December 14, 2011

நினைவெல்லாம் நிவேதா - 4

நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் ரோட்டில் அந்த கட்டிடம் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தது. கொஞ்சமே கொஞ்சம் புல்வெளி, ஒரு சின்ன நீரூற்று, நாலைந்து பூந்தொட்டிகளை தாண்டி, புஷ் மீ என்ற கண்ணாடிக் கதவை தள்ளி, அரைவட்ட மேஜையில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி நடந்தார்கள் கணேஷும் வசந்தும். காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்த பெண்ணைப் பார்த்ததும் சன்னமாக விசிலடித்தான் வசந்த். இவர்களைப் பார்த்ததுமே ஒரு இன்ஸ்டெண்ட் புன்னகை அந்தப் பெண்ணின் இதழில் ஒட்டிக்கொண்டது.

“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றாள் ஹஸ்கியான வாய்ஸில்.

மேஜையில் முழங்கையை ஊன்றிகொண்ட வசந்த சற்று குனிந்து “நீங்க என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சக்கனும்” என்றான்.

“வசந்த்” என்று அவனை அதட்டி, “மிஸ், எங்களுக்கு உங்கள் எம்டியைப் பார்க்க வேண்டும்.” என்றான் கணேஷ்.

”அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?”

“யெஸ். கணேஷ் என்ற பெயரில். பத்தரைக்கு”

”ஒன் மினிட்” என்றபடி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தவள் “யூ ஆர் லேட் பை ஃபிஃப்டீன் மினிட்ஸ்” என உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹெல் வித் த ட்ராஃபிக்” என்றான் கணேஷ்.

“ஒக்கே. நீங்கள் எம்டியை இப்போது பார்க்கப் போகலாம். எண்ட் ஆஃப் தி காரிடார்ல அவர் ரூம். பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்காதீங்க” என சொல்லிவிட்டு, டெலிபோன் ரீசிவரை கையிலெடுத்தாள்.

இருவரும் அவள் சொன்ன வழியில் நடக்க ஆரம்பிக்க, "பாஸ், இந்த ரிசப்ஷன் பட்சியை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் வசந்த்.

“அழகான பொண்ணுங்கள நீ பார்த்ததில்லன்னு சொன்னாதாண்டா ஆச்சர்யம்”.

“இல்ல பாஸ். வேற ஏதோவொரு ஆஃபிஸ்ல இவள நான் பார்த்திருக்கேன். எங்கன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஒன்னு பண்ணுங்க. நீங்க அஷோக்கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ள அவள்ட்ட என் டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறேன்.”

“யூ ஆர் ஹோப்லெஸ் வசந்த்” என்றபடி R.Ashok Managing Director என்று பிராஸ்ஸோவில் பளபளத்த போரட் தொங்கிய கதவின் முன் நின்றார்கள் இருவரும். அறைக்குள் இயற்கை வெளிச்சம் இருக்கும்படியாக பெரும்பகுதி கண்ணாடியில் இருந்தது.

”மிஸ்டர் அஷோக்?”

கணேஷுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் திரும்பினார். முப்பதிரண்டு முப்பதைந்து வயதிருக்கலாம் போலத் தோன்றியது. பாதி மயிரை இழந்த முன் மண்டையால் நெற்றி பெரிதாக இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களுக்குள் மகா சாந்தம். சுத்தமாக சவரம் செய்யப்பட்ட மழுமழு முகம். 6 அடிக்கு ஏற்ற மாதிரி ஆஜானுபாகுவான உடம்பு. ஹீரோவே தான். கணேஷ் ஒரு நொடி அஷோக்கின் பக்கத்தில் நிவேதாவை கற்பனைப் பண்ணிப் பார்த்தான். பெர்ஃபெக்ட் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

”யெஸ். உங்களில் கணேஷ்....” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் அஷோக்.

“மைசெல்ஃப்” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் முன்சென்று அஷோக்குடன் கைகுலுக்கினான்.

”உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நிவேதா கேஸை எடுத்துக்கப் போறீங்களாமே?”

“இன்னும் தீர்மானிக்கலை.”

“ஹா. கமான். தீர்மானிக்காமல் தான் என்னை விசாரிக்க வந்திருக்கீங்களா?”

“நாங்கள் விசாரணைக்கு வரல மிஸ்டர் அஷோக்.”

“கால் மீ அஷோக். நோ மிஸ்டர் ப்ளீஸ்”

“ஒக்கே. நாங்க விசாரணைக்கு வரல. கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டது. அதற்காகதான் வந்தோம். வீ ஆர் நாட் யெட் இன்ட்டு த கேஸ் அஃபிஷியலி”

”என்ன மாதிரியான விவரங்கள். எங்கே சந்திச்சீங்க? வேர் யூ ஹாப்பி? மாதிரியான போரிங் கேள்விகளா?”

“ஹா ஹா. இல்லை. நான் நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். ஜெயராமன், நிவேதாவின் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார். ஹோப் யூ ஆர் அவேர் ஆஃப் திஸ்.”

“யெஸ்”

”அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் தெரியுமா?”

“யெஸ். அது சுத்த...”

“அதைப் பற்றின விளக்கம் அப்புறம். அதற்கு முன் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி இறந்த நான்கே நாட்களில், யூ க்ளீண்ட் அப் ஹெர் திங்ஸ். ரூம் சுத்தமா இருக்கு. நீங்களும். உங்கள் மனைவி இறந்ததில்?”

“யெஸ். அவ செத்துப்போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஐ ஹேட் ஹெர். ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்” என சுவற்றைக் குத்தினான் அஷோக்.

கணேஷும் வசந்தும் ஸ்தம்பித்து நின்றனர்.

4 comments:

முரளிகண்ணன் said...

சுஜாதாவோட கதைகளை டைப் பண்ணி போட ஆரம்பிச்சிட்டீங்களா?

Unknown said...

Vidhya, Wow super, adhukulla 4th episode. I am commenting through my google account since I am not a blogger. Last time comment podumpodhe ennoda name potten, but adhu 'UNKNOWN' aagumnu nenaikkala. I am Vivek SK from Singapore. Cheers. Keep Rocking. FYI, Ungaloda ella postum nethikku dhaan padichu mudichen, Inimel office la bore adicha enna pannuvennu theiryala. Let's See.

Bala said...

நான்கு பகுதிகளையும் படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சுஜாதா எழுத்தின் சாயல் நன்கு இருக்கிறது.

மூன்றாவது பகுதியில் கணேஷும், வசந்தும் வேலைக்காரியிடம் விசாரிக்கும் பகுதி நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது.

அதுபோலவே ஒவ்வொரு பகுதியின் முடிவில் வைத்திருக்கும் ட்விஸ்ட் - சூப்பர். அடுத்த பகுதி எப்போ வரும் என எதிர்பார்க்கவைக்கிறது.

வாழ்த்துகள்.

Vidhya Chandrasekaran said...

நன்றி முரளிகண்ணன் (அவ்வ். சயிண்டிஸ்ட் சார் இத பாராட்டுன்னு எடுத்துக்கவா கொலவெறின்னு எடுத்துக்கவா?)

நன்றி விவேக்.
நன்றி முகில்.