August 30, 2010

நான் மகான் அல்ல

தகப்பனை கொடூரமாக கொன்றவர்களை மன்னிக்க முடியாமல் கொடூரமாக (அவர்கள் கொன்றதை விட ஒரு படி மேல்) கொல்லும் பையன். இந்த ஒரு வரிக் கதைக்கு 2.30 மணி நேர விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சுசீந்தரன். வேலைக்காக காத்திருக்கும் கார்த்திக் (இவர் கார்த்திக்கா இல்லை கார்த்தியா??) தன் தோழியின் கல்யாணத்தில் காஜல் அகர்வாலை காண்கிறார். காதல் கொள்கிறார். காஜலுக்கும் அவ்வண்ணமே லவ்வு பொங்குகிறது (எத்தனை நாளைக்குத்தான் இப்படி பார்த்தவுடனே லவ்வடிக்க ஆரம்பிச்சிடுவாங்களோ என்றதுக்கு “கேப்டன், டி.ஆரேயே ஈரோயினிங்க வளைச்சு வளைச்சு காதலிக்கறாங்க. கார்த்திக்கு என்ன குறைச்சல்” என்ற பதில் வந்தது). வில்லனாக முயலும் காஜலின் அப்பா, அவருக்காக கார்த்திக் பார்க்கும் தற்காலிக வேலை, தாதாவுடன் ஏற்படும் நெருக்கம் என முதல் பாதி கலகலப்பு. இதற்கிடையில் நான்கு இளைஞர்கள் மூலம் கார்த்தியின் அப்பாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஒருமுறை உயிர்பிழைப்பவர் அடுத்த முறை பக்கா ப்ளானிங்கினால் இறந்துவிடுகிறார். அப்பாவின் சாவிற்கு பழிவாங்கும் கார்த்திக் என இரண்டாம் பாதி விறுவிறுப்பு.

படத்தில் ஹீரோவின் இண்ட்ரோக்கு முன்னரே வில்லன்களாக வரும் அந்தப் பையன்களின் இண்ட்ரோ. ஒவ்வொருத்தரும் பாடி லேங்வேஜில் மிரட்டுகிறார்கள். அந்தப் பரட்டைத் தலையோடு கருப்பாக வரும் ஆளும், பெரிய கண்களுடன் வரும் எல்லாவற்றிற்கும் உடனே கோவப்படும் ஆளும் அருமையான தேர்வு. அதிலும் பின்னவர் குரூரப் புன்னகை புரியும்போது அவ்வளவு வில்லத்தனம். ஒரு மிடில் க்ளாஸ், ஈசி கோயிங், டோண்ட் கேர் ஆட்டிடியூட் கேரக்டருக்கு கார்த்தி கனக்கச்சிதமாய் பொருந்துகிறார். ஹேப்பி நியூர் ஆரம்பித்து, காஜலை காதல் வலையில் விழவைப்பது, நண்பர்களை கலாய்ப்பது, கலெக்‌ஷன் வேலையில் ரவுசு பண்ணுவது, அப்பாவை நினைத்து உருகுவது என நன்றாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் முதல் பாதி அழகாக வந்து போவதோடு சரி. அவரின் பாதி வேலையை கண்களும் உதடுகளுமே பார்த்துக்கொள்கின்றன. அப்பாவாக ஜெயப்பிரகாஷ். கொஞ்ச நேரமே வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் (வில்லன் மற்றும் கேரக்டர் ரோலிற்கு இப்போதைக்கு இவர்தான் பெஸ்ட் சாய்ஸ்). கார்த்தியின் நண்பராக வரும் வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா தின்பவர் நன்றாக நடித்திருக்கிறார்.

முதல் பாதியின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் காமெடியும், வில்லன்களின் கேரக்டரை க்ளியராக சொல்வதும் தான். அதிலும் முதல் பாதி முழுவதும் நகைச்சுவை துருத்திக் கொண்டு தெரியாமல் கதையோடு பயணிப்பது இயல்பாய் இருக்கிறது. கல்யாண வீட்டு மாடியில் விக்ரமன் பட வசனத்தைப் பேசி மியூசிக்கிற்கு இடம் விடுவது கலக்கல். அதே போல் அபிராமி மெகா மால் காட்சிகள், போனில் பேசியே மானேஜரையும் அவர் மனைவியையும் டைவர்ஸ் வரை கொண்டு விடுவது, குடும்பஸ்தன்களப் பார்த்தாலே மரியாதைப் பொங்குது என நிறைய ஹார்ட்டி லாஃப்ஸ்.

பிற்பாதியில் ஆக்ரோஷமும் வன்முறையும் அதிகம். ஒரு ப்ரொபெஷனல் ரவுடியையே ஈசியாக வெட்டிச் சாய்க்கும் நால்வர் அணியை கார்த்தி ஒற்றை ஆளாக ஆயுதமேதுமில்லாமல் எதிர்கொள்வது வந்துட்டான்யா வீராதி வீரன் என்றே எண்ணத் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் பிண்ணனி இசை. அதுவும் இடைவேளைக்குப் பிறகு bgm நல்ல டெம்போ ஏற்றுகிறது. யுவன் கலக்கியிருக்கிறார். பாடல்கள் பெரிதாக சொல்லும்படி இல்லை. இறகைப் போல பாடல் நன்றாக இருக்கிறது. தெய்வம் இல்லை பாடலில் மதுபாலகிருஷ்ணனின் குரல் மனதைக் கிழிக்கிறது. தொய்வில்லாத திரைக்கதை, பொருத்தமான பாத்திரத் தேர்வு என இயக்குனர் கமர்ஷியல் பெஸ்ட் கொடுத்திருக்கிறார்.

நான் மகான் இல்லை - மோசமில்லை.

August 27, 2010

மூன்றெழுத்து பயம்...

பதிவைத் தாண்டி பஸ்ஸிலும் கவிஞர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இவ்வேளையில் கவிதையைப் புரிந்துக்கொள்வதும், எண்ணங்களை கவிதையாய் வடிப்பதும் எப்படி என தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது (ஆமாம். எத்தனை நாள்தான் புரியற மாதிரியே சீன் போடறது). முதலில் கவிதை என்றால் என்ன என்று பார்ப்போம். கவிதை ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல (அப்படியா?). எழுதுவது எளிது (பார்றா). புரிந்துக்கொள்வது அதை விட எளிது (மறுபடியும் பார்றா). தினம் எவ்வளவோ விஷயங்களை பார்க்கிறோம். சில விஷயங்கள் நம்மை பாதிக்கின்றன (நீ எழுதுற பதிவு மாதிரின்னு யாராவது சொன்னீங்க பிச்சு பிச்சு). அதை வார்த்தைகளாய் விவரிக்கும்போது கவிதை பிறக்கிறது (டேட் ஆஃப் பர்த் நோட் பண்ணிக்கனும்).

கவிதை எழுதுவதற்கும் சரி. புரிந்துக்கொள்ளவும் சரி. முக்கியமாய் தேவைப்படும் ஒன்று. எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு. இப்பப் பாருங்க. நீங்க ஒரு கவிதை படிக்கறீங்க (படிச்சு முடிச்சதும் பாயப் பிராண்டாம இருந்தீங்கன்னா நீங்க பெரிய கவுஞ்சரா வருவீங்க). அந்த கவிதைக்கு இதுதான் அர்த்தம்ன்னு பின்னூட்டம் போடறீங்க. ஆனா அத எழுதினவரு “அடேய் வெண்ண. உண்மையான அர்த்தம் வேறுடா”ன்னு சொன்னார்னா என்ன பண்ணுவீங்க? அசட்டுத்தனமா அப்படியான்னு கேக்கப்பிடாது. இந்தக் கவிதையை இப்படியும் பொருள்படுத்தலாம்ன்னு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அடிச்சு விடனும். இன்னும் கொஞ்சம் துணிஞ்சு இந்த அர்த்தம்தான் சரின்னு ஸ்ட்ராங்கா அடிக்கனும். ஒரு படி மேலே போய் என்னய்யா விளக்குறே? என்ன எழுதறோம்னே தெரியாமல் எழுதலன்னு யார் அழுதான்னு கேக்கனும். இப்ப எழுதின பார்ட்டி கொஞ்சம் பம்மும். நிஜமாகவே இவனுக்கு புத்தி இருக்கோன்னு நினைக்கும். அப்படி ஒரு நினைப்பை உண்டு பண்றதே பெரும் வெற்றிதான். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி கவிதை விமர்சகர்ன்னு பெரிய பேர் வாங்கிடலாம்.

இப்ப சாம்பிளுக்கு வேப்பம்பூ உதிரும் வாசல்கள் அப்படிங்கற கவிதையை எடுத்துக்கிட்டு பிரிச்சு மேயலாம்.

யாருமற்ற நிலையங்களில்
எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன
இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்
முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்
கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன
கனவுகளில் எப்போது(ம்) வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்

இது ஒரு கவிதை (சாமி சத்தியமா நான் எழுதல). இப்ப நம்ம லைன் பை லைன் விளக்கம் பார்க்கலாமா (கோணார் நோட்ஸ் கம்பெனில வேலை காலியா இருக்கா?).
\\எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன\\
கவுஞ்சருக்கு (இந்தக் கவிதையின் நாயகன்/யகி) பங்குசுவாலிட்டி கிடையாது. ஏன்? ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். தூங்குமூஞ்சி, சோம்பேறி எனப் பல. ஒரு சிலவற்றை நீங்கள் யூகித்தாலும் போதுமானது.

\\இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்\\

சைக்கிளில் கூட ஃபுட்போர்ட் அடிக்க முடியும்ங்கற மிகப்பெரிய கண்டுபிடிப்பை ரொம்ப சாதாரணமா சொல்றாங்க கவுஞ்சர். இந்த மாதிரி கண்டுபிடிப்புகளைக் கண்டுக்க தவற வேண்டாம்.

\\முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்\\

உயரம் கம்மியாய் வைத்து கட்டப்படும் சுவர்களால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு ஆபத்துதான் என்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறார் கவுஞ்சர்.

\\கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன\\

புத்தகத்தைப் பார்த்தாலே கிழித்து பார்சல் கட்ட நினைக்கும் மளிகைக் கடை ஆளை கண் முன் நிறுத்துகிறார் கவுஞ்சர்.

\\கனவுகளில் எப்போது(ம்) வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்\\

ஆடியில் மட்டுமல்ல எப்போதும் ஏழைகளுக்கு கூழாவது கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையை வேப்பமரத்தை குறியீடாக்கி வெளிப்படுத்துகிறார்.

இந்தக் கவிதைக்கு வேறு அர்த்தங்களும் வரவேற்கப்படுகின்றன். இம்மாதிரி வரிகளை மட்டுமல்லாமல் வரிகளுக்கிடையேயும் படிக்க வேண்டும். சிறந்த விமர்சகர் ஆகிவிடலாம். அடுத்த பதிவில் அசத்தலாய் (முக்கியமாய் அடுத்தவருக்குப் புரியாத மாதிரி) கவிதை எழுதுவது எப்படி என பார்க்கலாம்.

August 24, 2010

க.மு Vs க.பி - ஒரு ஆய்வு

ஆணோ பெண்ணோ கல்யாணமானதிலிருந்து நிறைய அல்லது கொஞ்சமே நிறைய விஷயங்களில் விட்டுக்கொடுத்தல்/அட்ஜெஸ்ட்/வேறுவழியில்லாமல்/தலையெழுத்தே என பல விஷயங்களை கடக்கவேண்டியிருக்கிறது. இருவருக்குமே காமனான டயலாக். அடிக்கடி கேட்கும் டயலாக். ”கல்யாணத்துக்கு முன்னால நான் எப்படியிருந்தேன் தெரியுமா?” கொஞ்சம் மாற்றி எள்ளலோடு மற்றவர்கள் முன் கலாய்க்க ”எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்”.

இந்த நொந்தல்ஸ் நூடுல்ஸை பெண்கள் வாய்விட்டு சொல்லிவிடுகிறார்கள். ரங்கமணிகள் வழக்கம்போல் ஊமைக்கோட்டான்களாய் கமுக்கமாய் மனதிற்குள்ளே கறுவிக்கொண்டிருந்து சமயம் பார்த்து எடுத்துவிட்டு அப்செட் ஆக்குவார்கள். என்னோட சில க.மு க.பி கம்பேரிஷன்கள்.

# மணி பத்தாகப்போதுடி. இன்னுமா தூங்கறே - அம்மா
விடியற்காலைல எழுப்பாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். சூரியன் உச்சிக்குப் போறதுக்குள்ள நான் எழுந்தா உலகத்துக்கு ஆகாதுன்னு உடுமலைபேட்டை உலகநாதன் சொன்னது மறந்திருச்சா??

@ மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்
தூக்கம் வரலம்மா. சீக்கிரம் எழுந்து பழக்கமாயிடுச்சு (டமார். எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறும் சத்தம். என் மனசாட்சியாகவும் இருக்கலாம்).
*******************

# குளிச்சிட்டு தான் சாப்பிடேண்டி - அம்மா
சட்னில இன்னும் கொஞ்சம் உப்பு போடுமா.

@ சூடா இருக்கும்போதே நீயும் சாப்பிடேன்மா - மாமியார்
ஒரே கசகசன்னு இருக்குமா. குளிச்சிட்டு சாப்பிடறேனே.
*********************

# வெள்ளிக்கிழமையதுவுமா நகம் வெட்டிக்கிறியேடி. கிளம்பு கோயிலுக்கு போய்ட்டு வரலாம் - அம்மா
நீ போய்ட்டு வா. பிள்ளையார் கோவிலுக்கு போம்மா. சுண்டல் கொடுப்பாங்க.

@ மணி ஆறாகப் போகுது விளக்கேத்திடவாம்மா
*********************

# இந்தக் கனகாம்பரத்த வச்சிக்கோயேண்டி - அம்மா
நானென்ன கரகாட்டமா ஆடப்போறேன். போய்டு.

@ கதம்பம் வச்சுக்கோம்மா - மாமியார்
(மனதுக்குள்) பச்சை மஞ்ச சிவப்பு தமிழன் நான்:(
******************

#ஏண்டி சுரேஷ் கல்யாணத்துக்கு பட்டுப் புடவை கட்டிக்கோயேண்டி.
ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?

என் நாத்தனாரின் மாமியாரின் தங்கை பேரன் காதுகுத்துக்கு அகல பார்டர் வச்ச பட்டுப் புடவையை ஆறுமணிநேரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
******************

#சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவறியேடி. ஆம்பிள புள்ளமாதிரி வளத்திருக்கீங்க பொண்ண - அத்தை.

@என்னம்மா சாப்பிட்ட தட்ட கொண்டுபோய் சிங்க்ல போடற. எச்சத் தட்ட கழுவி கவுக்கனும். தெரியுதா??

டிஸ்கி : இந்தப் பதிவை ஹஸ்பெண்டாலஜி ப்ரொபசர் டாக்டர் புதுகை தென்றலக்காவுக்கும், எப்படியெல்லாம் சந்தேகப்படனும்னு பதிவு போட்டு சொல்லிக் கொடுக்கும் விதூஷக்காவுக்கும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.

மு. டிஸ்கி : எதுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும், ஏன் ஆக்டிங் விடனும்ன்னு அதிபுத்திசாலித்தனமான கேள்விகளை கேக்கற கல்யாணமானவங்களுக்கு பூரிக்கட்டை/அதிகம் சேதம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தால் சரி மொத்து வாங்குவீர்கள் என்றும், கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்.

August 18, 2010

அரியர்’ஸ் பையன்

லைப்ரரிக்கு போனியா?

ஆமாண்ணே.

மினி ஜெராக்ஸ் எடுத்தாதான் பாஸ் பண்ண முடியும்ன்னு சொன்னியே. இப்ப இந்தக் காலேஜோட நெலம முழுசா புரிஞ்சுதா.

நல்லாவே புரிஞ்சுது. நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா இந்தக் காலேஜ விட்டே போய்டலாம்னு இருக்கேன்.

காலேஜ விட்டே போறீயா? பெயிலான பேப்பர அரியர் எழுதி க்ளியர் பண்ணாம போறேங்கறது எந்த ஊர் நியாயம்?

அதுக்காக திரும்பவும் அதே சப்ஜெக்ட்ட படிக்கறது ரிவிஷன்ங்கற பேர்ல நடக்கற மொக்கத்தனம்.

மொக்கப் போடுற கூட்டத்துல இந்த சீனியரும் ஒருத்தங்கறத மறந்துராத.

அப்படிப் பார்த்தா நானும் அந்த மொக்க கூட்டத்துல ஒருத்தன் தான் அண்ணே. இரண்டு வருஷமா அரியர் க்ளியர் பண்ண முடியாம தவிக்கிற இந்தப் பசங்களுக்கு மத்தில பாஸ் பண்ண நான் கத்துக்கிட்ட அட்வான்ஸ்ட் டெக்னிக்கெல்லாம் வீணாப் போய்டுமோன்னும் பயமாருக்கு அண்ணே.

இரண்டு வருஷமா அரியர் க்ளியர் பண்ணாம இருக்காங்கறத ஒத்துக்கறேன். இருவது வருஷமா, புக்கையும், புக்கிலருந்து கிழிச்ச பக்கத்தையும் வச்சிகிட்டு பாஸ் பண்ணிகிட்டிருந்த பயக. ஜூனியர் பசங்க பாஸ் பண்ண கஷ்டப்பட்டப்போ ஓடிப்போய் மொத ஆளா பிட் பாஸ் பண்ண பயக நம்ம பயக தான். திடீர்ன்னு அவன பிட்டத் தூக்கிப் போட்டுட்டு மினி ஜெராக்ஸ்
யூஸ் பண்ணுடான்னா எப்படி பண்ணுவான்? நீ மினி ஜெராக்ஸ் யூஸ் பண்ண பயதான? நீ சொல்லிக்கொடு. எப்படி உபயோக்கிக்கனும்னு சொல்லிக்கொடு. ஆனா அவன் மெதுவாத்தான் பாஸ் பண்ணுவான். மெதுவாத்தான் பாஸ் பண்ணுவான்.

மெதுவான்னா எம்புட்டு மெதுவாண்ணே? அதுக்குள்ள நான் பாஸாயிடுவேன் போலருக்கே.

போ. பாஸ் பண்ணிட்டு போ. நான் தடுக்க முடியுமா? எல்லாப் பய புள்ளையும் ஒரு நாளைக்கு பாஸாக வேண்டியதுதான். மார்க்கெடுக்கறது முக்கியந்தான். இல்லன்னும் சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பேப்பர காமிச்சு பாஸ் பண்றல்ல. அதான் நீ மார்க் வாங்கினதுக்கே அழகு. எக்ஸாம் ஹால் உட்கார்ந்தவுடனே பாஸ் பண்ணிட முடியுமோ? இன்னிக்கு நீ பிட் அடிப்ப. நாளைக்கு உம்மவன் அடிப்பான். அப்புறம் அவன் மவன் அடிப்பான். அதெல்லாம் பார்க்கிறதுக்கு நான் இருக்கமாட்டேன். ஆனா பிட் நான் எழுதினது. இதெல்லாம் எனக்கு பெருமையா? பிட் அடிக்கறது கடமை.

ஆனா இந்த மரமண்டைங்களுக்கு பிட்டத் தவிர எது கொடுத்தாலும் புரியாதுண்ணே. என்ன விட்றுங்க நான் போறேன்.

பிகரையும், வேலையையும் கரெக்ட் பண்ணிட்டு சீனியர எதுத்துப் பேசற நேரமில்ல.

அப்படில்லங்கண்ணே.

வேறெப்படி? வேறெப்படின்னு கேக்குறேன். ஒரே டிபார்ட்மெண்ட் ஜுனியர்ன்னு ராகிங் பண்ணாம விட்டேன்ல. இது வரைக்கும் ஒரு தடவ ராகிங் பண்ணிருப்பேனா? நான் என் ஜூனியருக்கு பிட் போட்டேன். நீ போட்டியா? நீ அரியர்ஸ் க்ளியர் பண்ண கொஸ்டின் பேப்பர்லாம் லவட்டிட்டு வந்து கொடுத்தானுங்களே? அந்த ஜூனியர் பசங்களுக்கு என்ன பண்ண நீ? ஏதாவது பண்ணு. அப்புறம் காலேஜ விட்டுப் போ. CTSல சேரு. TCSல சேரு. அந்த HRயே கல்யாணம் பண்ணிக்கோ. என்ன இப்ப?

பிட் போட காலேஜ்ல இருக்கனும்னு அவசியமில்லண்ணே. வெளில இருந்து வந்தும் போடலாம். நான் போறேண்ணே.

போய்ட்டு வர்றேன்னு சொல்லு. எங்க அந்த ப்ளேஸ்மெண்ட் இன்சார்ஜ்? தம்பி கேம்பஸ்ல ப்ளேசாயி வேலைக்குப் போகப்போது. சீக்கிரம் ப்ளேஸ்மெண்ட் ஆர்டர கொடு. அடுத்த செமஸ்டர் வரைக்கும் இருக்கக் கூடாதா? நீங்க நாலஞ்சு கம்பெனி மாறிட்டு வர்றதுக்குள்ள நான் பாஸாகி போய்ட்டா என்ன பண்ணுவீக?

அண்ணே நான் போய் கம்பெனில ஜாய்ன் பண்ணி கொஞ்ச நாள்ல உங்களையும் ரெக்ரூட் பண்ணிக்கிறேண்ணே.

என்னையா? ஊஹூம். நான் இங்கயே இருந்து அரியர் மேல அரியர் வைப்பனே தவிர வேலைல சேர மாட்டேன். என்னை வேலைக்கு மட்டும் எடுத்திராதடா. புரியுதா?

அண்ணே. நான் கண்டிப்பா இந்தக் காலேஜ் பசங்கள ரெக்ரூட் பண்ணுவேண்ணே. நம்புங்க.

உன்னையத்தானே நம்பனும். உன்னையவிட்டா ஜஸ்ட் பாஸ் பண்ணவன் வேற யாரிருக்கா இந்தக் காலேஜ்ல? போ போ. லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் போகாம லைப்ரரிக்குப் போ.

ஹி ஹி சும்மானா சிரிக்கறதுக்கு எழுதினது. இந்த வீடியோவ ம்யூட் பண்ணிட்டு மேல இருக்கறதப் படிச்சி பாருங்க:))

August 16, 2010

காதலின் கடைசி குறிப்புகள்

விடாது பெய்து கொண்டிருக்கிறது மழை. விடாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் நானும். ஞாபகங்களை கிளறிச் செல்வதில் மழையின் பங்கு அபாரமானது. அதுவும் உன் நினைவுகளை. எப்போதோ எடுத்த புகைப்படங்களை புரட்டிப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு ஒப்பானது உன்னை நினைத்துப் பார்ப்பது. உன்னை என்று சொல்வதை விட நம்மை என சொல்வது சரியாக இருக்கும். சேர்ந்திருந்த நிமிடங்கள் விட்டுச் சென்ற இன்பங்கள் ஆயுசுக்கும் போதுமானது.

மாலைப்பொழுதுகள் எப்போதுமே ரம்மியமானவை. மறையும் சூரியனின் செங்கதிர்கள் பட்டு தகரமும் தங்கமாய் ஜொலிக்கும். அதுவும் மழை பெய்தோய்ந்த மாலையில் சூரியன் சம்பிரதாயமாய் வந்து செல்லும்போது சுற்றிலும் இருக்கும் அத்தனையும் பேரழகாகத் தெரியும். அப்படி ஒரு அழகிய மாலையில் தான் உன்னை சந்தித்தேன். அந்த சந்திப்பினூடாக நீ என்னுள் விருட்சமாய் வளர்ந்து கிளை பரப்புவாய் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. சென்ற மழைக்காலத்தில் நாம் நெருங்கி வந்தோம். உனக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். எனக்கு மழையில் நனையும் உன்னை பார்க்க பிடிக்கும். கைகளை கட்டிக்கொண்டு தலைதூக்கி கண் மூடி நீ மழையில் நனையும்போது குழந்தையாக தெரிவாய். உன் மீதிறங்கும் மழைத்துளிகளை எண்ண முயன்று தோற்றேன். நான் உன் மீது கொண்டுள்ள காதலை விட அதிகமாக இருக்கிறது என நிச்சமாய் நம்பினேன். நம்புகிறேன். சொட்டச் சொட்ட நனைந்தபின் சூடாக முத்தம் தருவாய். உன் கைகளுக்குள் இருக்கும்போது உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடமிதுதான் எனத் தோன்றியது. மழைத்துளி உன் மீது இறங்கியதை விட வேகமாய் நீ என்னுள் பரவினாய். என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்தாய். என்னுள் நீயே உதிரமாய் ஓடுகிறாய். இதுவரை நான் கண்டிராத, என் மீது காட்டப்படாத அன்பை உன்னிடத்தில் கண்டேன். மழைக்கு கரையும் மண் போல நான் முழுவதும் கரைந்தேன். மழையைப் பார்த்துக்கொண்டே உன்னோடு அருந்தும் தேநீர், உன் மடியில் படுத்தபடி படிக்கும் புத்தகம், உன் கைகோர்த்து நடந்த கடற்கரை என உலகத்தில் உள்ள அத்தனையும் ஏதாவது ஒரு விதத்தில் உன்னை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

வெட்கப்பட வைத்தாய். சிரிக்க வைத்தாய். அதை விட அதிகமாய் அழ வைக்கிறாய். அழகான காதலிற்கு ஆயுசு கம்மி போலும். காதலில் விட்டுக்கொடுத்தல் இருக்கவேண்டுமென்றாய். ஆனால் அது நான் மட்டுமே செய்ய வேண்டுமென நீ எதிர்பார்த்தது ஏன் எனப் புரியவில்லை. இருந்தும் கொடுத்தேன். என்னை முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன். உனக்குப் பிடிக்காதவற்றை செய்யாமலிருந்தேன். நட்புகளை ஒதுக்கினேன். ப்ரியங்களைப் புறந்தள்ளினேன். பார்வை இழந்தேன். செவிடானேன். வார்த்தைகளை மௌனித்தேன். உனக்கானவளாக மாறினேன். காலடியிலே கிடந்தேன்.

நீ திருப்தியுற மறுக்கிறாய். இன்னும் இன்னும் என்கிறாய். என் சின்ன சின்ன சந்தோஷங்களையும் மறுக்கிறாய். என்னைத் தெரியாதா உனக்கு? பிறர் என்ன சொன்னால் என்ன எனக் கேட்டால் ஆத்திரமடைகிறாய். நான் உன்மேல் கொண்டுள்ள எல்லையில்லாக் காதல் ஏன் உனக்குப் புரியவில்லை. நீ என் மீது கொண்டிருப்பது பொசஸிவ் என்கிறாய். உன் பொசசிவ்னெஸ்ஸே என்னையும் நம் காதலையும் மரிக்க வைக்குமென்றேன். நான் பயந்தது நடந்தேவிட்டது. உப்புப் பெறாத விஷயத்திற்காக நம் காதலை கொன்றுவிட்டாய். உன்னை மறக்க முடியாமல் நானும் விரைவில் மரித்துவிடுவேன் என நினைக்கிறேன். என்னால் இந்த மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தொண்டை கிழிய கத்தி, ஒலமிட்டு அழவேண்டும் போலிருக்கிறது. அதற்குக் கூட சுதந்திரமற்றவளாய் இருக்கிறேன். ஏன் என் வாழ்வில் வந்தாய். அழகான நாட்களை தந்தாய். ஏன் இவ்வளவு விரைவில் சென்றுவிட்டாய்? புயல் புரட்டிப்போட்ட ஓடமாய் கிடக்கிறேன். மீள்வேனா இல்லை வீழ்வேனா எனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. உன் நினைவுகள் என்னை விட்டு நொடியும் அகலாது. நீ என்னை எவ்வளவு வெறுத்தாலும். புரிந்துக்கொள்ள மறுத்தாலும். என்றாவது இந்தக் கடித்ததை நீ படிக்கக் கூடும். என்றாவது ஒரு நாள் நான் உன்மேல் கொண்டிருப்பது பவித்ரமான அன்பு எனத் தெரியவரும். அன்றைக்கு என்னைத் தொடர்பு கொள்ள முயல்வாய். நான் புண்ணியம் செய்திருப்பேனானால் உன் அன்பு மழையில் திளைக்கும் வாய்ப்பை இந்த வாழ்விலேயே பெறுவேன். இல்லையேல் உன்னைத் தாலாட்டும் தாயாய், தோள் தாங்கும் தோழியாய் ஏதோவொரு விதத்தில் உன்னை வந்தடையும் வரம் பெறுவேன் தவம் செய்து.

என் பொக்கிஷம் என நீ கொண்டாடிய ஈர விழிகள் இப்போதெல்லாம் எப்போதும் ஈரமாக...

கயல்..

August 11, 2010

ஈடன் - Eden

பொதுவாகவே சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ஒரு சின்ன குறை இருக்கும். வெரைட்டி என்பது சைவ உணவகங்களில் குறைவு. சரவணபவன், ஹாட் சிப்ஸ், சங்கீதா வரை எல்லாமே சுத்தி சுத்தி அதே இட்லி, தோசை, கொஞ்சம் நார்த் இண்டியன் தருகிறார்கள். இதில் ஹாட் சிப்ஸ் டேஸ்ட் ஆவரேஜ். சரவணபவன் குவாலிட்டி/சர்வீசில் கீழேயும் விலையில் விர்ர்ரென மேலயும் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு சுத்த சைவ உணவகம் காண்டினெண்டல் உணவுகளை கொஞ்சம் ரீசனபிள் விலையில் (நட்சித்திர உணவகங்களுடன் ஒப்பிடுகையில்), நல்ல சுவையில் தர முடியுமா? முடியும் என்கிறார்கள் ஈடனில் (Eden).

ரொம்பவே சிம்பிளான மெனு. எல்லாமே 3 பக்கங்களில் அடங்கிவிடுகிறது. ஆனால் வித்யாசமான அதே சமயம் நல்ல சுவையோடு இருப்பது ப்ளஸ் பாயிண்ட். Chef's choice. இதுதான் சூப் தலைப்பின் கீழ் பார்ப்பது. தினமும் இரண்டு வகை சூப்கள் இருக்கிறது. Thin soup & Creamy soup. நாங்கள் ஒரு நாள் tomato corrainder clear சூப்பும், மற்றொரு முறை cream of vegetable சூப்பும் குடித்தோம். இரண்டுமே நன்றாக இருந்தன. ஸ்டார்டர்ஸாக ஃப்ரெஞ் ப்ரைஸ், ஸ்பைசி க்ரன்ச்சீஸ் (ரஸ்க்கில் சில்லி பேஸ்ட் தடவி நன்றாக இருந்தது), கத்தி ரோல், ஃப்ரைட் காலிபிளவர், பனீர் டிக்கா ஆர்டர் செய்திருந்தோம். பனீர் டிக்கா தவிர மற்ற அனைத்தும் நன்றாக இருந்தது. பனீர் டிக்காவில் marination பத்தவில்லை. ஆனால் உடன் பரிமாறப்பட்ட சாஸ் சூப்பர்.மெயின் கோர்சில் காண்டினெண்டலில் நாங்கள் உண்டது Garden style vegetable bake, Spaghetti supreme மற்றும் Lasagne. இதில் ஸ்பகட்டி டாப். தக்காளி பேஸில் கரெக்டான பதத்தில் வேகவைக்கப்பட்ட ஸ்பகட்டியோடு சீஸ் பால்ஸ். ம்ம்ம்ம். Tangy and juicy. மற்ற இரண்டும் ஒகே ரகங்கள் (சீஸும் க்ரீமுன் நிறைய இருந்ததால் நியூட்ரல் டேஸ்ட்). நார்த் இண்டியன் சப்ஜிகளில் வெஜிடபிள் ஜால் ஃப்ரைஸ், பனீர் மேத்தி கோஃப்தா, கோபி ஷப்னமி மற்றும் காஷ்மீரி ஆலு அனைத்துமே நன்று. பத்து அல்லது பதினைந்து சப்ஜிகள் தான் இருக்கும். ஆனால் யூனிக் ஐட்டம்ஸ். மஷ்ரூம் புலவ் ஆவரேஜாக இருந்தது. புலவில் வேறொன்றும் பெரிசாய் செய்துவிட முடியாதென்பதாலும் இருக்கலாம். ரேஷ்மி பராத்தா மற்றும் நான் வகைகள் நன்றாக இருந்தன. சவுத் இண்டியனில் இட்லி, தோசை, ஊத்தப்பம் மட்டுமிருக்கிறது. நாங்கள் ட்ரை செய்யவில்லை.

பெரிய அட்ராக்‌ஷன் ஐஸ்க்ரீம்ஸ் தான். பேரெல்லாம் பெரிது பெரிதாய், வாக்கியம்போலிருக்கிறது. டேஸ்ட் அட்டகாசம். சாக்லேட் பேஸ் ஐஸ்க்ரீம்கள் தூள். Plain flavour ஐஸ்க்ரீம்களும் இருக்கின்றது. சீசனல் பழச்சாறுகளோடு லைம் சோடாவும் உண்டு.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Eden
உணவு - Continental/North Indian - Pure Veg
இடம் - அண்ணாநகர் K4 காவல் நிலையம் எதிரில், பெசண்ட் நகர் 2nd அவென்யூவில் (ஐசிஐசிஐ வங்கிக்கு அருகில் மாடியில்), நுங்கம்பாக்கம் ஹேரிசன்ஸ் ஹோட்டலில் (வள்ளுவர் கோட்டம் ரோடு)
டப்பு - ஆவரேஜை விட கொஞ்சம் அதிகம். ஆனால் உணவின் சுவை, அளவு, சர்வீஸ் எல்லாவற்றிர்கும் விலை ஒகேவாக தெரிகிறது. (A complete 4 course meal for 2 costs around 700).


Spoilers : வாரயிருதியில் ரொம்பக் கூட்டம். அரை மணிநேரம் வரை வெயிட் செய்ய வேண்டியிருக்கும். காரம் விரும்புவர்கள் stay away from continental.

பரிந்துரை - Heavenly food. கண்டிப்பாக சைவப் பிரியர்கள் செல்ல வேண்டிய இடம்.

பாணா காத்தாடி

இந்த வாரம் எதுவும் பார்க்கறமாதிரி தமிழ்படம் இல்ல. தில்லாலங்கடி நான் வரலை. பஞ்ச் டயலாக் பேச வராதுன்னு ஜெயம் ரவி சொல்ற ஒரு சீனேயே பார்க்க முடியல. பாணா காத்தாடியா? முரளி பையன் நடிச்சது. பிரசன்னாவும் உண்டு.

பிரசன்னாவா? அப்படின்னா புக் பண்ணிடு. போவோம்.
***********

3.15க்கு பிவிஆரில் படம். 2.30 மணிக்கு டெக்சாஸ் பியஸ்டாவில் சிம்மி சான்ஙாஸ் மற்றும் பில்லுக்கு வெயிட்டிங். சார் நாங்க படத்துக்குப் போகனும். கொஞ்சம் சீக்கிரம் ப்ளீஸ் என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாய் படம் ஆரம்பிக்கும் முன்னரே போயாச்சு.

குப்பத்தில் காத்தாடி விட்டுக்கொண்டு, அப்படியே (எப்பவாவது) பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருக்கும் அதர்வாவிற்கும், பேஷன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாவிற்கும் பென் ட்ரைவில் ஆரம்பிக்கும் சண்டை எப்படி காதலாகிறது, என்ன இடையூறுகள் வருகிறது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே பாணா காத்தாடி கதை.

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் போனதால் கொஞ்சம் பிடித்தது. குப்பத்து பசங்க, காத்தாடி என வித்யாசமான கதைக் களத்தை தேர்வு செய்த இயக்குனர், இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செதுக்கியிருந்தால் நிஜமாகவே பாணா காத்தாடியாகியிருக்கும். அதர்வா அறிமுக நாயகனுக்கே உண்டான அசட்டுச் சிரிப்பு, எப்படி ரியாக்ட் பண்ணனும்ங்கற தயக்கத்தோடு வலம் வருகிறார். குப்பத்துப் பையனுக்கான வாய்ஸ் பொருந்தவில்லை. ஆனால் நல்ல அட்டெம்ப்ட்.

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனை எட்டு முறை பார்த்ததாக சொன்னான் நண்பன். சமந்தாவுக்காக என்று வேறு எக்ஸ்ட்ரா பிட். படத்தைப் பார்த்தால் பார்க்கலாமென்று தான் தோணுகிறது. நடிப்பு??? சுமார் தான். இவர்தான் மாஸ்கோவில் காவிரி படத்தின் ஹீரோயினா? மௌனிகா பொளந்து கட்டுகிறார். ஒரு கட்டத்தில் இவர் எத்தனை தடவை “பொறம்போக்கு” சொல்கிறார் என எண்ணிச் சொன்னால் 100ரூபாய் காசு என்று பெட் கட்டி அவர் முடியலை என்றதால் 100 ரூபாய் ஜெயிச்சேன்:) நிறைவாக இருக்கும் கதாபாத்திரத்தில் இவருடையதும் ஒன்று. சன் டிவியில் ஒரு விஜே வருவார். மகேஷ்வரி. அவர் எதற்கு இந்தப் படத்தில்? நோ ஐடியா.

ரொம்பவும் எதிர்பார்த்து போனது பிரசன்னாவைதான். அசத்தலான பாடி லேங்குவேஜ். தண்ணியடித்துவிட்டு புலம்புவது, அதர்வாவின் மேல் பரிவுகாட்டும்போது, பின்னர் அவரைக் கொல்ல முடியாமல் தவிக்கும்போது அசத்துகிறார். கண்களே பாதி ரியாக்‌ஷனை காட்டிவிடுகின்றன. இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் கருணாஸ் & டைரக்டர் டி.பி.கஜேந்திரனுடைய காமெடி. சில இடங்களில் கருணாஸ் கடுப்படித்தாலும், மற்ற படங்களை விட இதில் கொஞ்சம் பெட்டராக பெர்ஃபார்ம் பண்ணிருக்கார். அதிலும் பென் ட்ரைவிற்காக சமந்தாவிடம் பேசும்போதும், அப்பா சட்டையில் பணம் மறைவதைப் பற்றி புலம்பும்போதும் நைஸ். அதேபோல் முரளி வரும் அந்த சீன்கள் தியேட்டரில் செம க்ளாப்ஸ்:) யுவன் இசையில் தாக்குதே பாடல் க்ளாஸ். மற்றவை சுமார் ரகத்திலும், மொக்கை ரகத்திலும் சேர்க்கலாம். சில பாடல்கள் மெதுவாய் போகும் படத்தை இன்னும் ஊர்ந்து போகச் செய்கிறது. பிண்ணனி இசை ஒகே.

தாதாயிஸம் பேசுவதா, காதல் கதையாய் எடுப்பதா என டைரக்டர் தடுமாறியிருக்கிறார். சும்மா ப்ரெண்ட்ஸ் தான் என்பவர், அரிசில பேரெழுதி கிப்ட் கொடுக்க நினைச்சான் என கேள்விப்பட்டவுடனேயே விழுந்து விழுந்து/துரத்தி துரத்திக் காதலிப்பது, ஸ்கூல் படிக்கும் பசங்க தீடிர்ன்னு குஜராத் போவது என அங்கங்கே ஞே டைப் சீன்கள்.

படம் முடிந்த பின் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஏன்னு தெரியலை. நான் தட்டவில்லை. ஜூனியர் மடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.

படம் முடிந்த பின்னர் நாங்களிருவரும் பேசிக்கொண்டது

படம் சொல்லும் நீதி?
படியில் பயணம் செய்யாதீர்கள்:)))))))

பாணா காத்தாடி - ஆங். ம்ம்ம்ம்ம். ப்ச்ச். பஞ்ச் எதுவும் தோணல. படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க.

August 9, 2010

பத்துக்கு பத்து...

எல்லாரும் ஆளாளுக்கு குத்துறாங்களே நாமலும் குத்துவோமான்னு யோசிச்சா குத்த வேண்டிய பட்டியல் அனுமார் வால் மாதிரி நீண்ண்ண்ண்ண்டுகிட்டே போகுது. சரி அப்படி இப்படி பைனலைஸ் பண்றதுக்குள்ள சீசன் தள்ளிப் போயிருச்சு. அதனால என்ன வெயில்ல பெய்யுற மழை மாதிரி இது இருந்துட்டுப் போகட்டுமேன்னு வலையேத்தியாச்சு.

ஹோட்டலில் சர்வரை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

1. கொலைப் பசியில் போய் உட்கார்ந்து புதுசா எதுவும் ட்ரை பண்ணவேண்டாம்னு நினைச்சு இட்லி ஆர்டர் பண்ணா காலியாயிடுச்சுன்னு சொல்லும்போது.

2. தொடர்ந்து நாம் கேட்கும் நாலைந்து ஐட்டங்களை இல்லையென சொல்லும்போது.

3. திங்க ஆரம்பிக்கும்போது கேட்ட தண்ணியை கை கழுவ கொண்டு வந்து வைக்கும்போது.

4. சிக்னேச்சர் டிஷ், எங்க ஹோட்டலின் ஸ்பெஷல் ஐட்டம் என வாயில் வைக்க வழங்காத வஸ்துவை நம்மிடம் தள்ளிவிடும்போது.

5. அ)130 ரூபாய் விலையுள்ள சைட் டிஷ்ஷை சொப்பில் கொண்டு வரும்போது.
ஆ) அதையும் கூட இருக்கற எல்லாருக்கும் சர்வ் பண்ணிட்டு நமக்கு க்ரேவி ரெண்டு சொட்டு வுடும்போது.

6. சூப் ரொம்ப ஆறிபோயிருக்கு என கம்ப்ளையெண்ட் செய்யும்போது இத இப்படி குடிச்சாதான் நல்லாருக்கும்ன்னு சமாளிக்கும்போது.

7. எப்பவுமே நல்லாயிருக்கும் சில ஐட்டங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கும் நேரத்தில் சொதப்பலாய் செய்யும்போது.

8. நாம் தமிழில் பேசினாலும் விடாது உடைந்த ஆங்கிலத்திலேயே பேசி சாவடிக்கும்போது.

9. மெனுவில் இருக்கும் புரியாத ஐட்டம் பெயரை பார்த்து இதென்ன என கேட்கும்போது “இதுகூடவா தெரியாது” என்கிற மாதிரி கேவலமாய் பார்க்கும்போது.

10. நொடியில் வரக்கூடிய இட்லியைக் கூட அரைமணி நேரம் கழித்து கொண்டு வந்துவிட்டு பில்லை மட்டும் அரை நொடியில் கொண்டுவரும்போது.

உறவினர்களுக்கு குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

1. கல்யாணமாகி வந்த மறுநாளே யார்யார் என்ன உறவுமுறைங்கறத மறக்காம சொல்லனும்னு எதிர்ப்பார்க்கும்போது.

2. கல்யாணமான அடுத்த மாசத்திலிருந்தே “விசேஷம் எதுவுமில்லையா?”ன்னு கேணத்தனமா கேக்கும்போது.

3. அப்படியே உண்டாகியிருக்கும்போது MD.DGO பட்டம் வாங்கின மாதிரி கரெக்டா டாக்டர் நம்மள என்னல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்காரோ அதெல்லாம் சாப்பிட்டே ஆகனும்னு கட்டாயப்படுத்தும்போது.

4. நான் புள்ள பெத்து வளர்க்கலயான்னு கேட்டு ஆறு மாசக் குழந்தை வாயில உருளைமசாலாவத் திணிச்சி அதுக்கு வயித்தால போகும்போது குழந்தைய சரியாவே வளர்க்கல நீன்னு சொல்லும்போது.

5. வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருப்பாங்க. சரி அதிதி தேவோ பவன்னு நாமளும் மெனக்கெட்டு பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருப்போம். சாப்பிட வந்துருங்கன்னு இன்வைட் பண்ணிருப்போம். என்னிக்கும் இல்லாத அதிசயமா தடபுடலா ரெடி பண்ணி, முதுகெலும்பு கலகலத்து போயிருக்கும். வர்றவங்க “அடடே. சொல்ல மறந்துட்டேன். நாங்க சாப்பிட்டோம்”ன்னு சொல்லும்போது.

6. கண்டிப்பா வெளியூர்லருந்து வர்றவங்க சின்ன பர்சேஸ் இருக்கு வாங்கன்னு தி.நகர் கூட்டிகிட்டு போய் ரங்கநாதன் தெருவுல சில்லறை பொறுக்கவுடும்போது. நம்ம முகூர்த்தப் புடவை செலக்ட் செய்யக்கூட அவ்வளவு நேரம் ஆகிருக்காது. கர்ச்சீப் வாங்க ஒரு மணி நேரம் ஆக்கும்போதும்.

7. யார் வீட்டு விசேஷத்துக்கோ மொட்டை வெயிலில் பட்டுப் புடவை கட்ட சொல்லி கொடுமைபடுத்தும்போது.

8. 200 ரூபாய்க்கு வாங்கின சுடிதார் கூட அவர்களுக்கு இவ்ளோ காஸ்ட்லியா எனத் தெரியும்போது.

9. ரெண்டாவது குழந்தை எப்ப பெத்துக்கப்போறன்னு நச்சரிக்கும்போது.

10. பெற்றோர் சைடோ, கணவர் சைடோ கரெக்டாய் நம் வெகேஷன் ப்ளான் பண்ணும் சமயத்தில் காது குத்து, கிடா வெட்டுன்னு வச்சு வரலன்னா ”எங்க வீட்டு விசேஷத்துக்கெல்லாம் வருவீங்களா?”ன்னு கடுப்படிக்கும்போது.

August 3, 2010

விண்வெளியில் விசயகாந்த்

டிஸ்கி 1 : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யார் மனது புண்படுமேயானால் கம்பேனி பொறுப்பேற்றுக்கொள்வதைப் பற்றி அப்பாலிக்கா யோசிக்கும்.

டிஸ்கி 2 : இந்தக் கதை நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது சென்ற சுற்றுலாவின்போது உருவாக்கப்பட்டது. RT & SCR ராயல்டி என ஏதும் கிடைச்சால் ஷேர் பண்ணிக்கலாம். தர்ம அடின்னா அட்ரஸ் குடுங்க. அனுப்பி வைக்கிறேன்.

டிஸ்கி 3 : கதை எழுதும்போது??!! ரகுவரன் உயிருடன் இருந்ததால் அவரைத் தான் வில்லனாக்கினோம். இப்போது அந்த கேரக்டருக்கு மாற்றாக யாரையும் யோசிக்க முடியவில்லை:(

மஞ்சள் காமாலை புரொடெக்ஷ்ன்ஸ்
பெருமையுடன் வழங்கும்


CABTUN IN & AS

விண்ணரசு
- Saviour of earth.

கேப்டனுக்கு அப்பா மகன் என இரட்டை வேடம். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜெனிபர் லோபஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேற்கொண்டு கதைக்கு போவோம்.

நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கான்பரன்ஸ் ஹாலில் குழுமியிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் பதற்றம். பிரச்சனை இதுதான். செவ்வாய் கிரகத்திலிருக்கும் இரு வேற்றுகிரகவாசிகளின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டபோது, அவர்கள் பூமியை அழிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. என்ன செய்வது என எல்லாரும் மண்டையப் பிச்சிக்கும்போது டீ சப்ளை பண்ற பையன் சொல்றான் "ஹ்ம்ம்ம்ம். இந்த உலகத்தை காப்பாத்த ஒருத்தரால தான் முடியும். அவர்தான் மண்ணரசு" (அப்பா கேப்டன்). எல்லாரும் ஏகமனதாக மண்ணரசுவை செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்து நாசா தலைம விஞ்ஞானி ரகுவரனை அணுகுகிறார்கள் (ரகுவரன் வில்லன் என சொல்லத் தேவையில்லை). ரகுவரனிடம் மண்ணரசுவின் வீர தீர பராக்கிரம செயல்களை சொல்லி சம்மதமும் வாங்குகிறார்கள்.

இப்போதான் அப்பா கேப்டனின் இண்ட்ரோ.

பேரரசுவின் பொன்னான வரிகளில், கண்ணம்மாபேட்டையில் ரிகார்டிங் செய்யும் ஸ்ரீகாந் தேவாவின் காதுக்கினிய இசையில் அட்டகாசமான இண்ட்ரோ சாங் வைக்கிறோம். மறக்காம கேப்டனின் கட்சி கொடியை க்ளோஸப்பில் காட்டுறோம். பாட்டு முடிஞ்சவுடனே பேமிலி செண்டிமெண்ட். மண்ணரசுக்கு ஏற்ற ஜோடியா அம்பிகா (முந்தைய படத்தில் இவங்க ஜோடிப் பொருத்தம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது). இவர்களின் மகனாக விண்ணரசு. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உடம்பெல்லாம் இளைக்க முடியாததனால வேற பையன நடிக்க வைக்கிறோம். இங்க ஒரு பேமிலி சாங். ஒரே இளநீர்ல ஸ்ட்ரா போட்டு குடிக்கறது மாதிரியான புதுமையான நிறைய காட்சிகள் இருக்கு.

இப்போ கதைய அடுத்த கட்டதுக்கு கிரேன் வச்சு தூக்குறோம் (கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல. லாஜிக்! லாஜிக்!)

மண்ணரசு, ரகுவரன் மற்ற விஞ்ஞானிகளெல்லாம் கூடி கும்மியடிச்சு ஒரு முடிவுக்கு வர்றாங்க. மண்ணரசுவே செவ்வாய் கிரகத்துக்கு போய், ஸ்பெஷலா ப்ரோகிராம் செய்யப்பட்ட லேசர் கன்னை வச்சு ஏலியன்ஸை அழிக்கறதுன்னு முடிவு செய்யறாங்க. உடனே நம்ம கேப்டன் ஜிப் வச்ச ஷூவும், டார்ச் வச்ச தொப்பியும்(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) போட்டுகிட்டு கிளம்புறாரு. போறதுக்கு முன்னாடி தாய்மார்களை கவரும் விதமா செண்டிமெண்ட் காட்சி. பொண்டாட்டியா பார்த்து இவர் கண் கலங்க அவிங்க அழ, படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க. இவர் கிளம்புறது தீபாவளி சீசன். அதனால புள்ளையாண்டானுக்கு லாரி லாரியா வெடி வாங்கிக் கொடுக்கிறாரு. அப்படியே ஷட்டில்ல கிளம்புறாரு. அங்க போய் லேண்ட் ஆனவுடனே அந்த லேசர் கன் தப்பா ப்ரோகிராம் பண்ணிருக்கறத நினைச்சு அதிர்ச்சியானலும், மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு. அவர் பேசிக்கிட்டிருக்கும்போது இரண்டு ஏலியன்ஸ் அவர பின்மண்டைல அடிச்சு ஒரு ஜெயில்ல அடைச்சு வக்கிறாங்க. அந்த ஜெயிலுக்கு கதவு கிடையாது. ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க (Technology has improved so much u know).

அம்பிகா மண்ணரசு திரும்பி வருவாருன்னு காத்துக்கிட்டிருக்காங்க. வருஷங்கள் உருண்டோடுகின்றன. விண்ணரசு பெரிய்ய்ய்ய ஆளாகிறார். "அப்பா எங்கம்மா?" என அவரின் கேள்விக்கு அம்பிகா நடந்தவற்றை கூற தன் தந்தையை தேடி நாஸா செல்கிறார் (குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி). ரகுவரனிடம் சென்று தந்தையை மீட்டு வர தன்னை செவ்வாய்க்கு அனுப்புமாறு கேட்க ரகுவரன் மறுத்துவிடுகிறார். ரகுவரனின் புது செகரட்ரியான ஜெ.லோ விண்ணரசுவின் அழகில் மயங்கி (வடிவேலு ஸ்டைலில் அல்ல), தன் பாஸ் தான் வில்லன் என்ற உண்மையை அவரிடம் சொல்கிறார். சினங்கொண்ட விண்ணரசு கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க தாயிடன் தானே செவ்வாய் கிரகத்துக்கு சென்று அப்பாவை கூட்டிவருகிறேன் என சபதம் செய்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார். ஹெல்ப் பண்ண ஜெ.லோவும் வர்றாங்க. இப்ப ஒரு டூயட் சாங். "காதல் ஆராரோ"ன்னு நரசிம்மா படத்துல ரொமான்ஸ் பண்ணுவாரே அந்த மாதிரி ஒரு பாட்டு. கண்டிப்பா நாக்க மடிச்சு ஆடற சீன் உண்டு. பாட்டு முடிஞ்சவுடனே ஒரு ராக்கெட்ட காட்றோம். கேப்டன் அத எப்படி செஞ்சாருங்கறதையும் காட்றோம். அவங்க அப்பா தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பட்டாசில் இருக்கும் வெடி மருந்தெல்லாம் சேர்த்து வச்சு ராக்கெட் பண்றாரு (எப்பூடி).

விண்ணரசு ஜெ.லோவுடன் செவ்வாய் கிரகத்துக்கு போறாரு. அங்க இறங்கி யார் கண்ணுலயும் படாம ராக்கெட்ட ஒளிச்சு வெக்கிறாரு. அப்படியே ஒரு ஏலியன ஃபாலோ பண்ணி அப்பாவை அடைச்சு வச்சிருக்க ஜெயில கண்டுபிடிக்கிறாரு. மண்ணரசு ஜெயில் கதவ பத்தின மேட்டர சொன்னதும் விண்ணரசு அலட்டிக்காம அந்த ஜெயில் சுவற்றை ரெண்டு கையாலையும் பிடிச்சு உடம்ப ஷேக் பண்றாரு. கேப்டன் உடம்புல பாயற மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, மண்ணரசு தப்பிச்சிடறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துல எல்லா இடத்திலயும் பாம் வைக்கிறாங்க. அது வரைக்கும் ஏலியன்ஸ் என்ன பண்ணாங்கன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல. அதனால அப்ப ஜெ.லோவோட அயிட்டம் நம்பர் ஒன்னு இருக்கு (லாஜிக் மிக முக்கியம் அமைச்சரே). ஏலியன்ஸ் தாங்கள் முட்டாளக்கப்பட்டதை உணருவதற்குள் மூவரும் ராக்கெட் ஏறி தப்பிக்கிறாங்க. செவ்வாய் கிரகமும் வெடித்து சிதறுகிறது.

மண்ணரசு நேரா யு.எஸ் பிரசிடெண்ட் கிட்ட ரகுவரனப் பத்தி சொல்லி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாரு. விண்ணரசு நாசாவோட புது தலைவராகறாரு. And they lived happily forever:)

மீள்பதிவு