ஏதன்ஸ் - எண்டபி - விமானக் கடத்தப்பட்ட பாதைஇதற்கிடையில் எண்டபியில் தீவிரவாதிகள் குத்துமதிப்பாக ஒரு சர்வே நடத்தினார்கள். யூதர்கள் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க முன்வந்தாரகள். அதன்படி 105 யூதப் பயணிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிட்டார்கள். விமானத்தின் கேப்டன் மைக்கேல் பேகோஸ் 'இங்கு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் யூத பயணிகளின் உயிருக்கு என் குழு தான் பொறுப்பு. அவர்களில்லாமல் விமான ஊழியர்கள் குழு செல்லாது' என மறுப்புத் தெரிவித்து போக மறுத்தார். அவருடன் மீதமிருந்த பதினோரு விமான ஊழியர்களும் எண்டபி விமானநிலையத்திலேயே தங்கிவிட்டனர். யூதர்கள் அல்லாத பயணிகளை விடுவித்ததன் மூலம் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் வெற்றிக்கு மறைமுகமாக உதவ வழிவகுத்திவிட்டனர்.
மீண்டும் இஸ்ரேலுக்கு வருவோம். மளமளவென்று வேலைகளைப் பார்த்தார்கள். இஸ்ரேலின் உளவுத்துறையான, உலகிலேயே மிகச்சிறந்த உளவுத்துறை என குறிப்பிடப்படும் மொஸாட்-ன் அறிவுறுத்தல் படி, இஸ்ரேல் ராணுவத்தின் சிறப்பு பிரிவான செய்யட் மட்கல் (Sayeret Matkal) வீரர்கள் கமாண்டர் யோனடன் நேடன்யாஹு தலைமையில் பயணிகளை மீட்க தயாரானார்கள். இந்த மீட்பு நடவடிக்கைக்காகவே நான்கு C-130 வகையைச் சார்ந்த ஹெர்குலஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. விமானம் தரையிறங்குமிடத்திலிருந்து பிணைக்கைதிகளை அடைத்து வைத்திருக்கும் அறை வரை பிரச்சனையின்றி செல்ல உகாண்டா அதிபர் உபயோகிப்பது போன்ற மெர்சிடிஸ் கார் மற்றும் லேண்ட் ரோவர் கார் ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டது. மருத்துவ உதவிக்கான பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன் ஒரு போயிங் 707 விமானமும் தயாரானது.
C-130 ஹெர்குலஸ் ரக விமானம்எந்த அடிப்படையில் இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த தாக்குதலுக்கு தயாரானார்கள்?
1. உகாண்டாவில் நிறைய இஸ்ரேலியர்கள் இருந்ததாக நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். அங்கு பிழைப்புக்கு என்ன செய்தார்கள்? இஸ்ரேலியர்கள் தாம் உகாண்டாவின் பெரும்பான கட்டிடங்களை உருவாக்கியவர்கள். எண்டபி விமான நிலையத்தை கட்டுவித்ததும் ஒரு இஸ்ரேல் நிறுவனம் தான். சோலேல் போன் (Solel Boneh) என்ற அந்த நிறுவனத்திடமிருந்து எண்டபி விமான நிலையத்தின் வரைபடம் பெறப்பட்டது.
2. ஏற்கனவே கடத்தல்காரர்கள் விடுவித்த பயணிகளிடமிருந்து, கடத்தல்காரர்களின் அடையாளம், பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையின் அமைப்பு, அவர்கள் வைத்திருந்த ஆயுதம் போன்ற தகவல்கள் பெறப்பட்டன.
3. மிக முக்கியமான நம்பிக்கை. யாருமே நினைத்துப் பார்க்க மாட்டார்கள் இஸ்ரேல் இப்படியொரு அதிரடி நடவடிக்கையில் இறங்குமென்று. அந்த நம்பிக்கைத் தான் இஸ்ரேல் ராணுவத்திற்கு பெரிய துணையாக இருந்தது. நினைத்துப் பார்க்காத விஷயத்தை நடத்தி எதிரியை நிலைகுலையச் செய்வது.
மீட்பு நடவடிக்கையின் மாதிரிஜூலை 3 பிற்பகல் 1.20 மணிக்கு விமானங்கள் பயணத்தை துவக்கின. எகிப்து, சூடான், சௌதி அரேபிய நாடுகளின் ரேடார்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு விமானங்கள் எண்டபியை அடைந்தபோது மணி இரவு பதினொன்று. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரே ஒரு நிமிடம் அதிகமானது. தரையிறங்கும் போதே கார்கோவின் கதவுகள் திறக்கப்பட்டன. துரிதகதியில் கார்களும், ஆயுதங்களும் இறக்கப்பட்டன். மொத்தம் 29 வீரர்கள். கமாண்டர் நேடன்யாஹு தலைமையில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.
1. ஏரியாவை கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும்.
2. நம் விமானங்களை நோக்கி எதிரிகள் முன்னேறாமல் பாதுகாக்க வேண்டும்.
3. அதிரடியாய் களமிறங்கி பயணிகளை மீட்க வேண்டும்.
4. பயணிகளை பத்திரமாக விமானத்திற்கு கொண்டு வர வேண்டும்.
5. சுபம். கிளம்பிவிடலாம்.
விமானத்திலிருந்து இறக்கப்பட்ட மெர்சிடிஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்களில் ஏறிக்கொண்ட வீரர்கள் டெர்மினலை நோக்கி பயணித்தார்கள். அவர்கள் கணக்குப்படி இடி அமினீன் கார் என உகாண்டா வீரர்கள் தடுக்க மாட்டார்கள் என நினைத்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இடி அமின் சில தினங்களுக்கு முன்னர் தான் வெள்ளை நிற மெர்சிடிசுக்கு மாறியிருந்தார். கருப்பு நிற மெர்சிடிஸில் வருவது யாரென தெரிந்துகொள்ள இரு காவலர்கள் வண்டியை நிறுத்த முயற்சித்தார்கள். அவர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கமாண்டோக்கள், நொடியும் தாமதிக்காது டெர்மினலை நோக்கி முன்னேறினார்கள். அப்படி செல்கையில் தலைமேயேற்ற வீரர் நோடன்யாஹு கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து சுடப்பட்டு இறந்தார். இந்த ஆப்ரேஷனில் இறந்த ஒரே இஸ்ரேலிய வீரர். அவர் நினைவாக ஆப்ரேஷன் நேடன்யாஹு என்றும் அழைக்கப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்த ஒரே இஸ்ரேலிய வீரர் நேடன்யாஹுடெர்மினலுக்குள் நுழைந்துகொண்டே "யாரும் எழுந்திருக்காதீர்கள். நாங்கள் இஸ்ரேலிய வீரர்கள்." எனக் கத்தினார்கள். விடுதலையாகப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் எழுந்து நின்ற ஒரு பயணியை தீவிரவாதி என நினைத்து சுட்டனர். மளமளவென்று தீவிரவாதிகளை வீழ்த்திய பின் பயணிகளை மீட்டு விமானங்களில் ஏற்றினர். ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டுமென திட்டமிட்ட தாக்குதல் 58 நிமிடங்களில் முடிந்தது. அதில் எட்டு தீவிரவாதிகளை வீழ்த்த ஆன நேரம் வெறும் முப்பது நிமிடங்கள். ஒரே ஒரு வீரர், மூன்று பயணிகளை பலிகொடுத்து. போகும்போது சும்மா போக வேண்டாமென நினைத்த இஸ்ரேல் வீரர்கள், உகாண்டாவின் மிக் 17 ரக போர் விமானங்களை (புறப்பட்ட பின் வானில் இடையூறு செய்யாமலிருக்க) காலி செய்துவிட்டுச் சென்றனர். கிட்டத்தட்ட பதினேழு விமானங்களுடன் 45 உகாண்டா வீரர்கள் உயிரை விட்டார்கள்.
உலகம் முழுவதும் இஸ்ரேலின் இந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை பல்வேறு வகையாக விமர்சிக்கப்பட்டது. அவமானத்தில் இடி அமின் துடித்தார். மூன்று வருடங்கள் கழித்து ஆட்சி பறிக்கப்பட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களும், சினிமாக்களும் வந்தன. வரலாற்றின் பக்கங்களில் அதிரடி நடவடிக்கைக்காக நிரந்தர இடம் பெற்றது இந்தச் சம்பவம்.
பின்னிணைப்பு
இடி அமின் - ச.ந.கண்ணன்.
http://www.jewishvirtuallibrary.org/jsource/Terrorism/entebbe.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.operationentebbe.com/
www.military-today.com/aircraft/c130_hercules.jpg
http://newsimg.bbc.co.uk/media/images/41795000/gif/_41795388_entebbe_airport3_416.gif