February 8, 2012

மெரினா

”வணக்கம் வாழ வைக்கும் சென்னை”

சென்னையின் அடையாளங்களில் மறக்கமுடியாத, நிரந்தர இடம் பெற்றது மெரீனா. எல்லா வயதினர்க்கும் ஒரு உற்சாகமான மனநிலையை தரும் கடற்கரை. காதல், காமம், குற்றங்கள், நட்பின் கொண்டாட்டங்கள் இவற்றைத் தாண்டி கடற்கரையே வாழ்க்கைக் களமாக கொண்ட மனிதர்களின் கதை தான் இந்த மெரீனா. முக்கியமாக படிப்பைத் தொலைத்து, எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக அலையும் எண்ணற்ற சிறுவர்களில் சிலரின் வாழ்க்கை அத்தியாயங்களை சொல்லிப் போகிறது மெரீனா. ஊரிலிருந்து பிழைப்பு தேடி மெரீனா கடற்கரைக்கு வரும் ஒரு சிறுவன், அங்கே பிழைத்துக்கொண்டிருப்பவர்களோடு எப்படி சேர்கிறான்? என்ன செய்கிறான்? என்னவாகிறான்/என்னவாகப் போகிறான்? இந்தக் கேள்விகளுக்கான விடையோடு, மெரீனா கடற்கரைக்கு வரும் காதலர்கள் சிலரையும் தொட்டுச்செல்கிறது படம்.

தமிழ் சினிமாவிற்கே உரித்தான அதிகப்பிரசங்கி குழந்தைகளைக் காட்டி ”பசங்க” படத்தை ஆரம்பித்திருந்தாலும், ஓரிரு காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா குழந்தைகளைப் பற்றிய படமாக இல்லாமல், குழந்தைகளைப் பற்றிய தமிழ் சினிமாவாக தந்ததன் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் பாண்டிராஜ். இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு நிஜமாகவே எனக்கு விடை தெரியவில்லை. குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய படமென்றவுடன், வறுமை, தடம் மாறுதல், போதைப் பழக்கங்கள், வயசிற்கு மீறிய நடவடிக்கைகள் என்று இறங்காமல், சிறுவர்களின் குறும்புகள், வியாபர சண்டைகள், விளையாட்டுகள், சின்ன சின்ன ஆசைகள், கல்விக்கான ஏக்கம் என படம் முழுக்க சிறுவர்களைப் பாசிட்டிவாக காட்டியதற்காக ஒரு பெரிய சபாஷ். கதை, பாட்டு, ஃபைட்டு, காமெடி என்றில்லாமல், மனிதர்களின் வாழ்க்கையில் சில தினங்களை காட்ட முயற்சித்ததற்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், சில இடங்களில், கமர்ஷியல் சினிமாவாக மாற்ற முயற்சிக்கிறாரோ எனவும் தோன்றுகிறது. சிறுவனைத் தேடியலையும் போலீஸ்காரர்களும், அவர்களின் மேலதிகாரியுடனான சம்பாஷணைகளும் அமெச்சூர்தனமான எபிசோட்கள். கொஞ்சம் கூட க்ரவுண்ட் வொர்க் செய்யாமல் அமைக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. சிறுவர்களுக்கிடையே நடக்கும் போட்டிகளும், அவற்றையொட்டிய காட்சிகளும் முதலில் நன்றாக இருந்தாலும், ரீப்பிட்டடாக வரும் போட்டிகள் அயற்சியைத் தருகின்றன. குறிப்பாக பிற்பாதியில் வரும் குதிரைப் பந்தயம். எப்படா முடிப்பாங்க என்றிருந்தது. இந்த மாதிரி எதார்த்த??!! படங்களில் கட்டாயமாக ஒரு மரணம் இருக்க வேண்டுமென்பது ரூல் மாதிரியாகிவிட்டது. அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

அவ்வப்பொழுது தொய்ந்து சரியும் படத்தை நிமிர்த்துவது சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் எபிசோட்தான். ”லைட்டா பசிக்குது” என ஆரம்பிக்கும் ஓவியாவும், ”எல்லாம் இப்ப இப்படிதாண்டி சொல்லுவீங்க” என மைண்ட் வாய்சில் ஓட்டும் சிவாவும் அற்புதமாய் பண்ணியிருக்கிறார்கள். சிவாவின் நண்பராக வருபவர் அடிக்கும் காதல் பஞ்சுகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. டோலக்கடித்துக்கொண்டே பாடும் ஆள், அவர் மகள், பிச்சையெடுக்கும் வயதானவர், தபால்காரர் என அனைவரும் நிறைவாக செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் சில நிமிடங்களே வந்தாலும், நடிப்பில் அசத்துகிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அற்புதமாக வந்திருக்க வேண்டிய படம். இப்பவும் மோசமில்லை. ஆனால் என்னமோ குறை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.

பெசண்ட்நகர் பீச்சிற்கு தினமும் சென்று வந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும். மெரினாவையும் அப்படிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மொட்டை வெயிலில், இரவில், மழையில், இளங்காலையில், மெல்லிய மாலைவெளிச்சத்தில், கூட்ட நெரிசலில், வெறிச்சோடிகிடக்கும்போதெல்லாம் மெரினா கொள்ளை அழகாகத் தெரிகிறது. “வணக்கம் வாழ வைக்கும் சென்னை”, “காதல் ஒரு தேவதையின்” பாடல்கள் ரெண்டும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிண்ணனி இசையும் பாதகமில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிப் போன கடற்கரை(களை)ப் பற்றி ஒரு படமென்றதும் ரொம்பவும் எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றமென்றாலும், வித்யாசமான முயற்சிக்காக ஒரு தடவையேனும் பார்க்கலாம்.

7 comments:

pudugaithendral said...

படம் பாத்திட்டீங்களா ஓகே

Jackiesekar said...

நல்ல கிறுக்கல்...

CS. Mohan Kumar said...

Good review. Will see this film soon. We need to encourage this kind of original films (Not copied from any where)

Raghu said...

கண்டிப்பா பாக்கணும்னு நினைச்சிருந்தேன். இப்போ கொஞ்சம் இண்ட்ரஸ்ட் போயிடுச்சு.

Vidhya Chandrasekaran said...

நன்றி கலா அக்கா.
நன்றி ஜாக்கி சேகர்.

நன்றி மோகன்குமார் (ரொம்ப சரி).

நன்றி ரகு (ஆஹா. பாருங்க பாஸ். உங்களுக்கு பிடிக்கலாமில்லையா)

Unknown said...

good review...

பவள சங்கரி said...

அன்பின் வித்யா,

http://coralsri.blogspot.com/2012/02/5.html

தங்களுக்கு versatile blogger award கொடுத்துள்ளேன். பெற்றுக் கொண்டு தங்களுடைய ஏழு ஆசைகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்... நன்றி.

அன்புடன்

பவள சங்கரி.