September 26, 2011

சைக்கிள் முனி - என் பார்வையில்

இரா.முருகனின் சைக்கிள் முனி சிறுகதை தொகுப்பு.

தொகுப்பின் முதல் கதை சாயம். இதைக் கதை என்று சொல்வதைவிட ஒரு காட்சி விவரிப்பு என்று சொல்லலாம். கதை சொல்லி/காட்சியை விவரிப்பவருக்கு நிறைய கேள்விகள் எழுகிறது. சில கேள்விகளுக்கான பதிலை அவரே சொல்கிறார். மீதி கேள்விகள், பதிலில்லாமல் கேள்விகளாகவே இருக்கின்றன. மூன்று பக்கம் தாண்டியவுடனே ”ஆஹா மற்றுமொரு பி.ந.கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ? முதலுக்கு மோசமாகிவிடுமோ” என்ற பயம் வந்துவிட்டது எனக்கு. நல்லவேளையாக அப்படி எதுவுமில்லை:D

சில்லு அறிவியல் புனைகதை. பிறப்பை பதிவு செய்யும்போது தவறு நடக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பங்கள் கதை. ஒன்லைனராக நன்றாக இருக்கிறது. அநியாயத்துக்கு நீளம். வேகமும் குறைவு. மனதில் ஒட்ட மறுக்கிறது. (ஒப்பிடுதல் தவறுதானென்றாலும், இந்த மாதிரி ஏரியால வாத்தியார் நின்னு ஆடுவார்).

சைக்கிள் முனி என்ற கதையில் பாலன் என்ற சிறுவனுடன் முனி பேசுகிறது. உயிருடன் குழிக்குள் புதைக்கப்பட்டவரும் பேசுகிறார். நம்பகத்தன்மை சுத்தமாக இல்லை. பாலனின் வறுமையான குடும்பச்சூழல் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவனின் அக்கா எழுதும் கடிதம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. இதே போன்று தெய்வம் பேசும், அலுத்துக்கொள்ளும் இன்னொரு கதை தரிசனக் கதை. தெய்வத்தை முன்னிறுத்தி, மனதிற்கு தோன்றியதையெல்லாம் சோழி உருட்டி குறிகளாக சொல்லும் பூசாரி கதாபாத்திரம் ஈர்க்கிறது.

கருணை இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வாழ்ந்து, இறக்கப் போகும் ஒருத்தனின் இறுதி நேரங்கள். ஆண்களின் சந்தேக புத்தியையும், குறுகிய மனப்பான்மையையும் தொட்டுச் செல்கிறது. ஆரம்பத்தில் ரவியின் கதாபாத்திரம், பரிதாபத்தை ஏற்படுத்த தவறுவதால், முடிவில் பெரிய அதிர்ச்சியொன்று ஏற்படவில்லை.

தொகுப்பிலேயே சிறந்தக் கதை எதுவென்றால், முக்காலியைத்தான் சொல்வேன். பாங்காக்கில் குப்பைக் கொண்டிருக்கும் சாஃப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஆசாமி, தன் மேலதிகாரிக்கும், அவரின் உறவினர்களுக்கும் போடும் கூழைகும்பிடுகள் தான் கதை. ஒவ்வொரு வரியிலும் வலிக்க வலிக்க சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

தொகுப்பிலேயே மிக மோசமான கதை என்றால் அது ஒண்டுக்குடித்தனம் தான். பேச்சிலரான சரவணனும், அவனுடன் நட்பு பாராட்டும் பேய்களும் தான் கதை மாந்தர்கள். நகைச்சுவையோ, ஆழ்ந்த விவரிப்போ இல்லாமல் மேம்போக்காக போகிறபோக்கில் எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.

சிறுவயதில் மலையாளம் கற்றுக்கொள்ள முற்பட்டதை நகைச்சுவையோடு சொல்லுகிறது பாருக்குட்டி. ”அவன் சாயா குடிச்சு. அவள் பரிப்பு வடை தின்னு” என்று டீக்கடை சமாச்சாரங்களையே பாடாமாக்கி எங்களை எழுதச் சொல்லிவிட்டு, ‘பொடி மோளே’ என்று கூப்பிட தடி மோளான பாரு பொரிகடலை வாயோடு வெளியே வருவாள். இதுபோன்று குபீர் சிரிப்பை வரவழைக்கும் வர்ணனைகளோடு போகும் கதையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் ரகம்.

வாத்தியார் வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொல்கிறது. மூடநம்பிக்கைகளையும், எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளை, தங்களுக்கு சாதகமாக்கிகொள்ளும் மக்களின் மனோபாவங்களை எள்ளலோடு சொல்லும் கதை.

வாயு குறுநாவல். அதிர்ச்சியளிக்கும்/முகம்சுளிக்க வைக்கும்/(சோ கால்ட் கலாசாரத்தினால்) பிறருடன் பேசத்தயங்கும் விஷயங்களை சர்வசாதரணமாக எழுதிச் சென்றிருக்கிறார் ஆசிரியர். குசு விடும் போட்டி, அதையொற்றி நகைச்சுவைக்காக எழுதப்பட்ட சில வரிகள் என ஆங்கில கலாசாரத்தையொட்டி எழுதப்பட்ட கதை. ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்தது போலிருக்கிறது. தமிழில் படிக்கிற உணர்வே இல்லை. உதாரணத்திற்கு கதையில் ஒரு கதாபாத்திரம் “புனித மலம்” எனக் கத்துகிறது. மொழிப்பெயர்க்கப்பட்ட கதையில் கூட இப்படி நேரடி தமிழாக்கம் செய்வார்கள் என்று தோணவில்லை. அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.

முதன்முறையாக இரா.முருகனின் எழுத்துக்களை வாசிக்கிறேன். தொகுப்பில் பொதுத்தன்மை நகைச்சுவை மட்டுமே. மற்றபடி சிறுகதை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களன்/பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் தலைக்கு சாயம் பூசிக்கொள்ள வந்தவன் இறந்து போவதைப் படித்துவிட்டு பக்கங்களை புரட்டினால் ஏதோவொரு கிராமத்தில் முனி பேசுகிறது. ஹுயுமனாய்ட்கள் வேலை செய்து முடித்தவுடன், பங்காரம்மா கழுநீர் கொண்டு செல்ல வருகிறாள். இந்த அதீத வேறுபாடுகள் படிக்கும்போது அயற்சியேற்படுத்தவில்லையென்றாலும், ஒருமாதிரியான சலிப்பைத் தருகிறது. விவரணைகள் சவசவ என்றில்லாமல், சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிப்போவது ஒரு பெரிய ஆறுதல். யதார்த்தை மீறிய கதைகள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. இயல்பாய், நம்பகத்தன்மையுடன் இருக்கும் கதைகள் (முக்காலி, பாருக்குட்டி) அதிகம் கவனம் ஈர்க்கின்றன.

சைக்கிள் முனி
இரா.முருகன்
கிழக்கு பதிப்பகம்

3 comments:

'பரிவை' சே.குமார் said...

மனதில் பட்டதை மறைக்காமல் விமர்சனமாக்கியிருக்கும் விதம் மிகவும் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

யதார்த்தை மீறிய கதைகள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. இயல்பாய், நம்பகத்தன்மையுடன் இருக்கும் கதைகள் (முக்காலி, பாருக்குட்டி) அதிகம் கவனம் ஈர்க்கின்றன.

நிதர்சனப் பார்வைக்குப் பாராட்டுக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் வித்யா, தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன், நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.