January 30, 2012

போலேநாத் உணவகம்

மிக மிக குறைந்த விலையில், திருப்தியாய் சாப்பிட ஏற்ற இடம், திருவான்மியூரில் இருக்கும் போலேநாத் ரெஸ்டாரெண்ட். நார்த் இண்டியன், சைனீஸ், சாட் என cuisine லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது. ஞாயிற்றுகிழமைகளில் ஸ்பெஷல் தாலி மீள்ஸ் கிடைக்கிறது. 95 ரூபாய். ஜல்ஜீரா, ஜிலேபி, ரைத்தா (பூந்தி), சாலட், தால், மூன்று சப்ஜி (பாகற்காய், சோலே மசாலா, ஆலு மட்டர் மசாலா), கடி, ரொட்டி மற்றும் ஒயிட் ரைஸ். ஸ்வீட்டைத் தவிர எல்லாமே அன்லிமிடெட். அன்று எங்கள் ப்ளேட்டில் இருந்த அத்தனை ஐட்டமும் அட்டகாசமாய் இருந்தது. முக்கியமாய் கரேளா (பாகற்காய்) சப்ஜி. கசப்புடன், லைட்டான தித்திப்பும் புளிப்புமாய் அருமையாக இருந்தது. அடுத்து தால். தாலுக்கு ரொட்டி தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்:))

சூடான, மிருதுவான, நெய் தடவிய ரொட்டிகள். நெய் வேண்டாமென்றால் சொல்லிவிடலாம். நான் சாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு ரொட்டிகளை ரவுண்டுக் கட்டிக்கொண்டிருந்தேன். ஜிலேபி ஒக்கே. ரொம்ப சின்ன உணவகம் தான். அதிகபட்சம் 25 அல்லது 30 பேர் அமரலாம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோதான். ரெண்டே பேர்தான் சர்வ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பர்ஸிற்கு பங்கமில்லாமல், ஒரிஜினல் டேஸ்ட்டில், எண்ணைய் மிதக்காத க்ரேவிகளை சாப்பிட ஏற்ற இடம். சைனீஸ் ஐட்டம் எதையும் ட்ரை செய்யவில்லை. இந்த மாதிரி சின்ன உணவகங்களில் ஃப்ரைட் ரைஸ் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கனும்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - போலேநாத்
உணவு - நார்த் இண்டியன், சாட், சைனீஸ் Veg
இடம் - திருவான்மியூர். மருந்தீஸ்வரர் கோவில் பின்புறம் போகும் ரோடில், சிங்கப்பூர் ஷாப்பி என்றொரு கடை இருக்கிறது. அதையொட்டி போகும் ரோட்டில் இரண்டாவது பில்டிங். மாடியில்.
டப்பு - ரொம்பக் கம்மி. தாலி மீல்ஸ் 95ரூபாய். கூடுதல் நிம்மதியாய் 8% வரியெல்லாம் கிடையாது:))

பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். மினிமம் டேஸ்ட் கேரண்டி

January 24, 2012

கடவுளுக்கு ஒரு கடிதம்

அன்பின் கடவுளுக்கு,

என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.

1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.

2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?

3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?

4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.

இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?

January 18, 2012

அளம் - வாசிப்பனுபவம்

கூகிள் பஸ்ஸிற்கு மூடுவிழா நடக்கும்முன்பு, வடகரை வேலன் அண்ணாச்சி, ஜாக்கி சேகருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். மக்களை, மண்ணின் இயல்பை பிரதிபலிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை”. நான் அப்போதுதான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நாவலாக நெடுஞ்சாலை இருந்தது. கூடவே அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சு.தமிழ்செல்வியின் அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி ஆகியவையும் இருந்தன. 2012 புத்தக கண்காட்சியில் வாங்கவேண்டுமென குறித்து வைத்துக்கொண்டேன். போலவே, வாங்கியும் விட்டேன். முதலில் வாசிக்கத் துவங்கியது அளம்.

வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.

கிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.

தாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.

அளம்
சு.தமிழ்செல்வி
மருதா பதிப்பகம்
100 ரூபாய்

January 11, 2012

நினைவெல்லாம் நிவேதா - 5

”அஷோக்??? என்ன சொல்றீங்க?” என்றான் கணேஷ் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில். இருவருக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு சலனமற்று நின்றுக்கொண்டிருந்த அஷோக்கை மெல்ல நெருங்கினான். அருகே செல்ல செல்ல அஷோக்கின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பது கணேஷிற்கு தெளிவாகத் தெரிந்தது. மெதுவாக அவர் தோளைத் தொட்டதும், உடைந்து அழத் தொடங்கினார் அஷோக். இதனை சற்றும் எதிர்பாராத கணேஷ் “ஈசி அஷோக். ஈசி. சாரி உங்களை புண்படுத்த அப்படிக் கேட்கவில்லை”
முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி துடைத்துவிட்டு நிமிர்ந்த அஷோக், ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இட்ஸ் ஒக்கே. அது உங்க கடமை. ஐ லவ்ட் ஹெர் சோ மச் கணேஷ். பாசம் தெரியாமல், அப்பாவின் பரபரப்பையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த என் வாழ்க்கையில் நிவேதாவின் வரவு வசந்தமாக இருந்தது. இந்த மூணு வருஷம் எங்களுக்குள் எந்த விதமான சண்டையோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. வேலையில் நான் பிஸியானது உண்மைதான். அதை என்னிடம் சொல்லியிருந்தால் சரிசெய்திருப்பேனே. இவ்ளோ பெரிய தண்டனையா தரனும்? இப்படி பாதில விட்டுட்டுப் போனவள எதுக்கு இன்னும் நினைச்சுகிட்டிருக்கனும்? எதுக்கு லவ் பண்ணனும்? முடியல கணேஷ். வீட்ல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நரகமாருக்கு. அவள் சம்பந்தப்பட்ட எதையுமே பார்க்க பிடிக்கல. அதான் ஏறக்கட்டச்சொன்னேன்.” என்றார்.

”மறுபடியும் சாரி அஷோக். எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. நாங்கள் இங்கே வந்தது, நிவேதாவின் திங்ஸை பார்க்க முடியுமா எனக் கேட்கத்தான்.”

"எதுக்கு?”

“ஜஸ்ட் ஒரு ரொட்டீன் ஃபார்மாலிட்டி தான்.”

“ஒக்கே. நான் வேலைக்காரிகிட்ட சொல்றேன். நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்”

”நன்றி. நாங்க கிளம்புறோம்.”

“கணேஷ்.. ஒரு நிமிஷம். ஜெயராமன் போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்தா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?”

“அவரிடம் இருக்கும் எவிடென்ஸை பொறுத்திருக்கிறது. நாங்க வர்றோம்.”

“வருவீங்களா?”

“தேவைப்பட்டால்.”

“தேவைப்படுமா?”

பதில் எதுவும் சொல்லாமல், சிரித்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். வெளியே வந்து சிகரெட் பத்த வைத்த கணேஷிடம் “என்ன பாஸ்? மூடிடலாமா? ஒன்னுமில்லாமத்தான் போகும் போலயே?” என்றான் வசந்த்.

”இல்லை வசந்த். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது” என்றான் கணேஷ் புகையை வெளியே விட்டபடி.

“என்ன பாஸ் சொல்றீங்க? ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு சொல்லுது. சித்தப்பன் புருஷன் தான் ட்ரிக்கர் பண்ணான்னு சொல்றாரு. புருஷனோ, பொண்டாட்டி செத்த வருத்தம் துளியும் இல்லாம, ஹீரோ கணக்கா ஜம்முன்னு வேலையப் பார்க்கிறான். ஜெயராமன கேஸ் ஃபைல் பண்ணச் சொல்லலாம். ஆட்டம் முடியப் போகுது. இனிமேதான் சூடு பிடிக்கப்போகுதுன்னு சொல்றீங்க? மனசுல என்ன ஓடுது பாஸ்? சொல்லிடுங்க.”

“பொறுமையா இரு வசந்த். சொல்றேன். அதுக்கு முன்னால கொஞ்சம் க்ரவுண்ட் ஒர்க் பண்ணலாம். நான் எதிர்பார்க்கிற லீட் கிடைச்சுதுன்னா ஆட்டத்த ஈசியா முடிக்கலாம்”.

January 9, 2012

Scribblings 09-01-2012

சென்னையின் 35வது புத்தக கண்காட்சி சென்ற ஐந்தாம் தேதி தொடங்கியது. கண்டிப்பாக போகனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். சனிக்கிழமையன்று போய்ட்டு வந்துட்டேன். இந்த தடவை ரொம்பக் கம்மியான புத்தகங்கள் (பட்ஜெட் பிரச்சனை) தான் வாங்கனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். வழக்கம்போல லிஸ்ட்டைத்தாண்டி நிறைய வாங்கிட்டேன். நம்ம யுஎஸ் ரிட்டர்ன் ராஜியோட, பதினோரு மணிக்கு திறக்கற கண்காட்சிக்கு, பத்தரைக்கெல்லாம் போயிட்டோம். நாள் முழுசும் சுத்திகிட்டே இருந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கின் பிரமாண்டமும், புத்தகங்களின் எண்ணிக்கையும் மூச்சடைக்க வைத்துவிட்டது. வழக்கம்போல சுஜாதாவோட கணக்கைத் தொடங்கினேன். இந்த முறையாவது வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கனும். பார்ப்போம்.
*********************

புத்தகத்திருவிழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மக்கள் காமிக்ஸ் புத்தகங்கள் மீது வெறிகொண்டு அலைகிறார்கள். 12 வருஷ கலெக்‌ஷனை 900 ரூபாய்க்கு தருகிறார்கள். என் அண்ணனிடம் 20 வருஷத்து கலெக்‌ஷன்கள் இருப்பதால் நான் வாங்கவில்லை. ஊரில் இவற்றை பத்திரமாக வைப்பதற்கென்றே மரப்பெட்டிகளின் உள்ளே வெல்வெட் துணி என பிரத்யோகமாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பால்யத்தில் விடுமுறைக்காக ஊருக்குப் போகும்போதெல்லாம், கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், டெக்ஸ் வில்லர், சிலந்தி மனிதன் என படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் பொங்கலோடு இரும்புக் கை மாயாவிக்கு 40 வயதாகிறதாம். ஹேப்பி பர்த்டே பாஸ்:)
*****************

2012 வாசிப்பு கணக்கை நேற்று தொடங்கியாச்சு. யுவகிருஷ்ணாவின் “அழிக்கப் பிறந்தவன்” நாவலை வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று. சுரேகா தன் விமர்சனப் பதிவில் கீழே வைக்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அங்கங்கே வாத்தியார் எட்டிப் பார்க்கிறார் (பெர்ஃப்யூமை ஸ்ப்ரேவிக் கொண்டான்). அதுசரி சுஜாதா விருது வாங்கினவரிடம் அவர் சாயல் துளியும் இருக்காதா என்ன? ஒன்னும் மட்டும் புரியவில்லை. லக்கி எப்படி மனம்வந்து அணிலின் படம் ஹிட்டாகும் என எழுதியிருக்கிறார்? குட் வொர்க் லக்கி. வாழ்த்துகள்.
****************

நேற்று அதிகப்படியான வேலை சலிப்பில் “நான் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்க்கிறது” என புலம்பிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட ஜூனியர், ”அம்மா பிங்கோ சாப்பிடும்மா” என்றான்.

”வீட்ல இல்லையே”

“நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்.”

“வேண்டாண்டா அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“பரவால்ல சாப்பிடும்மா. அது சாப்பிட்டா டூ ஆகிடுவாங்க. அப்ப நீ நிறைய வேல செய்யலாம். சரியா?”

அப்புறம்தான் புரிந்தது. சமீபத்திய பிங்கோ விளம்பரங்களில், அதை சாப்பிட்டால், ட்வின்ஸ் மாதிரி ஆகிடுவாங்க என வருகிறது. அவ்வ்வ்வ். எங்கேயெல்லாம் அப்ளை பண்றாங்க இந்த பசங்க.
***********************

சன் டிவியில் ஒளிப்பரப்பான நண்பன் பட இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் அடிச்ச ஜிங்ஜாங்கை தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் வெற்றியடைந்ததுன்னா அதுக்கு ஒரே காரணம் ஹிந்தி படத்தின் கதாசிரியர்/டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தான் என்றார். சீன் பை சீன், காஸ்ட்யூம் முதற்கொண்டு காப்பியடித்துவிட்டு சொந்தமா சிந்திச்சேன், தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தினேன் பீலா விட்டுகிட்டு சுத்தும் டைரக்டர்கள் மத்தியில் இந்த ஒரு விஷயத்துக்காகவாவது ஷங்கர் பாராட்டப் படவேண்டியவர். போகியன்று புக் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு சொல்றேன்:) அந்நிகழ்ச்சியை ஓட்டிய எனது ட்விட்.

ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?