Showing posts with label துணுக்ஸ். Show all posts
Showing posts with label துணுக்ஸ். Show all posts

February 13, 2012

ஜூனியர் அப்டேட்ஸ் 13-02-2012

ஜூனியருக்கு சமீபத்தில் பனீர் பக்கோடா செய்து கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு, “அம்மா நீ சூப்பரா செஞ்சிருக்கியே. யார் கத்துகொடுத்தா?”

ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.

#ஙே!!!
***********

திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”

#தேவைதான் எனக்கு
**************

திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:

”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”

அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்

“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.

”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.

”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************

ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************

எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது

“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”

“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”

“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”

#ஙே!!!
********************

”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”

#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))

February 6, 2012

Scribblings 06-02-2012

இணைய நண்பர்கள் சிலர் சேர்ந்து கல்வி சம்பந்தமான உதவிகளை செய்யத் திட்டமிட்டு, என்ன செய்யலாம் என்று குழுமம் ஆரம்பித்து உதவி செய்ய ஆரம்பித்தோம். அதன் ஒரு அங்கமாக புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நேசம் என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்ட தளம் இங்கே

போட்டிக்காக அல்லாமல் புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. நேரமின்மையோடு என் சோம்பேறித்தனமும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே இருக்கின்றேன். கூடிய விரைவில் எழுதி வலையேற்ற வேண்டும்.
********************

இரு வாரங்களுக்கு முன்பு வண்டலூர் சென்றிருந்தோம். பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க போனபோது கூட வந்த ஒரு குடும்பத்தின் செய்கைகள் எரிச்சலைடைய செய்வதாக இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களை வண்டியிலிருந்து தூக்கி எறிவதும், மிருகங்களின் கூண்டருகே செல்லும்போது கத்தி கூச்சல் போடுவதும் (கவனத்தை ஈர்க்கறாங்களாமாம்) என இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். உச்சபட்சமாக சில இடங்களில் (மான், வெள்ளைபுலி, சிறுத்தை) மிருகங்களை நோக்கி சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றை தூக்கியெறிந்தனர். இந்த மாதிரி உணவுகளை மிருகங்களுக்கு கொடுக்காதீங்க என சொன்னபோது வழக்கமான “உன் வேலையப் பார்த்துகிட்டு போ”ங்கற பதில் தான் கிடைச்சது. எங்களுடன் வந்த இன்னொருவர், இப்ப நீங்க அமைதியா வரலன்னா, நான் போய் இன்சார்ஜ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன் என சொன்னதும் தான் அமைதியானார்கள். இதை முதல்லயே செஞ்சிருக்கலாமோன்னு பேசிகிட்டு வந்தோம். இன்னொரு குடும்பம் செம்ம ஜாலியாக கமெண்ட் பாஸ் பண்ணிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, யானைகள் பகுதியை கடந்து ஓரிரு நிமிடங்கள் வண்டியை நிறுத்தினர். திரும்ப அனைவரும் வண்டியில் ஏறும்போது குடும்பத் தலைவர் குடும்பத்தினரிடம், “சின்ன யானை வருது பாருங்க” என்றார். எல்லோரும் ஆர்வமாய் எங்கே எனப் பார்க்க, அவரோ “குட்டியானை வண்டில ஏறி உட்கார்ந்திருச்சு” என்றார். அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் என பின்னர் தான் புரிந்தது. எல்லாரும் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தது:)
***************

சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும். அந்த ஊரின் மெயின் ரோட், ஒருபுறம் ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்டதாகவும், மறுபுறம் தமிழ்நாடு எல்லைக்குட்பட்டதாகவுமிருக்கிறது. ஆந்திர எல்லைக்குட்பட்டு வரும் பக்கத்தில், ப்ரைவேட் ஒயின்ஷாப் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. விலையும் மலிவாம். உதாரணத்திற்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் 65ரூபாய் என்றால், இங்குள்ள கடைகளில் 25ரூபாய்க்கி கிடைக்கிறதாம். விலைமலிவாக இருப்பதால், இந்த ஊரின் டாஸ்மாக்கில் சேல்ஸ் இல்லையென்கிறார்கள். இம்மாதிரியாய் தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்கள் அருகருகே இருக்கும் மற்றொரு இடம் ஆர்கேபட்டு - பள்ளிபட்டு இடையே இருக்கிறதாம். இப்ப எதுக்கு இந்த தகவல் என்கிறீர்களா? சும்மா குடிமகன்களின் ஜெனரல் நாலேட்ஜை வளர்ப்பதற்காக. சீப்பான சரக்கிற்காக பாண்டி வரைக்கும் போகவேண்டாம் பாருங்கள்:):)
***************

அப்பா ரிட்டையராகி நான்கு மாதங்களாகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பா வேலை செய்த ஊரிற்கு ஒரு பெர்சனல் வேலையாக செல்லவேண்டியிருந்தது. அப்பாவிடம் வேலை செய்த ஒருவரை அழைத்து சில விவரங்கள் கேட்டார் அப்பா. அங்கு சென்றபோது, அந்தநபர் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ததோடில்லாமல், வேலை முடியும்வரை கூடவே இருந்தார். உங்களுக்குத்தான் சிரமம் என்றதும், அப்பாவிற்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி என சொல்லியதோடில்லாமல், அப்பாவிடம் வேலை பார்த்த அனுபவங்களை பெருமையாக கூறினார். அப்பாவை போல ஒரு அதிகாரியை பார்த்ததில்லை என சொன்னபோது எங்களுக்கு பெருமையாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் முன்னர் அதிகாரியாய் இருந்தவருக்கு, அதுவும் இப்போது பணிஓய்வு பெற்றவருக்கு உதவ வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அப்பாவை சம்பாதிக்க தெரியாதவர் என உறவுகளும், சுற்றத்தாரும் சொல்லக்கேட்டிருக்கேன். இன்று அவர்களையெல்லாம் அழைத்து எங்க அப்பா சம்பாதிச்சிருக்கறத பாருங்க என காட்ட வேண்டும்போலிருந்தது. I'm proud of you dad. Love you.
************

ட்விட்டர் கார்னர்

கேப்டனின் அந்நியன் அவதாரம் நிகழ்ந்த மறுநாள், என் ட்விட்ஸ் சில

ஸ்டாலின் டு விஜயகாந்த் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ. அப்படியே கையில சரக்கு எடுத்துக்கோ. இப்ப சரியா வாசி. பப்பாம் பப்பாம் பப்பாம் பபபாம்.

நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு.

கேப்டன் ஸ்டேடஸ் மெசேஜ் : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

January 9, 2012

Scribblings 09-01-2012

சென்னையின் 35வது புத்தக கண்காட்சி சென்ற ஐந்தாம் தேதி தொடங்கியது. கண்டிப்பாக போகனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். சனிக்கிழமையன்று போய்ட்டு வந்துட்டேன். இந்த தடவை ரொம்பக் கம்மியான புத்தகங்கள் (பட்ஜெட் பிரச்சனை) தான் வாங்கனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். வழக்கம்போல லிஸ்ட்டைத்தாண்டி நிறைய வாங்கிட்டேன். நம்ம யுஎஸ் ரிட்டர்ன் ராஜியோட, பதினோரு மணிக்கு திறக்கற கண்காட்சிக்கு, பத்தரைக்கெல்லாம் போயிட்டோம். நாள் முழுசும் சுத்திகிட்டே இருந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கின் பிரமாண்டமும், புத்தகங்களின் எண்ணிக்கையும் மூச்சடைக்க வைத்துவிட்டது. வழக்கம்போல சுஜாதாவோட கணக்கைத் தொடங்கினேன். இந்த முறையாவது வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கனும். பார்ப்போம்.
*********************

புத்தகத்திருவிழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மக்கள் காமிக்ஸ் புத்தகங்கள் மீது வெறிகொண்டு அலைகிறார்கள். 12 வருஷ கலெக்‌ஷனை 900 ரூபாய்க்கு தருகிறார்கள். என் அண்ணனிடம் 20 வருஷத்து கலெக்‌ஷன்கள் இருப்பதால் நான் வாங்கவில்லை. ஊரில் இவற்றை பத்திரமாக வைப்பதற்கென்றே மரப்பெட்டிகளின் உள்ளே வெல்வெட் துணி என பிரத்யோகமாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பால்யத்தில் விடுமுறைக்காக ஊருக்குப் போகும்போதெல்லாம், கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், டெக்ஸ் வில்லர், சிலந்தி மனிதன் என படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் பொங்கலோடு இரும்புக் கை மாயாவிக்கு 40 வயதாகிறதாம். ஹேப்பி பர்த்டே பாஸ்:)
*****************

2012 வாசிப்பு கணக்கை நேற்று தொடங்கியாச்சு. யுவகிருஷ்ணாவின் “அழிக்கப் பிறந்தவன்” நாவலை வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று. சுரேகா தன் விமர்சனப் பதிவில் கீழே வைக்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அங்கங்கே வாத்தியார் எட்டிப் பார்க்கிறார் (பெர்ஃப்யூமை ஸ்ப்ரேவிக் கொண்டான்). அதுசரி சுஜாதா விருது வாங்கினவரிடம் அவர் சாயல் துளியும் இருக்காதா என்ன? ஒன்னும் மட்டும் புரியவில்லை. லக்கி எப்படி மனம்வந்து அணிலின் படம் ஹிட்டாகும் என எழுதியிருக்கிறார்? குட் வொர்க் லக்கி. வாழ்த்துகள்.
****************

நேற்று அதிகப்படியான வேலை சலிப்பில் “நான் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்க்கிறது” என புலம்பிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட ஜூனியர், ”அம்மா பிங்கோ சாப்பிடும்மா” என்றான்.

”வீட்ல இல்லையே”

“நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்.”

“வேண்டாண்டா அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“பரவால்ல சாப்பிடும்மா. அது சாப்பிட்டா டூ ஆகிடுவாங்க. அப்ப நீ நிறைய வேல செய்யலாம். சரியா?”

அப்புறம்தான் புரிந்தது. சமீபத்திய பிங்கோ விளம்பரங்களில், அதை சாப்பிட்டால், ட்வின்ஸ் மாதிரி ஆகிடுவாங்க என வருகிறது. அவ்வ்வ்வ். எங்கேயெல்லாம் அப்ளை பண்றாங்க இந்த பசங்க.
***********************

சன் டிவியில் ஒளிப்பரப்பான நண்பன் பட இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் அடிச்ச ஜிங்ஜாங்கை தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் வெற்றியடைந்ததுன்னா அதுக்கு ஒரே காரணம் ஹிந்தி படத்தின் கதாசிரியர்/டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தான் என்றார். சீன் பை சீன், காஸ்ட்யூம் முதற்கொண்டு காப்பியடித்துவிட்டு சொந்தமா சிந்திச்சேன், தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தினேன் பீலா விட்டுகிட்டு சுத்தும் டைரக்டர்கள் மத்தியில் இந்த ஒரு விஷயத்துக்காகவாவது ஷங்கர் பாராட்டப் படவேண்டியவர். போகியன்று புக் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு சொல்றேன்:) அந்நிகழ்ச்சியை ஓட்டிய எனது ட்விட்.

ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?

December 29, 2011

Scribblings 2011

மற்றுமொரு ஆண்டு முடிவுக்கு வருகிறது. வழக்கம்போலவே இந்த வருடமும், அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்துக்கோர்த்த மலர்ச்செண்டாகவே இருந்தது. பெரிய இழப்பென்று சொல்ல எதுவுமில்லையென்றாலும், வழக்கம்போல மனிதர்களைப் பற்றிய புரிதல்களில்/தீர்மானங்களில் நான் இன்னும் பாலப்பாடத்திலேயே இருப்பதை இந்த ஆண்டு உணர்த்தியது. இவ்வளவுதானா/இதற்க்காகவா போன்ற கேள்விகள் எழுந்த தருணங்கள் வலிமிகுந்ததாக இருந்தாலும், அத்தருணங்களை கடக்க/மறக்க தோள் கொடுத்து உதவிய நட்புகள் வாய்த்திருப்பது மகிழ்ச்சியே. நிறைய மகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத/ஆனந்த மனநிலையில் கூத்தாடிய தருணங்களை இந்த ஆண்டு பரிசளித்தது.

உடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.

பதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ??) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.

December 19, 2011

Scribblings 19-12-2011

இதோ அதோன்னு ஆட்டம் காட்டிட்டு ஒருவழியா கூகிள் பஸ்ஸ மூடிட்டாங்க. ரொம்ப நாள் கூடப் பழகின ஒருத்தர் திடீர்ன்னு இல்லாமப் போனா மாதிரி வெறுமையா இருக்கு. ப்ளஸ் இருக்குன்னாலும், பஸ்ஸின் இடத்தை வேற எந்த தளத்தாலும் ஆக்ரமிக்க முடியாது. கொஞ்ச நஞ்ச லூட்டியா? என்னா ஆட்டம்? என்னா கும்மி? ப்ளஸ் ரொம்ப கொசகொசன்னு சந்தைக்கடை மாதிரி இருக்க ஃபீலிங்:( இப்போதைக்கு அங்க போற ஐடியா இல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். மிஸ் யூ கூகிள் பஸ்.
***********

பஸ் போனதின் நீட்சியாய் (இதப் பார்றா)ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு போனவாரம் தான் தொடர்ந்து அஞ்சு நாள் பதிவு போட்டிருக்கேன். தொடர்ந்து அந்த மாதிரி பதிவு போட்டு உங்களை கொல்ல முடியாது. அட இந்த ஒரு வாரத்துக்கு பதிவுக்கு மேட்டர் தேத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. இந்த லட்சணத்துல ஒன்னு மீள் பதிவு வேற. இனிமே அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு பதிவாவது போட்டு எல்லாரையும் கொல்லலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.
***********

2010ல் வெளியாகி ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் ஹிட்டடிச்ச ஷீலா கி ஜவானிக்குப் போட்டியா, சிக்னி சமேலி வந்திருக்கா. காத்ரீனா கைஃப் கொலக்குத்து குத்தியிருக்கும் இந்தப் பாட்டு இப்போ ஹிட்ன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ, ஷீலா தான் இன்னும் டாப்ல இருக்கா மாதிரி தோணுது. நீங்களே பார்த்து சொல்லுங்க:)


************

அப்பப்போ ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கிறேன். பின்ன அத மட்டும் விட்டுவச்சா நல்லாவா இருக்கும்? அங்கே போட்ட மொக்கைகளிலேயே ஆகச்சிறந்த மொக்கைகளை மட்டும் இங்கே அப்டேட் பண்ணும் எண்ணமிருக்கு. அப்படியாகப்பட்ட மொக்கை ஒன்னு

மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலப்படறது நம்ம வேலை இல்ல #தத்துபித்துவம்
***********

இந்த வட்டார மொழியால அடிக்கடி பல்பு வாங்கறேன். அப்படி சமீபத்துல என் மாமனார் கொடுத்த பல்பு.

கார் ரோட்ல விடுவியாம்மா?

எதுக்குப்பா? நம்ம வீட்ல தான் பார்க்கிங் இருக்கே.

பார்க் பண்றதப் பத்தி கேக்கலம்மா? ரோட்ல விடுவியா?

கவர்ட் கார் பார்க்கிங் இருக்கும்போது ரோட்ல எதுக்குப்பா விடனும். வண்டி டேமேஜ் ஆகிடாது?

அய்யய்யோ அதக் கேக்கலாமா? ரோட்ல, ட்ராஃபிக்ல ஆக்சிடெண்ட் பண்ணாம விடுவியான்னு கேட்டேன்.

ஹி ஹி வண்டி ஓட்டுவியான்னு கேக்கறீங்களா?

ஆமா. என்னமா இதுகூட புரியல உனக்கு?

ஙே!!!!

எங்கூர்ல வண்டி ஓட்றதுன்னு சொல்வோம். தஞ்சாவூர் பக்கம் அத விடறதுன்னு சொல்லுவாங்க போல. என்னமோ போடா மாதவா.
*********

December 12, 2011

Scribblings 12-12-2011

எழுதறத நிறுத்திட்டாலும், நம்ம எழுத்துப்பணிய தொடர சொல்லி ஆயிரம் அழைப்புகள், சரி சரி ஒன்னு ரெண்டு ரெக்வெஸ்ட்டுகள் வருது. நீ மொக்கையா மொக்கை போட்டாலும் பரவால்ல. இந்த வாரம் யுடான்ஸ் நட்சத்திரமா இருன்னு கேபிள் சங்கர் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார். இப்பல்லாம் நான் ரொம்ப பிஸி, எழுதறதுக்கு டைமே இல்லைன்னாலும், ஒரு பன்முக எழுத்தாளர், இவ்ளோ தூரம் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார்ங்கற ஒரே காரணத்துக்காக இந்த வாரம் ஸ்டாரா இருக்க சம்மதிச்சிருக்கேன். வழக்கம்போல உங்ககிட்ட வேறென்ன கேட்கப் போறேன். உங்க ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து குடுங்க சாமிங்களா..
*****

முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************

டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************

எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************

விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.

November 10, 2011

Scribblings 10-11-2011

சென்ற பதிவோட Scribblings 250 பதிவு பார்த்திருச்சு. பெரிய சாதனையெல்லாம் ஒன்னுமில்லைன்னாலும், மொக்கை போட்டே இம்புட்டு பதிவு தேத்தினது (எனக்கு) பெரிய விஷயம். அதோட நம்ம ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையும் 250 ஆகிடுச்சு. ஹை. வாட் எ மாட்ச்:) ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பர்களே.
******

ஏற்கனவே நான் வண்டியோட்டப் பழகின வீரதீர பராக்கிரமங்கள எழுதியிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு திரும்பவும் கார் ஓட்ட கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். ஏற்கனவே பழகின விஷயமாருந்தாலும், சென்னை ட்ராஃபிக்கை நினைச்சாலே உதறது. இன்னியோட ஆறு க்ளாஸ் வண்டிக்கும், சொல்லித்தர்றவருக்கும் எந்த சேதாரமுமில்லாம வெற்றிகரமா முடிஞ்சிருச்சு (ஏதாவதுன்னா எகிறடமாட்டோம்:)). இன்னும் 6 க்ளாஸ் பாக்கி. ஆண்டவா ரோட்ல போறவங்கள காப்பத்துப்பா.
*******

ஒரு வாரமா அடிச்சு ஊத்திட்டு, ஒரு வழியா மழை ஓஞ்சிருச்சு. ஒரு வாரத்துக்கே, முடியல. ரோடெல்லாம் தண்ணி. வீட்டு வாசல்ல, கணுக்கால்க்கும் மேல தண்ணி தேங்கியிருந்தது. பெசண்ட் நகர் MG ரோடு ரொம்ப மோசமாகிருச்சு. அதுவும் வண்ணாந்துறை சந்திப்பில் பெரிய பெரிய பள்ளம் விழுந்து, வண்டில போயிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு. எப்பதான் சரி பண்ணுவாங்களோ:(
*******

ஆட்சிக்கு வந்த அஞ்சு மாசத்துல மம்மி, ஷிஃப்டிங் வேலைல ரொம்ப பிசியா இருக்காங்க. இதையெல்லாம் மாத்தறதுக்கு, உருப்படியா சாலைகளை சீரமைக்கறது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். இப்ப சென்னை மக்களுக்கு தேவை, மோசமான சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து விடுதலையும், குப்பைகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளிலிருந்து விடிவும்தான். இல்ல இப்படித்தான் தொடரும், அதுக்குத்தான் நிறைய ஆஸ்பத்திரி தொறக்கறாங்களோ என்னமோ.
**********

சமீபக்காலங்களில் ரெண்டு ஆல்பங்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒன்னு மயக்கம் என்ன. மற்றொன்று Rockstar. மயக்கம் என்ன படத்தில் எல்லா பாட்டுகளுமே பிடித்திருக்கிறது. “நான் சொன்னதும் மழை வந்துச்சா?”, “ஓட ஓட தூரம் குறையல”, “பிறை தேடும் இரவில்” ஆகிய பாடல்கள் ஃபேவரைட். அதே போல் அந்த தீம் ம்யூசிக். ஆவ்சம். கேட்க கேட்க எங்கேயோ பறக்கும் ஃபீலிங். ராக் ஸ்டாரில் ரஹ்மான் சிம்ப்ளி ராக்ஸ். சட்டா ஹக், குன் ஃபாயா, கட்டியா கரூன், ஜோ பி மைன், தும் ஹோ, நாதான் பரிந்தே என அத்தனையும் அட்டகாசம். வெல்கம் பேக் ரஹ்மான்.

October 24, 2011

Scribblings 24-10-2011

நாங்க போட்ட மொக்கை தாங்காமல், கூகிளே பஸ்ஸை இழுத்து மூடும் முடிவுக்கு வந்திடுச்சு. பஸ்ல ஏறினதுக்கப்புறம் பதிவெழுதறது சுத்தமா நின்னுப்போச்சு. சும்மா ரெண்டு வரில தோணுனதெயெல்லாம் உளறிக்கொட்டி, வாங்கிகட்டிகிட்டு ஜாலியா இருந்த இடத்த மூடப்போறாங்கன்னு நினைச்சா கஷ்டம் இருக்கு. எதைக் கொண்டு வந்தோம்.... சரி சரி.. எங்கன சுத்தியும் ரங்கன சேருங்கற மாதிரி, பஸ்ல ஏறி சுத்தி சுத்தி, இப்ப தாய்வீடான ப்ளாகிற்கே திரும்ப வந்திட்டேன். முன்ன மாதிரி பதிவா போட்டுத் தள்ள முடியாதுன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன். பார்ப்போம்.
*****************

சென்ற வாரம் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து ஊருக்குப் போகிறேன். நிறைய மாற்றங்கள். முன்பு எங்கள் தெருவில் நாலே நாலு மச்சு வீடு தான் இருக்கும். இப்ப நாலே நாலு ஓலை வீடுகள் தான் இருக்கின்றன. அழகழகா வீடு கட்டியிருக்காங்க. வயதானவர்கள் முதற்கொண்டு சின்ன்பபொண்ணுங்க வரை எல்லாரும் நைட்டிதான். பளிச் கலரில் கண்டாங்கி கட்டும் எதிர்த்த வீட்டு ஆயா கூட நைட்டிக்கு மாறிட்டார்.

“என்னா ஆயா நைட்டிலாம் போட்டு அசத்துற?”

“அடப்போடி. அந்தப் பொடவைய வெளுத்து, காயவச்சு, கட்டிக்கறதுக்குள்ள, குடிச்சு கஞ்சி செரிச்சுப்புடுது. இது போட்டுக்கவும் சுளுவாருக்கு. வெளுக்கவும் சுளுவாருக்கு.”

அதுசரி.
**************

வீடுகள் மாறியிருந்தாலும், கிராமத்தில் மாறாமல் இருப்பது மனிதர்களும், நாய்களும்தான். கிராமத்தில் நாய்கள் புது ஆட்களை கண்டால் விடாமல் குரைக்கின்றன. நகரத்து நாய்களைப் போல் நிமிர்ந்து பார்த்துவிட்டு படுத்துக்கொள்வதில்லை. மனிதர்கள் காட்டும் பாசமும், கொடுக்கும் வரவேற்பும் அப்படியேத்தான் இருக்கிறது.

“சந்ரு மவளா நீஈஈ?”
”ஒம்மவனா? நீ இப்படியிருக்கையிலருந்து உன்ன பார்த்துகிட்டிருக்கேன். உனக்கு புள்ளன்னா மலைப்பா இருக்கு.”
“தீவளிக்கு வந்தியாக்கும்?”
(இன்றிரவே ஊருக்கு கிளம்பப்போகிறேன் என்றதும்)
“யே யப்பே. வாராதே ஆடிக்கொருதரந்தான். வரக்கொல்லவே கால்ல சுடுதண்ணிய ஊத்திகிட்டு தான் வருவீயளோ? பொங்கலுக்காவது பத்து பாயி்ஞ்சு நாள் தங்குறாப்புல வா”

எதிர்பட்ட பத்து பேரில் எட்டு பேர் கேட்ட கேள்விகள் இவை.

நான் பத்து மணிக்கு தான் போனேன். என் பால்ய தோழி ஒருத்தி என்னை அடையாளம் கண்டு விசாரித்தாள். ஐந்து நிமிடம் அவளிடம் பேசிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் நான் கிளம்புவதற்குள், இரண்டு முழம் ஜாதிமல்லியை நெருக்கமாக கட்டி கொண்டு வந்து கையில் கொடுத்தாள். ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. ”கனகாம்பரம் கூட இருக்கு. நீ வச்சிக்கமாட்டேன்னுதான் இதக் கொண்டாந்தேன்” என்றாள். ”ரெண்டடி தான் முத்து இருக்கு. இவ்ளோ பூ எப்படி வச்சிக்கிறது. நீயும் கொஞ்சம் வச்சிக்கோ” என்று பாதிபூவை அவளிடம் நீட்டினேன். ஏம்டி இம்புட்டு முடிய வெட்டிபுட்ட என்று அத்தையைப் போலவே திட்டியனுப்பினாள்.
********************

நண்பர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்..

April 6, 2011

துணுக்ஸ் 06-04-2011

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துகள் தோனி அண்ட் கோவிற்கு. எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;) இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா விளையாடிய போட்டிகளை மட்டுமே பார்த்தேன்.
”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”
“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”
“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”
”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”
“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க? இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது?”

இதெல்லாம் சென்ற வேர்ல்ட் கப்பின் போது என் பாட்டி அடித்த கமெண்ட். 87 வயதில் பாட்டிக்கு அபார ஞாபக சக்தி. யூனிஃபார்ம் கலரை வைத்தே எந்த டீம் என சொல்லுமளவிற்கு. அண்ணாக்கள் யாரும் பாட்டியை மேட்ச் பார்க்க விடவே மாட்டார்கள். குறிப்பாக டெண்டுல்கர் விளையாடும்போது. டெண்டுல்கர் ஃபேஸ் பண்ணும் ஒவ்வொரு பாலின் போது பாட்டி கேட்டுக்கொண்டேயிருப்பார் “டெண்டுல்கர் அவுட ஆயிட்டானா?”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(
****************

வெயில் வாட்டி வதைக்கிறது. பத்து நிமிடங்கள் மாடிக்கு சென்று துணி காயவைத்துவிட்டு வருவதற்குள் கண்கள் இருட்டி, தலைவலியே வந்துவிடுகிறது. கத்திரியை நினைத்தால் இப்பவே கண்ணக்கட்டுது. சன்ஸ்க்ரீன், கூலர்ஸ், பானைத் தண்ணீர், பழங்கள், மோர், கூழ் போன்றவை என்னுடைய சாய்ஸ். சூரிய பகவானே கொஞ்சம் கருணைக் காட்டு.
*****************

குழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும். சென்ற ஞாயிறு அண்ணா நகர் டவர் பார்க்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலில் சறுக்கு மரத்தில் ஏறி விளையாட குழந்தைகள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆறு வயது வாண்டு வரிசையில் நின்றது. எங்கிருந்தோ ஒருவர் (அப்பாவாகத்தான் இருக்கனும்) வந்து குழந்தையிடம் “இங்க ஏண்டா நின்னுகிட்டிருக்க? முன்னாடி போய் ஏறிச் சறுக்க வேண்டியதுதானே” எனக் கடிந்துக்கொண்டே அந்தப் பையனை முன்னாடி இழுத்துச்சென்றார். மற்ற பெற்றோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன் சார் எல்லா குழந்தைகளும் வெயிட் பண்ணித்தானே சார் போறாங்க?” என்று கேட்டதற்கு உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ என ஏகவசனத்தில் திட்டினார். பின்னர் அந்தப் பையனை தரதரவென இழுத்துக்கொண்டு போய்விட்டார். வருத்தமாக இருந்தது. நல்வழிக் காட்ட வேண்டியவர்களே, குறுக்குவழியை அதுவும் சின்ன வயதிலேயே போதிப்பது அந்தக் குழந்தைக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல:(
********************

மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, வாக்கிங் ஸ்டிக், காலில் மாவுக்கட்டு சகிதமிருந்த ஒரு சின்னப் பெண்ணை அழைத்துச் செல்ல அப்பெண்ணின் அம்மா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும்போது அந்தப்பெண்ணின் அம்மா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு ஓடும்போது, ஹீல் உடைந்து anklet fracture ஏற்பட்டுவிட்டதாம். இன்னும் 6 மாதங்களுக்கு ஓடவோ குதிக்கவோ கூடாது என டாக்டர் சொல்லியிருக்கிறாராம். குழந்தை எப்படிங்க ஓடியாடி விளையாடாம இருக்குமென்றார் என்னிடம். குழந்தை என்ற நினைப்பு உங்களுக்கிருந்திருந்தா ஹீல்ஸ் போட அனுமதிச்சிருப்பீங்களான்னு கேக்க நினைச்சேன். வெந்தப் புண்ணில் வேலப் பாய்ச்ச வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன். பெரியவங்களையே ஹீல்ஸ் அவாய்ட் பண்ணச்சொல்றாங்க. இவங்க என்னடான்னா குழந்தைக்கெல்லாம் ஹீல்ஸ் போட்டு அழகுப் பார்க்கறாங்க:(
*********************

அதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.

March 2, 2011

துணுக்ஸ் 02-03-2011

பா.ராவின் உணவின் வரலாறு படித்து முடித்தேன். ரசம் முதல் ரம் வரை அவருக்கே உரித்தான நகைச்சுவை நடையோடு சுவைபட இருக்கிறது புத்தகம் (உணவின் வரலாறு சுவையாக இல்லாமல் போனால் தானே ஆச்சரியம்). அந்தப்புரத்தில் ராணி குடித்த ஒயினும், நவராத்திரியில் சுண்டலுடனான மாமியின் என்கவுண்ட்டர் எல்லாம் குபீர் சிரிப்பு ரகங்கள். நான் கூட உணவை ரசிப்பவளாக மாறிய கதையை இங்கு தொடராக பதியலாம் என்றிருக்கிறேன். இட்லியில் ஆரம்பித்து இட்டாலியன் வரை நான் ரசித்த உணவுகள், அனுபவங்கள், எப்போதாவது செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை பகிர்கிறேன்.
***************

ஸ்கூட்டி வந்ததிலிருந்து ஆட்டோக்கு அழும் காசு மிச்சமாகி வருவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு பெசண்ட் நகரிலிருந்து அண்ணா நகர் செல்ல மினிமம் ஆட்டோ சார்ஜ் 200 ரூபாய். அதிகபட்சமாய் (பீக் ஹவர் ட்ராஃபிக்/இரவு நேரங்களில்) 280 ரூபாய். இதே பஸ்ஸில் செல்ல அதிகபட்சமாய் 15 ரூபாய் டிக்கெட் சார்ஜூம், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கான ஆட்டோ சார்ஜஸ் 60 அல்லது எழுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஆனால் நான் பயணிக்கவிரும்பும் நேரத்திற்கு பஸ் கிடைப்பது பிரச்சனை. ஸ்கூட்டி வந்தபிறகு இரண்டுமுறை குழந்தையையும் அழைத்துக்கொண்டு போய்விட்டு வந்துவிட்டேன்:) வண்டி வந்ததிலிருந்து கீழே போடவோ, ஸ்க்ராட்ச் போடவோ, யாரிடமும் திட்டு வாங்கவோ இல்லை. அதிகபட்சமாய் 40 மேல் போவதில்லை. நீ பேசாம நடந்தே போய்டலாம்ன்னு ரங்ஸ் கிண்டலடிக்கிறார். Never Mind. வேகம் விவேகமல்ல:)
****************

பெட்ரோல் விலையேற்றம் ஒருபுறமிருந்தாலும், பெட்ரோல் பங்கில் நடக்கும் கொள்ளை அதிர்ச்சியைத் தருகிறது. 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால், நாற்பதில் ஒரு முறை நிறுத்தி எடுத்துவிடுகிறார்கள். நாம் வாய் திறக்கும் முன் அவர்களே, எவ்ளோ சொன்னீங்க எனக் கேட்டு மிச்சத்தை நிரப்புகிறார்கள். எனக்கு ஒரு முறை இதுபோல நடந்தது. இரண்டாவது தடவை 40ல் எடுத்துவிட்டு, “நூறு ரூபாய்க்கா மேடம் கேட்டீங்க” என்றார். பரவால்லீங்க. நாற்பது ரூபாய்க்கே போதும்.

இல்ல மேடம். நூறு ரூபாய்க்கே ஃபில் பண்ணிடறேன். இப்ப போட்டது சரியா விழுந்திருக்காது.

அதெப்படிங்க. அப்ப நூறு ரூபாய்க்குன்னு கேட்டா நீங்க 60 ரூபாய்க்குத்தான் ஃபில் பண்றிங்க?

ஐய்யயோ. அப்படி இல்ல மேடம். நீங்க சொன்னது நாப்பது ரூபான்னு கேட்டுது.

அதெப்படிங்க நூறுன்னு சொல்றது நாப்பதுன்னு கேக்கும்? இங்க்லீஷ்ல கூட ஹண்ட்ரட்க்கும் ஃபார்ட்டிக்கும் உச்சரிப்பில் வித்யாசம் இருக்குங்களே?

பதிலேதும் சொல்லாமல், மீண்டும் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டார்கள். இது மாதிரி மட்டுமில்லாமல், ஒருவர் பெட்ரோல் போடும்போது இன்னொரு சிப்பந்தி வந்து சைட் ஸ்டாண்ட் போடச் சொல்வது, கார் என்றால், கார்டா கேஷா என கவனத்தை திசை திருப்புவது என ஏகப்பட்ட திருட்டுத்தனங்கள் செய்கிறார்கள். இதுபற்றி கம்ப்ளையெண்ட் செய்யலாமென இருக்கிறேன்.
*************

திங்களன்று திருப்பதி சென்றிருந்தேன். தரிசனத்திற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் எல்லாரையும் இடித்து தள்ளிக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார். என் காலை வேற மிதித்துவிட்டு, ”குழந்தை கையில போட்டிருந்த மோதிரத்தைக் காணவில்லை. கால் பவுன் மோதிரம். பெருமாளே எப்படியாச்சும் கண்டுபிடிச்சுக் கொடுத்துடு (பெருமாளென்ன போலீஸ் ஸ்டேஷனா நடத்துறாரு?).” என சத்தம் போட்டு வேண்டிக்கொண்டார். மோதிரமும் கிடைத்துவிட்டது. அதுக்கப்புறம் அவர் சொன்னது “பெருமாளே. மோதிரத்த உன் உண்டியல்லயே சேர்த்திடறேன் சாமி”. ஹூம்ம்ம். திருப்பதி பெருமாள் ஏன் பணக்கார ஸ்வாமிங்கறது இப்ப தெரியுது.
***************

சமீபத்தில் தூரத்து உறவினர் (அப்படின்னு அவர் சொல்லிக்கிட்டார்) ஒருவரை கல்யாணத்தில் பார்த்தேன். அவருடனான உரையாடல்

ஹஸ்பண்ட் எங்க வேலை பார்க்கிறார்.

சாஃப்ட்வேர்ல.

எந்தக் கம்பெனி?

(கம்பெனி பெயரைச் சொன்னதும்) அப்படின்னு ஒரு கம்பெனி இருக்கா என்ன? எங்க ஏரியாவுல அந்த கம்பெனி பஸ்ஸ நான் பார்த்ததே இல்லையே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மாம்பலத்துல முட்டுசந்துல இருந்துகிட்டு இந்த ரிட்டையர்ட் பெருசுங்க பண்ற தொல்லை தாங்கலடா சாமி. போக்குவரத்து வசதி இல்லாத கம்பெனியெல்லாம் கம்பெனியே இல்லையாம். அதுவும் கண்டிப்பா MNCயா இருக்கவே முடியாதாம். ஒரு நாலஞ்சு கம்பெனி பேரத் தெரிஞ்சுவச்சுகிட்டு இவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே. அவர் புள்ளையாண்டான் குப்பைக் கொட்ற கம்பெனிக்கப்புறம் தான் மத்ததெல்லாம். அவர் புள்ள அப்பதான் காலேஜ் முடிச்சு ட்ரெய்னியா சேர்ந்திருக்கும். ஆனா இவர் குடுக்கிற பில்டப்ப கேட்டீங்கன்னா என்னமோ பில் கேட்ஸுக்கே இவர் புள்ளதான் க்ளாஸ் எடுத்த மாதிரி கதை சொல்வாரு. நாராயணா. இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா.
****************

நண்பேன்டா.. க்ளைமேக்ஸ் செம்மையா இருக்கு:)

January 24, 2011

துணுக்ஸ் 24-01-2011

தொலைக்காட்சிகளில் பொங்கலுக்காக ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் (எனக்குத் தெரிந்து) உருப்படியாக இருந்தது வசந்த தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தான். ஞாயிற்றுக்கிழமை பாலமேடு ஜல்லிக்கட்டும், திங்கட்கிழமை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் ஒளிபரப்பினார்கள். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலும், கூகிள் பஸ்ஸில் பகிரப்பட்ட நர்சிம் எழுதிய ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையும் போட்டியை முழுதும் பார்க்க வைத்தன. ஒவ்வொரு காளையும் கடோத்கஜனின் க்ளோனிங் போலிருந்தன. சளைக்காமல் விட்டுக்கொண்டே இருந்தார்கள். மாடுபிடிப்பவர்களும் அசராமல் முயற்சி செய்துக்கொண்டே இருந்தார்கள். நான் பார்த்த மட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே காளைகள் அடக்கப்பட்டன. மற்றவையெல்லாம் “தொட்டுப்பார்றா. தில்லு இருந்தா வாடா” என்ற ரேஞ்சுக்கு நின்று விளையாடின.

ஜல்லிக்கட்டு மற்ற விளையாட்டுகளிலிருந்து வேறுபடும் புள்ளி முக்கியமானது. எந்த விளையாட்டிலுமே சம்பந்தப்பட்ட இருவருக்கும் ‘இது விளையாட்டுத்தான்’ என்று தெரிந்திருக்கும். ஆனால் இதில் அப்படியில்லை. மனிதனுக்கு விளையாட்டு. மிருகத்துக்கு அது தெரியாது. - பெருமாள் முருகன் எழுதிய முன்னுரையில் வரும் வரிகளிவை. களத்திலிருக்கும் வீரர்களுக்கு காளையை அடக்குவது நோக்கம். காளைகளின் நோக்கமென்னாவாயிருக்கும்? யாரிடமும் பிடிபடக்கூடாதென்பதா? தன்னைத் தற்காத்துக்கொள்வதா? காளைக்கு மட்டுமே வெளிச்சம். ஒவ்வொரு காளையும் வாடிவாசலிலிருந்து வெளிவரும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும் நமக்கே பரபரப்பும் பதற்றமும் ஏற்படுகின்றது. மாடு அணைக்க களத்தில் நிற்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? வாழ்க்கையில் ஒருமுறையாவது ஜல்லிக்கட்டை நேரில் பார்த்துவிடவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏகப்பட்ட கெடுபிடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் இறந்ததால் அடுத்த வருடம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்ற கேள்வியோடு ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விடுமா? பார்க்கனும். பார்ப்போம்.
**************

ரொம்ப எதிர்பார்த்துப் போய் ஒரு விஷயத்தில் ஏமாந்ததும் பொங்கல் சீசனில் நடந்தது. இரண்டு வருடங்களாக சென்னை சங்கமம் பார்க்கனும் என்ற ஆசை பொங்கலன்று நிறைவேறியது. அண்ணாநகர் டவர் பார்க்கில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். ஒரத்தநாடு கோபு குழுவினரின் நாட்டுபுறப் பாடல்கள், காவடியாட்டம், கருப்பசாமியாட்டம் ஆகியவைற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காவடியாட்டம் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் ரொம்ப நன்றாக இருந்தது. மேடையின் உயரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியிருந்தால் எல்லாருக்கும் எளிதாக தெரிந்திருக்கும். கொஞ்சம் எம்பிப் பார்த்தால் தான் தெரிந்தது. அடுத்தது அருணா சாய்ராமின் கச்சேரி என அறிவித்தார்கள். இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைன்னு ஃபுட் ஸ்டால் பக்கம் நடையைக் கட்டினோம். நண்பர்கள் ரொம்பவே பில்டப் கொடுத்து வைத்திருந்த பர்மா பாய் பரோட்டா ஸ்டாலில் முட்டை பரோட்டா சாப்பிட்டோம். ரொம்ப சுமாராகத்தான் இருந்தது. பெட்டர் லக் நெக்ஸ் டைம் என மனதைத் தேற்றிக்கொண்டு ஜூனியர் பின்னால் ஓட ஆரம்பித்துவிட்டோம்.
*****************

ஃபேஸ்புக்கில் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. அங்கேயும் அப்படித்தானா என்றெண்ணம் ஏற்பட்டது:)

December 7, 2010

துணுக்ஸ் 07-12-2010

சமீபகாலமாக பதிவுகலில் என் நடமாட்டம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. காரணம். பஸ். பஸ் ஓட்றதுல அதில நேரம் செலவிடறதனால பதிவுகள் எழுத முடியறதில்ல (அப்படியே எழுதிட்டாலும்). நிறைய கதைகள்???!!!! அரையும்குறையுமா எழுதி வச்சிருக்கேன் (நீ முழுசா எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்ங்கறீங்களா?). சீக்கிரமே பட்டி டிங்கரிங் வேலைப் பார்த்து பதிவேத்தனும். இன்னும் கொஞ்ச நாட்களில் முன்போல் பதிவுலகில் இயங்க முயற்சிக்கிறேன்.
*************

இரண்டுப் பிரபல பதிவர்கள் என்னை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்கூல்/காலேஜ் காலத்திலேயே படிச்சதில்ல. ஒரு பிரபல வளரும் இலக்கியவாதி புக் பேரெல்லாம் சொல்லி, படிங்க நல்லாருக்கும். படைப்புகளை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்பங்கன்னு சொல்றாங்க (அங்க அனுப்பிச்சு அவங்க காறித்துப்பி என்னை அசிங்கப்படுத்தறதப் பார்க்கிறதுல அம்மிணிக்கு அம்புட்டு சந்தோசம்). இன்னொரு பிரபலம் இப்போல்லாம் பதிவே எழுதறதில்ல. பஸ்லயே சுத்திக்கிட்டிருக்காங்க. அவங்க என்னாடான்னா ஒரு படுபயங்கரமான எழுத்தாளர் பேர சொல்லி அவர் எழுதின புத்தகத்தை வீட்டுக்கே வந்து கொடுக்கிறேன்னு கொலை மிரட்டல் விடறாங்க. என்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பது தெரிந்தும் இப்படி ஒரு பாதகச் செயலை செய்யத் துணிந்த அந்தப் பதிவர் மீது மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய நிபுணர்களிடம் ஆலோசனை செய்துக்கொண்டிருக்கிறேன். ராஜி பீ கேர்ஃபுல்.
************

தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான கோதாவுல நானும் குதிச்சிருக்கேன். கீழ்கண்ட இடுகைகளை விருதுக்கு என் சார்பா பரிந்துரைத்திருக்கிறேன். அப்படியே நீங்களும் உங்க பொன்னான வாக்குகளை அள்ளித் தெளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வலியின் மொழி
செக்கர் வானம்
மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்
*****************

சென்ற சனிக்கிழமையிலிருந்து மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. நசநசன்னு மழை. ரோடுகள் கேக்கவே வேணாம். பெசண்ட் நகர் வண்ணாந்துறை ரோடு நல்ல காலத்திலேயே குண்டும் குழியுமாய் பல்லிளிக்கும். இப்போ கேக்கவே வேணாம். மழைநீர் தேங்கி எங்கு பள்ளமிருக்குன்னு தெரியவே மாட்டேங்குது. டெட் ஸ்லோ/இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு போவது உத்தமம். பாண்டிச்சேரியிலும் சரியான மழையாம். ரெயின்போ நகர் என்ற ஏரியா மிதக்கிறது என்கிறார்கள். சென்ற மழைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் தந்தார்களாம். அதெப்படி மத்தவங்களுக்கு தராம விடலாம்ன்னு மத்தவங்க மறியெலெல்லாம் பண்ணிருக்காங்க. அதனால இந்த தடவை ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தருகிறார்களாம். இதற்குப் பதிலாக வெயில் காலத்திலேயே நீர் நிலைகளை சரியாக தூர் வாரி, கால்வாய்களின் அடைப்பு நீக்கி, சரியான வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தால் இந்தளவு பொருட்செலவு ஏற்பட்டிருக்காது. அது சரி கொள்ளை அடிக்கறதுல கொஞ்சம் பொதுமக்களுக்கும் கொடுத்து ஓரளவு புண்ணியம் தேடிக்கிறாங்க போல. இது சம்பந்தமா நான் முன்னமே எழுதியிருந்த (உருப்படியான ஒரே) பதிவு.
*****************

ரங்ஸுடன் வண்டியில் சென்றுக்கொண்டிருக்கும்போது நடந்த உரையாடல்

“வித்யா, ரோடெல்லாம் பள்ளமும் மேடுமா இருக்குன்னு சொல்றாங்க சரி. அதென்ன குண்டும் குழியுமா?”

“மொதல்ல ஒழுங்கா வண்டிய ஓட்டு. சில்லறை பொறுக்க வைக்காத. கேள்வியெல்லாம் அப்புறம் கேக்கலாம்”

“தெரியாதுன்னா சொல்லிடு. சும்மா இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம்.”

”எனக்கா தெரியாதா. குழின்னா பள்ளம். குண்டுன்னா வீங்கினாப்புல இருக்கிறது. அதாவது மேடா இருக்கிறது. அதான் அப்படி சொல்றாங்க”

“அப்படியிருக்காது. குன்றும் குழியுமா இருக்குங்கறதுதான் இப்படி சேஞ்ச் ஆயிருச்சின்னு நினைக்கிறேன்.”

“ஹைய்யோ. எப்படிப்பா இப்படியெல்லாம்? தமிழ் எழுத்துக்கூட்டி படிக்கவே கஷ்டப்படுவியே. சூப்பரான எக்ஸ்ப்ளனேஷன். பேசாம நீ கூட ப்லாக் எழுதலாம்”

“ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது”

மீ தி ஙே!!!

October 1, 2010

சத்தியமா சொல்றேன்...

கண்டிப்பாக எந்திரன் பார்க்க வேண்டும். ரங்ஸின் ஆபிசில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் இஷ்யூ பண்றாங்களாம். அடுத்த வாரம் பார்த்துவிடுவேன் என நினைக்கிறேன். எப்போ பார்த்தாலும் என் பார்வையில், அடிதட்டு/மேல்தட்டு/எவர்சில்வர் தட்டு மக்களின் பார்வையில், பின்/முன்/சைடு நவீனத்துவ பார்வையில், உள்குத்து/வெளிகுத்து/ஊமைகுத்து கண்டுபிடித்து, ஈயம்/இசம் சாயம் பூசி, குப்பை/சப்பை என பஞ்சடித்து, ஆல் அவுட் காப்பி (அதாங்க ஈயடிச்சான் காப்பி) என ஆராய்ச்சி பண்ணி விமர்சனப் பதிவெழுத மாட்டேன் என கூகிளாண்டவர் மேல் சத்தியம் செய்கிறேன்.
************

சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்காக அப்பல்லோ சென்றிருந்தோம். எல்லா டெஸ்ட்டும் முடித்து கார்டியாலிஜிஸ்ட் கன்சல்டேஷன்க்காக சென்றபோது பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. கார்டியாலிஜ்ஸ்ட் ஈசிஜி, CST ஆகிய ரிப்போர்டுகளைப் பார்க்கவில்லை. BP செக் செய்துவிட்டு போகலாம் என்றார். ரிப்போர்ட் பார்க்கவில்லையா என கேட்டதற்கு “Do u hav any complaints?" என்றார். இல்லையென்றதுக்கு அப்படின்னா ரிப்போர்ட் பார்க்கதேவையில்லை என்கிறார். எந்த சிம்ப்டம்ஸும் காட்டாமல் ஆரம்பநிலை பிரச்சனைகள் ஏதாவதிருந்தால்? Hardly 2 mins/patient. ஹூம்ம்ம்.
*************

அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தோம். பளிச்சென்றிருக்கிறது. தகவல் மையத்திலிருந்தவர் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தார். ஜனவரி 2011லிருந்து நூலகம் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கும். 8 தளங்களில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறப்போகின்றன. குழந்தைகளுக்கென்றே ஒரு தளம் முழுவதும் புத்தகங்களும் சிடிக்களும் இருக்கின்றன. குழந்தைகளுக்கான உறுப்பினர் விவரங்கள் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும். பின்னர் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தயாராகும். ஒவ்வொரு புத்தகத்தின் விவரத்தையும் கம்ப்யூட்டரில் சேர்த்து தயார்படுத்த அரைமணிநேரம் பிடிக்கிறதாம். வெயிட்டிங் ஃபார் ஜனவரி 2011.
***************

ஜூனியரின் ஹேர்கட்டிற்காக பார்லர் சென்றிருந்தேன். ஐந்து நிமிடம் வெயிட் பண்ண சொன்னார்கள். பக்கத்தில் ஒரு ஆள் செவிட்டு மெஷின் மாட்டிக்கொண்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தார்.

“Yes babe. No probs. I'll arrange it."

"Wat the f***"

"My goodness."

"Holy s***" என வாயைத் தொறந்தாலே பீட்டர் மழை பொழிஞ்சிட்டிருந்தது. முன்னமெல்லாம் பொண்ணுங்க தான் இப்படி சீன் போடுவாங்க. இப்ப பசங்களும் ஆரம்பிச்சிட்டாங்களான்னு நெனச்சிக்கிட்டிருக்கும்போதே பார்லர் இன்சார்ஜ் வந்து “How can i help u sir?" அப்படின்னார். இதுவும் ரொம்ப பந்தாவா “Well need to hair spa. Think i've dandruff. Can i have ur menu card" அப்படின்னுது. என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இன்சார்ஜ் கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிக்கிட்டு “Yes sir. I'll get u the service card" அப்படின்னார். சலூன்ல வந்து மெனு கார்ட் கேட்ட ஒரே ஆளு நீயாதாண்டா இருப்பன்னு நினைச்சுகிட்டு வந்த வேலையப் பார்க்க போனேன்.
*****************

Astra
Calypso
Valentino
Sunshine
Brimstone

மேலிருப்பவை எல்லாம் உலகப் படங்களின் பேரா எனக் கேட்காதீங்க. Fruit Shop on Greams Road ஜூஸ் கடையில் கிடைக்கும் ஜூஸ்களின் பெயர்கள். அட்டகாசமான ப்ளேவர்களில் ஜூஸ் குடிக்க இங்கு போகலாம். கொஞ்சம் காஸ்ட்லி. இருந்தும் டேஸ்ட் இஸ் குட். ஜூஸ் ஆர்டர் கொடுக்கும்போதே பாதி சர்க்கரை சேர்க்கச் சொல்லுவது உத்தமம். ரெகுலர் டோஸ் சுகர் ஓவர் தித்திப்பாக எனக்குத் தெரிகிறது. ஜூஸோடு மில்க் ஷேக்கும் டெஸர்ட்ஸும் கிடைக்கும். Date Milk shake, Tender coconut pudding, caramel custard எல்லாம் கட்டாயம் ட்ரை செய்யவேண்டியவை.
***************

பதிவுலக நண்பர்களுக்கு வரும் திங்கள் முதல் (அக்டோபர் 4) ஒரு வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவுள்ளேன். இத்தளத்தில் அளித்து வரும் ஆதரவைப் போல் வரும் வாரம் வலைச்சரத்திலும் தொடர்ந்து ஊக்கம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த வாரத்தினை எதிர்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

July 26, 2010

’யமஹா’தகர்கள்

தெருவின் ஆரம்பத்தில் திரும்பும்போதே அப்பாவின் வரவை அறிவித்துவிடும் வண்டி. ராயல் என்பீல்ட். அங்கங்கே கருப்பு பெயிண்டை உதிர்த்திருந்த கடோத்கஜன் செகண்ட் ஹாண்டாக வந்து சேர்ந்தான். அழகான கண்ணை உறுத்தாத, க்ளிட்டரிங் ப்ளூ கலருக்கு மாறியது. விடுமுறைக்கு அண்ணன்கள் வந்தால் நான்கு பேர் சேர்ந்து நகர்த்தினாலும் அசையாமல் மலை மாதிரி இருக்கும். அப்பா அதிலமர்ந்து வருவது கொள்ளை அழகாக இருக்கும். தினமும் ராமு மாமா துடைத்தாலும் வாரயிறுதியில் கட்டாயமாக அப்பா பார்த்து பார்த்து துடைத்து வைப்பார். தினமும் காலை தவறாமல் எங்களை ஒரு ரவுண்ட் அடிப்பார். வேலை மாற்றங்களும் பதவி உயர்வும் அரசாங்க வண்டிகளை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அப்பாவைத் தள்ளினாலும் வண்டியை கூடவே வைத்திருந்தார். மதுராந்தகம் வந்து இனிமேல் வண்டி ஒத்துவராது என்றதால் விற்கவே மனமில்லாமல் விற்றார். சமீபத்தில் அண்ணா தன் நண்பர் வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பாவை ஒரு ரவுண்ட் கூட்டி போகச் சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். இம்முறை ஜூனியர் முன்னால் அமர்ந்து கொண்டான். மாமனிடத்தில் மாப்பிள்ளை. Felt very happy.
*********

பிவிஆரில் டாய் ஸ்டோரி பார்க்க போயிருந்தோம். 3D கண்ணாடிகளை ஸ்நாக்ஸ் கவுண்டரில் விநியோகித்தனர். பாப்கார்ன் பெப்சி வாங்குபவர்களை மீறி கண்ணாடியைப் பெறுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது. கண்ணாடிகளை டிக்கட் கொடுக்கும்போதே இஷ்யூ செய்யலாமே என கேட்டதற்கு சரியான பதிலே இல்லை. அதில்லாமல் கண்ணாடி 25 ரூபாய். நோ ரீபண்ட் என்றார்கள். இந்தக் கண்ணாடியை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்றதற்கு வேணும்னா வாங்கிக்கோங்க என்ற திமிரான பதில் வேறு. இம்மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர், கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல.
**********

I've been on a calendar, but i've never been on time - Marlyn Manroe
லேண்ட் மார்க் பையில் பார்த்த இந்த ஸ்டேட்மெண்டை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.
***********

இந்த சனி ஞாயிறு எந்த சேனலைத் திருப்பினாலும் விருது வழங்கும் விழாவாகவே இருந்தது. கலைஞர், விஜய், கே டிவி என ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒருவர் யாருக்காவது நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் விஜயில் மிர்ச்சு மியூசிக் அவார்ட்ஸ் வேற ஒளிபரப்பப்போகிறார்களாம். இப்படியே எல்லா சேனல்களும் விருதுகளைத் தர ஆரம்பித்தால் என்னவாகும். விஜய் வருடம் தவறாமல் ஏதாவது ஒரு பெயரில் கமல், சூர்யா மற்றும் விஜய்க்கு அவார்ட் கொடுத்துவிடுகிறார்கள். அதே போல் ஒவ்வொரு சேனலும் அவர்களுக்கு வேண்டிய/பிடித்த நடிகர்/நடிகைகள் என ஆரம்பித்தால் யார்தான் உண்மையிலே தகுதியுடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது?
************

சென்னை சாலைகளில் ஸ்கூல் யூனிபார்மில் நிறைய குட்டிப் பையன்கள் பதற வைக்கும் வேகத்தில் வண்டி ஓட்டுகிறார்கள். அதிலும் நிறைய அபாச்சியும், யமஹாவும் தான். எருமை மாடு மாதிரி பிரமாண்டமாய் இருக்கும் வண்டியில் அநாயசமாக அசுர வேகத்தில் பறக்கிறார்கள். வண்டியை சாய்க்கறதை பார்த்தால் விட்டால் படுத்துக்கொண்டே ஒட்டுவான்கள் போலிருக்கு:( போன தடவை அப்படி யமஹாவில் பறந்த பையனால் நிலை தடுமாறி விழப் பார்த்தோம். ஒரு நொடியில் சுதாரித்ததால் உயிர் பிழைத்தோம் (க்றீச்சிட்டு நின்ற லாரியை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது). பெற்றோர்கள் வண்டி வாங்கி கொடுக்காமல் இருக்கலாம். ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.

June 28, 2010

கள்ளத்தனமாய் கண்கள் பேச..

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் என் வலைத்தளத்தை(யும்) பற்றி குறிப்பிட்ட கட்டுரையை பார்த்ததும் மகிழ்வாய் இருந்தது. வலைத்தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டும் போட்டிருந்தனர். கமெண்ட், ஹிட், பரிந்துரை போன்ற எதிர்பார்க்காத விஷயங்களைத் தாண்டி இம்மாதிரியான Recognition கிடைக்கும்போது உற்சாகமாய் இருக்கிறது. வீட்டில் காமித்து பீற்றிக்கொண்டது வேறு. மாமனார் வேறு வலைத்தள முகவரியை டைரியில் குறித்துவைத்திருக்கிறார். ஜாக்கிரதையாய் எழுதவேண்டும். தொடர்ந்து உற்சாகப்படுத்தும் சகபதிவர்களுக்கு நன்றி (விக்கிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்). ஆக ஒருவழியா பத்திரிக்கைல வர ஆரம்பிச்சாச்சு. அப்படியே ஆ.வி, உயிர்மையோ கிழக்கோ ஒரு பத்து பதினஞ்சு புக்கு, அப்படியே அரசியல், ஸ்ட்ரெய்ட்டா 2016ல் முதல்வர்ன்னு பயணத்த கண்டினுயூ பண்ணனும் (2011 ஏன் இல்லன்னு கேக்குறவங்களுக்கு டஃப் காம்படீஷன்ங்க). கட்சி பதவிகளுக்கும், அமைச்சரைவை இலாக்காக்களுக்கும் விண்ணப்பங்களோடு அதிமுக்கியமாய் வி.ஐ.பி/சாம்சனைட் சூட்கேஸ்களும் வரவேற்கப்படுகின்றன.
**************

லிம்கா வி்ளம்பரங்களில் எப்போதுமே ஒரு ப்ரெஷ்னஸ் இருக்கும். தண்ணீரை ஸ்ப்லாஷ் செய்யும் உத்தி ரொம்பவே நன்றாக இருக்கும். இப்போது காட்டப்படும் விளம்பரத்தில் இசையும் சிறப்பாக இருக்கிறது. அந்த குரல் அவ்வளவு மெஸ்மரைசி்ங்காக இருக்கிறது. அதுவும் அந்தப் பெண் கேட்டிலிருந்து கொண்டு பாட்டிலை உயர்த்திக் காட்டும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன் சிம்ப்ளி சூப்பர்ப்.

*************

ஏர்டெல் சூப்பர் சிங்கர் பைனல் போட்டி பார்க்க நேர்ந்தது. இதற்கு முன் ஒன்றிரண்டு ஷோக்கள் பார்த்ததுண்டு. பைனலில் அல்காவின் பெர்பாமன்ஸ் டக்கராக இருந்தது. அதோடு கார்த்திக் மற்றும் ஆண்ட்ரியாவின் குரல்களில் கேட்ட “உறவுகள் தொடர்கதை” பாடல் இன்னமும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. கார்த்திக் ராக்ஸ்:)
*************

நான் பாண்டிச்சேரி போனாலோ இல்லை மாமியார் இங்கு வந்தாலோ வேறு வழியில்லாமல் சில சீரியல்களை பார்த்தோ/கேட்டோ தொலைக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சீரியல் 8 மணிக்கு வரும் திருமதி செல்வம். என்ன ஒரு சிறப்புன்னா ஒரு மாசம் கழிச்சி பார்த்தாலும் என்ன நடந்திருக்கும்ன்னு யூகிக்க முடியும். அந்தளவுக்கு வேகமா நகர்ற கதை??!! அதோடில்லாம நான் என்னிக்கெல்லாம் பார்க்கறேனோ அன்னிக்கு கரெக்டா வடிவுக்கரசிக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்ப்பாங்க. உயிருக்கு போராடிக்கிட்டு இருப்பாங்க. எத்தனை தடவை ஹார்ட் அட்டாக் வந்தாலும் தாங்கும் நெஞ்சம் போல. அன்லிமிடட் அட்டாக்ஸ் வரம் வாங்கிருக்காங்களோ என்னவோ. நல்லவேளை அம்மாவிற்கு சீரியல் பார்க்கும் பழக்கமில்லாததால் நானும் கூடவே அப்பாவும் தப்பித்தோம்:)
**************

ஆம்பா ஸ்கை வாக் மால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அண்ணா நகர், அந்தப்பக்கம் அமிஞ்சிக்கரை, கீழ்ப்பாக்கம், அம்பத்தூரிலிருந்து ஸ்பென்சர் போகும் மொத்த கூட்டமும் ஸ்கைவாக்கிற்கு டைவர்ட் ஆகிறது. சனி ஞாயிறுகளில் நிஜமாகவே மூச்சு திணறுகிறது. வீக்கெண்டுகளில் வரவே கூடாது என சபதமே மேற்கொண்டோம். நம்ம விஷயத்துக்கு வருவோம். பெரிய ஃபுட் கோர்ட். டைனிங் ஸ்பேசும் நிறைய இருக்கிறது. பாப்கார்ன் வயிற்றை நிரப்பியதால் ஃபுட்கோர்ட்டை பார்த்துவிட்டு மட்டும் வந்தேன். ஒரு பரிந்துரை. பூஸ்டர் ஜூசில் க்ரான்பெர்ரி ஜூஸ்கள் நன்றாக இருக்கின்றன. விலை யம்மாடியோவ் ரகம். எக்ஸ்பிரஸ் அவின்யூ மாலிலும் ஃபுட்கோர்ட் ஓரளவுக்கு பங்கஷனாக ஆரம்பித்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இன்னும் பெரிசாக வரவிருக்கிறதாம். எப்படியோ ஃபுட்டிகளுக்கு கொண்டாட்டம் தான்.
*****************

பிவிஆரில் சிங்கம் பார்த்தோம். லவ்லி தியேட்டர். கொடுத்த காசிற்கு வஞ்சனையில்லாமல் இருந்தது இருக்கையும் சவுண்ட் சிஸ்டமும். “ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடா” என சூர்யா எகிறி அடிக்கும்போதெல்லாம் என் மண்டையில் இறங்கின மாதிரியே ஒரு ஃபீலிங். டிபிக்கல் ஹரி மூவி. ஒன்னே ஒன்னு மட்டும் மிஸ்ஸிங். அனுஷ்கா தாவணியில் மலை/வயல்வெளியில் டூயட் பாடவில்லை. மற்றபடிக்கு பனைமரம்/தென்னைமரம், பொட்டல்காட்டில் ஒரு ஃபைட், டாடா சுமோ வெடித்து பறத்தல், மனோராமாவின் எமோஷன் என ஹரியின் அத்தனை டச்சும்.

June 9, 2010

போச்சுடா...

கல்யாணத்த பண்ணிப் பார். வீட்டக் கட்டிப் பார்னு சொல்லுவாங்க. இதோட வீட்டை மாத்திப் பார்ன்னுங்கறதையும் சேர்த்துக்கனும். புது வீடு வந்தாச்சு. மே மாதத்தின் ஒரு பெரிய வேலை முடிந்தது. இந்த முறை பேக்கர்ஸ் & மூவர்ஸ்க்கு ரொம்ப வேலை இல்லை. பின்னர் வேளச்சேரி வந்து பத்தே மாதங்களில் அடுத்த ஷிப்டிங். பரணில் இருந்த எந்த பெட்டியையும் பிரிக்கவேயில்லை. அப்படியே அலாக்காகத் தூக்கி வைத்தாகிவிட்டது. நானும் ஒவ்வொரு வீடு மாறுகையில் வேண்டாமென நிறைய பொருட்களை விட்டுவிட்டு வருகிறேன். இருந்தும் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கை குறையமாட்டேன் என்கிறது. இன்னும் நான்கைந்து அட்டைப்பெட்டிகள் பாக்கி இருக்கின்றன ஒழுங்குப்படுத்த. அடுத்தது ஜூனியர் ஸ்கூல் வேலைகள்.
***************

பப்ளிக் செக்டாரும், ப்ரைவேட் செக்டாரும் அடிக்கும் கூத்துகள் தாங்கவில்லை. டெலிபோன் இணைப்பை மாற்ற BSNLல் 20 நாட்கள் ஆகுமென்றனர். ரகு பாதி ஆபிஸ் வேலைகளை வீட்டிலிருந்தே முடித்துவிட்டு சாவகாசமாக கிளம்புவார். நெட் கனெக்ஷ்ன் இல்லையெனில் கையுடைந்தாற்போலாகிவிடும் அவருக்கு. ஏர்டெல்லை அனுகினோம். ரெண்டே நாட்களில் 512kbps இணைப்பை தந்து விட்டனர். ஆஹா என தலைமேல் தூக்கி வைத்துப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே க(ஷ்)ஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு. உங்களுக்கு 1mbps ஸ்பீட் அலாகேட் பண்ணிருக்கோம். 20GB லிமிட். அதற்கு மேல் போனால் 256kbps ஸ்பீட் வருமென்றார்கள். யாரைக் கேட்டு ப்ளான் மாத்தினீங்க என எகிறியதும் செக் செய்துவிட்டு சொல்கிறேன் என வைத்துவிட்டார்கள். ப்ரொஷரில் இருப்பது ஒன்று இவர்கள் செய்வது
ஒன்று. ஹூம்.
***************

சில மாதங்களுக்கு முன் அப்பாவை வற்புறுத்தி சினிமா அழைத்துக்கொண்டு போனோம். முதன்முறையாக சென்னையில் படம் பார்க்கிறார். அப்பாவிற்கு சீட்டிங் ரொம்ப பிடித்திருந்தது. படத்தையும் கொஞ்சம் ரசித்தார். படம் முடிந்து வந்தபோது எல்லாத்தையும் ஓட்னாங்களே. முக்கியமா இரண்டு க்ளீஷேசை மறந்துட்டாங்க என்றார். என்ன என கேட்டதற்கு
1. ஹீரோ குங்குமம் வெச்சாலே ஹீரோயின் அவருடைய மனைவியாயிடறது.
2. சென்சார்ட்:)
************

சென்ற வருட நிதியாண்டில் தமிழக போக்குவரத்துக் கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக எங்கேயோ படித்தேன். ஏன் ஆவாது. சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்றேன். ட்ரைவர், கண்டக்டரோடு சேர்த்து மொத்தம் 12 பேர். எங்கள் வண்டியை ஓவர்டேக் செய்து போன மற்ற இரண்டு விரைவுப் பேருந்துகளில் நான்கைந்து தலைகள் கூட காணோம். கோடிக்கணக்கில் நஷ்டமாகம லாபம் கூரையப் பிச்சிகிட்டு கொட்டுமாக்கும்.
************

நாசிக் கந்தார்
பெல் சியோ
டெக்சாஸ் பியஸ்டா
தோசா காலிங்
வெஜ் நேஷன்

இவை அடுத்தடுத்து பதியப் போகும் உணவகங்கள்.

இதற்கிடையே ஒரு கதை(தொடர்) வேறு எழுதிவைத்திருக்கிறேன். அப்புறம் இன்னும் நிறைய மொக்கைகள் என பதிவு போட்டே டயர்டாகிவிடுவேன் போல:)
அடுத்த மாதத்தில் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் இந்த மொக்கை தளத்தை விடாம படிக்கும் (ஹுக்கும்) 152 பேருக்கும் நன்னி (ஒருவழியா 152 followers ஆச்சு. ஆனா இந்த ஹிட் கவுண்டர் 34,000த்திலேயே முக்குது. கமெண்டு கேக்கவே வேணாம். சரி விடு அதுக்காகவா எழுதறேன்:))).
*****************

தலைப்புக்கு ஏற்றதாய்...



எங்கம்மாவோட லீவ் முடிஞ்சு போச்சு:)

April 27, 2010

சூடு வைக்கலாமா??!!

கலா அக்காவும் (புதுகைத் தென்றல்), ரகுவும் விருது கொடுத்து கௌரவப்படுத்தியிருக்காங்க. நெம்ப நன்றி. வாங்கின விருத என் வலைப்பக்கத்தைப் (பதிவு போட்டா மட்டும்) பார்க்கும் சுமார் 180 வாசகர்களுக்கு (எவ்ளோ முட்டினாலும் இந்த ஹிட் கவுண்டர் இதுக்கு மேல போகமாட்டேங்குது. மீட்டர்க்கு சூடு வெக்கனும் போல) இந்த விருதினை கொடுக்கிறேன் (மேடயப் போட்டு என்னை வாழ வைக்கும் தெய்வங்களேன்னு பேசலாமா??!!).



*****************

அதிகாலை 4.30 அல்லது ஐந்து மணிக்கு நெடுஞ்சாலையில் டீக்கடையில் டீ வாங்கிக் குடித்திருக்கிறீர்களா? சென்ற ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை (எனக்கு மிட்நைட்) 3 மணிக்கு ஆரம்பித்த பயணம் இரவு 9.30 மணிவாக்கில் முடிவடைந்தது. 5 மணிக்கு சுடச்சுட டீ (என்னதான் முயற்சி பண்ணாலும் வீட்டில் போடும் டீ அந்தளவுக்கு நன்றாக இருப்பதில்லை). அதுவும் அந்த கண்ணாடி டம்ளரை பிடிக்கமுடியாதளவுக்கு சூடு. துப்பட்டாவில் சுற்றி வாங்கிக் குடித்தது தொண்டைக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. கூடவே ஒரு பிஸ்கட். டிவைன். விடியற்காலை மெல்லிய குளிர், விர்ரென பறக்கும் வண்டிகளின் சத்தம் என ரம்மியமாய் இருந்தது. ஏதாவது பாட்டுப் போடசொல்லி ட்ரைவரிடம் சொன்னதற்கு வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.
**************

அணைக்கரை பாலத்தில் பழுது காரணமாக போன வருடம் கனரக வாகனப் போக்குவரத்து மூடப்பட்டது. கார்கள் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஒரு வருஷமா என்னப் பண்றாங்களோ தெரியல. ஊரெல்லாம் சுத்திகிட்டு சென்னை வரவேண்டியதாய் இருக்கிறது. 11 மணிக்கு கும்பக்கோணத்தில் பேருத்து ஏறினோம். அசோக் பில்லரில் இறங்கியபோது மணி ஆறேமுக்கால். வெரி லாங் டே. ஜுனியர் நன்றாக தூங்கிக்கொண்டுவந்தார். எனக்குதான் தூக்கம் வரவில்லை. பராக்கு பார்த்துக்கொண்டே வந்தேன். பண்ரூட்டியில் நுழைந்ததுமே பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. மிதமான நல்லெண்ணைய் வாசனையோடு தேனில் பலாப்பழம் ஊறவைத்து சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. ஹும்ம்.
***************

சுறா பாடல்கள் ரொம்ப சுமார் என நிறைய பேர் சொல்லிக் கேட்டேன். சென்ற வாரம் நானே கேட்டேன். ஒன்னும் மோசமில்லையென்றாலும் எல்லா பாடல்களும் தளபதி புகழ் பாடுவது கொஞ்சம் கடியாக இருக்கிறது. என்னுடைய பேவரிட் 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி', 'நீ நடந்தால் அதிரடி'. இரண்டும். ஜூனியருக்கு வழக்கம்போல் டமுக்கு டக்கா தான். எல்லாப் பாட்டுக்கும் ஆடுகிறான். சன் டிவியின் பப்ளிசிட்டி பயங்கரமாய் ரீச் ஆகிறது. என் மாமியாருக்கு கூட ரிலீஸ் தேதி கரெக்டாய் தெரிகிறது. சுறா படம் வரட்டும் அப்புறமாய் நான் விஜய்க்கு எழுதிவைத்திருக்கும் கதையை பதிவிடுகிறேன்:))
********************

நண்பர்களோடு கெட் டு கெதர். சமீபத்தில் திருமணமான தோழி கொடுத்த ட்ரீட். அவருடைய கணவர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வார் என்றாள். உடனே நாங்கள் எல்லாரும் கோரசாய் அடித்த கமெண்ட் "இருந்து என்ன ப்ரோயஜனம்? கடவுள் அவரக் கைவிட்டதோட இல்லாம கடுமையான பனிஷ்மெண்டும் கொடுத்துட்டாரே". நல்லவேளை அவள் அப்போதுதான் பில் செட்டில் செய்தாள்:)
****************

April 13, 2010

மொழி ஆராய்ச்சி

வெயில் கொளுத்துகிறது. இப்பவே இப்படின்னா அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தால்?? நினைக்கவே பயம்மாய் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழக நகரங்களில் சென்னையில் தான் வெயில் கம்மியாம். 35 ரேஞ்சிலேயே இருக்கிறது. வெயில் நகரான வேலூரில் 42 டிகிரி செல்சியஸ். ஏழு வருடங்கள் வேலூர் மாவட்டவாசியாக இருந்திருக்கிறேன். எவ்வளவு வெயிலடித்தாலும் தாங்கமுடியும் அங்கே. கசகசவென்ற உணர்விருக்காது. சென்னையில் கடல் காரணமாக புழுங்கித் தள்ளுகிறது. இன்னும் நுங்கு சீசன் ஆரம்பிக்கவில்லை சென்னையில். வெயிட்டிங். பாலைக் காய்ச்சி ஆறவைத்து, இளநுங்கை போட்டு ப்ரிட்ஜில் வைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து முழுங்கினால் சொர்க்கமாய் இருக்கும்.
***************

அம்மா வீட்டு வாசலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாமென்ற யோசனையிலிருக்கிறோம்.
"அம்மாவைப் பார்க்க வருவபவர்கள் தயவுகூர்ந்து சாத்துக்குடி கொண்டுவரவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாறாக சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணைய், கிஃப்ட் கூப்பன்ஸ் அல்லது பணமாகவோ தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

அள்ள அள்ள குறையாத அக்ஷ்யப் பாத்திரம் போல் தீரவே மாட்டேன் என குவிந்து கொண்டே இருந்தது சாத்துக்குடி. காபி டீ நிறுத்திவிட்டு ஜூஸாய் குடித்து மாளவில்லை. வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர்களுக்கெல்லாம் ரிடர்ன் கிஃப்டாய் அரை டஜன் சாத்துக்குடி கொடுத்தனுப்பும் அளவுக்கு சேர்ந்திருந்தது. ஆண்டவா ஏதாவது பண்ணி சாத்துக்குடியின் விலைய ஏத்துப்பா:(
*************

வேலைக்காக வட இந்தியா சென்ற அண்ணாவை வடக்கு வாஞ்சையுடன் வரவேற்று வஞ்சனையில்லாமல் ஜாண்டிசை அள்ளி வழங்கியிருக்கிறது. நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, இதற்கு மேல் தாங்காது என சென்னை வந்து சேர்ந்தார். நேராக இங்கே வந்தவருக்கு நாலே நாலு இட்லியும் கொஞ்சம் தயிரும் சாப்பிட கொடுத்தேன். சாப்பிட்டு மறுநாள் வாலாஜா சென்று மருந்து சாப்பிட்டுவிட்டு ஊருக்கு சென்றார். அங்கிருந்து பெரியம்மா போன் பண்னி அண்ணாக்கு பரவாயில்லையாக இருப்பதாகவும், என் இட்லியை சாப்பிட்டதால் சரியாக போன உணர்விருப்பதாகவும் சொன்னார். இதை நான் பெருமை பீத்திக்கொண்டிருந்தபோது (இன்னொரு பெரியம்மா பையன்) மகன் சொன்னது 'ரொம்ப அலட்டிக்காதடி. உன் இட்லியப் பார்த்து ஜாண்டிசே அரண்டுடுச்சு'. ஹூம் பொறாமை பிடித்தவர்கள்":)
****************

அண்ணாவிடம் வடக்கு எப்படி என்ற விசாரணையில் எல்லாம் ஒகே மொழி தான் பிரச்சனை என்றார். அப்பா அவரிடம் "இதுல என்னடா பிரச்சனை. எல்லா வார்த்தைக்கும் முடிவுல ஹை போடு ஹிந்தியாகிடும்". அடுத்து ஒரு மொழி ஆராய்ச்சி மாநாடு ஆரம்பித்தது.

சிம்பிளா சொல்றேன் பாரு.

ராம் - இது ஹிந்தி.
ராமன் - இது தமிழ்.
ராமுடு/ராமுலு - இது தெலுங்கு.

எப்படிப்பா இப்படியெல்லாம்.

இருடி. இன்னும் பெட்டர் எக்சாம்பிள் பாரு

சார் - இது இங்லீஷ்
சார் - இது தமிழும் கூட??!!
சர்ஜி - இது ஹிந்தி/பஞ்சாபி
சாரு - இது தெலுங்கு.
சாரே - இது மலையாளம்.

அப்பா முடியலப்பா - இது நான்.

சித்தப்பா யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க. தமிழ் செம்மொழி மாநாட்டுல உங்களுக்கு ஒரு சிலை வைக்க ஏற்பாடு பண்றேன் - இது அண்ணா.
***************

அங்காடித் தெருவை பார்த்ததால் ஏற்பட்ட சோகத்தை விரட்ட சிப்பு படமொன்று பார்க்கலாமென முடிவு செய்தோம். கைவசம் இருந்த டிவிடிகளை அலசி ஆராய்ந்ததில் யாருக்கும் சுமுகமான கருத்து ஏற்படாமல் போகவே 'லவ் ஆஜ் கல்' சிடியோடு நான், அவர், அண்ணா(க்கள்) அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் ஆளாளுக்கு எஸ்ஸாக முழு படத்தையும் பார்க்கலன்னா உம்மாச்சி கண்ண குத்திடுமென்பதால் நானும் அண்ணாவும் முழுப் படத்தையும் கஷ்டப்பட்டு முடித்தோம். பட விமர்சனம்? அது கிடக்கு கழுதை.

எதுக்குண்ணா சயீப்க்கு பத்மஸ்ரீ கொடுத்தாங்க.

தெரியலயேம்மா தெரியலயே - அண்ணா.

கரீனா கபூர கிட்ட நின்னு பார்க்கற தைரியத்துக்கா இருக்கும் - போகிற போக்கில் அப்பா.
****************

சக பதிவர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு ஊப்ஸ் சாரி சித்திரை முதல் நாள் வாழ்த்துகள். அப்படித்தான் சொல்லனுமாம். கலைஞர் டிவில கத்துக்கொடுத்தாங்க:)

March 18, 2010

கொன்னு பிச்சுவேன்

பெட்ரோல், டீசல் விலையேறிடுச்சு. சரி. நாலு வருஷத்துக்கு முந்தி விலையேத்தினாங்கன்னு சொல்லியே மாசாமாசம் ரேட்டு ஏத்துவாங்க நம் ஆட்டோகாரங்க. இப்போ கேக்கவே வேணாம். ஆட்டோ ஏர்றதுக்கு முன்னால காதுல கழுத்துல போட்றுக்கறதெயெல்லாம் வித்துட்டு காசு ஏற்பாடு பண்ணிக்கனும். இருக்கப்பட்டவங்க சொத்துப் பத்திரத்தையும் அடமானம் வைக்கலாம். இல்லாதப்பட்டவங்க தலைல துண்டப்போட்டுகிட்டு இன்ன ஊருக்கு மானசீகமா பாதயாத்திரை போறதா நினைச்சிக்கலாம். நடராஜா சர்வீஸ்.
********

5 கோடி ரூபாய் மதிப்புள்ள மாலை. 200 கோடி ரூபாய் செலவில் விழா. ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே. திருவிளையாடலில் நாகேஷ் சொல்வது போல் "அத்தனையும் ஆயிரம் ரூவா நோட்டு. சொக்கா சொக்கா. எனக்கில்ல. எனக்கில்லவே இல்லை"ன்னு பினாத்த வச்சிட்டாங்க மாயாவதி. மணி லாண்டரிங்க பத்தி ஐஐஎம்ல் வகுப்பெடுக்க மாயாவதி போகலாம். தமிழகத்திலிருந்து.. சரி வேணாம் விடுங்க. ஆட்டோ சார்ஜ் ஜாஸ்தியாகிடுச்சுல்ல. எதுக்கு என்னால அடுத்தவங்களுக்கு வீண் செலவு.
**********

அம்மா வீடு மாறியிருக்காங்க. பெரிய ஆச்சர்யமா எழுதிக் கொடுத்த மூணாவது நாளே BSNLலிருந்து லைன்மேன் வந்து கனெக்ஷ்ன் கொடுத்துட்டு போனார். பரவாயில்லயேன்னு ஆச்சர்யப்பட்டோம். சனிக்கிழமை கார்ப்ரேஷன் வேலைக்காக ரோட்டோரம் ஜேசிபி வச்சி தோண்டியபோது மண்ணோடு ஆப்டிகல் கேபிளையும் வாரிட்டாங்க. நல்ல நாள்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணாலே வரமாட்டாங்க. இதுல சனி ஞாயிறு எங்க வரப்போறாங்கன்னு திங்கள் கிழமை சொன்னோம். நோ ரெஸ்பான்ஸ். செவ்வாய் கிழமை லைன்மேனைப் பார்த்தபோது கேட்டதுக்கு நாளைக்கு (புதன்) தான் வரமுடியும். ரெண்டு நாள் யூனியன் மீட்டிங்கு எல்லோரும் போறோம். யூனியன் மீட்டிங்கா என நான் கேட்க. ஆமாங்க பொது மக்களுக்கு சிறப்பா எப்படி சேவை செய்றதுன்னு மீட்டிங்குன்னார். தேவைதான். போய்ட்டு வாங்க. வாழ்க யூனியன். வளர்க BSNL:)
************

BSNLன்ன உடனே ஞாபகம் வந்தது. அந்த நாலாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் மேட்டர் என்ன ஆச்சு? மீண்டும் தி.நா சொல்வது போல் நாலாயிரம் கோடி. சொக்கா. சொக்கா. எனக்கில்ல. எனக்கில்ல. எனக்கில்லவேயில்ல.
*************

பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"முப்பது வருஷத்துக்கு முன்னால வாங்கினேன் சார். வேண்டா வெறுப்பா தான். காசு வீணா வீட்ல இருந்தா திருட்டு பயம்ன்னு சொல்லி நிலத்துல கொட்டினேன் சார். இப்போ அண்ணாநகர் வீடு 1.5 கேக்கறாங்க. வில்லிவாக்கமும் அம்பத்தூரும் 50க்கு போவுது. நான் கோயேம்பேடு வீட்லயே தங்கிட்டேன் சார். மத்த மூணுலருந்து வர்ற வருமானம் போதுமா இருக்கு"

எனக்கு இருட்டிக் கொண்டு வந்தது. வெயிலாய் இருக்குமென சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
**************

சொல்லிவைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு வீட்டிலிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் விடாமல் கேட்கிறது. அதுவும் மிக அதிகமான சத்தம். தம்பி சொன்னான்.
"அந்த வீட்ல எப்படியும் பத்து நாயாவது இருக்கும்"
"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா.
************

கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு (யார்கிட்ட ரவுடி நானு).

கொஞ்ச நாளாக ஜூனியரை அத்தனை பேரையும் இப்படித்தான் மிரட்டுகிறார். உபயம் மாமா.

நம்ம ரியாக்ஷனாக அவர் எதிர்பார்ப்பது பயமாருக்கேடா. சொல்லாத பட்சத்தில் அதையும் அவரே - பம்மாக்கேடா.

February 15, 2010

பாராட்டு விழா - I'm Lovin it..

ஷங்கர் - எஹ்ஸான் - லாய் கூட்டணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. Karthik calling karthik படத்தில் Uff teri ada பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. படத்தையும் பார்க்கவேண்டும். இரண்டு காரணங்கள். ஒன்று ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. இரண்டாவது பஃர்ஹான் அக்தர் மற்றும் தீபிகா படுகோன். ரெண்டு பேரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். பார்க்கணும். பார்ப்போம்:)
*********

நாணயம் படத்தில் எஸ்.பி.பி சித்ரா காம்பினேஷனில் "நான் போகிறேன் மேலே" நிஜமாகவே மேலே போக வைக்கிறது. சித்ரா மேடம் மறுபடியும் கலக்கியிருக்கிறார்கள். அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் ஆரோமலே பாடல் சூப்பர். வித்தியாசமான பீலிங் தருகிறது. உயிரேவில் வரும் நெஞ்சினிலே பாட்டில் வரும் மலையாள வரிகள் பிடித்திருந்தது போலவே இதுவும். கௌதம் வி ஆர் வெயிட்டிங் பாஃர் அ விசுவல் ட்ரீட். சொதப்பிடாதீங்க சாமி.
***********

தம்பியிடம் பேசலாமென போன் போட்டேன். தியேட்டரில் இருக்கிறேன் என துண்டித்தான்.
மறுநாள் அவனே பேசினான். வழக்கமான குசலம் விசாரித்தப்பின்

என்ன படம்டா?

அசல்

எப்படி இருக்கு?

ம்ம்ம். ஒரு தடவை கஷ்டப்பட்டு பார்க்கலாம்.

கிர்ர்ர். எப்படியெல்லாம் ரிவ்யூ கொடுக்கிறாங்க
**********

டி.நகரில் பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்தில் இருக்கும் இரண்டு மூன்று கடைகளை இடித்துவிட்டு அந்த இடத்தை நடிகர் சங்கத்திற்கு எழுதித்தரலாமென்றிருக்கிறேன். எனக்கும் பாராட்டு விழா எடுப்பார்களா? நன்றி சொல்லி விளம்பரம் கொடுத்தோமா, சால்வையப் போத்துனோமான்னு இல்லாமா. ஹுக்கும். விரைவில் முற்றும் துறந்த??!! ஸ்ரீஸ்ரீ ரகசியானந்தமையின் பரவச நடனம் கலைஞர் டிவியிலோ, இசையருவியிலோ காணக் கிடைக்கும் பாக்கியம் கிட்டும். ஜெய் ரகசியானந்தமையி. இந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டே வள்ளுவர் கோட்டம் பக்கம் போனால் ஒரே காக்கி மயம். என்னவென்று விசாரித்தால் ஜெகத்ரட்சகன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிச்சதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறாராம். ஆணியே புடுங்க வேணாம் போ!!!
*************

இடத்தைப் பத்தி பேசியதும் போன மாதம் நடந்தது நினைவுக்கு வருகிறது. வேளச்சேரி சதர்லேண்ட் எதிரே இருக்கும் செல்போன் டவரில் ஒரு ஆள் ஏறிக்கொண்டு குதிக்கப் போவதாக அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்தார். தீ அணைப்பு வண்டி, போலீஸ் என ஒரே அல்லோல்கலப்பட்டது ஏற்கனவே அப்படி இருக்கும் சாலை. மாலை ஆட்டோக்காரரிடம் ஆளை இறக்கிட்டாங்களான்னு கேட்டேன். இறக்கிட்டாங்க. நீலாங்கரையாம். ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய நிலத்தை ஆளுங்கட்சி ஆளுங்க புடுங்கிக்கிட்டாங்களாம் என்றார். பாவமாய் இருந்தது. ஆங். மேலே இருக்கிற பிட்டுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ:)
**************

ஓப்பனிங் ஷார்ட்லி என்ற அறிவிப்போடு வீட்டுப் பக்கத்தில் மெக்டொனால்ட்ச் மராமத்து வேலைகள் நடக்குது. டில்லிக்கு காலேஜ் டூர் போயிருந்தபோது அங்கிருந்து மெக்டொனால்ட்ஸில் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு அஞ்சு ரூவா குடுத்தபோது எரிக்கிற மாதிரி பார்த்தது இன்னும் ஞாபகமிருக்கு. மெக்டோனால்ட்சின் தீவிர ரசிகையில்லை என்றாலும் அவர்களின் மெக் ஆலு டிக்கி ரொம்ப பிடிக்கும். Its raining food in Velachery. வேளச்சேரியைப் பிடிக்க ஆரம்பித்திருப்பதற்கு ஒரே காரணம் எண்ணிலடங்கா விதவிதமான உணவகங்கள். எத்தனை மாதம் இங்கேன்னு பார்ப்போம்.