October 31, 2011

நினைவெல்லாம் நிவேதா - 1

கணேஷ் காதம்பரி கேஸ்கட்டில் தலையைக் கொடுத்திருந்தான்.

“இனிமே இந்த மாதிரி அராத்து கேஸ்லாம் என்கிட்ட கொண்டுவராதடா. சரியா இழுத்தடிக்குது. காம்ப்ரமைஸ்க்கு வழியிருக்காப் பாரு.”

“என்ன பாஸ். திடுதிப்புன்னு காம்ப்ரமைஸ்ன்னுட்டீங்க. நான் இப்பதான் பாஸ் காதம்பரிக்கு கைரேகை பார்க்கிற அளவுக்கு வந்திருக்கேன். மச்ச சாஸ்திரம் பார்க்கனும். ச்சே சொல்லனும். அப்புறம்..”

“ஷட் அப். வசந்த்.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது. காதம்பரி என விசிலடித்துக்கொண்டே கதவை திறந்த வசந்தின் விசில் சத்தம் சட்டென நின்றது.

“மிஸ்டர் கணேஷைப் பார்க்கனும்” என்ற பெண்ணுக்கு 23 வயதிருக்கும்.

“அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்றான் வசந்த் அவளை கண்களால் அளந்துக்கொண்டே.

“இல்லை. ஆனால் ரொம்ப அவசரம்”.

“சாரி மிசஸ்???”

”மிஸஸ் நிவேதா”

“சாரி மிஸஸ் நிவேதா. பாஸ் இப்போது கோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார். றோம். மாலையில் ஒரு போன் செய்துவிட்டு வாருங்களேன்”

“ஐ வோண்ட் டேக் மோர் தென் டென் மினிட்ஸ். ப்ளீஸ். ஐ’ம் கன்ப்யூஸ்ட். ஐ நீட் ஹிஸ் ஹெல்ப் டெஸ்பரேட்லி.”

“நீங்க பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கமாட்டீங்க. ஆனா இங்கிருந்து கோர்ட்டுக்குப் போக ட்ராபிக் சுளையா முக்கா மணிநேரத்த முழுங்கிடுமே. லேட்டாப் போனா கிருஷ்ணமாச்சாரி வாய்தா வாங்கிடுவார். ஏற்கனவே பாஸ் காதம்பரி கேஸால கடுப்புல இருக்கார். இதயே காரணம் காட்டி கழட்டி விட்டுட்டார்னா? நான் அட்லீஸ்ட் மச்ச சாஸ்திரமாவது பார்க்கனும்”

“எக்ஸ்யூஸ் மீ?”

“சாரி. உங்களுக்குப் புரியாது. நீங்க போய்ட்டு அப்புறமா வாங்களேன்.”

அந்தப் பெண் விழிகளில் அப்பட்டமாய் ஏமாற்றத்தைக் காட்டிவிட்டு நகர்ந்தாள்.

“இன்னிக்கு அடைமழை நிச்சயம்டா வசந்த்”

“நீங்க வேற பாஸ். 40 கிட்ட கொளுத்தறது. இப்போதைக்கு எந்த சைக்ளோனும் கிடையாதுன்னு வேற சொல்லிட்டாங்க. இப்ப ரமணனுக்கு பதிலா குழந்தைவேலுன்னு ஒருத்தர் வர்றார். பார்த்தீங்களோ?”

“டேய். ஒரு பொண்ண. அதுவும் ஜீன்ஸ் குர்தாவுல வந்த பொண்ண, முக்கியமா ரொம்ப அழகா இருந்த பொண்ண வசந்த் திருப்பியனுப்பிருக்கான்னா அது இயற்கைக்கு அப்பாற்பட்ட
விஷயமில்லயா?"

"நீங்க இன்னும் பழைய வசந்தாவே பார்க்கறீங்க. அவன் செத்துட்டான் பாஸ்"

"இப்பதான் காதம்பரின்னு கூப்பாடு போட்டுக்கிட்டிருந்த?"

"ஐயோ பாஸ். கல்யாணமான பொண்ணுங்களுக்கு ரூட் விடறதில்லன்னு பாலிசி கொண்டுவந்திருக்கேன். நெத்தி வகிட்ல குங்குமம் வச்சிருந்தது பாஸ்."

"சரிதான். எதுக்குடா வந்திருப்பா? முஞ்சு முழுக்க கவலை கபடியாடித்து."

"டைவர்ஸ் சம்பந்தமா டவுட் கேக்க வந்திருப்பாங்க பாஸ். பிட்ஸா வாங்கித்தரலன்னாகூட பிரியறதுக்கு ரெடியா இருக்காங்க பாஸ். ஹூம்"

"என்னவோ. சரிக் கிளம்புடா."

"ஆனாலும் நீங்க ரொம்பவே அடம்பிடிக்கறீங்க பாஸ். காரையும் மாத்த மாட்டேங்கறீங்க. ஆபிஸையும் மாத்த மாட்டேங்கறீங்க. ரெண்டுமே படுத்தறது. மவுண்ட் ரோட்ல ஆடி ஷோரூம்
தொறந்துருக்கான் பாஸ். வண்டி டக்கரா இருக்கு. ரிசப்ஷனிஸ்ட் பேர் ரீட்டா. அவ வண்டியவிட சூப்பரா இருக்கா பாஸ். ஒருதடவையாவது ஓட்டிப் பார்த்தடனும்."

"டேய்ய்.."

"நான் வண்டிய சொன்னேன் பாஸ்."

"யுவர் ஆனர் காதம்பரி கொடுத்துள்ள புகாரில் இம்மியளவும் உண்மையில்லை" என ஆரம்பித்து எதிர்த்தரப்பு வக்கீல் போரடித்துக்கொண்டிருந்ததை கனேஷும், வசந்தும் கன்னத்தில்
கைவைத்தபடி வேண்டா வெறுப்பாய் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆடி அசைந்து இரண்டு அரசுத் தரப்பு சாட்சிகள் சொன்னவற்றை மகாப் பொறுமையுடன் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி
வைப்பதாகக் கூறி எழுந்துச் சென்றார்,

"சட். சரியான நச கேஸு" என்று புலம்பியபடியே ஆபிஸ் வந்து சேர்ந்தனர் இருவரும். பையன் வாங்கிவந்த டீக்கு சிகரெட்டோடு கல்யாணம் நடத்திவிட்டு கேஸ்கட்டுகளில் மூழ்கினர்.

"ஒரு வாரம் ரொம்ப ஹெக்டிக்கா போச்சுடா. பேசாம கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலைமறைவா போய்டலாம்ன்னு பாக்கறேன். கோர்ட்டுன்னாலே கடுப்பா இருக்கு."

"சொல்லாதீங்க பாஸ். உங்க வாய் முகூர்த்தம். நீங்க வெகேஷனப் பத்தி பேசறச்சேல்லாம் ஏதாவது ஒரு கேஸ் வந்துடுது." வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது.

உள்ளே வந்தவருக்கு வயதைக் கணிக்க முடியாத தோற்றம். கண்டிப்பாய் ரிடயர்டு மிலிட்டரி பெர்சன் என்பதை இரண்டுக்காதுகளுக்கு மேலே ஒரு இஞ்ச் முடியிழந்த மண்டையும், டக்கின்
செய்திருந்த டீ-சர்ட்டும் சொல்லியிருந்தன.

"ஹலோ. ஐ'ம் ஜெயராமன். ரிடயர்டு மிலிட்டரிமேன்."

"ஐ'ம் கணேஷ். ஹி இஸ் மை அசிஸ்டெண்ட் வசந்த். என்ன விஷயமா..."

"ஒன் வீக் பிஃபோர் என் டாட்டர் உங்களைப் பார்க்க வந்திருந்தாளா?"

"உங்க டாட்டருக்கு பேர் வச்சீங்களா சார்?"

"வசந்த்” என்று அவனை அதட்டி, “சாரி சார். உங்க டாட்டர் பேர்?" என்றான் கணேஷ்.

"நிவேதா அஷோக்".

"ஓ யெஸ். ஷி கேம். டோண்ட் சே மீ தட் யூ ஹேவ் அ நியூஸ்.”

“அப்கோர்ஸ் ஐ ஹேவ் அ வெரி பேட் நீயூஸ். மை டாட்டர் இஸ் நோ மோர்.”

- நன்றி பண்புடன் இணைய இதழ்.

-பண்புடனின் வெளிவரும் எனது தொடர்கதையின் முதல் பகுதி.

October 28, 2011

Crimson Chakra

சில சமயம் நண்பர்கள் இந்த உணவகம் நல்லாருக்கு. கண்டிப்பா போய்ட்டு வா என பரிந்துரை செய்வார்கள். அப்படி ஒரு நண்பன் பரிந்துரைத்தது தான் அடையார் காந்தி நகரில் இருக்கும் Crimson Chakra. நடிகர் சுரேஷ்மேனனுடையது என சொல்லப்படும் இந்த உணவகம் பெரிய பங்களாவை ரெனோவேட் செய்து இயங்குகிறது. மிகவும் அமைதியாக இருக்கும் ஏரியாவில் பெரிய புத்தர் சிலை உங்களை வரவேற்கிறது. சின்ன குளத்தின் கணுக்கால் அளவு தண்ணியிருக்க, தண்ணியில் காலை நனைத்துக்கொண்டும் சாப்பிடலாம். ஜூனியரை வைத்துக்கொண்டு கஷ்டமென்பதால், குளத்தினருகிலிருக்கும் டேபிள் choose செய்தோம்.

இரண்டு மெனு கார்டுகள். ஒன்று தென்னிந்திய உணவு வகைகளை பரிமாறும் க்ரிம்ஸன் சக்ரா. மற்றொன்று காண்டினெண்டல் வகைகளைப் பரிமாறும் கார்னுகோப்பியா. க்ரிம்ஸன் சக்ராவில் (பெரும்பாலும்)க்ரில் பேஸ்ட் உணவு வகைகளை பரிமாறுகிறார்கள். செட் மீல்ஸும் இருக்கிறது. நாங்கள் a-la-carte தேர்வு செய்துகொண்டோம். ஸ்டார்டருக்கு பனீர் வறுவல், தவா வெஜிடபிள்ஸ். பருப்பு சூப். மூன்றுமே நன்றாக இருந்தன. மெயின்கோர்ஸிற்கு காளான் ரொட்டி, பிந்தி மசாலா மற்றும் ஸ்மோக்ட் வெஜ் ரைஸ். பொதுவாகவே உணவகங்களில் சர்வ் செய்யப்படும் பராத்தா வகைகள் மிக திக்ககாக இருக்கும். ஆனால் இங்கு, காளான் ரொட்டி மெலிதாய், நல்ல சுவையோடு, மிருதுவாகவும் இருந்தது. காரசாரமான வெஜ் ரைஸ். அருமையான பிந்தி மசாலா. டெசர்ட்டிற்கு பஞ்சாமிர்தம் சொஃபல் மற்றும் கேரட் அல்வா ஆர்டர் செய்தோம். முதல் ஐட்டம் வித்யாசமாக நன்றாக இருந்தது. கேரட் அல்வா ஒக்கே ரகம் தான். கோவா நிறைய சேர்த்திருந்ததால் அவ்வளவாக கவரவில்லை.

மேலதிக தகவல்கள்

உணவகம் : க்ரிம்ஸன் சக்ரா
உணவு : தென்னிந்திய உணவுகள் வெஜ்/நான்வெஜ்
இடம் : காந்தி நகர், அடையார். அடையார் கிளப் அருகில்
டப்பு : 1800 இருவருக்கு. ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.

பரிந்துரை : அருமையான சூழல். நல்ல சர்வீஸ். உணவின் ருசிக்காக கட்டாயம் போகலாம். ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருப்பது மைனஸ். Must try atleast once:)

October 24, 2011

Scribblings 24-10-2011

நாங்க போட்ட மொக்கை தாங்காமல், கூகிளே பஸ்ஸை இழுத்து மூடும் முடிவுக்கு வந்திடுச்சு. பஸ்ல ஏறினதுக்கப்புறம் பதிவெழுதறது சுத்தமா நின்னுப்போச்சு. சும்மா ரெண்டு வரில தோணுனதெயெல்லாம் உளறிக்கொட்டி, வாங்கிகட்டிகிட்டு ஜாலியா இருந்த இடத்த மூடப்போறாங்கன்னு நினைச்சா கஷ்டம் இருக்கு. எதைக் கொண்டு வந்தோம்.... சரி சரி.. எங்கன சுத்தியும் ரங்கன சேருங்கற மாதிரி, பஸ்ல ஏறி சுத்தி சுத்தி, இப்ப தாய்வீடான ப்ளாகிற்கே திரும்ப வந்திட்டேன். முன்ன மாதிரி பதிவா போட்டுத் தள்ள முடியாதுன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன். பார்ப்போம்.
*****************

சென்ற வாரம் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து ஊருக்குப் போகிறேன். நிறைய மாற்றங்கள். முன்பு எங்கள் தெருவில் நாலே நாலு மச்சு வீடு தான் இருக்கும். இப்ப நாலே நாலு ஓலை வீடுகள் தான் இருக்கின்றன. அழகழகா வீடு கட்டியிருக்காங்க. வயதானவர்கள் முதற்கொண்டு சின்ன்பபொண்ணுங்க வரை எல்லாரும் நைட்டிதான். பளிச் கலரில் கண்டாங்கி கட்டும் எதிர்த்த வீட்டு ஆயா கூட நைட்டிக்கு மாறிட்டார்.

“என்னா ஆயா நைட்டிலாம் போட்டு அசத்துற?”

“அடப்போடி. அந்தப் பொடவைய வெளுத்து, காயவச்சு, கட்டிக்கறதுக்குள்ள, குடிச்சு கஞ்சி செரிச்சுப்புடுது. இது போட்டுக்கவும் சுளுவாருக்கு. வெளுக்கவும் சுளுவாருக்கு.”

அதுசரி.
**************

வீடுகள் மாறியிருந்தாலும், கிராமத்தில் மாறாமல் இருப்பது மனிதர்களும், நாய்களும்தான். கிராமத்தில் நாய்கள் புது ஆட்களை கண்டால் விடாமல் குரைக்கின்றன. நகரத்து நாய்களைப் போல் நிமிர்ந்து பார்த்துவிட்டு படுத்துக்கொள்வதில்லை. மனிதர்கள் காட்டும் பாசமும், கொடுக்கும் வரவேற்பும் அப்படியேத்தான் இருக்கிறது.

“சந்ரு மவளா நீஈஈ?”
”ஒம்மவனா? நீ இப்படியிருக்கையிலருந்து உன்ன பார்த்துகிட்டிருக்கேன். உனக்கு புள்ளன்னா மலைப்பா இருக்கு.”
“தீவளிக்கு வந்தியாக்கும்?”
(இன்றிரவே ஊருக்கு கிளம்பப்போகிறேன் என்றதும்)
“யே யப்பே. வாராதே ஆடிக்கொருதரந்தான். வரக்கொல்லவே கால்ல சுடுதண்ணிய ஊத்திகிட்டு தான் வருவீயளோ? பொங்கலுக்காவது பத்து பாயி்ஞ்சு நாள் தங்குறாப்புல வா”

எதிர்பட்ட பத்து பேரில் எட்டு பேர் கேட்ட கேள்விகள் இவை.

நான் பத்து மணிக்கு தான் போனேன். என் பால்ய தோழி ஒருத்தி என்னை அடையாளம் கண்டு விசாரித்தாள். ஐந்து நிமிடம் அவளிடம் பேசிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் நான் கிளம்புவதற்குள், இரண்டு முழம் ஜாதிமல்லியை நெருக்கமாக கட்டி கொண்டு வந்து கையில் கொடுத்தாள். ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. ”கனகாம்பரம் கூட இருக்கு. நீ வச்சிக்கமாட்டேன்னுதான் இதக் கொண்டாந்தேன்” என்றாள். ”ரெண்டடி தான் முத்து இருக்கு. இவ்ளோ பூ எப்படி வச்சிக்கிறது. நீயும் கொஞ்சம் வச்சிக்கோ” என்று பாதிபூவை அவளிடம் நீட்டினேன். ஏம்டி இம்புட்டு முடிய வெட்டிபுட்ட என்று அத்தையைப் போலவே திட்டியனுப்பினாள்.
********************

நண்பர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்..

October 19, 2011

காதல் எத்தனை வகைப்படும்?

நீ அருகில் இல்லாதபோது
எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்

#வாசன் ஐ கேர் காதல்
***********

என் பெயர் சொல்லி யார் கூப்பிட்டாலும்
திரும்பி பார்ப்பதில்லை
நான் நீயானதிலிருந்து

# ENT காதல்
**********

வெற்றுத் தாள் கைகளில்..
காகிதத்தில் அடக்க முடியாக் காதல்..

# Illiterate காதல்
***********

ரொம்ப வெயிட் போட்டுட்ட
எனச் சொல்லும் டாக்டரிடம்
எப்படிச் சொல்ல
என் இதயத்தில் நீ இருப்பதை

# குண்டு க் கவிதை
****************

எடையும் தூரமும் பொருட்டல்ல உனக்கு
எப்பொழுதும் உன்னை நோக்கியே என் எண்ணமும் செயல்களும்
நியூட்டனின் ஈர்ப்பு விதியை பொய்யாக்குகிறாய்

#சயிண்டிஸ்டின் காதல்
***************

என்னைத் தருகிறேனென்றேன்.
கொஞ்சமே கொஞ்சமாய் கொடுத்தாய் புன்னகையை.
வட்டியும் முதலுமாய் நிறைய வாங்கிக் கொண்டிருக்கிறாய் என் காதலை

# மார்வாடிக் காதல்

பி.கு : இந்த வருடக் காதலர் தினத்திற்கு பஸ்ஸில் போட்ட மொக்கைகள்:)