January 18, 2012

அளம் - வாசிப்பனுபவம்

கூகிள் பஸ்ஸிற்கு மூடுவிழா நடக்கும்முன்பு, வடகரை வேலன் அண்ணாச்சி, ஜாக்கி சேகருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். மக்களை, மண்ணின் இயல்பை பிரதிபலிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை”. நான் அப்போதுதான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நாவலாக நெடுஞ்சாலை இருந்தது. கூடவே அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சு.தமிழ்செல்வியின் அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி ஆகியவையும் இருந்தன. 2012 புத்தக கண்காட்சியில் வாங்கவேண்டுமென குறித்து வைத்துக்கொண்டேன். போலவே, வாங்கியும் விட்டேன். முதலில் வாசிக்கத் துவங்கியது அளம்.

வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.

கிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.

தாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.

அளம்
சு.தமிழ்செல்வி
மருதா பதிப்பகம்
100 ரூபாய்

9 comments:

Rajagopal.S.M said...

மூன்று ஏழைப்பெண்களை பற்றிய கதை, ஒரு ஏழை software எஞ்சினியரின் மனைவி பார்வையில் எழுதப் பட்டிருக்கும் இந்த பதிவு அருமை :))

ராம்ஜி_யாஹூ said...

ஒரு நல்ல வாசகி /எழுத்தாளினி உருவாகுகிறார்

வடகரை வேலன் said...

நன்றி வித்யா.

தமிழ்ச்செல்வியின் நாவல்கள் பெரும்பாலும் குடும்ப உறவுச் சிக்கல்களை அதன் சிடுக்குகளைப் பிரதிபலிப்பவை. கொஞ்சம் மிகையாகப் போனாலும் மெகாத் தொடர் போல ஆகிவிடும் அபாயம் இருக்கும் விஷயங்களைக் கச்சிதமாக சரியான இடத்தில் சரியான விகிதத்தில் கலந்து எழுதி இருப்பார்.

அவரது இன்னொரு நாவல் கற்றாழை. அதுவும் நன்றாக இருக்கும்.

CS. Mohan Kumar said...

நல்ல நாவலை அறிமுக படுத்திய வேலன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

பகிர்தலுக்கு நன்றி

Raghu said...

நீயெல்லாம் ஒரு தமிழனான்னு சில பேர் திட்டுவாங்க. இருந்தாலும் பரவாயில்ல, 'அளம்'னா என்ன அர்த்தம்ங்க?

விருப்பமில்லா திருப்பங்கள் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. த்ரில்லர்?

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜகோபால்.
நன்றி ராம்ஜி_யாஹூ.
நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி.
நன்றி மோகன் குமார்.
நன்றி முரளிகண்ணன்.

நன்றி ர‌கு. அட நீங்க வேற. படிக்கிற வரைக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. அளம்ங்கறது உப்பளத்தை குறிக்குது. விருப்பமில்லா திருப்பங்கள் சுமார் தான். பட் ஃப்ளோ வழக்கம்போல சல்ல்ல்ல்ல்ல்.

Suresh Subramanian said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

சிங். செயகுமார். said...

வித்யா
மூன்று புத்தகமும் ஒரே பதிப்பகமா?
பதிப்பக முழு முகவரி மற்றும் தொடர்பு தொலைபேசி எண்கள் தெரிய படுத்துங்களேன் ........