July 22, 2009

நன்றி

கொஞ்ச நாளுக்கு வலைப்பூ பக்கம் வராம இருக்கனும்ன்னு தான் முடிவு பண்ணிருந்தேன். அவசர அவசரமா என்னை இந்த இடுகையை போட வெச்சிட்டார் மணிகண்டன். அட என்னையும் ஒரு ஆளா மதிச்சு சுவாரசியப் பதிவர் விருது கொடுத்திருக்கிறார். நன்றி மணிகண்டன். விருது கொடுத்தும் அதைப் பத்தி எழுதாம இருக்காளேன்னு தப்பா எடுத்துப்பீங்களோன்னு தான் இந்தப் பதிவு.

சடாரென ஆணிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாலும், கொஞ்சம் அசந்தாலும் அவை கடப்பாரைகளாக மாறி ஆளையே அடித்துவிடும் அபாயமிருப்பதாலும், வீடு மாற்ற வேண்டியிருப்பதாலும், என்னை நம்பி சில பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாலும், மேலும் நிறைய சொல்ல விரும்பாத 'லும்'க்களாலும் இத்தளத்தில் முன்பு போல் இயங்க முடியாதென்றே நினைக்கிறேன். சக பதிவர்களின் பதிவுகளை வாசிக்க நேரம்கிடைப்பதே அபூர்வமாயிருக்கும்போது பின்னூட்டம் இடுவதென்ற பேச்சுக்கே இடமில்லையென்பது வருத்தமளிக்கிறது. எல்லாரும் மன்னிப்பீர்களாக.

இன்னும் சில நாட்களுக்கு (மாதங்களுக்கு) இடுகைகளோ, பின்னூட்டங்களோ இட இயலாத நிலையிலிருக்கிறேன். இதுவரை ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் வரும் பட்சத்தில் இதே ஊக்கமும், ஆதரவும் தருவீர்களென்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

July 9, 2009

வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு

ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.

வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."

சார் முதல்ல வீட்டை காட்டுங்க.

வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.

"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)

ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.

"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..

ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.

வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.

"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"

2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

July 6, 2009

பாண்டிச்சேரியின் பெஸ்ட் துரித உணவுகள்

பாண்டிச்சேரி என்றாலே எல்லாருக்கும் தண்ணி தான் நினைவுக்கு வரும். ஒரு தெருவுல பத்து கடை இருந்தா அதில 8 மதுக்கடைகள் தான். மணக்குள விநாயகர், ஆசிரமம், ஆரோவில், மாத்ரி மந்திர், பீச்கள் என நிறைய சுற்றுலா இடங்கள். ஆனந்தா இன், சற்குரு, அதிதி, ஜி.ஆர்.டி என நிறைய ஹோட்டல்கள் (அக்கார்ட் கூட கண் வைத்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்). கல்யாணமாகி இதுவரை இரண்டு முறை மணக்குள விநாயகர் கோவிலுக்கும், ஒருமுறை ஆசிரமத்திற்க்கும் நிறைய தடவை பீச்சுக்கும் சென்றிருக்கிறேன். தலைமைச் செயலகம் எதிரே இருக்கும் பீச் சனி, ஞாயிறுகளில் பத்து ரங்கநாதன் தெருவை திருப்பிவிட்டால் போலிருக்கும். நச நசன்னு கும்பல். இந்த பீச்சில் காற்றே வீசாது. ஆனால் இங்கு கிடைக்கும் பானி பூரி, சுண்டல் போன்ற அயிட்டம்களின் டேஸ்ட் யூனிக். இந்தப் பதிவில் பாண்டிச்சேரி வந்தால் ட்ரை பண்ண வேண்டிய (லைட்)பாஸ்ட் புஃட் பற்றிய ரவுண்ட் அப்.

பானிபூரி/மசாலா பூரி

பீச்சில் மட்டுமல்லாது தெருவுக்கு இரண்டு பானிபூரி கடைகள் இருக்கின்றது. பீச், மிஷன் தெரு, நேரு சாலை, காந்தி சாலை என நான் பார்த்த மட்டில் மூன்று இடங்களை ஓகே ரகத்தில் சேர்க்கலாம். முதலில் பீச் ரோட்டின் முடிவில் இருக்கும் கடை (பெட்ரோல் பங்க், ஏசியானா ஹவுஸ், லா தெரேஸ் ஹோட்டலின் எதிரில் இருக்கிறது). பாண்டிச்சேரியிலேயே தி பெஸ்ட் என எல்லாரும் கை காட்டுவது இந்தக் கடையை தான். மூன்று வருடங்களுக்கு முன் (ஹி ஹி எனக்கு கல்யாணம் ஆனப்போ) இருந்த டேஸ்ட் இப்போ இல்லை. அளவும் குறைந்துவிட்டது. வழக்கம்போல் விலை மட்டும் 10ல் இருந்து 15/20 என உயர்ந்திருக்கிறது. Still மற்ற இடங்களை கம்பேர் பண்ணும்போது இது தான் பெட்டர். காரம், மசாலா என எல்லாம் பர்பெக்ட் டேஸ்ட்.
அடுத்தது தலைமைச் செயலகத்தை ஒட்டியிருக்கும் கடை. இவரிடம் பானி பூரி கிடைக்காது. புதினா ஃபிளேவர் சற்றே தூக்கலாக, கொஞ்சம் காரமாக இருக்கும். டிஸ்போசபிள் தட்டில் தரும்போது 12ரூபாய். மற்ற சமயங்களில் 10. மூன்றாவதாக மிஷன் ஸ்ட்ரீட்டில் மெகா மார்ட் அருகிலிருக்கும் கடை. காரம், மசாலா பிடிக்காதவர்கள் இங்கே ட்ரை பண்ணலாம். அசட்டுத் தித்திப்புடன் ரொம்ப crunchy. இங்கேயும் பத்து ரூபாய்தான். சாரம் சிக்னல் அருகிலிருக்கும் கடையிலும் நன்றாக இருக்கும். ஒரு பிளேட் மசாலா பூரி, ஒன் பை டூ பானிபூரி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போய் ஒரு டம்ளர் பெருங்காயம் போட்ட மோர் குடிச்சால் நைட் டிபன் ஓவர்.

சுண்டல்

மெரினா/பெசண்ட் நகர் பீச்சில் கிடைக்கும் சுண்டல்களை விட இங்கு கிடைக்கும் சுண்டலின் டேஸ்ட் ஏ கிளாஸ். பீச் ரோட்டில் இருக்கும் காந்தி சிலைக்கு எதிரில் ஒரு தாத்தா சுண்டல் விற்பார். ரகு தான் காலேஜ் படிக்கும்போதிலிருந்து இந்த தாத்தாவின் ரெகுலர் கஸ்டமர் என்றார். எனக்குத் தெரிந்து இவரும், இவரிடம் சரக்கு தீர்ந்த பின் (ஹார்ட்லி 1 ஹவர்) இன்னொரு தாத்தாவும் தான் சுண்டலாதிபதிகள். ஐந்து ரூபாய்க்கு சின்ன பேப்பர் பொட்டலத்தில் ஐஸ்கிரீம் குச்சி போட்டுத் தருவார்கள். நல்லா குழைய வேகவைத்த பட்டாணியோடு அடையாளம் தெரியாமல் கலந்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொஞ்சூண்டு தேங்காய் என டிவைன் டேஸ்ட். இந்த இரண்டே முக்கால் வருடங்களில், பீச்சில் ஒரு வாக், ஒரு சுண்டல் பாக்கெட் என்றே பெரும்பாலான வீக்கெண்டுகளை கழித்தோம்.

லல்லு குல்பி

நேரு ஸ்ட்ரீட்டில் தனிஷ்க் நகைக்கடைக்கு பக்கத்தில் இருக்கிறது லல்லு குல்ஃபி. இங்கு பிஸ்தா, கேஸர் (குங்குமப்பூ), ஏலக்காய், சாக்லேட் மற்றும் மேங்கோ ப்ளேவர் குல்ஃபிக்கள் ஒன்று பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அட்டகாசமான ரியல் மில்க் சுவை. இவற்றோடு சாயந்திர வேளைகளில் சூடாக சமோசா, கட்லெட்களோடு சேட்டுகளின் ஸ்பெஷல் ஸ்வீட்சான குலாப் ஜாமுன், ரசகுல்லா, முந்திரி டாஃபி, பாதுஷா போன்றவையும் கிடைக்கிறது. மாலை வேளைகளில் சூப்பராய் வியாபாரம் நடக்கிறது

பஜ்ஜி

நிறையக் கடைகள் இருந்தாலும் கொஞ்சமாவது வயித்துக்கு பிரச்சனைத் தராத பஜ்ஜி கடைகள் ரெண்டே ரெண்டு தான் (எனக்குத் தெரிந்து). MG ரோட்டில் மெட்ராஸ் பேப்பர் மார்ட் எதிரில் தள்ளுவண்டியில் கிடைக்கும் வெங்காயம், உருளை, வாழைக்காய், மிளகாய் பஜ்ஜிகள் நன்றாக இருக்கும் (சூடாக சாப்பிட்டால்). பஜ்ஜி மாவில் சேர்க்கப்படும் சோம்பு சுவையை மேலும் கூட்டுகிறதென்பதென் (தாழ்மையான) கருத்து. கொசக்கடை தெருவில் இருக்கும் "கூல் கேட்" கடையிலும் பஜ்ஜிகள் நன்றாக இருக்கும். கடலை மாவு கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

மித்தாய் மந்திர்

செஞ்சி/ஆம்பூர் சாலையில் இருக்கும் கடை மித்தாய் மந்திர். இங்கு கிடைக்கும் மிண்ட் டீ டக்கராக இருக்கும். அதோடு குஜராத்தி ஸ்நாக்கான காக்ராவும் கிடைக்கும். காக்ராவில் மேத்தி ப்ளேவர் சூப்பராக இருக்கும். எனக்குத் தெரிந்து ஆக்ரா பேடா கிடைக்கும் கடை இது ஒன்றுதான்.

ரிச்சி ரிச்

ரிச்சி ரிச் பாண்டிச்சேரியின் பேமஸ் ஐஸ்க்ரீம் பார்லர். இரண்டு இடங்களில் இருக்கிறது. நேரு வீதியிலும், ரங்கப்பிள்ளை வீதியிலும். 100க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறது. ஹார்ட் ஐஸ்க்ரீமை விட ஸாஃப்ட் வகை ஐஸ்க்ரீம்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றன. மூன்று அளவுகளில் ரீசனபிள் விலையில் கிடைக்கின்றது. ஐஸ்க்ரீம்கள் மட்டுமில்லாமல் பிட்ஸா, பர்கர், ப்ரைஸ், சாண்ட்விச், போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன. இவை நேரு வீதியில் இருக்கும் கிளையில் மட்டுமே கிடைக்கும். ஆர்டரின் பேரில் பிறந்தநாள் கேக்குகள், ஹோம்மேட் சாக்லேட்ஸ் செய்து தருகிறார்கள். இவர்கள் ரம் அண்ட் ரெய்சின்ஸ் சாக்லேட் சிம்ப்ளி சூப்பர்ப்.

July 1, 2009

செத்தவனை சாவடிக்கறது

ரொம்ம்ம்ம்ப நாள் பிளானாகவே இருந்த சந்திப்பு சென்ற ஞாயிறு சாத்தியமாயிற்று. பேமஸ் கிட்ஸ் ஆஃப் பிளாக்டம் எல்லாரும் கிண்டி சிறுவர் பூங்காவில் சந்தித்தார்கள். நந்தினி, யாழினி, பப்பு, சஞ்சய், அமிர்தவர்ஷினி, நேஹா என குழந்தைகள் தத்தம் அம்மாக்களோடு வந்திருந்தார்கள். நைஸ் ஈவ்னிங். முல்லை சொன்னது உண்மை தான். எங்களுக்கு பேச நேரம் கிடைக்கவில்லை. குழந்தைகள் பின்னால ஓடவே நேரம் சரியாக இருந்தது. தேங்கஸ் அமுதா அந்த க்யூட்டான தட்டிற்க்கு. இதிலாவது ஜூனியர் ஒழுங்கா சாப்பிடறாரான்னு பார்க்கலாம்:)
***********

ரகுவுக்கு ஆபிஸ் ஷிப்ட் ஆவதால் மறுபடியும் வீடு மாற்ற வேண்டிய கட்டாயம். இதில் ஆடி மாதம் வேற வருவதால் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு மாற்ற சொல்லி ஏகப்பட்ட பிரஷர். இந்தக் காரணத்தால் ஜூனியர் ஸ்கூலுக்கு போவதிலிருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார். இன்னும் பத்து நாளில் வீடு தேடி, பால் காய்ச்சி, ஷிப்ட் பண்ணி, இப்பவே கண்ண கட்டுதே:(
***********

1000 கோடி ரூபாய் செலவழித்து தன் முழு உருவ சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி. இத்தனைக்கும் இந்த மாநிலத்தில் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை ஜாஸ்தி. உள்துறை அமைச்சரும் மாயாவதியின் இந்த செயலை ஒரு காட்டு காட்டியுள்ளார். இன்னொரு கொடுமையான விஷயம் இந்த சிலைகளைப் பராமரிக்க ஒதுக்கப்பட்டுள்ள தொகை 270 கோடி. மாயா இது தேவையா??
***********

மைக்கேல் ஜாக்சனின் மறைவு இசைப் பிரியர்களுக்கு பேரிடி. நானும் அண்ணாவும் வாலாஜாவில் இருந்தபோது Beat it பாட்டைப் போட்டு தெருவையே கலங்கடிப்போம். வெறித்தனமான ரசிகர்கள் நாங்கள். பாட்டிக்கு இந்தப் பாட்டு ஆகவே ஆகாது. "என்னடா? எப்ப பாரு பீடை பீடைன்னு பாட்டு கேட்டுகிட்டிருக்கீங்க"ன்னு திட்டுவாங்க. அவர் மறைவை விட மிகவும் வருத்தம் தரும் விஷயம் மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதம் தான். "ஹார்ட் அட்டாக்கில் தான் செத்தாரா? சாவில் மர்மம்? அவரின் மனைவியின் குழந்தைகள் அவருக்குத்தான் பிறந்ததா? என நித்தம் கேரக்டர் அஸாசினேஷன். செத்தவனக் கூட நிம்மதியா இருக்கவிடமாட்டேங்கறாங்க. செத்தவனே வந்து நான் இப்படித்தான் செத்தேன்னு சொன்னாதான் விடுவாங்க போலிருக்கு:(
************

யப்பா யாராவது புண்ணியவன்கள் கவர்மெண்ட்கிட்ட சொல்லி இந்த ஆட்டோ கட்டணங்களை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்க ஏதாவது சட்டம் இயற்ற சொல்லுங்க சாமீ. முடியல. கோயேம்பேடிலிருந்து அண்ணா நகர் செல்ல, 80, 70 , 60, 40 என சினிமா டிக்கெட் ரேஞ்சுக்கு இஷ்டத்துக்கு வசூல் பண்றாங்க. ஒரு தடவை ஆட்டோ ஓட்டுனரிடம் எவ்வளவு என கேட்டதுக்கு 40 ரூவா கொடுங்க என்றார். நம்பமுடியாமல் திரும்ப இரண்டு தடவை கேட்க பாஃர்ட்டி ரூபிஸ் கொடுங்க என்றார். உள்ளே உட்கார்ந்தவுடன் "சொந்த ஆட்டோவா சார்?" என்றேன். சிரித்துக்கொண்டே "ஏன் கேக்கறீங்கன்னு தெரியுது மேடம். சேட்டுகிட்ட மாசத்துக்கு ஓட்றேன். 40 ரூவா வாங்கினாலே எனக்கு கொஞ்சம் லாபம் தான் மேடம். அநியாயமா எதுக்கு வாங்கனும் சொல்லுங்க" என்றார். உண்மைதான். எல்லாரும் உணர்ந்தால் நல்லாதான் இருக்கும்.
************

2007ஆம் வருடம் ஜூலை மாதம் எழுத ஆரம்பித்தது. 2 வருடம் ஆகிவிட்டது. ஒன்னும் உருப்படியா எழுதிக்கிழிக்கலைங்கறது வேற விஷயம். பதிவுலகம் மூலமா கத்துக்கிட்டது ஏராளம் (தனியா பதிவே போடற அளவுக்கு). Hope the road further is smooth:)