September 24, 2009

காதல் தவம்

வீடு மாற்றியபோது எடுத்து வைத்த புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது தேவதைகளின் தேவதை. தபூ சங்கரின் உரைநடை மற்றும் கவிதை வடிவக் காதல். மீள் வாசிப்பு செய்ய நினைத்து தனியே எடுத்து வைத்தேன். வேலையெல்லாம் முடித்துவிட்டு கையிலெடுத்து காதலில் மூழ்கினேன். அவர் எழுதியிருப்பதெல்லாம் காதல். காதலைத் தவிர வேறொன்றுமில்லை. எனக்குப் பிடித்த சில கவிதைகள் இதோ.

உன்னைக் காதலித்துக்கொண்டு இருக்கும்போது
நான் இறந்துபோவேனோ
என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்கொண்டு
இருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
*****

'இன்று நீ
என்ன ராகத்தில் சிரிப்பாயோ' என்றேன்.
நீ மெல்லிய
புன்னகை செய்தாய்.
இன்று மௌன ராகம்தானோ
*****

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதௌ உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.
*****

தினம் தினம்
ஒரு காக்கையைப்போல்
கரைந்து கொண்டிருக்கிறது
என் காதல்
உன் வருகைக்காக.
******

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
******

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
*******




இதைப் படித்துவிட்டு நானும் காதல் பற்றி எழுதினால் என்ன எனத் தோன்றியது (அடுத்த ஏழரை உங்களுக்கு). அதற்கு முன்னாள் சும்மானாச்சுக்கும் ட்ரை பண்ண கவுஜ ஒன்னு.

என்
தனிமை எரித்து
உன்
காதல் குழைத்து
கண் மையிட வா.
கண்ணில் மையிட்டு
கன்னத்தில் முத்தமுமிட்டு போ.

September 22, 2009

படம் பேர் என்ன?

சில வாரங்களுக்கு முன் டிவியில் சிவகிரி என்ற அற்புதமான(அபத்தமான அல்ல) படத்தின் ட்ரெய்லரை (மட்டுமே) காணும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒரு வித பயபக்தியுடன் (பயம் மட்டுமில்ல) பார்த்து முடித்தபோது இப்படி டைட்டில் போட்டார்கள்.

சிவகிரி
He is different


இதைப் பார்த்துட்டு அப்பா "இதுல ஒரு மிஸ்டேக் இருக்குடி" என்றார். என் மூளைக்கு எட்டியவரை எதுவும் தோணவில்லை. என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.
************

ரோஜாவுக்கு நல்ல ராசி. சந்திரபாபு நாயுடு கட்சில சேர்ந்ததுமே அவருக்கு இருந்த பேர் டேமேஜ் ஆச்சு. ரெட்டிய பூச்செண்ட்டோட போய் பார்த்தாங்க. மலர் வளையம் வைக்க வேண்டியதாய் போச்சு. இது ஆந்திராவில் இருக்கும் என் உறவினரின் கமெண்ட். எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
*************

"கூலிக்காரன்"
இல்ல
"தொழிலாளி"
ப்ச்
"வேலைக்காரன்"
ஹே அது அமலாவோட நடிச்சது
"கூலி"
உஹூம்
"உழைக்கிறவன்"
கிர்ர்ர்ர்ர்
"சுமை தூக்கி"
அடிங்க..
ஆங் "உழைப்பாளி"

புரியலையா?

ரஜினி ரோஜாவோட ஜோடியா நடிச்ச படம் பேர் என்ன? கூலியா வருவாரே.

இப்ப முதல்ல இருந்து படிங்க. திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல. இந்தக் கூத்து எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்.
*****************

ரொம்ப நாள் கழிச்சு தமிழ்மணம் பார்த்தா ஒரே உ.போ.ஒ விமர்சனம். கிர்ர்ர். அயன் படத்துக்கப்புறம் குவிக் கன் முருகன் பார்த்தோம். கொஞ்சம் ஸ்லோ மூவிங் என்றாலும் அங்கங்கே ஹார்ட்டி லாப்ஃஸ். "Situation urgent sir", "Next time put more elaichi in payasam" போது தியேட்டரே அதிர்ந்தது. நாசர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ராஜூ சுந்தரமும் வழக்கம்போல். அடுத்த வாரமாவது உ.போ.ஒ பார்க்கனும். பார்க்கலாம்.
***************

ரெஸ்டாரெண்ட் போய் கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. வீட்டுக்கும் ஹாஸ்பிட்டலுக்குமான அலைச்சலில் இரண்டு முறை BBQ Nation மிஸ்ஸாகிவிட்டது. ஏற்கனவே போன உணவகங்களைப் பற்றி தான் எழுதலாம்னு இருக்கேன். அடுத்த இடுகையில் எல்லார் வயித்தெரிச்சலையும் கொட்டிகலாம்னு பார்க்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு துணுக் சாய்ஸ். அம்ரிதா ஐஸ்கீரீமின் நேச்சுரல்ச் அவுட்லெட்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. Wide options. 100கிராம் ஐஸ்க்ரீம் 30 ரூபாய் + டேக்ஸ். பேஸ் தேர்ந்தெடுத்து டாப்பிங்கையும் நாமளே சூஸ் பண்ணலாம். ஒரு முறை போய் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். யம்மி:)
************

September 17, 2009

ஓரம் போ..

நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள், உயரம் கம்மியான இரண்டு சக்கர சைக்கிள், லெக் ஸ்கூட்டர் என ஜூனியரின் வாகனங்கள் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கின்றன அவன் வளர்ச்சியை போல். எனக்கு நடைவண்டி ஓட்டிய ஞாபகம் இல்லை. தம்பியைப் பின்னாடி உட்காரவைத்துக்கொண்டு மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது நினைவிருக்கிறது. அப்புறம் கொஞ்சம் உயரம் கம்மியான, இரண்டு பக்கமும் பேலன்ஸுக்கு வீல் இருக்கும் வாடகை சைக்கிள் ஓட்டியதும் நினைவிருக்கிறது. நான் முதன் முதல் சைக்கிள் கற்றுக்கொண்டது காஞ்சிபுரத்தில் இருந்தபோது. "எப்பதான் பெரிய சைக்கிள் கத்துக்க போற?" என மாமா பெண், மாடி வீட்டு ஷீலாவின் சைக்கிளை கடன் வாங்கி ஒட்டக் கற்றுத்தருகிறேன் என முதுகில் மாத்திக்கொண்டிருந்தாள். ஹூம் அவளுக்கு என்ன கோவமோ? அது வரை குரங்குப் பெடல் அடித்துக்கொண்டிருந்த நான் ஓரளவுக்கு ஓட்டக் கற்றுகொண்டேன். ஒட்டமட்டும்தான் கத்துக்கொடுத்தாளே தவிர ஏறவோ இறங்கவோ கற்றுக்கொடுக்கவில்லை. பிளாட்பார்மில் சைக்கிளை சாய்த்து நானே ஏறக்கற்றுக்கொண்டேன். இறங்குவது பெரும்பாடாக இருந்தது. நல்ல மொட்டை வெயிலில், புதிதாகப் போட்ட தார் ரோட்டில், வண்டியோடு விழுந்து, கை முட்டி கால் முட்டி எல்லாம் பேந்து, ஆயுதப் படை காவலர் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கப்புறம் பிராக்டீஸ்??!! பண்ணி பிரேக் போட்டவுடன் தொபுக் என கீழே குதிக்கும் அளவிற்கு வந்தேன்.

வாலாஜாவிற்கு குடிவந்தபிறகு சைக்கிள் உபயோகிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. எட்டாவது லீவில் அப்பா ஒரு லேடி பேர்ட் வாங்கித் தந்தார். அதுகூட ஹவுசிங் போர்டில் ஓட்ட மட்டுமே வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து NHஇல் ஓட்ட வேண்டியதிருந்தது. அதுவும் ரொம்ப விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் அம்மாக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை. மேத்ஸ் ட்யூஷன் முடித்து வர 8 மணி ஆகிவிடும். நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டே மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவோம். ஒரு நாள் முதல் முறையாக லாரியை ஒவர்டேக் பண்ணேன் (ஹி ஹி நின்றுக்கொண்டிருந்த லாரி என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்). அதைக்கூட லெப்ட் சைடில் பண்ணியதை KB கிளாஸ்மேட்ஸிடம் சொல்லி அவர்கள் கிண்டல் பண்ண ஒரே ரகளை. கொஞ்ச நாளிலேயே பெரிய ப்ரொபெஷனலாகி விட்டேன்.

பத்தாவது படிக்கும்போது ஸ்கூட்டர் பழக வேண்டுமென்ற ஆசை வந்தது. அப்பாவிடம் இருந்தது ராயல் என்பீஃல்ட். அதை தாங்கிப் பிடிப்பதை யோசிக்கும் தெம்புக்கூட இல்லை. அந்த வருடம் ஊருக்கு போனபோது பெரியம்மாவிடம் கெஞ்சி அண்ணாவை வண்டி ஓட்டக் கத்துகொடுக்க சம்மதம் வாங்கினேன். பெரியம்மாவோட கண்டிஷன் "குழந்தையை அடிக்காம, திட்டாம ஓட்ட சொல்லிக்கொடு. துளி கீறல் விழுந்தாலும் தொலைச்சுடுவேன்" என அண்ணாவை மிரட்டி அனுப்பிவைத்தார். தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று. அடுத்த லீவு எப்படா வரும் என காத்துக்கிடப்பேன். கள்ளக்குறிச்சி - சேலம் மெயின் ரோடில் பயிற்சி. ஒரு தடவை அண்ணாவிடம் கெஞ்சியே ஆத்தூர் வரை போனேன். சரியான கைவலி. ரிடர்ன் அண்ணா ஓட்டிக்கொண்டு வந்தார்.

எவ்வளவு நாள் தான் அண்ணாவை வைத்துக்கொண்டே ஓட்டிப் பழகுவது? தனியே ஓட்டத்தீர்மானித்து வண்டியை எடுத்தேன். எல்லாருக்கும் சிங்கிள்ஸ் ஈசியா பழகிரும். லோடு வச்சு ஓட்றது கஷ்டமா இருக்கும். என் நிலைமை டாப்ஸி டர்வி. தனியே ஓட்டுவது பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இங்கேயும் சட்டென்று பிரேக் அடித்து பேலன்ஸ் செய்வது பெரும்பாடாய் இருந்தது. எலக்ட்ரிக் கம்பம், குப்பைத் தொட்டி இவையெல்லாம் தான் என் பார்க்கிங் ஸ்பாட். வண்டியைப் போட்டுவிட்டு சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். திட்டிக்கொண்டே அண்ணா போய் வண்டியை எடுத்துவருவார். ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
"அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"
அவ என்னடா பண்ணுவா பாவம். நீ ஒழுங்கா இறங்க சொல்லிக்கொடுக்கலை என்ற பாட்டோடு என்னை அழவைத்ததற்காக எக்ஸ்ட்ராவாக திட்டுக் கிடைத்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் ஸ்கூட்டி வாங்கித் தருகிறேன் என்றார் அப்பா. நண்பனின் டிவிஎஸ் 50 ஓட்டி மணலில் ஸ்கிட்டாகி கீழே விழுந்து முதுகில் அடி. லிகமண்ட் டேர் என ஒரு மாசம் வீட்டில் படுக்க வைத்து விட்டார்கள். அதுக்கப்புறம் வண்டி என்றாலே துரத்தி துரத்தி அடிதான்.

பல வருடங்கள் கழித்து டூ வீலர் நமக்கு ராசியில்லை என என் பார்வையை கார் பக்கம் திருப்பினேன். அப்பாவிடம் கேட்டதுக்கு எரித்து விடுவது போல் பார்த்தார். ஒருவழியாய் அப்பாவை சம்மதிக்க வைத்து நான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டபோது ஜூனியர் பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. இஸ்மாயில் அங்கிள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி வண்டியைக் கரெக்ட் பண்ணி கற்றுக்கொண்டேன். "60க்கு மேல போகாத பாப்பா. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு." என அங்கிள் அடிக்கடி கூறுவார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் "பிரேக் போடு பாப்பா" என அவர் கத்திக்கொண்டிருந்த போது "இருங்க அங்கிள் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்" என அங்கிளை டெரராக்கியிருக்கேன். இது வேலைக்காவது என நினைத்தவர், ட்ரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அங்கே என்னை விட டெரராய் நிறைய பேர். "ஹால்ஃப் கிளட்ச் கொடுப்பா" என இண்ஸ்டரக்டர் சொன்னால் "அது எங்க சார் இருக்கு" என்றான் இன்னொருவன். ஒரு வழியாய் நானும் லைசென்ஸ் எடுத்துட்டேன்.

வண்டி இல்லை. ஆனால் LMV லைசென்ஸ் வைத்துக்கொண்டு நான் விடும் அலப்பறை தாங்காமல் ரகு வண்டி வாங்கித் தர சம்மதித்துள்ளார். ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என் சாய்ஸ். அவர் கைனடிக் ஹோண்டாவில் நிற்கிறார். இன்னும் பைனலைஸ் பண்ணவில்லை. எதுவானாலும் டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்:)

September 7, 2009

நினைவோ ஒரு...

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எப்படியும் இந்த டிராஃபிக்கில் வீடு போய் சேர ஒரு மணி நேரமாவது ஆகும். உட்கார்ந்தவுடனே செல்போன் ட்ர்ர்ரியது. லேண்ட் லைனிலிருந்து வந்த நம்பர். மதியமே மீட்டிங்கில் இருக்கும்போது இதே நம்பரிலிருந்து வந்தது. பொதுவாக தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு அலட்டிக்கொள்வதில்லையென்றாலும் இரண்டு தடவை யார் செய்வார்கள் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

"ஸ்வேதா இருக்காங்களா" என்ற பெண் குரல் கேட்டது.

சட்டென்று குரலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாததால் மறுபடியும் ஹலோ என்றேன். இந்த முறை

"ஸ்வேதா இருக்காங்களா நான் செல்வி பேசறேன்".

செல்வி பேரைக் கேட்டவுடன் ஏற்பட்ட ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டு "ஹே செல்வி எப்படியிருக்க?" என்றேன். பத்து நிமிடம் பேசியபிறகு செல்வி தயங்கியவாறே "சித்தி உன்னை பார்க்கனும்னு சொல்லுது ஸ்வேதா" என்றாள். என் மௌனத்தின் அர்த்தம் புரிந்தவளாய் "ஒரே ஒரு தடவை வா ஸ்வேதா. எனக்காக. நம் பிரெண்ட்ஷிப்பிற்காக. ப்ளீஸ்". முயற்சி செய்கிறேன் என போனை வைத்தேன்.

போனை வைத்ததும் தூறல் போட ஆரம்பித்தது. தூறலுக்கு கிளம்பும் மண்வாசனைப்போல் செல்வியின் போன் அவள் நினைவுகளை என்னுள் கிளறிச் சென்றது.


செல்வியும், அம்மி ஆண்ட்டியும் என் நினைவில் சிரித்துக்கொண்டேயிருந்தார்கள்.

தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் தான் அந்த காலனிக்கு குடிவந்தோம். வந்தன்னிக்கே அம்மாக்கு மெட்ராஸ் ஐ. தீபாவளியன்று பலகாரம் வினியோகிக்கும் வேலை என்னிடம் தரப்பட்டது. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அம்மி ஆண்ட்டி. எல்லாரும் அவங்களை அப்படிதான் கூப்பிடுவாங்க. அம்மி ஆண்ட்டிக்கு இரண்டு குழந்தைகள். அங்கிள் மேத்ஸ் லெக்சரர். மாநிறம் தான் என்றாலும் மாசில்லாத முகத்தில் எப்போதுமே படர்ந்திருக்கும் ஒரு சினேகப் புன்னகை. அம்மி ஆண்ட்டியின் சிரிப்பை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. செய்யும் எல்லா வேலைகளையும் ரசனையோடு செய்வார். ஸ்வேதாக்குட்டி என்றவர் அழைக்கும்போது பாசமும், அன்பும் தெரிக்கும். முக்கால்வாசி நேரம் ஆண்ட்டி வீட்டிலேயே தான் இருப்பேன். என்ன செய்தாலும் ஸ்வேதாக்கு பிடிக்கும் என்று குடுத்தனுப்புவார். ஸ்வேதா தான் என் மூத்தப்பொண்ணு என எல்லாரிடம் சொல்லுவார்.

அம்மா என்னை திட்டினால் அம்மாவிடம் சண்டைக்கு வருவார். ஆண்ட்டியின் அக்கா பொண்ணு செல்வி. லீவுக்கு இங்கு வரும். எனக்கும் செல்விக்கும் நிறை விஷயங்களில் ஒத்துப்போகும். பாட்டு, படிப்பு, புத்தகங்கள் என நிறைய விஷயங்களில் எங்கள் ரசனையை பகிர்ந்து கொண்டோம். செல்வி என்னை விட ஓரு வருடம் தான் பெரியவள். என் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து மடல் அனுப்புவாள். அந்த காலனிக்கு சென்றதிலிருந்து காலாண்டு, அரையாண்டு லீவுக்கு ஊருக்குப்போவதில்லை. செல்வியும் நானும் ஜோடிப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றினோம்.

நான் ப்ளஸ்டூ படித்துக்கொண்டிருந்தபோது செல்விக்கு எங்கள் ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. செல்வி அம்மி ஆண்ட்டி வீட்டிலேயே தங்கி படிப்பதென முடிவானது. எனக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசையொத்த தோழி அருகிலேயே இருப்பது மகிழ்வாய் இருந்தது. செல்வி என்னை காலேஜூக்கு கூட்டிப் போய் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தது. ப்ளஸ்டூ முடித்ததும் எனக்கும் அதே காலேஜில் வேறு துறையில் இடம் கிடைத்தது. ராகிங் பண்ண முயன்ற சீனியர்களிடம் என் சொந்தக்கார பொண்ணு என சொல்லி காப்பாற்றிவிட்டது. ஒன்றாக காலேஜ் போகவர ஆரம்பித்த வேளையில் அப்பாவிற்கு மாற்றலாகி ஐந்து கி.மீ தொலைவிலுள்ள வேறு ஊருக்கு சென்றோம்.

வீட்டை காலி செய்த அன்று நானும் ஆண்ட்டியும் அழுத அழுகையை இன்று நினைத்தால் சிரிப்பு வரும். அவ்வளவு எமோஷனல் சீன். இதற்கிடையில் காலேஜில் செல்வியை ஒரு பையனோடு அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஒரே வகுப்பு என்பதால் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அம்மி ஆண்ட்டியுடன் போனில் அடிக்கடியும் நேரில் எப்பவாவதும் பேசிக்கொண்டிருந்தேன். காலேஜ் போக வரவே நேரம் சரியாக இருந்தது. அதோடில்லாமல் காலேஜில் விரிந்த நட்புவட்டம் மெல்ல ஆண்ட்டி வீட்டிற்க்கு செல்வதைக் குறைத்தது. பலத்த மழை மெல்ல அடங்குவது போல் அடர்ந்த உறவு மெல்ல மெல்ல விட்டுக்கொண்டிருந்தது.

செல்வி பைனல் இயர் முடித்து இண்டர்வ்யூகளை அட்டெண்ட் செய்துகொண்டிருந்தது. அந்த வேளையில் செல்விக்கு வீட்டில் பையன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த இரண்டு மூன்று வரன்கள் முதலில் சரியென்று சொல்லிவிட்டு பின்னர் போன் பண்னி வேண்டாமென்றார்கள். ஆண்ட்டி அம்மாவிடம் ரொம்ப வருத்தப்பட்டார்கள்.

பின்னர் ஒருநாள் வீட்டிற்கு வந்த ஆண்ட்டி ஆவேசமாக

"உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்தேனே. இப்படி பண்ணிட்டியே. நீ நல்லாருப்பியா? நாசமாபோய்டுவ. உனக்கு கல்யாணம் ஆவாம உங்கம்மா கஷ்டப்படப்போறாங்க"

என மண்ணை தூற்றி வாரி சாபமிட்டார். வீட்டில் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. எனக்கும்தான். ஆனால் எல்லாருக்கும் ரொம்ப கோவம். முக்கியமாய் எனக்கு. என்ன ஏது என்று தெரியாமலேயே ரொம்ப பாசமாய் இருந்தவரிடமிருந்து இப்படிபட்ட வார்த்தைகளை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அம்மி ஆண்ட்டியுடனான தொடர்பு சுத்தமாய் விட்டுப்போனது. காலேஜ் முடிக்கும்தருவாயில் அப்பாவிற்கு மறுபடியும் மாற்றலாகி சென்னை வந்துவிட்டோம். பின்னர் பவுனம்மாவின் மூலமாக செல்வி தன் கூடப் படித்த பையனை காதலித்ததாகவும், அவன் தான் பையன் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி எல்லா வரனையும் கெடுத்ததாகவும், ரொம்ப வருஷம் கழித்து சொந்த அத்தைப் பையனுக்கே செல்வியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் தெரியவந்தது. எனக்கு இந்த காதல் விவகாரம் முன்னமே தெரியுமென்றும், நாந்தான் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாகவும் அம்மி ஆண்ட்டி நினைத்தார் எனவும் சொன்னார். ரொம்பவே எரிச்சலாகிப் போனதெனக்கு. ஆண்ட்டி “இதெல்லாம் உண்மையாடி” என என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே எனத் தோன்றியது. சிறிது நாட்களில் எல்லாம் மறந்து என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து செல்வியிடமிருந்து போன். அவள் குரலில் இருந்த கெஞ்சல் ஏனோ எனக்கு ஆண்ட்டியை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மாவிற்கு போன் செய்தேன். உன் இஷ்டம்மா என்றார். வரும் ஞாயிறு அவரையும் அழைத்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவரிடம் கன்பஃர்ம் செய்துவிட்டு செல்வியை அழைத்து, வருவதை உறுதிப்படுத்தவேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கையில் ஸ்டாப்பிங் வந்தது.

மழையின்றி வீடு வந்து சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மழையின்போது ஆண்ட்டி போடும் இஞ்சி டீ நினைவுக்கு வந்தது. அன்று முழுவதும் ஆண்ட்டியே நினைவிலிருந்தார். மெல்ல ஆண்ட்டி செய்தது தவறில்லையோ எனக்கூட தோன்றியது.

நான்கு நாட்கள் கழித்து மதியம் மூன்று மணியளவில் செல்வியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளுக்கு போன் செய்ய மறந்தவிட்டதை நினைத்து வருந்திக்கொண்டே காலை அட்டெண்ட் செய்தேன்.

அழுதுக்கொண்டே செல்வி அம்மி ஆண்ட்டி கேன்சரால் இறந்ததைச் சொன்னாள். என்னையும் மீறி வெடித்து அழ தொடங்கியிருந்தேன்.இஞ்சி டீயின் வாசம் அறையெங்கும்.

..

September 2, 2009

காத்திருந்து காத்திருந்து

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
இந்த வரிகளை நம் வாழ்க்கையில் ஏதாவதொரு தருணத்தில் பாட வேண்டியதாயிருக்கிறது. சிலருக்கு எப்போவாவது. சிலருக்கு அடிக்கடி. சிலருக்கு அடிக்கடி எப்போவாவது. வர வர என் நிலைமை இந்த மூன்றாவது கேட்டகிரியில் வந்து தொலைகிறது.

எங்கும் காத்திருத்தல் எதிலும் காத்திருத்தல் என்று வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கும் மட்டும் ஏன் இப்படி? என கேட்குமளவிற்கு கடுப்பாய் இருக்கிறது. மாமனாரை மருத்துவமனைக்கு செக்கப்புக்கு அழைத்துச் செல்ல பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன். கரெக்டாக பத்தேமுக்காலுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்தோம் (என் மாமனார் என்னை விட பங்க்சுவல்).எல்லாரையும் பார்த்து முடித்துவிட்டு டாக்டர் மாமனாரை செக்கப் செய்தபோது மணி 1.30. நடுவே இரண்டு முறை ரிசப்ஷனில் போய் கேட்டுவிட்டு வந்ததுக்கு "இல்ல மேடம். டிரசிங் கேசெல்லாம் டாக்டர் கடைசியா தான் பார்ப்பார்" என்றார்கள். அத அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போதே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே என கேட்டுவிட்டு வந்தேன். எரியும் கொள்ளியில் எண்ணைய் ஊற்றும் விதமாக மாமனார் "போன தடவை வந்தபோது அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ணலம்மா. இந்த தடவை இப்படி ஆயிடுச்சே" என்றார்.

அடுத்தும் ஹாஸ்ப்பிட்டல் தவம் தான். டோக்கன் வாங்கிக் கொண்டு மடியில் உட்கார்ந்துருவேனா என ரகளைப் பண்ணும் ஜூனியரின் பின்னால் இன்னும் மூணு பேர்தான் என்ற கவுண்டிங்கோட காத்திருந்து, என் நம்பரைக் கூப்பிடும்போது அரக்க பரக்க ஒரு அம்மா ஓடிவருவார். "புள்ளைக்கு இழுக்குது. நான் கொஞ்சம் பார்த்துடறேனே". மனிதாபிமானம் இன்னும் மரிக்காத நிலையில் சரி என்று அவரை அனுப்பிவிட்டு இன்னொரு பதினைந்து நிமிடம் ஜூனியர் பின்னால் ஓடிக்கொண்டிருக்க நேரிடும். ஆனால் இன்றுவரை நான் அவசரமாய் பார்க்கவேண்டிருக்கும் நிலையிலும் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது:(

கடைல பில்லு போடற எடத்துல கூட தொல்லை பண்ணுவாங்க. ஒன்னு ஸ்கேனிங் மெஷின் வொர்க் பண்ணாது. இல்ல அந்த கம்ப்யூட்டர் ஹேங்காகி தொலைக்கும். மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் என்பார்கள். இல்லன்னா யாராவது ரெண்டே ரெண்டு ஐயிட்டம் தான் ப்ளீஸ் என சொல்லி நாம் தலையசைப்பதற்க்கு முன் பொருளை கவுண்டரில் வைத்துவிடுவார்கள். அந்த ரெண்டு அயிட்டத்தை பில் பண்ணுவதற்குள் இன்னும் நான்கு பொருட்களை கொண்டு வந்து வைத்துவிட்டு "மறந்துட்டேன்" என இளிப்பார்கள். வர்ற கோவத்துக்கு ஸ்கேனர் மிஷினைக் கொண்டு மண்டையில் நச்சு நச்சுன்னு அடிக்கனும் போலிருக்கும்.

இதெல்லாத்தையும் விட மரணக் கொடுமை இந்த பஸ்ஸுக்கு காத்துகிட்டிருக்கிறது. கரெக்டா நாம போகவேண்டிய டைரக்ஷன்ல வரவே வராது. "மேரா நம்பர் கப் ஆயேகா" என வர்ற பஸ்களின் நம்பரைப் பார்த்துப் பார்த்தே கண்ணு பூத்துப் போய்டும். இது நடுவுல ஏதாவது ஒரு பிரஹஸ்பதி வந்து "ரொம்ப நேரமா நிக்கறியேம்மா. எங்க போகனும்"ன்னு கேக்கும். உனக்கெதுக்கு அந்த டிடெய்லுன்னு நம்ம பார்த்தா "எந்த பஸ்சுன்னு தெரியாம நிக்கறியோன்னு கேட்டேன்" என வெறுப்பேத்துவார்கள். உங்க பொது சேவைக்கு ஒரு அளவே இல்லாம போச்சுன்னு நொந்துகிட்டு காத்திருத்தலை தொடர வேண்டியது தான்.

இதோட நெட் கனெக்ஷனுக்கு வெயிட்டிங், நண்பர்களுக்காக வெயிட்டிங் (ஒருத்தரும் பங்சுவல் கிடையாது), ஹோட்டல்ல வெயிட்டிங், பின்னூட்டத்துக்கு வெயிட்டிங்ன்னு அப்பப்பா. வாழ்க்கைல எவ்வளவு நேரம் காத்திருக்கறதுல வீணாப் போகுது. ஆனாலும் சில சமயங்களில் காத்திருப்பது சுகத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது:)

இந்தப் பாட்டு தான் நான் முதன் முதலில் பாடிய (இரண்டே வரி) பாடலாம். ரெக்கார்ட் செய்த கேஸட் இன்னும் என் பெரியம்மாவிடம் இருக்கிறது. ஊருக்குப் போகும்போதெல்லாம் இழுத்து இழுத்து பாடின பொண்ணு இப்ப என்னம்மா பேசுது என சொல்லி கிண்டல் செய்வார்கள். Nostalgia:)