December 31, 2009

திரும்பி(யும்) பார்க்கிறேன்

பல காரணங்களால் 2009ஆம் வருடம் மறக்க முடியாத ஆண்டுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. பொறுமை, மனிதர்களைப் புரிந்து கொள்ளும் திறன் என நிறைய நல்ல விஷயங்களை பழக ஆரம்பித்திருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் தொடங்கிய அலைச்சல் சென்ற மாதம் தான் ஒரு நிலைக்கு வந்தது. வீடு மாற்றல், மாமனாரின் ஆஸ்பத்திரி வாசம், ஜூனியர் உடல்நிலை, அம்மாவின் உடல்நிலை, அப்பப்போ எனக்கு என மருத்துவ ரீதியாக நிறைய அலைச்சல்கள். எல்லாவற்றிர்கும் பழகிவிட்டது. முக்கியமாக ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து இப்போது நிறைய வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் 2009 நிறைய மகிழ்வான விஷயங்களையும், பொறுப்புகளை நேர்த்தியாக கையாளும் திறனையும் கொடுத்திருக்கிறது.
*********

இந்த முறை நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நகைச்சுவை பிரிவில் கேப்டனின் காவியத்தை சேர்த்துவிட்டுள்ளேன். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சாமீங்களா.
*********

நேற்றிலிருந்து 33வது புத்தக கண்காட்சி செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த வாரயிறுதிக்குள் செல்லும் திட்டமிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் சில புத்தகங்களை வாங்கும் அதிர்ஷ்டம் கிட்டும். ஆண்டவன் அருள் புரிவாராக. இது வாங்குங்கள் என பரிந்துரைக்கும் அளவிற்கு இல்லை என் வாசிப்பு. ஆனால் நிதானமாக புரட்டிப் பார்த்து, தேவையெனில் வாங்குக.
*********

2010 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான என் ஷெட்யூல் உறவுகளாலும், நண்பர்களாலும் வடிவமைக்கப்பட்டுவிட்டது. புத்தக கண்காட்சி, பொங்கல் கொண்டாட்டம், தோழியின் திருமணத்திற்காக வெளியூர் பயணம் என நான் ரொம்ப பிஸி:) ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த ஆண்டை. புத்தாண்டு சபதம் எடுக்கும் பழக்கம் இல்லை. எடுத்தாலும் முழுசாக நிறைவேற்றுவேனா என தெரியாது. பேஸிக்கலி ஐ'ம் அ சோம்பேறி. ஆனால் சென்ற ஆண்டு சில இலக்குகளை இலக்குகள் என தெரியாமல் அடைந்தது ஆனந்தமாக இருந்தது. இந்தாண்டும் அதுவா அமையுதான்னு பார்ப்போம்.
***********

உங்களனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த வருடத்தின் அழகான நினைவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு வலிகளை அங்கயே விட்டுவிட்டு, புது வருடத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பியுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. தொடர் ஆதரவிற்கு நன்றி.

December 28, 2009

ராஜா ராஜா தான்

மற்றுமொரு விடுமுறை நாளாகவே கழிய இருந்தது இந்தாண்டு கிறுஸ்துமஸ். சென்றாண்டு ராஜாமணி அங்கிளின் வீட்டிலிருந்து ஸ்பெஷலாய் வந்த ரம் பிளம் கேக்கையும், டக்கரான பால் பாயாசத்தையும் இந்த தடவை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஜூனியருக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருக்கையில் அல்லது சிம்பிளாக போராடிக்கொண்டிருக்கையில் அண்ணாவிடமிருந்து போன்.

குட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.

அப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் "பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.

சின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.





"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது
வள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது
"

பாலு சாரும் சித்ராவும் இணைந்து "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.

அடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு






"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
"

மனோவின் "செண்பகமே செண்பகமே" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). "அந்தி மழை பொழிகிறது" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு??) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? என மடக்கினார். "தெண் பாண்டி வீதியிலே"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு "நிலா அது வானத்து மேல"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் "ரமண பக்தன் பாடற பாட்ட பார்". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்

"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".

இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.

December 23, 2009

எஸ்.டி.டீன்னா...

தோழி விக்னேஷ்வரி நம்மளையும் ரவுடியா மதிச்சு ஒரு தொடர்பதிவுக்கு கூப்டனுப்பிருக்காங்க. எவ்வளவோ பணிசுமைகளுக்கு மத்தியிலே (சரி சரி) கிடைச்ச நேரத்த பயன்படுத்தி நான் எப்படி எழுத வந்தேன் (ஏன் எழுத வந்தேன் நீங்க நறநறக்கறது கேக்குது) அப்படிங்கற எஸ்.டி.டீயை விளக்குறேன் (பாத்திரம் மாதிரி கடையையும் பளிச்சுன்னு காலியா வெச்சிருக்காதீங்கப்பா).

ஆக்சுவலா இந்த மேட்டர் தான் என்னோட முதல் பதிவா எழுதியிருந்தேன் (என்னா ஒரு தொலைநோக்கு பார்வை). டெலிவரிக்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தபோது தம்பி அறிமுகப்படுத்தியது தான் இந்த பதிவுலகம். ரொம்ப நாளைக்கு சும்மா படிச்சிகிட்டேயிருந்த என்னை நீயும் ஒன்னு ஆரம்பிச்சு எழுதுன்னு சொன்னதே அவன் தான். பதிவு தொடங்கினவுடனே என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்கன்னு தமிழ்மணத்துல கேட்டேன். ச்சீப் போன்னு தொறத்திவிட்டுட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் கேட்டபோது 25 பதிவு எழுதியிருந்தேன். தமிழ்மணத்துல சேர்ந்ததுக்கப்புறம், நம்மளையும் எழுத்தாளர்ன்னு (இதப் பார்றா) மதிச்சு கொஞ்சம் பேர் ரெகுலரா ஊக்கமளிக்கிறாங்க. இதுக்கு நடுவுல வரலாற்றுல பொன்னெழுத்தூகளால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் நடந்தது. என் தீவிர பற்றின் காரணமாய் சங்கத்தில் கொ.ப.செ பதவி கொடுத்து கவுரவித்தார்கள் போர்படை தளபதியும், பொருளாளரும். இந்த மூன்றரை வருஷத்துலா 113 followers (நான் கிழிக்கறதுக்கு இது பெரிய விஷயம்). அதே மாதிரி அதிகப்படியா ஒரு பதிவுக்கு 168 கமெண்ட் வந்தது (என்னாது கும்மியலாம் கணக்குல வராதா?). சக பதிவர்களான ச்சின்னப்பையன், நர்சிம் மற்றும் அ.மு.செய்யது ஆகியோரு என்னோட சில பதிவுகளை நல்லாருக்குன்னு சொல்லி வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஓரே ஒரு பதிவு (எனக்குத் தெரிஞ்சு) யூத் விகடன்ல வந்திருக்கு. அப்புறம் மூணு பதிவு தமிழ்மணம் வாசகர் பரிந்துரைல வந்திருக்கு (ஸப்பா கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளிவிவரம் கொடுத்தாச்சு).

இதுவரைக்கும் உருப்படியா ஒன்னும் எழுதலன்னாலும் (அதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே. நானும் அப்படியே ஆரம்பிச்சுட்டா மொக்கை யார் போடறது) still i enjoy scribbling (அப்பாடி பிளாக் பேர் வர்ற மாதிரி பார்த்துகிட்டாச்சு). இது மட்டும் தான் எழுதனும்ன்னு ஒரு எல்லை இல்லாம, நான் கேட்ட, பார்த்த, என்னை பாதித்த, எனக்குப் பிடித்த, எனக்கு தோன்றிய அனைத்தையும் பகிர்ந்துகொள்ள நல்லதொரு இடமா இது இருக்கு. அடுத்த வருஷத்தோட நான்கு வருடங்களாகிறது பதிவெழுத வந்து. இன்னதான்னு இல்லாம எல்லா விஷயங்களையும் அலசி காயப்போடுகிற பதிவுலகம் நிறைய சுவாரசியங்களை எனக்கு கொடுத்துகிட்டே இருக்கு.

உங்களோடு ஆதரவும் தொடரும்கிற நம்பிக்கையோடு...

December 21, 2009

Avatar

நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக ரீலிசான இரண்டாவது நாளே ஒரு படத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது நீண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாக்களுடன் பார்த்த படம். சரி சொந்த கதை போதும். படத்துக்குப் போவோம். பயங்கர எதிர்பார்ப்புடன் போன படம். கேமரூன் ஏமாற்றவில்லை. ஆவென வாய்பிளந்து பார்க்கும் வகையில் விஷுவலைஸ் பண்ணியிருக்கிறார். அல்டிமேட் கிராபிக்ஸ்.

கதை?? எனக்கென்னவோ கேமரூன் நிறைய தமிழ்படங்கள் பார்த்திருப்பார் எனத் தோன்றுகிறது. சத்தியமாக டெக்னிகல் மேட்டரும், பிரமாண்டமும், வசனங்களும் தான் (இதைக் கூட சேர்த்துக்க முடியாது. கௌதம் மேனன் படத்தில் கூட இங்கிலிபீஸ் டயலாக் ஜாஸ்தி)ஆங்கில படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது. முழுக்க ழுழுக்க ஒரு பக்கா தமிழ் மசாலா படம். பண்டோரா என்ற ஒரு கிரகம்/நிலவில் இருக்கும் அபரிதமான வளத்தை எடுக்க போகிறது வில்லன் & கோ. அதில் போரில் இடுப்பின் கீழ் செயலிழந்த ஹீரோவும் அடக்கம். மேற்படி மேட்டரை எடுக்கத் தடையாக இருக்கிறார்கள் அந்தக் காட்டின் பூர்வகுடிகளான நவி பழங்குடியினர். நீல வண்ணத்தில் அண்ணாந்து பார்க்கும் உசரத்தில் கூர்மையான காதுகள், மின்னும் கண்கள், நீண்ட ஜடை (Bonding பண்ண என்ற லாஜிக்) என மனிதர்களும், டைனோசருடன் கிராஸ் செய்த மாதிரி இருக்கும் யானை (யானைதானே??), சிங்கம், பறவைகள் என சூப்பர் கிராபிக்ஸ். டி.என்.ஏ மாற்றம் & சயின்ஸ் தில்லாலங்கடி வேலைகள் மூலம் ஹீரோ நவியாக மாற்றப்பட்டு காட்டினுள் விடப்படுகிறார்.அவனுக்கு இடப்படும் கட்டளை உள்ளார புகுந்து ஊட்டை கலைக்க வேண்டிய வேலை. சிங்கம்/புலி/ஓநாய்/ ஏதோ ஒரு எழவு மிருகத்திடமிருந்து ஹீரோவை காப்பாற்றுகிறார் நாட்டாமையின் பெண். அப்பாலிக்கா ரெண்டு பேருக்கும் லவ்ஸ். ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி நவிக்களைக் காப்பாற்ற நினைக்க அதற்கு வில்லன் கும்பல் தடைபோட, சயிண்டிஸ்ட் மற்றும் நவிக்களின் உதவியுடன் ஹீரோ வில்லன்களை அழிக்கிறார். எப்படி? நீங்களே பார்த்துக்கங்ப்பா.



என் உச்சி மண்டைல கிர்ர்ருங்குது மாதிரி நாலு பாட்டு மட்டும் தான் சேர்க்கல. மத்தபடி ஒரு டிபிக்கல் விஜய் மூவி. இன்பாஃக்ட் விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம். ரணகளத்திலயும் கிஸ்ஸடிக்கிற கிளுகிளுப்பாகட்டும், மேலேஏஏருந்து அருவில ஜம்ப் செய்யறதாகட்டும், ப்ளேனிலிருந்து பறவை/டிராகன் மேல லேண்ட் ஆகறது (குருவில அந்த ட்ரெய்ன் ஜம்ப் சீன் இன்னும் என் கண்ணுலயே நிக்குது) என விஜய்க்கான அத்தனை அம்சங்களும் படத்தில். மேக்கப் செலவும் மிச்சமாயிருக்கும். ப்ச். டாக்டர். ஒண்டிப்புலி மிஸ் பண்ணிட்டார். கிளைமேக்ஸில் விலங்குகள் வந்து சண்டை போடும்போது கேமரூன் ராமநாராயணன் கிட்ட அசிஸ்டெண்ட வேலை பார்த்தாரோன்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு. ஆனாலும் காட்டில் அந்த தாவரங்களும், அந்த சேக்ரட் மரமும் சிம்ப்ளி வாவ். இரண்டே முக்கால் மணிநேரம் அட்டகாசமான டெக்னிகல் விருந்து. கேமரூனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலிம் தெரிகிறது.

அவதார் - டெக்னிகல் விஸ்வரூபம்

December 17, 2009

இயந்திரமாய் நட

இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாண்டி கீழே இறங்கும் உற்சாகம்
பால் போடும் பையனின் குட்மார்னிங்
மெல்லிய ஈரத்துடனான தார் ரோடுகள்
தலைக்கு மேலே தொட்டு விடும் தூரத்தில் மினி மேகக்கூட்டமாய் பனிமூட்டம்
மூக்கின் நுனியை அடிக்கடி நீவச் செய்யும் குளிர்
மூங்கில் கழிகளில் கட்டப்பட்ட தென்னந்துடப்பத்தின் இடுக்குகளில் சிக்கிய சருகுகளின் சங்கீதம்
பளிச்செனப் பெருக்கிய கான்க்ரீட் தரையில் வரையப்படும் மெருகு குறையா கோலங்கள்
இன்னமும் சர்வீசில் இருப்பதாய் நினைக்க வைக்கும் ரிடையர்ட் தாத்தாக்களின் கைவீச்சுகள்
காலை டிபன், மதிய லஞ்ச் மெனுக்களினூடே மாமியார் பாட்டு பாட்டும் ஆபிஸ் ஆண்டிகள்
காதிலும் கழுத்திலும் ஆப்பிள் தொங்கவிட்டுக்கொண்டும் ஓடும் யுவதிகள்
அவர்கள் பின்னே ஓட்டமும் நடையுமாக ஜிடிபி பேசும் அரை டிராயர் அங்கிள்கள்
கறிவேப்பிலை தோரணம் கட்டி,
உருளை மூட்டையில் ஊர்வலம் போகும் காய்கறி மாப்பிள்ளைகள்
மணக்க மணக்க சந்தனமும்
பட்டை பட்டையாய் விபூதியும் தீட்டி சவாரிக்கு தயாராகும் ஆட்டோக்காரர்கள்
ஆவி பறக்கும் டீயை சுழற்றி சுழற்றிக் குடிக்கும் தினக்கூலிகள்
ஆராவாரமில்லாத ரோட்டின் நடுவே தைரியமாய் வண்டி ஓட்டிப் பழகும் இளம்பெண்
மாடர்ன் ஆர்டாய் தோன்றும் வியர்வை நனைத்த சட்டை
இடமிருந்து வலமாக சரக்கென்று இழுத்து நெற்றி வியர்வையை உதறும் விரல்கள்
ஒவ்வொருவர் கடக்கும் போதும் கரையும் ஒற்றை வேப்பமரத்துக் காகம்
இவை யாவுமே காணக் கிடைப்பதில்லை
ஏசி அறையில் நின்ற இடத்திலிருந்தே
5 கி.மீ நடக்கும் இயந்திர மனிதர்களுக்கு...

December 15, 2009

தெலுங்கானா... ஆனா??

தெலுங்கானா என தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு இசைந்தது என்ற செய்தி வெளியானவுடன், கூர்க்காலேண்ட் என ஒரு கோஷமும், காரைக்கால் என ஒரு கோஷமும், கூர்க் என கர்நாடகாவிலிருந்து குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் உச்சமாக உ.பி மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று வீட்டில் நடந்த விவாதங்களின் விளைவே இப்பதிவு.

ஆந்திராவை விட்டு தெலுங்கானாவை பிரிப்பது அவசியமா எனக் கேட்டால் இல்லை என்பதே என் கருத்தாகும். முதலில் இம்மாதிரி மாநிலங்களை பிரிப்பதால் நிர்வாக செலவு கூடுதலாகும். முதலமைச்சர் முதற்கொண்டு முனிசிபாலிட்டி ஆபிசர் வரை சம்பளம், இத்யாதி இத்யாதி. மத்திய அரசு துறைகளின் பணிச்சுமை கூடுதலாகும் (இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க). மாநில வாரியான இடஒதுக்கீடுகள், நிதி ஒதுக்கீடுகள் என பல பிரச்சனைகள் எழும். இதை விட அதிமுக்கியமானது. ஒரு பிள்ளை அழுதால் சுத்தியுள்ள அத்தனையும் அழும். அது மாதிரி ஆளாளுக்கு கூவினால்? தமிழ்நாடு தனி நாடாகலாம் (பெரிய குடும்பமெனில் கண்டிப்பாக ஜனாதிபதி பதவி உண்டு. பெரியவர் பதவியில்லாமல் கஷ்டப்படுவார்). வடக்கு தெற்கு என இரு மாநிலங்களாய் பிரிக்கப்படலாம். இரு பிள்ளைகளோ, உடன்பிறவா சகோதரிகளோ, தந்தையும் மகனுமோ ஆளுக்கொரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகலாம். நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. இப்படி மொழி/ஜாதி/ வாரியாக பிரிக்கும்போது, மக்களிடையே மேன்மேலும் துவேஷம் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே மும்பை மராத்தியர்களுக்கே என்ற பிரச்சனைப் போல் தெலுங்கானாவில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றால்? (சந்திரசேகர் ராவ் இப்பொழுதே ஹைதராபாத்தை விட்டுத் தர மாட்டோம் என்கிறார். வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி மூக்கு விடைப்பா இருக்கறதால இப்படியெல்லாம் பண்றாரோ??!!). இம்மாதிரியே வெளியாட்களை தடுத்தால், பெருகிவரும் ஜனத்தொகையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறையாதா? எத்தனை நாளுக்குத் தான் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்ட முடியும்?

சரி பிரிக்கவேயில்லையென்றாலும் அதே குண்டு சட்டி தானே? பீஹாரிலிருந்து 2000ஆம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது ஜார்கண்ட். பிரிக்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பழங்குடி மக்களின் முன்னேற்றம். அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென்பதே. மற்றொன்று அபரிதமான கனிம வளங்களை (இந்தியாவில் கனிம வள உற்பத்தியில் முண்ணனி வகிக்கும் மாநிலமிது) பெற்ற இப்பகுதியை பிரிப்பதால் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு அம்மக்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதாலும். அதற்கேற்றார் போல் 2000 ஆம் ஆண்டிலிருந்து அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 14.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது (தகவல் - http://www.ibef.org). ஆனாலும் இது எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி அல்ல என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. மதுகோடா (4000 கோடி. சொக்கா சொக்கா எத்தனி சைபர். ஹூம்ம்ம்ம்), சிபு சோரன் என மோசமான அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியும் ஒரளவுக்குத் தடுமாறி முன்னேறியிருப்பதற்கான ஒரே காரணம் இயற்கை வளங்கள். இந்த வளர்ச்சி தெலுங்கானாவில் சாத்தியப்படாதா எனக் கேட்டால் கஷ்டம் தான் என்பது என் எண்ணம். ஏற்கனவே ஓரளவுக்கு முன்னேறிய இடத்தில் இண்வெஸ்ட் பண்ணும்போது ரிடர்ன்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கும் தானே. நம் நாடு இப்போது இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட இண்வெஸ்ட்மெண்டுகள் கொஞ்சம் தேவையில்லாதது தானே?

பிரிக்காமலே/கண்டுக்கொள்ளாமலே இருந்தால் வளர்ச்சி என்னாகும்? அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நாங்கள் சவலைப் பிள்ளை போலாகி வருகிறோம் என புலம்பல்கள். சவலைப் பிள்ளைகளை ஆரோக்கியமாக்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வருத்தங்கள். ஏன் என யாரேனும் யோசிக்கிறார்களா? திறமைசாலிகளை வெளியிலிருந்து வரவழைக்க காரணம் உள்ளூர்வாசிகளுக்கு மேல் மாடியில் சரக்கு பத்தவில்லை என்பது தானே. அனைவருக்கும் அடிப்படைத் தேவையான கல்வியை பாகுபாடில்லாமல் வழங்குவதன் மூலம் மட்டுமே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முடியும். தனித் தெலுங்கானா கேட்டு போராடுபவர்கள் எங்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். புறக்கணிப்பிற்கு முக்கிய/அடிப்படை காரணமான போதிய கல்வி அறிவு இல்லாததற்கு என்ன செய்ய போகிறார்கள். போராடுபவர்கள் தெலுங்கானாவில் இருக்கும் பள்ளி/கல்லூரிகளில் எங்களுக்கு முன்னுரிமை (தகுதி அடிப்படையில் மட்டுமே) வழங்க வேண்டும் என போராடினால் ஒரு நியாயம் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறைகள் சொத்து சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை கல்வி கொடுப்பதில் காட்டத் தவறிவிட்டார்கள் (மிகச் சிலரே என்றாலும் தாக்கம் பெரிது). நாமும் அத்தவறை செய்யாமலிருப்போம். சரியான கல்வி மட்டுமே மக்களையும் நாட்டையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும்.

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே.

December 10, 2009

ராமராஜனின் ஹிப் ஹாப்

டான் பிரவுனின் ஐந்தாவது படைப்பான தி லாஸ்ட் சிம்பலைப் பற்றி. முதல் நான்கு படைப்புகளும் சூப்பர் ஹிட். ட்ரெய்னிங் நாட்களில் கீபோர்ட் வைக்குமிடத்தில் டாவின்சி கோடை சிலாகித்துப் படித்த நாட்கள் நினைவிருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் I hardly find time to breath:( ஏழு பாகம் முடித்துவிட்டதாய் புக்மார்க் சொருகியிருந்த புத்தகத்தை அம்மா வீட்டில் பார்த்ததும் படிக்கணும்னு ஒரு ஆர்வம். ஆனால் மரண மொக்கை என்று நண்பர்கள் கூறியதால் படிக்கனும் என்ற ரிசர்வ்டு லிஸ்டில் இருந்து தூக்கிவிட்டேன். சென்ற மாதம் போயிருந்தபோது வேலை அதிகமாக இருப்பதால் படிக்க டைமில்லை. நீ வேணும்னா எடுத்துகிட்டுப் போ என தம்பி சொன்னதும் லவட்டிகிட்டு வந்துட்டேன்.

ஐந்து வருடத்தின் உழைப்பை ஒரே புத்தகத்தில், 500 பக்கங்களில் அடக்க முயன்றிருக்கிறார் பிரவுன். முடிவு எ லாங் ஹாவ்வ்வ்வ்வ்வ்வ். தன் மெண்டரான பீட்டர் சாலமனை கடத்திய நபர் மூலம் தந்திரமாக வாஷிங்டன் வரவழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். வில்லனின் கோரிக்கை என்ன? ராபர்ட்டிடம் என்ன எதிர்பார்க்கிறார்? ராபர்ட் பீட்டரை மீட்டாரா? இதுதான் கதை. ஒரு இரவில் நடக்கும் கதையை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்லிருக்கவேண்டும். ஊஹூம். லாங்டனின் தொழிலான டீச்சர் வேலையை ஆசிரியரும் செய்கிறார். புத்தகம் முழுவதும். மேசன்ஸ் ஆரம்பித்து, பழங்கால மேனுஸ்க்ரிப்ட்ஸ் வரை லெக்சர். செம போர். அதோடில்லாமல் ஒவ்வொரு கேரக்டரின் லென்த்தியான அறிமுகம் ரொம்பவே போரடிக்கிறது.

தமிழ் படங்களைப் போலவே ரெண்டு மூணு கிளைமேக்ஸ். எனக்கு ஏற்பட்ட ஒரே சுவாரசியம் மல்லாஹ் பற்றின திருப்பம் தான். அதே போல் கேத்தரினின் சில ஆய்வுகள் இண்டரெஸ்டிங். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் கோஹ்லரை வில்லன் போலவே காட்டுவது மாதிரியே இதில் CIA Head சாட்டோவை காட்டுகிறார். இந்த எக்ஸ்ட்ரா பில்டப்பே இவங்க அவுங்க இல்லன்னு கிளியரா சொல்லிடுது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரவுன்.
*****

2 ஸ்டேட்ஸ். சேத்தன் பகத்தின் லேட்டஸ்ட் படைப்பு. பகத்துக்கு சிம்பிள் கதைகளை சுவாரசியமாய் சொல்லும் திறமை நன்றாகவே இருக்கிறது. பஞ்சாப் பையன். தமிழ் பெண். காதல். கல்யாணம் வரை கொண்டுபோக படும் பாடு. இதுதான் கதை. தமிழர்களை நன்றாக வாரியிருக்கிறார். ரொம்ப போரடிக்கும்போது படிக்கலாம். அங்கங்கே ஹார்ட்டி லாப்ஸ் உண்டு. முக்கியமாக கடைசி சில பக்கங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஒரு தடவை ட்ரை பண்ணலாம்.
*********

ஜூனியருக்கு ப்ரீ.கேஜி அட்மிஷன் பார்ம் கொடுக்க சென்றிருந்தேன். அவனின் பிறப்புச் சான்றிதழை சரிப்பார்த்த அந்தம்மா "மேடம் உங்க பேர்ல இருக்கிற சந்திரசேகரனை அடிச்சிடுங்க" என்றார். ஞே என நான் முழிக்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் என் பெயர் வித்யா என்று இருக்காம். அதனால் வித்யா சந்திரசேகரன் என அப்பா பெயர் சேர்த்து எழுதக்கூடாதாம். வேற எந்த இடமாக இருந்தாலும் சொன்னவர்களை கொஞ்சம் காச்சியிருப்பேன். இங்கு குழந்தை என்றானதால் காம்ப்ரமைஸ் செய்யவேண்டியதை நினைத்து நொந்து போனேன். ஹூம். அதோடில்லாமல் "அட்மிஷன் கிடைக்கும் பட்சத்தில் பர்த் சர்ட்டிபிகேட்டை ஆங்கிலத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தமிழில் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார். தமிழுக்கும் அமுதென்று பேர்...
**********

ஐ - பாட்

கிராமத்து ராசா டக்கராக டான்ஸ் ஆடும் பாட்டு. இளையராஜாவின் வாய்சில் அந்த ட்ரம்சும் கீபோர்டும் போட்டி போட்டுக் கொண்டு பீட்ஸ் கொடுக்கும். காலேஜில் ஜூனியர்ஸ்க்கு பிரஷெர்ஸ் பார்ட்டி கொடுத்தபோது ஒரு ஜூனியர் (ஆந்திரா) பையனை இந்தப் பாட்டுக்கு ஹிப் ஹாப் ஆடச் சொன்னோம். சூப்பராக ஆடினான். அதோடில்லாமல் "அக்கா செம பீட்ஸ் அக்கா ஈ சாங்கு" என்றான். தமிழ் மக்கள் அனைவரும் மட்டும் அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நண்பர்களுக்கும் நாங்கள் ஏன் சிரிக்கிறோம் என தெரியவில்லை. பின்னர் அனைவருக்கும் இந்த வீடியோவை காட்டியபின் புரிந்தது.

"ஹே அந்த ஜூனியருக்கும் இந்த வீடியோவை காட்டலாமா"
"வேண்டாம். கண்டிப்பா செத்துடுவான்".

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே




டிஸ்கி : வீடியோ பார்த்து கண்ணவிஞ்சா கம்பேனி பொறுப்பேற்காது
**********

வேட்டைக்காரன் ட்ரெய்லரை அடிக்கடி காட்டுகிறது சன் டிவி. எப்படியும் கதை பற்றியோ, நடிப்பு பற்றியோ விஜய் கவலைப்படபோவதில்லை. நம்மளும் அவரை குறை சொல்வதை நிறுத்தப் போவதில்லை. இப்போது விஜய்க்கு ரொம்ப முக்கியமாய் தேவைப்படுவது ஒரு நல்ல காஸ்ட்யூம் டிசைனர். திருமலை தொடங்கி வேட்டைக்காரன் வரை கட் பனியனும், பட்டன் போடாமல் திறந்த சட்டையுமாய் அலைகிறார். இல்லன்னா கண்றாவியாய் சூட். முடியலடா சாமீ. சார் அட்லீஸ்ட் இதையாவது கொஞ்சம் மாத்துங்க சார். பாட்டுகளை இப்பதான் கேட்கிறேன். டூ லேட் என்பது தெரியும். என்னோட பேவரைட் என் உச்சி மண்டைல, புலி உறுமுது, (இவை ரெண்டும் இப்போது ஜூனியரின் ஹிட் லிஸ்டில் டாப்) கரிகாலன் காலை. விஜய் ஆண்டனி கலக்கியிருக்கார். விஜய்யும் பிச்சி உதறுவார் என நம்புவோம்.
**************

டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)

December 8, 2009

நான் மேகா...

அடையாறின் இருதயப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான பங்களா, கம்பெனியின் 60% பங்குகள் என் பெயரில், எத்தனை கோடிகள் எனத் தெரியாத பேங்க் பேலன்ஸ், வைரம் பிரதானமாய் தங்கம் நிறைய என எக்கச்சக்கமான நகைகள், பொழுதுக்கு ஒரு கார், கட்டற்ற சுதந்திரம். இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற இருபத்தியோரு வயது பெண்ணுக்கு கவலை ஏதேனும் இருப்பது சாத்தியமா? என் விஷயத்தில் சாத்தியமாகிறது. மேற்கொண்டு என் கவலைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் என்னைப் பற்றி கொஞ்சம் இல்லை கொஞ்சம் நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.

நான் மேகா...

இரண்டு வாரங்களுக்கு முன் நான் மேகா. என் பிறப்பைப் பற்றி அறிந்திடாத மேகா.

எக்கச்சக்கமாய் வெளிநாட்டு நன்கொடைகளைப் பார்க்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தான் நான் வளர்ந்தேன். அல்லது வளர்க்கப்பட்டேன். நான் அங்கு எப்படி வந்தேன், யார் கொண்டு வந்து போட்டார்கள், என்ன வயதில் அங்கு சேர்ந்தேன் என எந்த ரெக்கார்டும் இல்லை. ஐந்து வயதிலேயே எனக்கு வாயும், அறிவும் ஜாஸ்தி என ஹோம் சிஸ்டர் திட்டுவதை கேட்டு வளர்ந்தேன். கைகளில் கிழிந்த பஃப் வைத்த சட்டை. என்னுடனே மேல்நோக்கி வளரும் பாவாடை, யாராவது பிறந்தநாள் என வந்தால் அவரை வாழ்த்திப் பாடிவிட்டு, அவர் போடப்போகும் சோற்றிற்காக கண் விரிந்து, வாய் பிளந்து காத்திருப்பது, தீபாவளியன்று அபூர்வமாய் கிடைக்கப் பெறும் மத்தாப்பு சீக்கிரமே எரிந்துவிடக் கூடாது என கவலைப்பட்டுக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கு அறவே பிடிக்கவில்லை.

நான் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு அந்த சிறையிலிருந்து விடுதலை கிருஷ்ணன்-ராதா தம்பதியினர் மூலம் கிடைத்தது. அதாவது நான் அப்பா அம்மா என அழைக்கவேண்டிய, அதற்கு அஃபிஷியலாய் தகுதிப் பெற்றவர்கள். சுருக்கமாய் என்னை தத்தெடுத்தவர்கள். மேகா என பெயர் சூட்டியவர்கள். அதுவரை குட்டியாக இருந்த நான் மேகாவாக அவதரித்தேன். அவர்களின் அதீத அன்பினால் நான் ஹோம் வாழ்க்கையை முற்றிலுமாக மறந்து தேவலோக வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில் இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் கை நழுவலாம் என்பதால் படிப்பில் ரொம்பவே கான்சண்ட்ரேட் செய்தேன். இதோ பைனல் இயர் MBA. இன்னும் இரண்டு மாதங்களில் தலையில் வைத்திருக்கும் தொப்பியை தூக்கிப்போடுவது போல் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்ததும் கம்பெனியில் ட்ரெய்னிங். பின்னர் போர்ட் கூடி முடிசூடல் என கிருஷ் சத்தியம் பண்ணிருக்கார்.

கிருஷ் அப்படித்தான் அப்பாவை கூப்பிடுகிறேன். இவர்களிடம் வந்து சேர்ந்த 13 வருடங்களில் என் வேர்களைத் தேடியலையும் வாய்ப்பை எனக்குத் தரவில்லை. என் பேச்சு தான் வேதம். என் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே பிறவியெடுத்திருப்பதாய் நடந்துகொள்ளும் கிருஷ். மகள் என்றில்லாமல் ஒரு தோழியைப் போல நடத்துபவர். வெரி இண்டலிஜண்ட். வெரி வெரி பிராக்டிகல். அவரைப் பார்த்து வளர்ந்த நானும் அப்படியே. நான் செத்துப்போ என்றால் மறுகணம் செய்யத் தயாராய் இருக்கும் ராதா. இந்த அம்மாக்கள் அல்லது முக்கால்வாசி பெண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என எனக்குப் பிடிபடவில்லை. முணுக்கென்றால் ஒப்பாரி. இன்னதுக்குத்தானென்றில்லை. ஆவுன்னா பெண்ணின் வலி என ஆரம்பித்து நீளும் சலிப்பேற்றும் ஓப்பாரி. வுமன்ஹுட்டை செலிபிரேட் செய்யத் தெரியாதவர்கள். ஆண்கள் நம் வலியை உணரவேண்டும் என எப்படி ஏதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. சயின்ஸ். ஆண்களால் பிள்ளைப் பெற முடியுமென்றால் பெற்றுவிட்டு போகிறார்கள். முடியாது. நம்மால் எப்படி ஆண்களின் பிரச்சனையை அணுக முடியாதோ அதேபோல் அவர்களால் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் முடியாது. இதனாலேயே நான் ராதாவிடம் அதிகம் பேசுவது கிடையாது. ராதாவோ பொம்பளப் பொண்ணு அப்பா மேல பாசமா இருக்குது என்ற அபத்தமான விதியை ஃபாலோ செய்கிறது.

சிறகடித்து வானத்தில் பறந்து கொண்டிருந்த என்னை இரண்டு வாரங்களுக்கு முன் தரையில் நடக்க வைத்த சம்பவம் அரங்கேறியது. ஈசிஆரில் ஒரு லேண்ட் டீலிங்கை முடித்துவிட்டு திருவான்மியூர் சிக்னலில் வெயிட் செய்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து எப்படி வந்தான் எனத் தெரியாமல் ஒருவன் திடீரென காரின் ஜன்னலை படபடவென அடித்தான். ஒரு செகண்ட் திகைத்துவிட்டு மறுகணம் சுதாரித்துக் கொண்டேன். மாதங்களாய் பிளேடை பார்க்காத தாடி, எண்ணைய் காணாத கேசத்தைத் தவிர வேறெதுவும் அவனை பிச்சைக்காரனாய் எடை போடுவதை தடுத்தது. கொஞ்சம் தயக்கத்துடன் டாஷ்போர்டிலிருந்து சில நாணயங்களை எடுத்துக் கொடுக்க கொஞ்சமாய் கார் கண்ணாடியை இறக்கினேன். அதுவரை என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் "விஜயா விஜயா உன் அம்மாவ அப்படியே உரிச்சு வச்சிருக்க" என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்து எஞ்ஜினை உயிர்ப்பித்தேன். "உன் அம்மா உன்னை ஹோம் வாசலில் போட்டபோது நானும் கூட இருந்தேன்" மூடிக்கொண்டிருந்த ஜன்னல் கண்ணாடி தாண்டி அவன் குரல் தேய்ந்து வந்து விழுந்தது. உடம்பில் சுர்ரென்று ஏதோ ஒரு உணர்வு பாய்ந்தது.

ஹன்னா மௌண்டானாவில் மனம் லயிக்கவில்லை. ராதா செய்த குணுக்கு தொண்டை தாண்டி கீழே இறங்கமாட்டேன் என ஸ்ட்ரைக் செய்தது. சுஜாதாவின் பெண் இயந்திரம் மக்கர் செய்தது. மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஏதோ ஒரு பைத்தியக்காரன்/பிச்சைக்காரனைப் போய் சிக்னல் சிக்னலாய் தேடுவது ரொம்ப அப்ஸர்டாகப்பட்டது. ஆனாலும் ஒரு குறுகுறுப்பு, நிஜமாய் நான் யாரென்ற தேடல், என் வேர்களின் ரகசியமறியும் ஆசையும் கொஞ்சம் எழுந்தது. விஜயா என்றானே. என்னைப் பெற்றவள் வைத்த பெயராய் இருக்குமோ? ரொம்ப ஓல்ட் ஃபேஷன் பெயர். இந்த சம்பவத்தை மறக்கவும் முடியவில்லை.

கிருஷ் ரிலாக்ஸ்டாக இருந்த சாயந்திரம் அவர் முன் போய் அமர்ந்தேன். சுருக்கமாக நடந்தவற்றை சொல்லி முடித்தேன். சின்னதாக ஸ்மைல் பண்ணியவர் "லுக் மேகா. இது உன் லைஃப். இதில் டெசிஷன் எடுக்க எனக்கு உரிமையில்லை. Probably ஐ கேன் அட்வைஸ் யூ. அதை ஃபாலோ செய்வதும் உன் இஷ்டம். இத்தனை வருடம் கழித்து அந்த நபர் உன்னை ஏன் சந்திக்கனும்? உன்னிடமிருக்கும் பணத்திற்காக கூட இருக்கலாமல்லவா? ஸோ திங்க் அண்ட் ஆக்ட் வைஸ்லி. த பால் இஸ் இன் யுவர் கோர்ட்" என கன்னத்தைத் தட்டி விட்டு போனார். ஹி இஸ் ரைட். நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? இத்தனை வருடமாய் இல்லாமல் போனவளை இனிமேல் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன?

ஒருவேளை அவன் சொல்வது நிஜமாக இருந்தாலும் கண்டிப்பாக நான் என்னைப் பெற்ற தாயை கொண்டாடப் போவதில்லை. என்னைத் தூக்கி போட எப்படி மனது வந்தது என நாடகத்தனமான கேள்விகளையும் கேக்கப்போவதில்லை. நோ யூஸ். லீவ் த கிராப் ஹியர் என முடிவெடுத்தேன். ஆனாலும் மனித மனம் குரங்கு என்பதை நிருபித்தது. அந்தாளைப் பார்ப்பதால் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. என்னைப் பெற்றவள் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதிலும் நோ ஹார்ம். அவனைப் பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். சென்ற ஞாயிற்றுகிழமை திருவான்மியூர் சிக்னலுக்கு அருகே பாம்பே டயிங் ஷோரூம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு நடந்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்தேன். எங்கிருந்து எப்போது வேண்டுமென்றாலும் அவன் வரலாம் என்ற எண்ணத்தில். ஒருவேளை அவன் பணத்துக்காக என்னை கடத்திவிட்டால்? விளைவுகள் பக்கென்றிருந்தது. யோசனையில் நடந்துகொண்டே இடதுபக்கம் பார்த்தேன்.

வலது தோளை ஒரு கை அழுந்தப் பற்றியது.

திடுக்கிட்டு திரும்பினேன்.

பசிக்குது ஸ்வேதா என்றார். இன்னும் 10 பக்கம் தான் பாக்கி. ஹூம்ம்ம். புக்மார்க் சொருகிவிட்டு சமையல்கட்டில் நுழைந்தேன் என்னவரின் உணவிற்காக.

நான் ஸ்வேதா...

December 3, 2009

ரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


ரொம்ப நாளாய் ஒரு authentic cuisine ட்ரை பண்ணனும் என்றிருந்தது. சைனீஸ் என்றால் ரகு அலறுகிறார். கேரளா என்றால் தம்பி முறுக்கிக் கொள்கிறான். இந்த நேரத்தில் ஒரு நாள் இடைவெளி விட்டு பெற்றோருடைய திருமணநாளும், என் திருமணநாளும் வந்தது. எங்கள் மணநாள் fell on a weekday. எங்கும் பிளான் பண்ணி போகமுடியவில்லை. பெற்றோரின் மணநாளன்று "எப்பப் பாரு கிச்சன்லயே தான இருக்க. இன்னிக்கு சமைக்க வேண்டாம். லஞ்சுக்கு வெளிலப் போகலாம்" என நாங்கள் எல்லாரும் அம்மாவை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தோம். அம்மாவிற்கு நான் - வெஜ் அலர்ஜி. சரவண பவன் மீது கடுங்கோபத்திலிருந்தார் அப்பா. இந்த தடவை சம்திங் நியூ என நினைத்து முடிவானது தான் புரசைவாக்கத்திலுள்ள ரசம் ரெஸ்டாரெண்ட். ஸ்ரீகிருஷ்ணா குழுமத்தின் authentic கொங்குநாட்டு உணவுகள் பரிமாறப்படும் சைவ உணவகம்.

கண்டிப்பாக டேபிள் ரிசர்வ் செய்யனும். புரசைவாக்கத்தில் அந்த கட்டிடம் குட்டி செட்டிநாட்டு அரண்மனை போலிருந்தது. கீழே ஸ்வீட்ஸ். முதல் மாடியில் ரெஸ்டாரெண்ட். அட்டகாசமான இண்டீரியர். மெனுவை அலசுவதற்கு முன் கொங்குநாடு பத்தின தம்மாத்தூண்டு டிடெய்ல்ஸ் நானறிந்தளவில். கொங்குநாடு என்பது கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு காங்கேயம், திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி, பழனி, சேலம், தாராபுரம் போன்ற கிட்டத்தட்ட 50 ஊர்களை உள்ளடக்கிய பிராந்தியம். ஏறத்தாழ தேங்காயோடு அளவான மசாலாக்களை சேர்த்து மிதமான காரத்திலேயே சமைக்கிறார்கள். இதெல்லாம் என் கோயம்புத்தூர் நண்பனின் அம்மா சொன்னது.



ஓவர் டு த ஃபுட். எங்களிருவரைத் தவிர மற்ற அனைவரும் கொங்குநாடு ஸ்பெஷல் thali ஆர்டர் செய்தார்கள். வெல்கம் ட்ரிங், சூப், சாலட் (2), வாழைப்பழ தோசை, கொங்கு மசால் தோசை, காய்கறி பரோட்டா, அரிசி பருப்பு சாதம் இவற்றோடு வழக்கமான சவுத் இண்டியன் ஐட்டம். வெல்கம் ட்ரிங்காக கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிய மோர். அதோடு சூப்பாக எதோவொரு ரசம். Weird combination. அந்த வாழைப்பழ தோசை அட்டகாசம். சாப்பாடு சூப்பர். ஆனா எதுவுமே சூடாக இல்லாதது ஒரு பெரிய குறை. சர்வீசும் வெரி ஸ்லோ:( இந்த சாப்பாட்டிற்கு 225 ரூபாய் ரொம்ப ஓவர்.



அடுத்தது ala carte வில் நாங்கள் ஆர்டர் செய்தது நெல்லிக்காய் ரசம், வாழைப்பூ வடை, மக்காச்சோள வடை. மூணுமே ஏ கிளாஸ். மெயின் கோர்ஸிர்கு நான் பொரிச்ச பரோட்டாவும் பொள்ளாச்சி தேங்காய் குழம்பும் ஆர்டர் செய்தேன். ரெண்டுமே தூள். ஆனால் அந்த பொரிச்ச பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது. ரகு இட்லி உப்புமா ஆர்டர் பண்ணி கடுப்படித்தார். வீட்டில் செய்தால் சீண்டக்கூடமாட்டார். ஹூம்ம். வீட்டில் செய்தது போலவே இருந்தது. May be this is wat u call homely food:) Ala carte மெனு அட்டகாசமாக இருக்கிறது. குழிப்பணியாரம் மற்றும் இடியாப்பங்களில் நான்கைந்து வெரைட்டிகள்.



எங்களை ரொம்ப டிஸ்டர்ப் செய்தது டெசர்ட் மெனு தான். இளநீர் பாயாசம், கருப்பட்டி அல்வா, பருத்திப்பால் அல்வா. படிக்கும்போதே சாப்பிடனும் போலிருந்தது. மூன்றில் கருப்பட்டி அல்வா ரொம்ப சுமார் தான். மற்ற ரெண்டும் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த பருத்திப்பால் அல்வா. சூடாக வாயில் போட்டதும் கரைந்து ம்ம்ம் டிவைன்.



இறுதி அத்யாயம் ரொம்பவே பயங்கரமானது. பர்ஸ் பழுத்தது என்பதெல்லாம் சும்மா. அதையும் தாண்டி வேறெதாவது டெர்ம் யோசிக்க வேண்டும். Too too costly.

மேலதிக தகவல்கள்

உணவகம் - ரசம்
இடம் - புரசைவாக்கத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மாடியில். மயிலாப்பூரிலும், அண்ணாநகரிலும் கிளைகள் உண்டு.
டப்பு - ரொம்பவே அதிகம். Thali மீல்ஸ் 225 ரூபாய். Ala carte நினைவில்லை.

பரிந்துரை - Authentic கொங்கு ஃபுட் (5 வருடம் கோவையிலிருந்த என் தம்பியின் சர்ட்டிபிகேட்).யாராவது ட்ரீட் தர்றேன் என்றால் போகவும். இல்லை சம்பளம் வாங்கியவுடன் போகலாம். ஆனால் பில்லை பார்த்தவுடம் மயக்கம் ஏற்படுவது உறுதி. தயவு செய்து அண்ணா நகரிலுள்ள கிளைக்கு செல்வதை தவிர்க்கவும். சமீபத்தில் தான் திறந்ததால் that place literally has nothing (2 மாதங்களுக்கு முன்).