல்லாத்துக்குமே நகைச்சுவை தான். சோகத்தைக் கூட சிரிப்போடு தான் பகிர்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, தொழில் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுனாமி பற்றிய பேச்செடுத்தவுடன் அனைவருமே அமைதியாகிவிட்டார்கள். யாருக்கும் அந்நிகழ்வினைப் பற்றி பேசக்கூட விருப்பமில்லை. ஒரு ஐந்து நிமிட பயணத்திற்க்குப் பின் கரைக்கு திரும்ப யத்தனித்தவர்களை "இன்னும் கொஞ்சம் தூரம் போலாம்ணா" என்றேன். சிரித்துக்கொண்டே "கரை தெரியுற வரைக்கும் தான்மா உங்களுக்கெல்லாம் சேஃப்டி. கரை மறைஞ்சுதுன்னா தலை சுத்தலும் வாந்தியும் வரும்" என்றார். "பரவால்லணே. கஷ்டமா இருந்ததுன்னா உடனே திரும்பிடலாம்" என்றேன். அரை மனதோடு மிக மெதுவாகத் தான் படகை செலுத்தினார். கொஞ்சம் தூரம் தான் போயிருப்போம். பெரிய அலையை எதிர்த்து படகு போனபோது மேட்ரிக்ஸ் படத்துல அப்படியே அந்தரத்துல ஃபீரிஸாகி நிப்பாங்களே அந்த மாதிரி படகு ஏர்லயே இருந்த மாதிரி ஒரு உணர்வு. அலையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு. இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.

இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்ச நேரம் பிடித்தது. பேஸ்தடித்திருந்த எங்கள் மூஞ்சிகளைப் பார்த்து "என்ன இன்னும் கொஞ்சம் தூரம் போலாமா?" என நக்கலாக கேட்டவரிடம் காலில் விழாத குறையாக கரைக்கு திருப்ப சொன்னேன். ரெண்டு நிமிஷத்துல செத்துப் போன தாத்தா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் வந்து வா வான்னு கூப்பிட்ட மாதிரியே இருந்தது. அங்கிருந்து கரையில் தெரிந்த கோட்டையை??!! கொஞ்சம் போட்டோ எடுத்துகிட்டு கரைக்கு வந்ததும் அவர்கள் குடுத்த இளநீர், நுங்கு எல்லாத்தையும் முழுங்கிட்டு தக்ஷின்சித்ரா நோக்கி பயணப்பட்டோம். தக்ஷின்சித்ராவில் அதிகம் நேரம் இருக்கமுடியவில்லை. அரை மணி நேரத்திலேயே கிளம்பியாச்சு.




மேலதிக தகவல்கள்

இடம் - ஆலம்பறை கோட்டை
எங்கிருக்கிறது - மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் கடப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ.
போக்குவரத்து வசதி - சென்னையிலிருந்து ECR வழியாக பாண்டிச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் கடப்பாக்கத்தில் நிற்கும். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக ஆலம்பறை செல்லலாம்.

குறைந்த செலவில் (போக்குவரத்து மற்றும் கொரிக்க தான் செலவு) நல்ல ஆட்டம் போடலாம். அதுவும் குழுவாக சென்றால் நல்ல ஜாலியாக இருக்கும். தனிமையில் செல்வதை தவிர்ப்பது நலம் (மீனவர்கள் சொன்னதுங்கோ.)

டிஸ்கி 1 : இது 2008 பொங்கல் விடுமுறையின்போது சென்றது. இப்போ அதே நிலைமையான்னு தெரியல.
டிஸ்கி 2 : நானும் போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு நான் பண்ண ரப்சர காமிரா காதலர் ஆதி (தாமிரான்னு வந்திருந்தா ரைமிங்கா இருந்திருக்கும்) மன்னித்தருள்வாராக.

May 15, 2009

முதல் கடிதம்

அபி
அதான் தினமும் பார்த்துக்கறோமே. போன்ல பேசறோமே. இப்போ எதுக்கு இந்த கடிதம்ன்னு நீ யோசிக்கலாம். காதலித்தால் கடிதம் எழுதனும்னு எழுதப்படாத விதியிருக்காம். அதுவுமில்லாம உன்னைப் பார்த்தால் நான் பேச நினைக்கும் விஷயங்களை மறந்துவிடுகிறேன். இன்றளவும் நீ எப்படி என்னுள் வந்தாய் என ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த தினம் எல்லாக் காதலர்களுக்கும் போலவே எனக்கும் மறக்கமுடியாத தினம். சம்பிரதாயமான நம் முதல் சந்திப்பிலேயே நம்மிருவருக்குமான காதல் விதை முளைக்கத் தொடங்கியிருந்தது. ஏனோ தெரியவில்லை எந்த வித தயக்கமுமின்றி என் கண்ணைப் பார்த்து பேசிய உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. I just felt u close to my heart. அடுத்தடுத்து நிகழ்ந்த நம் சந்திப்புகளில் நாம் கொண்டிருந்த காதலை "I Love You" என சொல்லாமல் உறுதிப்படுத்திக்கொண்டோம்.
நீ பேசும் அழகிருக்கிறதே. சிரிப்பும், குறும்பும் கொப்பளிக்கும் உன் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். உன் பெயரைச் சுருக்கி அபி என அழைக்கவா என கேட்டதுக்கு நீ சிரித்துக் கொண்டே "தங்கள் சித்தம் என் பாக்கியம்" என்றாய். அந்த சிரிப்பு என் கண்ணை விட்டு அகலமறுக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே என் கைகளை உன் கைகளில் எடுத்துக் கொண்டு விரல்களில் நீ சொடுக்கெடுக்கும் சுகம் அலாதியானது. இதழ்கள் வலிக்க ஒரு முத்தம் பின்னர் அந்த வலிக்கு மருந்தாக மற்றொரு முத்தம் என நித்தம் என்னை திக்குமுக்காட வைக்கிறாய்.

என்னை ஏன் பிடித்திருக்கிறது என்ற உன் கேள்விக்கு என்னிடம் எப்போதுமே பதிலில்லை. என்னை எனக்கே புதிதாகக் காட்டியவன் நீ. "I'm Struck at your eyes" என நீ சொன்னபோது நான் எங்கோ பறந்துக்கொண்டிருந்தேன். நான் வெட்கப்படுகிறேன் என எனக்கு உணர்த்தியவனும் நீதான். கன்னங்கள் சிவந்து சிரித்தால் அது 100% வெட்கம் தான் என்றாய். உன்னால் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என்னை சுற்றி இருப்பவை அனைத்துமே அழகாய்த் தெரிகிறது எனக்கு. எப்போதுமே ஒரு சின்னப் புன்னைகை இதழோரத்தில் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

உன்னைப் பார்க்க முடியாத நாட்களில் நான் என் நிலை மறக்கிறேன். தேவையில்லாத கோபங்களும், அழுகைகளுமே அந்த நாட்களை ஆக்கிரமிக்கின்றன. பிரிவுகள் நம் காதலை வலுப்படுத்தினாலும் என்னை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன. எவ்வளவோ எழுதனும் என தான் பேனாவை எடுத்தேன். உன் நினைவுகள் கூட என் வார்த்தைகளை களவாடுகின்றன. கடிதத்தை முடிக்க மனமில்லாமல் தொடர வார்த்தைகளுமில்லாமல் அவஸ்தையாக இருக்கிறது.

வற்றாத ஜீவநதிபோல் தான் உன் மீதான என் காதலும்.

கயல்

May 14, 2009

ஏப்ரல் மேயிலே..

ஏப்ரல் தொடங்கிய வெளியூர் பயணங்கள் விடாது இன்றுவரை தொடர்கிறது. மே மாதம் முழுவதும் இப்படித்தான் என நினைக்கும் போது எரிச்சலாகயிருக்கிறது. ஆனால் கொளுத்தும் வெயிலையும் தாண்டி அழகான என்றென்றும் நினைவில் நீங்கா இடம்பெறும் நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
*************

ஏப்ரல் முதல் வாரத்தில் அப்பா பிறந்த ஊருக்கு சென்றிருந்தேன். கல்யாணத்திற்க்கு முன் சென்றது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து சென்றது பழைய நினைவுகளை எக்கச்சக்கமாக கிளறிவிட்டது. விரைவில் தனி பதிவாய்:) அதே போல் ஏப்ரலில் இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு நீண்டநாள் கழித்து கிடைத்த தொலைத்த நட்பு. அடிக்கடி செல்போனை சார்ஜ் செய்யுமளவிற்க்கு அரட்டை கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது.
***********

மே 10 நிகழ்வினைப் பற்றி பலரும் விரிவாக பதிவு போட்டுவிட்டார்கள். ஒலிக்கோப்பையும் வலையேற்றப்பட்டுள்ளது. அருமையான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு நன்றிகள் பல. நண்பர்களை நேரில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவசரமாக விடைபெற நேர்ந்ததில் வருத்தமே:(
*************

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் காப்பகத்திற்க்கு மதிய உணவளிப்பதாக ஒப்புக்கொண்டோம். நாற்பது குழந்தைகளை பராமரிக்கும் அந்த இல்லத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் 25 வயது. அன்றைய தினம் நான் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் எப்படி பொறுமையாகயிருப்பது என்பதுதான். ஜூனியர் சாப்பிட 1 மணிநேரம் ஆக்குவார். அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவ்வளவு சலிப்பாக இருக்கும். அந்த இல்லத்தில் 12 வயது சிறுவனுக்கு 7 வயது சிறுமி சாப்பாடு ஊட்டிவிட்டாள். எப்படி? ஒரு கையால் அவன் வாயைப் பிரித்து இன்னொரு கையால் சாப்பாட்டை ஊட்டி, அவன் முழுங்கும் வர தடவிக்கொடுத்து என அவ்வளவு பொறுமை. கொஞ்சம்கூட முகசுளிப்போ சலிப்போ இல்லை. மனதை கனக்க செய்த தினம்:(
****************

மே முதல் வாரத்தில் ரகுவின் நெருங்கிய நண்பரின் உறவினர் திருமணத்திற்க்கு சென்றோம். வாங்கி வைத்திருந்த பரிசு பொருளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டோம். போகிற வழியில் வண்டி வேற பஞ்சர். ஒரு வழியாய் மண்டபத்திற்க்கு போன பின் தான் நினைவு வந்தது. ரகுவிடம் கிப்ட்டைப் பற்றி நினைவுபடுத்த அவர் நண்பரிடம்
"கிப்ட் எதுவும் கொண்டு வரலடா மச்சி. எலக்ஷன் கமிஷன் வேற காசோ பொருளோ கொடுத்தா நடவடிக்கை என சொல்லிருக்காங்க. நீங்க வேற வீடியோல்லாம் எடுக்கறீங்க. எதுக்கு வம்பு?"
"டேய் நீ கிப்ட் வாங்கிட்டு வராதது கூட பெருசா தெரியலடா. ஆனா அதுக்கு விளக்கம் கொடுத்தியே. எப்படிம்மா இவன சமாளிக்கற?"
**********

நானும் என் ஜனநாயக கடமையை ஆத்திட்டேன். தூங்கிட்டிருந்தவளை எழுப்பி காபிகூட குடிக்க விடாம பூத்துக்கு கூட்டிட்டு போய்ட்டார். கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரிசையில நின்னு 49O படிவம் கேட்டா அப்படின்னா என்னன்னு கேட்டார் presiding officer. அவருக்கு விளக்கினதுக்கப்புறம் "அடுத்த எலக்ஷன்ல வாங்கி வைக்கிறேன்மா" என்றார். இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சு முன்கூட்டியே மாமனாரின் வேட்பாளர் அலசல்படி சுயச்சேக்கு போட்டாச்சு.
*********

இப்போ வாழ்த்து மழை நேரம்.
அமிர்தவர்ஷினி அம்மாக்கு (இன்று)பிறந்தநாள் வாழ்த்துகள்.
பரிசல் சாருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் படைப்பு விகடனில் வந்ததற்கும் வாழ்த்துகள்.
கேபிள் சங்கரின் படைப்பும் விகடனில் வந்திருக்கிறது. வாழ்த்துகள் சங்கர்ஜி.
*********

இந்த மாதம் முழுக்க நண்பர்களின் கடைக்கு ரெகுலரா வர முடியுமா தெரியல. அடுத்த வாரம் முழுக்க நான் இணையப் பக்கமே வரமுடியாது. வந்தாலும் பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியுமா என சந்தேகமே. யாரும் கோச்சுக்காதீங்கப்பா:)

May 7, 2009

யாவரும் வாழ்த்துவீர்

இந்த வார ஆனந்த விகடனை மேய்ந்து கொண்டிருந்தபோது கார்ப்பரேட் கம்பர் எழுதிய கதை வந்திருப்பதைக் கண்டேன்.

வாழ்த்துக்கள் நர்சிம்.

மக்களே நர்சிம்மிடம் ட்ரீட் - யாவரும் கேளிர்:)

அதிஷாவின் ஒரு பக்க கதையும் பிரசுரமாகியிருக்கிறது. வாழ்த்துகள் அதிஷா.

May 5, 2009

ஒரு பாட்டு பாட்றீ

ஒரு பாட்டு பாட்றீ
என்ன பாட்டய்யா?
நம்ம பாட்டுத்தேன்

இது தேவர் மகனில் வரும் டயலாக்.

உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

இது எந்த படம்ன்னு தெரியல.

நான் காலேஜ் படிக்கும்போது ரொம்ப பேமஸ் டயலாக் இதுரெண்டும். என் வகுப்பில் சுமாராக பாடக்கூடியவர்களில் நிறைய பேர். (நானும் ஒருத்தின்னு சொன்னா நம்பவா போறீங்க). ஸ்கூல் choir (தமிழ்ல என்ன?) டீமில் பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு இடம் கொடுத்தாங்க. பாரதியாரின் "பூட்டைத் திறப்பது" பாட்டுக்கு இசையமைத்து பாடியதில் எங்களுக்கு நி்றைய பாராட்டுக்கள். சிறு வயதில் விடியற்காலையில் தலையில் ஸ்கார்ஃப் கட்டி கதறக் கதற பாட்டு கிளாசுக்கு துரத்தப்பட்ட சிறுமிகளில் நானும் ஒருத்தி. நல்லவேளையாக பாட்டு டீச்சர் கல்யாணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் நானும் தப்பித்தேன். என் இசைப் பயணம் "ராரா வேணு கோபாலா"வோடு நின்றுவிட்டது. தொடர்ந்திருக்குமேயானால் நானும் இன்னிக்கு ஏதாவது ஒரு சேனலில் யாரோட அபஸ்வரத்திற்க்காவது மார்க் போட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் என் திறமையை???!! வளர்க்க முயற்சி செய்தது பள்ளி நிர்வாகம். கர்நாடிக் கத்துக்க சொன்ன மியுசிக் டீச்சரிடம் "நீங்க போதும் மிஸ். நான் வேறயா?"ன்னு கேட்டு அவங்க கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டு நான் ரொம்ப லேட்டா சாரி சொன்னது தனிக்கதை.

சரி மேட்டருக்கு வருவோம். என்னை மாதிரி சரி சரி காண்டாவதீங்க. பொதுவா பாத்ரூம் சிங்கர் என்றழைக்கப்படும் கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப் பேருக்கு குரல் வளம் ரொம்ப நல்லாருக்கும். கல்லூரியில் விரிவுரையாளர் வராத சமயங்களிலோ, டூர் போகும்போதோ அந்தாக்ஷ்ரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு விளையாடுவது வழக்கம். செம ஜாலியா இருக்கும். மொழி வரைமுறை இல்லாமல் ஒரே பாட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரீப்பிட்டடிக்கப்படும். சில சமயம் ஸோலோ பெர்பாமன்சும் நடத்தப்படும். அம்மாதிரியான சமயங்களில் அடிக்கடிப் பாடப்படும் (கணக்கிலடங்கா) பாடல்களில் சிலவற்றை, எனக்குப் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. கண்மனி அன்போடு காதலன் - குணா
2. நறுமுகையே நறுமுகையே - இருவர்
3. மனம் விரும்புதே - நேருக்கு நேர்
4. நேற்று இல்லாத மாற்றம் - புதிய முகம்
5. யமுனை ஆற்றிலே - தளபதி (நூத்துல 90 பேரோட சாய்ஸ் இதுதான்)
6. மின்னல் ஒரு கோடி - வி.ஐ.பி
7. ராசாத்தி உன்னை காணாத - வைதேகி காத்திருந்தாள்.
8. கண்ணன் வந்து பாடுகின்றான் - ரெட்டைவால் குருவி
9. கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்

ஸோலோ பெர்மான்ஸ் மாதிரியே குழுவாய் கும்மியடிக்கவும் சில ரெடிமேட் பாடல்கள் இருக்கும். நாலு வரிக்கு மேல் யாருக்குமே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஆரம்பிக்கும்போது இருக்கும் டெம்போ கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஸ்ருதி சேராமல் ஒருத்தர் மட்டும் மெய்மறந்து??!! பாடிக்கொண்டிருக்க மற்றவர்கள் கிண்டல் பண்ண என முடியும். கண்டிப்பாக யாராவது ஒருத்தர் டேபிள், நோட் புக் என எதிலாவது தாளம் போடுவார். சில இடங்களில் கோரஸ் சப்தம் காதைக் கிழிக்கும். எவ்வளவு சோகமாக இருந்தாலும் இப்படி குழுவாகப் பாடும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அலாதியானது. அதில் சில

1. செந்தமிழ் தேன்மொழியாள்
2. காட்டுக்குயிலே - தளபதி
3. முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்
4. தண்ணீ குடம் எடுத்து - வைகாசி பொறந்தாச்சு
5. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்

இது வெறும் உதாரணம் தான். இந்த மாதிரி நிறைய பாட்டு இருக்கு. இப்போதைக்கு இந்த பாட்டெல்லாம் அசைப் போட்டு ஜாலியா இருங்க.

அப்புறம் முக்கியமான விஷயம் மறந்துட்டனே. பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு அவருக்கு டெடிகேட் செஞ்சுக்கறேன் (ஏண்டா பாடினோம்ன்னு பீல் பண்றீங்களாண்ணே).

May 4, 2009

தீபா, அமித்து அம்மா, நர்சிம், SK மற்றும் நாம்

ஆறு வயது குழந்தை தன் தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்ன?" என கேட்கிறது. பதற்றமடையும் தாய் தன் கணவனிடம் கலந்து பேசி, இரண்டு மணி நேரம் பொறுமையாக செக்ஸைப் பற்றி விளக்குகிறாள். எல்லாவற்றையும் கேட்டு முடித்த குழந்தை "ஆனா அம்மா இவ்ளூண்டு இடத்துல நீ சொன்ன எல்லாத்தையும் எப்படிம்மா எழுதறது" என கேட்டுக்கொண்டே அப்ளிகேஷன் பார்மை காட்டுகிறது.
SEX : ------------

இது எப்போதோ ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தது. இன்று பெரும்பாலான பெற்றோரின் நிலை இதுதான். குழந்தையை ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் தான் அழைத்துச் செல்கிறோமா? அவசியமானவற்றைப் பற்றிதான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா? ஆயிரம் கேள்விகள். நம் மனதிற்க்கு சரியென படுபவையே சரியான விடையெனக் கருதப்படுகிறது. தீபாவின் குட் டச் பேட் டச் பற்றிய பதிவு சரியான நேரத்தில் எழுதப்பட்டது. சரி குழந்தைக்கு இதை எப்படி தெளிவுபடுத்துவது?

டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன் ஆகியோரோடு இதைப் பற்றி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10 மாலை நடைபெறவிருக்கிறது இந்த சந்திப்பு. தீபாவின் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாமென முனைந்த அமித்து அம்மாவிற்க்கும், அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நர்சிம், SK ஆகியோருக்கும் அம்மாக்களின் சார்பாக நன்றிகள்.

மேலதிக தகவல்களுக்கு

நர்சிம்

லக்கி லுக்

கார்க்கி

கேபிள் சங்கர்

தங்கள் வருகையை உறுதி செய்ய weshoulddosomething@googlemail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.