October 30, 2009

எண்ட குருவாயூரப்பா

ரிலையன்ஸ் நெட்வொர்க்கின் விளம்பரம் பார்த்தீர்களா? அட்டகாசமான இசை. பைபர் கான்செப்ட் என வித்தியாசமாய் யோசித்திருந்தாலும், ஹ்ரிதிக் ரோஷன் உடம்பை வளைத்து ஆடுவது ஹாவ்வ்வ்வ்வ்வ். போரிங் ரோஷன். போர்பான் பிஸ்கெட்டிற்கும் உங்க டான்ஸுக்கும் என்ன சம்பந்தம். வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க சார்.*************

லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வரும் "Khanabadosh" பாட்டைக் கேளுங்கள். சங்கர்- எஹ்சான் - லாய் பின்னியிருக்கிறார்கள். முதல் தடவை கேக்கும்போது ரஹ்மான் குரல் மாதிரியே இருந்தது. நெட்டில் தேடியதில் மோஹன் என போட்டிருக்கிறார்கள். லவ்லி வாய்ஸ். அசின் - வேண்டாம் அம்மணி. இந்த ப்ரீக்கி கெட்டப்பெல்லாம் உங்களுக்கு கண்றாவியாய் இருக்கிறது. அதுவும் இந்த பாட்டில் ஆடுகிறேன் பேர்வழி என அவர் பண்ற சேட்டை எண்ட குருவாயூரப்பா.
**************

NDTV Profitல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராஜா சாரி ராசாவின் பேட்டி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஆவுன்னா "In Rasa's period" ன்னு அவர் பண்ண அலம்பல் தாங்க முடியல. சார் நீங்க மத்திய அமைச்சர் தான். மொகலாய சக்ரவர்த்தி ரேஞ்சுக்கு "என் ஆட்சியில்.."ன்னு நீட்டி முழக்கிட்டிருந்தார்.
*****************

ஐ - பாட்

சர்வம் படத்தில் வரும் நீதானே பாட்டு. யுவன் வாய்ஸும் அந்த வரிகளும் க்ரியேட் பண்ணும் மேஜிக்.

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்

இதயச் சதுக்கம் அதிருதே
உன் ஞாபகம் வந்தபின் அடங்குதே

ஒரு கணம் வாழ்கிறேன்
மறுகணம் சாகிறேன்
இரண்டுக்கும் நடுவில் நீதானே
******************

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் ஒரு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயங்களிலே அவ்வளவு அச்சுப் பிழை. எனக்கு நேரம் கிடைத்து புத்தகம் எடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் இந்த அச்சுப் பிழைகளை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. மூடி பீரோவில் வைத்துவிட்டேன். ஒரே ஒருவர் என்றாலும் கூட வாசகன் வாசகன் தானே. குவாலிட்டி ப்ரொடெக்ட் என்பது எல்லாத் துறைகளிலுமே அவசியமாகிறது. என்ன நான் சொல்றது? ஏனோ இரு நாட்களாக அந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்ற உந்துதல். முழு வீச்சில் முடித்தாகிவிட்டது.

October 27, 2009

காணி நிலம்

இன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது. சளக் சளக்குகளும், சரக் சரக்குகளும் அவசரமாய் ஆரம்பித்து அழகிய கோலங்கலாய் முடிந்திருந்தன. நான்கு மழை கண்டு நமுத்துப் போய் மக்கிய வாசம் வீசும் கூரையின் வெளியிலிருந்து அகிலாண்டம் கத்திக் கொண்டிருந்தாள்.

"ஒரு பொட்டு சீமெண்ண கூட இல்லை. இன்னிக்கு கஞ்சிக்கு கையேந்தனும். போக்கத்தவன கட்டிக்கிட்டு நான் சீரழியனும்னு கருப்புசாமி எந்தலைல எழுதிருக்கு."

வழக்கம்போலவே இந்த பொழுதும் அகிலாண்டத்தின் இரைச்சலோடு தான் விடிந்தது மாரி என்கிற மாரியப்பனுக்கு. சலித்துக்கொள்ளக்கூட சலிப்பாக இருந்தது மாரிக்கு. மெல்ல பாயிலிருந்து எழுந்தவர் கண்கள் தேடியது தெய்வானையை. மூங்கில் தடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் பை இல்லாததால் கிளம்பிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவராய், எழுந்து, பழுப்பேறிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பினார். தெரு முக்கு வரை அகிலாண்டத்தின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. குரல் தேய தேய மாரியின் நடையின் வேகம் குறைந்து செட்டியார் கடை முன் நின்றது.

மாரிக்கு உத்தியோகம் என எதுவும் கிடையாது. இருந்த மூன்று செண்ட் நிலமும் மழை குறைந்ததால் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலமாகப் போனது. கூலி வேலை செய்ய மாரியின் உடல் ஒத்துழைக்கவில்லை. செட்டியார் கடையே கதி எனக்கிடந்து, பொட்டலம் மடிப்பது, பாக்கெட் போடுவது, பாட்டில் கழுவுவது என காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரே மகள் தெய்வானை பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் காட்சியென பண்ண என்ன செய்வதென்பது தெரியாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இவை எல்லாவற்றிர்கும் மேல் அகிலாண்டம். பொழுது போய் பொழுது விடிந்தால் பஞ்சப் பாட்டு தான். கவலையில் மூழ்கியிருந்தவரை செட்டியாரின் குரல் கலைத்தது.

"எல மாரி. யோசனையெல்லாம் பலமாருக்காப்புல இருக்கு?"

"என்னத்த சொல்றது செட்டி? பொழுது எப்படா விடியும், எப்படா வூட்ட வுட்டு கிளம்பலாம்ங்கற அளவுக்கு அவ கரசல் கூடிட்டே இருக்கு. ரவைக்கு வீட்டுக்கடையவே விசனமா இருக்கு."

"தெனம் நடக்கிற கூத்துதானே. இதுக்கேன் மூஞ்சிய ஆகாசத்துக்கு உசத்தி வச்சிருக்க?"

"தெய்வான பெரிய பள்ளிக்கோடம் போகனும்னு நச்சரிக்குது. ஏதோ ராங்காமே. அதெல்லாம் நிறைய வாங்கிருக்குதாம். அதுக்கு 15000 காசு கட்டனுமாம். எங்கிட்டு போறது?"

"மச்சு வூட்டு பெரியம்மாகிட்ட கேக்க சொல்லு. அவுகதான இவ்ளோ நாள் தெய்வான படிப்புக்கு காசு குடுத்தாங்க?"

"கேட்டுப் பார்த்துச்சாம். அந்தம்மா கையவிரிச்சுட்டாங்களாம். புள்ள ஆசப்படுது. நாந்தேன் படிக்கல. அதையாவது படிக்க வைக்கலாம்னு பார்த்தா காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியல."

"பேசாம நாஞ்சொல்றது கேளு. நம்மூருக்கு பைபாஸ் வருதுல்ல. ரோடு போற இடத்துல தான் உன் நிலமும் இருக்கு. பேசாம வித்துடு. வர்ற காசை புள்ள படிப்புக்கு எடுத்துக்கோ. நிறைய மிஞ்சும். அத வச்சு இதே போல ஒரு கடைய டவுன்ல போடு. சரக்கெல்லாம் நான் இறக்குறேன். கொஞ்சம் வருமானம் வரும். அகிலாண்டம் வாயையும் மூடலாம்ல. என்ன சொல்ற?"

"செட்டி அது எங்கப்பாரு கஷ்டப்பட்டு வாங்கினது. விக்க மனசு வரமாட்டேங்குது."

"போடா பொசக்கெட்டவனே. செத்துப்போன உன் அப்பனா வந்திப்ப கஞ்சியூத்த போறாரு? வித்துட்டு வேலையப் பாப்பியா? வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு"

"ஹும்ம். நீ சொல்றது சரிதேன். பார்ப்போம். யாராச்சு வேணும்னு வந்தா சொல்லியனுப்பு செட்டி."
****************

மாலை பள்ளியிலிருந்து வந்த தெய்வானை, விறகு தேய்த்துக்கொண்டிருந்த அகிலாண்டத்திடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"யம்மா. நான் கேட்ருந்தேனே? என்னம்மா பண்ணப் போற?"

"என்ன?"

"அதாம்மா காலேஜ் போக காசு.."

"காசுமில்ல ஒன்னுமில்ல. கஞ்சிக்கே வழியக்காணோம். காலேசூ போறாளாம்"

"அதில்லமா. மச்சூ வூட்டு பெரிம்மா ஒரு வழி சொன்னாங்கமா. நம்ம நிலத்த வித்து"

"எடு வெளக்கமாத்த. எப்படியாப்பட்ட குதிரையே எரவாணத்த புடுங்குதாம். நொல்ல குதிரைக்கு கொள்ளு கேக்குதாம்மா? நிலத்த விக்கதாண்டி போறேன். வர்ற காசுல வூட்டுக்கு ஒரு ஓடு காமிச்சிட்டு மிச்சத்துல உன்ன எவன் கையிலயாவது குடுத்துட்டு நான் நிம்மதியா இருப்பேன்"

"தாத்தா சம்பாரிச்சத என் சம்மதமில்லாம விக்க முடியாது தெரியுமா?"

முடிக்கும் முன்னரே விறகு கட்டையால் அடிவாங்கினாள் தெய்வானை. அழுதுக்கொண்டே குடிசை உள்ளே ஓடினாள்.
**************

"யோவ் குமாரசாமி. எத்தன நாளாய்யா அந்த ஜி.ஓவ ரெடி பண்ணுவ? பெரியவர் நாளைக்கு கையெழுத்துப் போட கேப்பாரு. அவர் முன்னாடி தலை சொறிய வச்சிடாத."

"அடிச்சாச்சுப்பா."

"எத்தனை ஏக்கர்ப்பா வருது"

"20 ஏக்கர். பைபாஸ் போடலாம்னு NH ல சொன்னாங்கள்ள. அதயும் சேர்த்து தான். பெரியவரு கையெழுத்து போட்டவுடனேயே ஓட்டிரவேண்டியதுதான். இந்ததபா அக்கொயரிங்ல எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது. சட்டுபுட்டுன்னு முடிச்சிடனும்."
*************

"பல்கலைகழகம் கட்ட நிலம் கையகப்படுத்தபட உள்ளது."

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் புதிய பல்கலைக் கழகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள முதல் நடவடிக்கையாக நிலம் கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் அமையவிருக்குமிடத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்ததே. இப்போது அத்திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

October 23, 2009

தப்பாத தாளங்கள்

தப்பின் தாளத்துக்கு தப்பாமல் ஆடுபவனுக்கு
தீச்சட்டி தூக்குபவனின் இழப்பு வலி தெரியுமா??சாலை விபத்தில் இறந்தவனின்
சவ ஊர்வலத்தில்
வாரி இறைக்கப்பட்ட
பூக்களும்
செத்துக்கொண்டிருந்தன
அதே சாலை விபத்தில்..டிஸ்கி 1: திட்றதுக்கு முன்னால லேபிள பார்த்துடுங்க.
டிஸ்கி 2: லேபிள பார்த்தப்புறமும் யாராச்சும் திட்டினீங்கன்னா அடுத்த இடுகையும் கவுஜயே எழுதுவேன். பீ கேர்புல்.

October 19, 2009

நொன் தூ தீ

ரொம்ப நாளாயிற்று ஜூனியர் அப்டேட்ஸ் எழுதி.எக்கச்சக்கமான விஷயங்கள் இருந்தாலும் ஏனோ எழுத விருப்பமில்லை. ஒன்னே ஒன்னு மட்டும். ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து 2 வாரங்கள் ஆகிறது. 7.30 மணிக்கெல்லாம் எழுந்து "அம்மா தூல்" என்று பையை மாட்டிக் கொள்பவன், கீழே இறங்கி ஆட்டோவைப் பார்த்தவுடன் காவிரியை ரிலீஸ் செய்கிறான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என நினைக்கிறேன்.
"சஞ்சு 1 2 3 சொல்லு"
நொன்
தூ
தீ
தோர்
"ம்ம்ம்ம் 5 6 சொல்லு"

தித்
ஆன்
ஆய்த்
நான்
தென்ன்ன்
"குட் பாய். ABCD..."
அம்மா நானாம்மா போஉம்
***************

ஐ - பாட்

சரியாக ஒரு வருடம் ஆகப்போகிறது என் கைக்கு வந்து. சில சமயம் இரண்டு நாட்களுக்கொருமுறை பாட்டு மாத்துவேன். சில சமயங்களில் மாதக்கணக்கில். ஒரு பாட்டு என முடிவு செய்துவிட்டால் திரும்ப திரும்ப அதையே கேட்பேன். கண்டிப்பாக அழுவாச்சி பாட்டுகள் நோ. என் ஐ பாடிலிருக்கும் பாட்டுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த செக்ஷன்:)

To start with என்னோட ஆல் டைம் பேவரிட் பாட்டு & நடிகர்.
நல்ல மழை பெய்யும்போது, வீட்டில் யாருமில்லாதபோது, பால்கனியில் நின்று இந்தப் பாட்டைக் கேளுங்கள். கண்டிப்பாக ஆடத் தோன்றும். The most romantic piece from Raja sir (என்னைப் பொறுத்தமட்டில்). புன்னகை மன்னனில் வரும் மியூசிக். டான்ஸ் கமல் லெவலுக்கு கம்மிதான். நீங்களும் என்சாய் பண்ணுங்க.************************

உறவினர் ஒருவருக்கு உடம்பு சரியில்லையென கேள்விப்பட்ட இன்னொரு உறவினர் போன் செய்து விசாரித்திருக்கிறார். உரையாடல்கள் கீழே.

"அம்மாக்கு தீடிர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாமே"
"தீடிர்ன்னு தான் வரும். லலிதா உன்ன இன்னிக்கு நைட் அட்டாக் பண்ண போறேன்னு சொல்லிட்டா வரும்?"
"அதில்ல. 2 நாள் ஆஸ்பத்திரில வச்சிருந்தீங்களாமே?"
"ஹார்ட் அட்டாக்னா. ஆஸ்பத்திரில தான் வப்பாங்க. வீட்லயேவா வச்சிப்பாங்க?"
டொக்..

போன் பண்ணி விசாரித்த உறவினர் என்னிடம் ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு கர்டசிக்காக விசாரித்தால் இப்படி கடுப்படிக்கறாங்களே என்று. மற்றொருவரோ எல்லாரும் விசாரிப்புங்கற பேர்ல இன்னொரு தடவை ஹார்ட் அட்டாக் வரவழைச்சுடுவாங்க போலிருக்கு என சலித்துக்கொண்டார். அவரவர் நியாயம் அவரவருக்கு.
************************

இந்த தடவையும் தீபாவளி அன்று வேலை சுழற்றிவிட்டது. எரிச்சல் தரும் சில வழக்கங்களைப் பற்றி தனி பதிவே போடலாம். நானும் வெடிச்சேங்கற பேர்ல பேருக்கு நாலு கொளுத்திப் போட்டேன். வாழ்த்துகள் சொல்ல போன் செய்த அண்ணாவிடம்
"என்னண்ணா பட்டையக் கிளப்பறீங்களா அங்க"
"இல்லடி. நேத்து வந்ததே 9 மணிக்கு. எம்பொண்ணு (1 வயதாகிறது) வெடிச்சத்தம் கேட்டாலே அலர்றா. இனிமே தான் போய் கொஞ்சம் மத்தாப்பூ வாங்கிட்டு வரணும்"

அடடா ஒரு சிங்கம் இப்படி சீப்பட்டு போச்சே:(
*************************

அம்மா வீட்டிற்கு சென்றிருந்தபோது அம்மா சொன்னார். "வித்யா உனக்கு ஏழரை சனி விட்ருச்சுடி". கேட்டுக்கொண்டிருந்த என் தம்பி சொன்னது. "மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா". அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

October 14, 2009

தித்தி(க்கும்)த்த தீபாவளி

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.

வயது ஏற ஏற பண்டிகைகளிம் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)

Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.

என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.

தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(

தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)

October 7, 2009

விண்வெளியில் விசயகாந்த்

டிஸ்கி 1 : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யார் மனது புண்படுமேயானால் கம்பேனி பொறுப்பேற்றுக்கொள்வதைப் பற்றி அப்பாலிக்கா யோசிக்கும்.

டிஸ்கி 2 : இந்தக் கதை நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது சென்ற சுற்றுலாவின்போது உருவாக்கப்பட்டது. RT & SCR ராயல்டி என ஏதும் கிடைச்சால் ஷேர் பண்ணிக்கலாம். தர்ம அடின்னா அட்ரஸ் குடுங்க. அனுப்பி வைக்கிறேன்.

டிஸ்கி 3 : கதை எழுதும்போது??!! ரகுவரன் உயிருடன் இருந்ததால் அவரைத் தான் வில்லனாக்கினோம். இப்போது அந்த கேரக்டருக்கு மாற்றாக யாரையும் யோசிக்க முடியவில்லை:(

மஞ்சள் காமாலை புரொடெக்ஷ்ன்ஸ்
பெருமையுடன் வழங்கும்


CABTUN IN & AS

விண்ணரசு
- Saviour of earth.

கேப்டனுக்கு அப்பா மகன் என இரட்டை வேடம். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜெனிபர் லோபஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேற்கொண்டு கதைக்கு போவோம்.

நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கான்பரன்ஸ் ஹாலில் குழுமியிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் பதற்றம். பிரச்சனை இதுதான். செவ்வாய் கிரகத்திலிருக்கும் இரு வேற்றுகிரகவாசிகளின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டபோது, அவர்கள் பூமியை அழிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. என்ன செய்வது என எல்லாரும் மண்டையப் பிச்சிக்கும்போது டீ சப்ளை பண்ற பையன் சொல்றான் "ஹ்ம்ம்ம்ம். இந்த உலகத்தை காப்பாத்த ஒருத்தரால தான் முடியும். அவர்தான் மண்ணரசு" (அப்பா கேப்டன்). எல்லாரும் ஏகமனதாக மண்ணரசுவை செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்து நாசா தலைம விஞ்ஞானி ரகுவரனை அணுகுகிறார்கள் (ரகுவரன் வில்லன் என சொல்லத் தேவையில்லை). ரகுவரனிடம் மண்ணரசுவின் வீர தீர பராக்கிரம செயல்களை சொல்லி சம்மதமும் வாங்குகிறார்கள்.

இப்போதான் அப்பா கேப்டனின் இண்ட்ரோ.

பேரரசுவின் பொன்னான வரிகளில், கண்ணம்மாபேட்டையில் ரிகார்டிங் செய்யும் ஸ்ரீகாந் தேவாவின் காதுக்கினிய இசையில் அட்டகாசமான இண்ட்ரோ சாங் வைக்கிறோம். மறக்காம கேப்டனின் கட்சி கொடியை க்ளோஸப்பில் காட்டுறோம். பாட்டு முடிஞ்சவுடனே பேமிலி செண்டிமெண்ட். மண்ணரசுக்கு ஏற்ற ஜோடியா அம்பிகா (முந்தைய படத்தில் இவங்க ஜோடிப் பொருத்தம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது). இவர்களின் மகனாக விண்ணரசு. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உடம்பெல்லாம் இளைக்க முடியாததனால வேற பையன நடிக்க வைக்கிறோம். இங்க ஒரு பேமிலி சாங். ஒரே இளநீர்ல ஸ்ட்ரா போட்டு குடிக்கறது மாதிரியான புதுமையான நிறைய காட்சிகள் இருக்கு.

இப்போ கதைய அடுத்த கட்டதுக்கு கிரேன் வச்சு தூக்குறோம் (கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல. லாஜிக்! லாஜிக்!)

மண்ணரசு, ரகுவரன் மற்ற விஞ்ஞானிகளெல்லாம் கூடி கும்மியடிச்சு ஒரு முடிவுக்கு வர்றாங்க. மண்ணரசுவே செவ்வாய் கிரகத்துக்கு போய், ஸ்பெஷலா ப்ரோகிராம் செய்யப்பட்ட லேசர் கன்னை வச்சு ஏலியன்ஸை அழிக்கறதுன்னு முடிவு செய்யறாங்க. உடனே நம்ம கேப்டன் ஜிப் வச்ச ஷூவும், டார்ச் வச்ச தொப்பியும்(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) போட்டுகிட்டு கிளம்புறாரு. போறதுக்கு முன்னாடி தாய்மார்களை கவரும் விதமா செண்டிமெண்ட் காட்சி. பொண்டாட்டியா பார்த்து இவர் கண் கலங்க அவிங்க அழ, படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க. இவர் கிளம்புறது தீபாவளி சீசன். அதனால புள்ளையாண்டானுக்கு லாரி லாரியா வெடி வாங்கிக் கொடுக்கிறாரு. அப்படியே ஷட்டில்ல கிளம்புறாரு. அங்க போய் லேண்ட் ஆனவுடனே அந்த லேசர் கன் தப்பா ப்ரோகிராம் பண்ணிருக்கறத நினைச்சு அதிர்ச்சியானலும், மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு. அவர் பேசிக்கிட்டிருக்கும்போது இரண்டு ஏலியன்ஸ் அவர பின்மண்டைல அடிச்சு ஒரு ஜெயில்ல அடைச்சு வக்கிறாங்க. அந்த ஜெயிலுக்கு கதவு கிடையாது. ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க (Technology has improved so much u know).

அம்பிகா மண்ணரசு திரும்பி வருவாருன்னு காத்துக்கிட்டிருக்காங்க. வருஷங்கள் உருண்டோடுகின்றன. விண்ணரசு பெரிய்ய்ய்ய ஆளாகிறார். "அப்பா எங்கம்மா?" என அவரின் கேள்விக்கு அம்பிகா நடந்தவற்றை கூற தன் தந்தையை தேடி நாஸா செல்கிறார் (குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி). ரகுவரனிடம் சென்று தந்தையை மீட்டு வர தன்னை செவ்வாய்க்கு அனுப்புமாறு கேட்க ரகுவரன் மறுத்துவிடுகிறார். ரகுவரனின் புது செகரட்ரியான ஜெ.லோ விண்ணரசுவின் அழகில் மயங்கி (வடிவேலு ஸ்டைலில் அல்ல), தன் பாஸ் தான் வில்லன் என்ற உண்மையை அவரிடம் சொல்கிறார். சினங்கொண்ட விண்ணரசு கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க தாயிடன் தானே செவ்வாய் கிரகத்துக்கு சென்று அப்பாவை கூட்டிவருகிறேன் என சபதம் செய்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார். ஹெல்ப் பண்ண ஜெ.லோவும் வர்றாங்க. இப்ப ஒரு டூயட் சாங். "காதல் ஆராரோ"ன்னு நரசிம்மா படத்துல ரொமான்ஸ் பண்ணுவாரே அந்த மாதிரி ஒரு பாட்டு. கண்டிப்பா நாக்க மடிச்சு ஆடற சீன் உண்டு. பாட்டு முடிஞ்சவுடனே ஒரு ராக்கெட்ட காட்றோம். கேப்டன் அத எப்படி செஞ்சாருங்கறதையும் காட்றோம். அவங்க அப்பா தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பட்டாசில் இருக்கும் வெடி மருந்தெல்லாம் சேர்த்து வச்சு ராக்கெட் பண்றாரு (எப்பூடி).

விண்ணரசு ஜெ.லோவுடன் செவ்வாய் கிரகத்துக்கு போறாரு. அங்க இறங்கி யார் கண்ணுலயும் படாம ராக்கெட்ட ஒளிச்சு வெக்கிறாரு. அப்படியே ஒரு ஏலியன ஃபாலோ பண்ணி அப்பாவை அடைச்சு வச்சிருக்க ஜெயில கண்டுபிடிக்கிறாரு. மண்ணரசு ஜெயில் கதவ பத்தின மேட்டர சொன்னதும் விண்ணரசு அலட்டிக்காம அந்த ஜெயில் சுவற்றை ரெண்டு கையாலையும் பிடிச்சு உடம்ப ஷேக் பண்றாரு. கேப்டன் உடம்புல பாயற மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, மண்ணரசு தப்பிச்சிடறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துல எல்லா இடத்திலயும் பாம் வைக்கிறாங்க. அது வரைக்கும் ஏலியன்ஸ் என்ன பண்ணாங்கன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல. அதனால அப்ப ஜெ.லோவோட அயிட்டம் நம்பர் ஒன்னு இருக்கு (லாஜிக் மிக முக்கியம் அமைச்சரே). ஏலியன்ஸ் தாங்கள் முட்டாளக்கப்பட்டதை உணருவதற்குள் மூவரும் ராக்கெட் ஏறி தப்பிக்கிறாங்க. செவ்வாய் கிரகமும் வெடித்து சிதறுகிறது.

மண்ணரசு நேரா யு.எஸ் பிரசிடெண்ட் கிட்ட ரகுவரனப் பத்தி சொல்லி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாரு. விண்ணரசு நாசாவோட புது தலைவராகறாரு. And they lived happily forever:)

October 1, 2009

நளா'ஸ்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


CTSல் வேலை செய்தபோதே இந்த ரெஸ்டாரெண்டைப் பார்த்திருக்கிறேன். சரியான செட் அமையாததால் போகவில்லை. தாம்பரத்திலிருந்தபோது குரோம்பேட்டையில் உள்ள கிளைக்குப் போகணும்னு நானும் ரகுவும் நிறைய தடவை ட்ரை பண்ணி தள்ளிப் போச்சு. இந்த முறை வேளச்சேரியில் இதைப் பார்த்தவுடன் முதல்ல இங்கதான் போகனும்ன்னு முடிவு செய்தோம்.

இரவு உணவுக்கு சென்றோம். கூட்டம் அம்முகிறது. இத்தனைக்கும் வார நாட்களில். ஒரு பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் டேபிள் கிடைத்தது. Ambience ஒன்றும் ஆஹா ஒஹோ இல்லை. சமையல்கட்டும், டைனிங் ஒரே இடத்தில். காமா சோமாவென ஒரே சத்தம். சரி மெயின் மேட்டருக்கு வருவோம். அளவான அடக்கமான மெனு. முருங்கைக்காய் சூப்பும், வெண்டைக்காய் பக்கோடாவும், சைனீஸ் பொட்டேட்டோவும் ஆர்டர் செய்தோம். சூப்பும் வெண்டைக்காய் ப்ரையும் அட்டகாசம். சைனீஸ் ஐட்டம் ரொம்பக் கேவலமாய் இருந்தது.


பத்து பதினைந்து வெரைட்டி ஆப்பங்கள் இருக்கு. பிளையின் ஆரம்பித்து மட்டன் ஆப்பம் வரை. நாங்கள் பனீர் சீஸ் ஆப்பம், Gingely ஆப்பம், முட்டை மசாலா ஆப்பம் ஆகியவை ஆர்டர் செய்தோம். எல்லாமே சூப்பர்ப். சைட் டிஷ்ஷாக ஆர்டர் செய்த கடலைக் கறி ஓகேவாக இருந்தது (நான் செய்வதை விட சுமார் தான் என ரகு சொன்னது இங்கு அநாவசியம்:)).


ஸ்வீட் மெனுவிலிருந்து நான் அடைபிரதமனும், அவர் கேரட் அல்வாவும் சாப்பிட்டார். ரெண்டுமே சூப்பர். Authentic கேரள உணவகத்தின் அடைபிரதமனை விட இங்கு டக்கராக இருந்தது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - நளாஸ் ஆப்பக்கடை
இடம் - வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையம் அருகில். சதர்லேண்ட் எதிர்புறம். குரோம்பேட்டையிலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - இரண்டு மாதங்கள் ஆனதால் சரியாக நினைவில்லை. ஆனால் பர்ஸை பதம் பார்க்கவில்லை.

பரிந்துரை - தாரளமாக போகலாம். Worth a try:)