February 29, 2012

Scribblings 29-02-2012

வாகனங்களில் போலீஸ், டாக்டர் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் ஒரு அர்த்தமிருக்கு. குறிப்பாக டாக்டர் என உணர்த்தும் ஸ்டிக்கர்கள், நிறைய இடங்களில் அவசரத்துக்கு உதவியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலமாக வக்கீல் என உணர்த்தும் ஸ்டிக்கர்களை கார்களில் நிறையப் பார்க்கிறேன். எதற்கு எனத் தெரியவில்லை. ஒருவேளை ”வண்டில மோதின, மவனே, கோர்ட்டு கேஸுன்னு இழுத்து விட்றுவேன்”னு பயமுறுத்த இருக்குமோ? மோகன்குமார் நீங்களும் அப்படி ஒட்டியிருக்கீங்களா? இதப் பார்த்துட்டு ரங்ஸ் சொன்னார் “பேசாம நானும் வண்டில சாஃப்ட்வேர் எஞ்சினியர்ன்னு ஸ்டிக்கர் ஒட்டட்டுமா?”. நான் சொன்னேன் “ஹுக்கும். ஒவ்வொரு தெருமுக்குலயும் மாம்ஸுங்க வசூல் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த ஸ்டிக்கர் பார்த்தா டபுளா கப்பம் கட்ட வேண்டியிருக்கும். பரவால்லையா?”. ஆப்போசிட் சைட் கப்சிப். வழக்கம்போல:)))
*************

சமீபத்தில் இரண்டு சாஃப்ட் ட்ரிங்ஸ் விளம்பரங்களின் இசை பெரிதும் கவர்ந்தது. ஒன்று கோகோ கோலா. கோரஸாக கேட்கும் குழந்தைகளின் குரல் கொள்ளை அழகு. கான்செப்டும் ஓக்கே. பார்த்துக்கொண்டிருக்கும்போது உறவினர் ஒருத்தர் அடித்த கமெண்ட் “அப்படியே ஒரு பாட்டில் கோக் பண்ண, எவ்வளவு லிட்டர் தண்ணீர் நாசமாப்போகுதுன்னும் சொல்லிருக்கலாம்” - அதானே. இன்னொரு விளம்பரம் செவன் அப்பின் I feel up. தமிழ் ட்ரான்ஸ்லேஷன் கொடுமையாக இருந்தாலும், பீட்ஸ் நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இரண்டு வரிகள் ”ரேஸில் ரிவர்ஸிற்கு பயனில்லை. சோகத்தை மேகத்தில் துடைக்கிறேன்”. நீங்களும் பாருங்க.


***********

கடந்த பத்து நாட்களாக தொண்டை வலி, வறட்டு இருமல் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள், ப்ளஸ்ஸர்கள் என அனைவரும் சொல்லிய அத்தனை கை வைத்தியத்தையும் செய்து பார்த்து சரியாகவில்லை. வழக்கம்போல ஹாஸ்பிட்டலில் தஞ்சமடைந்தால், அந்த டாக்டர் வலியே பரவாயில்லையென்ற அளவுக்கு மொக்கை போட்டார். சாம்பிளுக்கு

When was ur last LMP?

அப்படின்னா?

LMPன்னா தெரியாதா? (கேவலமான லுக் விட்டுகிட்டே)

தெரியாது.

என்ன படிச்சிருக்கீங்க?

டாக்டருக்கு படிக்கல (செம்ம கடுப்புல சொன்னேன்)

வாட்?

நத்திங். Does that really matter now?

ஓக்கே. LMPன்னா Last Menstrual Period. புரிஞ்சுதா.

நல்லா. என் GK இம்ப்ரூவ் பண்ணதுக்கு நன்றி.

(இப்ப டாக்டர் டென்ஷனாயிட்டாங்க.)

ஊசி ஒன்னு போட்டுகறீங்களா?

வேண்டாம். மாத்திரையே போதும்.

ஏன் விஷ ஊசி போட்டுடவேன்னு பயமா? ஹா ஹா ஹா ஹா.

அவ்வ்வ்வ். தேடிப்போய் சிக்கறேன் போலிருக்கு:(
*************

ஜூனியரை ரெகுலர் செக்கப்பிற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தேன். ஒன்றரை வருடமாக அவன் வெயிட் 14.5 - 16கிலோவிலே இருக்கிறது. ஏறுவதும் இல்லை. இறங்குவதுமில்லை. எனக்கு அதைப்பற்றி பெரிய கவலை இல்லையென்றாலும், பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) வீட்டிலும் பெரியவர்கள் பீடியாஸ்யூர் போன்ற ஊட்டச்சத்து பானங்களை கொடுக்க சொல்லி வற்புறுத்திகிட்டிருக்காங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. இம்முறை டாக்டரிடம் வெயிட் பற்றி கேட்டபோது அவர் சொன்னது சுவாரசியமாய் இருந்தது.

2 வயது வரை தான் எடை அதிகரிக்க வேண்டும்.
2-32 வயது வரை அறிவு வளர வேண்டும்.
32-64 வயது வரை செல்வம் வளர வேண்டும்.
64 வயதிற்கு மேல் ஞானம் வளர வேண்டும் என்றார். அறிவு வளர வேண்டிய வயதில் எடை கூடினால் அறிவு வளராது என்றார். அவன் வயசுக்கு நார்மலான வெயிட் தான் இருக்கான். பால் குடிக்கலைன்னா கூட கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிடற உணவையே கொடுங்க. விளையாட்டு. கூடவே நீச்சல் பயிற்றுவிக்க சொன்னார். நீச்சல் கற்றுக்கொண்டால், உடல் உறுதியாகும். அப்புறம் என்னைப் பார்க்க வர வேண்டியிருக்காது என்று சிரித்துக்கொண்டே விடைகொடுத்தார்.
*******************

தோனி படம் பார்த்தோம். படம் நன்றாக இருக்கிறது 3 இடியட்ஸ்/நண்பன் படங்களின் கான்செப்ட் தான். பிடிக்காததை படிக்காதே/செய்யாதே. பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருந்தாலும் சில காட்சிகள் சீரியல்/ட்ராமா மாதிரி இருந்தது. குறிப்பாக எப்பப்பார்த்தாலும் ஹெல்மெட் மாட்டிகிட்டே சுத்துவது கடுப்பாக இருந்தது. ஒரு சில சீன்களை தவிர்த்து படம் நீ வொர்க். நிறைய சீன்களுக்கு தியேட்டரில் கைதட்டல்களும், விசிலும் தூள் பறந்தன. குறிப்பாக ஆசிரியை ஒருவரிடம் பிரகாஷ்ராஜ் “நீங்க மட்டும் ஒரு சப்ஜெக்ட்ட தான் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. பசங்க மட்டும் இத்தனை பாடம் படிக்கனுமா?” எனக் கேட்டபோது எழுந்த கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாயிற்று. நீயா நானாவில் கல்வி சுகமா சுமையா என்ற விவாதம் நடப்பது போல் படத்தில் காமித்தார்கள். நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன? என்னமோ போடா மாதவா:)

February 13, 2012

ஜூனியர் அப்டேட்ஸ் 13-02-2012

ஜூனியருக்கு சமீபத்தில் பனீர் பக்கோடா செய்து கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு, “அம்மா நீ சூப்பரா செஞ்சிருக்கியே. யார் கத்துகொடுத்தா?”

ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.

#ஙே!!!
***********

திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”

#தேவைதான் எனக்கு
**************

திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:

”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”

அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்

“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.

”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.

”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************

ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************

எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது

“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”

“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”

“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”

#ஙே!!!
********************

”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”

#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))

February 8, 2012

மெரினா

”வணக்கம் வாழ வைக்கும் சென்னை”

சென்னையின் அடையாளங்களில் மறக்கமுடியாத, நிரந்தர இடம் பெற்றது மெரீனா. எல்லா வயதினர்க்கும் ஒரு உற்சாகமான மனநிலையை தரும் கடற்கரை. காதல், காமம், குற்றங்கள், நட்பின் கொண்டாட்டங்கள் இவற்றைத் தாண்டி கடற்கரையே வாழ்க்கைக் களமாக கொண்ட மனிதர்களின் கதை தான் இந்த மெரீனா. முக்கியமாக படிப்பைத் தொலைத்து, எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக அலையும் எண்ணற்ற சிறுவர்களில் சிலரின் வாழ்க்கை அத்தியாயங்களை சொல்லிப் போகிறது மெரீனா. ஊரிலிருந்து பிழைப்பு தேடி மெரீனா கடற்கரைக்கு வரும் ஒரு சிறுவன், அங்கே பிழைத்துக்கொண்டிருப்பவர்களோடு எப்படி சேர்கிறான்? என்ன செய்கிறான்? என்னவாகிறான்/என்னவாகப் போகிறான்? இந்தக் கேள்விகளுக்கான விடையோடு, மெரீனா கடற்கரைக்கு வரும் காதலர்கள் சிலரையும் தொட்டுச்செல்கிறது படம்.

தமிழ் சினிமாவிற்கே உரித்தான அதிகப்பிரசங்கி குழந்தைகளைக் காட்டி ”பசங்க” படத்தை ஆரம்பித்திருந்தாலும், ஓரிரு காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா குழந்தைகளைப் பற்றிய படமாக இல்லாமல், குழந்தைகளைப் பற்றிய தமிழ் சினிமாவாக தந்ததன் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் பாண்டிராஜ். இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு நிஜமாகவே எனக்கு விடை தெரியவில்லை. குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய படமென்றவுடன், வறுமை, தடம் மாறுதல், போதைப் பழக்கங்கள், வயசிற்கு மீறிய நடவடிக்கைகள் என்று இறங்காமல், சிறுவர்களின் குறும்புகள், வியாபர சண்டைகள், விளையாட்டுகள், சின்ன சின்ன ஆசைகள், கல்விக்கான ஏக்கம் என படம் முழுக்க சிறுவர்களைப் பாசிட்டிவாக காட்டியதற்காக ஒரு பெரிய சபாஷ். கதை, பாட்டு, ஃபைட்டு, காமெடி என்றில்லாமல், மனிதர்களின் வாழ்க்கையில் சில தினங்களை காட்ட முயற்சித்ததற்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், சில இடங்களில், கமர்ஷியல் சினிமாவாக மாற்ற முயற்சிக்கிறாரோ எனவும் தோன்றுகிறது. சிறுவனைத் தேடியலையும் போலீஸ்காரர்களும், அவர்களின் மேலதிகாரியுடனான சம்பாஷணைகளும் அமெச்சூர்தனமான எபிசோட்கள். கொஞ்சம் கூட க்ரவுண்ட் வொர்க் செய்யாமல் அமைக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. சிறுவர்களுக்கிடையே நடக்கும் போட்டிகளும், அவற்றையொட்டிய காட்சிகளும் முதலில் நன்றாக இருந்தாலும், ரீப்பிட்டடாக வரும் போட்டிகள் அயற்சியைத் தருகின்றன. குறிப்பாக பிற்பாதியில் வரும் குதிரைப் பந்தயம். எப்படா முடிப்பாங்க என்றிருந்தது. இந்த மாதிரி எதார்த்த??!! படங்களில் கட்டாயமாக ஒரு மரணம் இருக்க வேண்டுமென்பது ரூல் மாதிரியாகிவிட்டது. அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

அவ்வப்பொழுது தொய்ந்து சரியும் படத்தை நிமிர்த்துவது சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் எபிசோட்தான். ”லைட்டா பசிக்குது” என ஆரம்பிக்கும் ஓவியாவும், ”எல்லாம் இப்ப இப்படிதாண்டி சொல்லுவீங்க” என மைண்ட் வாய்சில் ஓட்டும் சிவாவும் அற்புதமாய் பண்ணியிருக்கிறார்கள். சிவாவின் நண்பராக வருபவர் அடிக்கும் காதல் பஞ்சுகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. டோலக்கடித்துக்கொண்டே பாடும் ஆள், அவர் மகள், பிச்சையெடுக்கும் வயதானவர், தபால்காரர் என அனைவரும் நிறைவாக செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் சில நிமிடங்களே வந்தாலும், நடிப்பில் அசத்துகிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அற்புதமாக வந்திருக்க வேண்டிய படம். இப்பவும் மோசமில்லை. ஆனால் என்னமோ குறை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.

பெசண்ட்நகர் பீச்சிற்கு தினமும் சென்று வந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும். மெரினாவையும் அப்படிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மொட்டை வெயிலில், இரவில், மழையில், இளங்காலையில், மெல்லிய மாலைவெளிச்சத்தில், கூட்ட நெரிசலில், வெறிச்சோடிகிடக்கும்போதெல்லாம் மெரினா கொள்ளை அழகாகத் தெரிகிறது. “வணக்கம் வாழ வைக்கும் சென்னை”, “காதல் ஒரு தேவதையின்” பாடல்கள் ரெண்டும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிண்ணனி இசையும் பாதகமில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிப் போன கடற்கரை(களை)ப் பற்றி ஒரு படமென்றதும் ரொம்பவும் எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றமென்றாலும், வித்யாசமான முயற்சிக்காக ஒரு தடவையேனும் பார்க்கலாம்.

February 6, 2012

Scribblings 06-02-2012

இணைய நண்பர்கள் சிலர் சேர்ந்து கல்வி சம்பந்தமான உதவிகளை செய்யத் திட்டமிட்டு, என்ன செய்யலாம் என்று குழுமம் ஆரம்பித்து உதவி செய்ய ஆரம்பித்தோம். அதன் ஒரு அங்கமாக புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நேசம் என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்ட தளம் இங்கே

போட்டிக்காக அல்லாமல் புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. நேரமின்மையோடு என் சோம்பேறித்தனமும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே இருக்கின்றேன். கூடிய விரைவில் எழுதி வலையேற்ற வேண்டும்.
********************

இரு வாரங்களுக்கு முன்பு வண்டலூர் சென்றிருந்தோம். பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க போனபோது கூட வந்த ஒரு குடும்பத்தின் செய்கைகள் எரிச்சலைடைய செய்வதாக இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களை வண்டியிலிருந்து தூக்கி எறிவதும், மிருகங்களின் கூண்டருகே செல்லும்போது கத்தி கூச்சல் போடுவதும் (கவனத்தை ஈர்க்கறாங்களாமாம்) என இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். உச்சபட்சமாக சில இடங்களில் (மான், வெள்ளைபுலி, சிறுத்தை) மிருகங்களை நோக்கி சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றை தூக்கியெறிந்தனர். இந்த மாதிரி உணவுகளை மிருகங்களுக்கு கொடுக்காதீங்க என சொன்னபோது வழக்கமான “உன் வேலையப் பார்த்துகிட்டு போ”ங்கற பதில் தான் கிடைச்சது. எங்களுடன் வந்த இன்னொருவர், இப்ப நீங்க அமைதியா வரலன்னா, நான் போய் இன்சார்ஜ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன் என சொன்னதும் தான் அமைதியானார்கள். இதை முதல்லயே செஞ்சிருக்கலாமோன்னு பேசிகிட்டு வந்தோம். இன்னொரு குடும்பம் செம்ம ஜாலியாக கமெண்ட் பாஸ் பண்ணிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, யானைகள் பகுதியை கடந்து ஓரிரு நிமிடங்கள் வண்டியை நிறுத்தினர். திரும்ப அனைவரும் வண்டியில் ஏறும்போது குடும்பத் தலைவர் குடும்பத்தினரிடம், “சின்ன யானை வருது பாருங்க” என்றார். எல்லோரும் ஆர்வமாய் எங்கே எனப் பார்க்க, அவரோ “குட்டியானை வண்டில ஏறி உட்கார்ந்திருச்சு” என்றார். அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் என பின்னர் தான் புரிந்தது. எல்லாரும் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தது:)
***************

சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும். அந்த ஊரின் மெயின் ரோட், ஒருபுறம் ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்டதாகவும், மறுபுறம் தமிழ்நாடு எல்லைக்குட்பட்டதாகவுமிருக்கிறது. ஆந்திர எல்லைக்குட்பட்டு வரும் பக்கத்தில், ப்ரைவேட் ஒயின்ஷாப் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. விலையும் மலிவாம். உதாரணத்திற்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் 65ரூபாய் என்றால், இங்குள்ள கடைகளில் 25ரூபாய்க்கி கிடைக்கிறதாம். விலைமலிவாக இருப்பதால், இந்த ஊரின் டாஸ்மாக்கில் சேல்ஸ் இல்லையென்கிறார்கள். இம்மாதிரியாய் தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்கள் அருகருகே இருக்கும் மற்றொரு இடம் ஆர்கேபட்டு - பள்ளிபட்டு இடையே இருக்கிறதாம். இப்ப எதுக்கு இந்த தகவல் என்கிறீர்களா? சும்மா குடிமகன்களின் ஜெனரல் நாலேட்ஜை வளர்ப்பதற்காக. சீப்பான சரக்கிற்காக பாண்டி வரைக்கும் போகவேண்டாம் பாருங்கள்:):)
***************

அப்பா ரிட்டையராகி நான்கு மாதங்களாகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பா வேலை செய்த ஊரிற்கு ஒரு பெர்சனல் வேலையாக செல்லவேண்டியிருந்தது. அப்பாவிடம் வேலை செய்த ஒருவரை அழைத்து சில விவரங்கள் கேட்டார் அப்பா. அங்கு சென்றபோது, அந்தநபர் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ததோடில்லாமல், வேலை முடியும்வரை கூடவே இருந்தார். உங்களுக்குத்தான் சிரமம் என்றதும், அப்பாவிற்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி என சொல்லியதோடில்லாமல், அப்பாவிடம் வேலை பார்த்த அனுபவங்களை பெருமையாக கூறினார். அப்பாவை போல ஒரு அதிகாரியை பார்த்ததில்லை என சொன்னபோது எங்களுக்கு பெருமையாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் முன்னர் அதிகாரியாய் இருந்தவருக்கு, அதுவும் இப்போது பணிஓய்வு பெற்றவருக்கு உதவ வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அப்பாவை சம்பாதிக்க தெரியாதவர் என உறவுகளும், சுற்றத்தாரும் சொல்லக்கேட்டிருக்கேன். இன்று அவர்களையெல்லாம் அழைத்து எங்க அப்பா சம்பாதிச்சிருக்கறத பாருங்க என காட்ட வேண்டும்போலிருந்தது. I'm proud of you dad. Love you.
************

ட்விட்டர் கார்னர்

கேப்டனின் அந்நியன் அவதாரம் நிகழ்ந்த மறுநாள், என் ட்விட்ஸ் சில

ஸ்டாலின் டு விஜயகாந்த் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ. அப்படியே கையில சரக்கு எடுத்துக்கோ. இப்ப சரியா வாசி. பப்பாம் பப்பாம் பப்பாம் பபபாம்.

நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு.

கேப்டன் ஸ்டேடஸ் மெசேஜ் : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

February 2, 2012

நினைவெல்லாம் நிவேதா - 6

”செம்ம ட்ராஃபிக் பாஸ். ரெண்டு மணிநேரமா க்ளட்ச்ச மாத்தி மாத்தி கால் வலிக்குது” என்றபடியே உள்ளே நுழைந்தான் வசந்த். ஒரு கேஸிற்காக சட்ட புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த கணேஷ், வசந்திடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

“வேணாம் பாஸ். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவதிருக்கா?” என்றபடியே ஃப்ரிட்ஜை ஆராய்ந்தவன், ஒரு ஆப்பிளைக் கடித்தபடியே வந்து கணேஷின் முன் அமர்ந்தான்.

“போன காரியம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.

“சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக இந்த வேலைக்கு என்ன அனுப்பிச்சீங்கன்னு சொல்லுங்க. என்னாலயும் ஒரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனாலும்..”

“சொல்றேன் வசந்த். இது கண்டிப்பா நிவேதாவே எடுத்த முடிவில்லங்கறது என்னோட யூகம். இந்த விஷயத்துல ரெண்டே பேரத்தான் நாம சந்தேகப்படமுடியும். ஒன்னு ஜெயராமன். இல்லன்னா அஷோக். மோட்டிவ் ஒன்னுதான். சொத்துக்காக.”

“அப்ப கொலைன்னு சொல்ல வர்றீங்களா. போஸ்ட்மார்ட்டம்ல கயிறு இறுகி, மூச்சுக்குழாய் முறிந்ததால் மரணம்ன்னு தெளிவாருக்கே. ரெண்டாவது, சம்பவம் நிகழ்ந்த அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஸ்ட்ராங்கான அலிபி இருக்கு.”

“அவசரப்படாத வசந்த். இது ஒருவரின் மேற்பார்வையில், வழிகாட்டுதலின் படி நடந்த தற்கொலை.”

“அப்படித்தான ஜெயராமனும் சொல்றாரு. அஷோக்தான் அந்த ஒருவன்ங்கறது அவரோட குற்றச்சாட்டு.”

”கரெக்ட். இப்ப அது நெஜமாவே அஷோக்தானாங்கறத தான் நாம கன்ஃபர்ம் பண்ணனும்.”

“சரி பாஸ். இப்ப உங்களோட மைண்ட்ல என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்களேன்.”

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்ட ரெண்டையும் கொண்டு வந்தியா?”

“கொண்டு வந்திருக்கேன் பாஸ். நீங்க கேக்காமலேயே இன்னொரு வேலையும் பண்ணி முடிச்சிருக்கேன்”. என்ன என்பது போல பார்த்தான் கணேஷ். ”முதல்ல நீங்க உங்க கெஸ்ஸ சொல்லுங்க பாஸ், அப்புறம் நான் என்ன பண்ணேன்ங்கறத சொல்றேன்”.

“ஆல்ரைட். முதல்ல அஷோக்கிட்டருந்து ஆரம்பிப்போம். லவ் மேரேஜ். பிரச்சனை எதுவும் இல்லை. அட்லீஸ்ட் எதுவுமில்லைன்னு அவர் நினைச்சுகிட்டிருக்கார். நல்ல வருமானம் ஈட்டிக்கொடுக்கும் தொழில். நஷ்டமோ, பெரிய பணத்தேவையோ இல்லை”.

“இந்தக் காரணங்கள் போதுமா பாஸ்? தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.”

“இரு வசந்த். அவசரப்படாத. இதெல்லாம் சும்மா ஆட் ஆன் வாதங்கள் தான். ஒரே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கு வசந்த். இம்மாதிரி நிவேதாவை தற்கொலைக்கு தூண்டுவதன் மூலம் தான் ஈசியாக மாட்டிக்கொள்வோம் என யோசிக்கத் தெரியாதவரல்ல அஷோக்.”

“எப்படி சொல்றீங்க?”

“சிம்பிள்டா. நிவேதாவின் அப்பா எழுதிவைத்திருக்கும் உயில் அப்படி. பொண்ணுக்கு கல்யாணம் ஆனப்புறம், ஏதாவது ஆச்சுன்னா புருஷந்தான் பொறுப்புன்னு தெளிவா எழுதிவச்சிருக்காரே. அதனால, நிவேதாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னைத்தான் பிடிப்பாங்கன்னு அவருக்கு தெரியாம இல்ல. அதுவுமில்லாம, அவருடைய பிசினெஸை கொஞ்சம் கிளறினேன். க்ளீனாதான் இருக்கார். நிவேதா இறப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் தொகை, அவருக்கு பெரிய அமவுண்ட்டாக இருக்காது. இதை அவரே சொல்லிருக்காரு.”

“ம்ம்ம். அப்ப அஷோக்க லிஸ்ட்ல இருந்து தூக்கிடலாம்”.

“யெஸ். ஜெயராமன தெளிவா டிக்கடிச்சிடலாம்”.

”ரீசன்?”

“சொல்றேன். இரு”.

-தொடரும்......