March 29, 2010

பல்பு வாங்கலயோ பல்பு

சஞ்சு பாட்டிலோட தண்ணி குடிக்காத. தொப்பைல உவ்வா வரும். டம்ளர்ல ஊத்திக்குடி.

(நான் பாட்டிலை வாயில் கவிழ்க்கும்போது) வித்யாம்மா. இந்தா தம்ளர். தொப்பைல உவ்வா வரும்.

பளிச். பளிச்
*****

சின்னு தாத்தாவ கடிக்கக்கூடாது. தாத்தா பாவம். தாத்தாக்கு வலிக்கும்.
சின்னு அப்படியே முழுங்காத. கடிச்சு சாப்பிடு.

ஆணாம். அசம் மம்மு பாவம். அசம் மம்முக்கு அலிக்கும்.

பளிச். பளிச்
*****

தூங்கும்போது பேசக்கூடாது பட்டு. கம்முன்னு தூங்கு.

(படுத்துக்கொண்டு போன் பேசும் என்னருகில் வந்து) ம்மா. கம்முன்னு தூங்கு.

பளிச். பளிச்.
******

ம்மா ச்சிங்க கத.

ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பட்டு சொல்லுவா. அடிக்கடி சொன்னா வாய் வலிக்கும்.

பட்டு நீ தாத்தாக்கு நரி கத சொல்லேன்.

ஆணாம். ஒன்னுதான். அலிக்கும்.

பளிச். பளிச்
*********

சஞ்சு ஐஸ் வாட்டர் குடிச்சா டாக்டர் நெபுலைசர் வச்சிடுவா.

அப்பா. தண்ணி பாட்டில் எடுத்துக் கொடேன்.

(பிரிட்ஜை திறக்கும் தாத்தாவின் காலை கட்டிக்கொண்டு)

ஆனா தாத்தா. வித்யாம்மா பாவும். தாத்தர் நெபூசர் அச்சுவா.

பளிச். பளிச்.
**********

வாக்கிங் கிளம்பும் தாத்தாவுடன் தானும் செல்வதாக ஒரே அடம்.

சின்னு பெரியவங்கதான் வாக்கிங் போகனும். நீ போனா உனக்கு கால் வலிக்கும்.

சின்னு இறங்கி நடந்து வா. அம்மாக்கு கை வலிக்குது.

ஆணாம். சஞ்சு கால் அலிக்கும். சஞ்சு பாவும்.

பளிச் பளிச்..
***********

வீசிங் வருவதால் சிட்ரஸ் பழங்களை தரவேண்டாமென டாக்டர் கூறியிருக்கிறார். அம்மாவிற்கு சாத்துக்குடி ஜூஸ் குடுத்ததை பார்த்துட்டான். எனக்கு என அழுகை.

பாட்டிக்கு உவ்வா இருக்குல்ல. அதான் மருந்து குடிக்கிறா. ஒகே.

சிறுது நேரம் கழித்து வந்து

ம்மா. சஞ்சுக்கு கால்ல உவ்வா. உவ்வா மருந்து குடு.

பளிச் பளிச்..
***********

ப்ர்ர்ர் என வாயால் வண்டி ஓட்டுவதும், எச்சிலைக்கொண்டு முட்டை விடுவதும் சில நாட்கள் பழக்கத்திலிருந்தன. தப்பு பட்டு. துப்பக்கூடாது ஒகே.

காலையில் பல் தேய்த்ததும் துப்பு என கூற

த்த்துப்ப்பக்கூடாது. த்தப்ப்பு.

பளிச். பளிச்.
***********

March 24, 2010

பஸ் நம்பர் 1

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என மூன்று கட்டங்களில் பேருந்து என்பது எனக்கு தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகவே இருந்தது. எந்தக் காலத்திலும் பேருந்து பயணத்தில் காதல் வயப்படவில்லை (சத்தியமா. நம்புங்க). பள்ளியின் போது பொறுப்பான ரெப்ரசெண்டேடிவாய் ஜூனியர்களை ஒழுங்குப்படுத்தி அமர வைப்பது, யாரும் கூச்சலிடாமல் பார்த்துக்கொள்வது என பல வேலைகள். பொறுப்பு நம்மிடமிருக்கும்போது நாமளே அடாவடித்தனம் செய்யலாமா (க.க.க)? அதனால் சேட்டைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நல்ல பெண்ணாய் நடித்துக்கொண்டிருந்தேன். பற்றாக்குறைக்கு பள்ளி ஆசிரியர்கள் வேறு உடன் வருவார்கள். அதனால் நோ சேட்டை.

காலேஜுக்கு 45 நிமிட பேருந்து பயணம். அதுவும் நான் படித்த காலேஜ் டைமிங் 7.30 முதல் 3 மணி வரை. சரியாக 5.45 மணிக்கு காலேஜ் பஸ் வந்துவிடும். வீட்டிலிருந்து பத்து நிமிடங்கள் நடக்கனும் ஸ்டாப்பிங்குக்கு. நாய்த் தொல்லை வேற (நிஜமான நாலு கால் நாய்). இது வேலைக்காகது. பொண்ணு கஷ்டப்படக்கூடாதுன்னு வீட்டை/ஊரை மாற்றினார் அப்பா. 5 கி.மீ தள்ளி ராணிப்பேட்டைக்கு குடிபோனோம் இங்கு வீட்டை விட்டு இறங்கி நடந்தால் பஸ் ஸ்டாப். 6 மணிக்கு பஸ் வரும். வீடு மாறியும் காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும்ங்கற என்னோட கஷ்டத்தை யாருமே புரிஞ்சுக்கல. எங்கள் பஸ் நம்பர் 1. வாலாஜாவில் ஆரம்பிக்கும் வண்டி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பாரதி நகர், சிப்காட், BHEL என காட்பாடி போய் சேர முக்கால் மணி நேரமாகும். ஆரம்பத்தில் பெண்கள் ஒரு கேங்காகவும், பசங்க ஒரு கேங்காகவும் இருந்தோம். இதில் சீனியர்ஸ் வேறு. கொஞ்ச நாட்கள் ராகிங் இருந்தது. பாட்டு பாடு, அந்தப் பையன் பேர் கேட்டுட்டு வா, ட்ரைவர் கிட்ட போய் பாட்ட மாத்த சொல்லுன்னு. அப்புறம் அவங்க வேலையப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்தாண்டு தான் நிகர்நிலை அந்தஸ்து பெற்றிருந்ததாலும், கல்லூரியிலிருந்து தூரம் அதிகமென்பதாலும் பஸ்சில் ஆட்கள் மிகக் குறைவு. இருந்தாலும் பஸ்சின் கடைசி இருக்கைகளை ஆக்கிரமிப்பதில் பாய்ஸுக்கும் கேர்ள்சுக்கும் கடும் போட்டி இருந்தது. அங்கிருந்துதானே அனைவரையும் கண்கானிக்க???!! முடியும். பஸ்ஸில் வரும் ஒரு சீனியர் ஜோடி பயங்கர லவ்ஸில் இருந்தார்கள். ஒரு த்ரீ சீட்டர அண்ணன் ஆக்குபய் பண்ணிடுவாரு. அக்கா ஏறி நேரா அந்த சீட்டுக்கு போய்டுவாங்க. கைய கோர்த்துகிட்டு உட்கார்ந்துகிட்டே இருப்பாங்க. ஒரு வார்த்தை பேசனுமே. உஹூம். கண்ணு மட்டும் அங்க இங்க நகராது. இதுல சில சமயம் சிச்சுவேஷன் சாங் வேற ஒடும் பஸ்ஸுல. 'கண்ணாலே காதல் கடிதம் சொன்னாலே எனக்காக'ன்னு. நாங்க எல்லாம் ஹேன்னு கத்துனா அந்தக்கா ரொம்ப வெட்கப்பட்டுகிட்டே மூஞ்ச மூடிப்பாங்க. ஆரம்பத்தில் அவங்க என்ன பண்றாங்க என நோட்டம் விடுவதற்காகவே பின்னாலிருந்து எழுந்து போய் ட்ரைவர் தாத்தாவிடம் பாட்டை மாற்ற சொல்லிவிட்டு வருவோம். 'ஹே கையக் கோத்துக்கிட்டிருக்காங்கப்பா. தோள்ல சாஞ்சிகிட்டிருக்காங்கப்பா' என கமெண்ட்கள் கிடைக்கும்.

பஸ் ட்ரைவர் ரொம்ப வயசானவர். பொறுமையா தான் ஓட்டுவார். க்ளீனர் அண்ணா தான் பாட்டு போடறது, கேசட் ரீவைண்ட் பண்றது எல்லாமே. சரியாக அரை வருடம் ஆனது கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் நட்பு பாராட்ட. தயக்கமென்றில்லை. அது ஏனோ பசங்க வந்து பேசட்டும் என நாங்களும், பொண்ணுங்க பேசட்டும் என பசங்களுன் இருந்துவிட்டோம். இத்தனைக்கும் சிலர் கிளாஸ்மேட்ஸ் வேறு. கிளாசில் பேசிக்கொண்டாலும் பஸ்சில் பேசுவது கிடையாது. பாரதி நகரோடு எங்கள் கேங் மெம்பர்கள் ஏறிவிடுவார்கள். சுகர் மில் ஸ்டாப்பிங்கில் ஏறும் ரேகாவை மட்டும் எங்கள் கேங்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அல்லது சங்கத்தில் அவள் சேரவில்லை. முதல் இரண்டரை வருடங்கள் பேருந்து பயணம் சொர்க்கமாய் இருந்தது. மொத்தப் பேருந்துக்கும் 12 பேர்தான். ஆட்டம், பாட்டம் என கலகலப்பாய் இருக்கும். செட் வேலை செய்யாத நாட்களில் அந்தாக்ஷ்ரி நடக்கும். க்ரிஸ் மாம், க்ரிஸ் சைல்ட் போல நாங்கள் பொங்கலுக்கு இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறோம். இதுவும் எங்கள் நட்பு பாலம் உறுதிபெற உதவியது. சில நாட்களில் அத்தனை பேரும் காரணமேயில்லாமல் அமைதியாய் வருவோம். வாரத்தில் நான்கு முறையாவது பேருந்து ரெயில்வே கேட்டில் சிக்னலுக்கு ஐந்து நிமிடங்களாவது நிற்கும். விடியற்காலை சுத்தமான காற்றும், இளஞ்சிவப்பு நிற வானமும் பார்க்க இதமாய் இருக்கும். சரியாய் கல்லூரியை நெருங்கும்போது சொல்லிவைத்தார் போல் கிட்டத்தட அனைவருக்கும் கொட்டாவி வரும். கல்லூரியில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிப்புகளும் ஆரம்பித்த பிறகு பீக் அவர் பீச் ரயில் மாதிரி ஆகிவிட்டது பஸ். ஒரே கும்பல் தான். கடுப்பாகிவிட்டது. எவ்வளவு பேர் ஏறினாலும் கடைசியிலிருக்கும் நான்கைந்து இருக்கைகளை விட்டுத் தருவதேயில்லை. கடைசி வருடம் ப்ராஜெக்ட்டில் பிஸியாக இருந்த சமயம் ஜூனியர்கள் பஸ்சில் பிழிய பிழிய காதலித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது கூப்பிட்டு ஓட்டுவோம். அதோடு சரி. கடைசி நாளன்று க்ளீனர் அண்ணாவிற்கு நல்லதாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தோம். அத்துடன் பஸ் நம்பர் 1 உடனான தொடர்பு அறுந்துபோனது. ஆனால் அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது (சங்கத்தில் ஒருத்தியின் கல்யாணத்துக்கு தான் நாகர்கோவில் சென்றுவந்தோம்). அடுத்தாண்டு வந்தால் பத்து வயதாகிறது எங்கள் நட்புக்கு.

வேலைக்கு செல்கையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ப்ராஞ்ச் கதீட்ரல் ரோடில் இருந்த ஆபிஸ். மற்ற எல்லா கிளைகளுக்கும் கம்பெனி பேருந்து வசதி உண்டு. இந்தக் கிளையைத் தவிர. ஷட்டில் சர்வீஸ் கூட இல்லை. அப்போது நாங்கள் தங்கியிருந்தது பெசண்ட் நகர். அங்கிருந்து பெரம்பூர்/அயனாவரம் போகும் வண்டிகள் 29Cல் பயணம். டிப்போவில் ஏறுவதால் இடம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் வுட்லேண்ட்ஸில் இறங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். சரியாக மியூசிக் அகாடமி வரும்போதே எழுந்து நகர ஆரம்பித்தால் தான் வுட்லேண்ட்ஸில் இறங்க முடியும். எப்பவும் பிதுங்கி வழியும், வெயிலும், வாகனப் புகையும், வியர்வையினால் ஏற்படும் கசகசப்பும், பையை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் (ஒரு முறை என் பர்ஸை ஆட்டையப் போட்டுட்டாங்க), இதற்கிடையில் வயதானவர்களுக்கோ/குழந்தையோடு நிற்பவர்களுக்கோ இடம் கொடுக்க வேண்டிய மனிதாபிமானம், பாக்கி சில்லறைக்காக கண்டக்டரை தேடுதல் என இருக்கும்போது காதலிக்க நேரமில்லை. ஆனால் எப்பவாவது அத்திப்பூ பூத்தாற் போல் அழகை ரசிக்கும் தருணங்கள் வாய்க்கப் பெறும். அதுவும் கொஞ்ச நேரம் தான். இறங்க வேண்டிய இடம் வந்துவிடும் இல்லையெனில் ரசித்த அழகு நொடியில் மறைந்துவிடும்

பின்னர் கம்பெனி வோல்வோக்களில் (சில சமயங்களில் ஏசி பஸ்), புஷ் பேக் இருக்கைகளுடன், காலை மடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லாமல் நீட்டிக்கொண்டு, விருப்பமான இடத்திலமர்ந்துகொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும், காதுக்கு ஐபாட், சுய முன்னேற்ற புத்தகங்களில் தலை புதைந்து, பல சமயங்களில் தூங்கிகொண்டும், அலுவலக நேரத்தில் புடுங்காத ஆணியை பேருந்தில் புடுங்கிக்கொண்டிருக்கும் தோலாலான இயந்திரங்களோடு பயணிப்பது பேரிம்சையாகவே இருந்தது. பஸ் நம்பர் 1 ரூட் நம்பர் 1ஆக மாறினாலும் அந்த நான்கு வருட பேருந்து பயணத்தின் ஹாரன் சத்தம் அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

பேருந்து காதல் என தொடர் பதிவிட அழைத்த சங்கவிக்கு நன்றி. காதல் அனுபவம் ஏதுமில்லாததால் பொதுவானவற்றைப் பகிர்ந்துகொண்டேன்.

தொடரை தொடர அழைக்க விரும்புவது

பதிவெழுத நாள் நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கும்

விக்னேஷ்வரி.
ராஜி.
தாரணி பிரியா.
கேவிஆர்

அழைத்துள்ள நால்வரில் விக்கி மற்றும் ராஜியிடம் மட்டும் தான் டேக் செய்யவா என கேட்டேன். மற்ற இருவர் விருப்பமிருப்பின் தொடருங்கள்.

March 19, 2010

தேசி ரசோய்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


பஞ்சாப் - பாலும் தேனும் ஓடுவதாக சொல்லப்படும் மாநிலம். பஞ்சாப் என்றதுமே நினைவுக்கு வருவது சிங்கின் டர்பன், மஞ்சள் பூக்கள் பூக்கும் கடுகுத் தோட்டங்கள் (thanks to yash chopra and Raj aka SRK) மறக்காமல் அவர்களின் உணவு வகைகள். இந்தியாவிலேயே உணவைக் கொண்டாடுபவர்கள் பஞ்சாபிகளாகத்தான் இருக்க முடியும். சைவம் அசைவம் என அனைத்து உணவையும் ரசித்து செய்வார்கள். ருசித்து உண்பார்கள். ரொட்டி, முழங்கை அளவுடைய டம்ளரில் (லோட்டா???!!) லஸ்ஸி, பனீர், தால் இல்லாமல் உணவே இறங்காது. வெண்ணையும், நெய்யும் சாப்பாட்டில் கரை புரண்டு ஓடும். அவ்வளவு ரிச்சாக இருக்கும் அவர்கள் சமையல். ஸ்பெஷல் ஐட்டங்களாக சொல்லவேண்டுமெனில் சைவத்தில் பனீர் பட்டர் மசாலா, பனீர் பசந்தா, தால் மக்கனி, மக்கி ரொட்டி, சர்சோன் கா சாக், ஆலு பராத்தா என அடுக்கிக்கொண்டே போகலாம்.

வேலூரில் சிஎம்சி எதிரிலிருக்கும் இருக்கும் வைஷ்ணவ் க்யான் தாபாவில் சாப்பிட்டிருக்கிறீர்களா? காலேஜ் நாட்களில் சில நாட்கள் பாக்கெட் மணி மிச்சப்படுத்தி இங்கு சென்று சாப்பிடுவோம். டிபிகல் பஞ்சாபி என நார்த் இண்டியன் நண்பர்கள் சர்ட்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு ஏ கிளாஸ். இதன் கிளை மவுண்ட் ரோடிலிருக்கிறது. அதே பேரில். டி.நகரில் இருக்கும் மற்றொரு கிளைதான் தேசி ரசோய். சுத்தமான நெய்யினால் தயாராகும் பஞ்சாபி சைவ உணவுகள். அக்மார்க் தாபாக்களிலுள்ள கயித்து கட்டில் மட்டும் தான் இங்கு மிஸ்ஸிங். சுவை அபாரம்.

மிகவும் சின்ன ஹோட்டல். தரை தளம் மற்றும் முதல் தளம். கிளாசிக் ஆம்பியன்ஸோ, அலங்காரங்களோ இல்லை. Food speaks. மெனுவைப் பார்த்து சட்டென முடிவெடுப்பது கொஞ்சம் கடினம். நாங்களும் ரொம்ப குழம்பிப்போய் தாலி ஆர்டர் செய்யலாம் என முடிவு செய்தோம். லிமிடட்/அன்லிமிடட் என இருவகை இருக்கிறது. அன்லிமிடட் தாலியில் சூப், நான்/ரொட்டி/மக்கி ரொட்டி/பஜ்ரா ரொட்டி/ பட்டர் நான்/ஆலு பராத்தா/மூளி பராத்தா/கோபி பராத்தா வகைகளுடன் ஒரு தால் ப்ரை, சென்னா மசாலா, சில்லி பனீர், ஷாஹி பனீர், பைங்கன் பர்த்தா, பூந்தி ரைத்தா, சாலட், ஜீரா ரைஸ்/புலாவ், ஒரு ஸ்வீட். அத்தனையும் அன்லிமிடட்.

பராத்தாக்களில் ஆலு மட்டுமே நன்றாக இருந்தது. மற்றவை எல்லாம் ஆவரேஜ். மக்கி ரொட்டிக்கு நூற்றுக்கு நூறு தரலாம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால். நீங்கள் கேட்டவுடன் சுடச் சுட வருகிறது. பைங்கன் பர்த்தா அட்டகாசம். கத்திரிக்காய் பொதுவாக சப்ஜியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன். ஆனால் இங்கு நல்ல பிளண்ட் ஆகி பிரமாதமாக இருந்தது. புலாவும் அருமையாக இருந்தது. ஸ்வீட் ஆப்ஷனில் கீர்/ப்ரூட் சாலட் வித் ஐஸ்க்ரீம்/ லஸ்ஸி கொடுத்தார்கள். நான் உண்ட கீர் சூப்பர். ஆனால் முழுவதும் சாப்பிடமுடியவில்லை. திகட்டுகிறது. ப்ரூட் லஸ்ஸி ரொம்ப சுமார் என அண்ணா சொன்னார்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - தேசி ரசோய் - பஞ்சாபி தாபா
இடம் - டி.நகர் திருப்பதி தேவஸ்தானம் அருகில். ரத்னா கஃபேக்கும் தேவஸ்தானத்துக்கும் நடுவிலிருக்கிறது.
டப்பு - வெரி எக்கனாமிகல். பர்ஸ் பழுக்காது.

பரிந்துரை - பஞ்சாபி உணவு விரும்புபவர்கள் கட்டாயம் ட்ரை செய்யலாம்.

பஞ்சாபிகள் சாப்பிடப் பிறந்தவர்கள். நான் சமைத்துப் போடுவதை சாப்பிட்டு என்னவர் ஜம்முன்னு இருக்கார் என சொல்லும் விக்கியின் யோ சைனா என்ற சைனீஸ் ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ இங்கே. ஏன் அம்மிணி நீங்க சமைக்கறத சாப்பிட்டா அவர் நல்லாருக்கார் என கேட்க தோன்றி வாயை மூடிக்கொண்டேன்.

டிஸ்கி : சாப்பாட்டில் லயித்ததால் போட்டோ எடுக்க மறந்துவிட்டேன். மேலே போட்டிருக்கும் போட்டோ நெட்டில் சுட்டது.

March 18, 2010

கொன்னு பிச்சுவேன்

பெட்ரோல், டீசல் விலையேறிடுச்சு. சரி. நாலு வருஷத்துக்கு முந்தி விலையேத்தினாங்கன்னு சொல்லியே மாசாமாசம் ரேட்டு ஏத்துவாங்க நம் ஆட்டோகாரங்க. இப்போ கேக்கவே வேணாம். ஆட்டோ ஏர்றதுக்கு முன்னால காதுல கழுத்துல போட்றுக்கறதெயெல்லாம் வித்துட்டு காசு ஏற்பாடு பண்ணிக்கனும். இருக்கப்பட்டவங்க சொத்துப் பத்திரத்தையும் அடமானம் வைக்கலாம். இல்லாதப்பட்டவங்க தலைல துண்டப்போட்டுகிட்டு இன்ன ஊருக்கு மானசீகமா பாதயாத்திரை போறதா நினைச்சிக்கலாம். நடராஜா சர்வீஸ்.
********

5 கோடி ரூபாய் மதிப்புள்ள மாலை. 200 கோடி ரூபாய் செலவில் விழா. ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே. திருவிளையாடலில் நாகேஷ் சொல்வது போல் "அத்தனையும் ஆயிரம் ரூவா நோட்டு. சொக்கா சொக்கா. எனக்கில்ல. எனக்கில்லவே இல்லை"ன்னு பினாத்த வச்சிட்டாங்க மாயாவதி. மணி லாண்டரிங்க பத்தி ஐஐஎம்ல் வகுப்பெடுக்க மாயாவதி போகலாம். தமிழகத்திலிருந்து.. சரி வேணாம் விடுங்க. ஆட்டோ சார்ஜ் ஜாஸ்தியாகிடுச்சுல்ல. எதுக்கு என்னால அடுத்தவங்களுக்கு வீண் செலவு.
**********

அம்மா வீடு மாறியிருக்காங்க. பெரிய ஆச்சர்யமா எழுதிக் கொடுத்த மூணாவது நாளே BSNLலிருந்து லைன்மேன் வந்து கனெக்ஷ்ன் கொடுத்துட்டு போனார். பரவாயில்லயேன்னு ஆச்சர்யப்பட்டோம். சனிக்கிழமை கார்ப்ரேஷன் வேலைக்காக ரோட்டோரம் ஜேசிபி வச்சி தோண்டியபோது மண்ணோடு ஆப்டிகல் கேபிளையும் வாரிட்டாங்க. நல்ல நாள்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணாலே வரமாட்டாங்க. இதுல சனி ஞாயிறு எங்க வரப்போறாங்கன்னு திங்கள் கிழமை சொன்னோம். நோ ரெஸ்பான்ஸ். செவ்வாய் கிழமை லைன்மேனைப் பார்த்தபோது கேட்டதுக்கு நாளைக்கு (புதன்) தான் வரமுடியும். ரெண்டு நாள் யூனியன் மீட்டிங்கு எல்லோரும் போறோம். யூனியன் மீட்டிங்கா என நான் கேட்க. ஆமாங்க பொது மக்களுக்கு சிறப்பா எப்படி சேவை செய்றதுன்னு மீட்டிங்குன்னார். தேவைதான். போய்ட்டு வாங்க. வாழ்க யூனியன். வளர்க BSNL:)
************

BSNLன்ன உடனே ஞாபகம் வந்தது. அந்த நாலாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் மேட்டர் என்ன ஆச்சு? மீண்டும் தி.நா சொல்வது போல் நாலாயிரம் கோடி. சொக்கா. சொக்கா. எனக்கில்ல. எனக்கில்ல. எனக்கில்லவேயில்ல.
*************

பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"முப்பது வருஷத்துக்கு முன்னால வாங்கினேன் சார். வேண்டா வெறுப்பா தான். காசு வீணா வீட்ல இருந்தா திருட்டு பயம்ன்னு சொல்லி நிலத்துல கொட்டினேன் சார். இப்போ அண்ணாநகர் வீடு 1.5 கேக்கறாங்க. வில்லிவாக்கமும் அம்பத்தூரும் 50க்கு போவுது. நான் கோயேம்பேடு வீட்லயே தங்கிட்டேன் சார். மத்த மூணுலருந்து வர்ற வருமானம் போதுமா இருக்கு"

எனக்கு இருட்டிக் கொண்டு வந்தது. வெயிலாய் இருக்குமென சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
**************

சொல்லிவைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு வீட்டிலிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் விடாமல் கேட்கிறது. அதுவும் மிக அதிகமான சத்தம். தம்பி சொன்னான்.
"அந்த வீட்ல எப்படியும் பத்து நாயாவது இருக்கும்"
"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா.
************

கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு (யார்கிட்ட ரவுடி நானு).

கொஞ்ச நாளாக ஜூனியரை அத்தனை பேரையும் இப்படித்தான் மிரட்டுகிறார். உபயம் மாமா.

நம்ம ரியாக்ஷனாக அவர் எதிர்பார்ப்பது பயமாருக்கேடா. சொல்லாத பட்சத்தில் அதையும் அவரே - பம்மாக்கேடா.

March 12, 2010

ஆப்ரேஷன் எண்டபி - 2

இஸ்ரேலியர்களை/யூதர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்குமிடங்களிலெல்லாம் தவறாது இருக்கும் குறிப்பு 'The most intelligent race'. யூதர்கள் அறிவாளிகள், தந்திரமானவர்கள், குயுக்திக்குப் பேர் பெற்றவர்கள் என பல விஷயங்கள் அவர்களைப் பற்றி. அப்படிப்பட்டவர்கள் தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டுமென்ற பாலஸ்தீனியர்களின் கோரிக்கையை ஏற்பார்களா? 48 மணி நேரம் அவகாசத்தை நீட்டிக்கச் செய்தது அதிரடியாய் களமிறங்கி பயணக்கைதிகளை மீட்பதற்கு தான். இஸ்ரேல் ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் டான் ஷார்மன் ஒரு திட்டத்தை முன்வைத்தார். என்ன திட்டமெனில், ஒருத்தனையும் ரிலீஸ் பண்ண வேண்டாம். வீடு புகுந்து அடிப்போம் என்றார்.
ஏதன்ஸ் - எண்டபி - விமானக் கடத்தப்பட்ட பாதை
இதற்கிடையில் எண்டபியில் தீவிரவாதிகள் குத்துமதிப்பாக ஒரு சர்வே நடத்தினார்கள். யூதர்கள் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க முன்வந்தாரகள். அதன்படி 105 யூதப் பயணிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிட்டார்கள். விமானத்தின் கேப்டன் மைக்கேல் பேகோஸ் 'இங்கு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் யூத பயணிகளின் உயிருக்கு என் குழு தான் பொறுப்பு. அவர்களில்லாமல் விமான ஊழியர்கள் குழு செல்லாது' என மறுப்புத் தெரிவித்து போக மறுத்தார். அவருடன் மீதமிருந்த பதினோரு விமான ஊழியர்களும் எண்டபி விமானநிலையத்திலேயே தங்கிவிட்டனர். யூதர்கள் அல்லாத பயணிகளை விடுவித்ததன் மூலம் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் வெற்றிக்கு மறைமுகமாக உதவ வழிவகுத்திவிட்டனர்.

மீண்டும் இஸ்ரேலுக்கு வருவோம். மளமளவென்று வேலைகளைப் பார்த்தார்கள். இஸ்ரேலின் உளவுத்துறையான, உலகிலேயே மிகச்சிறந்த உளவுத்துறை என குறிப்பிடப்படும் மொஸாட்-ன் அறிவுறுத்தல் படி, இஸ்ரேல் ராணுவத்தின் சிறப்பு பிரிவான செய்யட் மட்கல் (Sayeret Matkal) வீரர்கள் கமாண்டர் யோனடன் நேடன்யாஹு தலைமையில் பயணிகளை மீட்க தயாரானார்கள். இந்த மீட்பு நடவடிக்கைக்காகவே நான்கு C-130 வகையைச் சார்ந்த ஹெர்குலஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. விமானம் தரையிறங்குமிடத்திலிருந்து பிணைக்கைதிகளை அடைத்து வைத்திருக்கும் அறை வரை பிரச்சனையின்றி செல்ல உகாண்டா அதிபர் உபயோகிப்பது போன்ற மெர்சிடிஸ் கார் மற்றும் லேண்ட் ரோவர் கார் ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டது. மருத்துவ உதவிக்கான பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன் ஒரு போயிங் 707 விமானமும் தயாரானது.
C-130 ஹெர்குலஸ் ரக விமானம்
எந்த அடிப்படையில் இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த தாக்குதலுக்கு தயாரானார்கள்?

1. உகாண்டாவில் நிறைய இஸ்ரேலியர்கள் இருந்ததாக நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். அங்கு பிழைப்புக்கு என்ன செய்தார்கள்? இஸ்ரேலியர்கள் தாம் உகாண்டாவின் பெரும்பான கட்டிடங்களை உருவாக்கியவர்கள். எண்டபி விமான நிலையத்தை கட்டுவித்ததும் ஒரு இஸ்ரேல் நிறுவனம் தான். சோலேல் போன் (Solel Boneh) என்ற அந்த நிறுவனத்திடமிருந்து எண்டபி விமான நிலையத்தின் வரைபடம் பெறப்பட்டது.

2. ஏற்கனவே கடத்தல்காரர்கள் விடுவித்த பயணிகளிடமிருந்து, கடத்தல்காரர்களின் அடையாளம், பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையின் அமைப்பு, அவர்கள் வைத்திருந்த ஆயுதம் போன்ற தகவல்கள் பெறப்பட்டன.

3. மிக முக்கியமான நம்பிக்கை. யாருமே நினைத்துப் பார்க்க மாட்டார்கள் இஸ்ரேல் இப்படியொரு அதிரடி நடவடிக்கையில் இறங்குமென்று. அந்த நம்பிக்கைத் தான் இஸ்ரேல் ராணுவத்திற்கு பெரிய துணையாக இருந்தது. நினைத்துப் பார்க்காத விஷயத்தை நடத்தி எதிரியை நிலைகுலையச் செய்வது.
மீட்பு நடவடிக்கையின் மாதிரி
ஜூலை 3 பிற்பகல் 1.20 மணிக்கு விமானங்கள் பயணத்தை துவக்கின. எகிப்து, சூடான், சௌதி அரேபிய நாடுகளின் ரேடார்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு விமானங்கள் எண்டபியை அடைந்தபோது மணி இரவு பதினொன்று. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரே ஒரு நிமிடம் அதிகமானது. தரையிறங்கும் போதே கார்கோவின் கதவுகள் திறக்கப்பட்டன. துரிதகதியில் கார்களும், ஆயுதங்களும் இறக்கப்பட்டன். மொத்தம் 29 வீரர்கள். கமாண்டர் நேடன்யாஹு தலைமையில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

1. ஏரியாவை கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும்.
2. நம் விமானங்களை நோக்கி எதிரிகள் முன்னேறாமல் பாதுகாக்க வேண்டும்.
3. அதிரடியாய் களமிறங்கி பயணிகளை மீட்க வேண்டும்.
4. பயணிகளை பத்திரமாக விமானத்திற்கு கொண்டு வர வேண்டும்.
5. சுபம். கிளம்பிவிடலாம்.

விமானத்திலிருந்து இறக்கப்பட்ட மெர்சிடிஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்களில் ஏறிக்கொண்ட வீரர்கள் டெர்மினலை நோக்கி பயணித்தார்கள். அவர்கள் கணக்குப்படி இடி அமினீன் கார் என உகாண்டா வீரர்கள் தடுக்க மாட்டார்கள் என நினைத்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இடி அமின் சில தினங்களுக்கு முன்னர் தான் வெள்ளை நிற மெர்சிடிசுக்கு மாறியிருந்தார். கருப்பு நிற மெர்சிடிஸில் வருவது யாரென தெரிந்துகொள்ள இரு காவலர்கள் வண்டியை நிறுத்த முயற்சித்தார்கள். அவர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கமாண்டோக்கள், நொடியும் தாமதிக்காது டெர்மினலை நோக்கி முன்னேறினார்கள். அப்படி செல்கையில் தலைமேயேற்ற வீரர் நோடன்யாஹு கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து சுடப்பட்டு இறந்தார். இந்த ஆப்ரேஷனில் இறந்த ஒரே இஸ்ரேலிய வீரர். அவர் நினைவாக ஆப்ரேஷன் நேடன்யாஹு என்றும் அழைக்கப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்த ஒரே இஸ்ரேலிய வீரர் நேடன்யாஹு
டெர்மினலுக்குள் நுழைந்துகொண்டே "யாரும் எழுந்திருக்காதீர்கள். நாங்கள் இஸ்ரேலிய வீரர்கள்." எனக் கத்தினார்கள். விடுதலையாகப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் எழுந்து நின்ற ஒரு பயணியை தீவிரவாதி என நினைத்து சுட்டனர். மளமளவென்று தீவிரவாதிகளை வீழ்த்திய பின் பயணிகளை மீட்டு விமானங்களில் ஏற்றினர். ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டுமென திட்டமிட்ட தாக்குதல் 58 நிமிடங்களில் முடிந்தது. அதில் எட்டு தீவிரவாதிகளை வீழ்த்த ஆன நேரம் வெறும் முப்பது நிமிடங்கள். ஒரே ஒரு வீரர், மூன்று பயணிகளை பலிகொடுத்து. போகும்போது சும்மா போக வேண்டாமென நினைத்த இஸ்ரேல் வீரர்கள், உகாண்டாவின் மிக் 17 ரக போர் விமானங்களை (புறப்பட்ட பின் வானில் இடையூறு செய்யாமலிருக்க) காலி செய்துவிட்டுச் சென்றனர். கிட்டத்தட்ட பதினேழு விமானங்களுடன் 45 உகாண்டா வீரர்கள் உயிரை விட்டார்கள்.

உலகம் முழுவதும் இஸ்ரேலின் இந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை பல்வேறு வகையாக விமர்சிக்கப்பட்டது. அவமானத்தில் இடி அமின் துடித்தார். மூன்று வருடங்கள் கழித்து ஆட்சி பறிக்கப்பட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களும், சினிமாக்களும் வந்தன. வரலாற்றின் பக்கங்களில் அதிரடி நடவடிக்கைக்காக நிரந்தர இடம் பெற்றது இந்தச் சம்பவம்.

பின்னிணைப்பு

இடி அமின் - ச.ந.கண்ணன்.
http://www.jewishvirtuallibrary.org/jsource/Terrorism/entebbe.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.operationentebbe.com/

www.military-today.com/aircraft/c130_hercules.jpg
http://newsimg.bbc.co.uk/media/images/41795000/gif/_41795388_entebbe_airport3_416.gif

March 10, 2010

ஆப்ரேஷன் எண்டபி - 1

அப்பா, அம்மா, தம்பி என குடும்பமாக அமர்ந்து மதிய உணவோ, மாலை டீயோ குடிக்கும் வாய்ப்பு அபூர்வமாய் கிடைக்கும். அப்படி கிடைக்கும் தருணங்களின் போது அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, உலக நிகழ்வுகள் என பலவற்றை அப்பாவுடன் விவாதிப்போம். அப்படி ஒரு தடவை விமானக் கடத்தல் பற்றி பேச்செழுந்தபோது அப்பா விவரித்த ஒரு விமானக் கடத்தலும், அதிரடி மீட்பு நடவடிக்கையும் சுவாரஸ்யமாக பட்டதால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1976 ஆம் வருடம் ஜூன் 27 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு டெல் அவிவிலிருந்து(இஸ்ரேல்) பாரீஸை நோக்கிச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமான பயணிகள் என்ன நினைத்து விமானத்தில் ஏறியிருப்பார்கள்? நம்மூர் ஆட்கள் என்றால் ஏர் இந்தியா விமானத்தில் சௌகார் ஜானகி போன்ற ஏர் ஹோஸ்டஸ் கொண்டு வரும் உணவிற்காக காத்திருந்திருப்போம். அப்படியிருக்கையில் ஒரு நாலு தடிமாடுகள் எழுந்து நின்று 'பெரியோர்களே தாய்மார்களே. தடங்கலுக்கு மன்னிக்கவும். தவிர்க்க இயலாத காரணத்தினால் இந்த விமானத்தை நாங்க கடத்தறோம்'னு கைல துப்பாகிய வச்சுகிட்டு சொன்னா எப்படியிருக்கும்? அதுபோன்ற மனநிலையில் தான் ஏர்பஸ்-300 விமான பயணிகளும் இருந்தார்கள். 248 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 260 பேர்.

பாலஸ்தீன விடுதலை முன்னணியைச் சேர்ந்த (Popular Front for the Liberation of Palestine) இரு பாலஸ்தீனியர்களும், ஜெர்மனின் புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த (Revolutionary Cellz) இருவரும் சேர்ந்து விமானத்தைக் கடத்திக் கொண்டுபோவதாக அறிவித்தார்கள். பாரீஸ் நகரிற்கு செல்ல வேண்டிய விமானம், லிபியாவின் பென்சகி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தக் களேபரங்களால் மயக்கமடைந்து உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் ஒருவரை லிபியாவில் இறக்கிவிட்டு, விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்ட விமானம் தரையிறங்கியது உகாண்டா நாட்டின் எண்டபி விமான நிலையத்தில்.

ஏதன்ஸ்லருந்து கடத்திக்கிட்டு வேற எங்கயும் கொண்டு போகாம ஏன் உகாண்டாவுக்கு வந்தாங்கன்னு ஒரு கேள்வி வருதா? அப்போ உகாண்டாவின் சர்வாதிகாரியா இருந்த இடி அமின் இஸ்ரேலுக்கு பகிரங்கமா எதிர்ப்பு தெரிவிச்சிக்கிட்டிருந்தார். எதிரிக்கு எதிரி நண்பனில்லையா. அதான் அங்கன கொண்டு போனாங்க. எண்டபில தரையிறங்கிய விமானத்தைப் பற்றின செய்தி இடி அமினுக்கு போன உடனே சார்வாள் ரொம்ப குஷியாகிட்டார். ஏன்னு இங்கயும் ஒரு கேள்வி வருதா. அது ஒரு பெரிய கதை. நம்ம கதையின் கருவை மட்டும் பார்த்துட்டு விமானத்துக்கு வருவோம். உகாண்டாவுல இடி அமின் பண்ணாத அட்டகாசமில்ல. அழிச்சாட்டியம் பண்ணவும் டப்பு வேணும்ல? அதான் இஸ்ரேல்கிட்ட இராணுவத்த பலப்படுத்தனும், ஆயுதங்கள் வாங்கனும் காசு கொடுன்னு அவங்க நாட்டுக்குப் போய் கேட்டாரு. மொள்ளமாரி, முடிச்சவுக்கி, கேப்மாரி என பல மாரித்தனங்களின் மொத்த உருவமும் நல்ல காரியம் பண்ணனும் காசு கொடுன்னு கேட்டா தூக்கி கொடுக்க இஸ்ரேலுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. 'அதெல்லாம் நயா பைசா பேறாது. போ'ன்னு துரத்தி விட்டுட்டாங்க. வந்ததே அமினுக்கு கோவம். நாட்டுக்கு திரும்பி வந்தவுடனே 'இஸ்ரேல்காரன் ஒருத்தன் என் எல்லைக்குள்ள இருக்கக்கூடாது. கெட் அவுட் ஐ ஸே'ன்னுட்டாரு. அதோட கோவம் அடங்கல. எதாச்சும் பண்ணி இவனுங்களுக்கு ஆட்டம் காட்டனுமேன்னு கருவிட்டிருந்தவருக்கு வயித்துல பால வார்த்த மாதிரி இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) அதிகமிருந்த விமானத்த தூக்கியாந்து இங்கன நிறுத்தினாங்க தீவிரவாதிங்க.

இப்ப திரும்பவும் எண்டபி விமானநிலையத்திலிருக்கும் கடத்தப்பட்ட விமானத்திற்கு வருவோம். தீவிரவாதிங்கன்னாலே கோரிக்கை இல்லாம கடத்தமாட்டாங்க தானே. அவங்களுக்கும் தொழில் தர்மம்ன்னு ஒன்னு இருக்குல்ல. அவுங்களோட கோரிக்கை என்னன்னா இஸ்ரேல், கென்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறை பிடிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட சுமார் 53 பாலஸ்தீனியர்களை (பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள்) எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கனும் என்பது தான். அவ்வாறு செய்யத் தவறினால் ஜுலை 1 முதல் ஒவ்வொரு பயணியாக கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்கள்.

இஸ்ரேலின் உயர் அதிகாரிகள் ஒன்று கூடி விவாதிக்க ஆரம்பித்தார்கள். '53 பேர விடுவிக்கறது இயலாத காரியம். அதே சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுக்கிறது மகா பாவம். என்ன செய்யலாம்?'னு மண்டைய பிச்சிக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் கால அவகாசம் கேட்போம். அதுக்குள்ள என்ன பண்ண முடியும்ன்னு யோசிப்போம்ன்னு தீவிரவாதிங்க கிட்ட கெடுவை ஜூலை 4 வரை நீட்டிக்க சொன்னாங்க. இடி அமினும் 'யப்பா நானும் மொரிஷியஸ் வர போவேண்டிய வேலை இருக்கு. நான் இல்லாத போது எதுவும் செய்ய வேணாம். பேசாம கெடுவ ஜூலை 4 வரை எக்ஸ்டண்ட் பண்ணுங்க. நானும் ஒரு எட்டு மொரிஷியஸ் போய்ட்டு வந்துடறேன்'னு சொல்லி தீவிராவதிங்களுக்கு சப்போர்ட்ட தன் ராணுவ வீரர்கள விட்டுட்டு போனாரு.

இஸ்ரேல் என்ன முடிவெடுத்தாங்க? பயணிகளின் கதி? அடுத்த பதிவில்..

March 8, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு அழகான வித்யாசமான காதல் கதை பார்த்த மகிழ்ச்சியைத் தந்தது கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இரண்டாவதாக பெரிய ஆச்சர்யம் சிம்புவால் விஷ்க் விஷ்க் பண்ணாமல் நடிக்க முடியுமா என்ற சந்தேகத்தை தீர்த்து வைத்தது. இதற்கு முன் அவர் பண்ண தொட்டி ஜெயா படத்தில் கைய கட்டிக்கிட்டு நடிச்சிருப்பார் (ஊருக்கு போகும்போது பஸ்சில் நான் பார்த்ததிலேயே உருப்படியான படம்). ஆனால் இந்தப் படத்துலதான் கையையும் வாயையும் கட்டிக்கிட்டு நடிச்சிருக்கார். வெரி குட் சிம்பு. அடுத்தது த்ரிஷா. வாவ் சிம்ப்ளி ப்யூட்டிபுஃல். த்ரிஷா கொள்ளை அழகாய் தெரிவதற்கு முதல் மற்றும் ஒரே காரணம் ஆடை வடிவமைப்பாளர் நளினி ஸ்ரீராம். காட்டன் புடவைகளிலும், சுடிதார்களிலும் நிஜமாலுமே ஏஞ்சல் போலவே இருக்கிறார். பார்த்தீங்களா. விமர்சனம்ன்னு லேபிள் போட்டுட்டு படத்தோட கதையப் பத்தி எதுவுமே சொல்லாம போறேனே. காதலன். காதலி. வில்லி. வில்லி யாரு? காதலி. லவ் பண்ற பையன சுத்தவுட்டுகிட்டே இருக்கிற காதலி வில்லியாகத் தானே இருக்க முடியும்? ரொம்பவே குழப்பிக்கொள்ளும் பெண்ணான ஜெஸ்ஸியை கண்டதும் காதல் வயப்படுகிறான் கார்த்திக். ஜெஸ்ஸிக்கும் கார்த்திக் மீது காதல் உண்டு. ஆனால் பிரச்சனை வருமென சொல்லி சொல்லியே அவனை அவாய்ட் செய்கிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மிச்சக் கதை. ஸ்டோரி லைன் சொல்லியாச்சா. ஆங். இனிமேல் எனக்குப் பிடிச்சதை சொல்லலாம்.


சிம்புவின் நண்பராய் வரும் கேமராமேன். ஒரு மாதிரி உடைந்த தமிழில் பேசி கலகலப்பாக்குகிறார். அதுவும் சிம்பு அடிக்கடி சொல்லும் 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் மட்டும் ஏன் சார் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்?' டயலாக்கை அவர் சொல்லும்போது அட்டகாசம். அதே டயலாக்கை த்ரிஷாவும் கேட்கிறார் வலியோடு. நமக்கும் வலிக்கிறது. ஆலப்புழா காட்சிகளும், த்ரிஷாவின் திருமணம் நின்ற பிறகு த்ரிஷாவின் வீட்டில் வைத்து சிம்புவும் த்ரிஷாவும் பேசும் காட்சிகளும் கொள்ளை அழகு. கே.எஸ்.ரவிக்குமாரின் வசனங்களோடு அடுத்தடுத்த காட்சிகள் வருவது நன்றாக இருக்கிறது. கேரளாவின் அத்தனை அழகையும் மிக அழகாக சிறை பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசை. நத்திங் கேன் பி செட். ஆனால் சில பாடல்களை படமாக்குவதில் கொஞ்சம் சறுக்கினார்போல் தெரிகிறது. எனக்கு ஒமனப் பெண்ணே பாட்டை முதலில் கேட்டதை விட விஷுவலோடு கேட்க நன்றாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஹோசான்னா கொஞ்சம் டல்தான் பார்க்க. படத்தில் நடுநடுவே கார்த்திக் விண்ணைத்தாண்டி வருவாயான்னு இழையும்போது அடடா சான்சே இல்ல. கிளைமேக்ஸ் எதிர்பாராத ஆனால் நல்ல முடிவு. டிபிகல் கௌதம் மேனன் க்ளைமாக்ஸ். சிம்பு ஏன் படம் முழுக்க பல்லக் கடிச்சுகிட்டே பேசறார்ன்னு தெரியல. அதுவும் பின் மண்டைய அடிக்கடி தடவறது பார்த்தா இந்நேரம் அவருக்கு பின்மண்டை வழுக்கையாயிருக்கனும். அதே மாதிரி திரும்ப திரும்ப கேரக்டர்களின் பெயரை சொல்லிக்கொண்டேயிருப்பது கடுப்பாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர் ஆகியோர் மிக முக்கியமான காரணகர்த்தாக்கள்.

காதலிப்பவர்கள், காதலிக்காதவர்கள், காதலிக்கிறோமா என குழப்பத்திலிருக்கும் அனைவரும்

விண்ணைத்தாண்டி வருவாயா - போகலாமே...

March 2, 2010

150ஆவது பதிவு - ஏட்டிக்கு பேட்டி

'மேடம் 149 இடுகை போட்டுட்டீங்க. 150பதிவை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க. நான் வேணா உங்கள ஒரு பேட்டி எடுக்கவா?' எனக் கேட்டார் ஒரு பதிவர்.

'இல்லீங்க எனக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுங்க. நான் ரொம்ப சாதாரண ஆளுங்க' என மறுத்தும் பிடிவாதமாய் நிற்கவே சரியென ஒத்துக்கொண்டேன். நான் அவருக்கு அளித்த பேட்டி கீழே. அந்தப் பதிவர் யாரென்ற விவரம் பதிவின் இறுதியில்.

வணக்கம் மேடம்.

மேடமெல்லாம் வேணாமே. வித்யான்னே கூப்பிடுங்க.

சரிங்க வித்யான்னே.

ஆரம்பமே அசத்தலா இருக்கே. என் பேரு வித்யா. பேர் சொல்லியே கூப்பிடுங்க.

நீங்க பதிவுலகத்துக்கு எப்படி வந்தீங்க?

நடந்துதான்.

அது இல்லீங்க. நீங்க பதிவெழுத வந்த கதைய கொஞ்சம் சொல்லுங்க.

அத ஏற்கனவே ரெண்டு தடவ எழுதியாச்சு. திரும்ப திரும்ப ஒரு துக்க சம்பவத்தை மக்களை நினைக்க வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.

பதிவெத வந்து மூணு வருஷம் ஆகுது. இப்போதான் 150ஆவது பதிவு போடறீங்க. ஏன் இந்த நிதானம்?

நான் என்ன எழுதமாட்டேன்னு அடமா பிடிக்கிறேன்? மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. என்ன பண்ணச் சொல்றீங்க?

அடிக்கடி ப்ரேக் எடுக்கறீங்களே ஏன்?

பதிவுகளைத் தாண்டி என் உலகம் ரொம்ப பெரிசுங்க. இது மட்டுமே வாழ்க்கையில்லயே.

149 பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?

அத்தனையுமே நான் பிடிச்சு எழுதினது தான். நம்ம குழந்தைகள்கிட்ட நாம வித்தியாசம் காட்ட முடியுமா?

எப்பவாச்சும் அரசியல்வாதிகளை கிண்டல் பண்றீங்களே? பயம்மா இல்லயா?

பயம்மா? எனக்கா? ஹே ஹே. அதுக்கெல்லாம் பயந்தா உயிர் வாழ முடியுமா?

நீங்க அதிகமா உங்களின் நினைவுகளைப் பற்றியும், மொக்கைகளையுமே எழுதறீங்களே ஏன்?

பதிவுங்கறத நான் ஒரு சேமிப்பு கிடங்காதான் பார்க்கிறேன். என் நினைவுகளை சேமிச்சு வைக்கிறேன். மொக்கை எழுதறதுங்கறது என்னோட விருப்பம். இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லனும்னா அதான் வருது.

இல்லயே நீங்க சில சீரியஸ் பதிவுகளையும் நல்லா எழுதியிருக்கீங்களே?

அப்படியா சொல்லவே இல்ல. அது எப்பவாச்சும் வரும்ங்க. அமாவாசை சோறுக்கு தினம் ஆசைப்பட முடியுமா? Moreover நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். முடியலன்னு தான் மொக்கைப் போடறேன்.

சரி. பெண்ணியம், சுதந்திரம், பற்றி எழுதுவீங்களா?

எந்த ஈயம் பித்தாளைப் பத்தியும் எழுதற ஐடியா இல்லைங்க. சும்மா கூவறதால ஒன்னும் ஆகிடாது.

அப்ப பதிவு எழுதற மாதிரியே எல்லாரும் இல்லைன்னு சொல்றீங்களா?

உங்க கேள்வி எனக்குப் புரியலை.

இல்லைங்க. பதிவுல சண்முகத்தை சாரி சமூகத்தை திருத்தனும்ங்கிற மாதிரி எழுதறவங்கெல்லாம் நிஜமாவே அப்படி இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?

இதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

சரி வேணாம் விடுங்க. முன்னாடி அடிக்கடி ஜுனியர் அப்டேட்ஸ் கொடுத்திட்டிருந்தீங்க. சமீப காலமா அது இல்லயே ஏன்?

கொடுக்கக்கூடாதுன்னு எதுவுமில்ல. அவர் சேட்டைய பதியறதுக்கு நான் தனியா பிளாக் ஆரம்பிக்கனும். கூடிய சீக்கிரம் பதிவிடறேன்.

அதே போல முன்னெல்லாம் நிறைய பட விமர்சனம் எழுதீனிங்க. ஒரே நாள்ல ரெண்டு விமர்சனப் பதிவு போட்டீங்க. இப்போ அவ்வளவா வர்றதில்லயே ஏன்?

முன்னாடி நிறைய படம் பார்க்க முடிஞ்சுது. இப்போ ஜூனியருக்கு டிமிக்கி கொடுத்துட்டு போக முடியறதில்ல:( அதில்லாம நான் தோணித் துலங்கி படம் பார்க்கறதுக்குள்ள ஒரு படத்துக்கு நூறு விமர்சனம் எழுதிடறாங்க. என் பங்குக்கு கிழிக்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது. ஹும்ம்ம்.

உங்கப் பதிவு எதுவும் தமிழ்மண பரிந்துரைக்கு வருவதில்லயே ஏன்?

பரிந்துரைக்கு வர நான் என்ன...

நீங்க என்ன?

இருங்க. ஏன் அவசரப்படறீங்க? நான் என்ன சிறப்பாவா எழுதறேன்னு சொல்ல வந்தேன். எழுதறது மொக்கை. மொக்கையையும் மொக்கையா எழுதறேன். பரிந்துரைக்கெல்லாம் வரணும்ன்னு ஆசைப்பட முடியுமா?

ம்ம்ம்

ஷப்பாடி எதுவும் புரியல இல்ல?

உங்க எதிர்கால திட்டமென்ன வித்யா?

பேட்டின்ன உடனே புத்திய காமிக்கறீங்க பார்த்தீங்களா. திட்டம் பட்டமெல்லாம் வெச்சுக்க நானென்ன அரசியல்வாதியா?

நான் கேக்க வந்தது என்னன்னா ஏதாவது புதுமையா பண்ற எண்ணம் இருக்கா?

புதுமையா? வேணாம் போய்டு.

பதிவுலகத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் எது?

ரெண்டுமே கருத்து சுதந்திரம் தான்.

ஒரு பதிவரா சக பதிவர்களுக்கு என்ன கருத்து சொல்ல விரும்பறீங்க?

என்னை சக பதிவரா அவங்க மதிக்கறதே பெரிய விஷயம் தான்.

பேட்டிய முடிச்சுக்கலாம். ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையில் என் மொக்கைகள் தொடரும்..

அந்த பிரபல பதிவர் இவர்தான்