February 27, 2009

வலிக்கலயே

என் உறவினரின் 4 வயது மகன் சரியான வாலு. அவன கண்ட்ரோல் பண்றதுங்கறது முடியாத காரியம். அவன் சித்தப்பா அவனுக்கு ஒரு கெட்டவார்த்தையை வேற கத்துக்கொடுத்திட்டார். ரொம்ப கோபப்படுத்தினால் அந்த வார்த்தையை யூஸ் பண்ணிடுவான். எனக்கு கல்யாணமான புதிதில் அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனேன். அப்புறம் அவன் பெற்றோரிடம் சொல்லி ஒருவழியாக அந்த வார்த்தையை மறக்கடித்தோம். ஏதாவது சேட்டை பண்ணலென்னா அவனுக்கு தூக்கமே வராது (என் பையன் மாதிரி). அவன் கை காலெல்லாம் நிறைய வீரத்தழும்புகளிருக்கும். ஒவ்வொரு முறை விஷமம் பண்ணும்போதும் சரியா அடிவாங்குவான் அவங்க அப்பாகிட்டருந்து. அவனின் வீரதீரபிரதாபங்களில் 5 பவுன் தங்கச் சங்கிலியை தொலைத்ததும், கலர் டீவியை கீழே தள்ளி உடைத்ததும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. போன வருஷம் தான் LKG சேர்த்திருக்காங்க. சமீபத்தில் அவரை நேரில் சந்தித்தபோது எப்படியிருக்கான் பையன்னு கேட்டதுக்கு புலம்பித்தள்ளிட்டார்.

வாரத்திற்க்கு ஒருமுறை அவன் ஆசிரியை பேரண்ட்ஸ் வந்துபார்க்கவும்ன்னு டயரில எழுதிஅனுப்பறாங்களாம். பையன் அடிதடின்னு இறங்கலைன்னாலும் அறவழியில அராஜகம் பண்றானாம். அவனின் மாஸ்டர் பீஸ் இதோ உங்களுக்காக.

# ரெண்டு தடவை மிஸ் கிட்ட பாத்ரூம் போக பர்மிஷன் கேட்ருக்கான். போகக்கூடாதுன்னு சொல்லவே அடுத்த தடவை ஏதும் கேக்காமல் பாத்ரூம் போய்ட்டு வந்திருக்கான். ஏண்டா இப்படி பண்ணன்னு கேட்டதுக்கு "நீங்க எப்படியும் போகக்கூடாதுன்னு தான் சொல்வீங்க. உங்ககிட்ட பர்மிஷன் கேட்டு ஏன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்?"

# வகுப்பு நேரத்தில் லஞ்ச் பாக்ஸிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கான். ஏண்டா கேக்காம சாப்பிட்டன்னு கேட்டதுக்கு "எங்கம்மா எனக்கு குடுத்துவிட்ருக்காங்க. எனக்கு பசிக்குது சாப்பிட்டேன்"

# வகுப்பில் வட்டமாக மேஜை போட்டு அதை சுற்றி பசங்களை உட்காரவைத்திருப்பாங்களாம். இவன் ரொம்ப விஷமம் செய்வதால் ஆசிரியை எப்போதும் இவன் பக்கதிலேயே தான் அமருவாராம். ஒருநாள் "போய் மத்த பாய்ஸ் பக்கதுல உட்காருங்க. நான் எதுவும் பண்ணமாட்டேன். சும்மா என் பக்கதுலயே உக்காராதீங்க"

# வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததற்க்கு டீச்சர் திட்டவே இவன் போய் போர்டில் எழுதிபோட்டதையெல்லாம் அழித்து விட்டானாம். டீச்சருக்கு ரொம்ப கோவம் வந்து இவனை லேசாக அடித்ததும் அவன் உடனே சொன்னது "அய்ய்ய்ய் வலிக்கலயே". நொந்தேவிட்டாரம் அவர்.

ஹ்ம்ம்ம் LKGலேயே இப்படியா?

February 25, 2009

சில்லறை பிரச்சனை

என்னையும் பதிவரா மதிச்சி பட்டாம்பூச்சி விருது தந்த அண்ணன் நாகை சிவா அவர்களுக்கு நன்றி.

இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.

பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.

இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"

"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"

"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"

"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"

"அவர் இங்க இல்ல மேடம்"

திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.

இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"

February 23, 2009

வாழ்த்தும் - கண்டனங்களும்

"எல்லா புகழும் இறைவனுக்கே". இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கிய ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடல்.


படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு பாடல்
Get this widget Track details eSnips Social DNA


சரி தலைப்பிலுள்ள கண்டனங்கள் யாருக்கு?

மூத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு. வக்கீல்கள் அமைதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாராம். ஒரு மாநிலத்தின் முதல்வர் மூத்த தலைவர் இப்படியா emotional blackmail செய்வது? ஏன் ஐயா உங்களால் ஒரு ஸ்திரமான நடவடிக்கையை இரண்டு தரப்பினர் மீது எடுக்கமுடியவில்லை? ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று பதறி அறிக்கை விடத் தெரிந்த உங்களுக்கு ஏன் இரண்டு தரப்பினரையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள்? வோட்டு போய்விடும் என வக்கீல்களுக்கா? இல்லை உங்கள் பொறுப்பிலிருக்கும் காவல்துறை எதிர்ப்பு கிளப்புவார்கள் என்றா? என்னவோ போங்கள். உங்களிடமும், உங்கள் சக அரசியல்வாதிகளிடமும் கொஞ்சமேனும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.

தி.மு.க தலைவரின் தொண்டரடிப்படைகளுக்கு - அவரே முடியாம போய் ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அவருக்கு தேவையானது நல்ல ஓய்வுங்கறது உங்களுக்கு தெரியாதா? அவர நிம்மதியா இருக்கவிடாம அந்த பாலத்த தொற, இந்த திட்டத்த தொறன்னு ஏன் ரப்சர் பண்றீங்க. தலைவரும் ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாரு? யாமறியோம் பராபரமே:)

ஜெயலலிதா உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த பிரச்சனையை ஊதி பெருசாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன. அடிவாங்கினவனே மறந்தாலும் இவங்க வுடமாட்டாங்க போல. நான், எனது அரசு என்ற சுயதம்பட்டம், ஆணவம் இவற்றை விட்டொழித்து என்னிக்கு மேடம் பொறுப்பானா எதிர்கட்சி தலைவரா செயல்படபோறீங்க? சட்டசபைக்கு வந்தாலும் 5 நிமிஷம் தான் இருக்கறீங்க. கேட்டா கருணாநிதியும் அப்படித்தானேன்னு அவர கை காட்றீங்க. அப்ப உங்களுக்குன்னு தனி அடையாளம் ஏதும் கிடையாது. நேத்துக்கு கட்சி ஆரம்பிச்ச கேப்டன் கேட்கும் கேள்விகள் கூட நீங்க கேக்கமாட்டேங்கறீங்களே ஏன்?

வக்கீல் பெருமக்களே நீதிமன்ற வளாகத்தில் அடிதடி நடந்து நீதித்துறையே களங்கப்பட்டுடுச்சுன்னு கூவறீங்களே, சுப்ரமணிய சுவாமி மேல முட்டை அடிச்சீங்களே. எங்க வைச்சு அடிச்சீங்க புரோட்டா கடையிலயா? இந்த செயல் அநாகரிகம் இல்லையா?

காவல்துறை கனவான்களே அது சரி எவ்வளவு நாள் தான் நீங்களும் அடிவாங்க்கிட்டிருப்பீங்க. அதுக்கெதுக்குங்க வாகனங்களையெல்லாம் துவம்சம் பண்ணீங்க? வக்கீல்களை மட்டும் மொத்தியிருந்தா கொஞ்சமாவது உங்க பக்கம் நியாயம் இருந்திருக்கும் (அவங்க அடிச்சாங்க நாங்க அடிச்சோம்னு). இப்ப பாருங்க உங்களுக்கும் தான் கெட்ட பேரு.

சுப்ரமணியபுரம் படத்துல கஞ்சா கருப்பு ஒரு டயலாக் சொல்லுவார்
"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".

February 19, 2009

Main Street - Residency Towers

காதலர் தினத்தன்று சேலத்திலிருக்க வேண்டிய நான் புரோகிராம் கேன்சல் ஆனதால் தாம்பரத்திலேயே இருக்கவேண்டியதாய் போயிற்று. தோழியின் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை என்ற சோகத்தை மறக்க (காரணம் வேணும்ல)தி.நகரில் இருக்கும் ரெசிடெண்ஸி டவர்ஸில் பஃபே செல்வதென முடிவானது. மூணு பேருக்கு டேபிள் புக் செய்திருந்தோம். கடைசி நேரத்தில் என் தம்பி ஜகா வாங்கிட்டான். 12.30 மணிக்கு ஆரம்பித்த பஃபேக்கு 1 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பஃபே ஹால் வித்தியாசமான் ஃபீல் கொடுத்தது. கொஞ்சம் hi-fi ரங்கநாதன் தெரு சந்திப்புக்கு சென்றால் எப்படி இருக்கும்? அந்த feel இருந்தது. லண்டனில் இருக்கும் main street இப்படித்தான் இருக்குமாம். யார் கண்டா? சரி over to the spread.

பச்சை கலரில் வாயில் பெயர் நுழையாத சைனீஸ் சூப் ஒன்று டேபிளுக்கு வந்தது. It was too creamy. வாயில் வைக்க வழங்கவில்லை. வெஜிடபிள் கிராக்கெட்ஸ் என்ற starter ரொம்ப நல்லாருந்தது. Salads were awesome.

Mexican corn salad, tofu என்றழைக்கப்படும் சோயா பாலிலிருந்து செய்த பனீரும் பேரீச்சம்பழமும் கலந்த iron salad, பழங்களுடன் cream கலந்த eve's salad, korean cabbage kimchi என எல்லாமே தூள்.

அன்றைய counter ஸ்பெஷல் - சென்னா சமோசா. சுமாராகத்தான் இருந்தது. (நாங்கள் ராணிப்பேட்டையிலிருந்தபோது தள்ளுவண்டியில் சாட் விற்பார்கள். அங்கே 12 ரூபாய்க்கு சென்னா சமோசா சூப்பரா இருக்கும். இதை உள்ளே தள்ளிவிட்டு ஒரு மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜூஸ் குடித்தால் டின்னர் முடிஞ்சிடும்).

முக்கால்வாசி main course ஐட்டங்கள் சுமாராகத் தான் இருந்தன. வழக்கம்போல naan டேபிளில் சர்வ் செய்யப்பட்டது. Taj mahal pulao, Cleopatra fingers, Broccoli and bamboo shoot stir fry, Paneer and mutter ki bhurji, Subji takyari.
நள தமயந்தி மசாலா, Subji takyari இரண்டும் தான் நன்றாக இருந்தன. மற்றவை எல்லாமே ரொம்ப சுமார் தான். இன்னொரு பெரிய குறையாக (எங்களுக்கு) தெரிந்த விஷயம் உணவு சூடாக இல்லாதது. ரொம்பவே ஆறிபோயிருந்தது. (இத்தனைக்கும் நாங்கள் சென்றது 12.30-2 slot. The first slot). ஓரளவுக்கு warm-ஆக இருந்திருக்கலாம். இந்த பிரச்சனை காரணமாக, Diana Pasta, Onion paradise noodles, Nutri baingan ki tarkari போன்ற உணவுகளின் டேஸ்ட் எடுபடாமல் போனது.

For those who have a sweet tooth here comes the feast. 75% desserts டக்கரா இருந்தது.


Caramel custard, Custard Pudding, பால் பாயாசம் மூன்றும் அட்டகாசம். சுட சுட குளோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட்டிருக்கிறீர்களா? I call that heaven (வெண்ணிலா ஐஸ்க்ரீமோடு சூடான கேரட் அல்வா makes good combination too). வெண்ணிலா, ஸ்டராபெர்ரி ஐஸ்க்ரீம் ஏழெட்டு topping options உடன். கேமராவில் பாட்டரி டவுன். அதனால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை:(


பரிந்துரை
- பஃபே உணவுகளிம் பெரிய disadvantage என்னன்னா ருசியில் ஒரு consistency இருக்காது. நாங்க போகும்போது சுமாராக இருந்த spread இன்னொரு நாள் சூப்பரா இருக்கும் (இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் போனபோது நன்றாக இருந்தது). ஆனால் ரிலாக்சாக அமர்ந்து, அமைதியாக சாப்பிடனும்னா தயவு செஞ்சு weekend-ல போகாதீங்க. வாரஇறுதியில் பலாபழத்தை ஈ மொய்ப்பது போல அப்படி ஒரு கூட்டம். அதே மாதிரி சம்பளம் வாங்கின உடனே போங்க. இல்லன்னா யாரையாவது ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லுங்க:)


மேலதிக தகவலகள்
உணவகம் - Main Street - Residency Towers (Only Buffet)
இடம் - பாண்டி பஜார், காசி ஆர்கேட் பக்கத்தில்
டப்பு - 1000 ரூபாய் (இருவருக்கு. Inclusive of taxes). இது weekend விலை. வேலைநாட்களில் கொஞ்சம் குறைவாக இருக்கும். May be 990 bucks:)
தொலைப்பேசி - 28156363
பொறுமையா இவ்ளோ நேரம் படிச்சவங்களுக்கு இந்த படம் போனஸ்:)

February 18, 2009

ஆய்வகமும் ஆங்கிலமும்

பதிவுலகத்திற்க்கும் மொக்கைப் பதிவுகளுக்கும் (அதாவது நான் எழுதறது மாதிரியான பதிவுகளுக்கு) உள்ள உறவு போன்றது பொறியியல் படிப்புக்கும் ஆய்வகத்துக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். நான் படிச்சது நிகர்நிலை பல்கலைக்க(ல)ழகம். அதாங்க deemed university. ஆய்வகங்களைப் பொறுத்த மட்டும் பாவம் பண்ண டிபார்ட்மெண்ட்ஸ் மூணு இருக்கு. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில். இந்த மூணு டிபார்ட்மெண்ட் தவிர மத்த டிபார்ட்மெண்ட் பசங்கெல்லாம் நல்லா ஏசி ரூம்ல உக்காந்து பெரிய ஆராய்ச்சி பண்ற மாதிரி "Hello World"ன்னு பிரிண்ட் பண்ற புரோகிராம் அடிப்பானுங்க:( ரொம்பவே பாவப்பட்ட ஜென்மங்க சிவில் டிபார்ட்மெண்ட் பசங்க தான். பாலு மகேந்திரா கேமரா கணக்கா ஒரு ஸ்டேண்ட வச்சிகிட்டு உச்சி வெயில்ல நேர்த்தி கடன் தீர்க்கற மாதிரி நடுரோட்டில நிந்துகிட்டிருப்பானுங்க. நான் நாலு வருஷம் பெஞ்ச தேச்சது EEE டிபார்ட்மெண்ட்ல.


பொதுவா லெக்சரர்ஸ் விட லேப் அட்டெண்டர்ஸ்க்கு தான் மரியாதை ஜாஸ்தியா கிடைக்கும். அவரு தான் பூசாரி மாதிரி. அவர் மனசு வைச்சாதான் internal marks என்ற வரம் விரிவுரையாளர் என்ற கடவுள் மூலமாய் கிடைக்கப் பெறும். Practicalsல அவங்க தயவில்லாம ஒன்னும் பண்ண முடியாது. ஆனா முக்கால்வாசி பேர் ரொம்ப பிரெண்டிலியா பழகுவாங்க. கேண்டீன்ல சாப்பிடும்போது பார்த்தா கூப்பிட்டு கூட உக்கார வைச்சு டீ வாங்கித் தருவாங்க:) சில பேர் நேரெதிர். எப்பவுமே கடுகடுன்னு தான் இருப்பாங்க. விரிவுரையாளர்களை விட இவங்களுக்கு subject knowledge ரொம்ப ஜாஸ்தி. இவங்க எல்லோருக்கும் (atleast 80%) இருக்கும் ஒரே பிரச்சனை ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாததுதான். Infact சில விரிவுரையாளர்களை விட இவங்க நல்லாவே ஆங்கிலம் பேசுவாங்க. எங்க காலேஜ்ல 40% ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவங்க. அதனால எல்லா staffம் இங்கீலிஷ்ல தான் பேசனும். இல்லன்னா பசங்க கலாட்டா பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.

சில நேரங்களில் விரிவுரையாளர்கள்/லேப் அசிஸ்டெண்டுகளின் பேச்சு சரி காமெடியா இருக்கும். மார்க்குக்கு பயந்து கம்முன்னு இருப்போம். உதாரணத்துக்கு,

#முதல் வருஷத்துல எல்லா டிபார்ட்மெண்ட் பசங்களும் workshop கட்டாயம். இரும்பு அறுத்து L joint, V joint பண்ணனும். அதுக்காக இரும்ப ஃபைல் (filing) பண்ணிட்டிருந்தபோது ஒரு பையன் வேகமா தேச்சிட்டிருந்தத பார்த்த lab incharge சொன்னார் "Dont do filefilefilefilefile. Do file file file". அவர் சொல்ல வந்த மேட்டர் வேகமா பண்ணாத. மெதுவா பண்ணு. அந்த வருஷம் முழுக்க இத சொல்லி சொல்லி சிரிப்போம்.

#இரண்டாம் ஆண்டு டிபார்ட்மெண்டில் terror என சீனியர்களால் அடையாளம் காணப்பட்ட lecturers எங்களுக்கு காமெடியன்களாகத்தான் தெரிந்தார்கள். அதில் Loveking என்ற ஒருவர் பண்ணும் லூட்டிக்கு அளவேயில்லை. (Electrical) Machines lab incharge அவர். அவருக்கு "ச" வராது. முதல் நாள் lab instructions என அவர் எங்களிடம் கூறியது "Nobody should shit on the lab". குழப்பத்திலிருந்த எங்களுக்கு பிறகுதான் புரிந்தது he actually meant "Nobody should sit on the lab". நாலு வருஷம் படிப்பு முடிந்தும் கூட இப்போது நண்பர்கள் சந்தித்த போதும் இதை நினைவுகூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம். கிளாஸ் நடத்திக்கிட்டே இருக்கும்போது தீடிர்னு ஜன்னல் வழியா காறித்துப்புவார்???!!. அதே மாதிரி கிளாஸ்க்கு வந்ததும் board நல்லா க்ளீன் பண்ணுவார். அத துடைச்சிவச்சிருந்தாலும் மனுசன் உடமாட்டார். அவர் தேய்க்கறதுல டஸ்டர்க்கு ரத்தமே வந்துடும்:)

# அடுத்தது cowgoya மேடம். இவங்க எங்களுக்கு எந்த சப்ஜெக்ட்டும் எடுத்ததில்ல (நல்லவேளை தப்பிச்சோம்). மேடம் மெட்ராஸ் பாஷைல வூடு கட்டுவாங்க. எதாவது தவறு செய்துவிட்டால் அய்ய என்று ஆரம்பித்து இவர் கொடுக்கும் அர்ச்சனை தாங்கமுடியாது. Practical exam தாமதமாக ஆரம்பித்ததால் viva டிலே ஆகிவிட்டது. சாப்பிட்டு வந்துவிடலாம் என நினைத்தபோது யாரும் எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சரியான பசியோடு மேடம் முன்னாடி போய் உட்கார்ந்தேன். டேபிள் மேல ஒரு கவர் முழுக்க சமோசாக்கள் (எங்க கேண்டீன் சமோசா டாப்பா இருக்கும்). சமோசாவை வாயிலே அதக்கிக்கொண்டு "watish omfa?" என்றார்.
"Pardon me. I dont get u?"
"Dummy omfa?'
"Maam"
(டீ குடிச்சிட்டு)"U girl. U have no ears wat? Tell me om's law."
இப்படியா சமோசாவால செவிட்டு பட்டம் வாங்கி எப்படியோ கப் வாங்காம பாஸ் ஆயாச்சு.

இன்னும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய நடந்தது. அதெல்லாம் அப்பாலிக்கா சொல்றேன். வர்ட்டா.

February 16, 2009

துணுக்ஸ் - 16/2/2009

குறுகலான தெருவில் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தோம். பாதி தெருவைத் தாண்டியபின் எதிர் பக்கத்திலிருந்து ஒரு ஸ்கார்பியோ தெருவுக்குள் நுழைந்தது. விடாது ஹாரன் அடித்தபடியே இருந்த அந்தவண்டியின் டிரைவர் ஆட்டோவை பின்னால் எடுக்க சொன்னார். பாதி தூரம் வந்தாச்சு நீங்க பின்னால எடுங்கன்னு ஆட்டோடிரைவர் சொன்னதுக்கு, ஸ்கார்பியோ டிரைவர் "யார் வண்டின்னு தெரியுமா? அண்ணன் கிட்ட சொன்னேன் ஆடிடுவ நீ"ன்னு சவுண்ட் உட்டார். ஆட்டோக்காரரும் நமக்கேன் வம்புன்னு வழிவிட்டுட்டார். அப்புறம் ஆட்டோக்கார் சொன்னார். "வார்டு கவுன்சிலரான உடனே ஒரு வண்டிய வாங்கிட்டு இவனுங்க போடுற ஆட்டம் தாங்கமுடியல"
*********

தி.நகர் செல்வதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினோம். வழக்கத்திற்க்கு மாறாக கூட்டமே இல்லாம பஸ் காலியாக இருந்தது. மேடவாக்கத்தில் ஏறிய பெண் ஒருவர் ரொம்ப நேரம் பர்ஸை துழாவி ஒரு பத்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார். நோட்டைப் பார்த்த கண்டக்டர் ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். எட்டாக மடிக்கப்பட்டு கருப்பாக இருந்தது நோட்டு. வேற நோட்டு கேட்டதுற்க்கு அந்த பெண் கண்டக்டரை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார். ரொம்ப பொறுமையா இருந்தவர் அந்தப் பெண் இறங்கியவுடன் சொன்னார் "உன் புருஷனுக்கு கோயில் கட்டி கும்பிடனும்".
***********

இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருவன் sms பண்ணிருந்தான்.
"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"
டேய் எப்படிடா இவ்ளோ தெளிவா இருக்கீங்க?
***********

தண்ணீர் இல்லாமல், எண்ணைய் இல்லாமல் சமைக்கறதுக்காக ஒரு குக்கர் இருக்காம். அந்த குக்கரின் டெமோ பார்த்த என் அண்ணன் சும்மால்லாம என் நம்பர அந்த கம்பெனிக்கு கொடுத்திட்டார். அங்கிருந்த ஒரே தொல்லை. மேடம் டெமோக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கன்னு. "யோவ் நான் தண்ணி, எண்ணை சேர்த்து சமைச்சாலே வாயில வைக்க வழங்கல. இதுல நீ வேற டார்ச்சர் பண்ணாத"ன்னு சொன்னதுக்கப்புறம் தான் விட்டாங்க. இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)
**********

Saawariya படத்துல வர்ற இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் மாலை கேட்டுக்கொண்டிருந்தபோது அம்மா சொன்னார் "என்னடி இது? விளக்கு வைக்கிற நேரத்துல சாவறீயா? சாவறீயான்னு?. அந்தக் கருமத்த முதல்ல மாத்து":)
Get this widget | Track details | eSnips Social DNA

***********

தோழியின் கல்யாணத்துக்கு சேலம் செல்வதாய் இருந்தது. ரயில் டிக்கெட், அங்கு தங்க ரூம் எல்லாம் ரெடி பண்ணியிருந்தோம். கடைசி நேரத்தில் கேன்சலாகிவிட்டது. இந்த தடவையும் கல்யாண சாப்பாடு மிஸ்ஸாகிடுச்சு:(
ஆனா அந்த வருத்தத்தை கொஞ்சம் போக்கும்விதம் சனிக்கிழமை மதியம் ஹோட்டலில் லஞ்ச். யெஸ் அதேதான். கூடிய சீக்கிரம் உங்க வயிறெரியவைக்க போட்டோஸோட பதிவு வருது:)

February 13, 2009

எது எல்லை?

இப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் டாபிக் பிப்ரவரி 14ஆம் தேதி மங்களூரில் என்ன நடக்கும் என்பதே. முதலில் ராம் சேனா அமைப்பினர் செய்தது சரியா? கண்டிப்பாகத் தவறுதான். குடிப்பது, ஆடை உடுத்துவதையெல்லாம் அடிப்பதன் மூலமோ, மிரட்டலின் மூலமோ சரிசெய்ய முடியாது. இதெல்லாம் அவரவர் விறுப்பு வெறுப்பு. ஒரு வகையில் தனி மனித ஒழுக்கமென்றுக்கூட சொல்லலாம். ஒருவர் சுதந்திரம் என எண்ணும் விஷயம் அடுத்தவருக்கு ஆபாசமாக பட்டால் யாரும் பொறுப்பேற்க முடியாது. அதே சமயம் இந்த விஷயத்தை சட்டபூர்வமாக அனுகாமல், பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும் போராட்டம் நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நாகரிகமாகும்?


ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கையில் எழுத்தாளர் ஒருத்தர் சொல்றார் ஐ.டி துறையினர் மன அழுத்தத்தை போக்கவே பஃப்புக்கு செல்கின்றனர் என்கிறார். சுத்தப் பேத்தல். குடித்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமோ. மனதை ரிலாக்ஸ் பண்ண எவ்ளோ வழிகள் இருக்கின்றன. கடற்கரையோரம் காலாற நடந்து செல்லலாம். பூங்காக்களுக்கு செல்லலாம். நண்பர்கள் ஒன்று கூடி பேசலாம். தெருவிலிருக்கு வாண்டுகளோடு சேர்ந்து விளையாடலாம். எவ்வளவோ வழிகள் இருக்கே. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் குடி பழக்கம் அறவே தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. நீங்கள் குடிப்பதால் உங்களை கொஞ்சம் கொஞ்சமாகவும், உங்களை நம்பியிருப்பவர்களின் கனவுகளை ஒரேடியாகவும் கொல்கிறீர்கள்.


உடை விஷயத்தைப் பொறுத்தவரை தனக்கு செளகரியமான உடையை அணிய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு எல்லையும் உண்டு. உடம்பு தெரிய உடை உடுத்திய காலம் மாறி இப்போ உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது. ஜீன்ஸ் அணிவது தவறில்லை. ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா? காமாசோமவென்று உடை அணியவேண்டியது. அப்புறம் அவன் இங்க தொட்டான் அங்க தொட்டான்னு ஈவ் டீஸிங் கேஸ் போட வேண்டியது. சினிமாவைத் தாண்டி இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளிலும் மறைமுகமாய் வன்முறையையும், காமத்தையும் தூண்டும் நிகழ்ச்சிகள் வருவதால் இம்மாதிரியான தாக்கங்களும், ஃபேஷன் போதைகளும் கட்டுகடங்காமல் பெருகிவருகின்றன.

கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று.

February 12, 2009

பறவைகள் பலவிதம்.....

ஸ்கூல் படிக்கும்போது சுற்றுலான்னு கூட்டிக்கிட்டு போற இடம் ஒன்னு மகாபலிபுரம் இல்லைன்னா வேடந்தாங்கல். வரிசைல நின்னுகிட்டு டவர்ல ஏறி பார்த்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா பறவைங்க உக்காந்திருக்கும். "ஏய் எவ்ளோ நேரம் பார்ப்ப"ன்னு டீச்சர் கத்தினதுக்கப்புறம் தான் நகருவோம். கொசுவத்தி சுத்தியபடியே வேடந்தாங்கலில் இறங்கினோம்.

முருகன் என்பவர் உடன் வந்தார். 15 வருடங்களாக இத்துறையில் உள்ள இவர் பொறுமையாக ஒவ்வொரு பறவையின் பெயர், பழக்கம், வாழ்விடம் பற்றிக்கூறினார். வேடந்தாங்கல் தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம். இச்சரணாலயத்தின் மொத்த பரப்பளவே 73.06 ஏக்கர் தான். 1958ஆம் வருடம்தான் இந்த சரணாலயத்தை அரசு தன் வசம் கொண்டுவந்தது. அதற்கு முந்தைய 300 வருடங்களாக ஊர் மக்களே பராமரித்து வந்ததாகக் கூறினார். கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து 26 வகையான பறவைகள் இங்கு வருகின்றனவாம். இதில் கனடா நாட்டிலிருந்து வரும் வெள்ளை அரிவாள் மூக்கன் (பேரு எப்படி யோசிக்கிறாங்கப்பா) என்ற பறவை தான் அதிக தூரத்திலிருந்து வருகிறதாம். கனடாவில் இப்போது கடும்குளிர் நிலவுவதால் இப்பறவைகள் இங்கே வருவதாகக் கூறினார். அதேபோல் கனடாவிலிருந்து வரும் ஊசிவால் வாத்தும் இதே காரணத்திற்காகத் தான் இங்கு வருகின்றன. மற்ற பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருகின்றன. இவ்விரு பறவைகள் மட்டும் சம்மர் ஹாலிடேசுக்கு வருகின்றன.


சைபீரியாவிலிருந்து வரும் வர்ண நாரை/Painted Stroke Open bill Stroke/நத்தைக் குத்தி நாரை Spot bill pelican/பெரியதாரா என்றழைக்கப்படும் இப்பறவையின் அலகின் கீழ் பை போலொரு அமைப்புள்ளது. இதன் மூலம் கலங்கிய குட்டைகளில் இரை தேடும்போது சேறு மற்றும் குப்பைகளை வடிகட்டிவிடுமாம்.
Snake Bird என்ற இந்தப்பறவையின் கழுத்து நீண்டு பாம்பைப் போல் ('S' shape) இருப்பதால் இந்தப்பெயர்.
Spoon bill pelican/கரண்டிவாயன்??!!

எல்லா பறவைகளும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஏறத்தாழ 15 முதல் 20 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. சின்னப் பறவைகள் பறக்க தயாராக 70 நாட்கள் வரை ஆகுமாம். பின்னர் இரைத்தேடும் பயிற்சிக்குப்பிறகு தத்தம் நாட்டுக்கு திரும்பிவிடுமாம்.
வேடந்தாங்கல் ஏரி அதிகப்பட்சமாக 20 அடி ஆழத்தைக்கொண்டுள்ளது. வியூ பாயிண்டில் இருந்து பார்க்கும்போது புதர் போல் காட்சி அளிப்பவை நீர்க்கடப்பை மரங்கள்.
பறவைகள் கூடு கட்ட ஏதுவாய் நிறைய கிளைகளோடு வளரும். இம்மரத்தின் 90% சதவிகிதம் நீருக்குள் மூழ்கியுள்ளன.

இருட்ட ஆரம்பித்துவிடவே இரை தேடி சென்ற பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக்கொண்டிருந்தன. சில பறவைகள் இரவில் இரை தேடும் பழக்கமுடையவையாம்(வவ்வாலோ ஆந்தையோ அல்ல). இருட்டின் காரணமாக எல்லாப் பறவைகளையும் படமெடுக்கமுடியவில்லை(அப்படியே எடுத்துட்டாலும்ன்னு நீங்க சொல்றது கேக்குது).

சீஸன் - நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை. நீரின் அளவைப் பொறுத்து ஜூலை வரைக்கூட நீடிக்கும்.

பார்க்க ஏதுவான நேரம் - காலை 6 முதல் 7 மணி வரை. மாலை 5 மணி முதல் 6 மணி வரை. இந்நேரங்க்களில் தான் பறவைகள் அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் இரை தேட போவதால் எண்ணிக்கை ரொம்ப குறைவாகவே இருக்கும். சென்னை, செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதியிருக்கிறது.

முடிந்தால் சென்று வாருங்கள். வித்தியாசமான அனுபவமாய் இருக்கும்.

February 9, 2009

வெண்ணிலா கபடி குழு

சனிக்கிழமை காலை தாம்பரத்திலிருந்து மதுராந்தகம். மாலை குடும்பத்தோடு வேடந்தாங்கல்(சீக்கிரமே பதிவா வருது:)). அன்றிரவு இரவுக் காட்சி நான் கடவுள். மறுநாள் விடியற்காலை நண்பனின் கல்யாணம் வேலூரில். கல்யாணம் முடிந்து உடனே மதுராந்தகம் ரிடர்ன்(காலை கல்யாண் வீட்டில் சாப்பிடக்கூட இல்லை. முரளிக்கண்ணனுக்கு சந்தோஷமா இருக்கும்). 12.30 மணிக்கு வந்தவுடனே அம்மா சமையலை ரசிச்சு சாப்பிட முடியாமல் அவசர அவசரமாக அள்ளி முழுங்கி, ஜூனியரை தூங்க வைத்துவிட்டு வெண்ணிலா கபடி குழு மேட்னி.

2.30 மணி நேரப் படத்தில் மதுரையில் நடக்கும் கபடி போட்டிகள் (சுமார் 45 நிமிடங்கள்) மட்டுமே பார்க்கும்படி இருக்கிறது. முதல் பாதியில் வரும் அழுத்தமில்லாத காதல் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. BGM நல்லாருந்தது. சரண்யாவையும், கிஷோரையும் தவிர அத்தனைப் பேரும் புதுமுகங்கள். கிஷோர் முறைப்பும், விறைப்பும் காட்டும் கபடிக் கோச்சாக வந்து பட்டையைக் கிளப்புகிறார். சிலம்பாட்டம் மாதிரியான சொம்பை படங்களை தவிர்த்தால் ரகுவரன்/நாசர் போல் வரலாம். அப்புக்குட்டியும், பரோட்டா சாப்பிடுபவர் கேரக்டரும் சூப்பர். அதிலும் மைதானத்தில் வந்து அப்புக்குட்டி "டேய் நமக்கும் 11 ஆடியன்ஸ் இருக்காங்கடே" எனும்போது ஹாஹாஹா. பிற்பாதி லகான், சக்தே இந்தியா வகையறா என்றாலும் சுவாரசியமாகவே இருக்கிறது. அவர்கள் கபடி ஆடும்போது நம் மீது கூட புழுதி படர்வது போல் perfect gaming. பிற்பாதியைப் போலவே முற்பாதியிலும் கொஞ்சம் விறுவிறுப்புக் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த வருஷம் நான் பார்த்த படங்களிலிருந்து கத்துகிட்ட பாடம்:

1. குமுதம்/ஆனந்த விகடன், பிளாக் விமர்சனங்களை நம்பி படத்துக்கு போகவே கூடாது.
2. எவ்வளவு பெரிய ஜாம்பவானின் படமாகட்டும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்.
3. முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம் பார்க்காம இருக்கக்கூடாது. இல்லைன்னா ஒரே நாள் ரெண்டு பதிவு போட முடியுமா? அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கப்படும்:)

நான் கடவுள்

வழக்கமான பாலா படம். ஒரு வித மூர்க்கத்தனத்துடன் இருக்கும் ஹீரோ. மூன்று வருட உழைப்பினைக் கொட்டி வெளிவந்திருக்கும் படம். சிறு வயதிலேயெ காசியில் கொண்டு வந்து விடப்பட்ட சிறுவன் அகோரியாக வளர்ந்து நிற்கிறான். தன்னைத் தேடி வரும் குடும்பத்தினரிடம் இருக்கும் உறவை அறுத்தெறிந்துவிட்டு வர சொல்கிறார் அவன் குரு. ஊரில் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலின் கதையும் ருத்ரனையும் வைத்து மிச்சக் கதையை பின்னியிருக்கிறார் பாலா. ரொம்பவே வித்தியாசமான துணிச்சலான முயற்சி பாலாவிடமிருந்து. எல்லோரும் சொல்வது போல் குப்பைகளுக்கு மத்தியில் மாணிக்கத்தைக் கண்டெடுக்க பாலா மேற்கொண்டுள்ள முற்சியைப் பாராட்டவாவது படத்தை தியேட்டரில் பார்க்கலாம். மற்றபடி அனைவரின் உழைப்பும் வீணாகத்தான் போயிருக்கிறது.

ஊனமுற்றவார்களின் அவலத்தையே திரும்ப திரும்ப காமிப்பதால் ஒரு வித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆர்யா பாடி லேங்குவேஜில் பின்னியிருக்கிறார். மத யானையினைப் போல் சினங்கொண்டு அலைகிறார். படத்திலேயே ஆர்யாவிற்க்கு அப்புறம் என்னை கவர்ந்த பாத்திரம் பிச்சைக்காரர்களை மேய்க்கும் முருகன் பாத்திரம் தான். கிளாஸான நடிப்பு. கதையை எப்படிக் கொண்டுபோவது என பாலா ரொம்பவே தடுமாறுகிறார். அந்த மொட்டைத் தலை வில்லன் பேசும் வசனம் பாதிக்கு மேல் புரியவில்லை. அம்சவள்ளியாக வரும் பூஜா ஒரளவுக்கு நடித்திருந்தாலும் நிறைய இடங்களில் அவர் செய்யும் பிரசாரம் எரிச்சல் பட வைக்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியின் வசனம் ஹீம் அம்சவள்ளி இம்சைவள்ளியாகிறார். படத்தில் வரும் அந்த நீதிமன்ற காட்சியும், அந்த ஊனமுற்ற சிறுவன் பேசும் வசனங்களும் தான் அதிகம் கைத்தட்டலைப் பெற்றது.

மிகுந்த சிரமத்திற்கிடையே வித்தியாசமான படங்களை எடுப்பதன் மூலம் தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்யவைக்க முயலும் பாலாவின் ஒரே மனதைரியத்தைப் பாராட்டி இந்தப் படத்தை பார்க்கலாம். அதே சமயம் பாலாவும் ஒரே மாதிரியான கதையைப் (இதில் ஷங்கரை மிஞ்ச ஆள் கிடையாது) பண்ணுவதிலிருந்து கொஞ்சம் வெளிவரணும்.

நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:)

February 4, 2009

துணுக்ஸ் - 4/2/09

பிப்ரவரி மாதம் அலைச்சல் மாதமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த மாதத்தின் அனைத்து வீக்கெண்டும் நான் ரொம்ப பிஸி. நண்பர்களின் திருமணத்திற்க்கு செல்லவேண்டியுள்ளது. அம்மா இப்போவே ஆர்டர் போட்டுட்டாங்க. 'நீ மட்டும்தான் போற. குழந்தைய அலைக்கழிக்காத". யோசிச்சு சொல்றேன்னு சொன்னதுக்கு முதுகுல ஒன்னு விழுந்தது.
***************************************


நேற்று திமுக பொதுக்குழு கூடி எடுத்த முடிவப் பற்றி ஒரு ஆங்கில சேனலில் நீயுஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். கனிமொழி அய்யய்யோ தப்பு தப்பு கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் நேரலையில் சில கேள்விகள் கேட்டாங்க. ஒரு கேள்விக்கு கனிமொழி சொன்ன பதில வைச்சு இன்னொரு கேள்வி கேட்ருக்கனும். ஏன் அவங்களுக்கு தோணலன்னு தெரியல.


கேள்வி : திமுக மத்திய அரசுக்கு கெடு விதித்திருக்கிறதே. நீங்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்குவீங்களா?


கனிமொழி : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவதாலோ, மாநிலத்தில் ஆட்சியை துறப்பதாலோ ஏதாவது மாற்றம் வந்துவிடுமா சொல்லுங்கள்.


அடுத்து சேனலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி : அப்புறம் என்னத்துக்கு முதல் ஆளா ராஜினாமா கடிதம் குடுத்தீங்க??
*************************************


மார்க்கெட் போக ஆட்டோகாரர் 30 ரூபாய் கேட்டார்(வழக்கமாக 20 தான்). "பெட்ரோல் விலை ஏறும்போது மட்டும் விலையை கன்னாபின்னான்னு ஏத்துறிங்களே. இப்போதான் பெட்ரோல் விலை குறைஞ்சிடுச்சே. நீங்களும் சார்ஜ் கம்மி பண்ணுங்களேன்" என்றேன். "பெட்ரோல் விலை தான் மேடம் குறைஞ்சிருக்கு. ஆயில் விலை ஏறிடுச்சு" என்றார். யப்பா ஆட்டோக்காரங்களை பேசி ஜெயிக்கவே முடியாது.
***************************


தூரத்து சொந்தம்(யாராவது எவ்வளவு தூரம்ன்னு கேட்டீங்க...) ஒருவரை அம்மா அறிமுகப்படுத்தினார். அவர் என் கல்யாணத்திற்க்கு வரமுடியாத சூழ்நிலையை நொந்துக் கொண்டார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவரைப் பார்த்து சொன்னேன் "நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க". அவர் சொன்னது "----------------- I'm young." அம்மாவிடம் சொன்னதுக்கு அவங்களுக்கு 17 வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டாங்க என்றார். போற இடத்துல எல்லாம் இதையே சொல்றதுனால ரொம்ப எரிச்சலா இருக்கும்போல என்றார். I really felt sorry for her:(
**************************


26/11 மும்பை தாக்குதல் ஜூரம் குறைந்து மீடியாக்களுக்கு மங்களூர் பீவர் பிடிச்சிருக்குப் போல. எந்த செய்தி சேனலை திருப்பினாலும் இதே தான். தமிழ் சேனல்கள் இன்னும் கொடுமை. ரியாலிட்டி ஷோங்கற பேர்ல இம்சையக் கூட்றாங்க. இப்போ கொஞ்ச நாளா மக்கள் டிவில வரும் ஈழம் பற்றிய வரலாற்றுத் தொடர் நல்லாருக்கு. ஒவ்வொரு தடவை பார்க்கும்போது பாதியில இருந்துதான் பார்க்கிறேன். கரெக்டா எத்தனை மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகுதுன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.
************************

February 3, 2009

ஏதாவது செய்யனும் பாஸ்

நர்சிம் அவர்களின் பதிவின் மூலமாக பரிசல், லக்கிலுக், கோவி.கண்ணன் போன்றோரின் பதிவுகளை(ஏதாவது செய்யனும் என்பதின் தொடர்ச்சி) படித்தேன். நானும் சில திட்டங்களை பதிவிடுகிறேன். இதுபோல் என் மனசாட்சியை அரித்துக்கொண்டிருக்கும் நிறைய விஷயங்களை தனி மனித தாக்குதல்களுக்கு பயந்து பதிவிட துணிச்சலில்லாமல் மெளனம் காத்திருக்கிறேன். இந்த முறை கொஞ்சூண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுதுகிறேன். பார்ப்போம் யார் வாயில் விழப்போகிறேன் என்று.

தேர்தல்/அரசியல்

1. ஏற்கனவே ஒருத்தர் சொல்லிட்டாரு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை தான் தேர்தலின் போது பயன்படுத்த வேண்டுமென்று. அதோடு நில்லாமல் யாரெல்லாம் வாக்களிக்கவில்லையென்பதை கணக்கெடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
2. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனி, சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படுவது போல், அவர்களின் வயதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டும். மூத்த தலைவர்கள் கட்சியையும்/இளைய தலைவர்களையும் வழிநடத்த வேண்டும்.
3. அமைச்சரவை அமைக்கும் முன், ஒருவருக்கு ஒதுக்கப்படும் இலாகவிற்க்கு அவர் பொருத்தமானவரா என்பதை தெளிவு செய்ய வேண்டும்.

சுகாதாரம்/மருத்துவம்

1. தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் கட்டாயமாக கிராமப்புறத்தில் மாதத்தில் சில தினங்கள் பணியாற்ற வேண்டும். அதே போல் தனியாக பிராக்டிஸ் செய்யும் மருத்துவர்களின் fees வரமுறைக்குட்படுத்தப்படவேண்டும்.
2. பொதுக் கழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அதை உபயோகிப்பவர்கள் முதலில் முன்வரவேண்டும். உங்கள் அசுத்தத்தை நீங்களே சுத்தப்படுத்த தயங்கிவிட்டு நாறுதே நாறுதேன்னு பொறுப்பில் இருப்பவரை குறைக்கூறுவது நியாமாகாது.
3. முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.

மற்றவை

1. சீக்கிரமே செய்யவேண்டியது. வீட்டு வாடகை வரைமுறை. இத்தனை சதுர அடி, இன்ன இடத்தில் இருக்கும் வீட்டுக்கு உச்ச வரம்பாக இவ்வளவுதான் வசூலிக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும். அவ்வாறு ஏற்கனவே GO இருந்தால் அது பின்பற்றப்படுகிறாதா என கண்கானித்தல் வேண்டும்.
2. உங்கள் பிறந்தநாள்/மணநாள், அல்லது நீங்கள் விசேஷமாகக் கருதும் நாட்களில் கொண்டாட்டங்களுக்கு செலவிடும் தொகையில் சிறிய அளவினை ஆதரவற்றோர் இல்லங்கலிள் இருப்பவர்களுக்கு உணவளிப்பதன் மூலமோ இல்லை அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலமோ அவர்கள் முகத்தில் சிரிப்பைக் காணலாமே.

டிஸ்கி : ஏற்கனவே பெரிய தலைகள் எழுதிய திட்டங்களை நான் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன்.

வேண்டுகோள் : பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தினால், என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் முடிந்த உதவிகளை கட்டாயமாக செய்கிறேன்.

ஸ்லம்டாக் மில்லினியர்

நான் கடைசியாகப் பார்த்த ஹிந்தி படம் ஜானே து யா ஜானே னா. தியேட்டரில் ஹிந்தி/ஆங்கிலப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டு விசேஷத்தை முடித்துவிட்டு மாயாஜால் போனோம். கண்டிப்பா டிக்கெட் கிடைக்காது என்று நினைத்ததிற்க்கு மாறாக நடந்தது. மீடியாக்களின் தயவால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதென் கருத்து. ஒரு தடவை பார்க்கலாம். கரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 மில்லியன் ஜெயிக்கிறார் ஜமால். ஒரு கேள்வி பாக்கியிருக்கும் நிலையில் ஜமாலை போலீஸ் கைது செய்கிறார்கள். அவன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிகழ்ச்சியில் அவன் கோல்மால் செய்து பதில் சொல்கிறான் என்று. கேள்விக்கான பதில்கள் தனக்கு எப்படி தெரியும் என்பதை ஜமால் விளக்குவதே கதை. இதில் காதல் கதை ஒன்றும் உண்டு. தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறையாமல் போகுது படம்.
சிறு வயது ஜமாலாக வரும் சிறுவனும், சிறுமி லத்திகா, சிறுவயது சலீம் மூவரின் நடிப்பும் கிளாஸ். இர்பான் கானுக்கு தீனி பத்தவில்லை. தேவ் படேல், இர்பான் கான், செளரப் ஷுக்லாவும் பேசிக்கொள்ளும் சீன்கள் சூப்பர். அதே மாதிரி தாஜ்மஹாலில் ஜமால் கைடாக அடிக்கும் லூட்டிகள் ROTFL வகை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒகே ரகம் தான். சுக்விந்தர் சிங்கின் குரலில் ஜெய் ஹோ பாட்டு இன்னும் கொஞ்ச நாளுக்கு டான்ஸ் பீவரில் இருக்கும். படம் ஒகே.



போன வாரம் Fashion மற்றும் Dostana படங்களை டிவிடியில் பார்த்தேன். Fashion படத்தின் பெரிய ஆச்சரியமாக கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே நடித்திருந்தார்கள். இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் (அதுவும் ஹிந்தி சினிமாவில்) காட்டுவதை மட்டுமே செய்வார்கள். இந்தப் படத்தில் நடித்துக் காட்டியிருக்கிறார்கள். தாம் தூமில் கங்கணா சப்பி போட்ட மாங்கொட்டை போல் ரொம்ப கேவலமா இருப்பார். இந்தப் படத்தில் கனகச்சிதம். போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் அவர் எடுக்கும் முடிவு:( அதே போல் பிரியங்கா சோப்ராவும் நன்றாக செய்திருக்கிறார். வெற்றியின் போதை கண்களை மறைக்கும்போது அவர் நடந்துகொள்ளும் விதம் சூப்பர்ப்.



Dostana. இந்தப் படம் நல்லாருக்குன்னு சொன்னவன் சென்னை வரட்டும்ன்னு வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். Typical Yash movie. மனுசன் துட்டு நிறைய வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம படமா எடுத்து தள்றார். வீடு தேடும் இரு இளைஞர்கள் (அபிஷேக், ஜான் ஆப்ரஹாம்) தாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என பொய் சொல்லி பிரியங்கா சோப்ராவிடம் பொய் சொல்லி அவருடன் தங்குகிறார்கள். ரெண்டு பேருக்கும் பிரியங்காவின் மீது காதல். பிரியங்காவிற்க்கு தன் பாஸ் பாபி தியோலின் மீது காதல். கடைசியில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதே மிச்சக்கதை. நிறைய இடத்தில் சிரிப்பை வரவைக்கின்ற காட்சிகள். ஆனால் அபிஷேக்கும் ஜானும் ஸ்கோர் பண்ண வேண்டிய இடங்களில் கோட்டை விடுகிறார்கள். கண்ணமூடிட்டு பார்க்கலாம்:)