Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

June 30, 2010

தென் மேற்குப் பருவக் காற்று..

இதோ அதோ என தமிழகத்திற்குப் போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது தென் மேற்கு பருவ மழை. அப்பப்ப மேகங்கள் மீட்டிங் போடுவதைப் பார்த்து பிச்சிகிட்டு கொட்டப்போகுதுன்னு அவசர அவசரமா கொடியில கிடக்கிற துணியெல்லாம் எடுத்துட்டு வந்தா அடுத்த நிமிஷமே வெயில் சுள்ளுன்னு அடிக்குது. ஆனாலும் எப்பவாச்சும் போடற தூறலுக்கே தண்ணி தேங்கிடுது. இந்த லட்சணத்துல சீசன் களை கட்டிச்சுன்னா. வெளங்கிரும். மறுபடியும் தெர்மாகோல் படகு, சப்வேயில் சிக்கி மூழ்கும் டைட்டானிக் சாரி MTC என நிதம் நியூஸ் தான்.

தென் மேற்கு சீசன் பொதுவாக கேரளாவில் மே மாதத்தின் கடைசி வாரத்திலோ, ஜூன் முதலோ தொடங்கும். ஜூலை மாதம் 15 தேதிவாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விசிட் அடித்திருக்கும். நமக்கு ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரம் பிக் அப் ஆகும் சீசன் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த வருடம் நார்மலான அளவு தான் மழையிருக்கும் என வானிலைத் துறை கணித்திருக்கிறார்கள். வருண பகவான் இப்ப கொஞ்சம் ஹைபர்நேட்டிங் ப்ரீயட்ல இருக்காராம். ரெஸ்ட் முடிச்சு இன்னும் பத்து நாள்ல வந்துடுவார்ன்னு தூதர்களான மெட்ராலாஜிகல் டிபார்ட்மெண்ட் ஆளுங்க சொல்றாங்க. போன வாரம் வறட்சில தவித்த வட இந்தியாவுக்கு இந்த தடவை ஆறுதலளிக்கும் வகையில் மழை இருக்கும்கறாங்க. பார்ப்போம்.

சூடான டீயுடன் மழைக்காலத்தை வரவேற்க தயாராகும் அதே நேரம் நம்மால் முடிந்த சில காரியங்களை செய்வதன் மூலம் மழைக்காலத்தை சபிக்காமல் ரசிக்க முயற்சிக்கலாம். அதுக்கு இந்த பதிவ ஒரு தடவ படிச்சிடுங்க. நான் எழுதனதிலேயே உருப்படியான பதிவு இதுதான்னு நிறைய பேர் சொல்வாங்க.

ஈரமான பாட்டு ரெண்டு.


April 9, 2010

மாநரகப் பேருந்து

திருச்சியைச் சேர்ந்த நண்பனொருவன் வேலைக்கு சேர்ந்தவுடனே ஐசிஐசிஐ வங்கியில் லோன் போட்டு ஆசை ஆசையாய் ஒரு ஹுண்டாய் சாண்ட்ரோ வாங்கினான் (எல்லோரும் ட்ரீட் என அவன் பர்ஸ் பழுக்க வைத்தது வேறு நடந்தது). திருச்சியில் கார் ஒட்டி பழக்கமாதலால் தைரியமாய் ட்ரைவர் இல்லாமலே சென்னையில் வண்டி ஓட்ட ஆரம்பித்தான். சரியாய் ஆறாவது நாளிலேயே வண்டியின் வலது பக்கம் கோடு போட்டிருந்தது. நண்பர்கள் துக்கம் விசாரிக்கையில் 'தப்பு என் மேல இல்ல மாமா. பஸ் ட்ரைவர் தான் விடாம ரப்சர் பண்ணி கோட்ட போட்டான்' என புலம்பினான். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த மற்றொரு நண்பன் சொன்னது 'மாமா மெட்ராஸ்ல எவன்கிட்ட வேணாலும் வம்புக்கு போ. முதல் சவுண்ட் நீ கொடுத்துட்ட கேம் நம்ள்து. தைரியமா இறங்கி ஆடலாம். ஆனா MTC கிட்ட மட்டும் சரண்டர் ஆய்டு. என்ன வண்டி எதுன்னு பார்க்கவே மாட்டான். கோட்டப் போட்டுட்டு போய்ட்டே இருப்பான். அவனுக்கு சைக்கிளும் ஒன்னுதான் சாண்ட்ரோவும் ஒன்னுதான்' என்றான். அப்போது எனக்கும் சென்னை புதிது. ரொம்ப எக்ஸாஜிரேட் பண்ணி சொல்ற நீ என்றேன். சிரித்துக்கொண்டே இங்கதான இருப்ப தெரிஞ்சுக்குவ என்றான். ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என சுத்தமாகப் புரிந்தது.

இன்றைய தேதிகளில் சென்னை போக்குவரத்து ஒழுங்கில் சீர்கேட்டு கிடப்பதன் பெரும்பங்கு MTCயைச் சேரும். இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். ஒன்று எனக்கு நேர்ந்தது. மற்றொன்று நான் கண்ணால் பார்த்தது. சென்ற வருட தொடக்கத்தில் தோழியோடு டூ வீலரில் சென்றுகொண்டிருந்தேன். வலது பக்கம் திரும்ப வேண்டும். சிகப்பிலிருந்து பச்சைக்கு மாற காத்துக்கொண்டிருந்தோம் முதல் ஆளாய். நேராக செல்ல வேண்டிய வண்டிகளும் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தன. பெரும் சத்தத்துடன் பின்னால் இடிப்பதுபோல் வந்து நின்றது MTC பேருந்து ஒன்று. கொஞ்சம் தடுமாறிய தோழி வண்டியைக் கொஞ்சம் முன்னால் நகர்த்தி நிறுத்தினாள். நேராக செல்ல வேண்டிய வண்டிகளுக்கு சிக்னல் விழுந்தது. ஆனால் ரைட் சைட் க்ளியர் ஆகவில்லை. ஆனால் அந்த ட்ரைவர் விடாமல் ஹாரன் அடிக்க ஆரம்பித்தார். பொறுத்துப் பார்த்த நாங்கள் திரும்பி அவரிடம் சிக்னல் ரெட்டில் இருப்பதை காமித்து வெயிட் செய்ய சொன்னோம். அவரோ கேட்காமல் நேராக கையை காட்டி ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தார். என்ன நடந்தாலும் சிக்னல் போடாம நகரக்கூடாதென முடிவெடுத்து வெயிட் செய்தோம். ட்ரைவர் துளியும் யோசிக்காமல் லெப்டில் வளைத்து எங்கள் வண்டியின் பின்புறம் இடித்து சென்றுவிட்டார். இந்த லட்சணத்தில் பக்கத்திலேயே ட்ராபிக் போலீஸ் வேறு. அவரிடம் கம்ப்ளையெண்ட் செய்ததற்கு வழக்கமான சினிமா டயலாக்கை விட்டார்.

இரண்டாவது சம்பவம் சென்ற வாரம் பார்த்தது. வழக்கம்போல் சிக்னலில் நிற்காமல் அவசரமாய் கடக்க முயன்ற MTC பேருந்து ஒன்று குறுக்கில் வந்த (சரியாய் சிக்னலை பாஃலோ செய்து வந்த வண்டி) காரில் இடித்ததில் முன்னால் அமர்ந்திருந்த சிறுமிக்கு காலில் காயம். வருத்தமாவது தெரிவிக்க வேண்டுமே அந்த ட்ரைவர். "பார்த்து வாடா ********" என கார் ஓட்டியவரை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்துப் பறந்தார். காரில் வந்தவர் பஸ் நம்பரைக் குறித்துக்கொண்டார். கம்ப்ளெய்ண்ட் தந்தாரா, பெற்றார்களா எனத் தெரியாது.

இப்போதெல்லாம் சாலைகளில் MTC பேருந்தைப் பார்த்தாலே எமனின் எருமையைப் பார்ப்பதுபோலிருக்கிறது. ஒரு சிக்னலையும் மதிப்பதில்லை. லெப்ஃட்டோ ரைட்டோ திரும்ப இண்டிகேட்டர் போடுவதில்லை. சாலையின் இடது பக்கத்திலிருந்து வலதுபக்கத்திற்கு ஒரு ஹாரன் கூட கொடுக்காமல் போவது என அத்தனை அடாவடித்தனம். காது கிழியுமளவிற்கு விடாமல் ஹாரன் அடித்து எரிச்சல் செய்வது, வழி தர மறுக்கும் வண்டிகளை இடிப்பது, உராய்ந்து சேதாரமேற்படுத்துவது என அத்தனை அட்டூழியம். ஒரு நிமிடம் அருகிலிருக்கும் MTC பேருந்தை கூர்ந்து பார்த்தீர்களானால் வண்டியின் இருபுறமும் வரிக்குதிரை போல் கோடுகளிருக்கும். காயலான் கடை செல்லவேண்டிய பழைய பச்சை கலர் வண்டியாகட்டும். அல்லது லேட்டஸ்ட் மாடல் வோல்வோ ஏசி பஸ்ஸாகட்டும். கோடு சர்வ நிச்சயம். சர்வ சாதாரணம். ஸ்டாப்பிங் வரும் வரை ஆக்ஸிலரேட்டரிலிருந்து கால் நகரவே நகராது. ஸ்டாப்பிங் வந்தவுடன் அடிக்கும் சடன் ப்ரேக்கினால் பல் பெயர்ந்தவர்கள் ஏராளம். ரத்தம் சொட்ட சொட்ட கர்ச்சீப்பை பொத்திக்கொண்டு இறங்கி ஆட்டோ நோக்கியும், பின்னர் ஆஸ்பத்திரி நோக்கியும் விரையும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஏன் இந்த ஒழுங்கீனம்? போக்குவரத்துக் காவல் துறையினரும் இவர்களை கண்டுக்கொள்வதுபோல் தெரியவில்லையே ஏன்?

MTC பேருந்துகளின் விதிமீறல்களை போக்குவரத்து காவல்துறையினர் கேட்காததற்கு பெரிய காரணமாய் சொல்லப்படுவது யூனியன். ஒரு முறை காவலர் ஒருவர் சொன்னார். 'ரெட் போட்டும் போறான். பிடிச்சா யூனியன் வச்சு முதல்வன் படத்துல வர்ற மாதிரி பெரிய பிரச்சனை பண்ணுவாங்க' என புலம்பினார். யூனியன் என்பது எதற்கு? தொழிலாளர்களின் நலன் பேணத்தான். அதே யூனியனால் சேவை பெறும் மக்கள் பிரச்சனைக்குள்ளாவது கேலிக்கூத்தாகவே இருக்கிறது. கலர்கலராய் வித விதமாய் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், தாழ்தள பேருந்து, தங்கரதம் என வண்டிக்கு பெயர் வைத்தால் மட்டும் போதுமா? ட்ரைவர்கள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டாமா? எல்லா தொழிலிலும் ப்ரோபேஷன் பீரியட் இருக்குமல்லவா? முறையான பயிற்சி, சாலை விதிகள், ரூட்டுகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ட்ரைவர்களை நியமிக்கும் கடமை அரசாங்கத்துக்கு/சார்ந்த துறைக்கு இருக்கிறதல்லவா? சில தனியார் ட்ராவல் நிறுவனங்களில் ஓவர் ஸ்பீட் கம்ப்ளெய்ன் செய்ய செல் நம்பர் ஒன்று எல்லா வண்டிகளிலும் இருக்கும். அப்படி ஒரு கம்ப்ளைய்ண்ட் நம்பரை உருவாக்கி தாறுமாறாக ஓட்டும் ட்ரைவர்களை கண்காணிக்கலாமே.

குற்றமென வரும்போது கை தவறு செய்த/செய்யும் அனைவரையும் நோக்கி நீள வேண்டும். மதிப்பிற்குரிய மகாகணம் பொருந்திய காமன் மேன்களான நாம் எந்தளவு ஒழுக்கத்துடன் செயல்படுகிறோம். ஒரே ஒரு பிரயாணி பேருந்து நிறுத்ததிலிருக்கும் நிழற்குடையில் நின்று பேருந்து ஏற வேண்டுமே. ஊஹூம். அத்தனை பேரும் சாலையில் தான் நிற்பார்கள். ட்ரைவரும் நடுரோட்டில் வண்டியை நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்குகிறார். அதேபோல் பஸ்சில் ஏறி இடம்பிடிக்க நடக்கும் யுத்தம். கையில் குழந்தை வைத்திருக்கிறார்களா. கர்ப்பிணிகளா. முதியோர்களா? ஊனமுற்றவர்களா. எந்தக் கவலையும் இல்லை. தானுண்டு தன் சீட்டுண்டு என கர்ச்சீப், ஹாண்ட்பேக், சில சமயங்களில் செருப்பு கூட போட்டு இடம்பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வரிசைப் பின்பற்றுதல், பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ் போன்றவை இங்கு கடைபிடிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

மக்களின் ஒத்துழைப்போடு அரசாங்கமும் கவனம் செலுத்துமாயின் நன்றாக இருக்கும். இல்லேயேல் MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.