பொங்கல் பொங்கித் தின்னு, கட்டு கட்டா கரும்பு கடிச்சு (விக்னேஷ்வரி அழாதீங்க) டயர்டா படுத்தா, மறுநாள் அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி ஒரே அடம். காலம் காலமா தொடர்ந்து செய்யற இந்த சேவையை??!! இந்த வருடமும் பண்ணியாச்சு. தீபாவளில காசு கரியாகற மாதிரி இல்லாம பொங்கல் போது வசூல் சூப்பரா இருக்கும். அதுவும் காணும் பொங்கல் அன்னிக்கு கால்ல விழுந்தா காசு. ஸ்ட்ரிக்ட்லி ஃபார் லேடீஸ்:)
எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும். கல்யாணத்துக்கு முன்னால குளிச்சோமா, போட்டத தின்னோமான்னு ஜம்முன்னு போச்சு. கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்) பாதி வேலைய பண்றது (அ) ஒத்தாசை பண்றது. மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே காய்கறி நறுக்கறது, தேங்காய் கீறறதுன்னு எடுபுடி வேலைலயே ஓட்டிக்கிட்டிருக்கேன். க.முல பொங்கலன்னிக்கு தலைவாழை இலைல சர்க்கரைப் பொங்கல், தயிர் பச்சடி, வடை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், பரங்கிக்காய் பொரியல், சௌசௌ கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், தாளிச்ச மோர் மெனுவப் போட்டுடுவாங்க (வாழை இலைல ரசம் சாதம் சாப்பிடற கலைய இன்னும் கத்துக்காம கஷ்டப்படறது வேற விஷயம்). க.பில கிடைக்கிற காயெல்லாம் போட்டு கூட்டுக்கு ஏதோ ஒரு உறவுபோல சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பச்சடி, ரசம், வடை. மூணு வருஷமா மாமியாரும் உங்கம்மா வீட்டு வழக்கமென்னன்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் சொல்லிட்டே இருக்கேன். மறைமுகமா அதெல்லாம் மறந்துரு. இனி இதான் பொங்கல் மெனுன்னு சொல்றா மாதிரியே இருக்கு.
காலைல 4 மணிக்கே எந்திரிச்சு காலைக்குள்ள சமையல முடிச்சு, பொங்கப் பானைல பாலோடு அரிசி, பருப்பு, வெல்லம் போட்டு பொங்கும்போது குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல்ன்னு சவுண்டு விடறது வழக்கம். திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. கீழே ஒரு நியூஸ்பேப்பர பரத்தி வச்சு அதுல சக்கைய சேமிச்சு??!! பின்னால கொளுத்தி அதுல பிஞ்சு மக்காச்சோளத்த வாட்டி திம்பது வழக்கம். இது க.முல. க.பில பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அதை குப்பைத்தொட்டியில போடும்போது, இப்படி நடந்துகொள்வது, நம்ம மரியாதைய காப்பாத்திக்கவா? இல்ல அவங்களுக்கு தர்ற மரியாதையா? இல்ல நல்ல பொண்ணு இமேஜான்னு தெரியல. என் இயல்பு தொலைவதெதனால்ன்னும் தெரியல. இந்த தடவை தை மாசம் மதியம் தான் பொறந்ததால ஆற அமர மாமியாரோட அரட்டை அடிச்சுகிட்டே பொறுமையா சமையல் முடிச்சு பொங்கல் பொங்கி சாப்பிட்டப்போது மனி சாயந்திரம் 4.30. எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. மறுநாள் காணும் பொங்கல்.
பொங்கலன்று பண்ண சர்க்கரைப் பொங்கல், சாம்பார், பொரியல், கூட்டு, சாதம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து தனியா வச்சிருவாங்க. இதுல சாம்பார், பொரியல், கூட்டு எல்லாத்தையும் போட்டு ஒன்னா கொதிக்க வெச்சு எரிச்ச கூட்டு ஆக்கிடுவாங்க (சாம்பார மட்டும் ரிப்பேர் பண்னி நைட் சாப்பிடற மேட்டர் ஒன்னு இருக்கு. அப்புறமா வேற பதிவுல அதப் பத்தின ரெசிபி தர்றேன்). அப்புறம் வெறும் சாதத்தில மஞ்சள் தூள், குங்குமம் போட்டு பிசைஞ்சு கலர் கலரா சாதம் பண்ணிப்பாங்க. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும். க.முல காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாவில் வசித்த வீடுகளில் தோட்டமிருந்தது. அதனால தோட்டதிலேயே கோலம் போட்டு (நான் இப்பவும் வேடிக்கப் பார்த்து) மஞ்சள் கொத்தின் இலைய பரப்பி வச்சு கணு வைக்கனும். முதல்ல சர்க்கரைப் பொங்கல். அப்புறம் மஞ்சள் சாதம். அப்புறம் சிகப்பு சாதம். எரிச்ச கூட்டு. இப்படி எல்லாத்தையும் வரிசையா, அழகா "காக்கா பிடி வெச்சேன். கணுப் பிடி வெச்சேன். காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்"ன்னு சொல்லிக்கிட்டே வைக்கனும் (சத்தியமா ஏன்னு தெரியாது). அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). முந்தின நாள் வாங்கின மஞ்சள் கிழங்கை பெரியவங்க கிட்ட (இதுவும் லேடிஸ் ஒன்லி. கல்யாணமானவங்கன்னா வூட்டுக்காரர் செய்யலாம்) கொடுத்து நெத்தில, கன்னத்துல எல்லாம் தேய்க்க சொல்லி கால்ல விழுனும் (நோ. காசு இப்ப தரமாட்டாங்க). அப்பால குளிச்சிட்டு வந்து மறுபடியும் கால்ல விழுந்தா துட்டு மாமே. துட்டு. "என்னா மாமா. ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வெறும் 100 ரூபாயா தர்றது"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்டியல ரொப்பிடுவோம். ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த வருஷம் கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய், ஒரு டிசைனர் சல்வாரோட நின்னுடிச்சு. க.பில இந்த டெக்னிக் வொர்க் அவுட் பண்றதுக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. ஏதோ அவங்களா பார்த்து கொடுத்து தான் உண்டு.
க.மு பொங்கலுக்கும் க.பி பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் மாறாம நடந்துக்கிட்டே இருக்கு. அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்:)
Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts
January 18, 2010
Subscribe to:
Posts (Atom)